ஒரு திருட்டும் ஒரு நூல் பட்டியலும் கொஞ்சம் அரசியலும் (அல்லது) இப்போதாவது நம்புங்கள் நான் நேர்மையானவன்—அமிர்தம் சூர்யா

ஒரு சிறிய விஷயம், பெரிய விஷயத்தை விழுங்கி விட்டு ஏதும் தெரியாததைப் போல் சிறிய விஷயமாகவே இருக்க முடியுமா? என்று ஒரு மன்னனுக்கு சந்தேகம் வருகிறது. அரசவை குருவை கேட்கிறார். அவர் ஒரு நாள் அவகாசம் கேட்டு விட்டு வீட்டுக்கு வருகிறார். பதிலே தெரியாமல் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக அவர் அலைவதைப் பார்த்து விட்டு சிறுமியான அவரது மகள் ‘என்ன ஆயிற்று அப்பா?’ என்று கேட்க, இவர் விஷயத்தைச் சொல்கிறார். அதற்கு அந்த சிறுமி ‘எனக்கு இதற்கு பதில் தெரியும். என்னை நாளை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்கிறாள். அப்பாவுக்கு மகள் மீது அபார நம்பிக்கை. அழைத்துச் செல்கிறார்.
மன்னனை வணங்கிய சிறுமி ‘அரசே, பழைய உடைந்த பயனற்ற தளவாடங்கள் உள்ள அறை எது? அது எங்கு உள்ளது?’ என்று கேட்கிறாள். அதற்கு மன்னர் ‘அது வெளவால் நிறைந்த பயன்படுத்தாத இருட்டு அறை’ என்கிறார். அங்கு தன்னை அழைத்துப் போகச் சொல்கிறாள் அந்தச் சிறுமி. அந்த மோசமான இருள் மிகுந்த பிரமாண்ட அறைக்கு போய் ஒரு அகல்விளக்கை ஏற்றுகிறாள். குப்பென வெளிச்சம் பரவி வெளவால் வெளியே ஓடுகிறது. சிறுமி சொல்கிறாள் ‘பாருங்கள் அரசே, இந்த பிரமாண்ட இருளை விழுங்கி விட்டு இந்த அகல் விளக்கு ஏதும் தெரியாததைப் போல் உட்கார்ந்திருக்கிறதே!’ என்கிறாள்.
கதை முடிந்தது. ‘சரி, என்ன சொல்லப் போறீங்க?’ என்று கேட்கிறீர்களா? வாழ்வில் ஒரு தரிசனத்தை நிகழ்த்த பெரிய எழுத்தாளன் சின்ன எழுத்தாளன் என்றெல்லாம் தேவையில்லை. ஒரு அறத்தின் மீது நம்பிக்கை கொண்ட எழுத்தாளன் போதும். அந்த கதையில் மன்னர்க்கு விளக்கம் தந்த சிறுமி போல. மேலும், மிகப் பெரிய வாழ்வில் நமக்கு வரும் பெரிய ஐயத்தை, குழப்பத்தை இருளை நீக்க ஒரு சின்னப் புத்தகம் போதும். சொல்லப் போனால் புத்தகத்தின் வேலையே அதுதான்!
