CBF-2026சிறப்புப் பகுதி

பெருவிழாவில் தொலையும் குழந்தை – வேல்கண்ணன்

நண்பர்களே,


திருவண்ணாமலை காந்தி நகர் மெயின் ரோட்டில், சரியாக பரசுராமர் கோயில் பின்புறம் அந்த வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த தெரு. நடமாடும் நூலகம். ரஷ்யா, சோவியத் யூனியன், லெனின், கார்ல் மார்க்ஸ் போன்ற பல நூல்கள் இருந்தன. விலை குறைவுதான்; ஆனால், அதுவும் என்னிடத்தில் இல்லை. அங்கேயே உட்கார்ந்து எவ்வளவு நேரம் என்றாலும் வாசிக்கலாம் என்றவரை நிமிர்ந்து பார்த்தேன். உயரமாகத் தெரிந்தார். வாசித்தேன்… வாசித்தேன்… வாசித்தேன். மதிய உணவிற்கு மட்டும் சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு, மறுபடியும் வந்து வாசித்தேன். மூன்று நாட்கள் இருக்கும் என்று சொன்னார்கள். இரண்டு நாட்கள் பாவமாக, பழியாகக் கிடந்தேன். பல புத்தகங்களை எளிதாக வாசிக்க நேர்ந்தாலும், தலைகால் புரியவில்லை. கதைகள் குறைவாகவே இருந்தது, தாஸ்தாவெஸ்கியின் ‘மரண வீட்டின் குறிப்புகள்’, இவான் துர்கனேவ் கதைகள் சில வாசித்து முடித்தேன். அவர்கள் யாரென்று குறிப்பாக இவான் பற்றி அறியாமல் படித்தேன். இவான் பாதித்தார். மூன்றாம் நாள் காலை 6 மணிக்கு நண்பன் ஷாபுதீன் வீடு தேடி வந்திருந்தான். எப்பொழுதும் மதியம், மாலை நேரம்தான் தேடி வருவான். ஊரைச் சுற்றி வருவோம். ஏன் இப்போதே வந்து விட்டான்? அவனே சொன்னான், இல்லை… இல்லை… காட்டுக் கத்து கத்தினான். “எங்கேடா போன ரெண்டு நாளா?”. சொன்னேன். “அடப் போடாங்.. ” வந்த வேகத்தில் திரும்பி விட்டான். இரண்டு நாட்கள் தேடித் வெறுப்பாகி கோபித்துக் கொண்டான். இன்னும் கொஞ்ச நாளைக்கு வர மாட்டான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் விடுபட்ட நாட்களை விட்டுவிட்டு தொடர்ந்து சுற்றத் தொடங்கி விடுவோம். இன்று வரை இது தொடர்கிறது. 
~
தொடந்த என் வாசிப்பிற்கு உதவியது திருவண்ணாமலை மாவட்ட நூலகமும் கீதாஞ்சலி வாடகை நூல் நிலையமும். அங்கேதான் எனது தந்தையின் நண்பரான திரு. ந.சண்முகம் அவர்கள் என் ஆர்வத்தை பார்த்து விட்டு, சென்னை புத்தகக் காட்சி குறித்து விவரித்துப் பேசினார். அன்றைய சூழலில், ஒரு முறையாவது பார்த்து விட வேண்டுமென சுடரொன்று ஒளிரத் தொடங்கியது. போதாக்குறைக்கு தமுஎச தோழர்களும் திரியைத் தூண்டி விட்டார்கள். நெஞ்சில் நின்றது அணையா விளக்கு.
~
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இலட்சியம், குறிக்கோள், உள்ளெரியும் நெருப்பெல்லாம் வயிற்றுப் பசியை ஒளித்துக் கொள்ள, வேலை தேடி அலைந்த நாட்களில் ஷாபுதீன் அறையில்தான் இருந்தேன். ஒரு நாளில் “ஈவினிங் ஃப்ரியாடா?” என்றான். “எங்கேயும் எதுவும் பிளான் இல்லைடா”, அவனோடு சென்றால் இரவில் நல்ல உணவு கிடைக்கும் என்ற ஆசையில்தான் சொன்னேன். ஐந்து மணிக்கு கிளம்பிவிட்டோம்.

நண்பன் அழைத்து சென்றது, பச்சையப்பாஸ் கல்லூரியில் எதிரில் நடந்து கொண்டிருந்த சென்னை புத்தக காட்சிக்கு முதல் முறையாக. சிலருக்கு சில கோயில்களில் / மடங்களில் நுழையும் போது வைப்ரேஷன் ஆகும் என்பார்கள். அப்படியாக ஏதோ ஒன்றை உணர்ந்தேன். இன்று அதனை வார்த்தை ஆக்க முடிந்த எனக்கு, அன்று அது பிடிபடாத உணர்வாக இருந்தது. அன்றைக்கு எத்தனை ஸ்டால்களைப் பார்த்தேன் என்றெல்லாம் நினைவில் இல்லை. எல்லாவற்றையும் வாங்கி விட வேண்டும். அங்கேயே உட்கார்ந்து படிக்கத் தொடங்கி விட வேண்டும் என்கிற வெறி பிடித்து ஆட்டியது. ஒவ்வொரு கடைக்கும் பித்துப் பிடித்தவன் போல அலைந்தேன். தள்ளி நின்று ரசித்துக் கொண்டே இருந்த நண்பன், அவன் செலவில் மூன்று புத்தகங்கள் வாங்கியும் கொடுத்தான்(எம்.எஸ். உதயமூர்த்தி, பாலகுமாரன், வைரமுத்து). அந்த நிமிடம் என் மனதில் தோன்றியது “இந்த மனிதர்களில் நான் வித்தியாசமானவன் என்று நிரூபிக்க வாய்ப்பு கிடைத்து விட்டது, இந்த உலகில் அதிகம் வாசித்தவன் என்கிற பெயர் பெறப் போகிறோம், உலகை வெல்ல ஆயுதம் கிடைத்து விட்டது”. 

