ககன வெளி – கலாப்ரியா

3
ஆறுமுகம் தொங்கிய தலையுடன் வீட்டைப் பார்க்க நடந்தான். அவனுக்கு சின்னப் பிள்ளையிலிருந்தே கூட்டம் என்றால் ஒரு பயம். ஒரு சமயம் அப்பா அம்மாவுடன் கந்த சஷ்டி பார்க்க பக்கத்திலுள்ள மலைக் கோயிலுக்குப் போயிருந்தான். அது விசேஷமான கோயில். மாதப்பிறப்பு கார்த்திகை, வெள்ளிக் கிழமையென்றால் கூட்டம் அலை மோதும். அடிவாரத்தில் சற்றே பெரிய கோயிலும். மலை மீது அழகான சுனையொன்றின் அருகே சிறிய குகையில் சித்துச் சிறுக்கென்று ஒரு குட்டி முருகனும் பிரபலமானது. சுனை நீர் வற்றவே வற்றாது. ருசியும் அப்படி இருக்கும். மலைப்படிகள் ஏறுவதற்குச் சற்றுச் சிரமமானது. குகைக்குப் பின்னால் ஆளுயரத்திற்கு சுக்குநாறிப் புல் வளர்ந்திருக்கும்.
அங்கே போனாலே சுக்கும் எலுமிச்சையும் கலந்த வாசம் ஆளைத் தூக்கும். அதைத் தாண்டிப் போனால் சில அரிய மூலிகைகள் கிடைக்கும் என்று மங்கலக்குறிச்சி மீசை வைத்தியர் சொல்லுவார். அவர் அங்கே போய் அவற்றையெல்லாம் பறித்து வருவார் அங்கே ஒன்றிரண்டு சித்தர்கள் கூட அவ்வப்போது தென்படுவார்கள் என்று வைத்தியர் சொல்லுவார். அவர்களில் ஒரு சாமியார் அவருக்கு நன்கு பழக்கமுமானார். அது ஒரு குன்று போலத்தான் இருக்கும். அதன் பின்புறம் இறங்கினால் மேற்கு மலையின் அடிவாரம் வந்து விடும். அங்கிருந்து சமயத்தில் சிறுத்தை கடுவா எல்லாம் பாதை மாறிப் போய் இங்கேயும் வரும்.
அடிவாரக் கோயிலுக்கு ஆடு நேர்ந்து விடுவது உண்டு. பலி கொடுப்பது கிடையாது. அவற்றைப் பட்டியில் அடைத்து வைத்து ஏலம் விடுவார்கள். ஏலம் விடும் வரை அவற்றைப் பார்த்துக் கொள்ள ஒரு குடும்பம் உண்டு. சமயத்தில் அவை அடிவாரத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். சமயத்தில் சுனை வரைக்கும் போய் விடும். தவிர, வேறு மந்தை ஆடு மேய்ப்பவர்கள் அடிவாரம் பக்கம் மேய்ப்பதற்கு இலைதழை இல்லையென்றாலும் எப்போதாவது இங்கே வருவதுண்டு. அவற்றை அடித்துத் தின்னத்தான் சிறுத்தைகள், நரிகள் வரும்.
நிறைய குரங்குகள் உண்டு. குரங்குகள் சிறுத்தையைக் கண்டு விட்டால் கிரீச்சிட்டுக் கத்தும். ஆடு மேய்ப்பவர்கள் சுதாரித்துக் கொண்டு ஆடுகளை ஒன்று சேர்த்துக் கீழே இறங்க வேகம் காட்டுவார்கள். சமயத்தில் சுக்குநாறிப் புல்லுக்குத் தீ வைத்து மிருகங்களை விரட்டியும் விடுவார்கள். அந்தப் பகுதியே மணக்கும். அப்புறம் இரண்டு நாள் தீ எரியும். அணைந்த பின் கருகல் வாசனையுடன் சாம்பலும் பறந்து கொண்டே இருக்கும். அதெல்லாம் எப்போதாவது நடக்கும்.
