ஆட்டங்களைஆட்டுவிப்பவன் – சுதாகர் ஜெயராமன்

வாழ்வில் ஒரு சிறு துணுக்கினை எடுத்து அதை கண்கள் பனிக்க, இதயம் இனிக்க, நினைவில் நிலைக்கச் சொல்லுதல் சிறுகதையெனில், அதில் நண்பர் கவியோவியத்தமிழன், நிபுணன் என்பேன். தொடர்ந்தோடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எந்த இடத்தில் நிறுத்தி சிறுகதைக்கான துணுக்கினை கத்தரித்துக் கொள்வது என்பது அவருக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது. கதைசொல்லும் மொழியும், யுக்தியும் அவரது நீண்ட வாசிப்பையும், உள்வாங்குதலையும் வெளிப்படுத்துகிறது. மெனக்கெட்டுச் சுதி சேர்த்த தாளங்களில் கட்டுண்டு ஒப்பிவிக்கப்படும் மேடைப் பாடல்களைப் போல் அல்லாமல், ஆழ்மனதின் லயத்தில் தன்னெழுச்சியாக எழும் உணர்ச்சிகள் குவிந்து வார்த்தைகளாய்க் கரைந்து, கேட்போர்க்கும் மனப்பாரம் களையும் ஒரு வழிப்பபோக்கனின் பாடலைப் போல் கவியோவியத்தமிழனின் கதைகள் வாசகன் மனதை வருடுகிறது.
கதையாடல் என்பது மனித வாழ்வியலின் முக்கியக்கூறு. ஒரு வேளை கதை சொல்லவும், கேட்கவும் முயன்றிருக்கவில்லை எனில், மனிதன் மற்றுமொரு விலங்கினம் போல இன்னமும் வனாந்திரக் காடுகளில் அலைந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு மனிதன் அறிந்து, உணர்ந்தவற்றைச் சக மனிதனுக்கு கதை வழியே கடத்துகிறான். கதை கேட்பவர் மற்றொரு மனிதனின் அனுபவத்தையும் சேர்த்து இரட்டை மனிதராகிறார். இவ்வாறு, கதை வழியே கடத்தப்பெறும் அனுபவங்கள் குவியப்பெற்ற மானுடம் மென்மேலும் நாகரீகமடைகிறது. கதை சொல்லும் மனிதன், தாய்ப்பறவை குஞ்சுகளுக்கு உணவு சேர்ப்பது போல, வெளியெங்கும் கவனத்தைச் செலுத்தி சேகரித்த தகவல்களை, அனுபவங்களை, உணர்வுகளைக் கதையாக்குகிறான். ஒரு ஆற்றல் மிக்க கதைஞன் கடந்த காலத்தை பதிகிறான், நிகழ்காலத்தை நகர்த்துகிறான், வருங்காலத்திற்கு வழிகாட்டுகிறான். கவியோவியத்தமிழன் அத்தகையோர்களில் ஒருவர்.
ஏற்கெனவே, “ஊடாடும் வாழ்வு” என்ற சிறுகதைத் தொகுப்பினை கவியோவியத்தமிழன் எழுதியிருக்கிறார். பத்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மலம், முள் என்ற பெயர்களில் வெளிவந்த சிற்றிதழ்களின் ஆசிரியராகவே அவரது ஆரம்ப காலங்களில் அறியப்பட்டவர். தற்போதும், உயிர்வனம் என்ற மின்னிதழை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று எழுதி தமிழ் வாசக மனங்களில் கவனம் பெற்றவர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, அய்யலூரைச் சேர்ந்தவர். இந்த “விதிமுறையற்ற ஆட்டங்கள்” இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
கவியோவியத்தமிழனின் படைப்புகள் ஆழம் மிக்கவை. அவரது “விதைத்த காடும், பசித்த பறவைகளும்” “இந்த மின்னல்கள் மறைவதற்கில்லை” போன்ற கவிதை புத்தகங்களின் தலைப்புகளே நம் மனக்குளத்தில் அதிர்வலைகளை எழுப்ப வல்லவை. அந்த வகையில் இப்போது “விதிமுறையற்ற ஆட்டங்கள்”. இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும், இன்னாருக்குத்தான் நடக்கும் என யாரேனும் எதையேனும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? எந்த விதிமுறைகளுக்கும் உட்படாது எதுவும் யாருக்கும் நடக்கும் என்பதுதானே உலகியல் நியதி? இம்மாதிரியான விதிமுறையற்ற ஆட்டங்களின் மாற்றங்களையும், மாற்றத்திற்கு உட்படும் மனித குணாம்சங்களைப் பதிவதாயும், கேள்விக்கு உள்ளாக்குவதாயும் அமைகிறது கவியோவித்தமிழன் கதைகள்.
