பகடி மொழி – மணி மீனாட்சிசுந்தரம்

(கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை முன்வைத்து)
மதுரையம்பதியில்
உதிர்க்கப்படும்
ஒட்டப்படும்
பொறிக்கப்படும்
வார்த்தைகளை மேய்ந்து
வளர்பவனுக்குப்
புதிதாய்ச் சொல்ல
என்ன இருக்கிறது
இந்த உலகத்திற்கு
– லிபி ஆரண்யா
நிலத்தில் விழுந்த நீர் நிலத்தினுடைய நிறத்தைப் பெறுகிறது; சுவையும் மணமும் ஒன்றிக் கலந்துவிடுகிறது. மனிதர்களிடம் விளைந்த மொழியும் அப்படித்தான். மனித குணங்கள் பேசும் மொழியில் ஏறி நின்று கொள்கின்றன. ஊரெல்லாம் மல்லிகை மலர்ந்தாலும் மதுரை மல்லிகைக்கென்று ஒரு தனியான மணம் இருப்பதைப்போல, மனிதர்களின் குணங்கள் பொதுவானவை என்றாலும், ஊருக்கென்று தனியாகத் தலைதூக்கித் திரிகின்ற குணங்களும் உண்டு.
“அந்த ஊர்க்காரன் அப்படித்தான் பேசுவான், பேச்சு மடங்காது” என்பது மொழியில் ஏறிய, மனிதர்களின் வீம்பையும் வீராப்பையும் குறிக்கிறது. “குத்திக் காட்டிப் பேசுவது அந்த ஊர்க்காரிகளின் வழக்கம்” என்பது ஒரு ஊரின் பெண்களை மட்டும் பிரித்துக்காட்டி, வம்பை வளர்க்கும் அவர்களின் மொழிக்குணத்தை வரையறுக்கிறது. மனிதர்களின் பேச்சு மொழியில் வெளிப்பட்டு நிற்கும் மனிதர்களின் குணம், அவர்கள் பேசும் மொழியின் குணமாகவும் மாறிப் போகிறது.
இந்த மொழியின் இயல்பு, எழுத்துவகையான படைப்பிலக்கியங்களிலும் தன் குணத்தைக் காட்டாமல் இல்லை. ஒரு நிலத்தின் பேச்சு மொழியில் மிகுந்திருக்கும் ஒரு குணம், அந்நிலத்துப் படைப்பாளியின் மொழியில் தென்படுதல் இயல்பான ஒன்றே; இதில் வியப்பதற்கு எதுவுமில்லை என்று கருதலாம். உண்மைதான், தொல்காப்பியர் காலத்தில் வாய்மொழி இலக்கியத்தின் உத்திகளாக இருந்தவை, எழுத்து வகை இலக்கியத்தில் புகுந்து காலங்கள் ஆகிவிட்டன. இன்றைய நவீன படைப்புமொழி, பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி குறைந்துவிட்ட இக்காலத்தில், அவ்வுத்திகளைத் தீவிரமாகக் கொண்டே இயங்குகிறது.
இப்படி, படைப்பிலக்கியத்தின் பொதுவான உத்தி ஒன்று, அந்நிலத்துப் பேச்சு மொழியின் ஆதிக்கத்தால் இன்னும் உயர்ந்து ஒலிப்பதையே இக்கட்டுரை சுட்டிக்காட்ட விழைகிறது. படைப்பாளியிடம் நிகழும் சமூக ஈடுபாடும், புழங்கு மொழியின் செல்வாக்குமே இக்குணத்தைத் தீர்மானிப்பதால், இந்நிலை ஒரு நிலத்தின் எல்லா எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பதுமில்லை.
ஒரு பேச்சு மொழியும், அதில் தூக்கலாக ஒலிக்கும் ஒரு பண்பும், அப்பண்பு கவிதையில் உத்தியுடன் இணைந்து படைப்புக்கு வளம் சேர்ப்பது குறித்தும் இக்கட்டுரை பேச முயல்கிறது.