அடிவாரக் கோயிலில் குமார சஷ்டி விசேஷமாக நடக்கும். மற்ற ஊரிலெல்லாம் ஐப்பசியில் கந்த சஷ்டி நடந்தால் இங்கே கார்த்திகையில் குமார சஷ்டி நடக்கும். அந்த மலைக்குப் பேரே குமாரசாமி மலைதான். ஒரு சஷ்டிக்கு அப்பா அம்மா அண்ணாவி மாமா, அவர் வீட்டு அத்தை ஆகியோருடன் சென்றிருந்தபோது ஆறுமுகத்தின் அப்பா முத்தையா, கூட்டத்தில் தனது மனைவி என்று நினைத்து யார் கையையோ பிடித்துக் கொண்டு, “வா வா, போகலாம்,” என்று இழுத்துக் கொண்டு நடக்க அவள், “என்னவே கையைப் பிடிச்சு இழுக்கறேரு,” என்று கூச்சல் போட அவளோட சாதி சனம் எல்லாம் சேர்ந்து அப்பாவை அடிக்க வர… ஆறுமுகம் பயந்து போய் கூட்டத்தில் தொலைந்து போய் விட்டான். முத்தையா அவமானத்தால் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டார்.
ஆறுமுகத்தின் அம்மாவுக்கு கணவனை விட்டு விட்டு நகரவும் முடியவில்லை. மகனைத் தேடவும் முடியவில்லை. பாண்டிய அண்ணாவிதான் எங்கிருந்தோ ஆறுமுகத்தைப் பத்திரமாகக் கையைப் பிடித்து இழுக்காத குறையாய் அழைத்து வந்தார். அவர் வந்ததுதான் தாமதம் முத்தையா எல்லோரையும் கூட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினார். அண்ணாவி கூட, “அது எவன் மாப்பிளை உங்க கிட்ட வம்பு இழுத்தவன், அது என்ன விவரம்ன்னு கேக்காமப் போக முடியுமா, அப்புறம் நான் என்னத்துக்கு நாட்டாமை, அண்ணாவின்னு இருக்கேன்,” என்று சொல்ல, “அதெல்லாம் வேண்டாம் மச்சான், நான் ஊர்ல போயி விவரம் சொல்லுதேன்,” என்று கிளம்பி விட்டார்.
ஊருக்குப் போன பின்னும் அண்ணாவி விஷயத்தைக் கை விடவில்லை. அன்று என்ன நடந்தது, அவர்கள் யார், எந்த ஊர் என்றெல்லாம் விசாரித்து இரண்டு பஞ்சாயத்தார்களையும் கூட்டிப் பேசி, ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கல் இல்லாதவாறு சமாதானம் செய்த பின்னரே ஓய்ந்தார். ஆனால், அதற்கிடையில் இரண்டு பக்கத்து ஆட்களும் எங்காவது டவுணிலோ கோயில் குளங்களிலோ சினிமாக் கொட்டகைகளிலோ சந்திக்கும் போது முறைத்துக் கொண்டுதான் திரிந்தார்கள், அந்த நேரத்தில் ஆறுமுகத்தை வெளியே எங்கேயும் அனுப்பவில்லை. அவனும் கூட்டம் என்றாலே பயந்து போய் ஊரிலேயே அதிலும் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டான்.
கல்யாணத்தன்று கூட கூட்டத்தைத் தவிர்த்தான். மறுவீட்டுக்குக் கூட மனைவியுடன் போகப் பயந்து கொண்டு அம்மா முந்தனையைப் பிடித்துக் கொண்டே போய், பத்துப் பேருடன் அமர்ந்து விருந்து கூடச் சாப்பிடாமல் சாப்பாட்டை பாத்திரங்களில் ஏற்றிக் கொண்டு வண்டியில் வீட்டுக்கு வந்து விட்டார்கள் தாயும் பிள்ளையும். “நீ மறு வீட்டுச் சாப்பாட்டை பார்சல் கட்டிக்கிட்டு வந்தவன்ல்லா மாப்ளை” என்று பெரிய கடை அண்ணாவி, இவன் எக்குத்தப்பாய்ப் பேசினால் பிடித்துக் கொண்டு விடுவார். இன்றைக்கும் அவரிடம் வாயைக் கொடுத்து வசமாகக் கட்டிக்கொண்டு வயலுக்குப் போகாமல் வீட்டுக்கே வந்தான். கதவு சரியாகத் தாழ்ப்பாள் போடவில்லை. லேசாகத் தள்ளியதும் திறந்து கொண்டது.
