விட்டில் பூச்சிகள் – லாவண்யா சுந்தர்ராஜன்

வீட்டு வெளிவாசலில் காம்பவுண்ட் கேட் ஓட்டி ஒரு ஜோடி செருப்பிருப்பதைப் பார்த்ததும், “வேணு வந்துட்டா போல” என்றார் பெரியவர். குலதெய்வ கோவிலுக்குப் பெரியவரும், அவர் மகன் விஷ்ணுவும் மருமகள் கனகாவும் போய்விட்டுத் திரும்பியிருந்தனர். பெரியவர் அப்படிச் சொல்லும் முன்னரே, வண்டியை விட்டு இறங்கியதுமே, கனகாவுக்கு ‘அங்கே என்ன செருப்பிருக்கிறதே… வெளித்திண்ணையில உட்கார்ந்திருந்த யாராவது மறந்து இங்க விட்டுட்டுப் போயிட்டாங்களா?’ என்று யோசனை வந்தது. அதற்கும் அடுத்த நொடியிலேயே பெரியவர் சொன்னதும் காதில் கேட்டது. அவர்கள் வந்திருக்கிற சமயம் பொழுதிறங்கியிருந்தது. மறுபடி கனகாவின் பார்வை காம்பவுண்ட் கேட் அருகே கிடந்த புதுக்கருக்கு நீங்காத செருப்பைப் பார்த்து மீண்டது. காம்பௌண்ட் என்றால் முன் வாசலுக்கும் வெளிவாசலும் இடையே அடைத்துக் கட்டப்பட்டிருந்த சுவர். முன்வாசல் தாண்டி, காம்பௌண்டு சுவர் உள்ளேயும் நான்கடி அகலத்துக்கு சிமெண்ட் போட்டு பூசிய வாசல். அது முற்றம் போல வான் நோக்கித் திறந்திருக்கும். அந்த முற்றத்தில் கேட்டுக்கு இரண்டு புறத்திலும் சிறிய வட்டம் இட்டது போன்ற இடத்தில் மட்டும் சிமெண்ட் பூசாமல் மண் கொட்டியிருக்கும். அதிலிருந்து ஜாதி மல்லிகைக் கொடி மேல் மச்சு சுற்றோடு இணைக்கப்பட்டிருந்த கொடியில் படர்ந்திருந்தது. கனகா நட்டு வைத்திருந்த செடி. அது முழுக்க மலர்ந்து வாசம் மூக்கைத் துளைத்தது. அருகில் நின்ற இன்னொரு செடி இரண்டு மூன்று மொக்கு விட்டிருந்தது. அது வேணு வைத்த செடி. ‘செடிக்குக் கூட யார் வீட்டாளுன்னு தெரிஞ்சிருக்கோ, கொடும’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள் கனகா.
வீட்டைச் சுற்றி கம்பௌண்ட் கட்டவில்லை. எல்லை முழுவதும் இழுத்துக் கட்டப்பட்ட வீடு. கிராமத்தில் அடிக்கணக்கு கேட்க ஆளில்லை. ஆனாலும் வம்புக்கென யாரோ பேச்சுவாக்கில் ‘வீட்ட இடமே விடாம எல்லை வரை கட்டீட்டிங்க’ கிண்டலாகக் கேட்டதற்கு பாப்பா என்றழைக்கப்பட்ட பெரிய வீட்டம்மா ‘அதெல்லாம் அடுத்தவங்க இடத்துக்கும் வீட்டுக்கும் ஒன்றர அடி விட்டுத்தான் கட்டியிருக்கு’ என்று அடித்துச் சொல்லியது கனகாவுக்கு இப்போதும் நினைவுக்கு வந்தது. வீட்டின் காம்பவுண்ட் சுவரில் நான்கடியில் இரும்புச் சட்டங்களால் ஆன கேட் இருந்தது. காம்பௌண்டுக்கு வெளியே அந்தச் சுவரை ஒட்டி கேட்டுகு இரண்டு புறமும் வழிப்போக்கர்கள் இளைப்பாறவோ சாயுங்காலம் காற்றாட அமரவோ கருங்கல் பலகை இட்ட திண்ணைகள் இருந்தன. அந்தத் திண்ணைக்கும் கேட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளடங்கி யார் கண்ணிலும் படாதவாறு அந்தச் செருப்புகள் அமைதியாகக் கிடந்தன. கேட்டுக்கு முன்புறம் நான்கடிக்கு நான்கடியில் இருந்த சிமிண்ட் வாசலில் காலையில் வேணு போட்டிருந்த கோலம் பளீரென கண்ணுக்குள் வந்து மீண்டது. ஒரு வருடமாக அலங்காரமற்ற யானை முதுகு போல வெறும் வாசலாகக் கிடந்தது. நான்கு நாளைக்கு முன்னர்தான் மாமியாரின் தலை திவசம் முடிந்திருந்தது. திவசம் முடியும் வரை பெரிய கோவில், குலக் கோவில், மலைக் கோவில் எதற்கும் செல்லாமல் இருந்தவர்கள் இன்றுதான் வருடம் திரும்பிய பின்னர் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வந்திருந்தனர். குலக் கோவில் அருகே இருக்கும் பிற சிறு தெய்வங்கள், கோவில்கள் நான்கைந்துக்கும் சேர்ந்து போய் விட்டு வரும் வழியில் ‘பொழுதெறங்கும் முன்ன போய் வீட்டில் விளக்கு வைக்கனும்’ என்று கனகா சொல்ல எங்கும் வண்டியை நிறுத்தாமல் வேகமாய் வந்திருந்தார்கள்.
வாசல் கேட் இரும்புச் சட்டங்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட இரண்டு கதவுகளால் ஆனது. அந்த இரண்டையும் இணைத்திருந்த கீரிடம் போன்ற கொண்டியைத் திறந்த போது எழுந்த சத்தத்திற்கு வேணு உள்ளிருந்து எட்டிப் பார்த்தது. வாசல் கேட் தாண்டி உள்ளிருந்த இரண்டடி தெரிந்த வெளி சிறுமுற்றம் தாண்டி அரையடி உயரத்துக்கு சிமெண்ட் தளம் போட்ட ஒட்டுத் தாழ்வாரம். அது வீட்டின் முன்னழகை உயர்த்திக் காட்டியது. அந்தத் தாழ்வாரத்தின் இடப்புறம் சிறிய திண்ணை, வலப்புறம் மாடிப்படிகள். மேற்குப் பார்த்த வீடு தலைவாசல் முதல் பின் வாசல் வரை ஒரே நேர் கோட்டில் நிலைக் கதவுகள். பெரியவர் வீட்டினுள்ளே சென்று வீட்டின் கோவில் பகுதிக்கு இருந்த சுவரோடு ஒட்டிய அலமாரி அருகே சென்று, மூடிய கோவில் கதவுகளுக்கு முன் நின்று வணங்கினார். பின்னர் வெளியே வந்து, வெளி முற்றத்தில் மாடிப்படிகளை ஒட்டியிருந்த பகுதியில் இருந்த குழாயைத் திறந்து கால்களைக் கழுவிக் கொண்டு தாழ்வாரத்துக்கு வந்தார் “அப்பா முருகா” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய துண்டை எடுத்து திண்ணையை ஓங்கியடித்தது அங்கிருக்கும் எதையோ துரத்துவது போன்ற பாவனையைத் தந்தது. அங்கிருந்து கிளம்பிய மென்புழுதி மாலை ஒளியில் ஒளிர்ந்த பொன் துகள்கள் போலெழுந்தது. அப்படியே திண்ணையில் அமர்ந்து கொண்டவர் வெளியே வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திலிருந்து மாட்டை ஓட்டிக் கொண்டு வேகமாக வந்த வேலாண்டியிடம் “மாட்டக் கொண்டாந்தா கட்டிப் போட்டுட்டுப் போன்னு இரண்டு நாளைக்கு முன்னவே சொன்னேன்ல, நேத்து வாழக் கன்ன போட்டு மிதிச்சிட்டது பாரு” என்று சத்தம் போட்டார். வேலாண்டி ஒன்றும் சொல்லாமல் பயந்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான். அவனுடைய பசுமாடு அவனோடு தலை ஆட்டி ஆட்டி அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்துச் சென்றது. பசுமாட்டின் மணிச்சத்தம் மெல்லத் தேய்ந்து அடங்கியது. அவன் போன பின்னரும் புறு புறுவென்று எதையோ பேசிக் கொண்டிருந்தார் பெரியவர்.
