கோபத்தில் மனம் எரிமலையாய் கொதிக்க, சென்னை செல்லும் ரயிலை எதிர்பார்த்து, சேலம் ஜங்ஷனில் நின்றிருந்தான் ராமநாதன். 35 வயதான தன் பேச்சைக் கேட்க மறுத்த தம்பியின் மீது கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவன் பிளாட்பாரத்தை நோட்டமிட்டான்.
நாளிதழ்கள் மற்றும் பிற புத்தகங்கள் விற்கும் சிறிய பெட்டிக்கடை அருகில், சக்கரம் வைத்த பலகையின் மீது அழுக்குத் துணியோடு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.
முழங்காலுக்கு கீழே இரு கால்களும் இல்லாமல், இரு தொடைகளையும் மடித்து அமர்ந்திருந்தவரின் இடது கையும் முழுமையாக இல்லாததைப் பார்த்த ராமநாதனின் பார்வை அவரை விட்டு அகலவில்லை.
சக்கரப் பலகையில் அமர்ந்திருந்தவர் பிளாட்பாரத்தில் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற பெண்மணி பத்து ரூபாய் தாளை அவரிடம் நீட்டினாள்.
அவர், “வேணடாம்மா, தேவைப்டுகிற வேற யாருக்காவது கொடுங்க..” – என்று சொல்லி பணத்தை வாங்க மறுத்தார். அவர் மறுப்புக்கு காரணம் புரியாமல் அந்தப் பெண் சற்று தூரத்தில் போய் நின்று கொண்டாள்.
“பஞ்சப் பண்ணாடையா இருந்தாலும் வெட்டிக் கௌரவத்துக்கு ஒன்னும் கொறச்சலில்லை..” – தம்பியை மனதில் நினைத்துக் கொண்டு சக்கரப் பலகை ஆசாமியையும் சேர்த்து மனதுக்குள் கறுவினான் ராமநாதன்.
ராமநாதன் பிறந்து பன்னிரண்டு வருடங்கள் கழித்து, அவன் தம்பி தங்கராசு பிறந்தான். ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் கட்டியிருந்த ஓட்டு வீட்டில் விவசாயிக்கே உரிய ஏழ்மை முத்திரையுடன் அவன் பெற்றோர் வாழ்ந்து வந்தனர்.
ராமநாதன் பள்ளிப் படிப்பு முடித்த பிறகு கல்லூரிப் படிப்பையும் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தான். படிப்பு முடிந்து, அரசு வேலையும் கிடைத்த ஒரு வருடத்தில் அவனது பெற்றோர் அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தனர். வேலைக்காக மனைவியுடன் சென்னையிலே நிரந்தரமாகத் தங்கி விட்டான் ராமநாதன்.
ராமநாதனின் தம்பி தங்கராசு எட்டாவது படித்துக் கொண்டிருந்த போது, அவன் தந்தைக்கு கைகால் இழுத்துக் கொள்ள, பேச்சு மூச்சு இல்லாத நிலையில் அவரை
மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான ஹார்ட் அட்டாக்கோடு முடக்குவாதமும் வந்துள்ளது என்று மருத்துவ மனையில் இருபது நாட்களுக்கு மேல் இருந்து வைத்தியம் பார்த்தனர். சாகக் கிடந்தவரை ஒருவழியாக மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
ராமநாதன் ஐந்து நாட்கள் மட்டும் லீவு போட்டு வந்து தந்தையைப் பார்த்துக் கொண்டான். அவன் தந்தை அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதும், ராமநாதன் தொடர்ந்து லீவு போடமுடியாது என்று சென்னைக்கு கிளம்பி விட்டான்.
தங்கராசு, தாயோடு கூட இருந்து மருத்துவமனையில் தந்தையைப் பார்த்துக் கொண்டான். கூடவே மாடு கன்றுகளையும், வயலில் நடுவதற்காகப் போட்டிருந்த நாத்துகளையும் கவனமாகத் தண்ணீர் பாய்ச்சி கவனித்து வந்தான்.
அவன் தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாலும், அவரால் எழுந்து நடக்க முடியாமல் படுக்கையோடு முடங்கி விட்டார்.