ஆறுமுகம் வெளியே போனதும், அதுவும் அவளை குளிக்கச் சொல்லி விட்டுப் போனதும் ராசாத்திக்கு ஏதோ போல இருந்தது. ஏனோ கோபம் கோபமாக வந்தது. குளித்தாலும் உள் சூடு தணிவதற்கான உத்தரவாதம் இல்லை. உடல் அசந்து போகிற மாதிரி வேலை செய்தால் கோபத்தையும் ஏமாற்றத்தையும் மறக்கலாம் என்று தோன்றவே, மாட்டை அவிழ்த்துத் தோட்டத்து நெல்லி மரத்தில் கட்டி விட்டு. தொழுவத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
`இந்த வேலையை முருகாத்தாளிடம் சொல்லி இன்னைக்கி திங்களோட திங்கள் எட்டு நாளாச்சு செஞ்சிருக்காளா பாரேன். எம்புட்டுச் சாணி சேந்துட்டு,’ என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் அள்ளி எருக்குழியில் போட்டு விட்டு தொழுவைப் பருத்திமாறால் பெருக்கினாள். கிணற்றடித் தொட்டியில் இறைத்துப் போட்டிருந்த தண்ணீரைக் குடம் குடமாக மொண்டு கழுவி விட்டாள்.
சாணியை அள்ளி அள்ளிச் சுமந்ததாலும், தொழுவைப் பெருக்கி தண்ணீர் விட்டுக் கழுவி விட்டதாலும் உடல் அசந்து போயிருந்தது. ஆனால், தொழுவம் பளீரென்று இருந்ததைப் பார்த்து மனசுக்கு ஒரு அமைதி வந்திருந்தது. உடலும் ஏதோ அடங்கினாற் போல இருந்தது. அதற்குள் மாடும் பசியில் சத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. மறைசலுக்குள் சென்று நிதானமாகக் குளித்து விட்டு வரும் வரை பொறுக்காது.
அவசர அவசரமாகக் கிணற்றடியிலேயே குளித்தாள். தோட்டத்துச் சுவர் சில இடங்களில் இடிந்து உயரம் குறைந்திருந்தது. அதிலிருந்து யாரோ பார்ப்பது போலத் தோன்றியது. கோவிந்தனாயிருக்குமோ என்று நினைத்தாள். யாரும் இல்லை. உடனேயே கோவிந்தன் என்றால் சம்மதமாயிருக்குமோ என்று நினைப்பு ஓடியது. இப்போது ஏனோ அப்படித் தோன்றும் குறுகுறுப்பான நினைவு எரிச்சலையே தந்தது. கிணற்றடியில் நின்று குளித்ததனால் அதனைச் சுற்றிய சதசதப்பான உளுவான் மண்ணிலிருந்து சகதியைத் துளைத்துக் கொண்டு எதுவோ கிளம்பிற்று. பிள்ளைப் பூச்சிதான் இப்படிக் கிளம்பி வரும் என்று பார்த்தாள்.
பெரிய பூரான் காலைப் பார்த்து வேகமாய் வந்தது. நகர்ந்து ஒரு வாளித் தண்ணீரையும் அதன் மேல் விட்டாள். வழிந்தோடும் தண்ணீரில் அழகாக நீந்திப் போனது. மனுசனைத் தவிர எல்லாப் பிராணிக்கும் நீந்தத் தெரியும். மனுசனுக்கு நேரம் காலம் இல்லாம கூட மட்டும் தெரியும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள். பசு அலறியது. ‘வந்துட்டேன்ம்மா’ என்றவாறே ஈரச்சேலையுடன் விரைந்து கழுநீரில் அரைத்த பருத்திக் கொட்டையைக் கலந்து வைத்தாள். ஆசையாய் ஒரே மூச்சில் உறிஞ்சி விட்டு, அடியில் தங்கியிருந்த அரைபடாத கொட்டைகளை வழித்து நக்கிச் ‘சரக் சரக்’ என்று சவைக்க ஆரம்பித்தது. ‘அது கூட அனுபவிச்சுத் திங்கிது’ என்று ராசாத்திக்குத் தோன்றியது.
