இணைய இதழ் 121சிறுகதைகள்

பழிப்பொலிவு – கா.சிவா

 “இங்கே இல்லையே” எனக் கூறிய அப்பா சாமிநாதனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் வள்ளி. அவர் முகம் இதுவரை இவள் கண்டிராத இறுக்கத்துடன் இருந்தது.

  எதிரில் நின்ற கருப்பையா முகத்திலும் ஆச்சர்யம் தெரிந்தது. அவனோடு வந்த ஆரோக்கியமும் நிமிர்ந்து பார்த்தான்.

 “அய்யா… இன்னைக்கும் வேலை இருக்குதேன்னு அந்தக் கயிறு அருவாங்களோட ரம்பத்தையும் இங்கேதாங்க வச்சிட்டுப் போனோம். நல்லா ஞாபகம் இருக்குங்க. வீட்ல வேற யாராச்சும் எடுத்தாங்களான்னு கொஞ்சம் கேட்டுப் பாருங்களேங்க..” கருப்பையா பணிவோடும் மரியாதையோடும் சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

 அவன் குரலுக்குமேல் தன் குரலை உயர்த்தி, “நான்தான் இல்லைன்னு சொல்றேன். அப்புறம் கேட்டுச் சொல்லுன்னு சொல்ற. பழைய சாமான்கள போடுற இந்த எடத்துக்கு யாரும் வரமாட்டாங்க..” என்று சாமிநாதன் சொன்னபோது வள்ளிக்குள் ஓர் அதிர்வு எழுந்தது. அப்பா இப்படிச் சொல்வதன் காரணம் புரியாமல் உள்ளம் தவித்தது. இன்னொருவரின் முன்னிலையில் அப்பாவின் சொல்லை எதிர்த்தோ மறுத்தோ பேசவேண்டாம் என்ற எண்ணத்தால் எதுவும் சொல்லாமல் நடப்பதைக் கவனித்தாள்.

    “இதுவரைக்கும் அதை யாரு வீட்லையும் வச்சதில்லை. நான் மட்டுமில்லாம சுத்துபத்து ஊரும் ரொம்ப மரியாதை வச்சிருக்க ஒங்க வீடுங்கிறதுனாலதான் வச்சிட்டுப் போனேன். அது வெறும் ரம்பம் இல்லீங்க. எங்க அப்பாவோட பொக்கிசம். அவரு மலேயாவுல வேல பாத்த கம்பெனி மொதலாளி இவரோட வேலையப் பாத்து பரிசாக் கொடுத்தது. எங்க அப்பா இல்லையினாலும் இதை வச்சு வேலை பாக்குறப்ப அப்பாவே தொணையா இருக்கிற மாதிரி தெம்பா இருக்கும். அய்யா… கோபப்படாம யாராவது எடுத்தாங்களான்னு ஒரு தடவ கேட்டுப் பாருங்கய்யா…”

  கருப்பையாவின் குரல் தணிந்து ஈரம் கோர்த்திருந்தது. என்ன செய்வதென்று புரியாத நிலையில் இருந்தான்.

 “அப்போ, நான் வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்றேன்னு நெனைக்கிறியா… ராத்திரி குடிக்கிற எடத்தில எங்கேயாவது விட்டுட்டு என் வீட்ல தேடிப் பார்க்கச் சொல்றியா… ஒன் காலணா பெறாத ரம்பத்த வச்சுக்கிட்டு நானென்னடா பண்ணப் போறேன். ஊருக்கே ஞாயம் சொல்ற என்கிட்ட ஒழுங்காப் பாக்கச் சொல்றியா…”

 சாமிநாதனின் குரல் நிதானமாகவும் உறுதியாகவும் ஒலித்தது.

  ஊரில் ஏதாவது சிறிய தகராறுகள் என்றால் சாமிநாதனிடம்தான் வருவார்கள். குடும்பப் பிரச்சனை, பங்காளிகள் சொத்து பிரச்சனை, ஊர் திருவிழா கமிட்டி சச்சரவு போன்ற காவல் நிலையத்திற்குச் செல்ல அவசியமில்லாத பலவித வழக்குகளை சாமிநாதனிடம் கொண்டு வருவார்கள். இவர் தன் படிப்பினால் பெற்ற அறிவின் திறத்தாலும், பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு மனிதர்களுடன் பழகிய அனுபவத்தின் பலனாலும் எண்பதிற்கு மேல் ஆன வயதின் நிதானத்தாலும் ஓரளவிற்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வினை அளித்து வந்தார்.

   கருப்பையா நிமிர்ந்து சாமிநாதனின் முகத்தைப் பார்த்தான். சட்டென தலையைக் குனிந்தபோது இரண்டு சொட்டு கண்ணீர் கருமையான கன்னத்தில் உருண்டு தரையில் சொட்டியது. சுற்றியிருந்த யாரையும் பாராமல் திரும்பி தளர்ந்து கால்கள் பின்ன நடந்தான்.

  இதுவரை எதுவும் பேசாமல் நின்ற ஆரோக்கியம் கயிறுக் கட்டுகளை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அரிவாள்களை கையில் எடுத்துக் கொண்டு கருப்பையாவை நெருங்கி தோளில் அணைத்துச் செல்ல விழைவதுபோல வேகமாக நடந்தான்.

