விழித்திரை – அபுல் கலாம் ஆசாத்

மூன்றாவது ஊஞ்சலில்தான் பேத்தி ஆடிக்கொண்டிருந்தாள், இப்போது ஊஞ்சலில் அவளைக் காணவில்லை. ஒரு சுற்று நடந்து முடிப்பதற்குள் எங்கு போனாள்?
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தொலைவிலிருந்து உற்றுப் பார்த்தேன். இரண்டு சிறிய கரிய பஞ்சுப்பொதிகள் விழிக்குள் பறந்து காட்சியைத் தொல்லை செய்தன. அவை நீரிழிவு விழித்திரை நோய் மிதக்கவிடும் குட்டிக்குட்டியான கரும்பஞ்சுகள். ‘டயாபட்டிக் ரெடினோபதி’ என்பார்கள். விழிக்குள் பறக்கும் பஞ்சுகளுக்கு இடையே காட்சியைப் பார்க்கப் பழகியிருந்தேன். முழுவதுமாக சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும், கண்களுக்கு லேசர் சிகிச்சைக்குச் செல்லவேண்டும்.
என் கண்களின் கதையைப் பேச இதுவா நேரம்? ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பேத்தி பூங்காவில் எங்கு நிற்கிறாள் என முதலில் தேடவேண்டும். ஊஞ்சலுக்கு எதிரே சிறகுப்பந்து மைதானத்தையொட்டி நிற்கும் வண்ணவண்ணச் சறுக்குமரத்தில் பார்த்தேன், அதிலும் அவள் இல்லை. சறுக்குமரத்தில் விளையாடுவதற்கு வசதியாக ஜீன்ஸ் முழுக்கால்சட்டை அணிந்து வந்தாள், அதற்கு மேல் சிவப்பு நிறத்தில் முழுக்கை பனியன் அணிந்திருந்தாள்.
தொலைவிலிருந்து பார்த்தாலும் உடையை வைத்து அவளை எளிதாக அடையாளம் காணலாம். ஊஞ்சலிலும் சறுக்குமரத்திலும் இல்லையென்றதும் எனக்கு உடல் உதறத்தொடங்கியது. பேத்தியைக் காணாத பதற்றமா, அல்லது நடந்ததால் உண்டான சர்க்கரைக் குறைவா எனத் தெரியவில்லை.
யாரிடம் கேட்பது? எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் மாநகராட்சிப் பூங்காவுக்கு வழக்கமாக வருகின்றவர்கள் சிலருக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பேத்தியையும் அடையாளம் தெரியும்.
ஒருமுறை பூங்காவில் சந்தித்த கவுன்சிலர் என்னுடைய விவரங்களைக் கேட்டார். மின்சார வாரியத்தில் சூப்பரிண்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றவன் எனக் கேள்விப்பட்டதும் அவருடைய பேச்சில் கூடுதல் மரியாதை தென்பட்டது. என்னுடைய பணி மின்சார விநியோகம் சார்ந்தது அல்ல; தொழிலாளர் நலன் சார்ந்தது எனச் சொன்னதும் அவருக்கு என்னுடன் உரையாடுவதில் இருந்த சுவாரசியம் குறைந்தது. ஆனாலும், மரியாதையாகவே பேச்சைத் தொடர்ந்தார். அதன் பின்னர், கவுன்சிலர் எப்போது என்னை சாலையில் பார்த்தாலும் தன் புல்லட்டை நிறுத்தி நலன் விசாரித்துவிட்டுச் செல்வார். கவுன்சிலர் அடிக்கடி என்னுடன் பேசுவதால், இன்னும் சிலரும் என்னுடன் பேசத்தொடங்கினர். அவர்களில் சிலர் என்னைப்போல் பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள். பூங்காவைச் சுற்றி நடைபழகும் அவர்களிடம் சொன்னாலும் பேத்தியைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள்.
