
மார்ச் 7 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு இந்நிகழ்வு.
திடீரென சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படும் அகத்திய கருத்தரங்குகளுக்கு பின்னால் இருக்கும் மொழி சார்ந்த அரசியலையும், திணிக்கப்படும் கற்பிதங்களையும் கட்டுடைக்கும் வகையிலான தரவுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது நிகழ்வு.
தமிழ் பண்பாட்டின் அடிமடியில் ஏன் அகத்தியரை கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்? அதுவும் தொல்காப்பியருக்கு ஆசானாக என்பதற்கான காரணமும் இன்றைய அரசியல் சூழலில் வலியுறுத்தப்படும் மொழிக் கொள்கையும் ஒன்று என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
சிவபெருமான் திருமண நிகழ்வில் பங்கு கொள்ள கயிலை மலையில் அனைவரும் ஒன்றுகூட எடை தாளாமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, தெற்கை சமன்படுத்த வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புராணங்களால் அனுப்பப்பட்ட கும்பமுனிதான் அகஸ்தியர். இன்றைய சூழலில் அவர் மீண்டும் அழைத்து வரப்படுவதின் காரண காரியங்களை நாம் ஆழ்ந்து உற்று நோக்க வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல இன்றும் தென் நிலத்தை தாழ்த்தத்தான் அழைத்து வரப்படுகிறார் என்பதுதான் இருக்கும் ஒற்றுமை.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்பது வள்ளுவர் காட்டிய வழி. கற்பித்தங்களை கட்டுடைப்பது நம் கடமை அந்த வகையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் அற சீற்றத்தில் தெறித்த கருத்துகள் இதோ…
ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய இந்த உரையை கே.என். சிவராஜ பிள்ளை அவர்களுக்கு நடுகல்லாக சமர்ப்பிக்கிறார். கே.என். சிவராஜ பிள்ளை அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பணியாற்றியவர். அவர் எழுதிய நூல்தான் ‘Agastya in the Tamil Land’. தமிழ் மாணவராகிய ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் தான் அகஸ்தியர் குறித்து பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ இதுவரை படித்ததில்லை. ஆனால், இந்த நிகழ்விற்காக அகஸ்தியர் குறித்து ஆய்வு செய்து தரவுகளை சேகரித்ததாகப் பகிர்கிறார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் அருங்காட்சியகத்தில் அகஸ்தியர் சிலைகள் உள்ளன. அவை பீகாரில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அகஸ்தியர் பெயரிலான நூல்கள் என்று தேடுகையில் ஆன்மீகம் 8, இசை 1, இந்தி பயிற்சி நூல் இரண்டு என எண்ணற்ற நூல்கள் தேடுபொறியில் வரிசைக்கட்டி நிற்பதை குறிப்பிடுகிறார். அதிலும் அகஸ்தியர் இந்தி பயிற்சி நூல் – ஆக்கியோர்: திறமைமிக்க தமிழாசிரியர்கள் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டிருப்பதையும் அப்படி திறமை மிக்க தமிழ் ஆசிரியர்கள் யார்? என்றும் கேள்வி எழுப்புகிறார். அகஸ்தியர் பெயரில் இரண்டு பத்திரிகைகள் துவங்கப்பட்டு, தொடர்ந்து வந்ததைக் குறிப்பிட்டு ஆனால், தொல்காப்பியரின் பெயரில் யாரும், எவரும், எப்பொழுதும் பத்திரிக்கையை துவக்கவோ நடத்தியதோ இல்லை என்பதையும் பதிவு செய்கிறார்.