மதுரைப் பகுதி மக்களின் பேச்சில் மிகுந்த ஒரு பண்பு ‘கேலிப்பேச்சு’. எது குறித்தும் ஒரு எள்ளல் தொனி மதுரை மக்களின் பேச்சில் இழையோடும். “அப்புறம் மாப்ளே?” என்றால் அதன் பொருள் “அடுத்து என்ன?” என்பதல்ல. ” நீ இயல்பாக இல்லையே என்ன காரணம்?” என்கிற விசாரிப்பே ஆகும்.
மதுரையைச் சேர்ந்த நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் இப்பண்பை “நக்கலு, நையாண்டி , குத்தலு, குசும்பு … “என வகைப்படுத்துவார். ‘கேலி செய்தல்’ என்பது நகையுணர்வு தோன்றச் செய்யப்படும் ஒன்றாகவே பொதுவில் கருதப்பட்டாலும், இலக்கியத்தில், ஒன்றினைக் கேலி செய்து எழுதப்படும் படைப்புச் செயலின் நோக்கம் ‘கேள்விக்குட்படுத்துதல்’ என்பதாகவே அமைகிறது. ஒன்றினைக் குறித்த தீவிர எதிர்ப்புணர்வை நகைப்புடன் அணுக ‘பகடி’ என்ற அந்த உத்தி பயன்படுகிறது. சமூகத்தில் மழுங்கிப்போன ஒரு உணர்வை, அதன் பாதையிலேயே சென்று மீட்டெடுக்கும் ஓர் அரிய பண்பு அதற்குண்டு.
அதேசமயம், ஒரு பிரச்சனையின் தீவிரத்தன்மையை மழுங்கடித்து நகைப்புடன் அப்பிரச்சனையைக் கடக்க வைக்கின்ற உள்ளடி வேலையும் பகடியின் குணமாக இருக்கிறது என்று கருதுவோர் உண்டு. ஆனால், பகடி, பிரச்சனையின் முழுப் பரிமாணத்தையும் வாசகருக்கு மிக எளிதாகப் புரிந்துகொள்ளத் துணை செய்வதுடன், அப்பிரச்சனைக்கான தீவிர எதிர்நிலை மனப்பான்மைக்கு உரம் சேர்க்கிறது; வலிமைப்படுத்துகிறது.
அத்துடன் பகடி என்பது திட்டமிடமுடியாத இயல்பான ஒன்றாகும். அந்தக்கணத்தில் விளையும் எதிர்வினையின் உடனடி வெளிப்பாடாகவே அது அமைந்துவிடும். நின்று நிதானித்துக் கருத்துச் சொல்லும் பண்பு அதற்கில்லை. காலம் தாழ்த்தினால் அதன் கனம் குறைந்துவிடும். உடனடியாகச் சொல்லியே ஆகவேண்டிய ஓர் உயிர் நிர்பந்தம் பகடிக்கு உண்டு. அதனாலேயே,சமூகத்தில் உடன்பாடற்ற எதைக் குறித்தும் ஓர் உடனடி விலகலை உணரும், விரும்பும் கவிஞன் தம் கவிதைகளில் ‘பகடி’ எனும் உத்தியைப் பயன்படுத்துகிறான். சகித்துக் கொள்ளாதிருத்தல் எனும் பண்பு கொண்டவனே கவிஞன். உடன்படுதல் எப்போதும் அவனது இயல்பாக இருக்கமுடியாது. அதனால் பகடி கவிஞனின் கை வாளாய் கக்கத்தில் ஒளிந்தபடியே காத்திருக்கிறது. அவனைத் தினமும் சங்கடப்படுத்தும் எந்த ஒன்றுக்கும் அவன் அந்தக் கைவாளை உயர்த்தக் தயங்கியதில்லை. இப்படித்தான் இந்த உத்தி நவீன கவிதைகளில் பயணப்பட்டு வந்திருக்கிறது.
பகடி, நேரடியான பகை உணர்ச்சிக்குத் தோதான எதிர்நிலையை செயலற்றதாக்குகிறது. அதனால் நேரடியாகக் கருத்துக் கூறமுடியாத எதையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தவும் அது உதவுகிறது. பகடி, உண்மையை முகத்துக்கு நேரே புன்னகையுடன் கூறுவதில் வல்லமை பெற்றது; நேரடியாகக் கருத்துக்கூற முடியாத எதையும் பற்றி நேரடியாகக் கருத்துச்சொல்லும் ஆற்றல் பெற்றது. ஒரு இரகசிய முடிச்சை எல்லோரும் பார்க்கப் பொதுவெளியில் நாசூக்காக அவிழ்த்துக் காட்டிவிடும் பண்பு கொண்டது.
