வெய்யில் சுட்டெரிக்கும் நினைவுகள்! – கார்த்திக் புகழேந்தி

மூச்சைப் பிடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஒதுக்கியாவது இந்தப் பதிவை எழுதி முடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற உறுதியுடன்தான் ஆரம்பித்தேன். பத்து வருட காலம் பின்னால் போய்விட்டு வந்ததுபோல் இருக்கிறது.
மில்லினியம் வருடத்தின் முதல் பத்தாண்டுகளில் திருநெல்வேலியில் இருந்து மூட்டை முடிச்சுகளோடு, சென்னைப் பட்டணத்துக்கு வந்திறங்கினேன். அப்போது, மெரினா கடற்கரை, எழும்பூர், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் ஆகிய இடப்பெயர்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
பத்திரிகைச் செய்தி பார்த்து, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் கேஷியர் வேலையில் சேர்ந்தேன். சில மாதங்களிலேயே அங்கு சூழல் ஒத்துவரவில்லை என்று வெளியேறவும் செய்தேன். தங்குவதற்கு வேறு இடம் கிடையாது. மாற்று வேலைக்கும் வழி அமையவில்லை. ஊருக்கே திரும்பிவிடலாம் என்றால் அதற்குரிய சூழலும் அங்கில்லை.
கடைசியாக மிச்சமிருந்த சில்லரைகளைத் திரட்டிக் கொண்டு, புரசைவாக்கத்தில் இருந்து கோயம்பேடு பஸ் ஏறினேன். திருநெல்வேலி கடைசி பஸ் காத்திருந்தது. மெல்ல நடந்து பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தேன். எதிரே கோயம்பேடு மார்க்கெட். உள்ளே நுழைந்த போது, ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. ‘பார்க்கிங் டோக்கன் கட்டணம் வசூலிக்க ஆள் தேவை!’ தினசரி ரூ.270 சம்பளம். எட்டு மணிநேரம் ஷிப்ட். உடனடியாக அந்த வேலையில் சேர்ந்துவிட்டேன்.
பகலில் கோயம்பேடு, இரவில் ஏடிஎம் செக்யூரிட்டி கார்டு எனக் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, கொஞ்சம் காசு சேர்த்து, நீல்கிரீஸ் சூப்பர் மார்கெட் எதிரே ஒரு பழச்சாறு கடையைத் தொடங்கி, அது மூன்று கடைகளாக விரிவு பெற்று, கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம், ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது என் ஆரம்ப கால சென்னை வாழ்க்கையில்.
இதற்கிடையே நான் செய்த ஒரே நல்ல காரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்கள் வாசித்துக் கொண்டும், நினைத்ததையெல்லாம் எழுதிக்கொண்டும், அவ்வப்போது இலக்கியக் கூட்டங்களில் தலைகாட்டிக்கொண்டும் இருந்ததுதான். அந்தப் பழக்கத்தில்தான் என்னுடைய முதல் கதைத் தொகுப்பு உருவானது. செல்போனிலேயே எழுதி முடித்த தொகுப்பு.
மிகச்சரியாக, 11 வருடங்களுக்கு முன்பு, என்னுடைய முதல் கதைத் தொகுப்பைக் கண்ணில் காண்பதற்காக சென்னை புத்தகக் காட்சிக்குள் நுழைந்தேன். அதன்பிறகான காலகட்டங்களில் எழுத்தாளனாக, பதிப்பாளனாக, விற்பனையாளனாக, வடிவமைப்பாளனாக, பத்திரிகையாளனாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக, சிறப்பு விருந்தினனாக சென்னை புத்தகத் திருவிழாவில் வேறு வேறு வேஷங்கள் கட்டியிருக்கிறேன்.
சென்னை மட்டுமல்ல நெல்லை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, குமரி, கேரளம், பெங்களூரு, டெல்லி என்று பல்வேறு புத்தகத் திருவிழாக்களின் அனுபவங்கள் எனக்கு உண்டு. எல்லாவற்றிலும் ஸ்பெஷலானது சென்னை!