தாழ்வாரத்தைத் தாண்டி பட்டாசாலைக்கு நடுவே சிறிய அறை போன்ற அமைப்பு. அதில் ஒரு மரப்பலகை. மதிய நேரத்தில் பெரியவர் அதில்தான் படுத்துக் கொள்வார். வீட்டை மூன்றில் ஒரு பகுதியைத் தடுத்து வலப்புறம் பட்டாசாலையும் இடப்புறம் கோடவுனும் இருந்தன. மதிய நேரத்தில் வீட்டின் முன்னறையில் படுப்பது அவருக்கு கோடவுனுள்ளே இருந்த கழிவறைக்குச் செல்ல வசதியாக இருந்தது. வெளியிலிருந்து வீட்டுக்குள் வராமலேயே கோடவுனுக்குச் செல்ல தாழ்வாரத்திலிருந்து திறக்கும் படி பெரிய இரும்பு சுருள் கதவு இருந்தது. பட்டாசாலையில் ஒரு மூலையில் ஒரு சிறிய படுக்கையறை இருந்தது. அதற்கு நேர் எதிர் மூலையில் சமையல் அறையும், படுக்கையறைக்கும் சமையலறைக்கும் இடையில் சாப்பாட்டு மேசையும் இருந்தது. படுக்கையறைச் சுவரை ஒட்டி கிழக்கு பார்த்த பெரிய அலமாரியில் சாமி படங்கள் எல்லாம் மாட்டப்பட்டிருந்தன. பெரியவர் வணங்கிச் சென்றதும், அலமாரிக் கதவுகளைத் அகலத் திறந்து வைத்தாள் கனகா, விஷ்ணு கூட நின்றான். பெரியவர் கும்பிட்டது போலவே கை கூப்பிவிட்டு நகர்ந்தனர். விஷ்ணு வெளியே என்ன சத்தமென்று பார்க்கப் போனான். கனகா சமையலறையில் நுழைந்தாள். அவளைப் பார்த்ததும் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த வேணு இன்னும் பரபரப்பாக அதனைச் செய்தாள். “இருட்டும் முன்னாடியே வீட்டைத் துடைக்கணும், நாளை மாசப்பிறப்பு இல்ல” என்றாள் மருமகள். “ஆமாம் பாப்பா, அதான் சுருக்க வந்தேன்” என்று தனது வேலைகளைத் தொடர்ந்தாள் வேணு. நெடுநெடுவென உயரம், ஊளைச் சதை ஒரு இடத்திலும் இல்லாத இறுக்கமான கை கால்கள் வேணுவுக்கு. கருங்கல் நிறம். வேலையிலும் சுறுசுறுப்பு. நிமிட நேரம் நிற்க மாட்டாள். மாமியார் தவறும் முன்னரே வீட்டில் வெளி வேலைகள் செய்ய வருவாள். வயலில் வேலையும் செய்வாள்.
சமையலறையில் ஒரு நோட்டம் விட்டு விட்டு, அதற்காக வந்தது போல் இல்லாமல், “முகம் கழுவிட்டு வெளக்கேத்தணும்” என்று சொல்லிக் கொண்டே பின்வாசலை நோக்கி நடந்தாள் கனகா. பின்வாசல் தாண்டியும் ஒரு குளியலறையும் கழிவறையும் உண்டு. பின் வாசலிருந்து தோட்டத்துக்குச் செல்லும் வழியை, தகரக் கதவு இருக்கும் அதை எப்போதுமே பூட்டுவதில்லை. உள்தாழ்ப்பாளில் இரும்புக்கம்பியைக் கொக்கி போல் வளைத்து அதனைப் பூட்டு போல பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். கனகா வேகமாய் முகம் கை கால்களைக் கழுவிக் கொண்டு வெளியே வந்த போது, காலையில் துவைத்து உலர்த்திய துணிகளை மஞ்சு மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அவள் காலையில் வரும் போதே பின்கொல்லைத் தகரக் கதவை வெளிப்புறமாகச் சாத்தி வைத்து விட்டுப் போய்விடுவாள். கனகா முகம் கழுவிக் கொண்டு வந்துவிட்டாளா என்று பார்க்க வந்த விஷ்ணு, “மஞ்சு வந்திருக்கு. கொஞ்சம் காப்பிக்குப் பால் அடுப்பில வை, எல்லோருக்கும் காப்பி கலக்கலாம்” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தான். கனகா கழிவறையில் முகம் முழுக்க முத்து முத்தாய் தண்ணீர் சொட்டி வெளியே எட்டிப்பார்த்து“நான் காப்பி கலக்கிறேன்” என்று சத்தமாக்கச் சொன்னாள். அவள் வெளியே வந்து துணிக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த துண்டில் முகத்தை வேகவேகமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள். விஷ்ணு குளியலறை உள்ளே சென்று தான் கை, கால் முகம் கழுவத் தொடங்கினான். விஷ்ணு பாலை அடுப்பில் ஏற்றச் சொன்ன அந்த நொடியிலேயே, வீடு கூட்டிக் கொண்டிருந்த வேணு அதை அப்படியே போட்டு விட்டு அடுப்பில் பால் பாத்திரத்தை ஏற்றினாள். குளிர்பதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து ஊற்றி வைத்தாள். கனகா அடுக்களைக்கு வந்தவுடன் அடுப்பருகிலிருந்து நாசூக்காக நகர்ந்து வெளியே சென்று கூடத்தைக் கூட்டத் தொடங்கினாள். காப்பியைக் கலக்க பெரிய குண்டான் போலிருந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். மஞ்சுவுக்குத் தனியாக கலந்து வெளியே பின்வாசல் திண்ணையில் வைத்துவிட்டு வந்தாள் கனகா. வேணு காப்பி குடிப்பதில்லை. மாமனாருக்கு சர்க்கரை இல்லாமல் கலந்த காப்பியை விஷ்ணுவிடம் கொடுத்து விட்டாள். பின்னர் தனக்கும் கணவருக்கும் கலந்தாள்.
காப்பியை எடுத்துக் கொண்டு தாழ்வாரத்தை ஒட்டி வீட்டுக்குள் போக கட்டியிருந்த படிக்கட்டுத் திண்டில் அமர்ந்தான் விஷ்ணு “யப்பா, இப்படி எப்பப் பாரு எல்லோரையும் கரிச்சிக் கொட்டாத, வேலாண்டிய என்னதுக்கு அந்த சத்தம் போடற? நாங்களும் இங்கில்ல. நாளப்பின்ன பாக்க கேட்க ஆளு வேணும். நாங்க கூடவே இருந்தா பரவாயில்ல” என்றான்.
“ஆமா, எவனோ வந்துப் பாக்கறான். அன்னிக்கி அப்படிதான் மாட்ட உட்டுப் போயிட்டான். காய்கறி செடி முச்சூடும் அழிச்சிட்டுப் போயிடுச்சி, கேட்க நாதியில்ல. பக்கத்திலிருந்து பண்ணை வெளச்சலுக்கு நஷ்டமில்லாத, உழவோட்டாத வய பச்சய மட்டும் மேச்சி கூட்டிட்டு போறதில்ல. எல்லாருக்கும் கிறுக்கு ஏறிப் போச்சு. அதான் மழ கூட பெய்யறதுல்ல” என்று இடி இடியென்று பிடித்துக் கொண்டார். அவர் கோபக் குரல் பொரிந்து அடங்க மறந்து சமையல் அறை வரை கேட்டது.
“இந்த வயசுல இவ்வளவு கோவம் ஆவதுய்யா. கொஞ்சம் கொறச்சிக்க. அம்மா இருந்தவரை நீ கோவமா வேலையாளுகள ஓட்டி உட்டாலும், அது நயந்து பேசி ஆளுங்கள காட்டு வேலக்கி கூட்டியாரும். இனி இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா வீட்டயும் காட்டயும் யாரும் சீண்டக் கூட மாட்டாங்க” என்றான்.
