புத்தக நாட்கள் – ஜா.தீபா

அப்போது இயக்குநர் நாகா அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணி செய்து கொண்டிருந்தேன். சென்னை வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. பிரமிப்பு அகலாத காலகட்டம். புத்தகக் காட்சி பற்றி மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ‘அப்படின்னா?” என்று கேட்டேன். ‘புத்தகங்களை எல்லாம் பார்வைக்கு வைத்திருப்பார்கள், நாம் போய்ப் பார்த்து வரவேண்டும் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன். ‘வரிசையாக புத்தகங்களுக்காகக் கடைகள் இருக்கும், வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னபோது நம்ப முடியவில்லை. அந்த மாதச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய். வீட்டு வாடகை, இதர செலவுகள் போக எப்போதுமே பணம் எஞ்சியிராது, ‘சும்மா போய்ப் பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன். இருநூறு ரூபாய் மட்டும் செலவுக்கான பணம் இருந்தது. முதன்முதலாக 200 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கப் போகிறோம் என்பதே எனக்கு கர்வம் கொள்ளத்தக்கதான உணர்வைத் தந்தது. உடன் வேலை பார்த்த துணை இயக்குநர் என்னிடம் தனக்கு ஒரு புத்தகம் வாங்கி வரும்படி சொன்னார். ‘சீனியருக்கு வாங்கித் தரனும்’ என்று அவர் கண்டிப்புடன் சொல்ல, ‘பிச்சை எடுத்தானாம் பெருமாளு…’ பழமொழிதான் நினைவுக்கு வந்தது. அவர் கேட்டது பா.வெங்கடேசன் எழுதிய ‘ராஜன் மகள்’ புத்தகத்தை. ‘வாங்கித் தந்து தொலைகிறேன்’ என்று மனதிலும், ‘வாங்கிட்டு வர்றேன் சார்!’ என்று நேரிலும் சொல்லிவிட்டு பேருந்து பிடித்து பச்சையப்பன் கல்லூரி வளாகத்தை அடைந்தேன்.
நான் நினைத்து வந்தது எங்கள் திருநெல்வேலியில் சங்கீத சபாவில் ஆண்டுக்கொரு முறை ஒரு கண்காட்சி நடத்துவார்கள். சாமியானா பந்தலுக்குக் கீழ் பத்து கடைகள் இருக்கும். சீரியல் லைட்டெல்லாம் போட்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்த கண்காட்சி என்பது இதுதான். ஆனால், இது வேறு என்பது புரியவே நேரம் எடுத்துக் கொண்டது. எத்திசையிலும் புத்தகங்கள். எதை எடுக்க, எதை கீழே வைக்க!? எதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேனோ, எவற்றையெல்லாம் வாங்க விரும்பினேனோ அவையெல்லாம் என் முன்பாக.
கல்லூரி படிக்கையில் கி.இராஜநாராயணின் சிறுகதைத் தொகுப்பைப் படித்திருந்தேன். பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகம். நான் வியந்த கி.ரா தன் மனைவியோடு உட்கார்ந்திருக்கிறார். பேச வேண்டும என்று கூடத் தோன்றவில்லை. பார்த்தாயிற்று… வேறென்ன வேண்டும்?. கல்லூரியில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தில் ‘கோமதி’ கதையைப் படித்துவிட்டு நீண்ட நேரம் எதுவும் தோன்றாமல் மொட்டை மாடியிலேயே அமர்ந்திருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. அது கி.ராவுக்கும் தெரியும் என்றுதான் இப்போது வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அன்றும் அவரிடம் நானே போய் அதைச் சொல்லவில்லை.
அன்றைய புத்தகக் காட்சி எனக்கு கொடுத்தது ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மட்டுமல்ல… அச்சத்தையும்தான்! உள்ளுக்குள் ஏதோ பொங்கிப் பொங்கி வந்தது. ஒரு புத்தகம் கூட வாங்காத என்னை யாரோ கண்காணிப்பது போலவும், சந்தேகப்படுவார்கள் போலவும் தோன்றியது.
‘ராஜன் மகள்’ எங்கு கிடைக்கும்? இத்தனை மகா சமுத்திரத்தில் எனக்கென்று சேகரிக்க ஒரு துளி உண்டு என்பதே ஆறுதலாக இருந்தது. ராஜன் மகள் இருந்தது. என் சேமிப்பான இருநூறு ரூபாய் போதாமல் திரும்பிப் போக பத்து ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு பையைக் கொட்டி கவிழ்த்தி சில்லறைகளை சேகரித்துக் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கி கையில் வைத்துக் கொண்டேன். ‘நான் ஒண்ணும் சும்மா வரல’ என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் யுக்தி போல புத்தகத்தை வைத்துக் கொடுத்த துணிப்பையினை ஆட்டிக் கொண்டே வந்தேன்.