   “லேய் ஆரோக்கியம், நேத்துப் பார்த்த வேலைக்கு சாயங்காலம் வந்து கூலிய வாங்கிக்கிட்டு போடா… ” என்று சொல்லியவாறு சாமிநாதன் வீட்டிற்குள் நுழைந்தார். ஆங்காங்கே நின்று கவனித்தவர்கள் கலைந்து சென்றதைப் பார்த்துவிட்டு வள்ளி வீட்டிற்குள் வந்தாள். முற்றத்தில் அப்பாவைக் காணவில்லை. மேற்கு மூலையில் இருந்த பயன்படுத்தாத அறை திறந்திருக்க உள்ளே அவர் நிற்பது தெரிந்தது. அறையின் வாசலுக்கருகில் சென்று உள்ளே பார்த்தாள். சாமிநாதன் ரம்பத்தை கையில் வைத்திருந்தார். பக்கவாட்டில் தெரிந்த அவர் முகம் ஒளி கொண்டு மிளிர்ந்தது.

 *****

   அந்த வார்த்தை தன் வாயிலிருந்துதான் வந்தது என்பதை சாமிநாதனால் நம்ப முடியவில்லை. இவரது மகள்களும் மகன்களும் முன்புபோல் டவுன் பஸ்ஸில் வந்து புதுப்பட்டியில் இறங்கி நடந்தோ ஆட்டோவிலோ வருவதில்லை. எல்லோரும் கார் வாங்கி விட்டார்கள். காரில் நேராக இங்கு வந்துவிடுகிறார்கள்.  வேலியோரம் நின்ற மரங்களின் கிளைகள் தாழ்ந்து கிடந்தன. காரில் வரும்போது மிகுந்த கவனத்தோடு அவற்றின் மேல் உரசாதவாறு வரவேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் வந்த வள்ளிதான் சொன்னாள் “அந்த தாழ்ந்த கிளைகளை துணிச்சு விடுங்களேப்பா” என்று.

  அன்று மாலையே கருப்பையாவிற்கு சொல்லியனுப்பி பார்க்க வேண்டிய வேலையைச் சொன்னார். அவன் ஆரோக்கியத்தையும் கூட்டி வந்து முடிப்பதாகச் சொன்னபடி நேற்று வந்து பாதி வேலையை முடித்தான். அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது சாமிநாதன் அருகில் சென்று பார்த்தார். ஆரோக்கியம் கிளைகளில் கயிறு கட்டுவதையும் அரிவாளால் கொப்புகளை வெட்டும் வேலைகளையும் செய்தான். கருப்பையா ரம்பத்தைக் கொண்டு கிளைகளைத் துணித்தான். அவன் கையில் இருந்த ரம்பத்தால் இலகுவாக மரத்திலிருந்து கிளையைப் பிரித்தான். மயிலிறகால் வருடுவதுபோலத் தோன்றியது. பெரிதாக பிரயத்தனப்படாமல் மிக எளிதாக முன்னும் பின்னும் அந்த ரம்பத்தை இழுத்தான். மரத்தூள் தூசுகளாக பறக்க மரமே விருப்பத்துடன் விட்டுக் கொடுப்பதுபோல இருந்தது. சற்று தள்ளி நின்று அந்த ரம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

   மதியம் அவர்கள் கொண்டுவந்த உணவை சாப்பிட இவர்கள் வீட்டிற்கு முன் உள்ள நிழலுக்குச் சென்றார்கள். சாமிநாதன் அந்த ரம்பத்தின் அருகில் சென்று பார்த்தார். ஆவுடையார் கோவிலில் இருந்த சிற்பத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட பரவசத்தை அடைந்தார். மரம் வெட்டுவதற்கான கருவி சிற்பத்தைப் போலக் கிடந்தது. அதன் மேல் பாகம் வெள்ளிபோல் சுடர்ந்தது. அதன் பற்கள் பிரமாண்டமான மிருகத்தின் கூரிய பற்களை எண்ண வைத்தன. இந்த பூமியிலுள்ள அத்தனை மரங்களை அறுத்த பின்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் என்று தோன்றியது. ரம்பத்தின் மஞ்சள்நிற மரக் கைப்பிடி கை பட்டுப்பட்டு உருவான வழவழப்பையும் மிளிர்வையும் கொண்டிருந்தது. அதில் முகம் பார்க்க முடியும் என்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. கைப்பிடிக்கு சற்று மேலே மலருக்கு மேல் பறந்தபடி தேனுறிஞ்ச எத்தனிக்கும் ஒரு பறவையின் சித்திரம் இருந்தது. விரல் வைத்து தடவியபோது தட்டுப்படவில்லை, ஆனால், கண்ணுக்குத் தெரிந்தது. கண்ணாடிக்கு கீழே தெரிவதுபோல மரத்தில் எப்படிச் செய்ய முடியும்? ஆச்சர்யத்தோடு ரம்பத்தை கையில் எடுத்து மறு பக்கம் பார்த்தார். பின்பக்கமும் அந்தச் சித்திரம் இருந்தது. இந்தச் சித்திரத்தை ரம்பத்தில் செதுக்கிய சிற்பியின் உள்ளத்தை எண்ணினார். மனம் ஒருகணம் கிறங்கியது. சட்டென கீழே வைத்துவிட்டு பின்பக்கமாகச் சுற்றி தன் வீட்டிற்கு வந்துவிட்டார்.