மொத்தம் 17 கதைகளை உள்ளடக்கியது இந்தத் தொகுப்பு. ஒவ்வொரு கதையின் தலைப்புமே கதையின் மையத்தை நேரடியாகச் சுட்டுகிறது. கதைகள் அனைத்தும் உளவியலாக வாசகனுக்குள் ஊடுருவுபவை. எளிய சொற்களால் தொகுக்கப்பட்டவை. எந்தக் கதையிலும் வாசக நெஞ்சை அச்சுறுத்தும்படியான அருஞ்சொல்லாடல்களோ, வசன சாகச வித்தைகளோ, பூடகப் புதிர்களோ இல்லை. அப்படியே, சலசலத்து ஓடும் நீரோடை போன்ற கதைகள் அதன் ஓட்டத்தில் சொல்லப்படும் சம்பவங்களையும், மனிதர்களையும் காட்சிப்படுத்தும் விதமாக நேரடியாக எழுத்தாளனின் மனதிலிருந்து, வாசக மனதிற்கு பாய்கிறது. ஒவ்வொரு கதையும் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் செல்ல ஆரம்பிக்கறது. இறுதிவதை தடதடத்து ஓடுகிறது. கதை முடிகையில் நம் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. நேர்த்தியான சிறுகதைகள் இப்படித்தான் சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.
பெரும்பாலான கதைகள் நேர்கூற்று வகையில், கதைமாந்தன் தானே தனக்கு நேர்ந்த சம்பவங்களையும், உணர்வுகளையும் வாசகருக்குச் சொல்லிச் செல்வதாக அமைகிறது. இந்த யுக்தி, கதைக்குள் நம்மை விசுக்கென்று இழுத்துச் செல்கிறது. சம்பவங்களை விவரிக்கவும் சூழ்நிலைகளைக் காட்சிப்படுத்தவும் நேர்கூற்று முறையில் சொல்லப்பட்ட கதைகள் இலகுவாக இருக்கிறது. இந்த நேற்கூற்றுத் தன்மையில் அமைந்த கதைகள் அனைத்தும் கதாசிரியரின் சொந்த அனுபவமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. ஒரு சில கதைகள் அயற்கூற்று வகையில் பிறருக்கு நேர்ந்ததைச் சொல்லும் வகையில் அமைகிறது. அது அதற்கான காரணங்கள் கதைகளின் தன்மையில் நேர்த்தியாக அமைகின்றன.
அடுத்தடுத்து வேறு வேறு தளத்தில் அமையும் அடுக்கு அடுக்கான காட்சிகளாக கதை சொல்வதைத் தனது பாணியாக கொண்டுள்ளார் எழுத்தாளர். ஒன்றிற்கு ஒன்று மாறுபாட்ட காட்சிகள் பின்னிப்பின்னிச் சொல்லப்பட்ட போதிலும் கதையின் முடிவில் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் போது, அடர்த்தியான அர்த்தம் தொனிப்பதாக அமைகிறது. பொதுவாக, இந்தத் தொகுப்பின் கதைகள் எதிர்பாராத முடிவுகளோ, திடீர்த் திருப்பங்களோ இல்லாத இயல்பின் கதைகளாக அமைவதால்.. கதாசிரியரின் மேற்கண்ட பாணி, சுவாரஸ்யம் கூட்டுகிறது. கதை நெடுகிலும் கிராமத்து மாந்தர்களே வருகிறார்கள். எதார்த்தம் மிக்க அவர்களது ஆசாபாசங்கள் சித்தரிகிக்கப்படுகிறது. இந்த சித்தரித்தல் என்ற வார்த்தை கதாசிரியருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். “மனச்சித்திரம்” என்ற ஒரே வார்த்தை அனேக கதைகளில் அழுத்தமாக வருகிறது.
