இணைய இதழ் 111சிறுகதைகள்

இருளிலிருந்து… – ரம்யா

சிறுகதை | வாசகசாலை

(எந்த விழைவின் மீச்சிறு துளி நாம்?)

என் முதிரா இளமையின் கனவுகளில் தனி அறைகள் பிரதானமானவை. காமத்தைப் பற்றி தெரிந்திருந்த பருவமெனினும் அறைகளே என் கனவுகளை ஆக்கிரமித்திருந்தன. வெவ்வேறு விதமான அறைகள் பிடிக்கும் எனினும் சிறியவையே முதன்மையாகப் பிடித்தவை. வெளிச்சம் அதிகமில்லாத ஒரு மாடி அறை. ஒரே ஒரு ஜன்னல். உள்ளிருந்து பூட்டிக் கொண்டால் இருள் குடிகொள்ள வசதியான அறை. அதில் என் மூளை போல் அல்லாமல் கலையாமல் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் கொண்ட ஓர் அலமாரி. ஓர் எழுத்து மேசை. நிமிர்ந்து உட்கார்ந்தாலும் என் தலையை மூழ்கடிக்கும் சொகுசான நாற்காலி. வண்ண நிற பேனாக்கள். நன்றாக மையாக எழுதும் ஒரு ஹீரோ பேனா. வாசமிகு தூய வெண் காகிதங்கள். அவற்றை கோர்வையாக்கத் தேவையான கிளிப்பான்கள். அட்டை. மேலும் மேலும் என அந்த அறையை நிறைத்துக் கொள்வதற்கு முன் உறங்கி விடுவேன். சரியாக ஒவ்வொரு முறையும் இப்படி நடந்து நான் என் அறையுடன் நட்சத்திரம் சிதறிக்கிடக்கும் வான் வெளியில் தூக்கி வீசப்படும்போது இல்லாமல் ஆவேன். உறங்குகிறேனா? இல்லை இறந்து விடுகிறேனா? என்பது சரியாகத் தெரியவில்லை.

இப்போது என் கனவுகளில் வந்த அறைகளில் ஒன்றில் உட்கார்ந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மனித உருவில்தான் இருக்கிறேன். இந்த அறையின் தனிமை எனக்குப் போதவில்லை. இதற்குள் நீண்ட நாட்களாக இருக்கிறேன். எத்தனை நாட்கள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு நீண்டது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியானதாகத் தோன்றும்படியாக இதில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறேன். நான் ஒரே காலத்திற்குள் மீண்டும் மீண்டும் சுழற்சியில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும் போது திடுக்கிடலாக இருக்கும். அந்த எண்ணத்தை ரத்து செய்வதற்காகவே வேண்டுமென எப்போதாவது மாடி விட்டிறங்கி கடைவீதிக்குச் செல்கிறேன். எல்லோர் கண்களுக்கும் படும்படியாக, என் இயல்புக்கு மாறாக “நான், நான்” என்று நெஞ்சுக்கூட்டை விரிந்த நிலையில் வைத்துக் கொண்டு பறைசாற்றிக் கொண்டே செல்வேன். ஆனால், யாரும் என்னை பொருட்படுத்துவதில்லை. இந்த சென்னை எனும் பெருநகரம் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மிகச்சில நபர்களைத் தவிர நான் ஒருவரை இன்னொரு முறை பார்க்க இயலாது போகிறது. என்னை அடையாளம் காண இங்கு ஒருவரும் இல்லாதது சில சமயம் ஆறுதலாகவும், சில சமயம் வருத்தம் அளிப்பதாகவும் இருக்கிறது.

வாரம் ஒருமுறை மட்டுமே செல்லும் அந்த வகுப்பில் நான் யாரிடமும் பேசுவதில்லை. அங்குள்ள ஆசிரியர்களை எனக்குப் பிடிப்பதில்லை. அந்த ஆசிரியர்களிடம் நெருங்கிப் பழகும் மாணவர்களிடம் நான் எனக்குள் காழ்ப்பை வளர்த்துக் கொண்டேன். எனக்கான ஆசிரியரை நான் இன்னும் சந்திக்கவில்லை. அப்படியொருவர் வரப்போவதில்லை என்றும் தோன்றியதுண்டு.