தாழ்வாரத்துக்கும் பட்டாசாலைக்கும் நடுவில் அந்தச் சிறிய முன்னறைக்கு தடுப்பு இல்லாமல் இரண்டடி சுவர் எடுத்து மிச்சம் முழுக்க கிரில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘அந்த கிரில்லில் மாட்டியிருந்த பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியில் தலைவாரிக் கொள்ளலாமா, பொழுது இறங்கிடுச்சி இப்பப் போய் தலைய சீவுறியா என்று மாமனார் கோபம் கொள்வாரா’ என்று யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த கனகாவும் சேர்ந்து கொண்டாள் “மாமாவுக்கு எப்பவும் இந்தக் கோவம்தான். ஆளுங்ககிட்ட நேக்கா பேசினாதானே காலம் ஓடும். பழைய காலம் மாறி இல்ல, இப்ப எல்லாம் யார் பொறுத்துப் போவாங்க. இரண்டு நாள் முன்ன காலைல அந்த மாரியாயிய அப்படித் திட்டி விட்டாரு” என்று ஏதோ எடுத்துக் கொடுத்து விட்டு, பின்வாசல் சென்று தலை வாரிக் கொள்ளலாமா என்று யோசித்தாள்.
அன்று காலையில் நடந்த விஷயத்தை யோசித்துப் பார்த்தார் பெரியவர். “காலம் மாறுனா என்ன? யாரோட கோலம் மாறுது இங்க? அந்த மாரியாயிக்கு என்ன வேதியோ தெரியல, விட்டா நம்ம வீட்டுக்குள்ளயே பேண்டுட்டுப் போயிடுவா. இந்த இன்னும் கொஞ்சம் தூரம் போனா கவுர்மென்ட் கக்கூஸ் கட்டி வைச்சிருக்குல? அங்க போவ வேண்டியதுதானே. வீட்டு செவுத்து பக்கம் நாறடிச்சிடுச்சி. சும்மா உடச் சொல்றியா?”
“அவதான் எனக்கு வவுத்த கலக்கிட்டதுன்னு சொன்னாள்ல?” என்றான் விஷ்ணு.
“ஆமா, சொன்னா… நொன்னா… டவுனுல அப்படி கண்ட இடத்துல போவ விட்ருவாங்களாக்கும்?” என்று மறுபடியும் கோபப்பட்டார் பெரியவர்.
பேசி விஷயத்தை வளர்க்க விருப்பமில்லாதவர்கள் போல அமைதியானார்கள் விஷ்ணுவும் கனகாவும். பெரியவர் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கோபமாய் வெளியே சென்றார். அரசமரம் வரை சென்று கொஞ்ச நேரம் காற்றாட அமர்ந்து விட்டு வந்தால் சரியாகி விடுவார் என்று நினைத்துக் கொண்டான் விஷ்ணு. கனகா வேகமாய் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ள படுக்கையறைக்குச் சென்ற போது முன்னறையில் தரையீரம் காலில் சில்லிட்டது. பட்டாசாலை, சமையலறை முன்னறை முழுவதும் துடைத்திருந்தாள் வேணு. படுக்கையறைக்குள் சென்றவள் அது வழக்கம் போல துடைக்கப்படாமல் இருந்ததைப் பார்த்தாள். வேணு படுக்கையறைக்கு மட்டும் எப்போதுமே வர மாட்டாள். மணி ஆறு ஆக ஐந்து நிமிடங்களே இருந்தது. வேணு ஏதோ சமைலறையில் இட்லி ஊத்தி வைக்கும் வேலையாக இருப்பது போல் இருந்தது. சாயங்காலம் வேலைக்கு வரும் போது இட்லிக் கொப்பரையில் இட்லித் தட்டில் மாவை ஊத்தி அடுப்பின் மேல் வைத்துவிட்டு வேணு சென்றுவிடுவாள். அதன் பிறகு சாப்பிடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் அதை பெரியவர் பற்ற வைத்து விடுவார். அதுதான் எப்போதும் வழக்கம். விஷ்ணுவும் கனகாவும் வந்திருந்தாலும் வேணு வழக்கம் போல இட்லியை ஊத்தி வைத்து விட்டு இட்லி கோப்பரையை அடுப்பில் வைத்துவிட்டு கிளம்பத் தயாராக நின்று கொண்டிருந்தாள் வேணு. இட்லி மாவோடு கரண்டியை சாமான் கழுவுமிடத்தில் போட்டிருந்தாள். விளக்கேற்றி விட்டுச் சமையலறைக்கு வந்த கனகா, “நான்தான் இருக்கேனே… அப்பறமா நானே இட்லி ஊத்தி வைச்சிப்பேனே?” என்ற போது வேணுவின் முகம் சுருங்கியது. “இட்லி சாம்பாருக்கு காய்கறி எல்லாம் வெட்டி வைச்சிட்டுப் போக முடியுமா?” என்றதும் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அரிவாள்மனையை எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே போனாள் வேணு. சின்ன வெங்காயத்தை ஒரு பிடி எடுத்துக் கொண்டு அதை உரித்து நறுக்க ஆரம்பித்தாள். வேறு எதையோ கழுவப் போன போது கரண்டியோடு அரையிட்லி அளவு மாவு இருந்தது தெரிந்தது ஆதங்கமாக இருந்தது கனகாவுக்கு.
“என்ன வேணு, கரண்டில இவ்வளவு மாவோட வெளக்கப் போட்டுட்ட, கொஞ்சம் வளிச்சிருக்கலாமில்ல?”
வேணு நொடி நேரம் பட்டென்று விழித்துப் பார்த்தாள். பரபரப்பாய் அவள் பெரியவர் அமர்ந்திருக்கும் திசை நோக்கிப் பார்த்தாள். நாற்காலி அரூபமாக அவராகவே மாறி வேணுவை முறைத்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. கனகா பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்து வேணு நொடி நேரத்தில் முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டாள். அன்று பஞ்சாயத்தில் மாரியாயி, “வேணு அக்காவே இனிமே பெரியவருக்கு சமைச்சிற வேண்டியதுதான்” என்று பெரியவர் காதுபடச் சொன்னதும் அவர் முகத்தில் கடுகைப் பொரித்தெடுத்து விடலாம் போல கோபக்கனல் திரண்டதை நினைத்தால் இப்போதும் திடுக்கிட்டது கனகாவுக்கு. நான்கு வருடங்களுக்கு முன் ஒருநாள் கடலை மூட்டைகளை வயலிலிருந்து பெரியவர் வீட்டுக்குக் கொண்டு வந்து போட்டுவிட்டு கழுத்துப் பிடித்துக் கொண்டதைப் பற்றி யாரிடமோ சொல்லியதைக் கேட்டு ‘நான் வேணும்ன்னா எண்ணெய வைச்சித் தேய்ச்சி கழுத்துப் பிடிப்ப ஒரு கை பாக்கட்டுமா?’ என்று சொன்னதை நினைத்தாலே ஜிவ்வென்று இருக்கும் எப்போதும். அப்படி இருந்தவர்தானே கடந்த சில மாதங்களாக எதற்கெடுத்தாலும் கடுகடுப்பு. கனகாவின் மாமியார் படுக்கையில் விழும் வரை வேணுவின் தேவை பின் வாசலோடு முடிந்து போகும். பாத்திரங்கள் எடுத்துப் போட்டால் தேய்த்து வைப்பாள். மாவு இடித்துத் தர, எண்ணெய் செக்கு போட இப்படி மேல் வேலை எல்லாம் செய்வாள். தோட்டத்து வேலை எதையுமே தட்டாமல் செய்வாள். பெரியவர் மனைவிக்கு நிரிழிவு நோய். சர்க்கரை அளவு ஏறிப் போய் கை கால்களில் வெகுவாக வலி எடுத்த போது தைலம் தேய்க்கச் சொல்லித்தான் வீட்டுக்குள்ளே அவள் வந்தது. அதன் பின்னர் மாமியார் படுக்கையோடு சரிய, அவரைத் தூக்கிக் குளிப்பாட்ட, உணவு கொடுக்க என எல்லா இடத்திலும் வேணு. மாமி இறந்த பின்னர் வீடு கூட்டிப் பாத்திரம் கழுவி, நாள் கிழமை என்றால் வீட்டைச் சுத்தம் பண்ணித் தர எல்லாம் செய்ய கனகாதான் வேணுவிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தாள்.
