புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம் – முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர் தாரமங்கலம் வளவன் அவர்களின் இயற்பெயர் திருமாவளவன். இவரது தந்தையார் தாரை வடிவேலு அவர்கள் சிறந்த தமிழாசிரியர் மட்டுமல்ல கவிஞர். அதனால் வளவன் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்வி பயின்று ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்து அலுவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் பணியாற்றியவர். ஏற்கனவே, அப்பாவின் வழி வந்த தமிழறிவும் இலக்கியம், வரலாறு, அறிவியல் உடனான இவரது ஆழ்ந்த வாசிப்பும் சமூகத்தின் மீதான நுணுக்கமான பார்வையும் மக்களைக் கூர்ந்து நோக்கும் அனுபவமும் இணைந்து இவரை எழுத்தாளராக்கியிருப்பது வியந்து பாராட்டத் தகுந்ததாகும். அதன் விளைவாக ஐயனார் கோவில் குதிரை வீரன், தோற்றப்பிழை ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் தாதர் எக்ஸ்பிரஸ், கடிகார கோபுரம், அம்னி என்ற மூன்று புதினங்களையும் எழுதி காவ்யா பதிப்பகத்தின் வழி வெளியிட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
அண்மையில் வெளிவந்துள்ள இவரது “ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுகிறது. புனைவென்பது உண்மைக்கு நெருக்கமானது எனுமளவிற்கு இலக்கியம், வரலாறு, அறிவியல் சார்ந்த தரவுகள் மட்டுமல்லாமல் நாம் இதுவரை அறியாத புதிய செய்திகளையும் கொண்டு வந்து நாவலில் இணைத்திருக்கிறார். ஒரு நாவல் எழுத அவர் மெனக்கெட்டிருக்கிற உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணையையும் அதனுடன் இணைந்த பவர் ஹவுஸையும் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பணி மத்திய நீர்வளத்துறையில் பணியாற்றும் கணேசனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் காரணமாக கேரளாவிற்கு அணையைப் பார்வையிட வரும் கணேசன் இரவில் தனியாகப் படகில் பயணிக்கிற போது நீர்ச்சுழற்சியில் படகு கவிழ்ந்து மயக்கமடைகிறார். கணேசன் படிக்கிற காலத்தில் கடந்த காலத்திற்குப் போய்வர முடியும் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை ஆழமாக நம்புபவர். மேலும் பேராசிரியர் பரமேஸ்வரனை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பயணிக்க வேண்டும் என்ற அவரது ஆழமன விருப்பம் மயக்கத்தில் உலவுகிறது. அந்த மயக்கத்திலிருந்து வேறொரு கனவுலகிற்குத் தள்ளப்படும் கணேசன் சித்தரின் ஆணைப்படி அவரது பேராசிரியர் பரமேஸ்வரனை வரவழைத்துப் புனைவின் வழி புத்தர் தொடங்கி சத்ரபதி சிவாஜியின் மராட்டியப் பேரரசு ஆட்சிப் பரவல் வரை வரலாற்றின் நெடுவழியை நம்முன் அச்சு அசலாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நாவல் எழுதும் முறைமையில் இது ஒரு புதிய உத்தியாக இருக்கிறது. நாவலில் இந்த வரலாறுகள் வாசிக்கப்படுகிறபோது அவை நம்முன் திரைக்காட்சியாக விரிகின்றன. எளிதாக மனக்கண்முன் பதிந்துவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தப் பிறகும் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருப்பதை ஒரு சில நாட்களாக உணர்ந்தேன். நாவலாசிரியர் இந்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்து அதற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அதிலுள்ள நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டிக்காட்டியும் ஓர் எழுத்தாளராக உழைக்கும் மக்கள் பக்கம் இருந்து வரலாற்றை அணுகியும் இருக்கிறார் என்பதை ஓர் அறமாகப் பார்க்கிறேன். இதனைக் கலை, இலக்கியவாதிகளின் கடமையாகவும் கருதுகிறேன்.
நாவலில் மேற்குத் தொடர்ச்சிமலை, சடாமுடிச் சித்தரின் மலைக்குகை, வைசாலி நகரத்துப் பேரழகி அம்ரபாலி, புத்தமதக் கருத்துகள், புத்தரைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் பின்புலம், சாதிய உருவாக்கத்தின் அடிப்படை முதல் மராட்டியப் பேரரசு உருவாக்கம் உள்ளிட்டவை உரையாடல் வழி காட்சிப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளின் இடையிடையே சமகால வரலாற்றையும் நாவலசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(கட்டுரையாளர் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையில் ,உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார்.)