நான் சென்ற முதல் புத்தகக் காட்சியில் எனக்கென ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை. பின்னாட்களில் புத்தகக் காட்சிக்கு என்று மாதாமாதம் இருநூறு ரூபாய் சேர்க்கத் தொடங்கினேன். அந்தப் பணத்தைக் கொண்டு புத்தகங்கள் வாங்கும்போது அவற்றிற்கு கிடைக்கிற மதிப்பு பல மடங்கானது. உடனுக்குடன் படித்து முடிக்கவும் அந்த சேமிப்பு தூண்டியது.
நான்கைந்து வருடங்கள் வாசகியாய் சென்று கொண்டிருந்த புத்தகக் காட்சிக்கு எழுத்தாளராய் போய் நின்ற தருணம் அற்புதமானது. 2014-ஆம் வருடத்தில் இரு புத்தகங்கள் ஒரு சேர வெளிவந்தன. ‘மேதைகளின் குரல்கள்’ மற்றும் ‘பெண்ணென்று சொல்வேன்’. இரண்டுமே வந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்தன என்றார்கள் பதிப்பாளர்கள். எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் ‘மேதைகளின் குரல்கள்’ புத்தகத்தில் என் கையெழுத்தைப் போடும்படி கேட்டார். முதன்முதலாக நடுங்கும் விரல்களும் கூச்சமும் கொண்டு கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தேன்.
எங்களது புத்தக சேகரிப்பில் இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள் சென்னை புத்தகக் காட்சியில் வாங்கியவைதான். ஒரே ஒரு புத்தகத்தைக் கூட வாங்க முடியாமல் வருத்தமும் துக்கமுமாக வெளி வந்த அந்த முதல் நாளில் தோன்றியது, ‘கணக்குப் பார்க்காமல் இதே புத்தகக் காட்சியில் என்றேனும் செலவு செய்ய வேண்டும்’ என்று. அதுவும் நடந்தது. ஒருவருடம் கணக்குப் பார்க்காமல் வாங்கினேன், ஆசை தீர, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல். கிட்டத்தட்ட 18000 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். அடுக்கி வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
திருமணத்துக்கு முன்பும் பின்பும் நானும் அய்யப்பனும் பலமுறை சென்றிருக்கிறோம். மூத்த மகள் பால மயூரா பிறந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு சென்றோம். அடுத்தவள் ராஜ மித்ரா பிறந்தாள், அவளையும். இப்போது இருவரும் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்கென்று வாங்க வேண்டிய புத்தகங்களுக்கான பட்டியல் உருவானது. அதை இரவும் பகலுமாக அக்காவும் தங்கையும் எழுதுவார்கள். அடிப்பார்கள், சண்டை போடுவார்கள். பிறகு சமாதானமாவார்கள். அவர்களுக்கு ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து, ‘அதற்குள் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம்’ என்று சொல்லி விடுவோம். இருவரும் எந்தக் கடைகளுக்குள் சென்று வந்தாலும் நாங்கள் காத்திருப்போம். அவர்கள் புத்தகத் தேர்வில் நாங்கள் தலையிடுவதில்லை. பல கடைகளுக்குச் செல்வார்கள், புத்தகங்களை எடுப்பார்கள், விலை பார்ப்ப்பார்கள், ‘நாம ஷேர் பண்ணிக்கலாம்’ என்று தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கையை கடையிலேயே செய்து கொள்வார்கள், அவர்களே பில் போடுவார்கள், தூக்கிக் கொண்டு வருவார்கள். அன்றைய தினம் எங்களுக்காக ஒரு கடைக்குள் கூட செல்ல மாட்டோம். அது அவர்கள் தினம். நாங்கள் வெறும் பாதுகாவலர்கள் மட்டுமே. எங்கள் ஊர் ஆனித் தேர்த் திருவிழாவின் போது என் அம்மா எனக்கு பத்து ரூபாய் கொடுப்பார். இஷ்டப்பட்டதை அன்று வாங்கிக் கொள்ளலாம், இந்த நினைவுதான் குழந்தைகளை அழைத்துப் போகையில் எனக்கு ஏற்படும். புத்தகக் காட்சிக்கு திருவிழா என்கிற பெயரும் உண்டுதானே !
நகரத்தில் பல இடங்களில் புத்தகக் கடைகள் இருக்கின்றன. இதைத் தவிரவும் ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்கும். கிண்டில் இருக்கிறது. கிண்டிலில் ஒரு நிமிடத்திற்குள் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். புத்தக விற்பனையாளர்கள் சிலரிடம் வாட்ஸ் ஆப்பில் கேட்டால் கூட போதும், நேரடியாக சில மணிநேரங்களில் புத்தகத்தினை கொண்டு தருவார்கள். ஆனாலும், ஏன் புத்தகக் கண்காட்சி அத்தனை வசீகரமானதாக அமைகிறது?
