
காலை நடையின் போதுதான் ஒரு கதை எழுதுவதற்கான ‘கரு’ திடீரெனத் தோன்றியது. இப்படி பல கருக்கள் தோன்றுவதுண்டு.
“ஒரு நாள்ல உருப்படியா பண்ணறது கொஞ்சம் நேரம் நடக்கறது மட்டும்தான். அதையும் அதும் இதும் சாக்கு சொல்லி பாதி நாள் போறதில்லை. உங்களுக்கென்ன, நாளைக்கு எதுவும் ஒண்ணுண்ணா என் தலையிலதானே விடியும். ஆ ஊன்னா கம்ப்யூட்டரையோ ஃபோனையோ நோண்டிகிட்டு உக்கார வேண்டியது. கேட்டா கதை படிக்கிறேன் காவியம் படைக்கிறேன்னு சொல்ல வேண்டியது.”
காலை ஏழு மணியானதும் நான் வெளிக்கிளம்பும் முஸ்தீப்பு ஏதுமில்லைன்னா ஆரம்பிச்சிருவா. யார்னு நீங்களே ஊகிச்சிருப்பீங்கதானே!
எதுக்கு வீண் பிரச்சனைன்னு கௌம்பீருவேன் தினமும். பாக்கறவுங்க எல்லாம் பாராட்டுவாங்க.
“சார் ஃபிட்னஸ் மேனியாக். ஒரு நாள் தவற மாட்டாரு.”
புன்னகையோட கடந்து போக வேண்டியதுதான். எல்லாத்தையும் எல்லாருகிட்டேயும் விளக்கிகிட்டா இருக்க முடியும்!
தனியாத்தான் நடை. கொஞ்சம் நாள் ஒரு குரூப்போட போனேன். நடை தொடங்கும் முன்னால அருகம்புல் ஜூஸ், மணத்தக்காளி சூப்னு ஒருத்தர் இவங்களைப் போல இருக்கறவுங்களுக்காக அதாவது நடக்கறவுங்களுக்காக கொண்டு வருவாரு. அதைக் குடிக்க அரை மணி நேரம். சும்மா குடிச்சா பரவாயில்லை ஊரில இருக்கற போனது வந்தது எல்லாம் பேசி டென்ஷன் படுத்துவாங்க. நடை முழுவதும் பேச்சுதான். முடிச்சுட்டு சேச்சி கடையில டீ வடை. திரும்பவும் அரைமணி நேரம். ஒரு வாரம்தான் தாங்கினேன். அப்புறம் உடம்பு சரியில்லை ரெஸ்ட் எடுக்கறேன்னு வேற ரூட்ல நடக்க ஆரம்பிச்சேன். விஷயம் தெரிஞ்சதும் ‘அவுரு கவிஞரப்பா, தனிமைதானே பிடிக்கும்’னு அவுங்களே சமாதானம் சொல்லி என்னை தப்பிக்க விட்டுட்டாங்க.
தனிமையில நடக்கறது ஒண்ணும் கஷ்டமில்லை. என்ன அங்கங்க, தெருநாய்ங்க இருக்கும். ‘பயப்படாத மாதிரி தெகிரியமா நடக்கோணும்’, தோட்டத்தில நாலு நாட்டு நாய் வளக்கற கவுண்டர் சொல்லியிருக்காரு. ஆனாப் பாருங்க சில பிரகஸ்பதிக சும்மா இருக்கற நாய்க்கு பெரிய ஒரு துணிப் பையில ஸ்நாக்ஸ் ஏதாவது கொண்டு வந்து போடுவானுக. இந்தாளக் கண்டதும் எல்லா நாயும் பரபரப்பாக்கி பின்னாலேயே போகும். அதுல அவனுகளுக்கு ஒரு சந்தோஷம் போல. கோட்டரும் கோழி பிரியாணியும் கிடைக்கும்னு பின்னாலே கோஷம் போட்டுப் போறவங்களைப் பாத்து தலைவர்கள் சந்தோஷப்படறதில்லையா! நமக்கு இதில எல்லாம் அறச்சீற்றமெல்லாம் இல்லீங்க. ஆனாப் பாருங்க ஒருநாள் போல ஒருநாள் இருக்காதில்ல. நாய்க ஏதோ கடுப்பில இருக்கற அன்னைக்கு பாருங்க, ‘ஏண்டா நாயே கைய வீசீட்டு வரும்போது நாலு பொறையாவது வாங்கிக்கிட்டு வரக்கூடாதான்னு’ நம்மளைப் பாத்து மொரைக்கும், குரைக்கும். வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டிய நாளா இருந்தா கடிக்கவும் செய்யும். ‘நாய்க்குப் பொறந்தவனுங்க சாரி பரிந்தவனுங்க என்னடான்னா ‘நாயோட நல்லுறவு பேணுங்க’ன்னு உபதேசம் வேற பண்ணறானுங்க. அவனவன் இருக்கற நாய்களோடயே நல்லுறவு பேண முடியாம அடிச்சிகிட்டு கெடக்கறோம். இது ஒண்ணுதான் கொறச்சல். நாயப் பாத்து பயந்தாத்தான் கடிக்கும்னு கடி வாங்காதவுங்க சொல்றாங்க. ஆயிரம் ரோசனைல போற நாம எந்த நாயக் கண்டோம். ‘எதிர்ல வர்ற ஆளுகளைக் கூட கண்ணுக்கு தெரியாது. ரொம்ப ஹெட் வெயிட்டுங்க. பெரிய எழுத்தாளர் இல்ல’.
