புல்வெளியும் புத்தகங்களும் கொஞ்சம் காஃபியும்..! – பாஸ்கர் சக்தி

ஆனந்த விகடனில் 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அந்த ஆண்டிலிருந்தே புத்தகக் காட்சிக்கு தவறாது சென்று வருகிறேன். அப்போது காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் நடந்து வந்தது. எனவே விகடனில் இருந்து நடந்தே செல்லும் தூரம். நினைவிலிருந்து யோசிக்கையில், அன்று முதல் இன்று வரையிலும், அனேகமாக ஒரு ஆண்டு கூட போகத் தவறியதில்லை என்று எண்ணுகிறேன். சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருப்பவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் தொடர்ந்து அதைச் செய்து விட்டால் குருசாமி ஆகி விடுவார்கள். உத்தேசமாக இருபத்தி எட்டு ஆண்டுகள் புத்தகக் காட்சி போய் வந்திருப்பதால் அது மாதிரி ஒரு பட்டத்துக்கு தகுதியானவனாக ஆகி விட்டதாக நம்புகிறேன்.
ஏன் ஆண்டு தவறாமல் அங்கு செல்ல வேண்டும்? புத்தகம் வாங்கவா? அதற்குத்தான் கடைகள் இருக்கின்றனவே? நான் ஒரு முறை கூட அங்கு அப்பளம் வேறு தின்றதில்லை. பிறகு எதற்கு நான் அங்கு செல்கிறேன் ? முதலில் இது ஒன்றும் வேண்டுதல் இல்லை. இது என் மனதுக்கு உகந்தது. எனக்கு விருப்பமானது. இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அப்படி என்னை ஆக்கியவை புத்தகங்கள். சிறு வயதில் மதுரைதான் அருகில் உள்ள பெரிய நகரம். தேனி ஒரு சிறிய டவுன் மட்டுமே. மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் ரீகல் தியேட்டர் அருகிலுள்ள சர்வோதய இலக்கியப் பண்ணையும், மேலமாசி வீதியை ஒட்டிய ஒரு சந்தில் இருந்த அன்னம் புத்தக நிலையமும் நான் தேடித் தேடிப் போன இடங்கள். சென்னையில் மாணவனாக இருந்த காலங்களில் ஹிக்கின்பாதம்ஸும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு மாடியில் இருந்த முன்றில் புத்தக நிலையமும் எனது ஃபேவரைட் கடைகள்.. இப்படியான மனப்பாங்குடைய ஒருவனுக்கு அத்தனை பதிப்பகங்களும் குவிந்திருக்கும் இடம் மகிழ்ச்சியைத் தருவதில் வியப்பென்ன இருக்கிறது.? எனக்கு அது புத்தகக் காட்சியல்ல. திருவிழாதான். திருவிழாக்களுக்கே உரித்தான மகிழ்ச்சியும், ஒன்று கூடலும், நண்பர்களுடனான சந்திப்பும் எப்போதும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பவை.
காயிதே மில்லத் வளாகம் மிகவும் அருமையான இடமாகத்தான் இருந்தது. அளவில் சிறிய இடம். அரங்குகளின் எண்ணிக்கையும் மிக அதிகம் இல்லை. ஆனால், கண்காட்சி நடக்கும் பந்தலுக்கு எதிரில் ஒரு புல்வெளி மைதானம் இருக்கும், ஜனவரியின் குளிரில் மாலை நேரங்களில், பெய்யும் மெல்லிய பனியின் போது அங்கு சும்மா அமர்ந்திருப்பதே சுகம்தான். அத்துடன் புத்தகங்களைப் பார்வையிடுவது, பிறகு போய் டீ குடிப்பது. நண்பர்களுடன் புல்வெளியில் அமர்ந்து உரையாடுவது எல்லாம் மாற்றி மாற்றி நடக்கும். நாள் பூராவும் அங்கேயே இருந்த நாட்களும் நிறைய உண்டு. நான் விகடனில் இருந்து வெளியேறி தொலைக்காட்சித் தொடர்கள் எழுதத் துவங்கிய சமயங்களிலும் கூட புத்தகக் கண்காட்சி அங்குதான் நடந்த நினைவு. அந்தக் காலகட்டத்தில் கூடவே இருந்த நண்பர் குழாமில் தளவாய் சுந்தரம், ரமேஷ் வைத்யா, சங்கரராம சுப்ரமணியன், வசுபாரதி (வசுமித்ர), ராஜகோபால் எல்லோரும் ஒரு கேங்க் ஆக இருந்தார்கள். அப்போதுதான் ப்ரியா தம்பி சென்னை வந்த புதிது, என்னோடு அவரும் புத்தகக் காட்சிக்கு கூடவே வருவார்.
