
“எல ராசேசு… புறா வேட்டைக்குப் போனா எனக்கொண்ணு கொண்டால. முட்டிவலிக்கி புறாவ அறுத்து ரெத்தத்த முட்டியிலத் தேச்சா போயிருமாம்!“
“ஏ கருணாநிதி, திருனவேலிக்கிப் போனன்னா மறக்காம தென்னமரக்குடி எண்ணெ வாங்கிட்டு வாயா!”
“ஏட்டி அமராவதி.. மேலக்காட்டுக்கு வேலைக்குப் போயிட்டு வரும்போது பொட்டக்குளத்துக் கரையில எருக்க எழக் கொஞ்சம் ஆஞ்சுட்டு வா. வெளக்கெண்ணெயில சூடு பண்ணி எளஞ்சூட்டா முட்டியில அந்த எலய ஒட்டி வச்சா வேதனக் கொறையுமாம்!”
“பார்வதியக்கா மணிமுத்தாறு கால்வாயில குளிச்சிட்டு வரும்போது கொம்மட்டிக்கா ரெண்டு பறிச்சுட்டு வாயேன். அத தீயிலப் போட்டு நல்லா வாட்டி ஒத்தடங் கொடுத்தா முட்டியில இருக்குற நீரெல்லாம் சொருசொருன்னு வத்திருமாம்.”
“யய்யா சுந்தரு, மூலக்கரப்பட்டிக்கிப் போனீன்னா சிறுதேவி மெடிக்கல்லுல அயடெக்சு வாங்கிட்டு வந்துருல.”
-இப்படி தினம் தினம் பாடாய்ப்படுத்தும் மூட்டுவலிக்கு ஏதாவது மருந்து கேட்டு, கண்ணில் தென்படுபவர்களையெல்லாம் பாடாய் படுத்துவாள் பிரமு. நாற்பதில் தொடங்கிய மூட்டுவலி அறுபது தாண்டியும் போனபாடில்லை. அவளும் பார்க்காத வைத்தியம் கிடையாது; தின்னாத மருந்து கிடையாது. சீனிக்கிழங்கு வியாபாரி அவளிடம் மாட்டினால்,
‘பாவக்கா வேணுமா பாவக்கா’ என்று மூளைக் குழம்பி கத்துவான். ஐஸ் வியாபாரி சிக்கினால் ஐஸெல்லாம் உருகி தண்ணீர் வியாபாரியாகி விடுவான்.
தெருசனம் அவளைக் கண்டாலே தெறிச்சோடும்; ஊருசனம் ஒளிந்து கொள்ளும். பாவம் திருச்செந்தூரார்! வசதிக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையாக ஆனதால் பிரமுக்கிட்ட வசமாக மாட்டிக்கொண்டார். அவரின் மகன்கள், மகள்களெல்லாம் கல்யாணம் முடிந்து வெளியூரில் செட்டிலாகிவிட்டதால் பிரமுவுக்கு எல்லா பணிவிடையையும் திருச்செந்தூரார்தான் செய்வார்.
“யோவ், முட்டிவலித் தாங்க முடியல. அந்த தென்னமரக்குடி எண்ணெய எடுத்து கொஞ்சம் தேச்சுவுடும்.” – கதவு நிலையில் வைத்திருந்த எண்ணெய்யை எடுத்து வந்து பிரமுவின் முட்டியில் அழுத்தித் தேய்த்தார் திருச்செந்தூரார். பிரமு உடனே, ‘அய்யோ, அம்மா‘ வென அலறியபடி, ”இப்பும் புள்ளயப் பெத்துக்கச் சொன்னாக்கூட சந்தோசமா பெத்துப் போட்டுருவென். ஆனா, இந்த எழவு முட்டிவலி என்ன என்னா பாடு படுத்துது. வலியில உசுரே போவுதே”என்று புலம்பினாள்.
பல்லி பூச்சியைப் பிடிக்க ஊர்ந்து செல்வதுபோல் தன் முட்டிக்கு மேல் ஊர்ந்து போன திருச்செந்தூராரின் கைகளை படக்கென்று பிடித்து, ”யோவ் கையி எங்கயா போவுது?”என்றாள் பிரமு.
“நீதானட்டி சொன்ன புள்ளப் பெத்துக்கிறேன்னு”என்று மெல்லச் சிரித்தார்.
