தொடர்கள்

‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 1

’வலசைப்பாதை’ ஒருங்கிணைப்பாளர்: பறவை பாலா

1. வலசைப்போதல்

பெருநகர நெரிசலின் போது, ‘சிக்னலில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திருப்போரை எப்போதாவது கவனித்திருக்கின்றீர்களா?’

எவர் முகத்திலும் சிறு புன்னகையில்லாமல் ஒரு உக்கிரமான போருக்கு புறப்பட்டுச் செல்லும் வேகமிருப்பதை கவனித்திருக்கின்றீர்களா?

ஏனிந்த வேகம்?

யாருக்காக இந்த ஒட்டம்?

இரை  தேடும் பொருட்டு காற்றை கிழித்து பறந்து செல்லும் பறவைகள் அந்தி சாயும் போது வீடு திரும்புகையில் மனிதர்களாகிய நாம் மட்டும் இலவு காத்த கிளியைப் போல, இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்க்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கின்றீர்களா?

சரி!  இதற்கு முன்பு அவற்றையெல்லாம் கவனித்திருந்தாலும், கவனிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. இனி அதற்காக ஒரு நாள் ஒதுக்கி கவனிக்க ஆரம்பியுங்கள். “சும்மா ஒரு நாளை ஒதுக்கனுமா? இது நல்ல கதையா இருக்கே?”என் நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறில்லை. நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் பணமாக மாற்றும் வித்தையை கற்றுத்தந்த உங்கள் கல்வி முறையே அதற்கு காரணம்.

இவற்றை தவிர்த்து, ஒரு தாளை எடுத்து நீங்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்த பணத்தை எவற்றிற்கெல்லாம் செலவிடுகிறீர்களென்பதை எழுதத் துவங்குங்கள். பெரும்பான்மை பணம் கல்வி, மருத்துவம், சந்தைக்கு புதிதாக வந்து சேரும் எந்தவொரு பொருளையும் ஆய்வுக்குட்படுத்தாமல் நுகருதல், கேளிக்கை, நல்லது, கெட்டது இன்ன பிறவற்றிற்கெல்லாம் போக, மீதமில்லாமல் உடல்நலம் கெட்டு நின்று கொண்டிருப்பது தெரிந்தால்… பாவம் நீங்கள் மீளவே முடியாத ஒற்றைவழிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இன்றைக்கு நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் பெருமை மிகு வாழ்க்கையின் பயணம் எங்கேயிருந்து ஆரம்பமானது என்று ஆராய ஆரம்பித்தால், விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து மேற்கு நோக்கி கரிசல் காட்டுப் புழுதியில் செல்லும் மாட்டு வண்டி தடமாகமவோ, தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து கிழக்காக பிரிந்து செல்லும் ஒற்றையடி கரட்டு பூமி பாதையாகவோ, டெல்டாவின் ஏதோவொரு அடையளம் தெரியாத குக்கிராமமாகவோ இருக்கக்கூடும்.

கிராமத்திலிருக்கும் போது பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கஞ்சியோ, கூழோ இருப்பதை குடித்துவிட்டு நிம்மதியாக இருந்தோம். ஆனால் இன்று, எல்லா வசதி வாய்ப்புகளையும் தந்த நகரம், நிம்மதியை மட்டும் பறித்துக் கொண்டதே என்று கையறு நிலையில் நீங்கள் நிற்பதைப் போல, அறுபதுகளில் ஏழு பேர் கொண்ட குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த அந்த வேளாண் விஞ்ஞானிக்கும் இருந்தது.

யோசித்து, யோசித்துப் பார்க்கிறார். தன் மேலதிகாரிகள் சொன்ன அனைத்து இரசாயனங்களையும் பயன்படுத்திப் பார்த்தார். பூச்சித் தொல்லை அதிகமாகும் போதெல்லாம் பூச்சிக்கொல்லி தெளித்தார். மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நட்டக் கணக்கு வருகிறதே! என்று குழம்ப ஆரம்பித்தார். மனம் தளராமல் மீண்டும் மீண்டும் தன் சந்தேகத்தை உறுதி செய்யும் பொருட்டு மேலதிகாரியை நச்சரிக்க ஆரம்பித்தார். மேலதிகாரி இவர் தொல்லை தாங்க முடியாமல் ‘சார், மேலிடம் சொல்கிறார்கள்  நாம் செய்கிறோம். உங்கள் சந்தேகம் தீர வேண்டுமானால் மேலிடத்திற்கு கடிதம் போட்டு பதில் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதையடுத்து சென்னைக்கு கடிதம் எழுதுகிறார்.