இப்போது (2026) நடைபெறுவது 49-வது சென்னை புத்தகக் காட்சி அல்லவா! முதல்முறை 39-வது புத்தகக் காட்சியில்தான் கடை விரித்தோம். சென்னை பெருவெள்ளம் நிகழ்ந்து முடிந்திருந்த காலகட்டம். நூலகம் பேசுகிறது’ என்ற இதழின் பெயரால் எங்களுக்கு அந்த அரங்கு ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில், எங்கள் ‘ஜீவா படைப்பகம்’ பெயரிலேயே அரங்கு கிடைத்தது. அரங்கு எண் 409.
2015-இல் ஜீவா படைப்பகத்தை நானும் நண்பனும் இணைந்து உருவாக்கினோம். நெல்லை கண்ணனின் குறுக்குத்துறை ரகசியங்கள், ஜோ டி குரூஸின் வேர் பிடித்த விளைநிலங்கள், சரவணன் சந்திரனின் கடலும் மகனும், விஷால் ராஜா, அரசன், மாதவன் ஸ்ரீரங்கம், சாரா, அர்ஷியா, ஐசக் பேசில், உஷாதீபன், கி.ரா, மு.வெங்கடேஷ், திலிப்குமார், ஜான் பிரபு என்று புதியவர்கள் புகழ்கொண்டவர்கள் நூல்களின் பதிப்பாளனாக மிகக் குறுகிய காலத்திலேயே வாய்ப்பு கிடைத்திருந்தது. வேறு பிற பதிப்பகங்களின் வெளியீடுகளையும் வாங்கி விற்கவும் செய்தோம். கைகளைச் சுட்டுக்கொள்ளாமல் கடை நடத்தத் தெரிந்திருந்தது.
எங்களுடைய அரங்கில் ஒரு புத்தகம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில், ஒரு சிறு துண்டு காகிகத்தில் அந்தப் புத்தகம் பற்றின என்னுடைய சொந்தக் குறிப்பை, ‘ஸ்டிக்கி நோட்’ஸில் எழுதி ஒட்டியிருப்பேன். அது அரங்குக்கு வரும் வாசகர்களை நின்று நிதானித்து, அந்தப் புத்தகம் பற்றிச் சில விநாடிகளில் சிறு அறிமுகம் ஏற்பட்டு, அதைக் கையில் எடுத்துப் பார்க்கவைத்தது. எனது சூப்பர் மார்கெட் வியாபார அனுபவம் அந்த யோசனை! ‘யாவரும்’ ஜீவகரிகாலன், ‘பத்துக்குப் பத்து அரங்கில் உட்கார்ந்துகொண்டு சிறுபத்திரிகை நடத்துகிறான் பார்யா!’ என்று மனந்திறந்து பாராட்டுவார்.
புத்தகங்களை அடுக்கும்போது மனித முகங்கள் அட்டைப்படமாக இடம்பெறும் நூல்களை, சுமார் நான்கு முதல் ஐந்தடி உயரத்தில் இருக்கும் அலமாரிகளில் வரிசையாக அடுக்குவேன். அப்போதுதான் வாசகரின் கண்களுக்கு நேராக அட்டைப்பட முகங்கள் தென்படும். புத்தகத் தலைப்புகளைவிட இந்த முகங்கள் சட்டென வாசகர்கள் மனதில் பதியும். முதல் தொடர்பாடல் உருவாகி விட்டால், பிறகு தலைப்புகளை வாசித்து, குறிப்புகளை வாசித்து, புத்தகத்தையும் கைகளில் எடுத்துப் பார்ப்பார்கள்.
