டெல்லி அப்பள நகைச்சுவைக்கு எனக்கு சிரிப்பு வராது – கி.ச.திலீபன்

சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோடு புத்தகக் காட்சி தமிழகத்தின் பெரிய புத்தகக் காட்சியாக உருவெடுத்தது. அதற்குக் காரணம் அதனை நடத்திய மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பும் அதன் நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சில முன்னெடுப்புகளும்தான். பள்ளி மாணவர்களை புத்தகக் காட்சிக்கு அழைத்து வருவதற்கான பிரச்சாரம் ஈரோடு மாவட்டத்தின் பல பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு புத்தகக் காட்சி தொடங்கப்பட்டபோது நான் 8-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு அடுத்த ஆண்டு எங்களது பள்ளியிலும் ஈரோடு புத்தகக் காட்சி பற்றி அறிவிக்கப்பட்டது. கவிதை வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்ட எனது தந்தை, எங்கள் ஊரிலிருந்து 45 கி.மீ அப்பால் இருக்கு ஈரோட்டுக்கு புத்தகக் காட்சிக்காக என்னைத் தனியாக அனுப்பி வைத்தார். அப்படியாக புத்தகக் காட்சிக்கு சென்று புத்தகங்களைப் பார்ப்பதே நிறைவளிக்கும் அனுபவமாக இருக்கும்.
நான் தீவிர வாசிப்பின் வழியே எழுத வந்தவனல்ல. எழுத வேண்டும் என்றால் அதற்கு வாசிக்க வேண்டும் என்பதை அறிந்த பிறகு அதற்காக வாசிக்கத் தொடங்கியவன். எனது பள்ளிக்காலத்தில் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளுக்கு அனுப்பி அது பிரசுரமானால் அதற்குத் தரும் 100, 50 ரூபாய் சன்மானம் எனக்குப் பெரிய தொகை. அதற்காக 50 பைசா தபால் அட்டையில் தொடர்ச்சியாக பல நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பேன். அவற்றில் ஒன்றிரண்டு விகடன், குமுதம், கல்கி, வாரமலர் இதழ்களில் பிரசுரமானது. அப்படியாக எழுதிச் சேர்த்த நகைச்சுவைத் துணுக்குகளை ஒரு புத்தகமாகக் கொண்டு வர பதிப்பகத்தாரை அணுக வேண்டித்தான் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். எழுத்தின் வகைமைகளைப் பற்றியெல்லாம் ஏதுமறியாத 15 வயதில் ஒவ்வொரு பதிப்பக அரங்குக்கும் சென்று எனது நகைச்சுவைத் துணுக்கு நூலைப் பிரசுரிக்க முடியுமா எனக் கேட்டிருக்கிறேன். இம்மியளவு கூட இலக்கியம் பற்றி அறிந்திருக்காத நிலையில் ‘காலச்சுவடு’ பதிப்பக அரங்குக்குச் சென்று நகைச்சுவைத் துணுக்கு நூலை வெளியிட முடியுமா எனக்கேட்டேன். எப்படிப்பட்ட நகை முரண்! அந்த அரங்கில் விற்பனையாளராக இருந்த ஓவியர் கதிர்வேல் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இலக்கியம் பற்றிக் கொஞ்சம் விளக்கினார். பழைய காலச்சுவடு இதழ்களை எடுத்துப் படிக்கக் கொடுத்தார். அன்றைக்கு மாலை ஈரோடு ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டலில் நடைபெறும் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைத்தார்.