“ஆளுல்லா வீட்ல கெழவன் துள்ளி வெளயாண்டானா! அந்த மாதிரி பல்லு உழுந்தாச்சி; பேரன் பேத்தி எடுத்தாச்சி. இப்பும் ஒமக்கு புள்ள கேக்குதா புள்ள. கைய வெட்டி அடுப்புல போட்டுருவென் பாத்துக்காரும். நீரு எண்ணெ தேச்சதுலாம் போதும். மொதல்ல எடத்தக் காலிப்பண்ணும். ஒம்ம முழியே சரியில்ல.” – வெட்கப்பட்டு முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டாள் பிரமு. மூடிய முகத்தைப் பார்த்தபடியே வெளிக்கதவை மூடிவிட்டு வெளியில் சென்றார் திருச்செந்தூரார்.
பூட்டியக் கதவின் முன்னால் பூத்த மல்லிகைப்பூவாய் வெள்ளை நிற சேலை உடுத்தி துண்டு பிரசுரம் கொடுக்க வந்த கிறிஸ்தவப் பெண்மணியை, ”உள்ளப் போவாத. முட்டிவலிக்கி மருந்துகேட்டு ஓன் உசுர எடுத்துருவா” என்று தெருசனம் சைகை காட்டியதை கவனிக்காமல் கதவைத் திறந்து உள்ளே போனவளை உச்சுக் கொட்டியபடி தெருசனம் அனைவரும் காலையில் வயக்காட்டு வேலைக்கு சென்றனர்.
மதியம் வேலை முடிந்து அசதியாய் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த பெண்களை, ”ஏசுவே என்னைக் காப்பாற்றும் ; ஏசுவே என்னைக் காப்பாற்றும்.”என்று சகட்டுமேனிக்கு இடித்துத் தள்ளியபடி தலைவிரிக் கோலமாய் ஓடிய கிறிஸ்தவப் பெண்மணியைப் பார்த்து, ”யம்மாடி! காலையில வந்தவள இப்புந்தான்டி வுட்டுருக்கா. பாவம் எப்படி வந்த புள்ளய, இப்படி பைத்தியமாக்கி ஓட உட்டுட்டாலே. எல்லாரையும் மருந்து கேட்டே சாவடிக்குற அவ சாவுறமாறி யாராச்சும் ஒருத்தர் ‘மருந்து’ சொல்ல மாட்டுக்காவள.” கூட்டத்திலொருத்தி குமுறினாள்.
மறுநாள் காலை பிரமுவின் மூட்டுவலிக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, எண்ணெய் தேய்த்து வீட்டு வெளித்திண்ணையில் அவளை அமர வைத்துவிட்டு, ”பாத்து பத்திரமா இரு. நா போயிட்டு சீக்கிரமா ஓடியாந்துருதேன்.” என்று திருச்செந்தூரார் தன் தங்கையின் பேத்திச் சடங்கிற்கு சைக்கிளில் கிளம்பிப்போனார். திண்ணையிலமர்ந்திருந்த பிரமுவின் காதில் கூவிக்கூவி கீரை விற்றுக் கொண்டிருந்தவரின் குரல் கேட்டது. ”யோ.. கீர, இங்க வாரும்” என தீனிக்காக கத்தும் மாட்டைப்போல் கத்திக் கூப்பிட்டாள் பிரமு. கீரைக்காரர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு முற்றத்தில் நிறுத்தி, ”என்னம்மா.. எத்தன கெட்டு வேணும்?” என்று ஒரு கட்டையெடுத்து உதறிக் கொடுத்தார். பிரமு கீரைக் கட்டினை விரித்துப் பார்த்துவிட்டு, ”கீர என்னய்யா வாடிப் போயிருக்கு?” என்றாள். “அடிக்கிற வெயிலுக்கு மனுசனே வாடிப்போயிர்ரான். கீர வாடாம என்னச் செய்யும்?” என்றார் அவர். ”அரக்கீர இல்லீயோ! அதுன்னா எங்க வீட்டாளுக்கு ரொம்பப் புடிக்கும்.” தன் கையில் வைத்திருந்தக் கட்டினை திண்ணையில் வைத்துவிட்டு சைக்கிளிலிருந்த கீரைப்பெட்டியை எட்டிப் பார்த்தாள். ”இல்ல தாயி. நம்மக்கிட்ட எல்லாம் முழுக்கீரய்யாத்தான் இருக்கு.” வேட்டி முனையில் வியர்வையைத் துடைத்தபடி சொன்னார். ”சரியான எடக்குப் புடிச்ச ஆளு நீரு. அரக்கீர இருக்கான்னு கேட்டா முழுக்கீரத்தான் இருக்குன்னு சொல்றீயர.. வேறோரு கெட்டு எடும். இந்தக் கெட்டு சிறுசாருக்கு. ரொம்ப வாடி வேற போயிருக்கு” என்றவளை, “வேண்டாம்மா.. நீயே நல்லதாப்பாத்து எடுத்துக்கோ. நா எடுத்துக் கொடுத்தா அதுலயும் ஆயிரம் நொட்ட சொல்லுவ.” கீரைக்காரர் கிழிந்த சட்டைப் பையிலிருந்த செய்யது பீடியையெடுத்து பற்றவைத்து அடியிலிருந்த கீரைக் கட்டுகளை மேலே எடுத்து வைத்தார்.
