கவிதைகள்

மாவொளியாம் மாவொளி

அ.நிர்மலா ஆனந்தி

அட என்ன ஆயா

வெடிப்போடுறாகளாம் வெடி

நெஞ்சுல இடியாட்டமில்ல எறங்குது

இம்புட்டு வெடியத்தான் கண்டோமா

இல்ல புகையத்தான் போட்டோமா

திருவிழாவோ தீபமோ

எங்க காலத்துல மாவொளிதா கொண்டாட்டம்

கரிசக்காடெல்லாம் சுத்தி

நகர மீனு செதிலாட்டாம் ‎

சொரசொரனு மினுங்குற

பாலாக்கட்டையா பொறக்கி

பஷ்பமா பொசுக்காமா

பதமா எரிச்சு

காட்டு பொங்கவைக்க

பறிச்ச குழியாட்டம்

பள்ளம் பறிச்சு பொதப்போம்

அடுத்தனாலு அயத்துறாம

ஆம குஞ்சாட்டம் மண்ணப் பறிச்சு

கரிக்கட்டய கருகல்லாலே நுணுக்கி

கிழிஞ்ச வேட்டிய

நாளு உருப்படியாத் துணிகிழிச்சு

நாத்தாங்கா கீத்துல வச்ச உப்பாட்டாம்

கரிதூள பரப்பி

இரண்டு கோடியையும்

சுருட்டிச் சேத்து

கவட்டகாலு கணக்க

பனமட்ட நுனிய

நாளாப் பொளந்து

நடுவாட்டுல துணியத் திணிச்சு

கங்குகாட்டி சுத்துனா

அப்படி தேங்காப்பூவா

பொரிபொரியா தெறிக்கு மத்தாப்பு

வயசு பயலுக வண்டியெடுத்து சுத்தாம

வரப்போறமா உக்காந்து

மட்டவெட்டுன காலம் மலையேறிபோச்சுனுட்டு

எந்திருச்சுபோறா மருதநாச்சி ஆச்சி.

*பாலாகட்டை-பனம்பூ

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button