அப்போதுதான் ஞாநி `தீம்தரிகிட’ இதழை மறுபடி துவங்கி ஆசிரியராக இருந்து நடத்தினார். நான் பொறுப்பாசிரியராக பணிபுரிந்தேன். `ஞானபாநு‘ ஸ்டாலை அங்கே ஞாநி போட்டிருப்பார். வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்துவார். ஞாநியின் ஸ்டாலை நண்பர்கள் மாறி மாறிப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், மிகவும் டெடிகேட்டட் ஆக அங்கேயே இருந்தவர்கள் ஒரு சிலர். ‘மீசை’ வெங்கடேசன் எனும் நண்பர். அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு ஸ்டாலில் விற்பனை செய்வார். நண்பர் விஜு என்ற விஜயகுமார் மற்றும் இயக்குனர் லெனின் பாரதியும், கா. பாலமுருகனும் கூட அங்கேயே இருப்பார்கள். இப்போதுள்ள அதிஷா அப்போது வினோத் ஆக, கொஞ்சம் சின்னப்பையனாக அந்த ஸ்டாலில் வந்து இருந்திருக்கிறான். ஆனால், அந்தக் காலகட்டத்தில் நான் வினோத்தை மனதில் இருத்திக் கொள்ளவில்லை. பின்னர் ப்ளாக் எழுதும் அதிஷாவாகத்தான் அவன் எனக்கு அறிமுகம் ஆனான்.
அதன்பின் புத்தகத் திருவிழா பச்சையப்பன் கல்லூரியின் எதிரே உள்ள பள்ளியின் மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு இப்போது நடக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. நடுவே ஓரிரு வருடங்கள் தீவுத்திடல். எங்கே இடம் மாறினாலும் அங்கே நாங்கள் இருந்தோம். காயிதே மில்லத் கல்லூரியைப் போல வசீகரமான புல்வெளி இல்லை என்றாலும் எங்களுக்கான ஒரு இடம் இல்லாமலிருக்காது.
எத்தனை விதமான மனிதர்களையும், அனுபவங்களையும் தந்திருக்கிறது இந்தத் திருவிழா..!
பெரிய எழுத்தாளர்கள் துவங்கி ஆர்வமிகுந்த வாசகர்களும், இணையாக ஆர்வக்கோளாறு ஆட்களும் கலந்து கட்டி வருவார்கள். இலக்கியத்தை எப்படியாவது நிமிர்த்தி, சரி செய்து விட வேண்டும் என்கிற சபதத்தோடு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, தலையை நிமிர்த்தி , உலகத்தை கீழ்ப்பார்வை பார்த்தபடி வரும் இளம் கலகக்காரர்கள் விழாவை சுவாரஸ்யமாக்குவார்கள். அப்படி நான் சந்தித்த ஒரு இளம் கோபக்கார வாசகர் ரொம்பவே சுவாரஸ்யமானவர். அன்று, இரண்டு பேர் என்னைத் தேடி வந்தார்கள். அதில் ஒருவர் எனது எழுத்துகளை ரசிப்பவர். மற்றவர் எனது எழுத்துகள் குறித்து பெரிய மரியாதை ஏதும் இல்லாதவர். அவர் என்னிடம் விவாதிக்க, நான் சிரித்தபடியே அவருக்கு பதில் சொல்ல, (இளம் கோபக்கார வாசகர்: “உங்க எழுத்தெல்லாம் அம்பது வருஷத்துக்குப் பிறகு இருக்காது சார்”.
நான்: “அதுக்கென்ன பிரதர் பண்ண முடியும்? அம்பது வருஷம் கழிச்சு நானே இருக்க மாட்டேனே?“. இப்படி வெகு சுவாரஸ்யமான உரையாடல் அது) எனது வாசகர் நொந்து போய் தனியே என்னைச் சந்தித்து மன்னிப்புக் கேட்ட இந்த சம்பவத்தை முழுமையாக இதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் எழுதி இருக்கிறேன்.
