
மீன் பிடிக்காலம்
இப்போதெல்லாம்
என் ஊர் குளத்தில்
மீன் பிடிப்பது இல்லை
அம்மா மீன் சிக்கினால் அனாதையாகிவிடுகின்றது
பிள்ளை மீன்
பிள்ளை மீன்
சிக்கினால் தவித்துப்போய்விடுகிறது
அம்மா மீன்
அப்பா மீனென்றால்
நீருலகின் மிச்சவாழ்வை
எப்படி வாழ்வார்கள்
அம்மாவும் பிள்ளையும்
மீன்பிடிக் காலம் துவங்கி விட்டதாக
செய்தி அறிவிப்பவன்
அறிவித்துச் செல்கின்றான்
எனது வீட்டின் மேற்கூரையில்
எப்போதும் போல்
உறங்கிக் கொண்டிருக்கின்றது தூண்டில்.
*
தலையீடு
இறக்கைகளை சடசடவென
அடித்துக் கொள்ளாமல்
அமைதியாகப் பறந்தால்
நல்லதெனத் தோன்றியது
பறந்து கொண்டிருக்கையில்
இடை யிடையே எழுப்பும்
கீச்சொலியைத் தவிர்த்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
கிளையில் அமர்ந்திருக்கும்
தருணத்தில்
அலகினால்
கோதிக்கொள்வதனைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்
‘சூ’ என்னும் சின்ன ஒலிக்கு
பதபதைப்புடன்
பறந்தோட வேண்டிய
அவசியம்
எதுவும் இல்லை
எல்லாம் சரி…
ஒரு பறவையின் சுதந்திரத்தில்
தலையிட
எனக்கென்ன உரிமை
இருக்கின்றது?
*