வேணு கல்யாணம் பண்ணி வந்த அதே வருடத்தில் கனகாவும் பெரியவர் வீட்டிற்கு மருமகளாக வந்தாள். அப்போது பெரியவருக்கு ஐம்பது வயது இருக்கும் சோள மூட்டை அவர் வீட்டிலிருந்து வண்டிக்குப் பறக்கும். இத்தனைக்கும், மூட்டை ஏழுபத்தைந்து, நூறு கிலோ இருக்கும். ஒத்தையாளாக வீட்டு குடவுனிலிருந்து மாட்டு வண்டியில் ஏற்றிவிடுவார். பண்ணையில் வேலை செய்யும் யாருக்கும் அவர் அளவு பலமோ பாங்கோ இருக்காது. மாட்டு வண்டியில் ஏறிச் சந்தைக்குச் செல்வது ஏதோ ராஜா தேர் ஏறி நகர்வலம் செல்லக் கிளம்புவது போலிருக்கும். வேணு அவரை வியந்து பார்க்காத நாளே இல்லை. “கல்யாணம் பேசி முடிவானதுமே படிச்ச பொண்ணு டவுனிலேயே வளர்ந்த பொண்ணு இங்க வந்து சிரமப்படக் கூடாதுன்னு தோட்டத்துல பாத்ரூம் கட்டச் சொன்னாரு. அப்படி ரூமு கட்டு முன்ன வெளிய போவ காட்டுக்கு விடியக்காத்தால போயிட்டு வந்தா நாள் முச்சூடும் சுண்டுவிரல நிமித்த கூட நேரமிருக்காது. இப்ப இப்படி கிடக்கிறேனே” என்று படுக்கையில் கிடந்த தருணத்தில் பெரியவர் பொண்டாட்டி சொல்லிப் புலம்பும் போது வேணுவுக்கு பெரியவர் மீது மரியாதை பல மடங்கு கூடியது. சபையில் வந்து பஞ்சாயம் பண்ணும் பாங்கு, பெண்டாட்டி படுக்கையில் கிடந்த போது சாப்பாடு வடித்து ஊட்டி விட்ட பெருந்தன்மை, மலம் ஜலம் பண்டுவம் பார்த்தது எல்லாம் வேணுவுக்குப் பெரியவர் அன்பைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனாள். அந்தப் பெருமையை நினைத்து நினைத்து ஜனம் அவர் மனைவி இறந்த போது பேசியதைப் பார்த்து ‘இன்னும் அந்த அம்மா அந்த வீட்டிலேயே இருந்தாலாவது அந்த வீட்டிலுள் இங்குமங்கும் நடக்கலாம் இனி என்ன ஆகுமோ?’ என்று நினைத்து அழுதாள். கனகா வீட்டு வேலை செய்யச் சொல்லி அந்திஆளு* கூலி குடுத்துடறேன் என்று சொல்லிக் கேட்டவுடன் மனசெல்லாம் நிறைந்தது போல சிலர்த்துக் கொண்டாள். மறுபேச்சே பேசாமல் ஒத்துக் கொண்டாள். ‘அது இந்த மாரியம்மா மாதிரியான ஆட்களுக்குக் கண்ண உறுத்துது’ என்று நினைத்துக் கொண்டாள்.
‘மாரியம்மா சில வருடங்களாகவே பெரியவர்கிட்ட ஒரு தினுசாத்தான் நடந்துக்கிறா, அவளுக்கு என்ன நோக்காடோ’ என்று யோசித்த வேணு மனதில் சில வருடங்களுக்கு முன் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை தளுவைக்குச்** சென்ற போது நிகழ்ந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. கரட்டு பெருமாள் மலைக்கு பெரியவர் குடும்பம் ஒன்பது படி அரிசி கொடுத்து தளுவைக்கு ஏற்பாடாகி இருந்தது. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை ஊர் ஜனமே திரண்டு மலை ஏறுவார்கள். பெரியவர் பொண்டாட்டிக்கு அப்போதே கொஞ்சம் உடம்பு சரியில்லாமல்தான் இருந்தது. மலையேறத்தான் முடியாது. ஆனால், வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வார். பெரியவர் மட்டும் மகன் மருமகளோடு வந்து தளுவை போட்டார். கனகா மலையேறத் தடுமாறி ஏறிய சமயம் தண்ணீர்க் குடம் தூக்கிக் கொண்டு மாரியம்மா வேகமாக வேகமாக மேலேயே சென்று விட்டாள். தண்ணீர் தவிர அரிசி பிற பொருட்களை வேணு தெரு ஆட்கள்தான் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலே செல்லும் போது கனகாவுக்கு விஷ்ணு இது தான் ஆணப்பழம்*** என்று காட்டினான். அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டவன், கனகாவுக்கு ஒன்றையும் கூடவே வந்து கொண்டிருந்த பலருக்கும் கொடுத்தான். வேணுவின் கையில் இரண்டு பழத்தை வைக்கும் போது அதை கை படாமல் நாசூக்காகக் கொடுத்தான். ஆணப்பழம் பழுக்கும் காலமல்ல என்றாலும், அதிலிருக்கும் பழுக்காத பழங்களை அங்காங்கே பறித்து எல்லோரும் வாயில் போட்டுக்கொண்டு நடந்தார்கள், அப்படியே பழங்கள் பழுத்திருந்தாலும் குரங்குகள் அதை விட்டு வைக்காது. ஆண இலை எலும்பிச்சை போல வாசம் வருவதாக சொல்லிக் கொண்டே நடந்தாள் கனகா. ‘இந்த அக்காவுக்கு எப்படித் தான் எதப் பார்த்தாலும் இப்படியொரு யோசனையோ, சாணுபூண்டுச்**** செடியப் பார்த்து இதோட சின்னச் சின்ன இதழ் எல்லாம் பாரு மார்கழி மாசம் வாசல்ல வரையிர தாமரக் கோலம் போல இல்லைன்னு சொன்னிச்சி. கூடவே தாமர கோலத்துக்கு கூட ரோஸ் கலர் அடிப்போம். ஆனா, இந்த பூக்கலர் மெலிசான மஞ்சள் நிறமா இருக்கு. அதனால என்ன பாக்க மஞ்ச தாமரப்பூ கோலம் போல இருக்குன்னு சொல்லுச்சி, அப்படி ஒரு சிரிப்பு பாரு அந்த அக்காவுக்கு’ என்று யாரோ கிண்டலடித்ததை வேணு காதில் கேட்டு ரசித்துக் கொண்டே நடந்ததும் அந்த நேரம் பார்த்து கேளா முள்ளு இழுத்து சேல கிழிஞ்சி, கால் வரை கோடு போட்டதும் நல்லா நினைவிருக்கு. ‘அந்த கால்ல ரத்தம் வந்தப்ப பெரியவர் சாணப்பூண்ட கசக்கி கால்ல ஊத்தின அப்ப மாரியம்மா மூஞ்சி போன போக்க பாக்கனுமே. சோறு பொங்கி குழம்பெல்லாம் எறக்கி தளுவ போட வேட்டில சோத்த எல்லாம் கொட்டி குழு பறிச்சி சாம்பார ஊத்தி உருண்ட பிடிச்சி பெரியவர் சாமி கூப்பிடும் முன்ன அவ தன்னோட தனி பொங்க பானைய கொண்டாந்து வைச்சிட்டு, பண்ண கூத்து யாராலையும் மறக்க முடியுமா, பெரியவர் வீட்டு சொத்த மட்டும்தான் சாமி ஏத்துக்குமா? தண்ணி தூக்க நாங்க வேணும், எங்க பொங்கல் மட்டும் வெளியில இருக்கணுமான்னு கேட்டு ஆட்டமா ஆட, சாமி விஷயத்துல வழக்கமா பண்றது தானே, இந்த வருஷமென்ன புதுசா உனக்குக் கேள்வி என்று பெரியவருக்கு பரிந்து கொண்டு வந்து எல்லோரும் அவளைத் திட்டிச் சமாதானம் சொல்லியும் கேட்க, அப்ப இருந்தே இந்த மாரியம்மா பெரியவரோட வம்பு இழுத்துக்கிட்டே கிடக்கூறா. அதோட விட்டாளா, கெட்ட ஜென்மம் அவ, கருப்பண்ண சாமிக்குப் போய் வெட்டிப் போட்டு வந்த நாலாம் மாசம் பெரியவர் பொண்டாட்டி படுக்கையில விளுந்துச்சி, அப்படியே இரண்டே மாசத்துல செத்தும் போச்சு.’ என்று நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தாள் வேணு.