அன்றிரவு இட்லியும் அருந்திய தண்ணீரும் அமிர்தமாக இருந்தது. உறக்கம் பிடிக்கவில்லை. உற்சாகம் குறையவில்லை. கிடைக்கப் பெற்ற ஆயுதங்களை, உடனே ஊருக்குச் சென்று என் வீட்டில் இருப்பவர்களிடம் நண்பர்களிடம் காண்பித்து விட வேண்டும். “இனிமேல் என்னை யாரும் திட்டக்கூடாது.. பார்த்துக்கோங்க” என்று சிலிர்த்துக் கொண்டேன். மெத்தப் படித்தவனாம். பார்க்கிற என்ன.. எல்லோரையும் வேண்டுமென்றே தேடிப்போய் பார்த்து, இந்த அனுபவத்தை, நூல்கள் குறித்து பெரிதோ பெரிதாக்கி சொல்லித் தீர்த்தேன். தீர்ந்ததா? வாசகசாலை தம்பி கார்த்தி ‘இதைப் பற்றி எழுதுங்கண்ணே’ என்று சொல்லும் போது இன்றளவும் தீரவில்லை என உணர்கிறேன். வாசிப்பு, பசி, கடல் எல்லாம் என்றைக்குத் தீர்ந்து இருக்கிறது?

இங்கே என் வாழ்வில் ஒரு மேஜிக் நடந்தாக உறுதியாகச் சொல்ல முடியும் நண்பர்களே! அது, மதுரை சித்திரைத் திருவிழாவை ஒரு சில முறைதான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை ஆற்றில் அழகர் இறங்கும் போது பொம்மை போட்ட புதுச்சட்டையில் மொடமொடப்புடன் கூடிய வாசனையுடன், பானகம் மொண்டு, மொண்டு வழிய, வழிய குடித்தபடியே, சட்டைக் காலரை கடித்தபடி சுற்றி வந்த – என் சிறுவயது ஞாபகங்கள்-அந்த சிறுவன் இவ்வளவு புத்தகங்கள் ஒருங்கே கண்ட கணத்தில், மீண்டு எழுந்து என்னுள் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விட்டான். அந்த சிறுவனே, ஆவலும் தேடலும் கொண்ட இளைஞனாகவும் இருக்கிறான் என்று அறிந்தேன். 

எனக்கு ஒவ்வொரு புத்தகக் காட்சியும் குறிப்பாக சென்னையில் நடப்பது தேரோடும் திருவிழா என்று சொல்ல முடியும். மனம் குதூகலித்து விடும். ஒவ்வொரு முறையும் என்னுள் ஜவ்வு மிட்டாய் அதக்கியபடி சிறுவனும், தோள் உயர்த்தி தாவக்கட்டை நிமிர்த்தி சில புத்தகங்களுடன் சென்று கொண்டிருக்கும் இளைஞனும் கை கோர்த்தபடி அல்லது தனித்தனியாக புத்தகங்களைத் துடியாய் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் களைத்த பாடில்லை. என்னுள் அவர்கள் எப்பொழுதும் உண்டு.

நான் இன்று வரை படைப்பாளியாக அல்லது அப்படியான ஜந்துவாக எந்த ஒரு புத்தக காட்சியையும் ஏன் ஒரு புத்தகத்தை கூட அணுகியதில்லை. அணுகவும் மாட்டேன். நாம் அறியாத ஒன்றை, வாழாத வாழ்க்கையை நம்முள் அனுபவமாக மாற்றும் திறன் கொண்டது புத்தகம். ஒருவேளை நீண்ட வாசிப்பின் அறிவில், சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பலவற்றை பலருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். அந்த வகையில், ஆரம்பகால கட்ட வாசகர்கள் என்பதில் ‘அவர்களுக்கு என்ன வயது?’ – என்னும் கேள்வியை சற்று பின்னுக்குத் தள்ளி, ஒரு வசதிக்காக ஓட்டுரிமை வயது 18+ ஐ கணக்கில் கொண்டு, எழுத்தாளர் சுஜாதா கதைகள், பெரிய அளவில் இருந்தாலும் ‘வால்கா முதல் கங்கை வரை’, ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” அவசியம் படிக்க வேண்டும் என்று வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன். கவிதை நூலாக இருக்கும் பட்சத்தில் அது அவரவர் சாய்ஸ். 

நான் ஆவலுடன் எதிர்நோக்கும் புத்தகம் கட்டுரை நூல்கள்.

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவும் எண்ணற்ற அனுபவங்களைத் தந்த போதிலும் முதல் அனுபவமே முற்றிலுமாக என்னை உருவாக்கித் தந்தது. மேலும், 
என் முதல் காதலை விட என் முதல் சென்னை புத்தகக் காட்சி அனுபவம் மழையை, நிழலை, அலைகளை தொடர்ந்து தருவிக்கிறது.

என்னில் இருக்கும் சிறுவன், இளைஞன், அணையா விளக்கு பற்றி அழுத்தமாக பதிவதற்கு வாய்ப்பளித்த வாசகசாலை நண்பர்களுக்கு நன்றி!

-velkannanr@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button