“இன்னுமா குளிக்கறே, எப்ப சோறாக்கி எப்ப திங்கறது, கதவை வேற சரியா தாழ்ப்பா போடலை, மறைசலில் போய் நின்னு குளிச்சா என்ன, யாரோ ஒரு அன்னக் காவடி வேற, தர்மம் தாயேன்னு நின்னுக்கிட்டே இருந்தான், சத்தம் போட்டு விரட்டினேன்,” என்றபடியே ஆறுமுகம் வந்தான். கண் அவளது நீர் சொட்டும் மஞ்சள் கால்களையும் தோள்ப்பட்டையையும் பார்த்தது. குற்றக் குறு குறுப்பாய் உணர்ந்தவள், “வாசலில் நின்று பார்த்தால் கிணறு தெரியாதே, இவன்தான் சுவரெட்டிப் பார்த்திருப்பானோ, இவன் அப்படி ஒளிந்து நின்று பார்க்கிறவன் தான்,” என்று நினைத்து மனதுக்குள் சிரித்தும் கொண்டாள். ‘அது என்ன படுக்காளித்தனம் ஒளிஞ்சு பாக்கறது” என்று கோபமாயும் வந்தது.
4
கணேச சார்வாள் வயலுக்குப் போன போது, மாலையம்மா வரப்போரம் கிடந்த கரிசலாங்கண்ணி, கரிப்பான், கொடுப்பை இலைகளைப் பிடுங்கி மடியில் கட்டிக் கொண்டிருந்தாள். இன்னும் மோட்டார் கரண்ட் வரவில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் மோட்டாரைப் போட்டு விட்டு, மடைகளை அங்கங்கே அடைத்து, திறந்து, பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பாள். கணேச சார் கிணற்றை ஒட்டிய பம்பு செட்டுக்குள் போனார். போகும் முன் செருமிக் கொண்டார். மாலை குனிந்து கீரை பறித்துக் கொண்டிருந்தாலும் அவளுக்கு காது கேட்டது. சிரித்துக் கொண்டாள். `சார்வாளுக்கு இந்த உச்சி வெயிலுதான் பிடித்தமான பொழுது” என்று நினைத்தாள். நிமிர்ந்த போது குறுக்கு வலித்தது. மேனேஜர் சார்வாள் வீட்டில, தலைக்குத் தேய்க்கற எண்ணெய் காய்ச்ச கீரை கேட்டதா கணேசய்யா சொல்லியிருந்தார்.
அடி வயிற்றில் கட்டிய கீரை மூட்டையுடன் ‘சலக் சலக்’ என்று நடந்து பம்ப் செட்டுக்குள் வந்தாள். அவளின் பெரிய மார்பு அதற்குப் போட்டியாகக் குலுங்கிக் கொண்டிருந்தது. செட்டுக்கு மேலான புங்க மரம் அடர்ந்து தழைத்திருந்ததால் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. பம்ப் செட் என்பது சார்வாளின் வீடு போலத்தான். மாலை அதை சுத்தமாக வைத்திருப்பாள். இருந்தாலும் சார்வாள் அதைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து மாலை பதறிப் போனாள்.
“நல்லாத்தான் வேலை பாக்குறியே, நான் தான் வருவேனே,” என்று வாரியலைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள். ‘என்ன அவசரம். இன்னைக்கி ரொம்பத் தேடுதோ.. இல்லை வீட்ல நாச்சியாரு என்னமும் சண்டை இழுத்துட்டாகளோ, இருக்கும் போன தடவை வந்ததுக்கு மருந்து சாப்பிட்டு கலைக்கறதுக்கு கன பாடு பட்டுட்டேன். ரெண்டு மாசமாச்சுல்லா, சார்வாளுக்குத் தேடிருக்கும்..’ என்று நினைத்துக் கொண்டே தரையைப் பளிங்கு போலப் பெருக்கித் துடைத்தாள். `இப்படி ஒரு பசுப்போல மனுசனுக்கு காட்டெருமை போல ஒரு பொஞ்சாதி’
அவள் சுத்தம் பண்ணியதும் சுவரில் சாய்ந்தது போல உட்கார்ந்து கொண்டார். மாலையம்மாவும் அவர் அருகாக இருந்து கொண்டாள். பக்கடா போட்டலத்தைப் பிரித்து ஒரு துண்டு வாயில் போட்டுக் கொண்டு அவளிடம் கொஞ்சம் கொடுத்தார். “நான்தான் அங்கேயே சாப்பிட்டாச்சே… நீங்க சாப்பிடுங்க.”