அதேபோல நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களை மாற்றி, அடுக்கிக் கொண்டே இருப்பேன். கேட்டு வாங்கும் புத்தகங்கள் எவை, நாம் எடுத்துக் கொடுத்து விவரிக்க வேண்டிய புத்தகங்கள் எவை, வாசகருடைய வாசிப்பு அனுபவம், அவருடைய குணாதிசயம், முதலில் அவர் கைகளில் எடுக்கும் புத்தகம் எது என்பதையெல்லாம் கணித்து, கவனித்து என்னுடைய நேரங்கள் கழியும். கல்லாவில் உட்கார்ந்திருப்பதை அல்ல… பில் புத்தக ஸ்லிப்பில் இடம் பற்றாத அளவுக்கு ஒரு வாசகரிடம் புத்தகங்களை விற்பதையே நான் மிக விரும்புகிறவனாக இருந்தேன்.
அரங்கு முன்பணம், ஊதியம், தினசரி செலவுகள், நண்பர்களுக்கான டீ, காபி உபசரிப்பு என எல்லாவற்றையும் பத்து, பனிரெண்டு நாள்களில் நடக்கும் புத்தகத் திருவிழாவின் மொத்த விற்பனையின் 20 சதவீதத் தொகைக்குள் மீட்க வேண்டும். அப்படியென்றால் அரங்கின் ஒவ்வவொரு சதுர அடியும் விற்பனைக்கான இடமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப நம் அரங்கில் ஒவ்வொரு அங்குலத்திலும் எங்கே எந்தப் புத்தகம் வைத்திருக்கிறோம் எனத் துல்லியமாக அறிந்து சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும். பத்து நாளும் ஒரு புத்தகம் ஒரே இடத்தில் இருந்து, வாசகர்கள் கேட்கும்போது தேடியும் கிடைக்காமல், கடைசி நாளில் பெட்டி கட்டித் தூக்கிக்கொண்டு போவதால் பலனில்லை.
என்னுடைய இந்த விதிகளெல்லாம் நிறைய பேருடன் முரண்களை ஏற்படுத்தியிருக்கிறது. பொழுதுபோக்குக்காக அரங்கில் வந்து அமர்ந்து கொண்டு, வருகிற வாசகர்களிடம் தன்னை முன்னிலைப்படுத்தி கதை அடிப்பவர்கள், தன் புதிய புத்தகத்தை வாங்கச் சொல்லி வழிப்பறி பண்ணுகிறவர்கள், லோடு கணக்கில் தங்கள் பதிப்பகத்தின் நூல்களைக் கொண்டுவந்து இறக்கிவிட்டு, கடைசி நாள் வரை அதைத் திரும்ப எடுத்துக் கொள்ளவே செய்யாதவர்கள் எனப் பலருடன் முகத்துக்கு நேராக முரண்பட்டிருக்கிறேன். அதை நட்புடன் கடந்தவர்களும் உண்டு. ஆலகாலமாக இன்று வரைத் தங்கள் தொண்டைக்குள்ளேயே சுமப்பவர்களும் உண்டு.
சரி, இதெல்லாம் பதிப்பாளன், விற்பனையாளன் வேஷம். எழுத்தாளனாக எனக்கு புத்தகக் காட்சி கொடுத்தது மிகப்பெரிய சொத்து என் வாசக மனதுக்கான தீனி. 20 சதவீத லாபக் கணக்கு பேசினேன் இல்லையா… அந்த மொத்தத் தொகைக்கும் நான் வாசிக்காத புதிய புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவேன்.
ஒரு பெரிய கடலுக்குள் சின்னப் படகை எடுத்துக்கொண்டு வந்த சிறுவனைப்போல, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மீன்களை வலையிலேயே கட்டி இழுத்துக் கரை சேருவேன். புத்தகத் திருவிழாவின் கடைசி நாள் கோலாகலம் அது.
என்னைப்போல புத்தகங்களை வாசிக்கத் துடிக்கிற ஆயிரக்கணக்கான வாசகர்களின் மனதைப் படிக்கவும், அவர்களோடு உரையாடவும், பெயர்களால் மட்டுமே அறிந்த பலரை மனிதர்களாக, நண்பர்களாக, அண்ணன்களாக, அக்காள்களாக, அம்மைகளாக அடையாளம் கண்டுகொள்ளவும் சென்னை புத்தகத் திருவிழா எனக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்தது.
