
சில சமயங்களில் நாம் எதை வாசிக்கின்றோம் எப்படி வாசிக்கின்றோம் என்பது நம்மையும் மீறி இயல்பாய் நடந்து விடுகிறது. அப்படியொரு சுவாரஸ்யமான அனுபவத்துடன்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன்.
எழுத்தாளர் ரிஸ்வான் ராஜாவின் ‘தீர்மானம்’. டிஸ்கவரி பப்ளிகேஷன் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மொத்தம் பதினொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. தான் எழுதும் ஒவ்வொரு சிறுகதையிலும் அதனை வாசிக்கின்றவர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கவோ நினைவுப்படுத்தவோ வேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டதாய்த் தோன்றும் இக்கதைகள் அதனைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. இது ரிஸ்வான் ராஜாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. வழக்கமாக முதல் தொகுப்புகள் ஒருவரை நாம் தொடர்ந்து வாசிக்கலாமா வேண்டாமா என்பதைக் கோடிகாட்டிவிடும்.
இன்றைய காலக்கட்டத்தில் நம்மை நாமே சிரமப்படுத்திக் கொண்டு கட்டாயம் வாசிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை. ஆனால், வாசிக்க வேண்டும் என்கிற தீராத்தீ இருக்கின்றவரை எதையும் வாசிப்பதில் நாம் ஒருபோதும் குறைவைப்பதில்லை. முதல் தொகுப்பு ஒருவரின் படைப்புகளை உடனே வாசிக்கவும் அல்லது நேரம் இருக்கும் போது வாசிக்கலாம் என்கிற எண்ணத்தையும் நமக்குக் கொடுத்து விடுகின்றன. அந்த வகையில் ரிஸ்வான் ராஜாவின் கதைகளை இனி தவறாது வாசிக்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த முதல் புத்தகம் நமக்குக் கொடுக்கின்றது. இருந்தும் முதல் புத்தகத்திற்குச் சில சமயங்களில் அமைந்துவிடும் பலவீனங்களுடன் இக்கதைகள் தனியாகவும் நிற்கின்றன.
இந்தத் தொகுப்பை சமீபத்தில்தான் வாங்கினேன். எழுத்தாளர் முகநூல் நண்பர். அதோடு முகநூலிலும் இணைய இதழ்களிலும் படைப்புகளை எழுதிக் கொண்டிருப்பவர். அவ்வப்போது அவரது எழுத்துகளை வாசித்துள்ளேன். இருந்தும் அவரது கதைகள் புத்தகமாக வந்திருக்கின்றது என அறிந்ததும் உடனே வாங்கிவிட்டேன். வாசித்தேன். அக்கதைகள் குறித்து என் பார்வையை எழுதுவதன் வழி இக்கதைகளை மேலும் நான் புரிந்துகொள்ள விரும்புகின்றேன்.
சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளை அதன் வரிசைப்படி நான் வாசிப்பதில்லை. கவனத்தை ஈர்க்கும் தலைப்பு. கதைகளின் பக்க எண்ணிக்கை. பரிந்துரைத்த கதைகள் என்பதாக வரிசைகளில் இல்லாமல் இப்படி ஒவ்வொன்றாக வாசிப்பேன். ‘தீர்மானத்தையும்’ அப்படித்தான் வாசித்தேன். முதல் கதையாக, தனிமை. இரண்டாவதாகப் பொறி, மூன்றாவதாக விளையாட்டு என வந்துகொண்டிருந்தது.
இந்த மூன்று கதைகளிலுமே மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரனங்களும் முக்கியமாகத் தோன்றியிருந்தன. ஈ, எலி மற்றும் பட்டாம்பூச்சி என வந்ததில் எனக்கொரு எண்ணம் தோன்றியது. இத்தொகுப்பில் உள்ள மற்ற கதைகளும் இப்படியே மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் இருக்கப் போகின்றன. எனக்கு அது அதிகப்படியான ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், அது அப்படி அமையவில்லை என்றாலும் அடுத்தடுத்த கதைகளை வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இக்கதைகள் குறைக்கவில்லை. குறையும் வைக்கவில்லை.
