இணைய இதழ் 116கட்டுரைகள்

தமிழின் தடம் தேடி – அரிகரசின்னா

கட்டுரை | வாசகசாலை

“என் சரித்திரம்” என்ற உ.வே. சாமிநாத ஐயரின் சுய சரிதை புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரை, சரியாகத் தூங்கவே இல்லை. இது எப்போதும் நிகழ்வதுதான் என்றாலும், இந்த முறை இன்னும் மோசமாக மாறியது. அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின்பும் கூட அந்தப் புத்தகத்தில் படித்த சம்பவங்களும் இடங்களும்தான் நினைவில் ஓடிக்கொண்டே இருந்தன.


உ.வே.சாமிநாத ஐயர் 1855-ல் பிறந்தவர். ஆனால், அவர் தன் சுய சரிதையை, தான் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மன்னர் காலத்திலிருந்து தொடங்குகிறார். காடாகக் கிடந்த அந்த இடம் எப்படி ஊராக உருப்பெற்றது என்பதில் தொடங்கி 1800-களிலிருந்த ஒரு தமிழகக் கிராமத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார். அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போதெல்லாம் 2024-ல் இருந்தபடி 170 ஆண்டுகளுக்கு முன் உள்ள ஊரில் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

அப்போதிருந்த திண்ணைப் பள்ளி முறை, ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், கல்வி முறை, கிராமங்களின் இயற்கையான வாழ்க்கை, குழந்தைகளின் விளையாட்டு, குடும்பங்களின் வறுமை என எல்லாம் சேர்ந்து என்னுள் பேருருப்பெற்றது. அதில் வரும் ஊர்களெல்லாம் இப்போது எப்படி இருக்கிறது எனப் பார்க்க ஆசைப்பட்டேன். அதைப் பற்றி அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன்.


சில மாதங்கள் கழித்து ஒரு நாள், அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அம்மா கட்டிக்கொடுத்த உணவோடும் தண்ணீரோடும் என் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுவிட்டேன். என் ஊரான ஆக்கூரிலிருந்து மயிலாடுதுறை போய் கல்லணைச் சாலை வழியாக சூரியனார் கோவிலுக்குப் போய்விட்டேன். அந்த ஊரைத் தாண்டிதான் உ.வே.சா பிறந்த ஊரான சூரியமூலை இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால், வழி தெரியாது. இருப்பினும் கூகுள் மேப்பைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். எதிரில் தென்படும் ஒவ்வொருவரிடமும் வழி கேட்டுப் போவதுதான் என் திட்டம்.


பயணம் என்பது புது இடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல. புது மனிதர்களைப் பார்ப்பதும் அவர்களோடு பழகி மகிழ்வதும்தான். ஒவ்வொரு மனிதனும் ஓர் எழுதப்படாத புத்தகம். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் வாசித்தறிவதற்கான ஏராளமான தகவல்கள், அவர்களின் அனுபவத்தின் வடிவில் நிறைந்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோரின் வாழ்வனுபவங்களை அவர்கள் ஒருபோதும் ஆவணப்படுத்தப் போவதில்லை. குறைந்தபட்சம் அதைக் காது கொடுத்துக் கேட்கவாவது யாராவது வேண்டுமல்லவா! இல்லாவிட்டால் அவ்வளவு அனுபவத் தகவல்களும் அவர்களோடு சேர்ந்தே காணாமல் போய்விடும். இப்பூமியில் பிறந்து மறைந்த பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை அப்படித்தான் மறைந்திருக்கிறது. ஆகவே, அவர்களோடு ஓர் உரையாடலைத் தொடங்குவதற்கான வாய்ப்பாக, ஊருக்கு வழி கேட்பதைப் பயன்படுத்திக் கொண்டேன். சூரியனார் கோவிலைத் தாண்டி உள்ளே போகப் போக சாலை குறுகிக்கொண்டே போனது. வழியில் தென்படுபவர்களிடமெல்லாம் வழி கேட்டு இறுதியாக திருமாந்துறை என்ற கிராமத்தை வந்தடைந்தேன். 


