மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

சும்மாடு
ஒன்பது நாட்கள்
பக்குவமாக வளர்த்து
பத்தாம் நாள் பந்தலில்
எடுத்து வைத்த
முளைப்பாரியைச் சுமக்க
நீ சும்மாடு ஆக்கிய துண்டைத்தான்
பத்திரமாகp பதுக்கி வைத்திருக்கிறேன்
இரவில் தலைக்கு வைத்து உறங்கும்
தலையணை உறையுள்
சும்மாட்டுச் சமன்பாட்டில்
அலுங்காமல் குலுங்காமல்
உன் தலைக்கு மேல்
உட்கார்ந்து கொள்கிறது முளைப்பாரி
ஊர்வலம் முடிந்த பின்
கால்நடைகளுக்கு உணவாக
ஊர்க்கிணற்றில்
பிய்த்து எறியப்படும் முளைப்பாரியைப் போல
என் நேசங்களைப் பிய்த்து
எறிந்து விடாதே
முளைப்பாரியைக் கரைத்துவிட்டு
திரும்பி வரும்போது
முளை விதைத்த ஓட்டிற்கு
சும்மாடு முக்காடு ஆகும் கதை
நீ அறியாதது அல்ல.
*
மணற்கேணி
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார்
என்றுதான்
பாட்டி எப்போதும்
கதை சொல்லத் தொடங்குவாள்
அந்த ராஜா பெரும்பாலும்
பாட்டியின் அப்பாவாகத்தான் இருப்பார்
அவர் ஐந்து பெண்களைப் பெற்றிருந்தாலும்
ஆண்டியாகாத அரசன்
பாட்டியின் அம்மாவான
கிருஷ்ணம்மாளின் புருஷன்
பாட்டி இப்படியாக
தேர்ந்த கதைசொல்லியாக இருந்தாள்
அவள் அளவுக்கு
அம்மாவுக்கு கதை சொல்லத் தெரியாது
அம்மா சொல்லும் கதைகள் எல்லாம்
ஒரு ஊரில் ஒரு நரியாம்
அதோடு சரியாம்
என்பவையாகத்தான் இருக்கும்
அந்த நரியைப் பரியாக்கக் கூட
அம்மாவுக்குத் தெரியாது
தேர்ந்த கதையாடல் புரிவதற்கு
காலத்தோடு காலமாக
உறைந்து போய் வாழ வேண்டும்
கதைசொல்லல் என்பது
கடந்தகாலப் புதையல்களை
நிகழ்காலத்தில் தோண்டி
எடுத்துப் பார்க்கும் நிகழ்வு
நிகழ்வு என்பதை விட
அது ஒரு உற்சவம்
தோண்டத் தோண்ட
ஊறும் நீர் போல
சொல்லச் சொல்ல
விரியும் கதையும்
மணற்கேணிதான்.
புன்னகை
மொட்டுகள்
பூக்களாக அவிழ்வதைப்
பார்க்காவிட்டால் என்ன?
உன் இதழ்களில்
புன்னகை அவிழ்வதைப்
பார்த்திருக்கிறேன்தானே!
மொட்டுகள் பூக்களாக அவிழ்வது
உன் இதழ்களின் புன்னகைக்கு
உவமானம் எல்லாம் இல்லை
இரண்டும் சரிநிகர் சமானம்.
*
மழைப்பேச்சு
மழை இடியும் மின்னலும்
அச்சடிக்கும் புத்தகம்
ஒரு அச்சுப்பிழை கூட
இல்லாத புத்தகத்தை
வாசிப்பதைப் போலத்தான்
மழையை வீட்டின் முற்றத்தில் நின்று
ரசிப்பதும்
மழை நின்று பேசும்போது
வீதி எல்லாம் மௌனி ஆகும்
மழை ஆடும் நிகழ்ச்சியை
அவள் வீட்டின் குழாய்
தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தது
அவள் தன் உள்ளங்கைகளை மட்டும்
மழைக்கு நனைக்கத் தந்திருந்தாள்
பாட்டிக்கு மழை
ஒரு நாளை
ஞாபகம் வைத்துக் கொள்வதற்கான
குறியீடு
நான் பிறந்த அன்று
இப்படித்தான் மழை பெய்தது என்று
ஒவ்வொரு முறையும்
மழை பெய்யும்போது சொல்வாள்
அம்மாவுக்கு மழை
சம்பிரதாயத்தின் சட்டைப் பிடிப்பு
புழுங்கல் அரிசி தின்றால்
என் கல்யாணத்தன்று
மழை வரும் என்று
ஒவ்வொரு முறையும்
மழை பெய்யும்போது புழுங்குவாள்
அன்பே உனக்கு மழை என்பது
கவிதையின் தாட்சண்யம்
ஒருமுறை மழை வந்தபோது
மழை வந்தால்தான்
மண்ணும் மலராகி
வாசனை வீசுகிறது என்றாய்
மறுமுறை மழை வந்தபோது
மழை வந்தால்தான்
மண்ணும் தும்பியாகி
மழைத்தேனை உறிஞ்சுகிறது என்றாய்.
*
மருதோன்றி
மருதோன்றி மைலாஞ்சி
மயிலாஞ்சி மருதாணி
பசியத்தை சிகப்பாகாகும்
மருதாணி வேதியியலில்
உன் விரல்கள் மட்டும் எப்போதும்
அதிக மதிப்பெண்களுடன்
தேர்ச்சி பெற்று விடுகின்றன
பூக்கள் மேல்
அபிலாசை நிறைந்த உலகத்தில்
இலைகளில்
மருதாணிக்கு மட்டும் தான் மவுசு
அதனால் மனமுடைந்த
மருதாணிப் பூக்கள்
நெஞ்சில் கனல் சுமக்கின்றன
அவை சுமந்த கனலை
நீ உள்ளங்கைகளில்
பிரதிபலிக்கிறாய்
அவ்வளவே.
*
தவிப்பு
வண்ணத்துப்பூச்சியின் நிழலும்
வண்ணமிழந்துதான் விழுகிறது
வண்ணங்கள் பலவற்றைக் கண்டாலும்
விழிகளின் வண்ணங்கள்
கறுப்பும் வெள்ளையும்தான்
நிழல் வண்ணங்களைத்
தொலைத்து விட்டுத் தவிக்கிறது
பிம்பம் வண்ணங்களைச்
சுமந்து கொண்டு தவிக்கிறது
நிஜம் நிழலையும் பிம்பத்தையும்
தவிர்க்க முடியாமல் தவிக்கிறது.