என் மருமகள் எங்களுடைய சுற்று வட்டாரத்தில் யோகா ஆசிரியையாதலால் மருமகளை முன்வைத்தும் எனக்கு பூங்காவில் மதிப்பு இருந்தது. பூங்காவில் யாருக்கேனும் என்னை அறிமுகம் செய்யவேண்டுமென்றால், ‘யோகா டீச்சரோட ஃபாதர்-இன்-லா’ எனச் சொல்லி அறிமுகம் செய்வார்கள். அதனால், யாரிடம் ‘பேத்தியைப் பார்த்தீர்களா? இங்கதான் விளையாடிக்கிட்டிருந்தா’ எனச் சொன்னாலும், ‘யோகா டீச்சர் டாட்டரைப் பார்த்தீங்களா?’ என ஆளாளுக்குக் கேட்டுப் பூங்காவின் ஏதாவது மூலையில் வேறு ஏதாவது விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் பேத்தியை அழைத்துவருவார்கள்.
அப்படி மற்றவர்களிடம் சொல்வதற்கு முன் நானே எல்லாப் பகுதிகளிலும் தேடிப்பார்க்க முடிவு செய்தேன்.
யாரிடமும் பேசாமல் பூங்காவின் தெற்கு மூலையை நோக்கி நடந்தேன். சமீபத்தில் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு குட்டை அமைத்து நீர் நிறைத்தார்கள். யாரும் குட்டைக்குள் இறங்கக்கூடாதென அதைச் சுற்றி இரும்புக்கம்பி வேலி அமைத்தார்கள். அப்படியும் சில வாண்டுகள் வேலிக்குள் நுழைந்து குட்டையில் தவறி விழுகின்ற பந்துகளை எடுக்க முயற்சி செய்வார்கள். பூங்காவின் காவலாளி வந்து விரட்டிவிடுவார்.
இப்போது குட்டையைப் பார்த்ததும் என் நடுக்கம் அதிகமானது. வேலியின் இரும்புக்கம்பியைப் பிடித்துக்கொண்டு குட்டையை ஆராய்ந்தேன். குட்டை முழுவதும் பச்சைக் கம்பளம் போர்த்தினாற்போலப் பாசி படிந்திருந்தது. பாசிப்பரப்பில் அங்கங்கே ஒன்றிரண்டு பிளாஸ்டிக் பந்துகள் அசையாமல் கிடந்தன. குட்டையின் மேற்பரப்பில் யாரும் விழுந்ததற்கான அடையாளமாகப் பாசிப் படலம் கலைந்திருக்கவில்லை. என்னிடமிருந்து தானாக நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது.
வேலியை விட்டு விலகிப் புல்தரையில் நடந்து சிமெண்ட் பாதைக்கு வந்தேன். குட்டை இருந்த தெற்கு மூலையில் பாதையில் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில்தான் என் ஃப்ளாஸ்க்கையும் பையையும் வைப்பேன். அந்தப் பையில் இரண்டு சாக்லேட்களும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும் இருக்கும். ஃப்ளாஸ்க்கில் வெந்நீர் இருக்கும். இப்போதைய இந்தப் படபடப்பும் நடுக்கமும் சர்க்கரை குறைந்ததால் உண்டானதெனில் சாக்லேட் தின்றால் ஐந்து நிமிடங்களில் சரியாகிவிடும். ஆனால், பெஞ்சின் மீது என் பையைக் காணவில்லை, ஃப்ளாஸ்க்கையும் காணவில்லை. நடுக்கமும் படபடப்பும் அதிகமாயின.
பையும் ஃப்ளாஸ்க்கும் தொலைந்துபோனால் பிரச்சனை இல்லை. வேறு வாங்கிக்கொள்ளலாம், சாக்லேட்தான் இப்போதைய உடனடித் தேவை. சட்டென யோசனை தோன்றியது. பூங்காவின் வாசலில் காவல்காரரின் உறவுக்காரப் பெண் நடைபாதைக்கடை போட்டிருப்பார். அவரிடம் ஒரு சாக்லேட் வாங்கி வாயில் போட்டுக்கொண்டால் படபடப்பு நீங்கலாம், அதன் பின்னர் பேத்தியைப் பொறுமையாகத் தேடலாம். பூங்காவின் வாசலை நோக்கி நடந்தேன்.
