புத்தகக் காட்டின் சிறு ஒளி – பாலைவன லாந்தர்

“என்னை முழுவதுமாக எரித்தாலும்
என் எழுத்துக்களால் பேசுவேன்
என் எழுத்துக்களை எரித்து அழித்தாலும்
அதன் தாக்கத்தால் பேசப்படுவேன்”
தனியொரு மனிதனின் கர்வமும் நம்பிக்கையும் அவனால் எழுதப்படும் எழுத்துக்களே.. ஆட்சியுற்ற மனிதரெல்லாம் மாண்ட பிறகும் அவர் புகழோ, புறமோ பாட எழுத்தாளர்களே கதி. எழுத்து என்ன செய்து விடும் என்போரிடும் “என்ன வேண்டுமானாலும்” என உரக்கக் கூறலாம்.
மக்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத செயல்பாட்டில் அதீத விருப்பமுடையது தனிமையும், கூடுதலும். தனிமையை விரும்பும் மனிதனுக்கு தன்னைக் கொண்டாடும் கூட்டங்கள் அமையும்போது கூட்டத்தில் ஒருவன் ஆகிறான்.
எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து மக்களும் தலை நிமிர்ந்து நுழையும் இடம் பள்ளிக்கூடங்கள் மட்டுமே. கற்றலும், கற்பித்தலுமாக பழக்கிக் கொள்ளும் மனிதன் தன்னை தன் குணத்தை செம்மைப்படுத்திக் கொள்கிறான், பின் வாசிக்கிறான் எழுதுகிறான்.
ஒருவனிடம் இருந்து யாராலும் பிடுங்கிக் கொள்ள முடியாதது அறிவாற்றல் அதை புத்தகங்கள் தருகின்றன. ஒரு நாட்டினை வெற்றி கொள்ளும் அரசன் அங்குள்ள நூலகங்களை எரிக்கும் இழிச்செயல் நடந்துள்ளது ஏனெனில் அவை மக்களை சிந்திக்க வைப்பதையும் போராட வைப்பதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
என்னுடைய பதின்மத்தில் நான் பார்த்த புத்தகக் காட்சி ஒரு வட்டத்திற்குள் நின்று உலகை வேடிக்கை பார்க்கும் மன நிலையில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டில் வாங்கப்படும் புத்தகங்களையும், தினசரி செய்தித்தாள்களையும் உடனுக்குடன் வாசித்துவிட்டு ”அடுத்து” என அம்மாவைப் பார்க்கும் போது அவள் கண்களில் தெரிந்த பயம் அப்போது புரியவில்லை.
திருமணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரையிலும் நானே யாரெனத் தேடும் அளவிற்கு முற்றிலும் குடும்பச் சூழலில் மாறிப் போயிருந்தேன் பிறகு ஆர்குட், முகநூல் என எழுத்துப் பயணம் தொடங்கியது. நீண்ட காலத்திற்குப் பிறகு சென்னை புத்தகக் காட்சியில் கால் வைத்த போது “முதல் மரியாதை” திரைப்பட இறுதிக் காட்சியில் ராதா இரயிலில் இருந்து நிலத்தில் கால் வைத்தவுடன் சிவாஜிக்கு சிலிர்த்ததைப் போல் சிலிர்த்துக் கொண்டேன். ஒவ்வொரு பதிப்பக அரங்கத்திற்குள் நுழையும் போதும் கேட்கவே வேண்டாம் முழுமையாக சந்திரமுகியாக மாறிவிட்ட கங்கா ஜோதிகாவைப் போல ”காசுமாலை ஒட்டியாணம்” என ஒவ்வொரு புத்தகமாகத் தொட்டுத் தொலைந்து போனேன்.
புத்தகக் காட்சியில் இரண்டு தகிடதத்தோம் செய்ய வேண்டி இருக்கும் ஒன்று நாம் வாங்கும் புத்தகங்களை முதலில் ஒவ்வொரு அரங்கமாகப் போய் இரகசியமாகக் குறித்துக் கொள்ள வேண்டும் அடுத்தது அதை வாங்க வீட்டில் மற்ற செலவுகளைக் குறைத்து பட்ஜட் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஆண்டின் தொடக்கத்திலேயே பொருளாதார ரீதியாக ஒரு தொகையை ஒதுக்குவது அவ்வளவு எளிதல்ல.
காயிதே மில்லத் கல்லூரி, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, நந்தனம் YMCA மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன்.