இரண்டு நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் இந்த குண்டு பல்பு வெளிச்சத்துக்கு வெளியிலிருந்து வண்டு, பூச்சிகள் வந்து வந்து சுற்றிக் கொண்டிருந்தன. சில பூச்சிக்கள் அங்கே எண்ணெய் தடவி தொங்க விடப்பட்டிருந்த தாளில் ஒட்டிக் கொண்டன. இன்னும் சிலது தரையில் விழுந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. வெளியில் வெளிச்சம் இல்லாமல் வீட்டுக்குள் பளீரென்று எது இருந்தாலும் புரட்டாசி மாதம் இப்படித்தான். இரண்டு நாள் மழை பெய்தால் ஈசல் புற்றிலிருந்து படை எடுக்க ஆரம்பிக்கும். “புரட்டாசி பெருமழைங்குற பேச்செல்லாம் முன்ன காலத்தோட போச்சு” என்று சொல்லிக் கொண்டே, “இந்த லைட்டப் போட்டு ஏன் சாவடிக்கிறீங்க?” என்று சலித்துக் கொண்டபடி உள்ளே வந்தார் பெரியவர். அவர் இழுத்து சாத்திய பின் கேட் கிரில் குறுக்குக் கம்பிகள் இணைந்து தெரிந்த வடிவம் மனிதர்கள் சிலர் நிற்பது போலவே இருந்தது. அவை அனைத்தும் தன் கைகளை தலைக்கு மேலே தூங்கி வணங்குவது போலிருந்தது. பெரியவர் பஞ்சாயத்தில் தீர்ப்பை வழங்கும் போது பலரும் அவரைப் பார்த்தால் தலைக்கு மேல் கையை உயர்த்தி வணங்குவதை அவை நினைவூட்டின. ‘அந்த வீட்டில் இந்த கிரில் கதவுகளில் அந்த உருவங்கள் அவருக்கு மரியாதை கொடுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு உருவம் தனது’ என்பது போல நினைத்துக் கொண்டாள் வேணு. அவளுக்கு அப்படி நினைக்கவே பழனி பஞ்சாமிர்தம் தரும் தித்திப்பாக இருந்தது. மனதுக்குள் அவள் சிரித்துக் கொண்டது முகப் பளபளப்பில் வெளிப்பட்டது. அவள் கைகள் மட்டுமே வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்தன. பெரியவர் வெளியில் வந்திருந்த சிலரோடு வழக்கம் போல ஏதோ நகைச்சுவையாக ஏதோ பேச, எல்லாரும் கொல்லென்று சிரித்தனர். அதை வேணுவும் கேட்டுக் கொண்டே வீட்டில் ஓடிக்கொண்டிருந்த சிறு வண்டின் பரபரப்பை பூரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
***
ஒரு வார விடுமுறை எடுத்துக் கொண்டு வார இறுதி, திங்கள் மூன்று நாட்கள் ஊர் சுற்றி விட்டு செவ்வாய்க் கிழமை ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர் கனகாவும் விஷ்ணுவும். நாமக்கல் தாண்டியதுமே ஊர் வாசனை வீசத் தொடங்கி விட்டது. கன்னங்கள் பூத்து நிற்கும் கன்னிப் பெண் போல வசந்த காலத்தை வாதநாராயண பெண் மரம் அழுக்கு மஞ்சள் நிறத்தில் பூப்பூத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. கடந்த முறை துறையூரிலிருந்து திரும்பும் போது ஊருக்கு மிக அருகில் வரிசையாக பாதி மரத்தில் முளைத்து பெரிய அளவு பசுங்கிண்ணம் போல கிளை படர்ந்திருந்த வாதநாராயண மரங்களைப் பார்த்து ‘ஆண் மரத்த மட்டும் வெட்டுங்கடான்னு சொன்னா எவன் கேட்கிறான்?’ என்றொரு வசவு சொல்லித் திட்டினார் பெரியவர். அப்போதுதான் கனகாவுக்கு ஆண் வாதநாராயண மரம் பூக்காது என்று தெரிந்தது. தழைச்சத்துக்கு வாதநாராயண, வேப்ப மரத் தழைகளெல்லாம் வெட்டி வயலில் போட்டு தண்ணீரில் நன்கு ஊற விட்டு மிதிப்பார்கள். அப்படி வெட்டப்பட்டு தழைத்திருக்கும் வாதநாராயண மரங்களில் சிலது பூக்கும் மரமென்று கனகா கேட்டுத் தெரிந்து கொண்டாள். இப்போது சாலை நெடுகப் பூத்திருக்கும் மரங்களும் இடையிடையே ஆண் வாதநாராயண மரங்களும் இருந்தன. சாலையோர மரங்கள் நன்கு உயரமாய் வளர்ந்து கிளை பரப்பியிருந்தன. அவர்கள் ஊரை ஒட்டியிருக்கும் வாதநாராயண மரங்கள் கவிழ்ந்த குடை போல் இல்லாமல் முழுமரமாய்ப் பூரித்து நின்று கொண்டிருந்தன. ‘மரத்தில் கூட ஆண் பெண் மரம் இருக்கே இதெல்லாம் இயற்கையோடு அதிசயம்தானே!’ என்று வியந்தபடி கனகா பயணம் செய்து கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும் போது வேணு வீட்டுக்கு வந்திருப்பது போலொரு அடையாளமாய் வாசல் கேட் வெளியே அவள் செருப்பிருந்தது. அது இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவள் பார்த்த போது அது கிடந்த ஒழுங்கு இப்போதில்லை. அவசரமாகக் கழற்றி விட்டுச் சென்ற கோலத்தில் வாசல் கேட் நோக்கி, வழக்கமான இடத்திலிருந்து சற்று முன் நகர்ந்து ஒன்றும் அதற்கு எதிர்ப்புறம் திரும்பி இன்னொன்றும் கிடந்தன.
உள்ளுக்குள் நுழைந்ததும் கோவில் மாடத்தில் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள் கனகா. அவள் உள்ளுக்குள் ஏதோ ஒன்று அதிர்ந்தது. சமையலறையிலிருந்து வெளியே வந்த வேணுவின் முகம் ஒருபுறமாய் வீங்கி வடிந்திருந்தது. அந்த முக அமைப்பை மீறி சிறு அதிர்ச்சி வேணுவின் முகத்தில் தெரிந்தது. பொதுவாய் கனகாவின் முகத்திலிருந்து அவர் உணர்ச்சிகளை கொஞ்சம் மெனக்கெட்டால் படித்துவிட முடியும். ஆனால், வேணுவின் முகத்திலிருந்து அவள் என்ன யோசிக்கிறாள் என்பதைக் கணக்கிட முடியாது. ஆனாலும் இன்று கனகாவையும் அவள் கணவனையும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள். அவளுடைய முகம் காட்டிய அதிர்வலையை “சொல்லியிருந்தா உப்புமா சேர்த்துப் போட்டிருப்பேன்” என்று சொல்லிச் சமாளித்தாள். அடுப்பில் கோதுமை ரவையை வறுத்து விட்டிருந்தாள். “என்ன உடம்பெதுவும் சரியில்லயா முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்டு கனகாவும் தன் பங்கிற்கு வீட்டின் நிலையை சகஜமாக்கினாள். “ஆமா பாப்பா” என்ற வேணு இன்னும் கொஞ்சம் கோதுமை ரவை எடுக்கப் போனாள். கனகா கடந்த வருடம் நெல் நாற்று விட பூஜை செய்த அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள். நெல்லை நாற்றுக்கு தெளிக்கும் முன்னர் வயலில் பூஜைக்கு வரச்சொல்லி வேணு அழைத்தாள். கனகாவும் விஷ்ணுவும் நாற்றுவிட தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த நாற்றங்காலுக்கு அருகே சென்ற போது “சனி மூலைக்குப் போங்க” என்றாள் வேணு. அதைக் கேட்டதும் அந்த தண்ணீர் தேங்கி சேறு செழித்திருக்கும் அந்த நாற்றங்காலின் வடகிழக்கு மூலைக்குச் சென்றார்கள். பூஜைக்கென நெல் கொட்டி மிதக்க விட நான்கு எருக்க இலைகளைப் பறிக்கப் போனவள் பார்த்தீனிய மலர்ச்செடியைப் பிடித்துத் தாண்டிச் சென்றவள் திரும்பி வரும் போது முக நரம்புகள் புடைத்துக் கொண்டன. பார்த்துக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே முகமெல்லாம் வீங்கி விட்டது. பூஜை முடியும் முன்னரே வேணுவுக்கு தலையெல்லாம் வெடிப்பது போலொரு வலி வந்ததைச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகிறேன் என்றாள். அவள் வயல்வேலையைக் கூட பாதியில் விட்டுவிட்டுச் சென்றாள். வீட்டில் பெரியவரைப் பார்க்கவும் வரவில்லை. வேணு வராத அந்த இரண்டு நாட்கள். அந்த முறை கனகா அவ்வளவு பெரிய வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கழுவித் துடைத்து சமையல் வேலைகளையும் செய்ய, கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.