   வெயில் தாழ்ந்தபோது, ஆறு மரங்களில் நான்கு மரங்களின் தாழ்ந்த கிளைகளை துணித்து அடுப்பில் வைக்குமளவிற்கு விறகுகளாகவும் மாற்றி விட்டார்கள். சாமிநாதன்தான் “கருப்பையா மிச்ச வேலைய நாளைக்கு வந்து முடிச்சிடுங்க. ஏன் வெளக்கு வைக்கிற நேரத்தில மரத்தை வெட்டனும்…?” எனக் கூறி வேலையை நிறுத்தினார்.

  வீட்டின் பின்பக்கச் சுவரையொற்றி தாழ்வாரம் இறக்கியிருந்தது. பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வெளியூர் செல்வதற்கு முன் அப்போதிருந்த மாடுகளைக் கட்டியிருந்தார்கள். இப்போது விவசாய நேரங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க பயன்பட்டது. கருப்பையா “அய்யா, இந்த சாமான்களை உள்ளே வச்சிட்டு போகட்டுங்களா? தூக்கிக்கிட்டு அலைய வேண்டாம்னு பாக்குறேன்.” எனக் கேட்டான்.

  “இதுக்கெல்லாமா கேப்ப. வச்சிட்டுப் போப்பா. இதுக்குள்ள யாரும் வர மாட்டாங்க.” என்று சிவஞானம் கூறியவுடன் ஆரோக்கியம் கயிறு கட்டுகளையும் அரிவாள்களையும் உள்ளே வைத்தான். ரம்பத்துடன் சில அடிகள் எடுத்து வைத்த கருப்பையாவின் இடதுகால் சிறு கல்லில் தட்டியது. அதிர்ச்சியுடன் காலை உதறி நின்றவன் ரம்பத்தை ஆரோக்கியத்திடம் கொடுத்து “அதோட சேர்த்து வச்சிட்டு வா” என்று சொன்னான்.

   கருப்பையா ரம்பத்தை கையில் எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியதும் சாமிநாதன் தன் மனதினுள் “அவன் அதை இங்கேயே வச்சிட்டுப் போகனும்” என வேண்டினார். எனவே, அவன் காலில் தட்டியது தன்னுடைய மனதின் விழைவுதான் என சாமிநாதன் நம்பினார்.

  அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு புதையலை நோக்கி ஓடும் வறியவன்போல் பேராவலுடன் ஓடி ரம்பத்தை கையில் எடுத்தார். உள்ளே இருள் படர்ந்து விட்டதால் சரிவரப் பார்க்க முடியவில்லை. எனவே, அதை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். வள்ளியும் இவர் மனைவியும் அடுப்படியில் இருந்தார்கள். இவரை நோக்கிய வள்ளியின் பார்வையை உணர்ந்தார். இந்த அளவிற்கு பரவசமாகப் பார்க்குமளவிற்கு அந்த ரம்பத்தில் என்னவுள்ளது என்பது வள்ளிக்குப் புரியாதென்றும் தன்னாலும் புரிய வைக்கமுடியாதென்றும் தோன்றியது.

  மின்னல் கணமென ஐந்து வயதிலேயே வயிற்றுப்பாட்டுக்காக எடுபிடி வேலைக்கு தான் அனுப்பப்பட்ட கோட்டையூர் மலாய்காரர் மாளிகையும், அதில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இதே போன்ற ரம்பமும் மனதில் தோன்றி மறைந்தது. அப்போது அதை நின்று பார்க்கக்கூட அனுமதிக்காமல் திட்டித் துரத்தியபோது ஏற்பட்ட அவமானத்தின் வெம்மையை உள்ளாழத்தில் இப்போதும் உணர்ந்தார்.

  எண்பதாண்டுகளுக்குப் பிறகு இது கிடைத்திருப்பது இத்தனை ஆண்டுகளாய் என் மனதில் கனன்று கொண்டிருந்த விழைவை நிறைவேற்றுவதற்கான தெய்வத்தின் அருள்தான். இந்த எண்ணம் எழுந்ததும் உடலில் ஓடிய சிலிர்ப்பில் மயிர்கூச்சம் தோன்றியது.

   வள்ளியின் பார்வை மேலே ஊறிக் கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் கடைசி அறைக்குச் சென்று ரம்பத்தை வைத்துவிட்டு வெளியே வந்தார்.

   *****

    மறுநாள் காலை விடிவதற்கு முன்பே கருப்பையாவின் மனைவி மாரியின் குரல் வீட்டிற்கு முன் கேட்டது. வள்ளி வெளியே வந்தபோது அம்மாவும் அப்பாவும் இவர்கள் வீட்டுச் சுவரோரமாக நின்றிருந்தார்கள். எதிரில் மாரி ஆங்காரமாய் கத்திக் கொண்டிருக்க ஆரோக்கியம் சற்று தள்ளி நின்றான். கருப்பையா அங்கே இல்லை. சத்தம் கேட்டு எழுந்துவந்த சிலர் அவரவர் வீட்டு வாசலிலேயே நின்று கவனித்தார்கள்.