பிறகு சமகாலத்தில் எழுதியவர்களோடு பழக, உரையாட, அவர்கள் படைப்புகளை வாசிக்க, மேம்படுத்த, ரசித்து ரசித்து முழுப் புத்தகமாக உருவாக்க, அதைத் தூக்கிச் சுமந்து பிறரை வாசிக்கச் செய்ய என்று பல அனுபவங்களுக்குத் திறவுகோலாகவும் இந்தக் காலகட்டம் எனக்கு உதவியிருக்கிறது. இன்றைக்கு நான் இருக்கும் நிலையில் இருந்து திரும்பிப் பார்த்தால், இந்தப் பாதையில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விட்டவர்களில் நூற்றுக்கு எழுபது, எண்பது பேர்களைச் சென்னை புத்தகக் காட்சிதான் எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது.
மனிதர்களை அவர்களின் பெயர்களால் அவ்வளவு லேசில் நினைவில் வைத்துக் கொள்ளத் தெரியாத என் போன்றவர்களுக்கு, புத்தகக் காட்சியின் ஜோ ஜோ என்ற கசகசப்புக்கு நடுவே புன்னகையுடன், ‘எப்படி இருக்கீங்க கார்த்திக்?’ என்று கேள்வியை முடிக்கும் முன்பே கை குலுக்கத் தயார் ஆகிற முகங்கள் மிகப்பெரிய ஆதூலம்.
இந்த நகரத்தில் நான் தனியன் அல்ல என்று உணர்த்தியவை அந்த முகங்கள்தான். எனக்கென ஒரு தனித்த அடையாளம் இருப்பதை அந்தக் குரல்கள்தான் முதல்முறையாக ஒப்புக்கொண்டன. கைவிடப்பட்ட ஒருவனாக இருந்து நீங்கள் இதை அனுபவித்துப் பார்த்தால், என் உணர்வுகள் உங்களுக்குப் புலப்பட்டுவிடும். இதை நான் மிகக் கொண்டாட்டமாகவே இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
‘ஓநாய் குலச்சின்னம்’ அணிந்த சி.மோகன் அவர்களை ஒருமுறை பத்திரிகையாளனாக நேர்காணல் செய்தபோது சிகரெட் புகைக்கு நடுவே சொன்னார், ‘ஒரு படைப்பாளியாக நான் தனிமையில் இல்லை’ என்று. அந்த உணர்வை புத்தகத் திருவிழாக்களில் கண்டெடுத்தவன் நான். மிகக் கடைசியாக தலைமறைந்து வெளியேறி வந்த என்னுடைய ஊருக்கு முதல்முறை தலை நிமிர்ந்து நான் திரும்பச் சென்றதும் ஒரு புத்தகத் திருவிழாவில்தான். அன்று நான் மேடையில் அமர வைக்கப்பட்டேன். எழுத்து-வாசிப்பு-புத்தகம் எனும் பொதியை மட்டுமே சுமந்து அலைந்தவனின் பேச்சுக்குக் கைத்தட்டல்களும் கிடைத்தன.
தன் தகப்பனைக் கொன்றவர்களின் உயிரைக் குடிக்காமல் விடப் போவதில்லை என்று வெட்டரிவாளை முதுகில் தொங்கப் போட்டுக்கொண்டு, காடு மேடுகளில் அலைந்து திரிந்து, வழக்குகளில் சிக்கிச் சிறைக்குச் செல்லவிருந்த ஒரு சிறுவனை, அவன் தாய் சத்தியத்தை வாங்கிக் கொண்டு ஊரைவிட்டுத் துரத்தியடித்த பிறகு, சொந்த உறவுகளே பகைகொண்டு காத்திருந்த அவன் பிறந்த மண்ணுக்கு, அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வாகனம் வந்து வரவேற்று, புத்தகத் திருவிழா விழா மேடைக்கு அழைத்துச் சென்ற நிகழ்வுகளெல்லாம் புனைவுகளில்தானே சாத்தியம் என்று நினைப்போம். சமயங்களில் இவை நிஜத்திலும் நிகழ்வதுண்டு!