அ.சிதம்பரம் அவர்கள் எழுதிய ‘அகஸ்தியர் வரலாறு’ எனும் நூலில் அகஸ்தியர் என்பவர் கிமு 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்ததாகவும், அவர் ஒளியர் சமூக இனத்தைச் சேர்ந்ததாகவும் தகவல் இருப்பதை குறிப்பிடுகிறார். மேலும் கிமு 14,550 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அகஸ்தியர் தமிழர் எனவும், கிமு 14,058 வருடத்தில் ஒளியர் இனத்தை சேர்ந்த அகத்தியர் ஒருவர் என தொடர்ந்து, 8000 வருடத்தில் லோபமுத்திரையோடும் அதைத் தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டு வரை இருக்கக் கூடிய தரவுகளையும் முரண்களையும் பட்டியலிட்டு இதை உரையாடுவது மானிட முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
இந்நிகழ்வில் அகத்தியர் என்று குறிப்பிடாமல் அகஸ்தியர் என்று வட எழுத்தை பயன்படுத்தியிருப்பது ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால், காரண காரியம் கருதி தொல்காப்பியத்தின் விதிகளை மீறுவதாகவும் குறிப்பிடுகிறார். அகத்தியர் என்பது ஒட்டுச்சொல் அகமாய் நின்ற விந்தியத்தின் அகத்தை அடக்கியவர் என்ற சுட்டுப் பெயராகவும் இருப்பதை விளக்குகிறார். இந்த வேர்ச்சொல் ஆய்வு குறித்தெல்லாம் தனக்கு விருப்பங்கள் இல்லாத நிலையில். இரானிய மொழியில் கஸ்தா என்றால் குற்றம் என்பதாகவும் அகஸ்தா என்றால் குற்றமற்றவன் என்பதாகவும் பொருள்படும். உதாரணமாக தர்மம் அதர்மம் போன்றே கஸ்தா அகஸ்தா என்பதையும் ஒப்பிட்டுச் சுட்டுகிறார். எல்லா உண்மைகளுக்குமான உரைகல்லாக அவர் தொடர்ந்து தொல் தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் அது கையாளும் சில விழுமியங்களையும், முன்னுரிமைகளையும் பயன்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார்.
புறநானூறு 335 பாடல் ‘நெல் உகுத்துப் பரவும் கடவுள் இலவே’ என்பதைக் குறிப்பிட்டு அது அடையாளப்படுத்தும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என நான்கு குடிகள் குறித்து மாங்குடிகிழார் அவர்கள் குறிப்பிட்டதையும் குறிப்பிட்டு ஏன் நான்கு? நான்கு என்பது நான்கு வர்ணங்களுக்கு எதிராக தொல்தமிழ் இலக்கியங்கள் முன்னிறுத்தும் கருத்து. மேலும் தொல்தமிழ் இலக்கியங்கள் எப்பொழுதும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களை பேசுவதாகவே இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, மக்களின் வரலாறே வரலாறு; மற்றவையெல்லாம் வாய்க்கால் தகராறு என்று சங்க இலக்கியத்தின் எளிமையான விழுமியங்களை குறிப்பிட்டார்.
பிம்பச் சிறை உடைக்கும் பேரிசை தமிழ் என்று கூறி அசுரர், அமரர், வாசுகி பாம்பு, பாற்கடல், அமுதம் என புராணக் கதைகளில் கட்டமைக்கப்படும் இந்திர பிம்பம் இங்கு உடைக்கப்படுவதையும், பகிர்ந்துண்ணும் பண்பாட்டை சங்க இலக்கியம் பாடுவதையும் ஒப்பிடுகிறார்.
அகஸ்தியரின் சாபங்கள், அவருடைய தெற்கு புலம்பெயர்வு, தெய்வத்தன்மை பெற்ற பெற்றோர்கள், விந்திய மலை, மகாராஷ்டிரா, லோபமுத்திரை மணந்தது போன்ற புராண இதிகாசங்களைப் பகிர்ந்து, பத்துப்பாட்டு மதுரைக்காஞ்சியில் முதல் முதலாக நச்சினார்க்கினியரால்தான் அகஸ்தியம் கோர்த்து விடப்பட்டது என்பதற்கான தரவுகளைப் பகிர்ந்தார். புராணக்கதை மரபு வடக்கத்திய பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அகஸ்தியர் மரபை தமிழ் மரபு ஏற்றுக்கொண்டதற்கான காரணம் மேல்நிலையாக்கம், கூட்டு உளவியல், புனிதத் தன்மை என்ற தமிழ் சமூக சரிவின் காரணங்களை மற்றும் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் அகஸ்தியர் கோவில்கள் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார்.