நாம படற பாடு அவிங்களுக்குத் தெரியுமா! ஏதோ ரெண்டு புத்தகத்த பெற்றுக் கொள்ளற நாலு பெரியவங்களுக்கு வணக்கம் போட்டு கூட நிக்கறத படமெடுத்து பேஸ்புக்ல போட்டா தலைக்கனம் வந்துடுமாய்யா? பேசுற பேச்சுல கொஞ்சமாவது நியாயம் வேண்டாம்! சரி போச்சாது விடுங்க. பொது வாழ்க்கைன்னு வந்துட்டா பூமாலையும் விழும், பாதுகையும் விழும்னு சொல்லி வச்சிருக்காங்களே அந்தக் காலத்திலேயே. பூமாலையும் விழும் ஐயா.
இப்படித்தாங்க வேண்டாத நெனப்பெல்லாம் நெனச்சு, நெனப்புதான் பொழப்பக் கெடுத்துச்சாம்னு ஆகிப் போகுது. இப்பப் பாருங்க ஆயி போகுதுன்னு பரிந்துரைக்குது சிஸ்டம். சிஸ்டம் சரியில்லைன்னு சும்மாவா சொல்றாங்க பெரியவுங்க. ஒரு கரு உதயமானதும் ரெண்டு நிமிஷம் அதப்பத்தி ஜிந்திக்கறதுக்குள்ள வேறு நெனப்பெல்லாம் வந்து கரு கலஞ்சு போயிடுது. அப்படியும் அதிசயமா வீடு போய்ச் சேரும்போது ஞாபகம் இருந்தாலும் சட்டு புட்டுன்னு குளிச்சு சாப்பிட்டுட்டு, தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித் தழை, சமையல் எண்ணெய் (எல்லாமே இருப்பு இருந்தா) மீன், சிக்கன், மட்டன் இப்படி ஏதோ ஒரு பிராண வாயுவுக்கு நிகரான அவசியத்தேவை ஒன்றை வாங்கிகிட்டு வர வேண்டியிருக்கும். மளிகை லிஸ்ட்டை மறக்காம ஞாபகம் வெச்சிருக்க வேண்டிய முனைப்பில (நாலு பொருள ஞாபகமா வாங்கி வர முடியாதா, இந்தாந்தண்டி ஆளுக்கு!) ‘கரு’ கட்டாயம் கலஞ்சிடும்.
இதுக்குதான் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் கையில ஒரு சின்ன குறிப்பேடு வெச்சிருப்பங்களாம். கரு கூடின உடனே குறிச்சு வெப்பாங்களாம். இப்ப ஆரு குறிப்பேடெல்லாம் வெச்சுக்கறாங்க. எல்லாம் டிஜிட்டல்தானே. கைபேசியில என்னதான் இல்ல. இப்படித்தான் அன்னைக்கு ஒரு நாள் எதிர்பாராம உருவான கரு ஒன்றைப் பதியலாம்னு சடக்குனு நின்னு ஃபோன் எடுத்தேன். பின்னால வந்த ஆட்டோக்காரன் ‘கெழவனும் குமரனும் எல்லாம் ஒண்ணு போல நடுரோட்டில செல்ல நோண்டிக்கிட்டு நிக்கானுவ’ ன்னு காதுபடத் திட்டினான். நம்ம நேரம் அப்படி. ஒரு நன்மை நிகழத்தான் எவ்வளவு தடைகள்; தீமைகள் கோலோச்சும் இச் சமுதாயத்தில். அதனால இப்ப குறிச்செல்லாம் வெக்கறதில்லை நெருப்பிலும் நீரிலும் அழியாத இலக்கியம் எனில் அற்ப மறதியை வெல்வது எம்மாத்திரம்.