இது தவிர நிஜமான இலக்கியச் சண்டைகளும் நிகழ்ந்திருக்கின்றன. ஒருமுறை எனக்கு மிக நெருக்கமான இரு இலக்கிய நண்பர்களுக்குள் அடிதடி நிகழ்ந்து விட்டது. அவர்கள் ஒருபுறம் மற்போர் இட்டுக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் நான் ஒரு பெண்ணுடன் டீ சாப்பிட்டபடி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு பதிப்பக நண்பர் வந்தார். அவர் எப்போதுமே கொஞ்சம் சீரியஸாகவே எதையும் சொல்லிப் பழக்கப்பட்டவர். அவர் இயல்பு அது. (உதாரணமாக, என்னை யாராவது ஒரு நண்பன் அந்தப் பக்கம் தேடிக்கொண்டிருந்து விட்டு, சும்மா சாதாரணமாக இவரிடம், பாஸைப் பாத்தீங்களா? என்று விசாரித்திருப்பான். கொஞ்ச நேரத்துக்குப் பின், இவர் என்னை வேறு பக்கம் பார்த்த உடன் வேகமாக என்னிடம் வருவார். முகம் படு சீரியஸாக இருக்கும், ”ஏங்க, உங்களை அங்க ……. தேடிக்கிட்டு இருக்காரு. நீங்க என்ன இங்க இருக்கீங்க?” என்பார். அந்தப் பக்கம் தேடியவன் நான் இல்லையென்றதும் கேஷுவலாக எங்காவது தம் அடித்துக் கொண்டிருப்பான். இவர் என்னிடம் சொல்லும் தொனி எப்படி இருக்கும் என்றால், `அவன் அங்கே உங்களைப் பாக்காம உயிருக்குப் போராடிட்டு இருக்கான், நீங்க என்ன இங்க ஜாலியா இருக்கீங்க?’ என்பது போலவே, ஒரு குற்றம் சாட்டும் தொனியில் இருக்கும்.)
இப்போது நிஜமாகவே அங்கு ஒரு யுத்தம் நடந்திருக்கையில், இவரது முகபாவம் எப்படி இருக்குமென்று யோசியுங்கள். போதாக்குறைக்கு நான் வேறு ஒரு இளம்பெண்ணுடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். வாட் எ க்ரைம்?
“என்ன பாஸ்கர் இப்படி இருக்கீங்க..? அங்க ரெண்டு பேரும் அடிச்சு மல்லுக்கட்டி ரத்தக் காயம் ஆயிப்போச்சு.. நீங்க அசால்ட்டா இங்க நிக்கிறீங்க? போய் என்னன்னு பாருங்க”
நிஜமாகவே கொஞ்சம் டென்ஷனாகி அவர்களிருவரையும் தேடி வேகமாகச் சென்றேன். ஒரு படுகளத்தை எதிர்பார்த்து சம்பவ இடத்தை அடைந்தால் அங்கே ஜனங்கள் டெல்லி அப்பளம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். யுத்தத் தடயமோ, ரத்தத் துளிகளோ அங்கில்லை. புலன் விசாரணையைத் துவக்கியதில், அர்ச்சுனனும், துரியோதனனும் துவந்த யுத்தத்தை முடித்து விட்டு கிளம்பிப் போய் விட்ட தகவல்தான் கிடைத்தது. விழுப்புண்களுக்கு மருந்திருட்டு விட்டு மறுநாளும் யுத்தம் தொடரும் என்று சிலர் ஆர்வமாக எதிர்பார்ப்பதாக தகவல்கள் வந்தன. நான் அவர்களை அடுத்த நாள்தான் பார்க்க முடிந்தது. ஆனால் இருவருமே அதை ஒன்றும் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘விடுங்க பாஸு’ என்கிற மாதிரிதான் எடுத்துக் கொண்டனர். இலக்கியத்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம்தான். அடுத்து வந்த சமயங்களில் இருவரும் இயல்பாகப் பேசிக்கொள்ளவும் செய்தார்கள். இருவருமே நல்ல ஆத்மாக்கள். கருத்து வேறுபாடும், அப்போதைய மனநிலையும் இப்படியான சச்சரவுகளை உருவாக்குமேயன்றி அதில் வன்மம் இருக்காது. இது ஒரு விதமான பித்து நிலை. இலக்கியவாதிகளுக்கே உரியது. அடுத்த நாள் என்னைப் பார்த்த அந்த பதிப்பாளர்தான் அதே தீவிரமான முகபாவத்துடன், ”என்ன பாஸ்கர்? அவங்களைப் பாத்தீங்களா? இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு?” என்று மற்றவர்கள் முன்னிலும் சீரியஸாகக் கேட்க, நான்அவரிடம், “விடுங்க, அவங்களே இதை பெரிசா எடுத்துக்கலை” என்று சொல்லிக் கொண்டிருக்கையில், நேற்று வந்த அதே பெண் இப்போதும் வினையாக வந்து என்னை டீ குடிக்க அழைக்க, பதிப்பாள நண்பர் கடுப்பாக முறைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.
இது தவிர `அய்யோ, என்னை கொல்ல வர்ராங்க“ என்று சிலர் அலறிய வேறு நகைச்சுவைகளும் நடந்திருக்கின்றன.