“கீரக்காரே, என்னால எந்திக்க முடியாது. நீரே நல்லதா ஒண்ணு எடுத்துத் தாரும். இந்த முட்டிவலியால எந்தீச்சா ஒக்கார முடியாது. ஒக்காந்தா எந்தீக்க முடியாது.” – பிரமு பல்லைக்கடித்து பனங்காய் மாதிரி வீங்கிய கால்மூட்டினைத் தடவியபடி கீரைக்காரைப் பார்த்தாள். கீரைக்காரர் பிரமுவை முறைத்துப் பார்த்தபடி ஓலைப் பெட்டியிலிருந்த தண்டுக்கீரைக் கட்டுகளிலே நல்ல குண்டுக்கீரைக் கட்டினையெடுத்துக் கொடுத்தார். ”கெட்டு பெருசாத்தானிருக்கு. ஆனா, எலையெல்லாம் ரொம்பலா பூச்சியடிச்சிருக்கு. வேற எடும்” என்று மீண்டும் முட்டியைத் தடவத் தொடங்கினாள். கீரைக்காரருக்கு கீரையைத் தூக்கி அவள் முகரையில் வீசிவிடலாமென்று தோன்றியது. கோபத்தை அடக்கிக்கொண்டு வேறொன்றையெடுத்துக் கொடுத்தார். வாங்கிப் பார்த்து அதையும் பிரமு குறை சொல்ல, கோபத்தில் வெடுக்கென்று கீரைக் கட்டினைப் பிடுங்கி பெட்டியில் போட்டுவிட்டு வேகமாக சைக்கிளைத் தள்ள ஆரம்பித்தார்.
‘வேலியில் போன ஓணானை வேட்டியில் பிடித்துவிட்டக் கதையாக’ கோபத்தில் சென்றவரை மீண்டும் கூப்பிட்டு, ”கீரக்காரே, கோவிச்சிக்காதயும். அடுத்தவாட்டி வரும்போது அஞ்சு கெட்டு வாங்குறேன். இப்பும் இந்த முட்டிவலிக்கி மட்டும் ஒமக்கு எதாவது வைத்தியம் தெர்ஞ்சா சொல்லிட்டுப் போரும்..” என்றாள் பிரமு. ‘மனுசன பைத்தியமாக்கிட்டு வைத்தியமாக் கேக்குற வைத்தியம்!’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, ”ஓந்தானப் புடிச்சி, தொலிய உரிச்சி எடுத்துட்டு, தலய வெட்டி தூரப் போட்டுட்டு, ஒரல்லப் போட்டு நல்ல இடிச்சி ரெண்டு மெளவு சீரவம் சேத்து சாறு வச்சிக்குடி. முட்டிவலி மொசலு மாறி ஓடியே போயிரும்.”என்றார். ”முட்டிவலி போயிரும்ல!?”முகம் மலர கேட்டாள் பிரமு. ”கண்டிப்பா போயிரும். என் மாமியாக்காரியும் ஒண்ண மாறித்தான் நொண்டியாக் கெடந்தா. ஓந்தான் சாறக் குடிச்சிப் போறவு இப்பும் கொமரியாட்டம் ஓடியாடி வேலச் செய்யுறா!”- கீரைக்காரர் வைத்தியம் சொல்லிவிட்டு, ‘கீர வேணுமா கீர..’ என்று கூவியபடி சைக்கிளில் ஏறிச் சென்றார்.
தீக்கொளுத்தி அணியிடம் ‘A’க்கா விளையாடி கோலிக்காய் எல்லாவற்றையுமிழந்து தெருவில் சோகமாய் சென்று கொண்டிருந்த பெருச்சாளி படையினரைப் பார்த்து, ”எ… பேராண்டியளா இங்க கொஞ்சம் வாங்கல. ஆச்சி முட்டிவலிக்கி மருந்து செய்ய ஓந்தான் ஒண்ணு தேவப்படுது. புடிச்சித் தந்தா ஆளுக்கு நாலணாத் தாறேன்.” பிரமு சொன்னதும் ஓணான் வாயைப் பிளப்பதுபோல் ஆச்சரியத்தில் ‘நாலணாவா’ என்று உழுவ, சுரைக்காய், காத்தாடி மூவரும் தலைவன் பெருச்சாளியைப் பார்த்தனர். பெருச்சாளி தீக்கொளுத்திப் படையை தீர்த்துக்கட்ட பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்று கண்ணைக் காட்டினான். உழுவ ஓடிப்போய் உடைமரக் கம்பில் செய்து வைத்திருந்த கண்ணியை எடுத்து வந்தான்.