அங்கே ஒருவர் வாய்க்காலில் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார். இன்னும் சூரியன் முழுவதுமாக தன் கதிர்களைப் பூமிக்கு அனுப்பாத இந்த அதிகாலை வேளையில் இப்படித் தன்னந்தனியாக நின்று மீன் பிடிப்பவரைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது. அவரிடம் சென்று, சூரியமூலைக்கு வழி கேட்டேன். “இப்டி நேரா போனீங்கனா திருலோக்கி வரும், அதுக்கு அடுத்த ஊருதான் சூரியமூல.” என்றார். “அங்கதான உ. வே. சாமிநாத ஐயர் பிறந்தாரு?” என்றேன். “நீங்க ஐயர பாக்கனுமா… அங்க ஐயருங்க யாரும் இருக்கறதா தெரியலயே. நம்ம ஊரு ஐயருன்னா எனக்குத் தெரியும்,” என்றார் அவர். “இல்லங்கய்யா… அவரு 1800-கள்ல பிறந்தவரு.. 1942-லயே இறந்து போயிட்டாரு. தமிழ் தாத்தானு கூட சொல்லுவாங்களே.” என்றேன். “அட, என்னமோ சொல்றீங்க எனக்கு ஒண்ணும் புரியலயே…” என்றபடி சாலையைப் பார்த்தார். அங்கே மூன்று பாட்டிகள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம், “சூரிய மூலைல யாரோ ஐயராமே… தேடி வந்துருக்காங்க. உங்களுக்குத் தெரியிதானு பாருங்க.” என்றார் அவர்களிடம். அவர்களுக்கும் நான் சொன்னது புரியவில்லை. அதற்குள் சாலையில் வண்டியில் சென்ற ஒருவரை மறைத்து இவர்கள் கேட்க, அவர், “சூரியமூலைல உள்ளவங்கள இங்க கேட்டா எப்டி தெரியும்? அங்க போய்க் கேளுங்க.” என்றபடி ஊருக்கு வழியும் சொன்னார். நானும் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, விடைபெற்றுக்கொண்டு, இரு பக்கமும் வயல்கள் சூழ்ந்த அந்தக் குறுஞ்சாலையில் பயணித்தேன். முதலில் ஓர் ஊரை அடைந்தேன். அதுதான் திருலோகி. நல்ல அழகான கிராமம். அங்கே என் கண்ணில் ஒரு நூலகம் தென்பட்டது. உடனே அந்த நூலகத்திற்குச் சென்றேன். வாசற்படியில் இருவர் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்டேன். அதில் ஒருவர் நூலகர். அவருக்கு ‘உ.வே.சா’ வை நன்றாகத் தெரிந்தது.


இதுதான் நூலகத்தின் அருமை. ஒரு வரலாறு, அது நிகழ்ந்த ஊரின் அக்கம் பக்கத்து ஊர்க்காரர்களாலேயே மறக்கப்பட்டாலும் கூட, அங்குள்ள நூலகங்கள் அதைத் தன்னுள் சுமந்தபடி அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டே இருக்கின்றன.

அந்த நூலகரிடம் நிறைய பேசினேன். பிறகு நூலகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சூரியமூலை நோக்கிப் பயணித்தேன். மீண்டும் வயல்கள் சூழ்ந்த சாலை. அதைக் கடந்ததும் அந்தக் குக்கிராமத்தை அடைந்தேன். சில கூரை வீடுகளைக் கடந்தேன். ஒரு வீட்டின் வாசலில் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. இந்த ஊரின் கடைசியில் ஒரு கோவில் இருப்பதாகவும் அங்கே சென்று பார்க்கும்படியும் சொன்னார். நம்பிக்கையோடு அந்தக் கோவிலைத் தேடினேன். ஊரின் இறுதியில் சாலையின் இடப்புறத்தில் இருந்தது அந்தக் கோவில்.