“பராவயில்ல, உடம்பு சரியில்லாம இருந்தும் பெரியவரக் கவனிச்சிக்கிற, வீட்ட உன் வீடு போல பார்த்துகிற, உனக்கு ரொம்பக் கடமப்பட்டிருக்கோம்”
“வெள்ளி செவ்வாய்ன்னா வீட்டுல வெளக்கேத்தி வைக்க சொல்லியிருக்காருங்க. இல்லன்னா இரண்டுநாளா காலைலயே வந்து என் தங்கச்சி மகளோடு சமையல் பண்ணி வச்சிட்டுப் போயிடுவேன். சாயங்காலம் வர்றதுல்ல. காலல பண்ணதே பெரியவரு ராத்திரியும் சாப்பிட்டுக்குவாரு. ஏதோ அவரு சாமி மாதிரி எல்லாத்தையும் சமாளிச்சிக்கிறாரு. அப்படிதான் காலம் ஓடிட்டு இருக்கு. இன்னிக்கி செவ்வாக்கிழமன்னு சாயங்காலமும் வந்தேன்.” என்றாள் வேணு.
வழக்கமா இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாத வேணு இவ்வளவு பேசிக் கொண்டிருப்பதை விஷ்ணு அதிசயமாய்ப் பார்த்த போது, “என்ன விஷப்பூண்டு செடிய தொட்டுட்டியா வேணு?” என்று கேட்டாள் கனகா.
“ஆமா, சும்மா இந்தா இப்படிதான் கைப்பட்டுச்சாம், அதுக்கே இப்படி முகம் வீங்கிக்குது, தல வலி வந்துருது, இன்னிக்கி கொஞ்சம் பராயில்ல பாவம்” என்றார் பெரியவர்.
“ஆமாங்க, தெரியாம தொட்டுட்டேன். இரண்டு நாளா படாதபாடு, தங்கஞ்சி மவ மட்டும் உள்ளூர்க்கு வந்து வாக்கப்படலைன்னா பெரியவர்க்கு சாப்பாடு கூட ஆக்கியிருக்க முடியாதுங்க”
“சரி வேணு… நீ கிளம்பு, இன்னும் கொஞ்சம் கோதும குருண வறுத்து உப்புமா செஞ்சிக்கிறேன். அய்யாவுக்கும் கொடுத்துடறோம்” என்றாள் கனகா.
அவள் கிளம்புச் சொல்லியும் கிளம்பாமல் ஏதோ வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணு. உப்புமா கிண்டும் வாசனை மூக்கைத் துளைத்தது. ‘என்ன கொஞ்சம் தக்காளியை நல்லா வதக்கி, கொத்தமல்லிய உண்டுன்னு போடாறாங்க அதான் வாசனை பிச்சு உதறுது’ என்று வேணு மனதுக்குள் நினைக்கும் போதே பெரியவரும் சமையலறையிலிருந்து வாசனை வருவதைப் பார்த்து, பெரியவர் ஏதோ நகைச்சுவையாகச் சொல்லும் போது ‘ஆமா, மருமவ வந்துட்டா. ஓரே குஷிதான் கிழவனுக்கு’ மனதுக்குள் நினைத்தது முகத்தில் தெரிந்தது. நல்லவேளை கனகா அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள். பெரியவர் அவன் மகனோட அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். அவர் அரட்டை சத்தத்தையும் மீறி, சத்தத்துடன் பின்வாசலை வெறியோடு கூட்டித் தள்ளினாள். முன்வாசலையும் கூட்ட வந்த போது, “என்ன இன்னிக்கி விஷேசம், வாசலெல்லாம் கூட்ற?” என்று பெரியவர் சொன்னதை காதில் வாங்காதவள் போல பின்வாசல் கூட்டியதை விட அதிக வேகத்தோடு முன்வாசலையும் கூட்டினாள். மண்ணை வார தகர முறத்தைத் தேய்த்த போது அது அதீத எரிச்சலோடு தனது எதிர்ப்பை நாராச சத்தத்தோடு வெளிப்படுத்தியது. அதற்கும் பெரியவர் “பாத்து ரொம்பக் கூட்டி உட்டு தரயத் தேய்ச்சிறாத, அது கோவிச்சிட்டு வளுக்கி உட்ரப் போவுது, ஏற்கனவே உன் மூஞ்சி வீங்கில்ல இருக்கு, அப்பறம் வேறல்லாமும் வீங்கிக்கும்” என்று சொல்லி வேகமாய் தன் பொக்கை வாயைக் காட்டிச் சிரித்ததும், வேணுவுக்கு ‘பல்லெல்லாம் கொட்டியும் இந்தச் சிரிப்பு எவ்வளவு அழகாய் இருக்கிறது?’ என்று தோன்றியது. அதற்குள் கனகா வெளியே வருவது தெரிந்து தன் முகத்தை உணர்ச்சியற்ற சிலை போல் வைத்துக் கொண்டாள்.
“மாமா… சாப்பிடலாம். நீயும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரு வேணு நான் கிண்டுன உப்புமா எப்படியிருக்குன்னு. அப்பறம் வெளக்கு வைச்சதும் வீட்ட கூட்டாத”
“அத நான் பலவாட்டி சொல்லிட்டேன், காதுலயே போட்டுக்கிறது இல்ல, ஒவ்வொரு திங்களும், வியாழனும் சாயங்காலம் எப்படா இருட்டும்னு பார்த்துதான் வீடு துடைக்கிறா” என்று தன் குற்றப்பத்திரிக்கையை வாசிக்கத் தொடங்கினார் பெரியவர்.
வழக்கம் போல் அதை காதில் வாங்காமல், துடைப்பத்தை பின்வாசலில் கொண்டு வைப்பதற்காக உள்ளே நுழைந்த போது உப்புமா வாசனையோடு சட்னி தாளித்த வாசனையும் சேர்ந்து அவள் பசியைக் கிள்ளியது. துடைப்பத்தை மூலையில் போட்டுவிட்டு, கை, கால்களைக் கழுவி விட்டு உள்ளே நுழைந்து பெரியவர் சாப்பாட்டு மேசை முன் சாப்பிட அமர்ந்திருப்பதைப் பார்த்து உப்புமாவைத் தட்டில் போட்டு எடுத்து வர வழக்கம் போல சமையலறை அருகே வரை வந்து விட்டு அப்படியே நின்றுவிட்டாள். கனகா அதைத் தட்டில் எடுத்துப் போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்ததும் கையைப் பிசைந்து கொண்டாள். பெரியவர் சாப்பிட்டுக் கொண்டே, “ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கிதான் வவுறு நிறஞ்சாப்புல இருக்கு” என்று சொன்னதும் வேணு விறுவிறுவென்று கிளம்பினாள். பெரியவர், “எங்க வண்டி இந்த ஓட்டம், அதான் மருமவ சொல்லுதுல்ல, சாபுட்டு போறது” என்று கேட்டதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளிவாசல் கேட்டை தடாரென்று இழுத்து சாத்தினாள். “என்ன… கேட்டுல இடி விழுந்துருச்சா… அவ்வளவு சத்தம்” என்று பெரியவர் சொன்னது வேணு காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. அவள் தனக்குத்தானே ஏதோ புலம்பி கொண்டு தன் வீட்டை நோக்கி வேகமாய் நடையைக் கட்டினாள். கனகா வெளியே வந்து பார்க்கும் போது வேணு நான்கு வீடுகளைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். வேணு இன்னும் இரண்டு வீடுகள் தாண்டி விறுவிறுவென்று நடந்து செல்வதை உறுதி செய்து கொண்டு, முன் வாசல் கேட்டை மூடி அதன் இரும்புக் கைப்பிடியை மாட்டிவிட்டு அவள் உள்ளே வந்த போது சாயங்காலம் ஏற்றிய விளக்கு மெல்ல மங்கி அணையக் காத்திருந்ததை ஊடுருவிப் பார்த்தாள். விருட்டென விளக்கருகில் சென்றவள் “தானா அணையக் கூடாதுன்னு சொல்வாங்க” என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த ஒரு பூவை எடுத்து விளைக்கைக் குளிர்வித்தாள். ‘இதென்ன புதுவழக்கம்’ என்று கனகாவின் கணவன் அவளை வியப்போடு பார்த்ததை கவனமாகத் தவிர்த்தாள்.