கரு கலஞ்சிடக் கூடாதேங்கற ஆதங்கத்தில கொஞ்சம் வேகமாவே நடந்திட்டேன் போல. இப்படி ஒரு வாக்கியம் மனதில் தோன்றியதும் இதில் இருக்கும் நகைமுரண் ஒரு மென் புன்னகையினை வரவழைத்தது. ஆனா, வீட்டில நெலம சகஜமாத் தெரியல. எப்பவுமே இந்த நேரத்தில ஏதாவது வேலையா இருக்கற சகதர்மிணி முன்னறையில் வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள். நமக்கு ஏதோ வேட்டு வைக்கிறாள் போல.
“கரண்டு இன்னும் வரலை. நான் அப்பவே சொன்னேன் இல்ல மொபைல் சார்ஜ்ல போட்டதும்தான் கரண்டு போச்சுன்னு.”
“ஏம்மா உன் மொபைல் என்ன அஞ்சாயிரம் வாட்சா கரண்டு போக.”
“இந்த அறிவுக்கெல்லாம் பஞ்சமில்ல. பக்கத்து வீட்டில விசாரிச்சுட்டேன். அங்க இருக்காம். “
இது பெரிய பிரச்சனை ஆச்சே. பக்கத்து வீட்டில இருக்கற ஒண்ணு நம்ம வீட்டில இல்லேன்னா எப்படி!
நான் உடனே மின் பணியாளர் அவதாரம் பூண்டேன். பூண்டாவது புண்ணாக்காவது. ‘சட்டுப் புட்டுன்னு வேலையப் பாருமைய்யா. கரு கலஞ்சிடப் போகுது.’ என்றான் எழுத்தாளன். ஒரு சிறந்த கணவன் எவ்வளவு பிளவு ஆளுமைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டியிருக்கிறது கண்டாயா என்றேன் அவனிடம் ஆறுதலாக. முதல் கட்டமாக கம்பத்தில் ஏதும் பிரச்சனை உள்ளதா எனப் பார்க்க மீட்டர் பெட்டியைத் திறந்து பார்த்தேன். கம்பத்தில் என்றால் வேலை சுளுவு. லைன்மேனுக்குச் சொன்னால் வேலை முடிந்தது. அப்புறம் சில மணி நேரத்துக்கு தொல்லை இருக்காது. அதற்குள் வரவில்லையென்றால் வட்டியும் முதலுமாக சோதனைகள் தொடங்கும் என்றாலும் அந்தந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழிப்பதுதானே ஞானியரின் போக்கு.
கன்னி இன்று மத்திமமான பலன்களைப் பெற்ற ராசி போல. மீட்டர் புன்னகை மன்னனாக புத்தொளி வீசியது.
‘ஏம்மா, அந்த இன்டிகேட்டரை எடுத்தா. ஃப்யூஸ்தான் போயிருக்கும் போல.”
“நான் அப்பவே சொன்னேன் இல்ல சார்ஜர் ஆன் பண்ணினதும்தான் கரண்டு போச்சுன்னு. நீங்க பேசாம எலெக்ட்ரீஷியன கூப்பிடுங்க. அத எடு இதப் பிடின்னு என் உயிர வாங்காம.”
“அவனக் கூப்பிட்டு ஐநூறு குடுத்தா அவன் போய் டாஸ்மாக்கில குடுப்பான். அதுக்கு நானே நேரடியாப் போய் கொடுப்பேன் இல்ல.”
“ம்ம், குடுப்பீங்க, குடுப்பீங்க. டாக்டர் என்ன சொன்னாரு.”
“டாக்டரே பார்ட்டி இருக்குன்னுதான் சீக்கிரம் வரச் சொன்னாரு நம்மள. எல்லாம் ஏமாத்து தெரியுமா.”
“என் வாயப் புடுங்காதீங்க. இந்தாங்க இன்டிகேட்டர்.”
எல்லாம் சரியா இருக்கறா மாதிரித்தான் இருந்தது. எதுக்கும் இருக்கட்டும்னு ஃப்யூஸ் எல்லாம் கழட்டிப் பாத்தேன். நம்மட ஊட்டுக்காரரு எவ்வளவு கருத்தா இருக்காருன்னு அம்மணி நெனைக்கோணுமல்லோ! எதிர்பாத்த மாதிரி எல்லாம் சரியா இருக்கு.