புத்தகக் காட்சியின் இறுதி நாளன்று வீட்டிற்குள் வந்தவுடன் வாங்கிய அத்தனை புத்தகங்களையும் படுக்கையில் கிடத்தி மொத்தமாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வது எனக்கு பிடித்தமான ஒன்று. புத்தகத்தில் வரும் வாசனை ஒருவித மயக்கம். ஆனால், அதெல்லாம் இப்போது கார்பன் வாசனையாக மாறிவிட்டது ஏமாற்றமே.
புத்தகங்களைத் தாண்டியும் புத்தகக்காட்சிக்கு செல்ல சில காரணங்கள் இருக்கின்றன.. தோழர்களின் சந்திப்பு என சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. சூடான தேநீருடன் நிதானமாக உரையாடுவதும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் மீண்டும் கல்லூரி வாழ்க்கையை, குட்டிச்சுவற்றை, மரத்தடியை, பேருந்து நிலையத்தை, விடுதி வளாகத்தை நினைவுபடுத்தக் கூடியவை.
சில புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கும் போது மனம் நிறைவாக இருப்பதை உணர முடியும்.
‘புத்தகக் காட்சி வந்துடுச்சா இனி சின்ராச ( யா இட்ஸ் மீ) கைலயே பிடிக்க முடியாது’ என வீட்டில் பேசிக் கொள்வார்கள். அந்த பத்துப் பதினைந்து நாளும் சீக்கிரமே சமையல், மற்ற உதிரி வேலைகளை முடித்து ஓடி வந்து சேர்வதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். கடந்த சில ஆண்டுகளாக கடுங்குளிர் காலத்தில் புத்தகக் காட்சி அமைவது சென்னையை வேறொரு தளமாக பிரதிபலிக்கிறது.
எப்போதும் விற்பனை பகுதியில் சூடு பிடிக்கும் ”பொன்னியின் செல்வன்” ஏனோ திரைப்படம் வந்தவுடன் விற்பனை குறைந்ததாக பேசிக் கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரை ”பொன்னியின் செல்வன்” மட்டுமல்ல எந்த கதை திரைப்படமாக ஆனாலும் வாசிக்கும் அனுபவத்தை ஒருபோதும் தர இயலாது. நான் பார்த்த சோழப் பேரரசும், பொன்னி நதியும், வந்தியத் தேவனும், ஆதித்ய கரிகாலனும், குந்தவையும், யாராலும் காட்சிப் படுத்த இயலாத பிரம்மாண்டத்தை உடையவர்கள். வேள்பாரியை வாசித்தேன் என்பதை விடப் பருகினேன் என்றே சொல்வேன் பாரியின் புகழைப் பாடப் பாட, தெய்வ வாக்கு விலங்குகளை மெய்க்காட்டில் அன்றி பொய்க்காட்டில் தேடியலைந்தேன்.
நான் பழுத்த நூல்களைத் தேடியலையும் பட்சி. பழைய புத்தகங்களை சேல்ஸ் என தரும் இடங்களில் சில பொக்கிஷங்களைத் தேடிக் கொண்டிருப்பேன், மொழிப்பெயர்ப்பு நூல்கள், நண்பர்களின் சமகாலத்து நூல்களென எனது ”பக்கெட் லிஸ்ட்” பெரியது. ஆனாலும் பையிலுள்ள காந்தி தாத்தா சிரிக்கும் காகிதங்களின் ஆரோக்கியம் கருதி புத்தனைப் போல் ஆசைகளை அடக்கிக் கொள்வேன்.
2025-ல் என்னுடைய முதல் நாவலான “பெழச்சான்” வருகிறான்(றது). என் நண்பர்களின் நூல்களும் வெளியாகின்றன, அவர்களைப் போல் நானும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். எழுதி முடித்தவுடன் வாசகனாகி விட்ட மனநிலையில் இருக்கிறேன் நானே என்னை விமர்சிக்கவும் வாய்ப்புள்ளது.. சந்திப்போம்.
“என்னை நானே தின்று விடும் பெரும் பசியையும்
எனக்கு நானே உணவாகிக் கொள்ளும்
பெருத்த
ஞானத் தீனியையும் கேட்டிருக்கிறேன்..”
வாசகசாலை நண்பர்களுக்கு எப்போதும் என்னுடைய அடர்த்தியான அன்பும், வாழ்த்துகளும், நன்றியும்!



