விஜி ராஜ்குமார் கவிதைகள்

எத்தனிப்பு
எதற்கான எத்தனிப்பு
இவையனைத்தும்?
முயற்சியின் முடக்கங்களில்
தேங்கி
திணறி
மீட்டுக்கொண்டு செல்லும்
ஒன்றாய் ஏதிருக்க இயலும் இங்கு?
நட்பா காதலா உறவா
காலமா
நானா
இல்லை இங்கில்லாத எங்குமிருக்கும்
ஏதோ ஒன்றா
ஒன்றில்லாத பலவா
நிகழ்தகவுகளின் இடுக்குகளில்
வழிந்தோடுகிறது காரணம்
அனைத்தின் வண்ணக்கலவையாய்…
நிரந்தரத்தின் கைகளின்
திசையறிய.
*
கரை
உன் சுட்டுவிரல்
நுனியில் தெரிந்தவையை
பார்த்துக்கொண்டே
உன் பின்னால்
நடந்தேன்.
மலைமுகடை
அதன் பிலத்தை,
தடாகத்தை,
பெருங்கடலை,
ஆகாயநீலத்தை,
அதன் இருளை,
சூரியனை அதன்
விழிச்சுருள்களை,
அனைத்தையும் பற்றிய
கேளாத கதைகளைக்
கூறிச் சென்றாய்.
அன்றலர்ந்த மழலையின்
விழிகளோடு
கண்டு அறிந்து கொண்டேன்.
வழியின் இடைபட்ட ஆற்றில்
நீ மட்டும்
நீந்தி
அக்கரைசேர்ந்து
என்னை நோக்கி
கை அசைக்கிறாய்.
நீந்துதல் என்பது
கண்டு மட்டும்
கைகூடுவதில்லைதானே.
எனினும்
நான் அதனை
கற்று வரும்வரை
காத்திருக்காமல்
நீ
செல்வதற்கான அத்தனை அசைவுகளும்
உன்னில் தோன்றுவதாக
எனக்குத் தெரிவது
இருவருக்கும்
இடையிலுள்ள தூரத்தாலா?
*
ஏகம்
ஏகவிதானத்தில்
அலைநெளிவென
எதிரொளிக்கிறது
காலநதி.
*
நடனம்
கலர் நிலத்து கிணற்றின்
கவலை
ஊற ஊற இறைக்கிறது நீரை.
அரை மணிக்கு ஒரு கவலை
கணக்கு.
நடுவில் வைக்கோல் தின்று
அதப்பிக் கொள்கிறது
மாடு.
ஆடி ஆடி இறங்கும் கவலையும்
அதக்கி
தின்னும் மாடுமாக
அங்கொரு நடனம்.
கயிற்றில் கால் வைத்து
ஆடுகிறான்
ஒரு கோவணதாரி.
*
அளவு
மனிதன்
அவ்வளவே.
பெரும் சிறுமைகளுடனும்
சிறு மகத்துவங்களுடனும்.