“வீட்டுக்குள்ளதான் ஏதோ பிரச்சன போல. நீ இங்க வா. இந்த மெயின் பாக்ஸ தொறந்து பாக்கலாம்.”
“இப்படித்தான் என்னைக் கூப்பிட்டு வெச்சு வேலை வாங்கி பெரிய சண்டை ஆயிடுச்சு போன முறை. பேசாம எலெக்ட்ரீஷியன கூப்பிடுங்க.”
“அவன் என்ன என்னை மாதிரி இஞ்சினியரா? இல்லை கூப்பிட்டா உடனே வந்துருவானா? அமெரிக்காவில எல்லாம் எல்லா வேலையும் அவுங்கவுங்களேதான் செய்யணுமாம்.”
“அதுக்கு நீங்க அமெரிக்கா போகலயே. இஞ்சினியர் மாப்பிள்ளை, இப்ப இப்படி இருக்கறத பாக்காத, வருங்காலத்தில பெரிய ஆளா வருவாருன்னு எங்க அப்பா சொன்னதை நம்பினேன் பாருங்க… என் புத்தியை..”
“ஏய், ஏய் இப்ப எதுக்கு அவ்வளவு தூரம் ரீவைண்டு பண்ணறே. இதை ஒரு செகண்ட் புடி”
“இதுலயும் எல்லாம் சரியாவே இருக்கே. ஒரு நிமிஷம் அப்படியே புடி. இன்வெர்டர் ஆஃப் பண்ணிப் பாக்கறேன்.”
“அதுக்கும் மெயினுக்கும் என்ன சம்பந்தம்.”
எனக்கு திக்குன்னிடுச்சு. பேனோடு சேர்ந்த ஈரும் கடிக்கும்கற மாதிரி இவ வேற லாஜிக் எல்லாம் பேசறாளே!
“ஏய், நீ என்ன இஞ்சினீரிங் படிச்சிருக்கியா. பேசாம நில்லு.”
அரைமணி நேரம் பொறுமையா நின்னா. நானும் என்னவெல்லாமோ பாத்தும் ஒண்ணும் புரியல.
“நான் விட்டுறுவேன் இப்ப. கை வலிக்குது. நீங்க பேசாம எலெக்ட்ரீஷியன கூப்பிடுங்க.”
“சரி, பாக்கலாம் அவன் என்ன பண்ணறான்னு.”
கன்னி ராசிக்கு அஷ்டமத்தில சனி போல.
“இங்க பக்கத்திலதான் சார், வேல முடிஞ்சு கௌம்பப் போறேன். இதோ வந்திடறேன் சார்” என்றான் எலெக்ட்ரீஷியன். சொன்னபடி வரவும் செய்தான். நான் முன்கதைச் சுருக்கத்தை விரிவாகச் சொன்னேன். அனைத்தையும் கேட்டுவிட்டு புன்னகையுடன்
“கம்பத்தில கனெக்ஷன்ல பூசனம் பிடிச்சிருக்கும் சார். மழை விழுது பாருங்க. பிரிச்சடிச்சா சரியாயிடும்.” என்றான்.
என் இல்லாளுக்கு புன்னகை முகம் கொள்ளவில்லை.
லைன் மேனை அவனே கூப்பிட்டான். நண்பேன்டா என அவனும் உடனே வந்தான். எனக்கு எழுந்த அதே ஐயம் அவனுக்கும்.
“மீட்டர்லே லைட் எரியுதேப்பா” என்றான். நான் மனைவியாரை ஓரக்கண்ணால் பார்த்தேன்.
“இரு காட்டறேன் பாரு” என அந்தக்கால குண்டு பல்பு ஒன்றை ஹோல்டர் ஒயருடன் எடுத்து வந்தான். மீட்டரிலேயே அதைத் தொட்டுக் காட்டினான், லைட் எரியவில்லை. பல்பு சரியா இருக்கா என்றான் நண்பேன். இன்வெர்ட்டரில் இணைக்க அது சமத்தாக எரிந்தது.
பிரிச்சடிச்சுட்டு போகும் போது பவ்யமாய், “எனக்கு முன்னூறு போதும் சார். அவனுக்கு ஒரு இருநூறு கொடுங்க” என்றான். மூணு கோட்டர் குப்பிகள் என் உள்ளே உடைந்தன.