இணைய இதழ் 116சிறுகதைகள்

பூச்செடி – ஜெயபால் பழனியாண்டி

சிறார் கதை | வாசகசாலை

“அப்பா! அப்பா! ஒரு பூச்சி செத்துக் கிடக்கு” என்று முகத்தில் பெரிய அதிர்ச்சியோடு ஓடி வந்தாள் மிளிர்.

என்னமா.. என்னாச்சு..?”

“அப்பா வெளிய வாசல்ல ஒரு பூச்சி செத்துக் கிடக்குப்பா…நானும் அக்காவும் பாத்தோம்.”

அதிகாலை பரப்பரப்பாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த என்னிடம் முறையிட்டுக் கொண்டிருந்த அவளது பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அக்காளும் தங்கையும் அதிகாலையிலேயே வாசலைக் கூட்டச் சென்ற இடத்தில் தான் கண்ட காட்சியை முறையிட்டுக் கொண்டிருந்தாள்.

          ஹாலிலிருந்து மீண்டும் உள் அறைக்குச் சென்ற அவள் மீண்டும், “அப்பா ஒரு பூச்சி செத்து போச்சுப்பா. அதோட நண்பர்களெல்லாம் ஊருக்குப் போயிட்டு இருக்காங்க. அதோட ராஜா வந்துகிட்டு இருக்காரு…” என்றாள்.

“அப்படியாம்மா.. சரிம்மா…”

விறுவிறுவென்று மீண்டும் வாசலுக்குச் சென்றுவிட்டாள். “புஜ்ஜி ஒரு பூச்சி செத்துகிடக்கு…” என்று கத்தினாள். ’புஜ்ஜி’ என்று அவள் குறிப்பிட்டது அவளது பாட்டியை. ’அம்மாச்சி’ என்று கூப்பிடத் தெரியாமல் புஜ்ஜி என்று அழைக்கத் தொடங்கியவள் இப்பொழுது அந்த பெயரையே நிரந்தரமாக்கி விட்டாள்.

          இந்தப் பரபரப்பிற்கிடையே பெயல் வீட்டிற்குள் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருந்தாள்.

“ஏய் பெயல்.. இன்னும் நீ குளிக்கலயா? ஸ்கூலுக்கு நேரமாகிட்டு இருக்குல்ல… எப்பப் பாத்தாலும் ஒரே ரோதனையாப் போச்சு உன் கூட”

எப்போதும் போல கடிந்து கொண்டிருந்தாள் என் மனைவி.

பெயல் எதையும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. பரபரப்பாக இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த அவளைத் தடுத்து நிறுத்தி, “ஏய் கையில என்ன?” என்றேன்.

”அது ஒன்னும் இல்லப்பா”

நன்றாக அசடு வழிந்து சமாளித்தது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. கையில் சிறிய பிளாஸ்டிக் மூடியை இட்லி துணியில் இருந்து கத்தரியால் வெட்டி எடுத்த சிறு துணியால் மூடி மறைத்துக் கொண்டிருந்தாள்.

அக்காளும் தங்கையும் காலையிலேயே பூச்சியை அடக்கம் செய்யக் கிளம்பிவிட்டார்கள்.

மிளிருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும் அக்காவின் கட்டளையை ஆசிரியரின் கட்டளையாகவே எண்ணி, அவள் கூறும் ஒவ்வொன்றிற்கும் தலையசைத்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் செத்துக் கிடந்த பூச்சியை மெதுவாக கைபடாமல் ஒரு சிறு தகரத்தில் தூக்கி அதனைத் தான் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் மூடியில் போர்த்தப்பட்ட அந்த இட்லி துணியின் மேல் வைத்தாள். பின் அத்துணியைக் கொண்டு பூச்சியின் உடலை முழுவதுமாகப் போர்த்திவிட்டாள்.

திரைப்படத்தில் கண்ட இறப்பு சடங்குகளை நினைவூட்டி அப்போதைக்குத் தகுந்தாற்போல் சில சடங்குகளைச் செய்து கொண்டாள். இதற்கு சாட்சி அவளது தங்கை மிளிர்.

எல்லாம் செய்தாகிவிட்டது. இந்தப் பூச்சியைப் புதைக்க வேண்டும். “மிளிர், வா நாம கேட்டுக்கு வெளியே பூச்செடிக்கு நடுவுல இந்தப் பூச்சியப் பொதச்சர்லாம்.”

“ம்ம்.. சேரிக்கா…”

“ஏய், மண்ணைத் தோண்டனும். அந்த சிமெண்டு கரண்டிய எடுத்துட்டு வா…” என்றாள் பெயல்.

“என்ன சிமெண்டு கரண்டியா? அப்படினா?”

“ஏய்… அப்பா வாசல்ல சிமெண்டு பூசுறப்போ வச்சுருக்கும்ல. அன்னைக்கு கூட அம்மா இந்த டைல்ச பூசிட்டு இருந்துச்சுல? அங்க போய் புஜ்ஜிகிட்ட கேளு. மாடிப் படிக்கட்டு அடியில போட்டு வச்சுருக்கும் பாரு?”

“புஜ்ஜி.. புஜ்ஜி… எங்களுக்கு சிமெண்டு கரண்டி வேணும். நேத்திக்கு நாங்க பூச்சிய பொதைக்கணும்.”

