
பற்றுக்கோல்
வெக்கையினூடான
விருப்பமில்லா
பயணத்தையும்
அழகாக்கிவிடுகின்றன
ஒரு
பேரிளம்பெண்ணின்
மலர்ந்த முகமும்
புன்சிரிப்பும்.
*
வேறென்ன?
ஆண்டுகள் ஐந்து
தொலைந்த பின் கண்ட
உன்னுள்ளும் என்னுள்ளும்
கேள்விகள் பல இருந்தன
ஒன்றுமே கேட்காமல்
வெறும் நலம் மட்டுமே
விசாரித்துக் கொண்டோம்
அதன்பிறகு முகாமிட்ட
மௌனத்தின் அடர்த்தியில்
உன்னிலும் என்னிலும்
ஏதேனும் உடைந்துவிடுமோ
என்னும் பயத்திலும்
எதிர்பார்ப்பிலும்
பல
“வேறென்ன?”-களும்
“ஒன்றுமில்லை!”-களும்
கழிந்த பின்
விடைகொள்ளும் வேளையில்
உள்ளே சிக்கித் தவிக்கும்
விடையறியா வினாக்களும்
காரணமறியா விடைகளும்!
ஆயினும்
உண்மையில்
மனம் வேண்டுவதென்னவோ?
இரு தரப்பு
நலம் மட்டுமே!
*
உண்மையறியா விமர்சனங்கள்
தானியங்கி கதவுகள் திறந்த பொழுதே
அடுத்த வருகைக்கான அறிவிப்பு கேட்க
மின்னேற்றிக்கு காத்திராமல்
மின்படிகளைப் புறக்கணித்தும்
விரைந்தே படிகளில் ஏறி
கடைசிப் பெட்டியில்
கதவடைக்கும் கடைசி
கால் பொழுதில்
பாய்ந்து உள்ளேகினேன்
மேல்மூச்சும் கீழ்மூச்சும்
கொஞ்சம் குறைந்த பின்
தாகம் தீர்க்க
தண்ணீர்ப்புட்டியைத் திறந்தேன்
வண்டியின் திடீர்த் திடுக்கிடலிலும்
எஞ்சியிருந்த படபடப்பிலும்
கொஞ்சம்போல் நீர் சிந்தி
கால் சராயையும் தரையையும் நனைத்தது
அடுத்த நிலையத்தில் ஏறியவர்கள்
நிற்க இடம் கிடைத்த மகிழ்வில்
அப்பாடா என்று ஓடிவந்தவர்கள் – நனைந்த
கால் சராயையும் உலக வரைபடத்தின்
கடல் பகுதியாய் சிந்தியிருந்த நீரையும்
கண்டு முகம் சுழித்து அருவருத்து
விலகி நின்றனர்
நிலையங்கள் சில கடந்த பின்னும்
கடற்பரப்பு கொஞ்சம் கரைந்த பின்னும்
கால்சராய் சற்றே உலர்ந்த பின்னும்
யாரும் அருகே நிற்கவும் துணியவில்லை.
சபரிமலைக்கு மாலையணிந்து
முக்கால்பாகம் நரைத்த தாடிமீசையும்
அன்றைய வேலையின் அருட்கொடையாய்
ஆடையெங்கும் படிந்திருந்த புழுதியும்
என்னை பரதேசிக் கோலத்தில் நிறுத்தியிருக்க
பார்த்த பார்வைகள் ஒவ்வொன்றும் பலவிதம்!
மூத்திரம் போனதாக மூவர் காதுபட பேச
சுத்தம் பேணவேண்டிய சுவாமி
அசுத்தமானதாக இருவர்!
ஒருவேளை
பைத்தியமோ? பிச்சைக்காரனோ?
என்னும் கேள்விப்பார்வைகள்!
‘இவனைப் போன்றவர்களை
உள்ளேவிடுவதே தவறு’
என்று பதறும் பொதுநலவாதி!
மணித்தியாலங்களும்
நிலையங்களும் கடந்து போக
கடற்பரப்பு இலட்சத்தீவுகளாகி
கடைசியில் கச்சத்தீவாகி மறைந்தும் போனது!
மறைந்தும் உலர்ந்தும் போனது
சிந்திய நீர் மட்டுமே!
இறங்கும் வேளையில்
ஏறிய ஒருவர்
“ஸ்வாமி சரணம்” என்க
“சரணம் ஐயப்பா” என்றேன்.
*
சுயநலம்
மனைவி
எவ்வளவு ஓட்டியும்
போகாத பூனையை
சென்று பார்த்தேன்
பூனையோடு அன்றலர்ந்த
குட்டிகளும் இருந்ததால்
விரட்ட மனமின்றி
திரும்பினேன்
அன்றிரவு
முன்பொரு காலத்தில்
எனது கிராமத்து வீட்டிலிருந்த
கருப்பும் வெளுப்புமாயிருந்த
பூனைகளிரண்டின் கதைகளை
பிள்ளைகளிடம் சொல்ல
அடுத்த நாளிலிருந்து
பிள்ளைகளின் ரொட்டிகளும்
மதிய உணவுப்பெட்டியின்
எஞ்சியவையும்
பூனைகளுக்கு உணவாகின
நாட்கள் பல சென்ற பின்னே
இதனைக் கண்ணுற்ற மனைவி
பூனைகளிடும் அசுத்தங்களை,
“யார் சுத்தப்படுத்துவது?”
என்று கேள்வியெழுப்ப
பதிலில்லை எங்களிடம்.
சுத்தம் செய்ய வந்த யாரோ
ஒருவரின் துணை கொண்டு
விரட்டப்பட்ட பூனைகள்
எதிர்வரிசையின் காலி
மனைக்குள் குடி புகுந்தன.
பிள்ளைகள் போய்வரும்போதெல்லாம்
அவைகள் ஓசையெழுப்பின.
சில நாட்களில் காலிமனையில்
உரிமையாளர் தனது பத்தாவது
வீட்டின் கட்டுமானம் தொடங்க
பூனைகளின் சுவடுகள் அதன் பிறகு
தென்படவேயில்லை.
எத்தனை பெரிய இடமிருந்தும்
பற்றாத நமக்கு ஒற்றைச் சதுர அடியில்
உயிர் வளர்க்கும் உயிர்களுக்கு
இடமளிக்க இயலவில்லை.
எத்தனை வீடுகளிருந்தும்
போதவில்லை நமக்கு.
ஒற்றைக்கூட்டுக்கு இடம் தேடி
அலைகின்றன உயிர்கள்.