’இதே தனிமையில் யாருமில்லாமல் நான் செத்துவிட்டால் கேட்க நாதியுண்டா?’ என பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். வீட்டிலிருந்து வரும் எந்த தொலைபேசி அழைப்பையும் எடுப்பதில்லை. நானே அழைத்தால்தான் பேசவேண்டும் என தந்தையைப் பறிகொடுத்துவிட்டு தனியாக வாழும் என் அம்மாவுக்கு கட்டளையிட்டிருந்தேன். அவளை வதைப்பது எனக்குப் பிடித்தமான செயல். அவள் வதைபடுவதாக கற்பனை செய்து கொள்வதால் இதைச் செய்தேன். சில சமயம் அவள் என்னைவிட்டு விடுதலையாக இருப்பதாக நினைத்து அவளை வேண்டுமென்றே அழைத்து அவளைப் பற்றி குறைகள் சொல்வேன். என்னை அவள் கைவிட்டு விட்டதாக நம்பச் செய்வேன். அவள் வருத்தப்படுவது ஆறுதலாக இருக்கும். பின்னர் என்னால் மீண்டும் நிம்மதியாக தனிமைக்குள் சென்றுவிட இயலும்.

என்னைக் காதலிப்பதாக சொல்லி என் பின்னால் சுற்றும் ஒருவனை எப்போதாவது நினைத்துப் பார்ப்பேன். பரிதாபமாக இருக்கும். பலமுறை அவனுக்கு நான் எச்சரிக்கை அளித்தும் என்னை விட்டு அகலாதவன். மிக நிச்சயமாக போன ஜென்மத்தில் தீராத பாவம் செய்திருக்க வேண்டும். அப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆள் துணையாக ஆவதும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு உடனிருப்பதும் பார்க்க விந்தையாக இருப்பதுண்டு. இன்னொருவர் உடனிருப்பது என் இந்தத் தனிமைக்கு ஆபத்தை வரவழைக்கும் என்றும் தோன்றுவதுண்டு. அதனால் அவனைத் தொடர்ச்சியாக வதைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்.

சில சமயம் தனிமை சாத்தியமில்லை என்று தோன்றும். ஒரு அதிகாலை எழுந்து வெறி கொண்டு பாடங்களை வாசித்து கனவில் மூழ்கி மயங்கிச் சரிந்து கிடக்கையில் ஒரு காகம் வந்து தலையைக் கொத்தியதை உணர்ந்து பதறி விழித்தபோதுதான் அப்படித் தோன்றியது. அதை சிரத்தையில்லாமல் துரத்திவிட்டு அறையைப் பூட்டி, சோர்ந்து சாய்ந்து உட்கார்ந்தபோது அருகில் முன்தினம் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த தட்டில் எறும்பு மொய்த்திருந்ததைப் பார்த்தேன். நான் எதை மிச்சம் வைத்தாலும் எங்கிருந்து படையெடுத்து வருகிறதென்று தெரியாதளவு கூட்டம் கூட்டமாக அதை சிறு சிறு துண்டங்களாக்கி தன் இருப்பிடத்திற்கு கடத்திப் போகும் எறும்புக் கூட்டங்கள், நான் தூங்கிய பின் விழித்தவண்ணம் சமையல் அறையில் நடமாடும் கரப்பான் பூச்சிகள். நடு இரவில் சிறுநீர் கழிக்கச் செல்லும் போது என்னை அசட்டையாகக் கடந்து செல்லும் எலிகள். நாள்பட்டால் வாங்கிச் சேர்த்திருக்கும் உயிர்ப் பொருட்களில் நெளிந்து வரும் புழுக்கள், சற்றே மறந்தாலும் யாவற்றிலும் படிந்து விடும் தூசிகள், சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் என்னை உபாதைக்கு உள்ளாக்கும் வயிறு, சதா கத்திக் கொண்டிருக்கும் மண்டை என யாவும் என் தனிமையைக் குலைப்பனவாக உள்ளன. நான் நினைக்குமளவு தனிமையை அவை வழங்காதது தரும் வெறுப்பால் அவதியுருகிறேன்.