இடையில் ஒரு யோசனை தோன்றியது, என் நண்பன் செங்குட்டுவனைத் துணைக்கு அழைக்க நினைத்தேன். அவனும் என்னைப் போலப் பணி ஓய்வு பெற்றவன்தான். மாங்காடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்து பணி ஓய்வு பெற்றான். அதற்குப் பின் சென்னையில் கிளைவிட்டுப் படர்ந்திருக்கும் பலபொருள் அங்காடிச் சங்கிலிக்கு செக்யூரிட்டி கன்சல்டண்டாக சேவை செய்கிறான். அவனுக்கு எல்லா காவல் நிலையங்களிலும் யாராவது ஒருவரைத் தெரியும். ஆளும் திடகாத்திரமானவன் என்னைப் போல் கை நடுக்கம் கால் நடுக்கமெல்லாம் அவனிடம் இருக்காது. வீடும் அருகில்தான், நான் அழைக்கும்போது வீட்டில் இருந்தால், உடனே சட்டையை மாட்டிக்கொண்டு வந்துவிடுவான், இதோ அழைக்கிறேன்.
என்ன இது? சட்டைப்பையில் என் கைப்பேசியைக் காணவில்லை. கால்சட்டைப் பையில் பார்த்தேன் அதிலும் இல்லை. கைப்பேசியைப் பையில் சாக்லேட், பிஸ்கெட்டுகளுடன் வைத்து சிமெண்ட் பெஞ்சில் வைத்திருக்கிறேன் போல, அது மொத்தமாகத் தொலைந்துவிட்டது. பேத்தியுடன் சேர்த்து இப்போது கைப்பேசியையும் தேடவேண்டும்.
இனி யாரையும் அழைக்கவும் முடியாது, பேத்தி இல்லாமல் வீட்டுக்கும் போகமுடியாது. படபடப்பும் அதிகமாகிக்கொண்டே போனது. சட்டைப்பையைத் துழாவினால் சில்லறைகளும் இல்லை. மூன்று கிராம் சாக்லேட் ஒன்று வருமே, காபிச் சுவையைத் தருமே, அது ஒரு ரூபாய்தானே? ஒன்று கேட்டால் காவல்காரரின் உறவுக்காரப் பெண் நடைபாதை வியாபாரி தரமாட்டாரா என்ன? நாளை இரண்டு ரூபாயாகப் பணம் தந்துவிடுவேன்.
பூங்காவின் வாசல் வரையில் நடக்க வேண்டும். நடந்துகொண்டிருந்த மனிதர்கள், விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள், மரங்கள், பூச்செடிகள் இவற்றுக்கிடையே பூங்காவின் வாசலைப் பார்த்தேன். படபடப்புடன் அவ்வளவு தூரம் நடக்கமுடியுமாவென யோசித்தேன். பூங்காவின் வாசலைப் பார்க்கையில் மற்ற இடங்களிலும் கண்களை அலையவிட்டு சிகப்பு நிற முழுக்கைச்சட்டை, ஜீன்ஸ் கால்சட்டையுடன் பேத்தி தென்படுகிறாளாவென்றும் கண்களைச் சுருக்கிப் பார்த்தேன். கரும்பஞ்சுகள் பறந்தனவேயன்றிப் பேத்தி தென்படவில்லை.
கைகளில் இருந்த படபடப்பு இப்போது உடலெங்கும் பரவியது, இதயம் வேகமாகத் துடித்தது. இதயத்துடிப்புக்கு ஏதோ ஒரு கணக்கு சொல்வார்களே, இருநூற்று நாற்பதிலிருந்து நம் வயதைக் கழித்து வரும் தொகையில் எண்பது விழுக்காடுகளுக்கு மேல் இருந்தால் பிரச்சனை என்பார்களே, அந்தக் கணக்கு உங்களுக்குத் தெரியுமா? இப்போது என் வயது… என் வயது என்ன? எழுபதா? அறுபத்தைந்தா? என் வயதும் மறக்கிறது, இதயத் துடிப்பின் எண்ணிக்கைக் கணக்கும் மறக்கிறது. எல்லாம் நினைவில் இருந்தால் மட்டும் என்ன இதயத்துடிப்பைக் கணக்கிட மணிக்கட்டில் ஸ்மார்ட் வாட்சா கட்டியிருக்கிறேன்? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதில் முதல் மாதச் சம்பளத்தில் வாங்கிய ஹெச்.எம்.டி. விஜய் கைக்கடிகாரத்தை இன்னும் ஓவராலிங் செய்து ஒவராலிங் செய்து கட்டிக்கொண்டிருக்கிறேன். அட, என்ன இது வீட்டிலிருந்து புறப்படுகையில் கைக்கடிகாரத்தைக் கட்ட மறந்திருக்கிறேன்.