கவிஞர் லிபி ஆரண்யா மதுரைக் கவிஞர். அவர் எழுதிய கவிதைகளில் சரிபாதிக்கும் மேற்பட்ட கவிதைகள் பகடித் தன்மை கொண்டவை. அவை மதுரையின் பேச்சு மொழியை அகமும் புறமுமாகக் கொண்டவை. அவர் வாழும் நிலம் குறித்த ஓயாத எண்ணம் அதில் அலையடித்தவாறே இருக்கும். தான் கூடிகட்டி வாழும் மரத்தின் உச்சியில் ஒய்யாரமாக நின்று பாடும் ஒரு பறவையின் பாடலை நிகர்த்தவை அக்கவிதைகள்.
‘உபரி வடைகளின் நகரம்’, ‘தண்ணியக்குடி தண்ணியக்குடி’, ‘சூதானம் தம்பி சூதானம்’, ‘எதுகை மோனைக்குப் பிறந்தவர்கள்’, ‘இமயம் சரிந்தது’, ‘பெருவட்டு உள்ளியை ஏப்பா பரசி அள்ற’ இவையெல்லாம் அவரது கவிதைத் தலைப்புகளில் சில. இத்தலைப்புகளே பகடித்தன்மை வாய்ந்தவைகள்தாம். ஆனால், அவற்றில் சமகாலப் பேச்சு மொழியின் சூட்சுமங்களையும் தன்னுள் கொண்டவையே அதிகம்.
அன்றாடம் தன்னைப் பாதிக்கின்ற எவை பற்றியும் பகடியுடன் எழும் கவிதை, அதற்கு அடிப்படையாக அன்றாடம் சமூகத்தில் புழங்கும் சொற்களையே அடிப்படையாகக் கொண்டு எழுகிறது. அது கவிதையை வாசிக்கும் ஒருவனுக்கு, இலக்கிய வடிவத்தின் நுண்மையான கவிதையுடன் ஒரு உடனடி இணைப்பை ஏற்படுத்தத் துணைசெய்கிறது.
அதே சமயம்,கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளை வாசிக்கும் ஒருவர் சமூகத் தன்னுணர்வு கொண்ட வாசகராக இருக்க வேண்டியதும், அக்கவிதைகளைப் புரிந்து கொள்ள அவருக்குத் தற்கால கவிதைகளைக் குறித்த புரிதலுடன், நடப்பு மொழி பற்றிய தெளிவும் இருக்க வேண்டியதும் மிக அவசியமாகிறது.
‘தண்ணியக்குடி தண்ணியக்குடி’ என்பது இயல்பான ஓர் அடுக்குத்தொடர் அன்று. மதுரைப் பேச்சில் புழங்கும் தொடர் இது. திரைப்படத்தில் நடிகர் விவேக் பயன்படுத்திய தொடர் இது. ‘அதிகமாக நடிக்காதே’, ‘ இதெல்லாம் மிகச் சாதாரணம்’ ஆகிய உட்பொருளைக் கொண்ட தொடர் இது. இதை அறியாத ஒரு வாசகன் கவிதைக்குள் ஒன்ற முடியாது.
‘சூதானம் தம்பி சூதானம்’ என்ற தலைப்பு மதுரையின் பேச்சு வழக்காகும். ‘சூதானம்’ என்பது பொதுவாகக் ‘கவனம்’ என்னும் பொருளுடையது என்றாலும், அது மதுரைப் பேச்சு வழக்கில் சூழல், இடத்திற்கேற்றவாறு வேறு பொருள்களையும் தரவல்லது. இதையும் வாசகன் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
பொதுவாக, சமகால நிகழ்வுகளைப் பகடியுடன் அணுகும் கவிதையையோடு ஒன்ற, கவிதை அளவுக்கு வாசகனுக்கு சமகால அறிவும் நகைச்சுவை உணர்வும் அவசியம் இருக்க வேண்டும். ஆனால், கவிஞர் லிபி ஆரண்யாவின் கவிதைகளோடு இணங்க, இவற்றோடு சமகால மதுரையின் பேச்சு மொழியை அறிதலும் கூடுதல் தேவையாகிறது. கடைசியும் முதலுமாக மதுரை நகர் காட்சிகளும் உங்களுக்குப் பழகியிருந்தால் அது இன்னும் நலமாகும். சான்றுக்கு ஒரு கவிதை போதுமென்றே நினைக்கிறேன்.
