மோனிகா மாறன் கவிதைகள்

அந்த முதல் மழை
மழைக்காலப் பின்மதியம் ஒன்றில்
பசிய வண்ணப் பூக்கள் சொரியும்
காஞ்சிர மரத்தடியில்
நின்றிருந்தோம்
தூரத்து மேகங்கள் கருமைகொள்ள
வீசும் காற்றில்
இலைகளும் கிளைகளும்
சுழன்றசைய
தரையெல்லாம்
புழுதியும் சருகுகளும்
சுழன்றெழுந்து
மழைக்கு அச்சாரமிடுகின்றன
வெம்மை தணிந்து
இடியோசையுடன்
அந்த முதல் துளி மண்ணில் விழ
சடசடவென மழை பெருகி
மண்ணில் எழுகிறது
அந்த தூய வாசம்…
தைல இலைகளின் மணமும்
காட்டு வாகை மலர்களின் கள் மணமும்
புன்கு பூக்களின் கடும் வாசமும்
செம்மண்ணில் மழைகலந்த வாசமும்
கலந்து நாசிகளை நிறைத்த
அந்த முதல் மழை
நம் நேசத்தை போலவே
களங்கமற்ற தூயது!
நாம் சேர்ந்து பார்த்த அந்த மழை
இலைகளில் கற்களில்
பாறைகளில் மண்ணில்
வேர்களில் பொழிந்து
காடெங்கும் வழிந்து
வண்டல் மண்ணில்
மரத்தடிகளில்
சிறு சிறு ஓடைகளாய் சுழித்து ஓடியது
நம் காதலைப் போலவே
இன்று அந்த சுவடுகள் மட்டுமே.
*
கானக மணம்
முள் மரங்கள் அடர்ந்த
குறுங்காடு
வண்டல் மண் தெரியும்
தெளிந்த காட்டோடை
அடர்ந்த பசும்மூங்கில் புதர்கள்
அலையும் காற்றில்
கலந்து செல்கிறேன்
என் கானகதிற்குள்
செந்நிற இலைகளுடன்
சிறிய நுணா மரப்பூக்கள்
கரும்பச்சை இலைகளுக்குள்
கவிழ்ந்த மணிகள் போல
வெண்மையாய் பூத்த
மரமல்லிப்பூக்கள்
குருதிக் துளிகள் போல
மடல் மடலாய் ஒளிரும்
கல்யாண முருக்கை மலர்கள்
ஊதாவும் வெண்மையும்
கலந்து சின்ன சின்ன
கொத்துக்களாய் புங்கன் பூக்கள்
கடும்வாசத்துடன்
சின்ன குழல்கள் போன்ற
பசிய எட்டிப்பூக்கள்
சரம் சரமாய்
பூத்துச் சொரியும் கொன்றைப் பூக்கள்
இருண்ட கிளைகளில்
வாசமாய் மலர்ந்த
சிறிய சந்தன மலர்கள்
புதர்களில் கொடிகளில்
மஞ்சளாய் சிவப்பாய்
வெண்மையாய் படரந்த
பெயரறியா காட்டு புஷ்பங்கள்
சரிவின் ஓரத்தில்
அழகான காட்டு ஏரியில்
மலர்ந்த வெண்ணிற ஆம்பல் மலர்கள்
செந்நிற அல்லி மலர்கள்
இளஞ்சிவப்பு தாமரைப் பூக்கள்
ஏரியின் ஓரத்தில் புற்பரப்பில்
பூத்த குட்டி குட்டி
வண்ண மூக்குத்தி பூக்கள்
பூ நாகங்கள் மறைந்திருக்கும்
மணக்கும் தாழைப்புதர்கள்
தேன்சிட்டுக்களும்
மிளகாய் குருவிகளும்
ட்வீட் ட்வீட் என சிறகசைக்க
ஊரும் பச்சைப்புழுக்களும்
சேற்றின் வாசமும்
மனதை நிறைக்க
இயற்கையில் கலந்து
என் துயர்கள் மறைந்து
கவிதைகள் மலர்கின்றன.



