
(கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதைகளை முன்வைத்து)
கவிதையில் ஒரு காட்சியைக் கூறுவதென்பது, கவிதை மொழியில் அக்காட்சியின் இயல்பை, அழகியலை மட்டுமே சொல்வது என்ற கூற்று, சேவற்கோழிகள் பொழுது விடிவதற்காக மட்டுமே கூவுகின்றன எனச் சொல்வதை ஒத்ததாகும். அதே சமயம் கவிதையில் இடம்பெறும் காட்சிகள் ஒரு படைப்புச் செயற்பாட்டின் தற்செயலான இணைப்பும் அல்ல.
நாம் அன்றாடம் காணும் காட்சியையே கவிஞனும் காண்கிறான். ஆனால், நாம் காணும் காட்சிகள் கவிஞனின் தனித்த படைப்புச் செயற்பாட்டில் இன்றியமையாத காட்சிகளாக, உன்னத அனுபவத்தை வெளிப்படுத்துவனவாக, உணர்வெழுச்சியின் காரணிகளாக
முன்வைக்கப்படுகின்றன. காட்சியில் நம் நுண்ணுணர்வுக்குத் தப்பிய ஒன்றைக் கவிஞன் தன் கவித்திறத்தால், படைப்பாளுமையால் நமக்குச்
சுட்டிக் காட்டுகிறான். கவிஞன் தன் அனுபவத்தால், மொழித்திறனால், அக்காட்சியை ஓர் உணர்வாக, கருத்தாக, விளக்கிக் கூற முடியாத மனநிலையாகவும் உருமாற்றிவிடுகிறான். இப்படிச் சொல்லும்போது ஒரு அடிப்படையான கேள்வி நமக்குத் தோன்றக்கூடும்.
அதாவது, நாம் காணும் காட்சி கவிஞனுக்கு வேறொன்றாகத் தெரியவும், அதனால் வெளிப்படும் கவிதையில், கவிஞன் கண்ட காட்சியைக் கவிதை மூலம் வாசகன் கண்டுணர்வது எப்படி? என்ற கேள்விதான் அது. உண்மையில் அதைக் கவிதையே முடிவு செய்கிறது. வாசகனுக்குக் கவிஞனின் காட்சியைக் கண்டுணரும் வழியைக் கவிதையே ஏற்படுத்தித் தருகிறது.
கவிஞனுக்குக் காட்சி தரும் உணர்வு “மழையோ, மரகதமோ, மழைமுகிலோ“1 என காட்சியைத் தொடர்ந்து வரும் உணர்வு மயக்கச் சொற்களாகவோ, “வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட” *2 என்னும் தற்குறிப்பு விளக்கமாகவோ, உணர்வின் முனையை நிமிண்டும் “மெல்ல கட்டவிழும் பவழமல்லி “*3 போன்ற ஒன்றாகவோ இருக்கலாம். இப்படி இன்னும்…
உண்மையில் அதைக் கவிதையே முடிவு செய்கிறது. அதை உத்தி எனக் கொண்டு, அதில் ஒரு வகைமை குறித்தே இக்கட்டுரை பேச விழைகிறது.
ஒரு காட்சியைக் கூறி, அதன் இயல்பை,அழகை முன்மொழிவது அல்லது ஒரு காட்சியைக் கூறித் தொடர்ந்து தன் கருத்தை விளக்கிக் கூறுவது அல்லது ஒரு காட்சியைக் கூறிச் சில சிறப்புச் சொற்களால் தான் கூற வந்ததை உணர்த்திவிடுவது போன்ற வழக்கமான உத்திகளைத் தவிர்த்து, கவிஞன் தான் காணும் காட்சியைத் தன் அகக் காட்சியுடன் இணைத்து ஓர் உணர்வு முடிச்சை உருவாக்கும் உத்தி இது.
கவிஞன் தான் காணும் காட்சியால் தனக்கு ஏற்படும் அல்லது தான் அடையும் உணர்வுநிலையை இன்னொரு காட்சியாக்கிக் கூறுவதாகும்; அதாவது புறக்காட்சியால் உந்தப்பட்ட கவிஞன், காட்சியால் அடையும் உணர்வை இன்னொரு அகக்காட்சி கொண்டு நிறுவுவதாகும்.
கவிதையில் புறக்காட்சியும் அகக்காட்சியும் அருகருகே வைக்கப்படுகின்றன. கண்ணால் காணும் காட்சி ஒன்றையும் கண்ணால் காண முடியாத, உணர மட்டுமே முடிந்த காட்சி ஒன்றையும் ஒரே கவிதையில் காட்டுகிறான் கவிஞன். இந்த உத்தி கவிஞனின் மனநிலையை மிச்சம் வைக்காமல் காட்டிவிடக்கூடிய பயனை வாசகனுக்குத் தந்து விடுகிறது. மரபின் தொடர்ச்சியாக இந்த உத்தி பயன்பட்டு வருவதைப் பாரதியின் ஒரு கவிதையைத் தொட்டு நாம் பேசத் தொடங்கலாம்.