ஞாநியுடன் ‘ஞானபாநு’ ஸ்டாலில் அமர்ந்திருக்கும் பேரனுபவத்தை நான் மிகவும் இழந்து விட்டேன். தீம்தரிகிட இதழை சுடச்சுடத் தயாரித்து விற்பனைக்கு வைத்து விட்டு அரங்கில் அமர்ந்திருப்போம். வரிசையாக ஆட்கள் வருவார்கள். பேசுவார்கள். சாதாரணமாக ஒரு கேள்வியில் துவங்கும் உரையாடல் சட்டென்று விவாதமாக மாறும். கருத்து மோதல்கள் வரும். ஆனால், எல்லாமே மிக ஆரோக்கியமானதாக, அறிவைப் புகட்டுவதாக இருக்கும். பெரிய அரசியல்வாதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், எல்லாம் வருவார்கள். டீ குடித்தபடி பேசிக் கொண்டிருப்போம். சில நேரங்களில், சிலர் வந்து வெகு சினேகிதமாக வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் செல்வார்கள். ஞாநியிடம் பேசி விட்டு என்னிடம் தனியேயும் பேசுவார்கள். அப்படிப்பட்ட நபர்கள் போனதும் ஞாநி என்னிடம், “பாஸ், இவர் இன்டலிஜன்ஸ் ஆள்“ என்று சொல்லிச் சிரிப்பார். ஆம். உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் பலநேரம் ஞாநியிடம் மிக ஃப்ரண்ட்லியாக உரையாடி தகவல் சேகரித்துச் செல்வார்கள். அவர்களை ஞாநியும் நன்கு அறிந்திருப்பார். “சமயத்துல நான் ரொம்ப போரடிக்கிற மாதிரி பேசி அவங்களை அனுப்பிருவேன் பாஸ்“ என்று சொல்லிச் சிரிப்பார் ஞாநி.
திருவிழாவின் போது கிடைக்கும் தின்பண்டங்கள் அதிருசி கொண்டவை. சுபாஷிணி மிகுந்த அக்கறையும், அன்பும் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வந்து அனைத்து நண்பர்களுக்கும் கொடுப்பார். அந்த சமயம் நான் அங்கு இல்லாவிட்டால், “இது பாஸ்கருக்கு“ என்று தனிப்பட்ட அன்புடன் எடுத்து வைத்திருந்து நான் வந்ததும் கொடுப்பார். சமீப ஆண்டுகளில் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜியும், காயத்ரியும் புதிது புதிதான பண்டங்களை கொடுத்து அசத்துகிறார்கள். தின்பண்டங்களை விட, அதன் பின்னிருக்கும் அன்பும், அக்கறையுமே முக்கியமானது.
சில மனிதர்களை வருடா வருடம் புத்தகத் திருவிழாவில் மட்டுமே பார்க்கிறேன். அன்புடன் வந்து பேசிவிட்டு, ஃபோட்டோ எடுத்துக் கொண்டு செல்வார்கள். எழுத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட அன்பை சம்பாதிக்கும் சக்தி உண்டு.
பொங்கல் சமயத்தில் என் ஊரில் குலதெய்வம் கும்பிடுவார்கள். பங்காளிகள், சொந்த பந்தம் எல்லாம் அப்போது சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. அவை எல்லாமே பிறப்பின் அடிப்படையில் உருவான சொந்தங்கள். ஆனால், ஊரிலிருந்து தனியாக வந்த ஒருவனுக்கு ஆண்டு தோறும் புத்தகத் திருவிழாவில் சந்திக்கும் இந்த சொந்தங்கள் அத்தனையும் எழுத்து சம்பாதித்துக் கொடுத்தவை. இந்த சொந்தங்கள் மனதில் எழுப்பும் மகிழ்ச்சியான உணர்வுக்கு ஈடில்லை.
க.சீ.சிவகுமார் அவ்வப்போது ஊரிலிருந்து கிளம்பி வந்து என்னுடன் இணைந்து கொள்வான். சென்னையிலேயே இருக்கும் எனக்குத் தெரியாத பல இலக்கியப் பொரணிகளை வந்தவுடனே என்னிடம் கடை விரிப்பான். “எப்புட்றா?” என்று வியந்து நான் கேட்க, “இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா, சரக்கடிக்கணும். நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே” என்று சிரிப்பான். அவனுடன் நடக்க ஆரம்பித்தால், ஒரே ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். எதிரே சீனியர் எழுத்தாளர்கள் வந்து கொண்டிருப்பார்கள். காதருகே, ”பாஸு, ஒரு விஷயம் தெரியுமா? பாஸு, இதை மட்டும் கேட்டுக்கோ” என்று அவர்களைப் பற்றி நக்கலாக ஏதாவது சொல்லி விடுவான். அவர்கள் எங்களைப் பார்த்து நின்று புன்னகைத்துப் பேசுவார்கள். என் மனதிலோ இவன் அவர்களைப் பற்றி சொன்னது உள்ளே சிரிப்பை கிளறி விட்டுக்கொண்டே இருக்க, அவர்கள் கடந்து போனதும் ஓரமாகப் போய் அடக்கி வைத்திருந்த சிரிப்பை, வாய் விட்டுச் சிரித்துக் கொள்வோம்.