 “ராத்திரி வச்சிட்டுப் போன பொருளு எப்படிங்க மாயமாப் போச்சு. ஒங்களுக்குத் தெரியாம இருக்காது. ஒங்களுக்கு இருக்கிற வசதிக்கு இதெல்லாம் பொருட்டேயில்லையே. அப்பறம் எதுக்கு அத எடுக்குறீங்க…?”

 “உம்புருசனுக்கிட்டேயே சொல்லிட்டேன். அத வச்சு நாங்க என்ன பண்ணப் போறோம். வேறெங்கேயாவது வச்சுட்டு மறந்திருப்பான். அவன யோசிச்சு பாக்கச் சொல்லாம இங்க வந்து ஏன் கத்திட்டுருக்கே…?”

 “அவரு மறந்திருப்பாருன்னே வச்சுக்குவோம். இங்கதான் வச்சோம்னு இந்த ஆரோக்கியமும் சொல்றானே. ரெண்டு பேருமா ஒண்ணா மறப்பாங்க…?”

  “எதுக்காக இதச் சொல்றானுங்கன்னு எனக்குத் தெரியாது. ஏதோ திட்டத்தோடதான் இதப் பண்றானுங்கன்னு தோணுது. ஏதோ கூலி கூட வேணும்னு கேட்டா கொடுக்கப் போறேன். எதுக்கு இப்படி நாடகம் போட்டு காணாமப்போன ரம்பத்துக்கும் தனியா காசு கேக்க முயற்சி பண்ணனும்…?”

  “பெரிய மனுசன்னு நெனச்சோம். இப்படியொரு சின்னப்புத்தியோட இருக்கிறதக் காட்டிட்டியே. காணாமப் போச்சுன்னு பரவாயில்ல விடுய்யான்னுதான் அவர்க்கிட்ட சொன்னேன். ஏதோ ஒலகத்திலே இல்லாத அப்பாவோட பொக்கிசமாம். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு மனசு ஒடஞ்சுபோயி ராவெல்லாம் தூங்காம மூஞ்சி வீங்கி ஒக்காந்திருக்காரு. அதைப் பாக்கச் சகிக்காமத்தான் இங்க வந்து கேட்டுக்கிட்டு இருக்கேன். என்னமோ பணம் வேணா சேத்து வாங்கிக்கன்னு சொல்ற. ஒன்னையும் பெரிய மனுசன்னு பஞ்சாயத்துக்கு ஒங்கிட்ட வர்ற ஊரச் சொல்லனும்…”

  “ஏம்மா மாரி… யாருக்கிட்ட பேசுறேங்கிறத பாத்துப் பேசும்மா. அவருக்கிட்ட இல்லாத வசதியா. ஒங்க வூட்டுப் பொருள அவரு ஏன் எடுக்கப் போறாரு?” – பக்கத்து வீட்டு சேகர் மாரியை அதட்டினார்.

  “அதான. ஊரே மதிக்கிறவரு மேல ஏந்தான் இதுங்க பழியப் போடுதங்களோ தெரியலையே. நேத்து கருப்பையா வேறெங்கேயோ வச்சிட்டு விசாரிக்குதுன்னு நெனச்சேன். இன்னைக்கு விடிஞ்சும் விடியாமயும் இவ வந்து கத்திக்கிட்டிருக்காளே. ஏண்டி மாரி இவரோட ஒங்களுக்கு என்னதான்டி பிரச்சனை..” – எதிர் வீட்டு ராமாயி ஆத்தா மாரியை நோக்கிக் கேட்டாள்.

 “இந்தா ஊருச்சனம் எங்க மேல பாயுதே. ஏன்னா எங்ககிட்ட வசதியில்ல. வசதியில்லாதவன்தான் பொய் சொல்லுவான்.. ஏமாத்துவான். வசதியானவங்க மத்தவங்க பொருளுக்கு ஆசபடமாட்டாங்க. இந்த மாதிரிதான் ஊரு பேசும். வசதியானவங்க பக்கம் நிக்கும். எங்க பக்கம் எங்க பங்காளிங்க கூட நிக்க மாட்டானுங்களே…”

 சொல்லியபடியே வாயிலிருந்து வார்த்தை வராமல் உதடுகளை அசைத்தபடி தளர்ந்து அமர்ந்தாள். அவளது கை விரல்கள் பதறுவதுபோல ஆடின. ஆரோக்கியம் அவளின் அருகில் சென்று “தண்ணியேதும் வேணுமாக்கா?” எனக் கேட்டான்.

  “நா வறன்டு செத்தாலும் பரிதாபப்பட மாட்டானுங்க. கொஞ்சம் தாழ்ந்த நெலயில இருக்கிறவங்களுக்கு யாரும் தொணையா வர மாட்டாங்க. அவங்களுக்கு என்ன ஆனாலும் கேக்க மாட்டாங்க…”

  என்றவாறு தரையில் கைவைத்து மணலை அளைந்தாள். சுற்றி நின்ற அனைவரும் என்ன செய்வதென்று அறியாது பார்த்துக்கொண்டு நின்றனர்.