கதையில் வரும் பெண்கள் நம் மனதில் தங்கி விடுகிறார்கள். “காலத்தின் ஒப்பனைகள்” கதையில் வரும் பாப்பா ஒரு கிளாசிக்கல் கேரக்டர். “பெருங்காற்று” கதையில் வரும் மனநிலை பிறழ்ச்சி அடைந்த பெண் கவனிக்கப்பட வேண்டிய சமூகச்சூழலை உணர்த்துகிறார். “நல்ல சோறு” கதையில் வரும் நாயகன் ஓம்சக்தியின் மனைவி, சமகால பெண்களில் பேரன்பைப் பறைசாற்றுகிறார். கதையில் அவரது உள்ளோட்டங்கள் சொல்லப்படாத போதும், வாசக மனம் அவர் பால் ஈர்க்கப்படுகிறது
“கண்காணிப்பு” என்ற கதையில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு பெண் தனது மனதின் வலிகளை ஆத்திரத்துடன் பேசுவதாக இருக்கிறது. வேறு எந்த கதாபாத்திரமும் பேசவில்லை; ஆனால், பல மனநிலை கொண்ட ஆட்களை அடையாளப்படுத்துகிறது. வேறு காட்சிகள் இல்லை; ஆனால், பல்வேறு சம்பவங்களைச் சுமந்து வருகிறது. ஆத்திரத்தில் பேசுவதாகத்தான் கதை செல்கிறது; ஆனால், ஒரு பெண்ணில் கனிந்திருக்கும் ஆதங்கத்தை, கனன்று உழலும் ஆற்றலை, ஊசலாடும் வாழ்வியலை, அவளது பக்கத்தின் நியாயத்தை என பல்வேறு பரிமாணங்களைப் படம் பிடிக்கிறது. பொதுப்புத்தியில் உறையும் சக பெண்களைப் பற்றிய கணிப்புகளை மறுபரிசீலணை செய்யப் பரிந்துரைக்கிறது. அற்ப ஆணின் மன ஓட்டங்களை கேள்வி கேட்கச் செய்கிறது.
“அவர்களின் சண்டை” கதையில் வரும் லலிதாமணி ஒரு குறிப்பிடத் தகுந்தவர். இந்த மாதிரி கேரக்டர்களை கிராமங்களிலும் பார்ப்பது அரிது. லலிதாமணி போன்ற பாத்திரங்களளை உருவாக்கி நம்முன் படைக்கும்போது தேர்ந்தெடுத்த கதைசொல்லியாக கவியோவியத்தமிழன் மிளிர்கிறார். “வனநீட்சி” கதையில் வரும் மலர் கதாபாத்திரம் முற்றிலும் ஒரு புனைவாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய போதிலும், அந்த கதாபாத்திரம் எழுத்தாளரின் இயற்கை சார்ந்த மனக்கிடக்கையைப் பேசுகிறது. கதைத் தொகுப்பில் இன்னும் வரும் பெண்களின் கதாபாத்திரங்கள் கிராமத்து சாமான்ய மனிதர்களை நமக்குள் கடத்துகிறார்கள்.
“காணாமல் போனவர்” கதையில் வரும் ஆறுமுகம் ஒரு நிறைவான கதாபாத்திரம். தன்போக்கிற்கு சுழலும் சுறாவளி போல் வாழ்வின் உயர்வு தாழ்வுகளைக் கடப்பவர். இதிலும், எழுத்தாளரின் உள்ளக் கனவுகளை ஏற்றிச் சொல்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்ட போதிலும், தீராக் கனவுகளைக் கொண்ட மனிதனின் இயல்பை ஆறுமுகம் கதாபாத்திரம் எடுத்தியம்புகிறது. “வழுக்கையன் கிணற்றில்“கதையில் வரும் அப்பா கதாபாத்திரமும், “சுழல்“ கதையில் வரும் முத்துவின் அப்பா கதாபாத்திரமும் மாறாத கிராமத்து அத்தியாயங்களில் உழைப்பின் தழும்பேறிய அடிப்படை மனிதர்களை அடையாளம் காட்டுகிறார்கள். இந்தத் தொகுப்பின் ஊடே சில பல ஓவியர்கள் வருகின்றார்கள். அவர்களும், அவர்களின் அனுபவங்களும் நேரடியாக எழுத்தாளரின் வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆண்களிலும், பெண்களும் எதிர்மறை கதாபாத்திரங்களும் இயல்பான மனிதர்களின் போக்கைச் சித்தரிக்கும் விதமாகவே அமைகிறது.