காலச்சுவடு இதழ்களை புரட்டிப் பார்த்தேன். அதனுள் அச்சாகியிருப்பது தமிழ் எழுத்துகள் என்பது மட்டும் புரிந்தது. ‘இதனையெல்லாம் எப்போது நான் முழுமையாகப் படித்து உள்வாங்கி இது போன்று எழுதுவது?’ என்பதை நினைக்கையில் மலைப்பாக இருந்தது. இருந்தும் கதிர்வேல் என்னை அழைத்ததன் பேரில் அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன். இரண்டு மணி நேரமாக அவர்கள் பேசியதில் காந்தியைப் பற்றி ஏதோ பேசுகிறார்கள் என்பது மட்டும்தான் புரிந்தது. அந்நூலின் பெயர் ‘பிறகொரு இரவு’ எழுதியவர் எழுத்தாளர் தேவிபாரதி. எதுவும் எனக்குப் புரியவில்லை என்றாலும் நான் படித்த துணுக்கு எழுத்துகள் மற்றும் வெகுஜன இதழ்களில் இடம்பெறுகிற சிறுகதைகளையெல்லாம் கடந்து இன்னொரு எழுத்துலகம் இருக்கிறது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டேன். புத்தகம் வாங்கும் அளவுக்குப் பணம் இல்லையென்றாலும் புத்தகத்தை எடுத்துப் பார்ப்பது, அது எந்த வகைமையிலான நூல்? எழுதியவர் யார்? அவர் வேறு என்னென்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறார்? என்று பார்ப்பதே அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது. எங்கள் ஊர் கிளை நூலகத்தின் மூலமாகவும், ஈரோடு புத்தகத் திருவிழா மூலமாகவும் இலக்கியப் பரிச்சயம் உண்டாகி, மெல்ல அது இலக்கிய வாசிப்புக்கு நகர்ந்து அப்படியே எழுத்துக்குள் சென்றேன்.
2012-ஆம் ஆண்டில் எனது சென்னை வாழ்க்கைத் தொடங்கியது. சினிமா கனவோடு சொந்த ஊரிலிருந்து கிளம்பி வடபழனிக்கோ, சாலிகிராமத்துக்கோ வந்து குத்த வைக்கிற உலக வழக்கத்துக்கு இணங்க, நானும் சென்னைக்கு வந்திருந்தேன். அதன் பிறகான இந்தப் பதிமூன்று ஆண்டுகளில் குறைந்தது 8 ஆண்டுகளாவது நந்தனத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருப்பேன். ஓராண்டு தீவுத்திடலுக்கு. இதுவரையிலும் 5 டெல்லி அப்பளங்கள் வாங்கிச் சாப்பிட்டிருக்க மாட்டேன். ஆகவே புத்தகக் கண்காட்சி என்றாலே டெல்லி அப்பளப்பத்தை ஒப்பிட்டுச் சொல்லப்படும் நகைச்சுவைக்கு எனக்குச் சிரிப்பு வராததன் காரணம் இதுதான். இலக்கியவாதிகளுடனான உறவாடலுக்குப் பிறகு புத்தகத் திருவிழாவுக்குச் செல்வதென்பது கடமையாகவே மாறியது. இன்றைக்கு ‘Print on Demand’ மூலமாக குறைந்தபட்சமாக 24 பிரதிகள் மட்டும்கூட அச்சிட்டுத் தப்பித்துக் கொள்கிறார்கள். பாவம் முன்பெல்லாம் பதிப்பாளர்கள் 300 பிரதிகளாவது அச்சிட வேண்டும்.
இலக்கியத்தைப் பொருத்தவரை பல நூல்கள் மெல்ல மெல்ல நகரும். ஆண்டுகள் பல கடந்த பிறகும் ஊர்ந்து கொண்டிருக்கும் நூல்களை சுமந்து கொண்டு திரிய முடியாததால், 50 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி கொடுத்துத் தள்ளி விடுவார்கள். அப்படியும் நகராதவற்றை இறுதிநாள்களில் இலவசமாகக் கொடுத்த வரலாறு தனி. இப்படியாக ஒரு பதிப்பக்கம் 50, 40, 30, என பல தரவரிசைகளில் தள்ளுபடி அறிவித்துத் தள்ளி விட பதிப்பகங்கள் இறங்கும். அவ்வப்போது மாஸ்டர்களின் புத்தகங்களும் இவற்றில் இடம்பெறும். மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த எனக்கு இந்தத் தள்ளுபடி அறிவிப்புகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன.