“இவவொருத்திடி… காலங்காத்தால… இப்போதான் ரெண்டு பேரும் வாசல் முழுக்க தண்ணிய ஊத்தி வச்சீங்க. அதத் தொடைக்கவே நேரமில்ல. ரெண்டு பேரும் எதையாவது இழுத்துப் போட்டுட்டே இருங்க. வேல செஞ்சி செஞ்சி ஓஞ்சபாடுல்ல…ஏய் பெயலு… உனக்கு ஸ்கூலுக்கு நேரம் ஆகலயா? உங்க அம்மா வந்து மண்டையிலேயே கொட்டப்போறா பாரு. பத்தாததுக்கு இவள வேற சேத்துக்கிட்டு அலையுற. காலையில எழுந்ததுல இருந்து இன்னும் பால் கூட அவ குடிக்கல.”

“அம்மாச்சி, நீ கொஞ்சம் கம்முனு இரு. அவகிட்ட சிமெண்டு கரண்டிய மட்டும் கொடுத்துவிடு.” என்றாள் பெயல்.

“ஆமா புஜ்ஜி.. நாங்க அந்த பூச்சியப் பொதைக்கணும்.. அது பாவம்ல?” இது மிளிர்.

“ஐய்யோ.. என் தங்கம் எவ்ளோ அறிவா பேசுது பாரு…” கொஞ்சலாகக் கூறினாள் பாட்டி.

வீட்டிற்கு வெளியே பூச்செடிகளுக்கு நடுவே பூச்சியைப் புதைப்பதற்காக இடம் தேடிக்கொண்டிருந்தாள் பெயல். பின்னால் சிமெண்டு கரண்டியைத் தூக்கிகொண்டு ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபடுவது போன்று நடந்து கொண்டிருந்தாள் மிளிர்.

“மிளிர்… இந்த இடம் கரெக்டா இருக்கும். குடு அந்தக் கரண்டிய..”

“அக்கா.. அக்கா.. பிளீஸ்க்கா. நான் பண்றேன்க்கா…”

“ஏய் நீயெல்லாம் பண்ணக்கூடாது. நீ சின்னப்புள்ள..”

“சேரிங்க ஆபிஸர். அக்கா சின்சான் வருவானா? அக்கா பூச்சியோட ராஜா வரும்ல?”

“ஏய் திருடங்க எல்லாம் வருவாங்க”

அக்கா, நைட்டு வந்த பூச்சாண்டி எங்கக்கா..? அம்மா சொல்லுச்சுல… நான் பயந்துட்டேன் தெரியுமா? அம்மா என்ன பயமுறுத்துதுக்கா. எனக்கு அப்பாதா புடிக்கும். எனக்கு அக்காதா புடிக்கும்.. பம்பபம்ம்…”

“ஏய் இவவொருத்திடி… மிளிர் நாம இந்தப் பூச்சிய மண்ணுக்குள்ள பொதச்சம்னா அது சாமிகிட்டப் போயிரும்”

“என்ன சாமிக்கிட்ட போயிருமா..?”

“ஆமா மிளிர், சாமிகிட்ட போயிரும்.”

ஒரு வழியாக செடியின் அடியில் பூச்சியைப் புதைத்துவிட்டு அதன் மேல் அரளிப்பூக்களையும் செம்பருத்திப் பூக்களையும் தூவிவிட்டு  வீட்டிற்குள் வந்து விட்டார்கள்.

“அம்மா, அந்த செம்பருத்திச் செடி இருக்குல்ல,  அதுக்கு நடுவுலதான் அந்தப் பூச்சியப் பொதச்சோம்” என்றாள் பெயல்.

“இப்போ நான் வந்தேன்னு வச்சிக்கோ.. மண்ட நல்லா வீங்கிடூம் பாத்துக்கோ… போய் குளிபுள்ளனா காலையிலயே அவ கூட சேந்து ஆடிகிட்டு இருக்க. ஒருநாளாவது நேரமா கிளம்பியிருக்கியா..? உன்னால எனக்கு டெய்லி நேரமாகுது. பிரின்ஸ்பால் மேம்கிட்ட டெய்லி ஏதாது பொய் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு…”

“உங்க அப்பனும் ஏதும் ஹெல்ப் பண்ணமாட்டான். அவன் கிளம்புறதுலதான் குறியா இருப்பான்.”

“சேரி.. சேரி.. விடும்மா. விடும்மா. டெய்லி இதையே கேட்டு போரடிக்குது” என்று குளிக்கச் சென்றுவிட்டாள் பெயல்.

இந்த சம்பவம் நடந்த மூன்று தினங்களுக்குப் பிறகு பூச்சியைப் புதைத்த இடத்தில் பூச்செடி ஒன்று முளைத்திருப்பதாக பெயல் அவள் அம்மாவிடமும் பாட்டியிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“என்னாது பூச்செடியா..?” என்றாள் மூன்று வயது மிளிர்.

மரணத்திற்குப் பிறகும் குழந்தைகளால் கொண்டாடப்படுகிறோம் என்பதை அறியாமலேயே மரணித்துப் போகின்றன பூச்சிகள்.

jaayapal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button