மதுரை ஆரியபவன் லஸ்ஸி
–———————————–
/திராவிட மாடுதான்
அதில் கறந்த பாலின்
திராவிடத் தயிர்தான்
திராவிடக் கரும்புதான்
அதில் பிழிந்த சாற்றின்
திராவிடச் சீனிதான்
இரண்டையும்
கோர்த்துவிடத் தெரிந்தவன்
குபேரனாகிறான்
ஒரு வெங்கலக் கிண்ணியோடு
கிளம்பி வந்தவன்தான் அவன்
தவிர
கொஞ்சம் பன்னீர்த்துளிகள்
கொஞ்சம் பனிக்கட்டி
திராவிடர் நாவை
ஆளப் போதுமானதாய் இருக்கிறது
ஆரியபவன் லஸ்ஸிக்கு./
(உச்சியில் நிகழும் விபத்து)
‘உபரி வடைகளின் நகரம்’ என்று மதுரை மாநகரத்து மக்களின் உளுந்தவடை மோகத்தைப் பகடி செய்யும் அதே மென்மையான பகடி , இந்தக் கவிதையில் எவ்வளவு அழுத்தமாக கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மதுரை, நேதாஜி சாலையின் ஆரியபவன் லஸ்ஸியைக் குடிப்பவனின் கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது பாருங்கள்.
ஒரு தம்ளர் லஸ்ஸியைக் கொண்டே இருவேறு இனங்களின் ஏமாளித்தனத்தையும் புத்திசாலித்தனத்தையும் சொல்லிவிடுகிறது இக்கவிதை. கவிதையில் திராவிட – ஆரிய என்ற சொற்கள், அரசியல்வெளியில் பயன்படுத்தப்படும் பொருளைக் குறிப்பதுபோலத் தோன்றினாலும், இங்குத் ‘திராவிட’ என்பது மதுரை மக்களையும், ‘ஆரிய’ என்பது வடமாநிலங்களில் இருந்து வந்து மதுரைத் தொழில்களை ஆக்கிரமித்துள்ளவர்களையுமே குறித்து இக்கவிதை மேலெழுகிறது. அவ்வகையில், மதுரை அரசியலில் கால் பதித்து மாநில அரசியலில் கிளை பரப்பி நிற்கிறது இக்கவிதை.
இப்படி வாழ்வரசியலைப் பகடி செய்யும் கவிதைதான் அன்றாட வாழ்வின் போலித்தனங்களையும் பகடி செய்கிறது. தனது சூழலை, தனக்கு நேர்ந்த வாழ்வை, அரசியலை, மொழியை, வழக்கங்களை, உயர் மெய்ம்மைகளை என சகலத்தையும் நையாண்டி செய்யும் கவிஞர் லிபி ஆரண்யாவின் பகடி மொழி தனித்துவமானது. மதுரைப் பேச்சு மொழியின் இயல்புக்குள் திளைக்கும் இவரது பகடிக் கவிதைகளைத் தமிழின் தனித்த வகைமையென்றே உறுதியாகக் கூறலாம்.
உதவிய நூல்கள்
———————-
1.உபரி வடைகளின் நகரம் –
லிபி ஆரண்யா,
சந்தியா பதிப்பகம், சென்னை – 83
2.உச்சியில் நிகழும் விபத்து –
லிபி ஆரண்யா,
சந்தியா பதிப்பகம்,
சென்னை- 84
3.வாவரக்காட்சி – லிபி ஆரண்யா,
சால்ட் பதிப்பகம், சென்னை – 24.