இதயம் உடல் கால்கள் கைகள் எல்லாம் படபடக்க மெதுவாகப் பூங்காவின் வாசலை நோக்கி நடந்தேன். எதிரில் என் மகனின் நண்பன் வந்துகொண்டிருந்தான். அவனும் என் மகனும் ஒன்றாகத்தான் வேலை செய்கிறார்கள். ராமாவரத்தில் எம்ஜியார் வீட்டுக்கு எதிரில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் இருவருமே சூப்பரிண்டெண்டுக்கும் மேலான பதவியில் இருக்கிறார்கள். பிடித்தம் போகவே இரண்டு லட்சங்களுக்கு மேல் கையில் கிடைக்கும் எனக் கேள்விப்பட்டேன். அவ்வளவு வருமானம் இல்லாவிட்டால், இப்படியான அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க முடியுமா? எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே முதல் எலக்ட்ரிக் கார் என் மகன் வாங்கியதுதான், பச்சை நிற நம்பர் பிளேட், தெரியும்தானே? மகனின் நண்பன் என்னைப் பார்த்துவிட்டான். அவனிடம் உதவி கேட்டுப் பேத்தியைத் தேடச் சொல்லவேண்டியதுதான். அதற்கு முன் சாக்லேட் வாங்கிவரச் சொல்லவேண்டும். இந்தப் படபடப்புடன் இனி நடக்கமுடியாது.
மனிதனின் மனதைப் பார்த்தீர்களா? சற்று முன் பூங்காவின் வாசல்வரை நடந்து நடைபாதைக் கடையில் சாக்லேட் வாங்கக் தயாராக இருந்த உடல், உதவிக்கு ஆள் வருவதைக் கண்டதும் அவரிடம் அனைத்தையும் எதிர்பார்க்கிறது. இருக்கட்டும் நண்பனின் அப்பாவென்பதால் அவன் தவறாக நினைக்கமாட்டான். அவன் நெருங்க நெருங்க நான் கையை நீட்டி அவனை நிறுத்தப் போனேன். என்னைப் பார்த்ததும் அவனும் பதட்டமடைந்தான்.
“அப்பா, நீங்க எப்படி இங்க?”
“பேத்தியை விளையாடக் கூட்டிட்டு வந்தேம்பா. அங்க ஊஞ்சல்லதான் இருந்தா, இப்பக் காணோம். இங்க எங்கியாவதுதான் இருப்பா, பார்க்கை விட்டு வெளில போகமாட்டா.”
“சரி, நான் அவளைப் பார்த்துக்கறேன், நீங்க இங்க உக்காருங்க.”
“சதீஷ், வெளில இருக்ற ப்ளாட்ஃபார்ம் கடைக்குப் போயி அவசரமா ஒரு சாக்லேட் வாங்கிட்டு வறியா? படபடன்னுது… லோ சுகர் ஆகியிருக்குமான்னு தெரியல.”
“அப்பா, நான் சதீஷ் இல்ல, சபரீஷ். சாக்லேட்தான? இதோ ஏற்பாடு செய்றேன்.”
சதீஷ், மன்னிக்கவும் சபரீஷ் சாக்லேட்டுக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னானே தவிர என்னைவிட்டு நகரவில்லை, காவல்காரரை அழைத்தான்.
“வாட்ச்மேன் அங்கிள், ப்ளீஸ் ஒரு ஹெல்ப். அக்கா கடைல ஒரு சாக்லேட் வாங்கினு வறீங்களா? சட்டுன்னு நாக்குல கரைறாப்ல சாக்லேட்டுனு சொல்லுங்க, அக்காவுக்குத் தெரியும், தருவாங்க.” – பத்து ரூபாயை எடுத்து சபரீஷ் நீட்டினான்.
“அப்பாவுக்கா? அதுக்கெதுக்கு சாக்லேட்டு? நானு கிச்சன்லேர்ந்து சக்கர டப்பா எடுத்தாரேன்.” எனச் சொல்லிவிட்டு அந்தப் பத்து ரூபாயைத் திருப்பித் தந்தார். சபரீஷ் அதை வாங்காமல், “சரி, சீக்கிரம் சர்க்கரையை எடுத்துனு வாங்க” என அவசரப்படுத்தினான்.