இந்த சின்னஞ்சிறு தீண்டுதல்களிலிருந்தும் விடுபட்டு மேலும் மேலும் தனிமைக்குள்ளாகி இல்லாமலாக வேண்டும். இந்த உடல் சுமையாக இருக்கிறது. இதைக் களைந்து விட்டால் மேலும் ஆழ்ந்த தனிமைக்குள் செல்ல முடியும் என்று தோன்றுகிறது. உடலைக் களைவதற்கு தைரியம் வேண்டும். நான் கோழை. என் தனிமையை இல்லாமல் ஆகச் செய்யும் எதுவும் இல்லாத ஓர் அறை வேண்டும் என்று அழுது அரற்றியபடி அன்று தடித்த போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தேன். உடல் கொதித்து வியர்த்தும் அதை எடுக்க மனமில்லாமல் மூச்சை அடக்கியிருந்தேன்.

எங்கிருந்தோ என் இத்தனை திரைகளையும் உடைத்துக் கொண்டு ஒருவன் வந்து சேர்ந்தான். மிகவும் பரிட்சயமான சாயல் அவனுக்கு. ஏற்கனவே பரிட்சயமான ஒன்று மிகவும் எளிய பாதை போல நம்மை மயக்குவது. என்னை விடவும் தனியன் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே கண்டுகொண்டேன். அவன் மேல் ஈர்ப்பு கொண்டேன். மெல்ல சில கேள்வி பதில்கள் வழியாக அவன் என் இருள் பக்கத்தை அறிந்து கொண்டிருப்பதை அறிந்தும் அதை அனுமதித்தேன். இருள் பக்கத்தை ஒருவரிடம் சொல்வது அந்த நபரின் இருள் பக்கத்தை நாமும் அறியலாம் என்ற நப்பாசையினால்தான் என்பதை நன்றாக அறிந்திருந்தேன். அவனுக்கு என்னை விடவும் இருளான பக்கங்கள் இருப்பதை அவன் கூரிய ரத்தம் தோய்ந்த பற்கள் காண்பித்தது. மேலும் மேலும் என்னை உரித்து நிறுத்தியபோது அவன் மகிழ்ந்து தன்னுடைய தூய இருளான அறைக்கு அழைத்துச் சென்றான். அவனுடன் மூர்க்கமாக அன்றிரவு உறவு கொண்டபோது நான் ராஜ நாகமாக மாறினேன். அதன்பின் மூன்று கொம்பு கொண்ட வரையாடாக ஆனேன். பிறிதொரு நாள் வெள்ளை நிற ஆந்தையாக, மற்றொரு நாள் பருத்த தோலற்ற எலியாக, கெக்களித்து சிரிக்கும் கழுதைப் புலியாக, உறுமும் பன்றியாக என ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தேன். இனி எப்போதும் தன்னைச் சந்திக்க வேண்டாம் என அவன் சொன்ன பதின்மூன்றாவது நாள் நான் பளபளப்பான கருமை நிற நாயாக இருந்தேன். ரோமங்களற்ற வெண்ணிற தேகத்தில் அவனுக்கு சீழ் வழிந்து கொண்டிருந்தது.

என்னிடம் துளி ஒளி தெரிவதாகவும் அது தன்னை அச்சுறுத்துவதாகவும் சொன்னான். நான் என் வாலைச் சுழற்றி சுழற்றி இல்லவே இல்லையென அவனிடம் கொஞ்சினேன். அவன் சீறிய போது வாதிடுவதைத் தவிர்த்து அந்தத் துளி ஒளி உண்மையில் இருப்பின் அதை அழிக்க விரும்பி நான்கு கால் பாய்ச்சலில் ஓடினேன். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் குப்பை மேட்டில் அழுகியவை பெரும் நாற்றமெடுத்து வீசும் ஒரு இடத்தை முன்பே அறிந்திருந்தேன். அங்கு சென்று அந்த புதைகுழிக்குள் புதைந்தேன். புழுக்கள் மெல்ல என் மேல் ஊறி ஆசுவாசம் அளித்தன.

என்னை யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. நான் இன்னார் இப்படி என்று காண்பிப்பதன் சுமை இல்லை. வெளிச்சம் துளியும் புகாத அந்த என் தனிமையைக் குலைக்கும் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் கொண்டு மூச்சு விடுவதற்கான வெளியை மட்டும் ஏற்படுத்திக் கொண்டு என்னை புழுக்களோடு மூழ்கடித்துக் கொண்டேன். நான் உடைந்து துண்டங்களாகி புழுப்பெருக்காக ஆவதை கற்பனை செய்தவாறு உடலை மெல்ல நெளித்து நடனமிட்டேன். நான் இப்போது இருக்கிறேனா? இறந்துவிட்டேனா என்பது கூட சரியாக கணிக்க முடியவில்லை.