இப்போதெல்லாம் எனக்கு பெரிய ஆளுமைகளை விட புதியவர்களே வியப்பை ஏற்படுத்துகிறார்கள்; திறன் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு முறை ஜெயகாந்தன் சொன்னாராம் – ‘எனக்கு பின்னால் திரும்பி பாக்குறேன். புதியவர்கள் யாரும் காணோம்’ என்று. அப்போது கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்த இளவேனில் சொன்னாராம் – ‘அவர்கள் எல்லாம் உங்களுக்கு முன்னால் எப்போதோ போய் விட்டார்கள்’ என்று. எவ்வளவு உக்கிரமான சரியான பதிலடி! எனவேதான் நான் புதியவர்களைக் கொண்டாடுகிறேன்
சரி விஷயத்திற்கு வருகிறேன் புத்தக காட்சி பற்றிய அனுபவம் என்னவென்று கேட்டால்… அந்தக் காலத்தில் அதாவது 15 வருத்திற்கு முன் நடந்தது இது. நவீன இலக்கியத்தில் காலூன்ற என்னென்ன படிக்க வேண்டும் என்று தெரியும். ஆனால், வாங்க பணம் இருக்காது. என்னென்ன ஸ்டாலில் என்னென்ன ரைட்டர்ஸ் என்னென்ன புக்ஸ் எழுதியிருக்காங்க அது எங்கே இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
ஒரு நண்பர், நவீன கவிஞன், ‘மாமு, என்னென்ன புக்ஸ் எந்த ஸ்டாலில் இருக்கு சொல்’ என்பான். நான் தாஸ்தாயெவ்ஸ்கி, காப்ரியல் கார்ஸியா மார்ல்வெஸ், நீட்சே, அஜித் ராம், பிரமிள், பிரம்மராஜன், இந்திரா பார்த்தசாரதி, சு.ரா, ஜெயமோகன், கோணங்கி, ரமேஷ் பிரேம், சா.தேவதாஸ், ஓஷோ, நிறப்பிரிகை நூல், நாடகவெளி போட்ட நூல்கள் என ஒரு பட்டியலைத் தருவேன். நூல்கள் என்னென்ன பெயரில் எந்த ஸ்டாலில் இருக்கு என்று சொல்வேன். எனக்கு தகவல் மட்டுமே அளிக்க தெரியும். ஒரு வாரத்தில் அவன் எல்லா நூல்களை அவன் வீட்டுக்கு கொண்டு வந்து ‘உனக்கு என்ன புக் வேணும்? எதை பர்ஸ்ட் படிக்கப் போறே?’ என்று கேட்பான். எப்படி நூல்களை கைப்பற்றினான் என்று தெரியாது. அதாவது உங்க பாஷையில் எப்படி திருடினான்னு தெரியாது. கிட்டத்தட்ட நூல்களைத் திருடுவது என்பது போரில் தமிழ் மன்னன் எதிரி நாட்டில் சென்று ஆநிறைகளை அபகரித்து வருவதை வீரம் என்பீரா திருட்டு என்பீரா? தெரியவில்லை. அதாவது இப்படியாக நவீன நூல்களை நண்பன் தயவில் படித்த அனுபவம் உண்டு.
அப்போது ‘இது தப்பில்லையா மாமு?’ என்று கேட்பேன். அவன் சொல்வான் – ‘ஏண்டா, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று நீ கேள்விப்பட்டதில்லை? பிச்சை எடுக்கும் போது சூடு சொரணை எல்லாம் போகும். ஆனாலும் பிச்சை எடுத்து படின்னு அந்த ஞானக் கிழவி சொல்லியிருக்கு. படிக்கிறதுக்காக திருடுவது எப்படி தப்பாகும்?’ என்பான். நூல்களைத் திருடி படித்திருக்கிறோம். ஆனால், கருத்துகளை, ஒருவரின் படைப்புகளை, அதன் சாரங்களை திருடுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்
இன்னுமொரு முக்கிய விஷயம இலவசமா கொடுத்தாலும் நவீன நூல்களைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டோம்; படிக்க மாட்டோம். அப்படி நவீனத்தின் மீது வெறியாகவிருந்த ஒரு காலமாக எங்களுக்கு அது இருந்தது
இப்போது நான் புத்தக காட்சிக்கு அதிகம் போவது இல்லை. காரணம் எனக்குப் படிக்க தபாலில் நண்பர்கள் அனுப்பும் நூல்கள் ஏராளம். கூட்டங்களில் நான் போகும் போது என் கரங்களில் வந்து சேரும் புதியவர்களின் நூல்களும் அதிகம்
உதாரணத்திற்கு இர்விங் ஸ்டோன் எழுதிய ‘மெஸ்யூர் வான்கா’ என்ற வான்கா பற்றிய 800 பக்க நூலை தமிழில் பாலா இளம்பிறை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் விலை 950 ரூபாய் அதை ஒரு கூட்டத்தில் எனக்கு கொடுத்து ‘அண்ணா, படிச்சுட்டு சொல்லுங்க!’ என்றார். மிகக் கடுமையான உழைப்பில் வந்த நூல் அது. நிச்சயம் ஓவியத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் வாங்க வேண்டிய நூல். இப்படியாக எனக்கு நூலகள் வந்து சேர்வதால் புத்தகக் காட்சியை பொருட்படுத்துவது இல்லை.