என்னை சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்தான். பை, ஃப்ளாஸ்க், கைப்பேசி எல்லாமும் காணாமற்போனதை சபரீஷிடம் சொல்ல நினைத்து அமைதியானேன். முதலில் அவன் பேத்தியைத் தேடி அழைத்துவரட்டும், அதன் பின்னர் மற்றதைப் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
அழுக்காக இருந்த சர்க்கரை டப்பாவைக் காவலாளி எடுத்து வந்தார். டப்பாவை நான் கைகளில் வாங்கப் போனேன். சதீஷ், மன்னிக்கவும், சபரீஷ் காவலாளியின் கைகளிலிருந்து டப்பாவை வாங்கிக்கொண்டான். என்னை வாயைத் திறக்கச் சொன்னான். இரண்டு ஸ்பூன் சர்க்கரையை அள்ளிப்போட்டு என் வாயை நிறைத்தான். நறநறவென சர்க்கரை உராய்ந்து எச்சிலுடன் கலந்து சில்லென இனிப்பு நாவில் பரவியது. இது சர்க்கரை குறைந்ததால் வந்த படபடப்பாக இருந்தால் இன்னும் சில நிமிடங்களில் சரியாகிவிடும்.
ச-ப-ரீ-ஷ்-சபரீஷ், சரியா? சபரீஷ் தன்னுடைய ஸ்மார்ட் வாட்சைக் கழட்டி என் மணிக்கட்டில் கட்டினான். அது என் இதயத் துடிப்பைக் கணக்கெடுக்கும் நேரத்தில் தன் கைப்பேசியை எடுத்து யாருடைய எண்ணையோ தட்டினான். அவன் அழைத்தவர் பதிலளிக்கக் காத்திருந்த அந்த இடைவெளியில் என் இதயத் துடிப்பைப் பார்த்துவிட்டு நான் அதைப் பார்க்கும் முன் சட்டென பட்டனை அழுத்திவிட்டான். நான் அவனைப் பார்த்தேன். “நார்மல்தான் அப்பா” என எனக்கு பதில் சொல்லிக்கொண்டே, கைப்பேசியில், “அப்பா ஈஸ் வித் மீ, இன் த பார்க்” என்றான்.
கைப்பேசியை அணைத்துக் கைகளில் கெட்டியாகப் பிடித்தபடி என்னருகில் பெஞ்சில் அமர்ந்தான். அவனிடம் பேத்தியைத் தேடச்சொன்னேன். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிடும், என்னதான் பூங்கா முழுதும் விளக்கு எரிந்தாலும் பாதையை விட்டு விலகி அவள் விளயாடிக்கொண்டிருந்தால் கண்டிபிடிப்பது சிரமம் என்றேன். பேத்தியைத் தேடும்படி அவன் தன் மனைவியிடம் சொன்னதாகவும், அவனுடைய மனைவி பூங்காவுக்கு வந்து பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வாளென்றும் சொன்னான்.
அவன் பொய் சொல்கிறான். நான் அவனுடன் இருக்கிறேன் என யாரிடமோ அவன் சொன்னதைத் தவிர வேறெதுவும் கைப்பேசியில் பேசவில்லை. பிறகு எப்படி அவனுடைய மனைவி என் பேத்தியை அழைத்துச் செல்வாள்? அவனிடம் கேட்க நினைத்தேன். மகனின் நண்பனிடம் அவ்வளவு உரிமை எடுப்பதும் தவறு. இதோ கொஞ்சம் கொஞ்சமாகப் படபடப்பு அடங்குகிறது. படபடப்பு அடங்கியதும் நானே பேத்தியக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். உதவ வந்தவனைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொல்லை செய்வது சரியில்லை.
காவல்காரர் சர்க்கரை டப்பாவை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். நானும் ச-ப-ரீ-ஷும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறோம். சரி, ஒரு பேச்சுக்கு ச-ப-ரீ-ஷின் மனைவி என் பேத்தியை அழைத்துக்கொண்டு என் வீட்டுக்குச் செல்வதாகவே இருக்கட்டும். அவனிடம் என் பையும், ஃப்ளாஸ்க்கும், கைப்பேசியும் தொலைந்ததைச் சொல்லலாம் அல்லவா? அப்படிச் சொல்ல நினைக்கும்போதுதான் நான் கைப்பையும் ஃப்ளாஸ்க்கும் எடுத்துவராதது நினைவுக்கு வந்தது.