சென்னையிலிருந்து வந்த கடிதம் டில்லியை கை காண்பித்தது. டில்லி அமெரிக்காவை கை காண்பித்தது.  அமெரிக்கா ஃபோர்டு நிறுவனத்தை கை காண்பித்தது. ஒரு மகிழுந்து தயாரிக்கும் நிறுவனமான ஃபோர்டுக்கு, நம் விளை நிலத்தின் மீது அப்படியென்ன அக்கறை வந்தது? என்று யோசிக்கும் போது அவருக்கு ஒரு விஷயம் தெளிவாக புலப்பட்டது. ஒரு வேளாண் குடிமகனிடம் விதை, உரம், தொழில்நுட்பம், உழைப்பு இவை நான்கும் இருக்க வேண்டியது அவசியம். ஒரு குழந்தைக்கு மிட்டாயைக் கொடுத்து ஏமாற்றுவதைப் போல உழவனிடம் உழைப்பைத் தவிர மற்ற மூன்றையும் வளர்ச்சி என்கிற ஆசை வார்த்தை காட்டி பிடுங்கியிருக்கிறார்கள்.

அந்த ஆசை வார்த்தை பயணிக்கும் நூலின் பின் போய்ப்பார்த்தால் அது இந்தியாவிற்கு இராபர்ட் கிளைவ் வந்து சென்ற தடத்தில் முடிச்சிபோடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

எமது மக்கள் பல்லாயிரமாண்டு காலம் தூக்கிச் சுமந்து வந்த மரபு அறிவை எவ்வளவு லாகவமாக வீழ்த்தியிருக்கிறார்கள்?  இதை இப்படியே விட்டு வைத்தால் மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும், மீட்டாக வேண்டும் என்ன செய்யலாம்? யோசிக்கிறார்.

அவர் முன் இரண்டு வாய்ப்புகளிருந்தன. ஒன்று, எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அமைதியாக இருந்து அரசு தருகிற அத்தனை சௌகர்யங்களையும் அனுபவித்துக்கொண்டு கடந்து போவது. மற்றொன்று தன் நாட்டின் மக்கள் இழந்து நிற்கும் மரபு அறிவை மீட்டெடுக்க ஒரு நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டியது. முந்தையது பணம், பதவி, புகழ் போதை நிறைந்தது. பிந்தையது பசி, அவமானம், வலி மிகுந்தது.

அவருக்கு அப்போது தான் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.

அவர் அறத்தின் வழி நின்ற மறவர். ஆதலால் வலி மிகுந்த இரண்டாவது பாதையைத்தேர்ந்தெடுத்து தலையில் கட்டியிருந்த உருமாலை அவிழ்த்து நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் சேர்த்து தன் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

அன்று ஆரம்பித்த அவரது பயணம், தொடர்ந்து உழைக்கும் வேளாண் குடிமக்களுக்காகவே பேசியும், எழுதியும் வந்திருக்கிறது.

இறுதியாக அவர் மரணிக்கும் முன்பு தற்சார்பு வாழ்வியலை நேசிக்கும் ஒவ்வொருவருக்குமான வாசலை அகலத் திறந்து விடும் முகமாக ‘வானகம்’ என்கிற அமைப்பை உருவாக்கியது வரை நீண்டது.

இன்றைக்கு பெரு நகரங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக நீங்கள் தேடித்தேடி நுகர விரும்பு இயற்கை அங்காடிகள் அவரின் வலி மிகுந்த பயணங்களில் விளைந்தவை!

கரூர் மாவட்டம் சுருமான் பட்டியில் அமைந்திருக்கும் இந்த அமைப்பானது, அதோடு நின்று விடாமல் நல்லகீரை, செம்மைவனம், குக்கூ காட்டுப்பள்ளி என்று பல தளங்களில் தன் அனுபவத்தை கடத்திய வண்ணம் இருக்கிறது.

அவரது பேச்சிலும், எழுத்திலும் தூவிச் சென்ற விதைகள் இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் முளைவிட ஆரம்பித்திருக்கிறது. திக்குத் தெரியாமல் முட்டுச் சந்தில் நிற்கும் நீங்கள் முடிந்தால் ஒரு முறை அது போன்ற இடங்களுக்கு போய் வாருங்கள். உங்களது பார்வையும், பயணிக்க வேண்டிய பாதையும் விரிவடையும்.

 

               பாதை விரியும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button