‘பொறி’ சிறுகதை. நாம் செய்யும் வேலை எப்படி ஒரு பொறியாக நம்மைச் சிறை வைக்கிறது எனச் சொல்ல முயலும் கதை. ஊதியம் தரும் வேலைதான் என்றாலும் தனக்கு எப்போது வேண்டுமென்றாலும் வேலை கொடுக்கப்படலாம். எந்நேரத்திலும் தாம் அழைக்கப்படலாம். உயிர் போகிறதென்றாலும் முதலாளியோ நிர்வாகியோ அழைத்து அல்லது மின்னஞ்சலில் சொல்லும் வேலைகளைச் செய்துவிட்டுதான் உயிரைவிட வேண்டும் என்கிற நிலையில் உள்ள பல இளைஞர்களை நினைக்க வைக்கும் கதை.
30 வயது மதிக்கத்த இளைஞனும் அவன் வீட்டில் இருக்கும் எலியும் ஒரு கோட்டில் சந்திப்பது இக்கதையின் சிறப்பு. ஆனால், அந்தக் கோடு இன்னமுமே அதிக பிடிமானத்துடன் இருந்திருக்கலாம். இக்கதையில் நாயகன் எலியைப் பார்த்து சிந்திப்பதைவிடவும் எலி அவனைப் பார்த்துச் சிந்தித்துத் தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டது வாசிக்கையில் இரசிக்கும்படி அமைந்தது. சிறு புன்னகையுடனே அவற்றை வாசிக்கவும் முடிந்தது. கடைசியில் எலியை பொறி வைத்து பிடித்துவிட்டவன் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்கோ கொண்டு சென்று விட்டுவிட்டு வருகிறான். தன்னால்தான் இந்தப் பொறியில் இருந்து தப்பிக்க இயலவில்லை. நீயாவது பிழைத்துப்போ என அவன் நினைத்திருக்கக் கூடும். அவனுக்கும் எலிக்குமான அந்த நெருக்கம் அதிகம் சொல்லப்பட்டிருந்தால் கதை இன்னும் நன்றாய் அமைந்திருக்கும்.
‘தனிமை’ சிறுகதை. தலைப்பிற்கு ஏற்றார்ப்போல ஒரு முதியவர் தனிமையில் இருக்கிறார். அந்தத் தனிமையை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. தன் தனிமைக்குள் துணையாய் ஒரு ஈ வருகின்றது. முதியவர் ஈயுடன் உரையாடுகிறார். தன்னைப் பற்றி அறிமுகம் செய்துக்கொள்கிறார். தான் கலக்கிய காபியில் சீனி சரியாக இருக்கிறதா என அவர் ஈயிடம் கேட்கும் கேள்வி அந்தத் தனிமையின் வேதனையை நமக்கும் கடத்துகின்றது. இன்னும் செறிவாக்கம் செய்திருந்தால் குறுங்கதையாக வடிவம் எடுத்திருக்க வேண்டிய கதைக்கரு. அதன் சிறுகதை வடிவத்திற்கும் குறைவின்றி அமைந்துள்ளது.