நண்பர்களே… வாசகர்களே… புதியதாக எழுதத் தொடங்குபவர்களே, நான் அறிவுரை சொல்ல மாட்டேன். எனக்கு அதற்கு தகுதியில்லை. இது அபிப்ராயம்தான்
முதலில் நீங்கள் வெகுஜன எழுத்தில் இயங்குபவரா? நவீன இலக்கியத்தில் இயங்க விரும்புபவரா? என்பதை தேர்வு செய்து பயணத்தை தொடங்குங்கள் இரண்டும் காந்தத்தின் இரு துருவங்கள். அடுத்து நமது முன்னோடிகளை, அவர்களின் பாணிகளை அவர்களின் மொழிதலை யுக்தியை அறிய அவர்களை ஒரு முறை வாசித்து விடுங்கள். நாவல் என்றால் பத்து விதமான நாவல் யுக்தியை செயல்படுத்திப் பார்த்துள்ளனர். அதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதை முதலில் வாசியுங்கள். அடுத்து புதியவர்களை, புதிய பாய்ச்சலை, புதிய ருசியை அறிய அவர்களை படியுங்கள்.
சரி, நான் படிக்க விரும்புவது, நான் இந்த புத்தக காட்சியில் வாங்க விரும்புவது என்று ஒரு லிஸ்ட் உண்டு. அதை உங்களுக்கு சிபாரிசு செய்யலாம்.
கரிகாலனின் மெய்நிகர் கனவு, செயலிகளின் காலம்
கவிதைக்காரன் இளங்கோவின் – சொல்லப்பட்ட கதைகளின் பின் வாசல்
வேல் கண்ணனின் கவிதைகள்
பூவிதழ் உமேஷ்- பெயரிடப்படாத மகிழ்ச்சி
யாத்திரியின் கள்ளினும் இனிய
பத்மகுமாரியின் அலவர்த்தனம்
ஜி.கார்ல் மார்க்ஸ்ன் பீச்
நாராயண கண்ணகியின் தப்பு
சுனில் கிருஷ்ணனின் குருதி வழி
சரவணன் சந்திரனின் ரமலோவ்
சி.மோகனின் பால்ய நதி
நிஜந்தனின் பிறழ்
சரவண கார்த்திகேயனின் ஆண்டான்
அபுல் கலாம் ஆசாத்தின் கடற்கழியோடி
அம்பிகா குமரனின் சரோஜாகாலத்து தையல் காரன்
வானவனின் போத்து
திலகபாமாவின் காலாதீதத்தின் விதை
லீலாவின் சோறு
இத்துடன் என்னுடைய பின் நவினத்துவ நாவலான வடசென்னை வாழ்வைப் பேசும் பறதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
இதெல்லாம் என் நினைவிலிருந்து ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன். சில விடுபட்டு இருக்கலாம். ‘இதில் அரசியல் இல்லையே!’ என்று கேட்டால், ‘ஸாரிங்க, எதில்தான் அரசியல் இல்லை? நீங்கள் ஒரு கப் டீ குடிக்கும் போது தேயிலை தொழிலாளர் போராட்டம், ஆவின் பால் விலை உயர்வு, கரும்பின் மான்ய கெடுபிடி, டீ சாமான்யமானவன் குடிக்கும் பானம் என்கிற மேட்டுக்குடி எண்ணம் எல்லாம் கலந்துதான் ஒரு கப் டீயை குடிக்கிறீர்கள். ஆக, அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் எல்லா பட்டியலிலும் ஒரு அரசியல் உண்டு. நான் ரொம்ப நேர்மையானவன் என்பதை இப்போதாவது நம்புங்கள்!