***
பின் வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்த வேணு அங்கிருந்து தெரிந்த கரட்டுப் பெருமாள் கோவிலை இலக்கற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிகாலையில் பெய்ந்த மழையால் மலைப்பகுதியின் காட்டுச் செடிகள் மரங்கள் எல்லாம் பசுமை பூத்துப் பளபளத்துக் கொண்டிருந்தன. மேகமூட்டம் இன்னும் இருந்ததால் மலையை ஏதோ மெல்லிய சாம்பல் நிறத் துகில் போர்த்தியிருப்பது போலத் தோன்றியது. அதனூடே மாலைச் சூரியனின் ஓளி ஊடுருவி மாயம் செய்து கொண்டிருந்தது. பின் கொல்லையில் இருந்த கழிப்பறை, குளியலறையைத் தாண்டி வயலில் வீட்டு சுவர் ஒட்டி வளர்ந்திருந்த வெப்பமரம் பசேலென்று சிலிர்த்துக் கொண்டு தன் இலைகளையாட்டி மயக்கிக் கொண்டிருந்தது. கிளிகள் மாலையொளி பரவுவதைக் கொண்டாடிக் களித்துக் கொண்டிருந்தன. அந்த கீச்சொலியும் கொஞ்ச நேரத்தில் அடங்கி விட்டிருந்தது. துணி துவைத்து உலர்த்தும் கொடியில் சில வாரங்களுக்கு முன்னர் கனகா துவைத்து உலர்த்தி, கிளிப் போட்டிருந்த தலைத்துவட்டியின் வசீகர வண்ணம் விருட் விருடென காற்றில் பறந்து வேணுவை கிண்டல் செய்து கொண்டிருந்தது. வயலில் வேலை செய்யவென்று அந்த வசீகரத் துண்டை எடுத்துத் தலைக்கு கட்டிக் கொண்டு போன போது என்றைக்குமில்லாமல் நடுநாளில் கனகா வயலுக்கு வந்ததும் ‘என்ன வேணு, சொல்லியிருந்தா உள்ளேயிருந்து துவைச்ச துண்ட குடுத்திருப்பேன்ல, இது நான் காலைல குளிச்சிட்டு தலைதுவட்டிட்டு ஈரம் காயப்போட்டது’ என்று ஒருசில களைகளைப் பிடிங்கிக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. கனகா மட்டும் வரவில்லை. அவள் வந்த பின்னாலேயே அவள் கணவரும் வந்து கனகாவைப் பதற்றதோடு பார்த்துக் கொண்டு நின்றதும் இப்போது நினைவுக்கு வந்தது. அன்று சாயங்காலமே அதைத் துவைத்து உலர்த்தினாள். அன்றிலிருந்து இன்றுவரை அது அதே இடத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. அந்த முறை கனகா கிளம்பிப் போன பிறகு பெரியவருக்கு சாப்பாடு கொடுக்க தட்டு தேடிய போது கனகா வீட்டிலிருந்து சீதனமாய் வந்த சில்வர் பாத்திரங்கள் எதையுமே காணவில்லை. எல்லாம் எடுத்து அவள் பீரோவுள் வைத்துப் பூட்டி விட்டுப் போயிருந்தது பெரியவர் சொல்லித் தெரிந்தது.
சற்றுத் தொலைவில் ஒருசில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த காற்றாலையின் ராட்சச விசிறி காற்றைக் கிழித்து சுழன்று கொண்டிருந்தது. சிறு விமானம் இறங்குவது போல விரும் விருமென்று அது எழுப்பிய ஒலியைத் தவிர வேறு எந்த ஒலியுமில்லை. கடந்த இரண்டு நாட்களாக கட்டிலிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் கிடக்கிறார் பெரியவர். இந்த வருடத்தில் மட்டும் அவருக்கு இப்படி ஆவது மூன்றாவது முறை. கனகாவும் அவள் கணவரும் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அவர்கள் வரும்வரை பெரியவரைப் பார்ப்பது சலிப்பாக இருந்தது. சாப்பாடு கொடுக்கக் கூட படுக்கையிலிருந்து ஒருஆளைக் கூட்டிக் கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் உட்காராமல் அப்படியே ஊட்டி விடச் சொல்கிறார். நன்றாகக் காய்ச்சல் அடிக்கும் தருணம் நினைவு மயங்கி இருக்கும், மல்லாக்க படுக்கக் கூட மாட்டார். ஒருக்களித்துப் படுத்திருந்தபடி எதையாவது ஊட்டி விடும் சோறு இருக்கும் திசை நோக்கி பொக்கை வாயை ஆர்வமாகத் திரும்புவது ஏதோ முலை பற்றத் துடிக்கும் காமுகன் போலவும் இருக்கும், பால்குடிக்குத் தவிக்கும் குழந்தைப் போல இருக்கும். தூக்கி நிறுத்தி பீத்துணி மாற்றும் போது சுருங்கிக் கிடக்கும் அவர் தொடையின் இடைப்பகுதி வேணுவைப் பார்த்துச் சிரிப்பது போலிருக்கும். வீடு முழுவதும் வேணுவின் ஆட்சிக்கு இது சரிசமமாய்ப் போனது என்று அவள் மனதைத் தேற்றிக் கொள்கிறாள். பெரியவர் அவரது வீட்டம்மா படுக்கையில் கிடந்த அதே நிலையில் இப்போது அவர் இருக்கிறார். இடையில் ஐந்தே வருடங்கள்தான். ஐந்து வருடத்து முன் ராஜா மாதிரி இருந்தார் என்று இப்போது யார் பார்த்தாலும் சொல்ல மாட்டார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் கனகாவும் அவள் கணவரும் வந்த போது யாரோ ‘வயல்ல என்ன போட்டிருக்கும் எவ்வளவு வந்தது’ என்று ஏதோ கேட்டதற்கு, ‘வயலில் இருந்து வந்த நெல் மூட்டைகளை விலைக்குப் போட்டது, அரிசி வியாபாரக் கணக்கு வழக்கு, எள்ளு மூட்ட எவ்வளவு வந்தது, உளுந்து மூட்ட எங்க அடிக்கி இருக்கு, பெரிய குண்டாம் வீட்டுல மேல எங்க இருக்கு எல்லாமே வேணுவுக்குத்தான் தெரியும்’ – என்று கனகாவின் வீட்டுக்காரர் கடந்த முறை யாரிடமோ சொன்னது வேணுவின் காதில் போது வேணுவின் கன்னம் பூத்தது. அப்போது கனகாவின் முகம் தீ ஜுவலை போல எரிந்து கொண்டிருந்ததை வேணு பார்த்த போது அவளுக்குள் பயமும் பரவசமும் ஒரே சமயத்தில் வந்தது. அடுப்படியில் நின்று கொண்டிருந்த போது ‘எண்ணெய் எங்க போய் ஒழிஞ்சிக்கிச்சோ, வீட்டாள் இல்லன்னா எல்லாமே அதது இஷ்டம்தான்’ என்று முணுமுணுத்தாள். அதன் பிறகுதான் அவள் தன் பீரோவைப் பூட்டி வைத்தாள். அவ்வளவு பெரிய வீட்டுக்கு ஓரே ஒரு படுக்கையறைதான் இருந்தது. அந்தப் படுக்கையறையில் அவள் பீரோவும் இருந்தது. அதே படுக்கயறையில் பெரியவர் வீட்டு பீரோவும் இருந்தது. அதில்தான் பணம், பெரியவர் மனைவியின் நகைகள், பட்டுப்புடவைகள் எல்லாம் வைத்திருந்தார்கள். சமீபமாகத்தான் நகைகள் கனகாவின் பீரோவுக்கு மாறியிருந்தது. கனகாவும் அவள் புருஷனும் இல்லாத சமயம் பணம் வாங்கி வைக்க, அதிலிருந்து கூலி எடுத்துக் குடுக்க ஒருநாளை நாற்பது முறை பீரோவைத் திறக்கும் போதெல்லாம் அதற்குள் பெரியவர் வீட்டுப் பட்டுப்புடவைகளைப் பார்த்து வேணு ஒருநொடி நேரம் அப்படியே நிற்பாள். முகம் பூரித்துப் போகும். ஆனால், படுக்கையிலேயே தினம் பொழிந்து பெய்து விடும் பெரியவரைத் தொட்டுத் தூக்கிப் பண்டுவம் பார்க்கும் போது, அவர் படுக்கைக்கு அருகில் மாட்டியிருக்கும் பெரியவர் வீட்டம்மா போட்டோவை முறைத்துப் பார்ப்பாள். அதில் அந்தம்மா ‘எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்பது போல அவளைப் பார்ப்பதாக அவளுக்குத் தோன்றும்.