கே என் சிவராஜ பிள்ளை அகத்திய சூத்திரங்கள் என்பவை தமிழில் பல்வேறு காலகட்டங்களில் எழுதி செருகப்பட்டது என்று குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இவற்றையெல்லாம் மதித்து விவாதிக்க ஒன்றுமில்லை தெய்வத் தன்மை,, சைவ சித்தாந்தங்களோடு ஏற்பட்ட கூட்டணியே காரணம் என்கிறார். எப்படி ஒருவரே குஜராத் சாளுக்கிய மன்னனின் புரோகிதராகவும், பாண்டிய மன்னனின் புரோகிதராகவும் இருந்திருப்பார்? அதுவும் ஒரே காலகட்டத்தில்? நம்ப முடியாததாக இருக்கிறது என்கிறார் கே. என். சிவராஜ பிள்ளை. அவர் இறுதியாக அகஸ்தியர் எனும் ஆளுமை தென்னிந்தியாவை ஆரியமயமாக்கும் ஒரு குறியீடு என்று குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
அகஸ்திய பள்ளிகள், கோயில்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன மேலும் அகஸ்திய பர்வதா, அகஸ்தியன் பாளையம், அகஸ்தீஸ்வரம், வாரணாசியில் அகஸ்தா, அஜர்பைசானில் அகஸ்தமி, ஈரானில் அகஸ்ட் போன்ற இடப்பெயர்கள் மற்றும் இந்தோனேசியா, கம்போடியா, வியட்நாம் போன்ற தெற்காசிய நாடுகளில் அகஸ்தியர் சிலைகள், கிராந்த எழுத்து கல்வெட்டுகள் கிடைத்ததையும் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே ஒரு கிராந்த கல்வெட்டு மட்டுமே அகஸ்தியர் பெயரோடு கிடைத்ததையும் குறிப்பிடுகிறார்.
அகஸ்தியர் தோற்றமும் பானை தொடர்பும் அகஸ்தியரின் பிறப்பு குடத்தில் நிகழ்ந்ததால் அவர் குடமுனி என்று அழைக்கப்படுகிறார் என்பதை சுட்டிக்காட்டி, அந்தக் குடம் உலோகப் பானையா? மண் பானையா? என்பதற்கான ஆதாரம் தேடி கடைசியில் அதற்கான விடை சிகாகோவில் கிடைத்தது என்றும், அது ஒரு மண்பானைதான் எனும் சான்று பகிர்கிறார். தொன்ம மரபுக் கதையாக மித்ரா, வருணா இருவரும் தேவலோக ஊர்வசி பற்றி கனவு கண்டு, இச்சையின் காரணமாக விந்து வெளியேற அதை கலயத்தில் சேமித்து அதிலிருந்து பிறந்தவர் அகஸ்தியர் அதனாலயே அவர் மைத்ரவருணி எனும் தொன்மை மரபு கதைகளை குறிப்பிட்டு, இது எல்லாம் சாமானியனுக்கு அப்பாற்பட்டது.. “தையும் தாண்டி புனிதமானது” என்று நகைச்சுவை மேலிட குறிப்பிட்டார்.
ஆரிய வடக்கு எனும் தலைப்பில் அகஸ்தியரின் ஆசிரமம் வாரணாசியிலும், எல்லையாக இமயமலையும் இருந்ததையும், அவருடைய கோபமும் சாபமும் அஸ்திரங்களாக இருந்ததையும், பயண பாதையாக விதர்பாவிலிருந்து தொடங்கி மகாராஷ்டிராவில் தெட்க்ஷணகாசி என்று தொடர்ந்து தமிழகத்தில் தென்காசி பொதிகை மலை என்று தொடர்புறுவதையும், பொதிகை மலையிலேயே அவருடைய முதற்சங்கம் துவங்கப்பட நூல்களை எழுதினாராம் என்றும், காவேரி தாமிரபரணியை கையில் கொண்டு வந்தவர் என்றும் கட்டமைக்கப்படுவதை சுட்டிக் காட்டுகிறார்.
பல்லவர் காலத்தில்தான் கிராந்த மொழி ஆட்சி மொழி போல கொள்ளப்பட்டு வட எழுத்துக்கள் மாமல்லபுரத்தில் பரவத் தொடங்கின. அர்ஜுன தபசு போன்ற பல்லவ கிராந்தங்கள் பரவ, எதிர்த்து தோன்றிய வட்டெழுத்து தமிழைக் காப்பாற்றி நின்றது என்பதற்கான சான்றை பகிர்ந்தார். மலையாளம் காப்பற்றப்பட முடியாமல் போனதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார். தமிழ் நிலைத்ததற்கான காரணம் வட்டெழுத்து அதன் வரி வடிவத்தில் இயங்கி செழித்தது என்று குறிப்பிடுகிறார்.