எனக்கு ஓர் எழுத்தாள நண்பர் இருந்தார். அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு மட்டும் எழுதி வெளியிட்டிருந்தார். 50 ரூபாய் விலை கொண்ட அந்நூலுக்கு 50 சதவிகித தள்ளுபடியை அறிவித்திருந்தது பதிப்பகம். இந்த அதிரடி அறிவிப்புக்குப் பிறகும் அப்புத்தகங்கள் வைத்த இடத்தில் அப்படியே இருந்தன. அவர் நேரே பதிப்பக அரங்குக்குச் சென்று 25 ரூபாய் வீதம் பத்து நூல்களை வாங்கிக் கொண்டார். அடுத்த நாள் மீண்டும் வந்த அவர் என்னிடம் பணம் கொடுத்து, “நானே போய் வாங்கினா நல்லாருக்காது… நீங்க ஒரு பத்து புத்தகம் வாங்கிட்டு வந்து கொடுங்க திலீபன்” என்றார். நட்புக்காக இதைக்கூடவ செய்யத் தயங்குவோம்? வாங்கி வந்து கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கவிஞர் இந்த எழுத்தாள நண்பரைச் சந்தித்தார். அவரும் ஒரு கவிதைத் தொகுப்பை அதே பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார். படைப்பாளருக்கும் பதிப்பாளருக்குமான முரண்பாடுகளை இயல்பானதுதனே? இக்கவிஞருக்கும் அப்பதிப்பாளருக்கும் ஏதோ வரப்புத் தகராறு. இவரது கவிதைத் தொகுப்பும் அங்கே 30 சதவிகித தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆக, அதனையும் பத்துப் பிரதிகள் வாங்கித் தர வேண்டியிருந்தது. இப்படியான சேவைகளிலும் ஈடுபட வேண்டியிருந்தது.
அதிரடி ஆக்ஷன் படங்களைக் காணும்போதெல்லாம் நமக்குள்ளும் நரம்பு புடைக்கும். படம் முடிந்து வந்த சில மணி நேரங்களுக்கு யாரையேனும் தூக்கிப்போட்டு மிதிக்கத் தோன்றுவதைப் போலவே புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்து திரும்புகிற வரையில் விரைவில் புத்தகம் எழுதி விடுகிற உத்வேகம் பிறக்கும். என்ன புத்தகம் என முடிவெடுத்து அதற்கான தலைப்பெல்லாம் கூட தீர்மானித்து, பதிப்பகத்திடம் சென்று ‘விரைவில் எனது நூலை உங்களது பதிப்பகத்துக்குத் தருகிறேன். நூலாகக் கொண்டு வரலாம்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அடுத்த ஆண்டு புத்தகக் காட்சியில் அந்தப் பதிப்பாளர் கண்ணில் படாமல் திரிந்த அனுபவங்கள்தான் எவ்வளவு? முகநூல் நட்புகளை நேரில் சந்திக்க அற்புதமான தளம் இதுதான். அன்பின் வெளிப்பாடாக புத்தகங்களை வாங்கிப் பரிசளித்த தோழமைகளை எப்படி மறக்க முடியும்? உணவு அரங்குகளின் கூடுதல் விலைக்கு பயந்து புற வாசல் வழியே ட்ரம் டீ தேடிச் செல்லும் எளியவர்களால் நிறைந்தவை எனது புத்தகக் காட்சி நினைவுகள். பட்டியலிட இன்னும் நிறைய நினைவுகள் இருக்கிறதென்றாலும், அவற்றையெல்லாம் கடந்து இந்த மொழியின் எழுத்துலகில் பங்காற்றுகிறவன் என்கிற அடிப்படையில் சென்னை புத்தகக் காட்சி எனக்கு என்றைக்கும் முக்கியமானது.



