எழுத்துப் பயணத்தை திரும்பி பார்க்கும் தருணம்! – வாசு முருகவேல்

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நிகழ்வுகள் எனக்கு மிகவும் முக்கியமானவை என்று கருதுகிறேன். ஒன்று சென்னை புத்தகக் காட்சி, இரண்டாவது விஷ்ணுபுரம் விருது நிகழ்வு. இரண்டும் இலக்கியம் சார்ந்தது. அந்த உலகம் தனித்துவமானது. வருடம் முழுவதும் நான் வாழும் உலகில் இருந்து தப்பித்திருத்தல் என்பது வாசிப்பு மற்றும் எழுத்தின் வழியாகத்தான் நிகழ்கிறதுது. அந்த வாழ்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இந்த இரண்டு நிகழ்வுகள் திகழ்கின்றன.
எழுத்தாளானாக இலக்கியத்தை எதிர்கொள்வதைப் போலவே சென்னை புத்தகக் காட்சியை எதிர்கொள்ளவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் இருக்கும் அதீதமான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக களைந்து நிலைக்கு வந்து சேரும் தேர்போல அந்த நகர்வு நிகழும்.
இன்றைக்கும் புத்தக காட்சி என்பது வாசகர்களை & நண்பர்களை ஒருசேர சந்திக்க வாய்ப்புள்ள, அதில் அதிக கவனம் கொள்ளக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. புத்தகங்கள் விற்பனை நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டியவைதான் என்றாலும் அவை என்னுடைய முதல்நிலை கவனத்திற்குரியவை அல்ல. ஒவ்வொரு ஆண்டும் புத்தக காட்சியில் நேரடியாக அறிமுகமாகும் புதிய வாசகர்கள் பெரும் மன நிறைவு தருவார்கள். காரணம், அவர்களில் பலரும் என்னுடைய ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு நேரில் உரையாடுவதற்கு வந்தவர்கள்தான் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு உண்மை. இப்படி ஒரு நூல் அனுபவம் என்னுடைய அனைத்து படைப்புகளையும் ஒரசேர வாங்கிச் செல்லும் இடமாக சென்னை புத்தகக் காட்சி அமைகின்றது.
சென்னை தவிர்த்தும் பல்வேறு நகரங்களில் நடைபெறும் கண்காட்சிகள் ஒரு நல்ல முன்னெடுப்பு என்ற போதிலும், அவை பூரண நிலையை எட்டுவதற்கு காலமாகலாம். முடிந்தரை அவற்றிலும் கலந்து கொள்ள முயல்கிறேன். அங்கு செல்லும்போது இன்னும் நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் நிகழ்வதுண்டு. குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைக்கவும், ஒரு வேளை என்றாலும் என்னுடன் உணவு எடுத்துக் கொள்ளவும் விரும்புவார்கள். அவர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளும் போதும் நம்முடைய கையில் ஒரு நூறு ரூபாய்யை வைத்து கைகளை இறுகப் பற்றிக் கொள்வார்கள். இந்த உணர்வுகளை ஒரு சில வார்த்தைகளில் விளக்குவது மிகவும் கடினமானது.
அன்றாட வாழ்க்கையின் இடையில் எழுதுதல் என்பதை விடவும் வாசித்தல் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். இருந்த போதிலும் வாசிக்காமல் இருக்கும் புத்தகங்கள் ஒரு சங்கடமான உணர்வை ஏற்படுத்துகின்றன. இருந்த போதிலும் புத்தக காட்சிக்கு செல்லும் ஒவ்வொரு தினமும் புத்தகங்கள் வாங்காமல் வீடு திரும்பியதில்லை. உலக / இந்திய மொழிபெயர்ப்புகள், தமிழின் முன்னோடி படைப்பாளிகளின் கொடைகள், புதிய வீச்சாக வரும் இளம் படைப்பாளிகள்… ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவை ஒவ்வொரு விதமாக என்னுடைய எழுத்திற்கும் கூட துணை புரிகின்றன என்று உறுதியாகக் கூற முடியும்.
சென்னை புத்தக காட்சி காலத்தில் உயிர்பெறும் படைப்பாளிகள் நட்பு கண்காட்சி முடியும்போது உறங்கு நிலைக்கு செல்வது போல வாசகர்கள் உறவு இருப்பதில்லை. அது வருடம் முழுவதும் நம்மை இறுகப்பற்றிக் கொள்வதை பலநேரங்களின் உணர்ந்திருக்கிறேன்!
இந்த புத்தகக் காட்சியில் என்னுடைய புதிய நாவலான ‘மணிபல்லவம்’ நீலம் பதிப்பகம் ஊடாக வெளிவருகின்றது என்பது புத்துணர்வான செய்தி. வாசகர்களுக்கும் அது ஒரு நற்செய்தியாக அமையும் என்று நம்புகிறேன்.
இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தகங்கள் எனக்கு பெருந்துணை புரிகின்றன. உங்களுக்கும் அவ்வாறு அமையும் என்பதை வாசிப்பில் உணர்வீர்கள். தொடர்ந்து வாசிப்போம். மனதை மேம்படுத்தி மனிதத்தை பேணுவோம்.