அகஸ்தியரின் திராவிட பின்னணிக்காக அகத்தி மரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு அகஸ்தியரின் குடிலைச் சுற்றிலும் அகத்தி மரங்கள் நிறைந்திருந்ததாக குறிப்பிடப்படுவது உண்மையெனில், அகஸ்தியர் திராவிடர் என்றால் ஏன் ஒரு வடஇந்திய முனிவராக வரையறுக்கப்படுகிறார் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
மலையாளத்தில் அகத்தி என்று இருப்பது கன்னடத்தில் அகசே என்றும் தெலுங்கில் அகஸ்தே என்று திரிகிறது. இன்று மலையாளம் தன்னுடைய மூலத்தை இழந்து விட்டு நிற்பதையும் பதிவு செய்கிறார்.
அகஸ்தியரின் சாபங்கள் சார்ந்த மரபுக்கதைகள்
நகுசா இந்திராணி மீது ஆசை கொண்டு முனிவர்களை பல்லாக்கு தூக்க வைக்க ‘சர்ப்பா சர்ப்பா’ என்று வேகம் கூட்டச் செய்ய சவுக்கால் அடித்த நகுசாவை மகா சர்ப்பமாக மாற சாபமிடுகிறார் அகஸ்தியர். இன்னொரு முறை அகஸ்தியரை கௌரவிக்க ஊர்வசி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க ஜெயந்தாவை பார்த்து ஊர்வசி சற்று நேரம் காதல் வயப்பட, இசைக் கருவி வாசித்த நாரதரும் ஒரு கணம் திணற மூன்று பேருக்கும் சாபம் விட்டதாகவும் அவருடைய சாபக்கணக்குகள் தொடர்கின்றன. எல்லாவற்றுக்கும் உச்சமாக அகஸ்தியரின் மாணவரான தொல்காப்பியரை தன்னுடைய மனைவியை அழைத்து வர அனுப்ப, நீர் மிகுந்திருந்த ஆற்றை கடப்பதற்காக குச்சியை ஒருபுறம் நீட்டி அடுத்த பக்கம் லோபமுத்திரையை பிடித்துக் கொண்டு கடந்து வரச் செய்ததற்காக அவரை சாபித்ததாகவும் மரபுக்கதைகள் தொடர்கின்றன. அதேநேரத்தில் மரபுக் கதைகள் என்பது இந்திய நிலத்திற்கு மட்டும் புதிது அல்ல. கிரேக்கம், தெற்காசியா, தென் அமெரிக்கா என நிறைய கதைகள் உண்டுதான். ஆனால், அவர்கள் உண்மையை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் நாம் புராணங்களை மீண்டும் பிடிக்கத் தொடங்கி இருக்கிறோம் என்று சூழ்நிலையின் தன்மையை சுட்டிக் காட்டுகிறார்.
அகஸ்தியர் ஒருவரா பலரா என விவாதித்து களைத்து விட்டது உலகம். அகஸ்தியர் லோபமித்ரா குறித்த நேர்வு ஆய்வில் இருவரும் முனிவர், இருவரும் கவிஞர், அவர்களுடைய மகனும் கவிஞர், மூவரும் கவிபாடி ரிக் வேதத்தின் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படுவதைக் குறிப்பிட்டு மதுரை அ. வெள்ளாளப்பட்டியிலும், மன்னார்குடி மரவாக்காட்டிலும் அகஸ்தியர் லோபமுத்திரை சிலைகள் இருப்பதை சுட்டிக்காட்டி, ரிக் வேதத்தின் தொடர்ச்சி விதர்பாவில் இருந்து வந்து மதுரை மன்னார்குடி வரை அது நீண்டிருப்பதையும் குறிப்பிடுகிறார்.
“இந்த புராணங்களிலோ மரபுகளிலோ கதைகளிலோ எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை. ஆனால், எனது பிரச்சனை அகஸ்தியருக்கும் இந்திய துணை கண்டத்திற்கும், தென்பகுதிக்கும், தமிழ் நிலத்திற்கும், மொழிக்கும் இலக்கணத்திற்கும், ஆறுகளுக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்பதுதான். திறந்த மனதுடன் உரையாட வேண்டிய தருணம் இது. நான் தரவு சார்ந்து இயங்குபவன்” என்று தரவுகளை முன் வைக்கிறார்.