‘சூரிய கோடீஸ்வர ஆலயம்’ என்ற அந்தக் கோவிலுக்குப் போனேன். அங்கே ஓர் ஐயர், கோவிலுக்கு வெளியிலிருந்து ஒரு பெரிய இலுப்பை மரத்துக்கு பூசை செய்து முடித்துவிட்டு என்னை நோக்கி வந்தார். அவரிடம் ‘உ.வே.சா’ பற்றிக் கேட்டேன். “ஆமாம்… இங்கதான் அவர் பெறந்தார்.” என்றார். “அவர் வீடு எங்க இருந்துது?” என்றேன். “இந்த ஊர்ல இப்போ அக்ரஹாரமே இல்லை. அவர் வீடு மட்டும் எப்படி இருக்கும்? இங்க வருமானமே இல்லன்னுட்டு எல்லாரும் காலி பண்ணிண்டு போய்ட்டா. நானும் வெளியூர்தான். யாராவது வெளியூர்க்காரா வாரான்னா, எனக்கு ஃபோன் பண்ணிண்டு வருவா. நானும் ஓடியாந்துடுவேன்.” என்றார். 


கோவில் வாசலில் ஒரு மகிழுந்து நின்றது. அதில் வந்திருந்த குடும்பத்திற்காகத்தான் இப்போது இவர் இங்கு வந்திருக்கிறார் என்பது புரிந்தது. சரி, அவர் பிறந்த ஊர் இதுதானென்பது உறுதியாகிவிட்டது, இனி புறப்படலாமென்று வண்டியில் ஏறினேன். அப்போது அந்த ஐயரின் பின்னாலேயே கைக் கட்டியபடி பணிவாகச் சென்று கொண்டிருந்த லுங்கி அணிந்திருந்த இருவரில் ஒருவர் என்னருகில் வந்து, அவர்கள் இருவரும்தான் இந்தக் கோவிலைச் சுத்தம் செய்து பராமரிப்பவர்களென்றும் தேநீர் செலவுக்கு பணம் தருமாறும் கேட்டார். எனக்கு அவர்களைப் பார்க்க விசித்திரமாக இருந்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒருவருக்குக் கைக்கட்டி குனிந்தபடி சேவகம் செய்யும் நபர்கள் இருக்கிறார்களா! என்று எண்ணிக் கொண்டேன். எனக்கென்னவோ இந்தக் கிராமம் 1800-களிலிருந்து இன்னும் 2000-த்துக்கு வந்து சேரவே இல்லை என்றே தோன்றியது. அந்தக் காரில் கோவிலுக்கு வந்திருப்பவர்களைப் பார்த்தபோது, 2024-ல் வாழும் சில மனிதர்கள் மட்டும் அவ்வப்போது 1800-களில் இருக்கும் இந்தக் கிராமத்துக்கு வந்து போகிறார்கள் என்றே தோன்றியது. என்னையும் சேர்த்துதான். 


அவருக்குப் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, ‘உ.வே.சா’ பற்றிக் கேட்டேன். அவரின் பெரிய புகைப்படம் கோவிலினுள்ளே இருப்பதாகச் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே இறங்கி உள்ளே ஓடினேன். கோவிலினுள், சுவற்றில் சாய்த்தபடி ‘உ.வே.சா’வின் ஆளுயரப் புகைப்படம் அங்கே இருந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அப்பேர்பட்ட மாமனிதரின் நினைவாக, அவர் பிறந்த ஊரில் இப்படி ஒரு புகைப்படமாவது இருக்கிறதே என்று ஆனந்தப்பட்டேன்.


பொதுவாக, நான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள நூலகத்திற்குச் சென்றுவிடுவேன். அதே போல் அங்குள்ள பழமையான கோவில்களுக்கும் செல்வது என் வழக்கம். கோவில்கள் நம் நாட்டு இன மரங்களைப் பாதுகாக்கும் பெட்டகம். அத்தோடு அங்கு நம் வரலாறும் வாழ்கிறது. அப்படித்தான் இந்தக் கோவில் ‘உ.வே.சா’வின் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.


அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அவரின் தந்தை ஊரான உத்தமதானபுரத்தை நோக்கிப் போனேன். அதுதான் ‘உ.வே.சா’ வளர்ந்த ஊர். கும்பகோணம் வழியாக பாபநாசம் போய், அங்கிருந்து பல பேரிடம் வழி கேட்டு இறுதியாக உத்தமதானபுரத்தை வந்தடைந்தேன். புத்தகத்திலிருந்ததற்கும் இப்போதிருக்கும் இவ்வூருக்கும் நிறைய மாற்றமிருந்தது. இருப்பினும் அவ்வூரின் காட்சிகளெல்லாம் என் மனதில் புத்தகத்தின் வழியாகத்தான் விரிந்தன. இப்போது நான் பார்க்கும், மாடி வீடுகளெல்லாம், 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஓட்டு வீடுகளாகவும் கூரை வீடுகளாகவும் அக்கிரஹாரமாகவும் திண்ணைப் பள்ளியாகவும்தான் என் கண்களுக்குத் தெரிந்தன. சிறு பிள்ளையாக உ.வே.சா ஆங்காங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.


அந்த ஊரில் உள்ளவர்களை விசாரித்து அவரின் வீட்டைக் கண்டுபிடித்தேன். அந்தத் தெருவின் அக்கம்பக்கத்து வீடுகளில் சில, இப்போது மாடி வீடுகளாக மாறிப்போயிருந்தன. ஆனால், சில வீடுகள் இன்னும் ஓட்டு வீடுகளாகவும் இடிந்த நிலையிலும் இருந்தன. உ.வே.சா வாழ்ந்த வீடும் திண்ணை வைத்த ஓட்டு வீடுதான். அந்தத் திண்ணை யில்தான் அவர் இரவு முழுதும் அமர்ந்து சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றை ஆய்வு செய்தார். ஆனால், இப்போது அந்த வீடு இல்லை. அந்த இடத்தில் தமிழக அரசின் சார்பாக ஒரு நினைவு இல்லம் கட்டப்பட்டிருந்தது. ஆனால், உட்கதவு பூட்டப்பட்டு தூசு படிந்து கிடந்தது. அங்கே நின்றிருந்த பெண் ஒருவரைக் கேட்டேன். “எப்போதாவதுதான் தொறப்பாங்க. நீங்க சன்னல் வழியாகவே பாருங்க.” என்றார். சன்னல் வழியாகவே எட்டிப் பார்த்தேன். கீழ்த்தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் அவர் சம்பந்தப்பட்ட பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. எரிக்கப்பட்டும், ஆற்றில் விடப்பட்டும், கரையான்களுக்கு இரையாக்கப்பட்டும் அழிந்தது போக வாசிப்பாரற்றும் பார்ப்பாரற்றும் கிடந்த பல தமிழ் ஏடுகளை தமிழகமெங்கும் அலைந்து கண்டெடுத்து மீட்டு நமக்களித்த மாமேதை வாழ்ந்த இடமும் இப்போது பார்ப்பாரற்றுக் கிடக்கிறது. அந்த வீட்டை சில மணித்துளிகள் அமைதியாகப் பார்த்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டேன்.