“யாச்சோ! இன்னும் அஞ்சே நிமிசத்தில ஓந்தானோட வாறோம்.”- பெருச்சாளி தன் படைகளுடன் உடைமரக் காட்டுக்குள் போனான். நால்வரும் நான்கு திசையில் தேடத் தொடங்கினர்; உச்சி முதல் அடிவரை ஒவ்வொரு மரத்தையும் சத்தம் காட்டாமல் சல்லடைக் கண்களால் தேடினர். சிறிய மரத்தில் கிடந்த பெரிய ஓணானைக் கண்டதும், ”எல சீக்கிரமா வாங்க. சரியான ‘மொங்கான்’ ஒண்ணு மாட்டிடுச்சி ” காத்தாடி காட்டுக்கத்து கத்தினான். பெருச்சாளி, உழுவ, சுரைக்காய் மூவரும் முள் குத்தியது கூடத் தெரியாமல் துள்ளிக் குதித்து வந்து ”எங்கல” என்றனர். ”மேலபோற கொப்புக்கு கீழ ரெண்டாவது கொப்புல” என்றான் காத்தாடி. இலைக்கும் பூவுக்குமிடையில் தலையை மறைத்து பம்மிக் கிடந்த ஓணானைப் பார்த்ததும், ”யம்மாடி, எத்தா… பெருசு! ஒரு சட்டி தேறும் போலயே” வாயைப் பிளந்த சுரைக்காயின் வயிற்றில் ஒரு குத்துவிட்டு, “மொதல்ல கண்ணியப் போடுல. களஞ்சிறப்போவுது!”என்றான் பெருச்சாளி.
சுரைக்காய் ஓணானுக்குப் பின்புறமாய் நின்று அதன் தலைக்கு நேராய் கண்ணியை நீட்டினான். வட்ட வடிவக் கண்ணி ஓணானின் வாயில் பட்டதும் அது சட்டென்று தலையைத் தூக்கி கண்களை உருட்டி, கண்ணியைக் கடித்தது. சுரைக்காய் அசையாமல் நின்றான். பெருச்சாளி, உழுவ, காத்தாடி மூவரும் கண்ணியில் தப்பித்தால் அடுத்த கணமே மண்ணில் விழுந்து அது மரணிக்க வேண்டுமென்று கையில் கருங்கல்லோடு நின்றனர்.
ஓணான் கண்ணியை இரையென்று நம்பி ஏமாந்த சோகத்தில் மீண்டும் கிளையில் தலை சாய்க்க நினைக்கையில் சுரைக்காய் கண்ணியை வெடுக்கென்று ஒரு வெட்டு வெட்டி இழுக்கவும், கண்ணி இறுகி, கண்கள் மேல்நோக்கி சொருகி, நான்கு கால்களும் நடுநடுங்கின. வயிறு உள்ளும் வெளியேயும் போனது; வலியில் துடிதுடித்து வாலையாட்டியது.
“வாராவாரம் நாயித்திக் கெழமத்தான் சொடலக்கி கொட குடுத்து ஒன்னிய கிடாவா வெட்டுவோம். இந்த வாரம் சனிக்கெழமய நீ சாவனும்ன்னு ஓன் தலயில எழுதிருக்கு! அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? ஆனா, ஒண்ணு எப்பவும் வம்பா எங்கக்கிட்ட வெட்டுப்பட்டு சாவீய. இன்னக்கி ஓன் உசுரக் குடுத்து இன்னொரு உசுர காப்பாத்தப் போற; எங்க மானத்தையும் காப்பாத்தப்போற. அதனால இதுக்கு பரிகாரமா எங்க சேக்காளி உழுவ அடுத்த ஜென்மத்துல ஓந்தானாப் பொறப்பான். நீ மனுசனாப் பொறந்து எங்க உழுவயக் கொன்னு ஓன் ஆசயத் தீத்துக்கோ. சரிதானல உழுவ?” என்றான் பெருச்சாளி.
