
பால் பல்
முப்பது வயதைத் தாண்டியும் விழாமல்
குழந்தைப் பருவத்தின் நடுகல்லென நின்று கொண்டிருந்தது
கடவாயின் இறுதியில்
மஞ்சளில் பூத்த பூஞ்சையின் நிறத்தே
ஒற்றைப் பால் பல்
ஒற்றைப் பல் ஞானக் குறியீடென
அம்மாவும் அப்பாவும் அப்படியே விட்டுவிட்டார்கள்
எனக்கு மட்டும் ஞானம் அதிகமென
எல்லோரும் சொல்வதுமுண்டு
எனக்கும் உண்டு
முப்பத்து மூன்றிற்கும்
முப்பத்து ஐந்திற்கும் இடையே
மகள் பிறந்திருந்தாள்
பிறக்கும்போதே இரு பற்கள் முளைத்து விட்டிருந்தன
பிடுங்காவிட்டால் ஆபத்தெனப் பிடுங்கி விட்டார்கள்
மகளை முதன்முறை கையில் ஏந்தி நிற்க
புத்தருக்கும் ஏசுவிற்கும் இடையே பூத்த நகைப்பென
கண்களை மூடி மூடித் திறந்து சிரிக்கிறாள் அவள்
அப்பொழுதில் ஏதுமறியா குழந்தையைப் போல
சிரிப்பு என்னையும் தொற்றிக்கொண்டது
அவளை இறக்கிவிட்டு நிமிர்ந்தபோது
கடவாயின் இறுதியில் நின்றிருந்த பால் பல்
ஆடத் தொடங்கிற்று.
*
பறக்கும் ஒரு மனிதன்
வௌவால்களைப் போல தலைகீழாகப் பார்த்தால்
மனிதர்கள் பறப்பது நமக்குத் தெரிந்திருக்கும்
என்கிறது அது
அதற்குப் பெயரேதும் கிடையாது
வைக்கவும் கூடாது
பெயர்கள் அடிமைகளுக்கானவை என்று சொல்லியிருக்கிறது
சரி, மனிதர்கள் பறப்பது போல மற்றவை பறக்காதா
நாய் பூனை ஆடு மாடு ஊர்வன..?
அவையெல்லாம் பறக்கும் என்பது
அவற்றிற்குத் தெரியும் என்று முடித்துவிட்டது
பல நாட்களாக இதைப் பற்றிச்
சிந்தித்துக் கொண்டே நடந்தேன்
பறப்பேனா தெரியவில்லை
வௌவால்கள் அதோ
பறக்கின்றன
பறவைகளும்
சில நேரங்களில் நடக்கவும் செய்கின்றன
நாம் எப்போதும் பறப்பதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது
மீண்டும் அது
நான் இப்போது தலைகீழாகத் தொங்கிக்கொண்டே
அதைப் புருவம் உயர்த்திப் பார்த்தபடி
“எங்கே பறக்கும் மனிதர்கள்?
எவ்வளவு நேரம் தொங்குவது?” என்றேன்
அது சிரித்துக்கொண்டே சொன்னது
“பறக்கும் ஒரு மனிதன் தென்படும் வரையில்” என்று.
*
நிழல்கள்
தூரத்தே ஆகாய பூதங்களை
அண்ணாந்து பார்த்தபடி நடந்திருந்தேன்
இலகுவான ஒரு தொடுதல்
வலது தோள்பட்டையில் கொன்றையின் கிளை
ஓர் இலையை வைத்திருந்தது
திரும்பி நிமிர்ந்து பார்த்தேன்
நிழலாகப் படர்ந்து குனிந்தபடி
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது
அக்கொன்றை
என் நிழலையெல்லாம் தன் நிழலாக்கி
இலையின் கனத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
மரத்தை விலகிப் பறக்கும் பறவையாக
நிழலில் நின்று வெயிலில் படர்ந்தேன்
என் நிழலெல்லாம் கொன்றையின் நிழல்.
*
ஓடுகள்
நத்தை ஓடுகள் குவியல் குவியலாக
நத்தைகளை தீயிலிட்டுத் தின்ற சிறுவர்கள்
ஆற்றில் களித்தாடுகின்றனர்
கலங்கிய நீரினுள் எஞ்சிய நத்தைகள்
சிறுவர்களின் கால்களை முத்தமிட்டுக்
கூசச் செய்து கொண்டிருக்கின்றன
தீயெல்லாம் அணைந்து குளிர்ந்த சாம்பலாகியது
சிறுவர்களும் எஞ்சிய நத்தைகளும் உறங்கிப் போயினர்
ஓட்டுக் குவியல்களோ ஒவ்வொன்றாகச் சரிந்து விழுந்து
யாரையேனும் எழுப்பிவிட
முயன்று கொண்டேயிருக்கின்றன.
*