‘விளையாட்டு’. குழந்தைகள் மீது நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பழகுவது அவர்கள் இரசிப்பது அவர்கள் விளையாடுவது என ஒவ்வொன்றும் நாளை அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அதே வேலையில் அவர்களின் எதிர்காலத்தை முடித்தே விடும். தனக்கு ஒரு தேவை இருக்கின்றது அதற்காகவும், அதனைத் தான் அடையவும் எதையும் செய்யலாம் என்கிற எண்ணம் எவ்வளவு மோசமாக மாறும் சாத்தியங்கள் உண்டு எனச் சொல்லும் கதை. சிறுவயதில் பட்டாம்பூச்சிகளை அடித்துக் கொள்ளும் சிறுவர்கள் வளரும் போது அதே மாதிரி வன்முறையைப் பழக்கும் வீடியோ கேமில் மூழ்குகிறார்கள். அது அத்தோடு நிற்கப் போவதில்லை. தனக்கு லாபம் வருகிறதென்றால் எதையும் செய்யலாம் என்கிற மோசமான மனநிலை அங்குதான் தொடங்குகிறது. இக்கதையை வாசிக்கையில் சிறுவனாக இருந்து பட்டாம்பூச்சியைக் கொன்று ரசித்து விளையாடிவர்கள் கைகளில் ஆயுதங்களுடன் எல்லோரையும் ஈவு இரக்கமின்று சுட்டுக்கொல்வதாகக் கற்பனை செய்து கொண்டேன். பகீர் என்று இருக்கிறது.
‘டிஜிட்டல் இந்தியாவின் எந்திரனே வருக வருக!’ சிறுகதையும் ‘கையறுநிலை’ சிறுகதையும் சமகால அரசியல் பேசும் கதைகளாக அமைந்து விட்டன. இவை கதைகள் என்ற போக்கில் மட்டும் எடுத்துக் கொள்ளாது அரசாங்கம் மக்களை எப்படி நடத்துகின்றது. என்னவெல்லாம் படுத்துகின்றது எனச் சொல்லும் ஆவணமாகவும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரு கதைகளில் வரும் சம்பவங்களைப் பத்திரிகை செய்திகளாகவும் சிலரின் முகநூல் பதிவுகளாகவும் வாசித்திருக்கிறேன். அவற்றைக் கதைகளாக வாசிக்கையில் நேரடி அனுபவம் போலவே அமைந்துவிட்டது. பல ஊர்களில் பல நாடுகளிலும் வளர்ச்சி என்பது மக்கள் நலனைவிடவும் வேறு ஏதோ காரணத்தை மறைத்தேதேன் வைத்திருக்கிறது போலும்.
பழைய நினைவுகள் மீது காதல் உள்ளவர்களை இன்றும் கூடப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். தான் பிறந்த வீடு, வாழ்ந்த தோட்டம் (கிராமம்), விளையாடிய திடல், குதித்துக் குளித்த ஆறு எனப் பாட்டிகளும் தாத்தாக்களும் சொல்லி சிலாகிக்கும் பழம் நினைவுகள் அடுத்தத் தலைமுறைக்கு இல்லை. குழாய் தண்ணீர் வராததே பெரிய சிக்கலாக வைத்துக் காலம் தள்ளுகின்றவர்களுக்கு ஆறு நிறைய ஓடிய தண்ணீரில் ஊரே ஒன்றாய் குளித்த கதைகளால் பெருமூச்சுதான் விட முடியும். அப்படியான பழைய நிழைவுகளின் தன் கடைசிக் காலத்தைக் கழிக்க நினைக்கும் பாட்டியின் கதைதான் ‘மூமா’. தலைப்பும் அதுதான் கதையின் நாயகியும் ‘மூமா’ பாட்டிதான். தான் சிறுவயதில் விளையாடிய ஆற்றுக்குத் தன் பேத்தியை அழைத்துச் செல்கிறாள் பாட்டி. வற்றிய அந்த ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கு குடத்துடன் போகின்றவர்களைக் குடும்பமே பரிகசிக்கிறது. மூமாவின் நினைவுகள் தனது பால்யத்திற்கும் ஆற்று நீரில் ஈரத்திற்கும் செல்கிறது. எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் எனப் பொறாமைப்படுவதைத் தவிர நம்மால் வேறெதையும் செய்ய முடியவில்லை. மூமா நினைத்தது போலவே வறண்ட ஆற்றுப்பாதையில் தனக்கான ஒரு குடம் நீரை சேமித்துவிட்டார். வீட்டிற்கு வந்ததும் எல்லோருக்கு அது ஆச்சர்யமாக இருக்கிறது. அதன் பிறகு நடப்பதும்; மூமா பாட்டி ஏன் இன்று அந்த ஆற்றுநீரை சேமித்துக் கொண்டுவந்தார், எதற்கு அது பயன்படுகிறது என்பது மனதை கனக்கச் செய்தாலும் ஏதோ ஒரு திருப்தியைக் கொடுக்கவும் செய்கிறது.