தமிழ் நிலத்தில் அகஸ்தியர் என்று பார்க்கும்போது பாண்டிய மன்னன் பொதியை மலையோடுதான் தொடர்பு படுத்தப்படுகிறாரே தவிர அகத்தியரோடு அல்ல. புறநானூறு, நற்றிணையில் அகஸ்தியர் இல்லை. பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சியில் வரும் ‘பொதியல்’ என்பது பொது இடத்தை குறிப்பதாகவும், தாலமி குறிப்பிட்டிருக்கும் ‘பெட்டிகோ’ என்பது பொதிகை மலையை தான் குறிப்பிடுகிறதை தவிர அகஸ்தியரை அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.
மதுரைக்காஞ்சி குறிப்பிடும் முதுகடவு என்பதை கடவுளோடு தொடர்புபடுத்திக் ஒப்புக்கொள்ள முடியும். ஆனால், முதுகடவு என்பது அகஸ்தியர் என்றும், தென்னவன் என்பது ராவணன் என்றும் சொல்லும் நச்சினார்க்கினியரின் உரை ஒரு திரிபுவாதம் என்றும் குறிப்பிடுகிறார்.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் ராவணன் கோவில்கள் இருப்பதையும், ராஜஸ்தானின் முல்கில் பழங்குடியினர்கள் தாங்கள் இராவண வழியில் தோன்றியவர்கள் என்று கூறிக்கொள்வதையும் சுட்டிக்காட்டுகிறார். கோண்டு பழங்குடியின மக்கள் தசரா திருவிழாவில் ராவண கொடும்பாவி கொளுத்தக்கூடாது என்று வருடந்தோறும் ஆட்சியரிடம் மனு கொடுப்பது குறித்தும் குறிப்பிட்டு, ஆக கதை நடந்தது ஒரு பகுதி; கற்பிதங்கள் சொல்லப்படுவது இன்னொரு பகுதி என்றும் குறிப்பிடுகிறார்.
தொல் தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் இயற்றுவதற்கு எவரேனும் தலைமை தாங்கி இருந்தால் அது “மாங்குடி மருதன் தலைமை ஆக” என்னும் குறிப்புகளை சுட்டிக்காட்டி அது அகஸ்தியர் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். “அகஸ்தியர் கதைமரபுப் படி தொல்காப்பியர் அவரது மாணவர் அல்லவா? 12 மாணவர்கள் அவருக்கு சீடராக இருந்ததாக குறிப்பிடும் மரபில், முதல் இலக்கணம் என்று குறிப்பிடப்படும் தொல்காப்பியம் 23 சதவீத நூற்பாக்கள் எனக்கு முன்னால் இருந்த புலவர்கள், “எம்மனார் புலவர்” என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர எங்கும் அகஸ்தியரின் பெயர் இல்லை. இதை முதன் முதலில் கிளப்பிவிட்டது யார் என்றுதான் தெரியவில்லை” என்கிறார்.
அகஸ்த்தியர் கதை மரபுப்படி அவரின் மாணவர்களாக குறிப்பிடப்படும் தொல்காப்பியர், அணிந்துரை எழுதிய பனம்பாரனார் மற்றும் அதங்கோட்டாசான் என மூவருமேவா அகஸ்தியரை மறந்து விட்டனர்? என்று வினவுகிறார். இவர்கள் மூவரும் அகஸ்தியரை எழுதவில்லை. ஏனென்றால் அனேகமாக இந்த மூவருக்கும் அகஸ்தியர் என்றால் யாரென்றே தெரியாது. கையில் சொம்பு வைத்திருப்பதாலேயே அகஸ்தியர்கள் தமிழுக்கு நாட்டாமை ஆகி விட முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
17-ஆம் நூற்றாண்டில் சுவாமிநாத தேசிகரால் எழுதப்பட்டு, சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்ட இலக்கணக் கொத்து என்னும் நூல் ‘இலக்கணக் கொத்து அல்ல; அது இலக்கணக் கூத்து!’ என்று குறிப்பிடுகிறார். ‘பத்துப்பாட்டு, பதினொன்மேல் கணக்கெல்லாம் படித்து வீணாக்காதே, ஐந்து எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் எப்படி மொழியாகும்? 247 எழுத்துக்கள் உள்ள தமிழில் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே சமஸ்கிருதத்தில் இல்லை. மற்ற அனைத்துமே இரண்டையும் சமம் செய்து விடுவதால் மீதம் இருக்கும் அந்த ஐந்து எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு அது எப்படி ஒரு மொழியாக முடியும்?’ என்று இலக்கணக் கொத்து நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அது குறித்து பவானந்தம் அவர்கள் எழுதிய பேரகத்திய தொகுப்பைச் சுட்டிக்காட்டிய கே.என். சிவராஜ பிள்ளை அது ஒரு வெத்துவெட்டு புராணப் பட்டாளம் என்கிறார்.