என் வலக்கையைப் பிடித்துக்கொண்டு பேத்தி வராண்டாவில் நடந்து லிஃப்டில் ஏறிக் கீழே இறங்கி, தெருவில் நடந்து பூங்காவுக்குள் வந்தாள். இடது தோளிலிருந்து பையைக் குறுக்காகத் தொங்கவிட்டிருந்தால் அது எனது வலது இடுப்பில் துருத்திக்கொண்டு அல்லவா இருக்கும். வலப்பக்கம் பையும் ஃப்ளாஸ்க்கும் துருத்திக்கொண்டிருந்தால் பேத்தி எப்படி வலக்கையைப் பிடித்துக்கொண்டு என்னுடன் ஒட்டி நடந்திருப்பாள். “தாத்தா யுவர் ஜோல்னா பை அன் ஃப்ளாஸ்க் ஆர் டிஸ்டர்பிங் மீ” எனப் புகார் சொல்லியிருப்பாளே! பையையும் ஃப்ளாஸ்கையும் எடுக்கவே இல்லை. அவை வீட்டில் இருக்கலாம். ஆனால், கைப்பேசி? அதைக் கால்சட்டைப் பையில் வைத்திருக்கிறேனா? தொட்டுப் பார்த்தேன், இல்லை.
சபரீஷ் “வாங்கப்பா போலாம்” என்றான்.
“பேத்தி உன் வைஃபோட வீட்டுக்குப் போயிடுவால்ல”
“இந்நேரம் போயிருப்பா. நீங்க வாங்க போலாம்”
“சபரீஷ், என் மொபைலுக்கு ரிங்க் பண்ணேன். பை மிஸ்டேக் இங்க எங்கியாவது கீழ விழுந்திருந்தா ரிங்க் ஆகும்ல”
சபரீஷ், SWAMY’S DAD என ஒளிரும் கைப்பேசித் திரையைக் காட்டினான்.
“கால் போவுது அப்பா, இங்க எங்கியும் பக்கத்துல சவுண்ட் வரலியே. மொபைல் வீட்ல இருக்கும், பார்த்துக்கலாம் வாங்க”
“சபரீஷ், பை எனி சான்ஸ், என் ஃப்ரெண்ட் மாங்காடு ஸ்டேஷன்ல இருந்தானே, செங்குட்டுவன், அவன் மொபைல் நம்பர் உங்கிட்ட இருக்கா?”
அவன் தன் கைப்பேசியை எடுத்து நோண்டினான்.
“இல்லை அப்பா. சாமிநாதனைக் கூப்பிட்டு செங்குட்டுவன் அங்கிள் நம்பரைக் கேட்கவா? அது சரி, எதுக்கு அப்பா இப்ப செங்குட்டுவன் அங்கிள் நம்பர்?”
“வேணாம்பா. சாமிநாதனை இப்பக் கூப்பிடாத, பேத்தி மிஸ்ஸாகிட்டானு தெரிஞ்சா டென்ஷனாகிடுவான். வீட்டுக்குப் போயி பார்த்துக்கலாம். அது வந்து சபரீஷ், செங்குட்டுவண்ட்ட பேத்தியைப் பத்திப் பேசலாம்னு நினைச்சேன்.”
“அப்பா, காம் டௌன் அப்பா. அவ இந்நேரம் என் வைஃபோட வீட்டுக்குப் போயி சேர்ந்திருப்பா.”
“ஆமால்ல, நீ சொன்ன, நாந்தான் மறந்துட்டேன்.”
“வீட்டுக்குப் போலாமாப்பா, லைட்டெல்லாம் போட்டுட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கொசு வந்துரும். இதோ இப்பவே வந்துருச்சு பாருங்க. போலாமா?”