‘கேலி’ என்பது இன்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டாட்டமாக மாறிவிட்டது. ஒருவரை அவமானப்படுத்தி ஒருவரை கோபப்படுத்தி ஒருவரை அழவைத்து அவர்களைக் கேலி செய்வது இப்போதெல்லாம் விளையாட்டு மட்டுமல்ல ஒருசாரார் சம்பாதிக்கும் பிரபலமடையும் வழிமுறையாகவும் மாறிவிட்டது. அப்படியான ஒரு கேலி வீடியோ காட்சி எப்படி ஒருவரின் இருப்பை இல்லாமல் செய்கிறது எனச் சொல்லும் கதையாக ‘கேலி’ என்னும் கதையைச் சொல்லலாம்.
‘பெண்’ சிறுகதை. திருநங்கைகளே அவர்களைப் பெண்களாகத்தான் நினைக்கிறார்கள்; நாம்தான் அவர்களுக்குத் திருநங்கை என்னும் அடையாளத்தைக் கொடுக்கின்றோம் எனச் சொல்லும் கதை. அதற்கு ஏற்றவாறு கதையையும் கதையில் ஒரு சம்பவத்தையும் எழுத்தாளர் எழுதியிருப்பார். ஆனால், அவர்கள் தங்களைப் பெண்களாக நினைக்கிறார்களா அல்லது மூன்றாம் பாலினமாக மதிப்பை எதிர்ப்பார்க்கிறார்களா என்று எழுத்தாளர் தீவிரமாக யோசித்திருக்க வேண்டும். இக்கதையை வாசித்துக் கதைக்கு வெளியில் வந்து மேற்சொன்ன கருத்தில் நாம் ஓர் உரையாடலையே நடந்தலாம். பேசுவதற்கு அவ்வளவு இருக்கிறது. பெண்கள் ஏன் அவர்களது கழிப்பறைக்குத் திருநங்கைகளை வரவேற்பதில்லை என்பதில் தொடங்கி அவர்களுக்குத் தங்களின் அடையாளம் மாற்றுப் பாலினமா அல்லது பெண்களா என்கிற கேள்விகளை முன்வைத்து அந்த உரையாடலை நடத்தலாம். என்றாவது ஒருநாள் அது நடக்கும் என்றே தோன்றுகிறது அப்போது இந்தக் கதை ஒரு விவாதப்பொருளாக மாறும். அல்லது ஒரு விவாதத்தை உருவாக்கும். உருவாக்கட்டும்.
‘ஆம்பள பையன்தான’, ‘ஒன்றுமில்லை’ இரண்டு சிறுகதைகளும் சிறுவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைப் பற்றிப் பேசுகிறது. முறையே சிறுவனுக்கு ஒரு கதையும் சிறுமிக்கு ஒரு கதையும் என அமைந்துவிட்டது.