ஏன் இப்பொழுது அகஸ்தியர் மேடையில்? 2024 டிசம்பர் 31 டேவிட் பிராலி என்பவர் ஒரு கட்டுரை எழுதுகிறார் ஹரப்பா இப்பொழுது பாகிஸ்தானில் இருப்பதால் ஹரப்பா பண்பாட்டை இனி வேதிக்- சரஸ்வதி அல்லது சரஸ்வதி- சிந்து நாகரிகம் என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்று கட்டுரை எழுதினார். அதை மறுத்து முதன் முதலில் தோண்டப்பட்ட இடத்தின் பெயரைத்தான் அது சார்ந்த பண்பாடுகள் வெளிப்படும் இடங்களுக்கு சூட்ட வேண்டும் என்று வெளியிடப்பட்ட கட்டுரையும் ஆய்வாளர் பகிர்ந்தார்.
டேவிட் பிராலியின் இந்த கட்டுரை ஏன் என்றால் 2024 பிறக்கப்போகிறது. 1924-இல் சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி நாகரிகம் என்பது ஒரு திராவிடப் பண்பாட்டைச் சார்ந்ததாக இருக்கிறது என்று உலகிற்கு முதலில் அறிவித்ததை சுட்டிக்காட்டி அதன் காரணமாகவே இன்று புதிதாக சரஸ்வதி நாகரிகம் என்கிற கருத்தியல் துவங்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார். டேவிட் பிராலி திராவிட பண்பாடு என்பது வேதிக் பண்பாட்டில் இருந்து உருவானது, வடக்கிலிருந்து பரவியது, ரிக் வேதத்தில் இருந்து உருவானது என்பதை அகஸ்தியர் மூலம் திராவிடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். அகஸ்தியர்தான் கடல் தாண்டி பயணம் செய்ய கற்றுக் கொடுத்தவர் என்று குறிப்பிடுவதையும் அங்கு சுட்டிக்காட்டுகிறார். டேவிட் பிராலி என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் பின்பு அவர் மதம் மாறி பண்டிட் வாம தேவ சாஸ்திரி என்று பெயரை மாற்றிக்கொண்டார். 2015-இல் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.
அகஸ்தியர் வேளாண்மையை தமிழர்களுக்கு கற்றுக் கொடுத்ததாக குறிப்பிடவதை சுட்டிக்காட்டி சங்க இலக்கியம் உழவுத் தொழிலை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதையும் 34 இடங்களில் உழவன், உழவு போன்று சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் வையையை பாடி சிறப்பு செய்த தமிழ் செவ்வியல் இலக்கியத்திற்கு பின்வந்த இலக்கணத்தை யாரோ வந்து எழுதியதாக குறிப்பிடுவதை வருத்தமோடு சுட்டிக்காட்டுகிறார்.
“இந்திய பன்மியம் ஒரு உருக்குப்பானை அல்ல, சாலட் கிண்ணம் அல்ல, இந்தியா ஒரு மழைக்காட்டு பன்மியம் என்பதை குறிப்பிட்டு இங்கு விழுந்ததெல்லாம் முளைக்கும்; முளைத்ததெல்லாம் தழைக்கும், ஆகவே, வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வோடு தொடர்ந்து நாம் உரையாட வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டார். ஆயினும் “அகத்தியர்கள் ஓய்வதில்லை” என்று குறிப்பிட்டு நம்முடைய மொழி சார்ந்த பண்பாடு சார்ந்த தாக்குதல்கள் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, “அகத்தியர் தொல்காப்பியரின் கட்டைவிரல் மீது திணிக்கப்படும் இன்னொரு துரோணர். ஆனால், தொல்காப்பியர் இன்னொரு ஏகலைவன் அல்ல!” – என்றும் குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.
அகஸ்தியரை ஆய்வு செய்ததன் மூலம் இன்றைய அரசியலின் அப்பட்டமான முகமூடியை கிழிப்பதாக இருந்தது ஆய்வாளர் ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் உரை.