நான் எழுந்து நடந்தேன், சுறுசுறுப்பாக உணர்ந்தேன், பரபரவென நடக்கத் தொடங்கியபோது சபரீஷ் என்னை மெதுவாகவே நடக்கச் சொன்னான். என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டான். நாங்கள் நடக்கும்போது பூங்காவில் சிலர் எங்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்தேன். எதிரில் நடந்துகொண்டிருந்த சிலர் ஒரு நொடி நின்று, “இப்ப பரவால்லீங்களா” என சபரீஷிடம் கேட்டுவிட்டுச் சென்றனர்.
கவுன்சிலர் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையுடன் இல்லாமல் வண்ணவண்ண ட்ராக் சூட்டுடன் விளையாட்டுக் காலணியுடன் வியர்க்கவியர்க்க நடந்து வந்தார்.
“மூணாவ்து ரவுண்டுலயே குட்டையாண்ட கார்னர்ல உங்களை அப்போவோட பார்த்துட்டேன் தம்பி. இப்ப பரவால்லீங்களா” என சபரீஷிடம் கேட்டுவிட்டு என்னிடம் திரும்பினார். ஆனால், பேசியது என்னவோ சபரீஷுடன்தான்.
“அப்பாவுக்கு எவ்ளோ மெமரி பவர்ன்றீங்க? பண்ருட்டி ராமச்சந்திரன் மின்சார வாரிய அமைச்சரா இருந்தப்ப ஈபீல நடந்த ரெக்ரூட்மெண்ட் பத்திலாம் சொல்லுவாரு.”
சபரீஷிடம் பேசிய பின் என்னிடம் பேசினார், “அந்த நேரத்துல ஈபீ சேர்மேன் யாரு சார்? விஜயராகவன் ஐ.ஏ.எஸ்ஸா?”
“ஆமா கவுன்சிலர் சார். அந்த பீரியட்ல…” என நான் தொடங்கினேன்.
“ம்ம்ம்… இப்ப ரெஸ்ட் எடுங்க சார். நான் பொறுமையா ஒரு நாள் வீட்டாண்ட வரேன், பேசுவோம்.”
பூங்காவிலிருந்து வெளியே வந்தோம். நான் பூங்கா வாசலில் ஒரு நொடி நின்று திரும்பி பூங்காவுக்குள் நேட்டம் விட்ட பின் நடந்தேன். எங்காவது பேத்தி கண்களில் தென்படலாம். எங்கள் அடுக்குமாடி வரையில் நடக்கையில் சபரீஷ் என்னுடன் நடந்தானே தவிர, என்னிடம் எதுவும் பேசவில்லை. கைப்பேசியைப் பரபரப்பாக நோண்டிக்கொண்டிருந்தான். யாசகம் கேட்பது போலக் கைகளை வைத்து, அதில் கைப்பேசியை வைத்து, இரண்டு கைகளின் கட்டைவிரல்களால் எப்படி இவனால் அத்தனை வேகமாகத் தட்டச்சமுடிகிறது?
இதோ எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு வந்துவிட்டது. குடியிருப்பின் வாசலில் சாமிநாதனுடன் செங்குட்டுவன் நின்றிருந்தான்.
“செங்குட்டுவா? நீ எங்கயா இங்க? நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன். நீ சாமிநாதனோட நிக்கிற. என்ன விஷயம்?” இயல்பாக நான் உரையாடலைத் தொடங்கினேன்.
சாமிநாதன் படபடப்பாக இருந்தான். நாங்கள் நான்கு பேரும் லிஃப்டில் ஏறி எங்கள் குடியிருப்புக்குச் சென்றோம். கதவு திறந்திருந்தது, என் மருமகளிடம் யோகா பயிலும் பெண் ஒருவர் என் வீட்டுக்குள் அமர்ந்து கைப்பேசியில் “ஆமா, கெடைச்சிட்டார், பார்க்லதான்” எனப் பேசிக்கொண்டிருந்தனர். எங்களைக் கண்டதும் அவர் கைப்பேசியை அணைத்துவிட்டு, “அங்கிள், எப்படி இருக்கீங்க?” என என்னை நலன் விசாரித்தார். நன்றாக இருப்பதாகப் பதில் சொல்லிவிட்டு சாமிநாதனைப் பார்த்தேன் அவன் இன்னும் படபடப்பாகவே இருந்தான். என் மருமகளைக் காணவில்லை, எங்காவது வெளியில் சென்றிருக்கவேண்டும்.