    எதிரில் எதையோ கண்டு விழி விரிய வெறி கொண்டதுபோல சட்டென எழுந்த மாரியின் கைகளிலிருந்து மணல் வழிந்தது. கைகளில் இருந்த மணலை இவர்கள் வீட்டை நோக்கி வீசினாள். பெரிதாக காற்று இல்லாததால் யார் முகத்திலும் படாமல் கீழே விழுந்தது. அப்பாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என வள்ளிக்குத் தோன்றியது.

  அருகிலிருந்தவர்கள் தடுப்பதற்காக வள்ளியை நோக்கி நகர்ந்து வந்தார்கள். அவர்கள் நெருங்குவதற்குள் இன்னும் இரண்டுமுறை மணலை வாரித் தூற்றினாள்.

  “எங்களால கேக்க முடியல. எங்க சாமிதான் கேக்கனும். எங்க வீட்டுப் பொருள எடுத்தவன் வீடு வெளங்காமப் போயிடும். செங்காத்தா கோயில்ல போயி காசு வெட்டிப் போடப் போறேன். அவ வந்து கேக்குறப்ப என்ன பதில் சொல்றாங்கன்னு பாக்குறேன்..” என்று சொல்லியவாறு திரும்பி நடக்க ஆரம்பித்தாள். ஆரோக்கியம் அவள் பின்னால் செல்ல, மற்றவர்கள் சிவஞானத்தின் அருகில் வந்தார்கள்.

 “நீங்க ஒன்னும் கவலப்படாதீங்கய்யா… புத்திகெட்டவ ஏதோ சொல்லிட்டு போறா. ஒங்க மனசுக்கு ஒன்னும் ஆகாது. எதையும் மனசுல போட்டு மருகாம அடுத்த வேலையப் பாருங்க..” என்று சாமிநாதனிடம் ராமாயி கூறினாள். அவரின் முகத்தில் தெரிந்த கலக்கம் ராமாயியைப் பேச வைத்திருக்க வேண்டுமென வள்ளிக்குத் தோன்றியது.

 “தைரியமா போங்கய்யா…” எனக் கூட்டத்திலிருந்து பொதுவான குரல் எழுந்தது. அப்பா திரும்பி வீட்டை நோக்கி நடக்கவும் மற்றவர்கள் அவரவர் வீடுகளை நோக்கித் திரும்பி நடந்தார்கள்.

  வள்ளியின் மனதில் கலக்கம் தோன்றியது. செங்காத்தாவின் சக்தி பற்றி பலபேர் சொல்லி கேட்டிருக்கிறாள். “நல்லதைக் கேட்டால் காதுல விழாத மாரி இருக்கிறதும்… கெட்டதைக் கேட்டா ஒடனே குதிச்சு எந்திரிச்சு வீரு கொண்டு காரியம் செய்யிறதுமா கொஞ்சம் சாமிங்க இருக்கு. அதுல மொத ஆளா இருக்கிறவ செங்காத்தா” என ஒருமுறை இவள் அப்பத்தா சொன்னார். அதை அவர் சொன்னபோது இவளுக்கு விளங்கவில்லை. தன்னை வணங்கும் மக்களை கீழ்தளத்திலேயே வைத்திருந்த அத்தெய்வம் தண்டிப்பதை மட்டும் உடனடியாக செய்ததைப் பற்றி அறிந்தபோது உணர்ந்து கொண்டாள்.

  நாலாவது வீட்டிலிருக்கும் ராமலிங்கமே செங்காத்தாவால் தண்டிக்கப்பட்டவர்தான் என்பதே ஊரின் நம்பிக்கை. விவசாய வேலைகள் இல்லாத கோடைகாலம். மர வெட்டு வேலைக்காக பெரியகோட்டைக்கு சென்று விட்டு திரும்பி வந்தான் ராமலிங்கம். மேலக் கண்மாயில் தனியாளாகக் குளித்து விட்டு வரும்போது ரத்தினத்தின் கொல்லையில் நின்ற பனைகள் கண்ணில் பட்டன. பத்து மரத்தில் ஐந்து மரத்து காய்களை வெட்டிவிட்டு பழத்திற்காக ஐந்து மரங்களை விட்டு வைத்திருந்தார்கள். பழங்களிலிருந்து கிடைக்கும் பனங்கொட்டைகளை புதைத்து கிழங்குகளை விளைவிப்பது ரத்தினத்தின் வழக்கம். மாலை வெயிலில் மினுமினுத்த காய்களைக் கண்டு உள்ளிருக்கும் செழுமையான சுளைகளை உணர்ந்த ராமலிங்கத்தின் மனதில் ஆசை சுடர்விட்டது. நொங்கைப் பார்த்ததும் தன் பிள்ளைகள் முகத்தில் ஏற்படப்போகும் பிரகாசத்தை எண்ணிப் பார்த்தான். அதற்காக எதையும் செய்யலாம் என்ற உத்வேகம் தோன்ற எதைப் பற்றியும் யோசிக்காமல் வரிசையாக நின்ற மரங்களில் நடுவில் நின்றதில் ஏறினான்.