இருபது நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த தங்கராசுவைப் பார்த்து, “அப்பா ராசு…. நாத்துங்க இன்னேரம் வளர்ந்திருக்கும், அதுங்கள வயல்ல நடுவதற்கு ஏற்பாடு செய்யணும். நீபோய் வேலையாளுங்கள அழைச்சிட்டு வந்து அவுங்க கூட இருந்து அந்த வேலைங்களப் பார்த்துடு. நாத்து முத்திட்டா பிரயோசனம் இல்லாமப் போயிடும்…”
தந்தையின் சொல்லை மீற முடியாமல், தங்கராசு புத்தகப் பையை ஒரு மூலையில் போட்டுவிட்டு, விவசாய வேலையை கவனிக்க ஆரம்பித்தான். மீண்டும் பள்ளிக்குப் போக முடியாமல் வயல் வேலை, மாடு கன்றுகளை பார்த்துகொள்வது என்று வரிசையாக வேலைகள் இருந்து கொண்டே இருந்தது. தங்கராசுவின் படிப்பும் நின்றுபோனது.
அடுத்த பத்தாண்டுக்குள் அவன் பெற்றோர் ஒருவர் பின் ஒருவர் இறந்துவிட, தங்கராசு மட்டும் தனியாளாக விவசாயத்தைக் கவனித்து வந்தான்.
தந்தை படுத்துவிட்ட பத்தாண்டுகளில் ராமநாதன் நான்கு முறை மட்டும் வந்து பெற்றோரை பார்த்துவிட்டுச் சென்றான். தற்போது பெற்றோர் இருவரும் இல்லை என்ற நிலையில், பயிர் விளையும் நிலத்தை விற்றுவிட்டு, சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்ற முடிவோடு கிராமத்துக்கு வந்தான். தங்கராசு அண்ணனின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
“அண்ணா, எனக்குத் தெரிந்த தொழில் விவசாயம் மட்டும்தான். அப்பா படுக்கையோட கிடந்திருந்தாலும் சாகற வரைக்கும் அவரு எண்ணமெல்லாம் நிலத்தை சுத்தியேதான் இருந்தது. அவரு இறந்த பிறகு அம்மாவும் காலம்பூரா என்னோட வயல்ல நின்னு பாடுபட்டாங்க. அவங்க ரெண்டு பேரோட ஆவியும் இந்த நெலத்த சுத்திகிட்டேதான் இருக்கும். இந்த நெலத்த விக்கறதுக்கு ஒருகாலும் நான் ஒத்துக்க மாட்டேன்.
உனக்கு வேணும்னா வெளயறதுல உன் பங்குக்கு என்ன வருமோ அத அனுப்பி வச்சிடறேன்..”
உறுதியாகத் தம்பி பேசியதைக் கேட்ட ராமநாதனுக்கு கோபம் தலைக்கேறியது. கோமண த்துணியாட்டம் இத்தனூண்டு நிலம்..! இதுல என்ன வரப்போகுது, அத நான் வந்து அள்ளிக்கிட்டு போக….” கத்தினான் ராமநாதன்.
“அண்ணா, இந்த கோமணத் துணி நெலத்த வச்சிதான் அப்பா உன்னை படிக்க வச்சி, வேல வாங்கி தந்து, கல்யாணமும் செஞ்சி வச்சாரு. அதெல்லாம் மறந்துட்டு பேசாதே… சோத்துக்கே கஷ்டப்பட்டாலும் உழைக்கறது நம்ம நெலத்துல, இது நம்ம மண்ணு! இந்த நெனப்புல வயிறு நெறஞ்சிடுது.. நெலத்த விக்கறேன்னு சொல்லிகிட்டு இங்கே வராதே..”
கறாராகப் பேசிய தம்பியையும் அவன் கருத்தை ஆமோதித்து அவனுக்குச் சாதகமாக நின்ற ஊராரையும் எதிர்த்து வாதிட முடியாமல் வந்து விட்டான் ராமநாதன்.
‘நெலத்த விக்க விட மாட்டேன்னு எத்தன தைர்யமா சொல்லிட்டான்..! இவன் என்ன எனக்கு தர்றது…! சென்னைக்குப் போனதும் கேஸ் போட்டு என் பாகத்தைப் பிரிச்சு வாங்கிடணும்..’
ராமநாதன் தம்பி மீது எரிச்சலோடு வண்டிக்காக காத்திருந்தான்.