‘ஆம்பள பையன்தான’ என்னும் சிறுகதை ரொம்பவும் முக்கியமான கதையாக வவேண்டிய கதை. ஆனால், சிறிய தடுமாற்றத்தால் அந்த இடத்தைத் தவறவிட்டுவிட்டது.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. சிறுமிகளுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்கும்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. இளைஞர்களுக்கு மட்டுமல்ல வயோதிகர்களுக்கும்தான் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே மட்டுமல்ல வழிபாட்டுத் தலத்திலேயே பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. இப்படி இனி சொல்ல முடியாத காலக்கட்டத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற அச்சம் நிறைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதுவும் எங்கும் நடக்கலாம் எவருக்கும் நடக்கலாம் என்றாகிவிட்டது. இதனைக் கதைகளாக ஆராய்ந்து எழுதப்படுவது அதிகம் இல்லையென்றாலும் அவ்வப்போதும் வருகிறதுதான். சமயங்களின் இவற்றைப் புனைவாக வாசிக்கும் போது முகம் சுளித்து எழுதியவரை திட்டுகின்றவர்கள் கூட இதனையே செய்திகளாகப் பார்க்கவோ வாசிக்கவோ செய்தால் ரொம்பவும் மனம் உடைந்து போகிறார்கள்.
‘ஆம்பள பையன்தான’ என்ற தலைப்பிலேயே கதையையும் எழுத்தாளர் சொல்லிவிட்டார். அப்பாவும் அம்மாவும் வெளியில் போக வேண்டும். மகனை அழைத்துச்செல்ல முடியாத சூழல். இரண்டு வீடு தள்ளியிருக்கும் தெரிந்தவரிடம் மகனை கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி புறப்படுகின்றார்கள். அங்கு அந்தச் சிறுவனுக்குப் பாலியல் அத்துமீறல் நடக்கின்றது. இதுதான் கதை. தலைப்பும் அதையேதான் சொல்கிறது. இதைத்தாண்டி இக்கதையில் நம்மால் எதை எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதுதான் வாசகனின் கேள்வியாக இருக்கிறது. இதுதான் நடக்கிறது எனச் சொல்கிறதா, பெற்றோர்களே கவனம் எனச் சொல்கிறதா, யாரையும் நம்பாதீர்கள் எனச் சொல்கிறதா, ஆண் பிள்ளையென்றாலுமே பாதுகாப்பு வேண்டும் எனச் சொல்கிறதா?. சரி இச்சிறுகதை சரியாகச் சொல்லப்பட்டீருக்கிறதா? பார்க்கலாம்.
இக்கதையில் அந்நபரின் வீட்டிற்குன் சிறுவன் செல்கிறான். அங்கு அவனுக்குப் பிடித்த கேரம் போர்ட் இருக்கிறது. அதனை அவனிடம் கொடுத்துவிட்டு அந்நபர் குளிக்கச்செல்கிறார். பின் இடுப்பில் டவலுடன் அந்த அறைக்கு வருகிறார். சிறுவன் தன் மடியில் வைத்திருக்கும் கேரம் போர்ட் காய்களை எடுப்பது போல அவனது ஆண் குறியை அந்நபர் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார், என எழுத்தாளர் எழுதிக்கொண்டு போகிறார்.
இந்த ஒரு காட்சி போதும் கதையின் மீது நம் கவனத்தைக் கொண்டு வருவதற்கு. இது கதை தொடங்கி நான்காவது பக்கத்தில் நடக்கிறது. கதையை இதனோடு முடித்திருக்கலாம். அல்லது அங்கு என்ன நடந்திருக்குமோ என்கிற அச்சத்தை வாசர்களுக்குக் கொடுப்பது போல எழுதியிருக்கலாம். ஏனெனில் சில சம்பவங்கள் நடக்கப் போகிறது என்கிற பதைபதைப்புக் கதைகளில் ரொம்பவும் முக்கியம். அதுவே, ஆம் அதுதான், அந்தச் சம்பவம் நடந்துவிட்டது எனச் சொல்லிவிட்டு, அது எப்படி நடந்தது தெரியுமா என அதிகப்படியாகச் சொல்ல ஆரம்பிக்கும் போது வாசகர்களிடம் தோன்றிய பதைபதைப்பு மாறி ஒரு பத்திரிகை செய்தியை வாசிக்கின்ற மனநிலைக்கு மாறிவிடுகிறது.