திரும்ப வரும் வழியில் கும்பகோணத்தில் கணித மேதை இராமனுஜம் அவர்களின் இல்லத்திற்குப் போனேன். கும்பகோணம் மிகப் பெரிய நகரம். பல ஆண்டுகள் அங்குள்ள ஒவ்வொரு தெருக்களிலும் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஆனால், இப்போதுதான் முதல் முதலாக அங்கே பாதுகாக்கப்படும் இராமானுஜம் அவர்களின் வீட்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தெருவில் பிரமாண்டமாய் எழுந்திருந்த கடைகளுக்கும் வீடுகளுக்கும் மத்தியில் அந்த வீட்டைக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமாமாய் இருந்தது. இரண்டு மூன்று முறை அந்த வீட்டைத் தாண்டித் தாண்டிப் போய் திரும்ப வந்து இறுதியாக வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன். முன் பார்வைக்கு அது மிகச்சிறிய ஓட்டு வீடாகத் தெரிந்தது. உள்ளே போய் பார்த்தால் நீளமான வீடு. சுற்றிலுமிருந்த மற்ற வீடுகளெல்லாம் நகர சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்ட போதும், இந்த வீடு மட்டும் இராமானுஜம் காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. 1920-ல் முப்பத்திரண்டு வயதில் அவர் இறந்தார். சரியாக 105 ஆண்டுகள் கழித்து, இப்போது நான் அவர் வாழ்ந்த வீட்டில் நின்று கொண்டிருக்கிறேன். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நகரமொன்றின் வீடுகளின் தொழில்நுட்பத்தை அங்கு காண முடிந்தது. அவர் உறங்கும் கட்டில், அவர் வெளியுலகை வேடிக்கை பார்த்த சன்னல் என அங்கிருந்த ஒவ்வொன்றும் என்னை ஆச்சர்யப்படுத்தியது. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் முற்றத்திற்கு வந்தேன். அங்கே செய்தித்தாள் படித்தபடி அமர்ந்திருந்தவர், “இந்த நோட்டுல கையெழுத்துப் போட்டுட்டு போங்க” என்றார். அந்த ஏட்டில் ஏற்கனவே பல கையெழுத்துகள் இருந்தன. பெரும்பாலானவை தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழிக் கையெழுத்துகள்தான். “மத்த மாநிலத்துக்காரங்களும் வருவாங்களா?” என்றேன். “அவங்கதான் அதிகமா வருவாங்க. வேற நாட்டுக்காரங்களும் வருவாங்க. நம்ம ஆளுக கம்மிதான்.” என்றார் அவர். இராமானுஜம் கணித மேதை என்பதால் உலகப் புகழ் பெற்றிருந்தார். ஆகவே, அவர் வீட்டைக் காண எல்லா மாநிலங்களிலிருந்தும் வருகிறார்கள். ஒரு வேளை இராமானுஜம் சிறந்த தமிழரிஞராக இருந்திருந்தால், அங்கே உத்தமதானபுரத்தில் காண்பார் யாருமற்று, தூசு படிந்து பூட்டிக் கிடக்கும் உ.வே.சா அவர்களின் வீட்டின் நிலைதான் இதற்கும் ஏற்பட்டிருக்கும் என யோசித்தபடியே அங்கிருந்து புறப்பட்டேன்.


கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை வரும் வழியில் திருவாவடுதுறை ஆதினம் இருந்தது. இங்குதான் மயிலாடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்ற உ.வே.சா, பின்னர் சுப்ரமணிய தேசிகரிடம் கற்றார். பிறகு கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய பொழுது தன் ஆய்வுக்கு இங்கிருந்த ஓலைச்சுவடிகளையும் பயன்படுத்திக் கொண்டார். அந்த ஆதினத்துக்குதான் இப்போது நான் வந்திருக்கிறேன். மிக அமைதியான இடம். அங்கு அந்த ஆதினத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடங்களும் நடந்து கொண்டிருந்தன. அங்கிருந்த முதியவர் ஒருவர் எனக்கு எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். நீரோட்டம் இல்லாத காலத்தில் ஆதின மாணவர்களும் தேசிகர்களும் ஆற்றில் ஊற்று அமைத்து குளித்ததாக உ.வே.சா குறிப்பிட்டிருந்த இடங்களையும் பார்த்தேன். அந்த ஆதினத்திற்குச் சொந்தமான பெரிய கோவிலில் சென்று மரத்தடியில் அமர்ந்து, அம்மா கட்டிக்கொடுத்த உணவைச் சாப்பிட்டேன். பிறகு மயிலாடுதுறை அருகே இருக்கும் தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தேன். இங்குதான் குறிஞ்சிப்பாட்டில் விடுபட்டிருந்த தேமா, மணிச்சிகை, உந்தூழ் என்ற மூன்று மலர்களின் பெயர்களை உ.வே.சா தேடிக் கண்டுபிடித்தார்.


உ.வே.சா வாழ்ந்த வாழ்வினூடே என் பயணத்தை திருப்திகரமாக முடித்துவிட்டேன். அந்த மொத்தப் பயண நினைவுகளும் எப்போது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. ஆனால், ஆளரவமற்றுக் கிடக்கும் உத்தமதானபுரத்தின் உள்ள உ.வே.சா நினைவு இல்லத்தின் வெறுமை மட்டும் இன்னும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

arikarachinnaa@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button