ரயில் வரவும் விடுவிடுவென ஏறி வசதியாக ஜன்னலோர சீட்டில் அமர்ந்த ராமநாதன், வண்டிக்குள் ஏறிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பயணிகள் அனைவரும் ஏறியபின், ஒரு போர்ட்டர், சக்கரப் பலகையில் அமர்ந்திருந்தவரை அந்தப் பலகையோடு மெல்லத் தூக்கி வண்டிக்குள் விட்டான். கூடவே அவருடைய ஜோல்னா பையையும் அவருடைய கழுத்தில் மாட்டி முன்பக்கமாகத் தொங்க விட்டான்.
சக்கரப்பலகை ஆசாமி தன் ஒரு கையால் பையிலிருந்து சில புத்தகங்களை எடுத்து கையில்லாத தோள்பட்டையில் வைத்துக் கொண்டு தன் தலையைச் சாய்த்து அந்தப் புத்தகங்கள் கீழே விழாதபடி அணைத்துக் கொண்டு, கழுத்தில் தொங்கிய புத்தகப் பையை மடித்திருந்த தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு ஒருகையை நிலத்தில் பதித்து, உடம்பை முன்னுக்குத் தள்ளி சக்கரப் பலகையை நகர்த்திக் கொண்டு வந்தார்.
ராமநாதன் சீட்டின் எதிர்புறத்தில் நடுவில் அமர்ந்திருந்த பெண்மணியின் அருகில் காலியாக இருந்த இடத்தில் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த புத்தகங்களை எடுத்து வைத்தார். ஏற்கனவே அவருக்கு ரூபாய் கொடுக்க முயன்ற அதே பெண்மணிதான் என்பதை அவரும் புரிந்து கொண்டார்.
அப்பெண்மணி புத்தகத்திலிருந்து நான்கை எடுத்துக் கொண்டு அவரிடம் நூறு ரூபாயை நீட்டினாள். அவர் நாலு புத்தகம் தொண்ணூறு ரூபாய் என்று கூறியபடியே, மீதி தரவேண்டிய பணத்தை தன் சட்டைப் பையில் துழாவிக் கொண்டிருந்தார்.
“வேண்டாம்ப்பா, மீதியை நீயே வச்சிக்க.” – என்று கூறியவளைப் பார்த்து ஒரு கையால் நெற்றியில் சல்யூட் அடிப்பது போல வணங்கியவர்,” அம்மா, இன்னைக்குப் பூரா இதுங்கள விக்கறதுல என்னோட தேவைக்கான பணம் கிடைச்சிடும். அதுவே எனக்குப் போதும்..
ஒரு வேலையும் செய்ய முடியாதவங்க நிறைய பேர் இந்த வண்டியில வருவாங்க , அவங்களுக்கு குடுத்துடுங்க. அவுங்களுக்கு இந்தப் பணம் தேவைப்படும். ரொம்ப நன்றிங்க.” – என்று கூறியபடி மீதி பத்து ரூபாயை அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து மீதி புத்தகங்களை தோளில் வைத்து தலைசாய்த்து அணைத்தபடியே தன் பலகையை நகர்த்திச் சென்றார்.
கொஞ்ச நேரத்தில் இரு கைகளும் இல்லாத பார்வையற்ற ஒருவனை அழைத்துக்கொண்டு, வயதான மூதாட்டி ஒருத்தி நடக்க முடியாமல் மெல்ல அடி மேல் அடி வைத்து நகர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவள் நீட்டியிருந்த குவளைக்குள் அந்த பத்து ரூபாய் விழுந்தது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமநாதனின் தலையில் வேகமாக யாரோ குட்டியதைப் போல உணர்ந்தான்.
சக்கரப் பலகையில் நகர்ந்து கொண்டிருப்பவனுக்கு இருக்கும் மனத்தெளிவு, தனக்கில்லையே என்று வருத்தப் பட்டான்.
சக்கரப்பலகை ஆசாமி கூறிய, ‘தேவைப்படுகிறவர்களுக்கு கொடுங்க‘ என்ற வார்த்தை மட்டும் ராமநாதனின் காதுகளில் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது.
இப்போது தேவை யாருக்கு? தனக்கா, தன் தம்பிக்கா..? யோசித்தான்… அவனுக்கு கிடைத்தது நல்ல முடிவு. வழக்குப் போட்டு தம்பியிடமிருந்து சொத்தைப் பிரித்து வாங்க வேண்டும் என்று உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த கோபம் தணிந்தது; மனம் அமைதியானது. ராமநாதன் தம்பியை பாசத்தோடு நினைத்துக் கொண்டான்.