“நீ சாவம்ல. என்னிய எதுக்கு சாவச் சொல்லுற சனியம் புடிச்சவன. இந்த ஜென்மத்துல ஒனக்கு பட்டப்பேருதான் பெருச்சாளி! அடுத்த ஜென்மத்துல நெஜமாவே நீ பெருச்சாளியாப் பொறந்து, சாக்கடையில வளந்து, மனுசனுவக்கிட்ட அடிப்பட்டு, நாயிக்கிட்ட கடிப்பட்டு, சாவத்தான் போற பாரேன்.” என சாபமிட்டு உழுவ ஊளைமூக்கை உறிஞ்சியபடி தெரு நோக்கி நடந்தான். அவன் பின்னால் மற்றவர்கள் செத்த ஓணானை தரையில் போட்டு தரதரவென்று இழுத்துக் கொண்டும், சத்தம்போட்டு சிரித்துக் கொண்டும் பிரமுவின் வீட்டிற்குள் நுழைந்தனர். தார்சாவிலிருந்த பிரமு பெருச்சாளி படையினரைப் பார்த்து, ”எல, என்ன எல்லாரும் வெறுங்கையோடு வந்திருக்கீய…! ஓந்தான எங்க?”என்றாள்.
சுரைக்காய் தன் பின்னால் ஒளித்து வைத்திருந்த கண்ணியில் மாட்டிய ஓணானையெடுத்து நீட்டியதும், “எ பயலுவளா இது ஓந்தானா? இல்ல உடும்பால? எத்தாந்தண்டிருக்கு!!”- பிரமுவுக்கு ஓணானைப் பார்த்ததும் வாய் வட்டக் கிணறாய் விரிந்தது; இமைகள் நெற்றியைத் தொட்டது. பெரிய ஓணான் கிடைத்த மகிழ்ச்சியில் சுருக்குப் பையிலிருந்து நால்வருக்கும் நாலணாவும் ஆளுக்கொரு பனங்கிழங்கும் கொடுத்தாள். சில்லரையை வாங்கிக்கொண்டு சுடலை மளிகைக்கடையை நோக்கி கோலிக்காய் வாங்க சுண்டலியாய் குடுகுடுவென ஓடினர் பெருச்சாளிப் படையினர்.
மறுநாள் காலை பெருச்சாளி பல் துலக்க உமிக்கரிக் கேட்டு தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்த அவன் அம்மாவைக் கூப்பிட்டான்.”ஒனக்கும் ஓன் அப்பனுக்கும் இருந்த எடத்துல எல்லா மயித்தயும் கொண்டு வந்து கொடுக்கணும். ஒங்களுக்கெல்லாம் கையி, காலு, கண்ணல்லாம் தெண்டத்துக்குத்தான் ஆண்டவன் குடுத்துருக்கான்! இங்க என்ன நடந்துட்டுருக்கு. இவனுக்கு உமிக்கரி வேணும்மா உமிக்கரி.” என்று தண்ணீர்த்தொட்டி அருகேயிருந்த உமிக்கரி டப்பாவை எடுத்துக் கொடுத்துவிட்டு மீண்டும் தெருவிற்கு ஓடினாள்.
தெருவே ஓரே கூச்சல் குழப்பமாகயிருந்தது .”நேத்து சாந்தர வரைக்கும் நல்லாத்தான இருந்தா. ராத்திரி என்னத்த தின்னாளோ!” என ஆண்களும் பெண்களும் ஆங்காங்கே கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். கூட்டத்தை நோக்கி வந்த டிவிஎஸ்50-ஐப் பார்த்து கூட்டம் ஓடியது. ”எண்ணே கெழவிக்கு என்னாச்சு? பொழச்சிக்கிட்டாளா!” தர்மகர்த்தா செல்லப்பாண்டி வண்டிய நிறுத்தும் முன்னே தெருக்காரர்கள் அவரிடம் நிறுத்தாமல் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தனர். செல்லப்பாண்டி சுருட்டை அணைத்துவிட்டு, சோடாப்புட்டி கண்ணாடியை கழற்றிவிட்டு, ”இப்பும் கொஞ்சம் தாவல. ராத்திரிப்பூராம் வாந்தியும் வைத்தாளயும் எடுத்ததால.. கெழவி சீக்கு வந்த கோழி மாறி கொதங்கிப் போயிட்டா! தெம்பு கெடைக்க ரெண்டு பாட்லு முடிஞ்சி மூணாவது பாட்லு குளுக்கோசு எறிட்டுருக்கு. சாந்தரம் வந்து கூட்டிட்டுப் போங்கன்னு தங்கராஜ் டாக்டரு சொல்லிட்டாரு ” என்றார்.
“மச்சான் எதனால கெழவிக்கு வாந்தியும் வைத்தாளயும் எடுத்துச்சாம்?” என்றாள் பாப்பு.