இந்தக் கதையைச் செறிவாக்கம் செய்து கடைசி ஒரு பக்கத்தை இல்லாமலாக்கியிருந்தால் கூட இக்கதை முக்கியமான கதையாக மாறியிருக்கும் என்ற எண்ணமே இக்கதையை வாசித்து முடித்ததும் தோன்றியது.
இந்தக் கதையில் உள்ள பலவீனங்கள் இல்லாமல் அடுத்ததாய் ‘ஒன்றுமில்லை!’ என்கிற சிறுகதை அமைந்திருக்கிறது. பாலியல் வன்முறைக்கு ஆளான பள்ளி மாணவி அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை. வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் அவளுக்கு என்னென்ன நேருமோ என்கிற அச்சத்தை நமக்குக் கொடுக்கும் கதை. இவ்வாறு பாதிக்கபப்ட்டவர்களுக்கு அடிப்படையில் தான் அதிலிருந்து மீண்டு வருவதற்குத் தன்னகத்தே ஒரு துணிச்சல் தேவை. எவன் இனி என்ன சொன்னாலும் நான் செய்யாத தவறுக்கு வாழ்நாள் முழுக்க நான் ஏன் பழியைச் சுமந்து பலியாக வேண்டும் என்று முன் நோக்கி நடக்கத் துணிச்சல் வேண்டும். இக்கதையில் வரும் சிறுமி அதைத்தான் செய்கிறாள்.
‘அந்த ஆசிரியையின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “நத்திங் மேம். ஐம் ஓகே. கொஞ்சம் நகருங்க.. நான் முன்னாடி போகணும்!”, என்று கையால் நகரச்சொல்லி சைகை காட்டி அவரைத் தாண்டி முன்னே நடந்து சென்றாள்,’ என்று எழுத்தாளர் இச்சிறுகதையை முடித்திருக்கின்றார். ஆனால், ஒரு சிறந்த கதை முடிந்த இடத்தில் இருந்து வாசகர் அதனை இன்னொரு இடத்திற்கான தொடக்கத்தைக் கொடுக்கின்றார் என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.
தொகுப்பில் நிறைவாக நாம் பார்க்கவுள்ளது புத்தகத்தின் தலைப்பு கதையான ‘தீர்மானம்’.
எல்லாக் கதைகளுமே சொல்லப்பட்டுவிட்டன; இன்று நாம் என்ன கதையைச் சொல்கிறோம் என்பதைவிட எப்படிக் கதையைச் சொல்கின்றோம் என்பதே முக்கியமாக இருக்கிறது.
ரிஸ்வான் ராஜாவின் ‘தீர்மானம்’ சிறுகதை புதிய கதை அல்ல. இது பல வடிவங்களில் இன்னும் சொல்லப்போனால் இதே வடிவத்திலேயே கூட வந்திருக்கும் கதைதான். ஆனால், அதனை அவர் சொன்னவிதத்திலும் கதையை அவர் முடித்த விதத்திலும் தனித்த கதையாக இக்கதை மாறுகின்றது.
பேருந்தில் குழந்தையுடன் ஒரு பொண் ஏறுகின்றாள். வழியில் அந்தக் குழந்தையின் சங்கிலி காணமல் போகிறது. யாரோ திருடிவிட்டார்கள் எனக் கூச்சல் போடுகின்றாள். பேருந்தில் உள்ள அனைவரும் முதலில் தங்களின் உடமைகளைச் சரி பார்க்கிறார்கள். தழும்புடன் செம்பட்டை தலையோடு ஒல்லியாகக் கருத்த தோலுடன் இருக்கும் 45வயது மதிக்கத்த மனிதர் மீது அந்தப் பெண்ணுக்குச் சந்தேகம் வருகிறது. அடுத்த கணமே அந்த மனிதர்தான் குற்றவாளி என முடிவு செய்கிறாள். அவள் மட்டுமல்லாது அந்தப் பேருந்தில் உள்ள அனைவருமே அந்த மனிதர்தான் திருடன் என முடிவு எடுக்கின்றார்கள். அந்த மனிதரின் முகமும் அவரின் உடையுமே அவர்மீது குற்றத்தை சுமத்தப் போதுமானதாக இருக்கிறது. அங்கு மட்டுமல்ல, அந்தப் பேருந்து காவல்நிலையம் வரை செல்கிறது. அங்கும் அந்த நபர்க்கு அதுதான் நிலைமையாக இருக்கிறது.