   நடு மரத்தில் சூரமுள்ளைக் கட்டியிருந்தார்கள். அரிவாளை இடுப்பில் சொருகியபடி ஏறியவன் முள்ளைக் கட்டியிருந்த பனைநாரை அரிவாள் முனையால் இழுத்து அறுத்தான். சூரமுள்கட்டு மடங்கியிருந்த இவன் காலில் கீறியபடி கீழே விழுந்தது. இரத்தம் துளிர்த்ததை கருதாமல் மரத்தில் ஏறி இரண்டு குலைகளை வெட்டினான். குலைகள் வரப்பில் விழுந்துவிடாமல் வெட்டும்போதே கால்களால்  தள்ளி மணற்பரப்பில் விழுமாறு செய்தான். எனவே, பெரிதாக சத்தம் எழவில்லை. குலைகளை ஓரமாகத் இழுத்து வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான். நன்றாக இருட்டிய பிறகு ஒரு கோணியை எடுத்து வந்தான். காய்களை தனித்தனியாக உதிர்த்து கோணிக்குள் போட்டு விட்டு வெறுங்கட்டையை வெளியே தெரியாதவாறு வேலிக்குள் சொருகி வைத்தான். அன்றைய இரவு ராமலிங்கத்தின் வீட்டில் நெடுநேரம் விளக்கெரிந்தது.

  மறுநாள் காலையிலேயே ரத்னம் வீட்டில் பெரும் கொதிநிலை நிலவியது. முள்கட்டு அவிழ்ந்து கிடந்ததும் மணற்தரையிலிருந்த தடமும் நிகழ்ந்ததை தெளிவாக உணர்த்தியது. இத்தனை தைரியமாக அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுபவனை தண்டித்தே ஆகவேண்டுமென ரத்தினத்தின் மனைவி கூப்பாடு போட்டாள். பஞ்சாயத்திற்குச் சென்றால் பத்து ரூபாய் அபராதம்தான் கட்டச் சொல்வார்கள். அதெல்லாம் பத்தாது. அவன் பெறும் தண்டனை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டுமென ஏக மனதாக முடிவெடுத்து குடும்பமாக கிளம்பிச் சென்றார்கள். செங்காத்தாளின் பலிக்கல்லில் ஒரு ரூபாய் நாணயத்தை அரிவாளால் வெட்டிப் போட்டு “நீதான் கேட்க வேண்டும்…” என வேண்டிக் கொண்டு திரும்பினார்கள்.

   ரத்னம் வீட்டார் கோவிலுக்கு சென்றுள்ளார்கள் என்பதை அறிந்ததுமே ராமலிங்கத்தின் உடலில் எரிச்சல் தோன்ற ஆரம்பித்து விட்டது. சுடரின் வெம்மை முதலில் மேனியிலிருக்கும் முடிகளை பொசுக்குவதையும் மெல்ல மெல்ல தோலை உருக வைத்து தசைகளை அடைவதையும் உணரும் ஒருவன் படும் வேதனைகளை அடைந்தபடி பதைப்புடன் தன் வண்டியில் மாடுகளை பூட்டிக் கொண்டு வேகமாக ஓட்டிச் சென்றதை அவர் மனைவி பார்த்தாள். மறுநாள் காலை ரத்னத்தின் கொல்லையில் சாலையோரத்தில் நின்ற பனை மரத்தின் மீது வண்டி மோதி சக்கரம் கழன்று கிடப்பதையும் வண்டிக்கு அடியில் ராமலிங்கம் கிடந்ததையும் ஊர்க்காரர்கள் கண்டார்கள். வலது கால் நிரந்தரமான முடமாகி சற்று இழுத்தபடியே நடக்க வேண்டியதாகிவிட்டது.

  செங்காத்தாள்தான் தண்டித்தாள் எனப் பெரும்பாலானவர்கள் நம்பினாலும் எதேச்சையாக நடந்த விபத்து எனவும் சிலர் சொன்னார்கள். ரத்னம் குடும்பத்தினர் ஒரு பட்டுச்சேலை எடுத்துச் சென்று செங்காத்தாளுக்கு அணிவித்தார்கள்.

  வள்ளிக்கு இப்போதுதான் பொறி தட்டியது. வெறுமனே கையால் மணலை அளைந்து கொண்டிருந்த மாரி, ராமலிங்கத்தைக் கண்ணில் கண்டு விட்டுத்தான் மண்ணை வாரித் தூற்றி சாபமிட்ட காட்சியை மனதிற்குள் கண்டாள்.

  ‘அப்பாவிடம் சென்று கூறலாமா… எனக்குத் தெரியுமெனத் தெரிந்தால் மனம் சங்கடப்படுவாரோ?’ எனத் தயக்கம் ஏற்பட்டது. ‘மற்றவர்கள் அறிவதைவிட தன் பிள்ளைகள் தங்களின் பலவீனங்களை உணரும்போது பெற்றோர் அடையும் வேதனை பல மடங்கல்லவா?’ என மனதினுள் விடை போன்ற வினா தோன்றியது.