அடைமழையோ, கடும்வெயிலோ, பெருங்காற்றோ.. என கதை நிகழும் பல்வேறு பருவநிலைகளும் வருணிக்கப்படாத கதையே இல்லை. கதையின் “கேன்வாஸ்” ஆக நிகழும் கதை நிகழும் பருவ நிலை, கதை சொல்லும் உணர்வுகளை வாசகனுக்குக் கடத்துகிறது. அதிலும், “பெருங்காற்று” கதையில் வரும் காற்று, கதாசிரியரான ஓவியன் சாரத்தின் உயரத்தில் அமர்ந்திருக்கும் அந்தர நிலையைச் சொல்வதாகட்டும், கதையின் ஓட்டத்தில் நிகழும் நகரமயமாதலின் வேறுபாடுகளை அளவிடுவதாகட்டும், போலி மனிதர்கள் அவ்வப்போதைய மன நிலைகளை படம் பிடிப்பதாகட்டும், பாதிக்கப்பட்ட மனிதர்களின் அவல நிலையைச் சொல்வதாகட்டும் என பல பரிமாணங்களை அந்த பெருங்காற்று கடத்துகிறது. அதிலும் கதையில் அனுமார் சிலைக்கு வர்ணம் அடிக்கும் வேலை என்றும், பெருங்காற்று வீசுகிறது என்றும் சொல்லப்படுவது வாயு புத்திரன் அனுமார் என்ற புராண உருவகங்களை முன்னிலைப்படுத்தி, அந்த அனுமாரின் கண் முன் நடக்கும் அநியாயங்களைக் கேள்விக்குள்ளாக்கும் குறியீடுகளாக கதை விரிகிறது. காலச்சூழல் மட்டுமல்ல கதைகளில் மனிதர்களோடு மனிதர்களாக மனிதர்களைச் சார்ந்திருக்கும் ஜீவன்களும், அவை தம் உணர்வுகளும் பதியப்படுவது அருமை.
கதைகள் பெரும்பாலும் இயற்கை சார்ந்த கதாசிரியரின் நாட்டத்தைப் பறைசாற்றுகின்றன. பெண்கள் மீதான கரிசனமும் மிகுந்திருக்கிறது. “காலத்தின் ஒப்பனைகள்“ என்ற கதையில் வரும் பழனியப்பன் போன்று அருங்கலைகளைக் கற்றவர்களாக வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஏக்கத்திலும் துக்கத்திலும் தவிப்பது போன்ற மனநிலை ஏனோ? என்ற எண்ணமும் நமக்கு ஏற்படாமல் இல்லை. இருந்த போதிலும் “விதிமுறையற்ற ஆட்டங்கள்” சாமாண்ய மனிதர்களின் சமகால நிலையை மனப்போக்கை பிறழாமல் காலக்குறிப்புகளில் பதிகிறது. இப்படி, இயல்பான மனிதர்களைச் சொல்லும் கதையில் இடையே “காமப்பிழை” என்ற கதை வாராந்திரப் பத்திரிக்கைகளில் வரும் ஒரு பக்கக் கற்பனைக் கதை போல இயல்பின்றி துருத்தி நிற்கிறது. ஒரு வேளை அது இயல்பாகவே இருந்தாலும், இந்தத் தொகுப்பில் அந்தக் கதையைத் தவிர்த்திருக்கலாம்.
வாழ்வு என்பது “விதிமுறைகளற்ற ஆட்டங்கள்” என்றால், ஒரு படர்ந்த சமூகத்தின் பொதுச் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தும் அல்லது தட்டையாக்கும் வல்லமை கொண்ட கதைசொல்லியை “ஆட்டங்களை ஆட்டுவிப்பவன்” என்றே சொல்லலாம். தமிழ்ச் சமூகத்தில் சிந்தனையைக் கட்டமைக்கும் கதைசொல்லிகள் ஏராளம். அந்த வரிசையில் “கவியோவித்தமிழன்” சமகால கதைசொல்லிகளில் கவனிக்கப்படத் தகுந்தவர். தொன்னூறுகளுக்குப் பிறகு உலகமயாதல் தொடர்ச்சிகளால் மாறிப்போகும் கிராமிய சூழ்நிலைகளையும், தொழில்நுட்ப வளர்ச்சியால் சிதையும் தொழில்களையும், அவற்றைச் சார்ந்த கிராமத்து மனிதர்களையும் அசலாக நமக்கு கடத்தியிருக்கும், யாவரும் Be4 Books பதிப்பக வெளியீடாக வந்திருக்கும், கவியோவியத்தமிழனின் “விதிமுறைகளற்ற ஆட்டங்கள்”, யாவரும் வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.
விதிமுறைகளற்ற ஆட்டங்கள் (சிறுகதைகள்)
கவியோவியத்தமிழன்
விலை: ரூ.320
Be4Books
வேளச்சேரி
சென்னை-42.
***