ஒரு புத்தகத் திருவிழாவில்தான் அவனை கடைசியாக சந்தித்தேன். அவனது மகள் எழுதிய புத்தகம் திருவிழா சமயத்தில் வெளியாக, அந்த சமயம் அவன் இங்கில்லை. `நீ போய் வெளியிட்டுரு’ என்று கட்டளை இட்டான். நானும் சென்று வெளியிட்டேன். ஓரிரு நாட்கள் கழித்து வந்தவனிடம் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அவனை விருகம்பாக்கம் அருகே ட்ராப் செய்தேன். அப்போது கையாட்டி விடை பெற்றுச் சென்றவன் பிப்ரவரி மாதம் மறைந்து போனான்.
அது நடந்தது 2017-ஆம் ஆண்டு. அடுத்த ஆண்டு (2018) புத்தகத் திருவிழாவின் போதுதான் ஞாநி மறைந்தார். எல்லாத் திருவிழாக்களிலும் கொண்டாட்டம் மட்டுமே இருப்பதில்லை அல்லவா?
திரும்பி நின்று யோசிக்கையில் ஒரு விஷயம் மனதில் படுகிறது. ஆரம்ப காலங்களில் என்னுடன் வந்து கொண்டிருந்த சில நண்பர்கள் அதன் பின் புத்தகத் திருவிழாவுக்கு எப்போதாவது வருகிறவர்களாக மாறிப் போனார்கள். சில சமயங்களில் புது நண்பர்களுடன் அபூர்வமாக வந்தார்கள். என்னுடன் வருகிறவர்களும் செட் செட்டாக மாறி இருக்கின்றனர். தளவாய், ராஜகோபால், சங்கராமசுப்ரமணியம், ப்ரியா தம்பி, உமா பார்வதி ஆகியோர் எல்லாம் ஒரு கட்டத்தில் என்றாவது ஒருநாள் தற்செயலாக சந்திப்பவர்களாக மாறி விட்டார்கள். ஞாநியும் , சிவகுமாரும் இருக்கும் வரை வந்து கொண்டிருந்தார்கள். அதன் பின் அதிஷா, சக்ரவர்த்தி, தங்கமணி பிரபு, மணிவண்ணன் என்று ஒரு நண்பர்கள் செட் வந்து கொண்டிருக்கிறது. ரமேஷ் வைத்யா இத்தனை காலமும் விட்டு விட்டு என்னுடன் வந்து கொண்டிருக்கிறான். (விஜு ஒவ்வொரு ஆண்டும் என்னைப் போலவே தவறாமல் வருகிறவர். என்னைப் பார்த்ததும் உடனே கூட்டிப் போய் காஃபி வாங்கித் தருகிற அன்பு அவருடையது) இதெல்லாமும் இயல்பான மாற்றமே. இனியும் கூட புது நண்பர்கள் வரலாம். ஆனால், நான் விடாமல் வந்து கொண்டிருக்கிறேன்.
கடந்து போகும் ஆண்டுகளை நான் எப்போதும் பருவ காலங்களுடன் நினைவு கூர்வேன். கோடை, பின் காற்று கிளம்பும் காலம், மழைக்காலம், பனிக்காலம் பின் மறுபடியும் கோடை… இப்படி உணர்ந்து கொண்டிருக்கும் எனக்கு சென்னை வாழ்க்கையை நினைவு கூர, இந்தப் பருவகாலங்களுடன் புத்தகத் திருவிழாவும் சேர்கிறது. புத்தகத் திருவிழா என்பது வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாக ஆகி விட்டது. சின்ன வயதில் வசீகரமாக இருந்து தீபாவளி கூட ஒரு கட்டத்தில் அலுப்பும், எரிச்சலும் தருவதாக மாறி விட்டது. ஆனால், அலுக்காத ஒரே ஒரு விழா புத்தகத் திருவிழா மட்டுமே. இனிமேலும் அலுக்காது என்று நம்புகிறேன்.