செங்குட்டுவன் என் கையைப் பிடித்து என்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான். கட்டிலில் உட்காரச் சொல்லாமல் எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னான். மூலையில் இருந்த மேசையில் மாத்திரைகளும் தண்ணீர்க் குவளையும் இருந்தன. செங்குட்டுவன் குவளையிலிருந்து தண்ணீரை ஊற்றிக் கொடுத்துக் குடிக்கச் சொன்னான்.
“செங்குட்டுவா, கொஞ்சம் சுகர் லெவல் ட்ராப் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். சுகர் டாப்லெட் டோசேஜைக் குறைக்கச் சொல்லிக் கேட்டா டாக்டர் எங்க நம்ம பேச்சைக் கேக்குறாரு? சாமிநாதன் என்ன சொல்றானோ அதும்படிதான் டோசேஜ். நீயாவது சொல்லேன்யா?”
மேசையிலிருந்த மாத்திரைகளைப் பார்த்தேன். நான் நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மெட்ஃபார்மின் மாத்திரை GEMER அடியில் இருந்தது. அடுத்த முறை டாக்டரிடம் இதன் டோசேஜைக் கண்டிப்பாகக் குறைக்ச் சொல்லவேண்டும். நரம்புத் தளர்ச்சியைத் தவிர்க்கும் மாத்திரை நியோரோபின் இருந்தது. இன்னும் சில மருந்துகள் கலைந்து கிடந்தன. அவற்றுடன் புதிதாக ஒரு மாத்திரை இருந்தது. அது என்னுடையதன்று. யாரிடம் கேட்க?
சுவரில் இருந்த என் மனைவியின் படத்தை அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். சட்டெனக் கண்ணீர் வழிந்தது. செங்குட்டுவன் என் தோளைத் தட்டி ஆறுதல் சொன்னான். பெருமூச்சு விட்டேன், கண்களைத் துடைத்துக்கொண்டு மேசையின் மீது இருந்த மாத்திரைகளை மீண்டும் பார்த்தேன்.
“செங்குட்டுவா, மருமகள் ஏதோ மாத்திரைகளை மிக்ஸ்-அப் பண்ணிடுச்சு போல இருக்கே. வேற யாரோட டேப்லட்டோ இங்க வந்திருக்கு.”
“இல்லியே, எல்லாம் உனக்குத் தர்ற டேப்லட்ஸ்தான்.” செங்குட்டுவன் பேசிக்கொண்டிருக்கையில், சாமிநாதன் தன்னுடைய மடிக்கணினியை எடுத்துக்கொண்டு என் அறைக்கு வந்தான். அவனுடன் சபரீஷும் வந்தான்.
“அப்பா, புஜ்ஜியும் லஷ்மியும் பெங்களூர்லேர்ந்து வீடியோ கால்ல இருக்காங்க, பேசுங்க.”
என்னுடன் பூங்காவுக்கு வந்த பேத்தி எப்படி மருமகளுடன் பெங்களூரிலிருந்து பேசுகிறாள்? மருமகள் எப்போது பெங்களூருக்குச் சென்றாள்? யோசித்துக்கொண்டே, ‘புஜ்ஜிமா’ என்றேன். தாத்தா எனக் கத்தியபடி மடிக்கணினித் திரை முழுவதும் தன் முகத்தை நிறைந்து ‘ஈஈஈ’ எனப் பல்லைக் காட்டினாள். பேசி முடித்துவிட்டு மகனிடம் மடிக்கணினியைத் தந்த போது, அவர்கள் பெங்களூருக்கு எப்போது சென்றார்கள் எனக் கேட்டேன். “சொல்றேன்பா” என ஒற்றை வரியில் பதில்சொல்லிவிட்டு மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அவனும் அவன் நண்பனும் என் அறையை விட்டு வெளியேறினர். நான் செங்குட்டுவனைப் பார்த்துவிட்டு, மேசையின் மீது இருந்த மருந்தின் பெயரைப் படித்தேன்.
Revastigmine Capsules 1.5mg
இது நினைவாற்றல் இழப்புக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து அல்லவா? புருவத்தை உயர்த்திச் செங்குட்டுவனைக் கேள்வியுடன் பார்த்தேன், அவன் கண்களில் நீர் கோத்திருந்தது, என் கண்களிலும்.