என் அனுபவத்தில் ஒரு காரணம் தேடுதல். அந்த வருடத்தில் வெளி வருகிற, வாங்க வேண்டிய புத்தகங்கள் ஒருபக்கம், நீண்ட நாட்கள் வாங்க நினைத்தவை, மற்றவர்களின் பரிந்துரையின் படி வாங்கிய புத்தகங்கள், இவற்றையெல்லாம் கடந்து ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று தேடித் தேடி எடுக்கும் புத்தகங்கள், தொடர்ந்து மூன்று, நான்கு மணிநேரங்கள் வெவ்வேறு விதமான கதைகள், தகவல்கள் புனைவுகள், அபுனைவுகள் என புத்தகங்களுக்கும் நமக்குமான மானசீகமான உரையாடல் நிகழ்வது போல ஒரு வாசகருக்கு இனிமையான அற்புதமான தருணம் கிடைக்கவே கிடைக்காது. இப்படியான தேடல்களில் நான் கண்டு கொண்ட புத்தகங்கள் ஏராளம்.
ஒருமுறை புத்தகக் காட்சியில் கடல் தொடர்பான புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். இப்படியொரு நோக்கத்தை வைத்துக் கொண்டு ஒரு செவ்வாய் அன்று மதிய நேரத்தில் அதிகக் கூட்டம் இல்லாத பொழுதுகளில் கால் சளைக்க சளைக்கத் தேடி எடுத்தேன். அந்த வருடம் மட்டும் பதினைந்து புத்தகங்கள் கடல் தொடர்பானவற்றை வாங்கினேன். கடல்சார் வாணிபம் , சூழலியல் மாற்றம், கடல்சார் வாழ்க்கை, கப்பல் கட்டும் தொழில்நுட்பம், சங்குகள் பற்றி தகவல்கள் கொண்ட புத்தகங்கள் என தமிழில் கடல் பற்றி வெளிவந்த புத்தகங்கள் ஆச்சரியம் கொள்ள வைத்தன. இவற்றில் சில புத்தகங்கள் மறுபதிப்பில் இல்லை.
ஒரு வருடம் மரபுசார் ஓவியங்கள் குறித்த புத்தகங்ளுக்காக ஒதுக்கினேன். மற்றொரு முறை வைணவ இலக்கியம் சார்ந்த புத்தகங்கள். இன்னுமொருமுறை சங்க இலக்கியம் குறித்து. தேடுதல் தருகிற ருசி இது.
இருநூறு ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு ஒன்றுமே வாங்காமல் சென்ற முதல் நாளில் எனக்குத் தெரியாது பதிப்பகம் தொடங்கி அதில் புத்தகம் வெளியிட்டு இதே புத்தகக் கண்காட்சியில் அவற்றை விற்பனைக்கு வைப்பேன் என்று. மயூ பதிப்பகம் தொடங்கி எனது புத்தகங்கள் அதில் வெளியாகும்போது விற்பனையாளர்கள் ஏழு பேர் தங்களுக்கு புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு நானே சென்று எங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களைக் கொடுத்தேன். ‘வேறு யாரையேனும் அனுப்புங்கள்..நீங்கள் வராதீர்கள்’ என்றார்கள். ஆனால், அந்தக் கணம் எனக்கு கொடுத்த நிறைவை நெகிழ்ச்சியை என்னால் விளக்க இயலவில்லை. அது ஒரு பயணத்தின் முடிவு அல்லது, தொடர்ச்சி. இத்தனை வருட காலங்களில் பெற்றிருக்கும் நம்பிக்கையில் விளைச்சல் அது.
இத்தனை வருட காலங்களில் நான் இந்த நகரத்தில் பெற்றிருப்பது நண்பர்களை. குறைந்தது ஐம்பது பேருடனாவது புத்தகக் காட்சி வருந்தோறும் உரையாட வேண்டியிருக்கும். புகைப்படம் எடுத்துக் கொள்வோம். புத்தகங்களில் கையெழுத்துக் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் பத்து பேராவது நேரில் சந்திக்க வேண்டும் என்று வெளியூரில் இருந்து வந்திருப்பார்கள். ‘இதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா?’ என்றுதான் தோன்றும்.
புத்தகக் காட்சி என்பது எனது அனுபவத்தில் திருவிழாவேதான். இப்போதெல்லாம் குடும்ப விழா போலவும் மாறி வருகிறது, தோழமைகளின் கொண்டாட்ட களமாக, அடுத்து எழுதப் போகும் அனைத்துக்குமான உத்வேக காரணியாக என எல்லாமுமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இத்தனை எழுதிய பிறகும் புத்தகக் கண்காட்சி அனுபவம் என்பது எல்லையில்லாது விரிவாகிக் கொண்டேதான் இருக்கிறது. எழுதத் தொடங்கினால், அது நூறு பக்கங்களுக்கும் மேல் செல்லக்கூடும்.
அதனால் மட்டுமே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.