இதுவரை வழக்கமான கதைதான். ஒருவரின் முகத்தையோ அவர் அணிந்திருக்கும் ஆடையையோ அவரிடம் இருக்கும் தழும்பை வைத்தோ அவர் மீது தப்பான பார்வையை வைத்துக் குற்றம் சுமத்தி; அவர் நிரபராதி எனத் தெரிந்ததும் மன்னிப்பு கேட்பது.
‘தீர்மானம்’ கதையும் இதுவரை அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. கதையின் முடிவு கதையின் போக்கையே மாற்றி விட்டது, இது அந்தப் பழி சுமத்தப்பட்ட மனிதர் பற்றிய கதை அல்ல. மாறாகக் குற்றம் சுமத்திய பெண்ணையும் அந்த மனநிலையில் நம்முடன் வாழும் மனிதர்கள் பற்றிய கதை.
காவல் நிலையத்தில் அந்த மனிதருக்கு ஏற்படும் நிலைமை ரொம்பவும் மோசமானது. வாசிக்கையில் நம்மையும் பரிதாபப்பட வைக்கிறது. இதற்கிடையில் அந்தப் பெண்ணுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வருகின்றது. எடுத்துப் பேசுகின்றாள். தான் காவல்நிலையத்தில் இருப்பதாகவும் குழந்தையின் சங்கிலி காணாமல் போனதைக் குறித்தும் பேசுகிறாள். எதிர்முனையில் என்ன பேசினார்கள் எனத் தெரியவில்லை. அவளது முகம் வெளிறிப்போகிறது. ஆனால், நம்மால் அதனை யூகிக்க முடிகின்றது. குழந்தையின் சங்கிலி வீட்டிலேயே இருந்திருக்கக்கூடும்.
சந்தேகப்பட்ட நபரிடம் நகை இல்லை என்பதைச் சொன்ன காவல் துறையினர். அந்நபரை போகச்சொல்லி அந்தப் பெண்ணிடம் புகாரை எழுதிக் கொடுக்கச் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணோ எதுவும் பேசாமல் வெளியேறிக்கொண்டிருக்கும் நபரைப் பார்க்கிறார்.
தன்னால் தனது அவசர புத்தியாலும் தவறான புரிதலாலும் அப்பாவி ஒருவன் திருடனாகச் சந்தேகப்பட்டுக் காவல்நிலையத்தில் இத்தனை அவமானங்களை அடைந்திருக்கின்றான். ஆனால், அந்தப் பெண் அந்த மனிதருக்காக ஒரு சொல்லையும் சொல்லவில்லை. ஒருவனைக் குற்றம் சொல்ல குற்றவாளி என முத்திரைக் குத்த வேகமாகச் செயல்படும் யாரும் தங்களின் தவறுகளை ஒருபோதும் ஒத்துக் கொள்வதில்லை. திருடன் எனக் குற்றம் சுமத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அந்த மனிதன் மீது நம்மால் கருணை காட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தச் சிறுகதையின் முடிவில் எழுத்தாளர் ரிஸ்வான் ராஜா தனித்து நிற்கிறார். அவர் தொடர்ந்து புனைவுகளை எழுத வேண்டும். நாங்கள் அவரிடம் இருந்து இன்னும் பல கதைகளை எதிர்பார்த்திருக்கின்றோம் என்று ஒரு வாசகனாய் சொல்லி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.