  ‘அப்பாவிற்கு தெரியாமல் ரம்பத்தைக் கொண்டு சென்று மாரியிடம் கொடுத்து செங்காத்தாவிடம் போகாமல் தடுக்கலாமா?’ என்று ஒரு கணம் தோன்றியபோது உள்ளம் பூரித்து மனதில் ஒளி படர்ந்தது. மறுகணமே அது ஊருக்கு முன் அப்பாவை கூனிக்குறுக வைத்து விடுமே என்ற நிதர்சனம் தோன்றி அவ்வொளியை அவித்தது.

    அடுப்படியில் அம்மாவின் அரவம் கேட்டது. அறியாமை என்பது ஒரு வகையில் வரம்தான் என்றெழுந்த எண்ணத்தால் தன்னிரக்கம் தோன்றி உடலைச் சொடுக்கியது. அம்மாவைப்போல் வெளியுலகத்தை அறியாமலிருந்தால் எந்தக் கசப்பையும் துன்பத்தையும் உணராமல் எந்தக் கேள்விகளையும் பதில்களையும் தானே உருவாக்கிக் கொண்டு மருகித் தவிக்க வேண்டாம். நிர்மலமான மனத்துடன் தனித்திருக்கலாம். பெருமூச்செறிந்தபோதே எந்த இனிமையையும் இன்பத்தையும் உணராமலேயே வாழ்க்கையே முடிந்துவிடுமல்லவா என்ற கேள்வி போன்ற பதில் தோன்றி இன்னொரு பெருமூச்சை உருவாக்கியது.

  இப்போது எழுபத்தியைந்து வயதாகும் அம்மாவிற்கு திருமணமானபோது பதினைந்து வயது. அறுபது ஆண்டுகள் அப்பாவோடு வாழ்ந்திருக்கிறாள். அப்பா என்ன சொல்கிறாரோ அதை செய்வாள். இம்மியும் கூடக்குறையச் செய்யமாட்டாள். மாமன் மகன் என்பதால் அந்த அன்னியோன்னியம் இருக்கலாம். மறுத்தோ மாற்றியோ செய்யக்கூடாது என்கிற உறுதி எப்படி வந்திருக்கும் என்பதை இத்தனை வருடங்கள் யோசித்தும் வள்ளிக்கு பதில் கிடைக்கவில்லை. அம்மாவிடம் எந்த யோசனையும் கேட்க முடியாது என்பது முதல்முறையாக திகைக்க வைத்தது. எந்த விசயத்திற்கும் அப்பாவிடம் மட்டுமே பிள்ளைகள் நால்வரும் கேட்பார்கள். அம்மாவிடம் யாருமே எதுவுமே கேட்டதில்லை என்ற உண்மை முகத்தில் அறைந்தது. ‘யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்பதாலேயே எதையுமே யோசிக்காதவளாகி விட்டாளா?’ என்ற எண்ணம் திடுக்கிட வைத்தது.

  நாள் முழுக்க தன் மனதின் ஓயாத சொற்பெருக்கை கவனித்தே சோர்ந்து போனாள். ஒரு நிலையில் இவளின் பிரக்ஞையை மீறி சொற்கள் குழம்பித் தவிப்பதை வெறுமனே நோக்கிக் கொண்டிருந்தாள். எதையும் அருந்தவோ உண்ணவோ இல்லை. அப்பா அந்த அறைக்குள் சென்றவர்தான், வெளியே வரவேயில்லை. அவர் என்ன செய்துகொண்டிருப்பார் என்பதை அறிந்ததால் அந்த அறையின் வாசலை நோக்க வசதியான இடத்தில் அமர்ந்திருந்தாள். அப்பாவை வெளியே செல்லாமல் தடுத்தால் செங்காத்தாவிடமிருந்து காப்பாற்றி விடலாம் என்ற நப்பாசையில் இருந்தாள். அதை எண்ணியபோது சிறுபிள்ளைத்தனம் என்று உள்ளுக்குள் உணர்ந்தாலும் நம்பிக்கையையும் விடவில்லை.

   இருவரையும் அழைத்தும் உண்ண வராததால் அம்மாவும் சாப்பிடவில்லை. பானையில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு  தாழ்வாரத்தில் தன் முந்தானைத் தலைப்பை விரித்து படுத்து உடனே தூங்கிவிட்டாள். அவளுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய எந்தப் போதமும் இல்லாததை உணர்ந்தபோதும் அவள் மேல் கோபம் வரவில்லை. அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் எனத் தோன்றியது.

  மாலை வீட்டை புகை மூட்டமென இருள் சூழ்ந்து கொண்டிருந்தபோது அப்பா வெளியே வந்தார். நம்பமுடியாதவாறு அவர் தோற்றம் மாறியிருந்தது. என்ன நிகழ்ந்தது என இவளுக்கு சிறிது நேரம் புரியவில்லை. எப்படி ஒரு நாளுக்குள் தோற்றம் இப்படிப் பொலிவுற முடியும். முகம் புன்னகையில் பூரித்து விம்மியிருக்க உடலும் சற்று பெருத்தது போன்ற மாயம் காட்டியது. இவள் எண்ணியதற்கு எதிர்மாறாக நடந்ததால் திகைத்திருந்தவளிடம் நெருங்கி வந்தார்.

 “ஏம்மா, சாப்பிடலையா ரெண்டு பேரும். இப்படி அறுத்த கீரைத்தண்டாட்டம் வதங்கி இருக்கீங்க..”