“வேணு, வீடு துடைச்சாச்சா?” என்றார் பெரியவர்
“நேத்தே துடைச்சிட்டேன்”
“நேத்தே எங்க துடைச்ச? கனகா வந்துட்டா, வந்தும் வராததுமா எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு கிடக்கும்”
‘வேற எந்த நினைப்பில்லனாலும் மருமவ கஷ்டம் மட்டும் கண்ணுல நிக்கிது இந்த கிழத்துக்கு. படுக்கையில் பேளும் போது வேணு பாவம்ன்னு நினைச்சி எந்திரிச்சி ஒரு எட்டு வைச்சிடனும் நினைப்பு வரல’ என்று யோசித்துக் கொண்டே வீட்டைக் கூட்ட எழுந்து போனாள். கடந்தமுறை கனகா வந்து வண்டியை விட்டு இறங்கியும் இறங்காததுமாக, குடவுனை தரையே அதிரும்படி விளக்குமாற்றால் வரட்டு வரட்டு என்று கூட்டித் தள்ளினாள். அப்படி என்னதான் அழுக்கோ அங்கே தேய்த்து தேய்த்து கழுவினாள். தண்ணீர் ஊற்றிக் கொட்டியது வீட்டு பின்வாசல் வரை கேட்டுக் கொண்டிருந்தது. குடவுனை வேணு பெரும்பாலும் கூட்ட மாட்டாள். அன்று கனகா வெளியே வரும் வரை நெஞ்சுக்குள் நெகு நெகுவென்று ஏதோ உறுத்துவது போல இருந்தது. வெளியே வந்து சத்தமாக ‘இப்பதான் குடவுன் கால வைக்கிற மாதிரி இருக்கு’ என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்து மேடையைத் துடைப்பது, ஸ்டவ்வைத் துடைப்பது என்று துடைத்த மேனியாகவே இருந்தாள். சற்று நின்று பார்த்துவிட்டு பெரியவரிடம் சொல்லிக் கொண்டு, வேணு அன்று கிளம்பி விட்டாள். அதை நினைத்துக் கொண்டே வீடு முழுவதும் கூட்டித் துடைத்தாள். குடவுனுள் சென்று கூட்டத் தொடங்கினாள். புரட்டாசி மாதம் வீட்டிள் இருந்த பெரும் வெளிச்சக் கவர்ச்சிக்கு வந்து விழுந்த வண்டுகள் வெளியே செல்ல வழியில்லாமல் செத்துக் கிடந்தன. அந்தப் பூச்சிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டே நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் மளமளவென்று திரண்ட போது வெளியே வண்டி நிற்கும் சத்தம் கேட்டது.
பெரியவருக்கு இப்போதெல்லாம் அடிக்கடி படுக்கையே கதி என்ற நிலை வருவதால் விஷ்ணுவால் அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்ப முடிவதில்லை. மதியம் கிளம்பி நாமக்கல் தாண்டும் போதே நன்றாக இருட்டியிருந்தது. கண்ணனூர் உள்ளே நுழைந்ததுமே தொலைவிலே பல கொள்ளிவாய்ப் பிசாசுகள் கண் சிமிட்டிக் கொண்டிருப்பது போலிருந்தது. “அங்க பாருங்க பயங்கரமா இருக்கு” என்று சொல்லியவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை விஷ்ணு. ராட்சதக் காற்றாலைகள் எழுப்பிய ஒலியும், இருளில் விட்டு விட்டு எரிந்த அதன் விளக்குகளும் ஒருவித அமானுஷ்ய உணர்வைத் தந்தன. அந்த மென் இருட்டில் ராட்சதக் காற்றாலை தன் கொள்ளிக் கண்களைச் சிமிட்டுவதும் பேய் மரம் போல நின்றிருந்ததும், அது மின்னும் சமயத்தில் சுழலும் காற்றாடிகளின் அடிப்பாகம் போர் வாள் சுழல்வது போன்ற காட்சியும் நினைவுக்கு வந்தது. ஏதோ கெட்ட சகுனம் போல ‘வ்ரும் வ்ரும்’ என்று ஒலித்தது என்னவோ நடக்கப் போகிறது என்று சொல்வது போலவே இருந்தது. ‘வேணு இந்த வாட்டி என்ன கேடு பண்ணப் போறாளோ?’ என்று நினைத்துக் கொண்டே வந்தாள். அதற்குள் வீடு வந்து விட கனகா இறங்கிய உடனேயே கவனித்தாள் வெளி கேட் அருகே செருப்பில்லாதது தெரிந்தது. வண்டியில் வரும் போது அவள் கணவர் போன் பேசியதை வைத்து வேணு வீட்டில் இருந்தது தெரியும். கனகா ‘வேணு கிளம்பியிருப்பாள்’ என்று நினைத்துக் கொண்டாள். ஆழமாய் ஒரு பெருமூச்செடுத்து விட்டாள். உள்ளே நுழையும் போதுதான் பார்த்தாள் வேணுவின் செருப்பு பட்டாசாலை ஏறுமிடத்தில் கிடந்தது. அதைப் பார்த்ததும் அவள் முகம் இருண்டு போனது. அப்படியே அதைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
– -lavanya.sundararajan@gmail.com
* மாலை 4 மணிக்கு மேல் வந்து வயலில் சூரியன் சாயும் வரை வேலை செய்பவர்களை அந்தி ஆள் என்று சொல்வார்கள்
** புரட்டாசி மாதம் ஊர் கூடி பச்சரிசியில் பெங்கல் போல குழைத்த சாதத்தை வெள்ளை வெட்டி மேல் பரப்பி பெரிய அளவில் குழியுண்டாக்கி அதில் சாம்பார் பொழிந்து பெருமாள் சாமிக்கு படைத்து விட்டு உருண்டைகளாக உருட்டி வாழையில் சுடச்சுட பரிமாறும் நிகழ்வு
*** ஆனப்பழம் – ஆனாம்பழம், ஆணாப்பழம் என்று அழைக்கப்படும் இனிப்பு சுவை உடைய பழம், இது அதிகம் மலைப்பகுதிகளில் வளரும். கொத்து கொத்தாய் காய்க்கும் பழம். அருநெல்லிக்காய் அளவில் இருக்கும். நிறமும் கிட்டத்தட்ட அருநெல்லிக்காய் போலவே இருக்கும்.
**** சாணப்பூண்டு – மூக்குத்திப் பூ, தாத்தாப் பூ, தலைவெட்டிப் பூ என்று பலபெயர்களில் அறியப்படும் சிறு பூக்களைப் பூக்கும் தாவரம்.