“நேத்து நம்ம தெருவுக்கு கீர விக்க ஒருத்தன் வந்துருக்கான். அவன்ட்ட கீரய வாங்காம அவன் உயிர வாங்கிருக்கா. அவன் கோவத்துல ஓந்தான இடிச்சிச் சாறு வச்சிக்குடி எல்லாம் சரியாயிரும்ன்னு சொன்னத நம்பி இந்த புத்திக்கெட்டவ ஒருத்தர்ட்டயும் கேக்காம ராத்திரி எட்டுமணி வாக்குல ஓந்தான் சாற ஒன்ற சொம்புக்கிட்ட குடிச்சிட்டு ஒறங்கிட்டா. சடங்கு வீட்டுக்குப்போன திருச்செந்தூரார் ஒரு பத்து பத்தரமணிகானு வீட்டுக்கு வந்து பாத்துருக்காரு. கட்டுல்ல கெழவியக் காணும். கூப்புட்டுப் பாத்துருக்காரு.. சத்தத்தக் காணும். இந்நேரத்துக்கு எங்கப்போயி தொலஞ்சான்னு புலம்பிக்கிட்டே ஒண்ணுக்கு இருக்க வீட்டுக்குப் பின்னாடி போயிருக்காரு. கெழவி எடுத்த வாந்தியில படுத்துக் கெடந்துருக்கா! ஒடனே ஓடி வந்து என்னியக் கூப்புட்டு சங்கதியச் சொன்னாரு. நா தேவகலா பிளசர வரவச்சி கெழவிய ரெண்டுபேரும் குண்டுக்கட்டாத் தூக்கிப்போட்டு தங்கராஜ்க்கிட்ட கொண்டுபோயி சேத்தோம்.”- சொல்லிவிட்டு திண்ணையில் அசதியில் அமர்ந்தார் செல்லப்பாண்டி.
“அட கோட்டிக்காரி! கரும்புச்சாறு ரெண்டு கிளாசு சாஸ்தியா குடிச்சாலே எனக்கெல்லாம் வயிறு கடமுடங்குமெ. கீரக்காரன் சொன்னான்னு எவளாவது ஓந்தான் சாறக் குடிப்பாளா!? ஆனா ஒண்ணு மச்சான்.. கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துருக்கு. இனி அந்த ஆண்டவனே வந்து முட்டிவலிக்கி மருந்து சொன்னாலும் கேக்கமாட்டா கெழவி!” பாப்பு சொல்லியதும் செல்லப்பாண்டி நொங்கு வண்டி தரையில் உருளுவதுபோல் திண்ணையில் சிரித்துருண்டார்.
செல்லப்பாண்டியிடம் செய்திகேட்ட நிம்மதியில் தெருசனம் அவரவர் வேலையைப் பார்க்க அனைவரும் கிளம்பிப் போயினர். பெருச்சாளி கஞ்சியைக் குடித்துவிட்டு, கால்சட்டைப் பைகளில் கோலிக்காய்களைப் போட்டுக்கொண்டு, ‘A’க்கா விளையாட்டில் தங்களை தோற்கடித்த தீக்கொளுத்திப் படையினரை வெல்வதற்காக வாசற்படியை மிதிக்காமல் பின்னால் போய் ஓடிவந்து ஒரே… தாண்டு தாண்டி சட்டையின் காலரைத் தூக்கிவிட்டு, சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டு, செம்பட்டைப் பாய்ந்த முடியை கோதிவிட்டு தெருவில் நடந்து போகையில் எதிரே தன் படைவீரர்கள் அலறியடித்து ஓடிவந்ததைப் பார்த்து, ”ஏம்ல இப்படி ஓடி வர்றீய. நாயி கியி வெரட்டுதா?”என்றான் பெருச்சாளி.
“எல ஒனக்கு விசியம் தெரியுமா, தெரியாதா? ஒங்கம்ம ஒண்ணும் சொல்லலயா!”உழுவ உடல் நடுங்கக் கேட்டான்.
“எங்கம்ம ஒண்ணும் சொல்லலயல. என்னன்னு புரியறமாறி சொல்லுங்களம்ல.” மண்டையைச் சொறிந்தான் பெருச்சாளி.
“நேத்து நம்ம பெரமுக் கெழவிக்கி ஓந்தான் புடுச்சிக் குடுத்தோம் லா.”
“ஆமா குடுத்தோம். அதுக்கென்ன இப்பும்.”
“அதுக்கென்னவா! நம்ம புடுச்சிக் குடுத்த ஓந்தான சாறு வச்சிக் குடிச்சதனால, தங்கராஜ் ஆசுப்பிட்டல்ல கெழவி சாவக் கெடக்கலாம். செல்லப்பாண்டித் தாத்தா சொன்னாரு.”