 “அது வந்துப்பா… இல்லப்பா…” என புரியாதவாறு குழறினாள்.

 “எனக்கு மனசு நெறைஞ்சிருக்கு. அதான் சாப்பாடு வேண்டாம்னு சொன்னேன். நீங்க சாப்பிடறதுக்கென்ன…?”

 “நீங்க சாப்பிடலையின்னுதான்… இப்போ சாப்பிடுறோம்பா” சற்று தெளிவடைந்து கூறினாள்.

  வெளியே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தவர் அதே அறையை நோக்கிச் சென்றார். உள்ளே நுழையும்போது இவர்களை நோக்கித் திரும்பினார். உண்ணுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மகளையும் மனைவியையும் தீர்க்கமாகப் பார்த்தார்.

 “எல்லாமே சாமியோட ஆட்டம்தான். அவன் கேட்டப்ப எடுக்கலைன்னு சொன்னது நானில்லத்தா. நீ மருகிகிக்கிட்டே இருப்பியேன்னுதான் சொல்றேன். இதுவரைக்கும் இந்தளவுக்கு நிறைவா நான் ஒணர்ந்ததில்லை. எல்லாம் சாமியோட சித்தம்…” என்று சொன்னபோது வள்ளியின் முகத்தில் வேதனை பொங்கியது. அதைக் கண்டதும், “பழி வரும்தான். அதற்கான தெய்வத் தண்டனையும் உண்டு. கெடைக்கிறதுக்கு ஈடா ஏதோவொன்னைக் கொடுத்தாகனும்ல. என் விழைவுக்காக எதையும் கொடுக்க நான் தயாராயிட்டேன்.  மத்தவங்க மனசுல எப்படி வாழ்றோம்கிறதவிட நாம நிறைவா போறதுதான் சரின்னு எனக்குள்ள தோனிருச்சு…” என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துவிட்டார்.

  இவர்கள் உண்டு முடித்து பாத்திரங்களை கழுவி முடித்தபோது அறைக்குள்ளிருந்து சத்தம் கேட்டது. நடந்ததை உணர்ந்து பதறியபடி வள்ளி அறைக்குள் ஓடினாள். அப்பா கீழே விழுந்து கிடந்தார். ரம்பம் அவர் கையில் இருந்தது. அருகில் அமர்ந்து கையைத் தொட்டபோதே தெரிந்துவிட்டது. கதறலை கட்டுப்படுத்தியபடி அந்த ரம்பத்தை அவரின் கைகளிலிருந்து விடுவித்து ஒரு சாக்கினுள் வைத்து வெளியே தெரியாதவாறு வைத்தாள். அப்பாவின் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கதறத் தொடங்கினாள். அவர் முகம் உவகையில் பிரகாசித்த நிலையில் உறைந்திருந்தது.

  “பெரிய மனுசனோட புத்தி இப்படி கீழிறங்கியிருக்க வேண்டாம்…” என்பதாகவே ஊருக்குள் பேச்சு உலவியது.

  முப்பதாம் நாள் காரியம் முடிந்த மறுநாள் வள்ளி அந்த ரம்பம் இருந்த சாக்குப் பையுடன் மாரியின் வீட்டிற்குச் சென்றாள். மாரி, வீட்டிற்கு முன் நின்ற வேப்ப மரத்தடியில் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்து கோழிகளுக்கு குருணையை தூவிக் கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் கோழிகள் பதறி நகர்ந்தன. வள்ளி எழுந்து நின்று இவளை உட்காரச் சொன்னாள்.

  கையிலிருந்ததை மாரியின் கையில் கொடுத்துவிட்டு அமர்ந்தாள். அவள் உள்ளிருந்ததைப் பார்த்தபோதே “ஒஞ்சாமி ஒங்க வீட்டுப் பொருளக் கொண்டு வந்து சேத்திருச்சு..” என்று வள்ளி சொன்னாள்.

   “இப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா. உங்க வீட்டுக்கு முன்னாடி அப்படி கத்தீட்டு வந்ததுக்கே இவுக ரொம்பக் கோவிச்சுக்கிட்டாங்க. அய்யா எடுத்துட்டு கை மறதியா வச்சிட்டு மறந்திருப்பாரு. அப்படியே அவருக்குப் புடிச்சு வச்சிக்கிறதுன்னாக் கூட வச்சிக்கிடட்டும். அப்பாவோட ஞாபகத்தில கொஞ்சம் வருத்தமா இருந்தேங்கிறதுக்காக இப்படிப் போயி கத்தலாமான்னு ரொம்பத் திட்டீட்டாங்க. நாங்க செங்காத்தாக்கிட்ட போகலம்மா..” என்று மாரி கூறியபோது வள்ளியின் கண்களிலிருந்து நீர் சொட்டியது.

  “இத நாங்க கொடுத்ததாவே இருக்கட்டுமா. அய்யாவுக்கு விருப்பமான பொருள அவரோட படத்துக்குப் பக்கத்திலேயே வச்சிடுங்கம்மா..” என்று சொன்ன மாரியை இழுத்து அணைத்துக் கொண்டாள் வள்ளி.

sivaangammal1983@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button