
வண்டிச்சத்தம் கேட்டதும் ஓடினாள் வாயிலுக்கு.
சிறுமி,
‘ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கியா பா?’
‘என்ன பட்டு வேணும்?
வாங்கிட்டு வந்துடலாம் வா…’
என்று
வீட்டுக்குள்ளே கூட்டிப் போனார்
அப்பா.
வெறுமைக்குப் பாத்திரமான கைகளில்
கொடுப்பதற்கென்று
வீடுகள் ஏதாவது வைத்திருக்கும்.
*
அப்பாவின் தோளில் இருந்தபடி
ரயில் பெட்டியின்
மின்விளக்குகளையும் மின்விசிறிகளையும்
கைப்பிடிக் கம்பிகளையும்
தலையைச் சுழற்றியும் அண்ணாந்தும் பார்த்து மலைக்கும்
ஒரு கைக்குழந்தையை வெகுநேரமாய் மலைப்புடன் பார்த்திருந்தேன்.
எனக்குத் தெரியும்
பெருமலைப்பும்
ஒரு சிறு மின்மினியிலிருந்தே
தொடங்குமென்று.
3.
நீ கொஞ்சம் பேசாமலிரு
எந்த நாவில் நியாயங்கள் துண்டிக்கப்படுகிறதோ
அதே நாவில்தான் உண்மைகள் ஊறிக் கொண்டிருக்கின்றன
தவறுதலாக
மிகச்சரியாய் அதை கக்கிவிடுவார்கள்.
4.
ஏறத்தாழ உன் மீதான
அனைத்து புகார்களையும் வாழ்க்கை மீது சுமத்தி
வாழ்வையே சிறை செய்தாய்
இனி வாழ்வைப் போல வாய் பொத்தி
உன் புகார்களை ஏற்க யாரும் வரமாட்டார்கள்.
உண்மையில்
உன் வாழ்வோடு நீயும் சிறைப்பட்டாய்.
5.
துன்பங்களை என்ன செய்ய முடிகிறது?
துன்பங்களாலும் என்ன செய்ய முடிகிறது?
துன்பம் ஏதோ ஒரு வலியைத் தர விரும்புகிறது
வலி ஏதோ ஒரு துன்பத்தினால் அரும்புகிறது.
சரிதான்,
நாம் துன்பங்களை
மென்று உமிழக் கற்றுக் கொண்டுவிட்டோம்.
இனியும்
துன்பங்களைக் களைவதன்றி
நாம் செய்ய வேறொன்று உண்டெனில்
அது துன்பத்தில் திளைப்பதுதான்.
6.
வாழக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.
நீவிர் ‘மிகச் சரியாக வாழ்கிறாய்’ என்று சொல்லும் வரை
நான் வாழக் கற்றுக் கொண்டே இருப்பேன்
சொல்லவே மாட்டீர்கள் என்று தெரிய வரும்போதும் கூட
உங்கள் மத்தியில் கற்கவே முடியாத வாழ்வொன்றை
உண்மையிலேயே வாழக் கற்கிறேன்.