தன் குழந்தை விளையாடுவதைத் தகப்பன் பார்க்கிறான். குழந்தை விளையாடும் அழகைக் கண்டு அதை வாரி அணைத்துக் கொள்ள அவனுக்குள் வாஞ்சை பெருகுகிறது. இந்தக் காட்சியையும் காட்சியால் விளையும் உணர்வையும் கவிதையில் ஒரு சேர கொண்டு வர விரும்பிய பாரதியிடம் இந்த உத்தி வெளிப்படுகிறது.
பாரதியின் ‘கண்ணம்மா – என் குழந்தை’ பாடலில், தன் குழந்தை விளையாடுவது தகப்பன் சொற்களில் காட்சியாக விரிகிறது.
” ஓடி வருகையிலே – கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ“
என்ற வரிகளில் குழந்தை ஓடி வரும் புறக்காட்சியும் அதனால் விளையும் இன்ப உணர்வுமே கவிதையாகின்றன. ஆனால்,
” ஆடித் திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவிதழுவுதடி“
என்ற வரிகளில் குழந்தை ஆடித் திரியும் புறக்காட்சியின் மகிழ்வுணர்ச்சி வெறும் உணர்வுச் சொல்லாக விவரிக்கப்படாமல், தந்தை உடலைவிட்டு எழுந்து ஆவியாகச் சென்று குழந்தையைத் தழுவும் இன்னொரு அகக்காட்சியாகக் கவிதையில் கூறப்படுகிறது. குழந்தை ஆடித் திரியும் புறக்காட்சி, தந்தையின் ஆவி குழந்தையைத் தழுவும் அகக்காட்சியுடன் இணைகிறது. இங்கு இரு காட்சிகள் ஒரு சேர இணைந்து ஒரு தனித்துவமான உணர்வு நிலைக்குக் கவிதையைக் கொண்டு செல்கிறது. பாரதியிடம் கண்டு மகிழ்ந்த இந்த உத்தி, நவீன கவிதைகளில் முகுந்த் நாகராஜனிடமும் வெளிப்படுகிறது.
காட்சி 1
————–
அப்பாவும் மகனும் விளையாடுகின்றனர். அப்பா மகனுக்குப் பந்து வீசுகிறார். குட்டிப் பையனான மகனுடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டே பந்து வீசுகிறார். இது போன்ற காட்சியை நாம் பலமுறை கண்டிருப்போம்; கடந்தும் போயிருப்போம். ஆனால், கவிதை கூறும் அதே காட்சி நம்மை நின்று நிதானித்துக் காட்சியுடன் ஒன்ற வைக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரும் காணும் புறக்காட்சியுடன் கவிஞனின் உணர்வு நிலையான அகக் காட்சியும் இணைக்கப்பட்டு ஓர் ஒற்றைக் காட்சியாகக் கவிதை நம்முன் அதைக் காண்பிக்கிறது.
சுழல்பந்து
———————
/ கொஞ்சிப் பேசிக்கொண்டே
தன் குட்டிப் பையனுக்கு
சுழல் பந்து வீசுகிறார் அப்பா
தரையில் மோதி எழும்பும் பந்து
உயரம் குறைந்து
அவனைக் கொஞ்சிக் கொஞ்சிச்
சுழல்கிறது /
கவிதையின் முதல் நான்கு வரிகள் நாம் எல்லோரும் காணும் காட்சி; அடுத்த வரிகள் கவிஞன் காணும் காட்சி. ஓர் இயல்பான காட்சியை உணர்வு நிலையில் வைத்துக் காணும் கவிஞன் அதை இன்னொரு அகக் காட்சியாக உருவாக்கிக் காட்டுகிறார்; நம்மையும் காண வைக்கிறார்.
அப்பா பையனை நோக்கி வீசும் பந்துகளை, கொஞ்சிப் பேசும் சொற்பந்துகளாகக் கவிதை உருமாற்றி விடுகிறது. அந்த மாயம், கவிதை கூறப்பட்ட முறையிலேயே நிகழ்கிறது.
காட்சி : 2
—————-
எடைச் சீட்டு
———————-
/ சிறுமியின் எடைச் சீட்டு
வெளிவரும் முன்னால்
ரயில் வந்துவிட்டது.
அம்மாவின் கை பிடித்து
ஏமாற்றத்துடன்
ரயில் ஏறினாள் சிறுமி.