“அய்யயோ! அதான் எங்கம்ம காலங்காத்தால ஒரே ஓட்டமும் சாட்டமும் இருந்தாளா! சரி, வாங்கல” என்று பெருச்சாளி தன் படைகளை கூட்டிக்கொண்டு பாரம் தாங்காமல் பைய நடக்கும் வண்டி மாடுகளைப் போல் பைய நடந்து திண்ணையிலமர்ந்திருந்த செல்லப்பாண்டிப் பக்கத்தில் போயி நால்வரும் அமர்ந்தனர்.
“தாத்தா கெழவிக்கி என்னாச்சி?” என்று சுரைக்காய் கேட்டதும், ”மயிராண்டியளுவளா! கெழவி உசுரு ஆசுப்பிட்டல ஊசலாடிட்டுக் கெடக்குது. அவ சாவுக்கு நீங்கதான் காரணமுன்னு டாக்ட்டருக்கிட்டயும் போலீசுக்கிட்டயும் எல்லா விசியத்தியும் வெளாவெரியா சொல்லிட்டா. ஒங்களப் புடிக்க போலீசு வந்துட்டுருக்கு.” செல்லப்பாண்டி முகத்தை இறுக்கமாய் வைத்து நால்வரையும் முறைத்துப் பார்த்தார்.
“ஓந்தான் வேணும்ன்னு அவதான் கேட்டா. அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம். ”- உழுவைக்கு அழுகை வந்தது.
“அதலாம் எனக்குத் தெரியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல ஓந்தானுக்கு கண்ணியப் போட்ட ஒங்க நாலுவேத்தோட குஞ்சான்லயும் போலீசு கண்ணியப் போட்டு தெருவுல மொட்டிக்குண்டியா கூட்டிட்டுப்போவும் பாருங்க..”- சுருட்டினை வாயில் வைத்து இழுத்து, புகையை மூக்கின் வழியாக விட்டு, வீட்டை நோக்கி வேகமாய் நடந்து போனார் செல்லப்பாண்டி.
“என்னல இவரு இப்படி சொல்லிட்டுப்போறாரு. நா சூடு பிடிச்சாலே சுருண்டு விழுந்துருவென். சூடு பிடிக்கிற எடத்துல போலீசுகாரன் கண்ணியப் போட்டு இழுத்தா செத்தே போயிருவென்.” பெருச்சாளியிடம் கண்கலங்கினான் காத்தாடி.
“நம்ம வீட்ல வேற எல்லாரும் வேலக்கிப் போயிட்டாவ. அவுங்க இருந்தாளாவது போலீசுகாரன் கையில, காலுல வுழுந்து நம்மள காப்பாத்திருவாவ. இப்பும் என்னல பண்றது? அவிய வர்றவரைக்கும் எங்கயாவது போயி ஒளிஞ்சிக்கிலாம்மா.”- யோசனை சொன்னான் சுரைக்காய்.
நால்வரும் நடுச்சந்தியில் நின்று ஒளிய இடம் தேடினர்.
“எங்க வீட்டுக் குதுலுக்குள்ள ஒளிஞ்சிக்கலாமா..?” என்றான் காத்தாடி.
“லூசுப்பயல, ஒரு குதுலுக்குள்ள நாலுவேரு எப்படில ஒளிய முடியும்?” காத்தாடியைக் கடிந்தான் சுரைக்காய்.
பெருச்சாளி…! செவுட்டுப் பார்வதிப் பாட்டி கோழிக்கூட்டுல ஒளிஞ்சிக்கிலாம்ல. ஒரு பயலுக்கும் தெரியாது. என்ன சொல்ற?” என்று உழுவை அவன் கையைப்பிடித்து உலுப்பிக் கேட்டான்.
“கோழிச் செல்லுக் கடிச்சி, எல்லாரும் கத்திக் கூப்பாடுப் போட்டு, போலீசுல மாட்டவா?” பெருச்சாளி சொன்னதும் அனைவரும் பேய் முழி முழித்து, ”அப்பும் நீயே ஒரு எடத்தச் சீக்கிரம் சொல்லுப்பா! போலீசு வந்துரப் போவுது. இப்பும் மூலப்பட்டி டேசனுக்கு எஸே யாரு தெரியுமா! நாங்குநேரிலயிருந்த பச்சமட்டதான். அவரு கையில மட்டும் நம்ம மாட்னோம்.. பச்சமட்டயால அடிக்கிற அடியில குண்டி பப்பாளிப் பழம் மாறி பழுத்துரும் பாத்துக்கோ!”மூவரும் அழத்தொடங்கினர்.