காப்பி கிளப்பில் எல்லோரும் கேலி செய்தது நினைவுக்கு வந்தது. அவளிடம் சொன்னார். “இந்தப் பயலுக எப்படில்லாம் நக்கல் செய்தானுக கேட்டியா,”. “ஆமா, அவங்களுக்கும் நான் சம்மதிச்சா சும்மா இருப்பாங்க..” அவரை நெருங்கி வந்தாள். அவள் மேலிருந்து வந்த புல்லும் குழையுமான பச்சை வாசனை பிடிக்கவில்லை. அவருக்கு அந்தக் கணத்தில் அது வேண்டியிருக்கவில்லை. `வீட்டுக்கார நாச்சியார் என்னமாவது சண்டை இழுத்திருப்பாள்’ என்று நினைத்து சற்று விலகினாள். ஆனால், அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு மாலை தேவைப்படுவாள். இன்றைக்கு அவர் தவிர்ப்பதைப் பார்த்தால் பெரிய பிரச்னை ஏதாவது இழுத்திருப்பாள் என்று நினைத்துத் தள்ளிப் போகவும், திடீரென்று வயல் கரண்டு வந்து தட தடவென்று மோட்டார் ஓடவும் சரியாக இருந்தது. “மோட்டார் மெயின் சுட்சைப் போட்டு வச்சிருந்தியா, நான் பயந்தே போய்ட்டேன்.” என்று அவள் தலையில் குட்டினார். “சார்வாளுக்கு பள்ளிக்கோட ஞாவகம் போல… பயலுகளைக் குட்டுத மாதிரீல்லா குட்டுதிய.” அதைக் கேட்ட சார் இன்னொரு முறை கையை ஓங்கிய போது பட்டென்று விலகினாள்.
அவரிடமிருந்து விலகி, செட்டை விட்டு வெளியேறி அருவியாய்க் கொட்டும் தண்ணீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு அங்கங்கு வாமடை போட மண்வெட்டியுடன் நகர்ந்தாள், அடுத்த கால் மணி நேரத்துக்கு குனிஞ்ச முதுகு நிமிராம வேலை பார்த்தாள். திடீரென்று, “இந்த ஆம்பளையாள் எங்க போனான்னே தெரியலையே.. ஒரேயடியா செத்தொழிஞ்சு போயிருந்தாலும் விட்டுது சனின்னு இருக்கலாம். ஆனா, எப்ப வந்து நிப்பானோன்னு பயமாருக்குல்லா” மனசுக்குள் சொல்லிக் கொண்டே பம்ப் செட் ரூமைப் பார்த்தாள். கணேசய்யா குளித்துக் கொண்டிருந்தார். ‘ஒண்ணும் நடக்கலியே பொறகு ஏன் குளிக்கறாக. இவரே ஊர்ல காட்டிக் குடுத்துருவாரு போல’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
இதற்குள் பக்கத்து வயல்களிலெல்லாம் மோட்டார் ஓடவும் ஆட்கள் வேலை செய்யவும் ஆரம்பித்திருந்தார்கள். அங்கிருந்தே ஒருத்தி, “உன்னை மேல் பாக்கறதுக்கு சார்வாள் வரலையா,” என்று கேட்டாள். அடிக்கிற காற்றி பாதிதான் காதில் விழுந்தது. ஆனால், அதைத்தான் கேட்கிறாளெனப் புரிந்தது. மண்வெட்டியை அவளைப் பார்த்து ஓங்கினாள். அவளும் அங்கிருந்து வழுவென்றிருந்த மண் வெட்டிக் கணையை மட்டும் காண்பித்துச் சிரித்துக் கொண்டாள். பகீரென்றது மாலையம்மாளுக்கு. அவள் சார்வாளைக் குறித்து ஏதோ சொல்லுகிற மாதிரித் தெரிந்தது. `அப்படின்னா சார்வாளுக்கும் அவளுக்கும் பழக்கமுண்டா…’ என்று நினைப்பு ஓடியது. `சேச்சே… இருக்காது, சார்வாளா ஆசைப்பட்டுத் தொட்டாக, அவுக வீட்டு சூழல் பள்ளிக்கூட சூழல் நாமளாத்தானே ஆறுதலா ஆரம்பிச்சோம். இன்னைக்கி வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னுட்டாகளே, அப்படி ஒன்னும் அலப்பரைப் புத்தி கிடையாது’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வேலையில் இறங்கினாள்.