தொண்டையில்
சிக்கிக்கொண்ட காசுடன்
வண்ணமயமாக விழித்தபடி
அவளை வழியனுப்பி வைத்தது
இயந்திரம்./
இங்குக் கவிதையின் முதல் நான்கு வரிகள் நாம் கண்ட , காணக்கூடிய புறக்காட்சியாகவும், அடுத்தடுத்த வரிகள் கவிஞன் காணும் அகக்காட்சியாகவும் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. இரயில் நிலையத்தில் இருக்கும் எடை காட்டும் இயந்திரத்தில் ஆசை ஆசையாக ஏறிக் காசை உள்ளிடுகிறாள் சிறுமி. எடைச்சீட்டு வெளிவரவில்லை. சிறுமி காத்திருக்கிறாள். இரயில் வந்துவிடுகிறது. ஏமாற்றத்துடன் இறங்கிப் போகிறாள். நமக்கும் கூட இப்படியான ஏமாற்றம் நடந்திருக்கும். ஆனால், சிறுமியின் ஏமாற்றத்தைத் தாங்க இயலாத கவிதை மனம் அக்காட்சியைத் தொடர்ந்து இன்னொரு காட்சியை வரைகிறது.
இப்படி நடந்தால் சாதாரணமாக நாம் எடை பார்க்கும் இயந்திரத்தை ஒரு எத்து எத்திவிட்டு இரயில்வே நிர்வாகத்தைக் குறைசொல்வோம். ஆனால், கவிதை மனம் எடை இயந்திரத்துக்கு உயிரூட்டுகிறது; வேண்டுமென்றே தான் அப்படிச் செய்யவில்லை, காசை முழுமையாக உள்ளே தள்ளாததால் தன்னால் எடைச் சீட்டைத் தர இயலவில்லை என்று மன்னிப்புக் கேட்கும் பாவனையிலும், அதைச் சிறுமியிடம் சொல்ல இயலாத நிலையில் தவிப்பதாகவும் எடை இயந்திரத்தைக் காட்டி, இறுதியில் அவளைச் சமாதானப்படுத்த வண்ணங்களைக் காட்டி வழியனுப்புவதாகவும் ஒரு காட்சியை இணைக்கிறது கவிதை. சிறுமியின் ஏமாற்றத்திற்குக் கவிதை மனம் கூறும் சமாளிப்புக் காட்சிதான் இது.
ஒரு இயல்பான காட்சியில் திளைக்கும் கவிஞனின் மனநிலை இன்னொரு காட்சியாகக் அக்கவிதையில் இணைக்கப்படும் இவ்வுத்தி, காட்சி குறித்த ஓர் ஒற்றை உணர்வு நிலையை வாசகன் அடையப் பெரிதும் உதவுகிறது. ஆனால், இங்கு இன்னொரு உண்மையையும் கூறியாக வேண்டும். காட்சியால் விளையும் பயனை இன்னொரு காட்சியாக எழுப்பிக் காட்டும் செயலுக்கு கவிஞன் மட்டுமே தனித்த உரிமையாளன் அல்ல. அது ஏற்கனவே உங்களுக்குள் நிகழ்ந்த ஒன்றாகவும் இருக்கலாம்.
ஆமாம். மேற்காட்டிய கவிதையைப் படித்த உங்களுக்கு கவிதை சொல்லும் உணர்வை, இந்தக் காட்சிகளைக் கண்ட போதே, விவரிக்க முடியாத உணர்வு நிலையாக மனத்தில் கொண்டிருந்தது ஒரு மங்கலான நினைவாகத் தோன்றுகிறதல்லவா?
நீங்கள் நினைப்பது சரிதான். மங்கலான, ஒழுங்குபடுத்திக் காட்ட முடியாத உணர்வை சித்திரமாக வரைந்து காட்டுபவனுக்குப் பெயர்தான் கவிஞன். எல்லோரும் காணும் காட்சியிலிருந்து ஒன்றை உணர்த்தவும்,உணர்ந்ததை இன்னும் தெளிவாகத் துலக்கிக் காட்டவும் காட்சியின் முன் கவிஞன் தோன்றியபடியே இருக்கிறான்.
குறிப்புகள்:
———————
1.கதிரவனின் ஒளிபட்ட இராமனின் நிற அழகைப் பேசும் கம்பராமாயணம்.
2. மதுரையின் மதில் கொடிகள் கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குள் வர வேண்டாம் என அசைவதாகக் கூறும் சிலப்பதிகாரம்.
3. கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதை.
உதவிய நூல்கள்:
—————————
1.பாதியார் கவிதைகள்.
2.முகுந்த் நாகராஜன் கவிதைகள்,
தன்னறம் நூல்வெளி,
சிங்காரப்பேட்டை – 635307
கிருஷ்ணகிரி மாவட்டம்.