இந்தத் தடைகளை எல்லாமும் மீறி அந்தச் சொல் என்னை வந்து அடைந்தது. அதை எழுதியது யார்? அது எந்தப்புத்தகம்? அது சொல்லா? குரலா? ஒளியா?

இல்லை. நான் மீண்டும் எங்கும் செல்ல விரும்பவில்லை. இது ஒரு சுழல் என்பதாக கற்பனை செய்தபோது வந்த சலிப்பால் என்னை மேலும் மூழ்கடித்துக் கொண்டேன். இதற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன். இருக்கிறேன் என்பதே போதும் என்று தோன்றியது. ஆனாலும் ஓயாது அது என்னை அழைத்துக் கொண்டே இருப்பது தரும் ஓர் அசைவு என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்த அசைவே என்னை அங்கிருந்து எழச் செய்து மேல் நோக்கி பார்க்கச் செய்தது. மேட்டில் எனக்காக பெருவாழ்வு ஒன்று காத்துக் கொண்டிருந்தது.

செல்ல விரும்புகிறேனா? இல்லை. நான் விரிந்து செல்ல விரும்பவில்லை. நான் எதையும் விழையவில்லை. நான் கரைந்து அழிய விரும்புகிறேன். சுருங்கி சுருங்கி மட்கி இங்கேயே புதைந்துவிட விரும்புகிறேன். ஆனால், அந்தச் சொல் என்னை அழைக்கிறது. இன்னும் ஒரு முறை என்கிறது. வேண்டாம் என்கிறேன். இந்தப் புதையறை தான் நான் சிறுவயதிலிருந்து கனவு கண்டவற்றிலேயே உச்சபட்ச சாத்தியமான தனி அறை. அந்தச் சொல்லின் முழுமையைக் காண நான் இந்த அறையை விட்டு எப்போதைக்குமாக வெளியே செல்ல வேண்டும். இருளிலிருந்து ஒளிக்குச் செல்ல வேண்டும். நான் இப்போது இங்கு அடைந்திருக்கும் இந்த நிலைக்கு எதிர்த்திசையிலான பயணமது. நீண்ட தொலைவு கொண்டது.

ஒளி கண்கூசச் செயவது. அனைத்தையும் வெளிச்சமிட்டு காட்ட வேண்டியிருப்பதால் பகட்டான வெளிவேஷத்தைக் கோருவது. இருட்டில் நிர்வாணமாக இருக்கும் சொகுசு அங்கு இல்லை. ஒளி விரிந்து பரவுவது. அலையாகவும் துகளாவும் நடனமிடுவது. பயமாக இருக்கிறது. ஆனால், அந்தச் சொல் எனக்காகவே ஏவப்பட்டது போல உள்ளது. தந்தையுடையது. இல்லை மிக நிச்சயமாக ஆசிரியனுடையது. முடிவிலாத காலத்தில் வீற்றிருக்கும் வாழ்வின் மரத்தை அடைவதற்கானது. அதற்கு முதலில் நான் அறிவின் மரத்தை முழுமையாக அறிந்து கடக்க வேண்டும். அதற்கான அழைப்புதான் இது. அங்கிருந்து அது விழைந்து என்னை நோக்கி இந்த வார்த்தையை ஏவியுள்ளது.

எழுந்து ஒருமுறை திரும்பி நான் இருந்த அறையைப் பார்த்தேன். அதன் ஆழத்தில் அவன் சீழ் வழிந்து ரத்தப் புன்னகையுடன் மேலும் மேலும் ஆழம் நோக்கி சொருகும் விழிகளுடன் அமிழ்ந்து கொண்டிருந்தான். எல்லாவற்றையும் உதறி நான் என் முதல் காலடியை அந்த மேட்டை நோக்கித் தயங்கிய கால்களுடனும், பயந்த விழிகளுடனும் எடுத்து வைத்தேன். தன் இரு கரங்களையும் விரித்த வண்ணம் அந்தச் சொல் எனக்காக காத்துக் கொண்டிருந்தது.

-ramya20080625@gmail.com

ஓவியம்: Francisco de Goya

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button