கணேசய்யா சார்வாள் அப்படி ஒரு அடங்கின குணம். ‘ரெண்டு கை தட்டுனாத்தானே ஓசை?’ என்று எதிர்வாதம் பண்ணவே மாட்டார். யாரிடமும் அமர்ந்து போகிற டைப்பு. வீட்டில் மனைவி பத்திரகாளி. கால் பட்டா குத்தம் கைப் பட்டா குத்தம்ன்னு மாமியார்கள்தான் மருமகிட்ட மல்லுக்கு நிப்பாங்க இங்கே கட்டின புருசன் கிட்ட மல்லுக்கு நிக்கிறது பொண்டாட்டி. ஒழுங்கா சமையல் பண்ணா மாட்டாள். ஒரு நாளைக்கிப் பொங்கினா நாலு நாளைக்கி வச்சிக்கிடுவா. அந்த சோசியனைப் பாக்கப் போறேன் இந்த மந்திரவாதியப் பாக்கப் போறேன்னு கிளம்பிப் போயிருவா.
அவன் அந்த விரதம் இருக்கச் சொன்னான், இவன் இந்தப் பரிகாரம் பண்ணச் சொன்னான் என்று வீட்டை இரண்டு பண்ணவே நேரம் போதாது. அப்படியாவது எல்லா வீட்டு வேலைகளையும் அவளே பாத்துக்கிடுவான்ன்னா அதுவும் கிடையாது. திடீர்ன்னு காலங்காத்தால ‘பூசை பண்ணச் சொல்லியிருக்காரு மாரியப்பன் சோசியரு’ என்று மொத்த வீட்டையும் கழுவிக் கவுத்துங்கன்னு சார்வாளைத்தான் ஏவுவா. அப்பல்லாம் இருநூறு வாளித் தண்ணியாவது கிணத்தில் இருந்து இறைக்க வச்சிருவா. பூசைக்கி சுத்த பத்தமா இருக்கேன்னு கொடியில் கிடக்கும் சேலையைக் கூடத் தொட விட மாட்டாள். புள்ளைகளையும் அந்தப் பாடுதான் படுத்துவாள். ‘இவ எப்படி சார்வாகிட்ட மூனு புள்ளை பெத்தா?’ என்று பக்கத்து வீடுகளில் குசுகுசுப்பாய் ஆச்சரியப்படுவார்கள்.
வெள்ளி செவ்வாய் என்றால் அம்மன் கோயில். சனிக்கிழமை, ஏகாதசி என்றால் பெருமாள் கோயில். பிரதோஷம் என்றால் சிவன் கோயில். இவளுக்குன்னு எந்தக் காட்டுக்குள்ளதான் கோயில் இருக்குமோ தெரியாது. “ஆள் போக்கு வரத்தே இல்லாத கோயிலுக்குப் போய் கும்பிடச் சொல்லியிருக்காரு அய்யரு. அப்படி தனியா இருக்கற சாமிதான் நம்மளைப் பார்க்கும். கூட்டமா இருக்கிற கோயிலுக்குப் போனா சாமி யாரைன்னு பார்க்கும் அப்படின்னு அய்யர் சொல்லுறாரு. அது சரிதானே?” என்பாள். “அப்படிக் கோயிலுக்கு எப்படி தனியாப் போறது? நீங்களும் வாங்க” அப்டின்னு ஒத்தைக் காலில் நிற்பாள். பத்து மைல் இருபது மைல் என்று அப்படி வனாந்திரக் கோயில்களுக்கு சைக்கிளில் அவளையும் பின்னால் வச்சுக்கிட்டு சார்வாள் போய்ட்டு வருவாரு.