பெருச்சாளி சிறிது நேரம் தலை குனிந்து யோசித்து, ”வடக்கெணத்து கம்புக்கெழங்கு வயல்லப் போயி ஒளிஞ்சிக்கிலாம்.” என்றதும், அனைவரும், ”சூப்பர்ல சரியான எடம். எந்தக்கொம்பனாலும் நம்மள கண்டே.. புடிக்க முடியாது.” என்றார்கள். தாய் முயல் பின்னால் பதுங்கி பதுங்கி போகும் குட்டி முயல்குட்டிகளைப்போல் தலைவன் பெருச்சாளி பின்னால் பதுங்கியோடி, தெருவின் அருகிலிருக்கும் வடக்கிணற்றில் ஒளிந்துகொண்டனர்.
வடக்கிணற்றுக்கு மேற்கே பனைவிடலிகள் நடுவிலிருக்கும் சாராயக்கடைக்கு சாராயம் குடிப்பதற்காக வயர்மேன் பிரம்மநாயகம் சைக்கிளை வளைத்து வளைத்து, அவர் எப்போதும் முனுமுனுக்கும்,
‘சிவப்புக்கல்லு மூக்குத்தி‘ பாடலை சினுங்கிச் சிரித்துப் பாடியபடி சென்றவரின் எதிரே கைலியை கையில் வைத்துக் கொண்டு கால்டவுசரோடு தலைத் தெறிக்க ஓடிவந்தவரை தடுத்து நிறுத்தி, ”எ கில்லாடி, எதுக்குப்பா இப்படி ஓடி வர்ற?”என்றார். ”எ பிரமா! சாராயக்கடையில போலீசு” என்று அவர் சொல்லிக்கொண்டே ஓடினார்.
வயர்மேன் பிரம்மநாயகம் வந்த பாதையில் சைக்கிளைத் திருப்பி மிதிக்கத் தொடங்கினார். ”எல குடிகார நாய ஓடாத நில்லு! கையில மா.ட்ன கரண்டக்காலு நரம்ப கட் பண்ணிப்புடுவென்.”- கையில் லத்தியோடு கத்திக்கொண்டே போலீஸ் பின்னால் துரத்தி வந்தது. பிரம்மநாயகத்தின் மிதி தாங்காமல் பாதி வழியிலயே சைக்கிள் செயின் அறுந்து போனது. ஓடாத சைக்கிளை உருட்டிக்கொண்டு வடக்கிணற்று வேலியோரம் நின்ற குடைபோல் விரிந்த பெரிய உடைமர மறைவில் பொத்தென்று போட்டுவிட்டு, அதன் அடியில் அரவம் காட்டாமல் கூகையைப்போல் குத்த வைத்துக்கொண்டார்.
வேலியோரம் கம்புக்கிழங்கு வயலில் பதுங்கியிருந்த பெருச்சாளி படையினர் சைக்கிள் சத்தத்தைக் கேட்டு நடு நடுங்கினர். ”எல என்னன்னு கொஞ்சம் பாரு.” காத்தாடிக்கு கட்டளையிட்டான் பெருச்சாளி. காத்தாடி குருட்டுக் கொக்குப்போல் மெதுவாய் நடந்து வேலிப்பக்கம் போனான்; உடைமரத்தின் அடியில் உற்று உற்றுப் பார்த்தான். கிளைகளின் இடையில் வயர்மேன் பிரம்மநாயகத்தின் காக்கி நிற உடையைப்பார்த்ததும்.. ”ஏல… போலீசுலேய்…” என்று ஓடத் தொடங்கினான் காத்தாடி. அவனுக்கு முன்னால் பெருச்சாளி, உழுவை, சுரைக்காய் மூவரும், ”சொடலச்சாமி மேல சத்தியமா, எங்கம்ம மேல சத்தியமா இனும ஓந்தான் புடிக்க மாட்டோம்” என்று கதறியழுதபடி கம்புக்கிழங்கு வயல் தாண்டி பருத்தி வயலில் ஓடினர். ”ஐயா! எம் பொண்டாட்டிப் புள்ளய மேல சத்தியமா நா குடிக்க வரல. வயித்தக் கலக்குதுன்னு வெளிக்கியிருக்கத்தான் வந்தேன். நல்லாருப்பீய என்ன வுட்டுருங்க சாமி…” என கிழக்குத்திசைப் பார்த்து ஓட்டம் பிடித்தார் பிரம்மநாயகம்.
ஓடியவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து, தலையைத் தூக்கி, கண்களை உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது உடைமரத்தின் உச்சியில் பம்மியிருந்த ஓணான்.