ஆள் ஒல்லியுமில்லை குண்டுமில்லாத ஒற்றை நாடி உடம்பு என்றாலும் வலுவான மனுசன். அவரே பெருமையாச் சொல்லிக் கொள்கிற ஒரே விஷயம் அவர் டீச்சர் ட்ரெய்னிங்க் படிக்கிற போது, பல போட்டிகளில் கோப்பை ஜெயித்த கபடி விளையாட்டு வீரர் என்பது மட்டுமே. மேனேஜர், சார்வாளின் தோட்டம் துரவு எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக மேல் பார்ப்பார். வயல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் அவசரத்திற்கு எந்த ராத்திரியானாலும் ஒரு மரக்கால் விதைப்பாடு நிலத்திற்கும் தண்ணீர் பாய்ச்ச வேண்டுமென்றாலும் அவரே செய்து விடுவார். ராத்திரி நேரங்களில் பூச்சி கீச்சி நடமாடும் என்ற பயமெல்லாம் கிடையாது. ‘பொண்டாட்டிய விடவா வேற விஷப் பூச்சி உண்டு?’ என்று மாலையம்மாளிடம் சொல்லுவார். சமயத்தில் மாலையம்மா தானும் ஒத்தாசைக்கு நிற்கிறேன் என்று நிற்பாள். அதற்கும் பொண்டாட்டி ஆயிரம் வக்கணை சொல்லுவாள்.
பள்ளிக்கூட விஷயமாக அதிகாரிகளை, பார்க்கிற விதமாய்ப் பார்க்க வேண்டுமென்றாலும் அவரைத்தான் மேனேஜர் சார்வாள் அனுப்புவார். ஆனால், மேனேஜர் சார்வாள் அப்படி ஒன்றும் அதற்காகக் கணேசய்யாவுக்கு விசேஷ மரியாதை தர மாட்டார். ஒரு வகையில் அவருக்கு சொந்தமும் கூட. சொந்தக்காரர்கள் மத்தியில் கொஞ்சம் வசதிக் குறைவான குடும்பம். அதனால் எளக்காரமாகத்தான் நடத்துவார். அவர் மட்டுமில்லை, அவரது சொந்தமான மத்த டீச்சர்களும் வாத்தியார்களும் ஏனோ தானோவென்றுதான் பழகுவார்கள். ப்யூலா டீச்சர் மட்டும்தான் கணேசய்யாவிடம் பிரியமாக இருப்பாள்.
ப்யூலாவின் கணவர் அவளோடு இல்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ரெக்கார்ட் டான்ஸ் ஆட வந்த சுசிலாவின் பின்னோடு திரிகிறார் என்று சமீபமாக ஊரெல்லாம் பேச்சு. மதுரை அருகே ஒரு கிராமத்துக் கொடையில் சுசிலா ரெக்கார்ட் டான்ஸ் பார்க்கப் போன ஒருவர் அவரைப் பார்த்திருக்கிறார். `இப்ப நான்தான் சுசிலாவுக்கு மேனேஜர் போல இருக்கிறேன். நல்ல சாப்பாடும் சம்பளமும் கொடுக்கறா, என்னைத்தவிர யாரையும் நெருங்க விட மாட்டா. லம்ப்பா ஒரு தொகை சேர்ந்ததும் ஊருக்கு வரணும்,’ என்றாராம். சுசிலா நன்றாகத்தான் இருப்பாள் ஆனால், ப்யூலா டீச்சரை விட ஒன்றும் நல்லா இருக்க மாட்டாள். ப்யூலா டீச்சருக்கு அவள் அழகுதான் எதிரி. காவல் இல்லாத தோட்டம். கண்ட கண்ட மாடுகளும் மேய நேரம் பார்த்திருக்கும். அதையெல்லாம் நெருங்க விட மாட்டாள். மேனேஜர் சார் தருகிற சில்லரைத் தொந்தரவுகளைச் சமாளித்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் சம்பளத்தில் `கொணக்கு’ பண்ணி விடுவார். மேனேஜர், ப்யூலாவை நெருங்குகிற போதெல்லாம் சொல்லி வைத்தது போல கணேசய்யா வந்து காப்பாத்தி விடுவார். அதனாலும் கணேசய்யாவை ப்யூலா டீச்சருக்கு ரொம்பப் பிடிக்கும். அவளை நெருங்க முடியாத வயித்தெரிச்சலில் மேனேஜரையும் அவளையும் சேர்த்து வச்சு ஊர் பலதும் பேசும். அதை மேனேஜரே கிளப்பி விடுவதாகவும் சிலர் பேசிக் கொள்வார்கள்.
-kalapria@gmail.com



