இணைய இதழ் 116சிறுகதைகள்

அமானிதங்கள் – இத்ரீஸ் யாக்கூப்

சிறுகதை | வாசகசாலை

மக்ரிப் தொழுகைக்குப் பிந்திய நேரம். வாசற்படியிலமர்ந்தபடி ஆழ்ந்த சிந்தனையுடன் யூசுஃப், எங்கோ ஒரு மூலையில் பல்பட்ட அப்பம் போல் காட்சியளித்த ஐந்தாம் பிறையை வைத்த கண் வாங்காமல் வெறித்துக் கொண்டிருந்தான். தெருப் பக்கமாய் அவனைக் கடந்துச் சென்ற அவனுடைய உறவுக்காரன் செல்லதுரையின் சிரித்த முக ஸலாமும் அவன் காதில் விழவில்லை; அவன் பிடித்துச் சென்ற மாட்டின் ‘ம்மா..!’ சத்தமும் கவனத்தைத் மாற்றவில்லை! கபுருஸ்தானில் எழுந்துள்ள சாஹிபு மினாரா கூட எறும்பு ஊறும்போது என்ன ஏதென குழையும் வண்ணம் சிறிது ஈரத்தைக் கசியவிடும்!

இப்படி சிலை போல் எதற்கும் அசையாமல் கைகளை பக்கப் பிடிகளில் தளர்வாய் ஊன்றியபடி வானத்தை பலமாய் உற்று நோக்கிக் கொண்டிருந்தது அவனுக்கே புதிதாகத்தான் பட்டிருக்க வேண்டும்!

குளுதாடியைத் தேடும் ஆடாய் ஐந்து மணிக்கு வீட்டிற்கு டீ குடிக்க வந்தவன் இன்னும் கடைக்கும் திரும்பவில்லை. வியாபார நேரம்தான்… என்ன வியாபாரம்..! கணக்கிற்கு சாமான் கொடுத்தே பாதி சிகரெட் அட்டை தீர்ந்துவிட்டது! எதற்கோ வேண்டி எதையோ சொல்லி வைப்பதை போல பொதுவாக இப்படி சலித்துக் கொள்பவனும் இல்லைதான்.

அவனுடைய மனைவி அரபுன்னிசாவும் அவ்வப்போது நினைவூட்டுவது போல ஜன்னல் பக்கமாய் வந்து முகம் காட்டிக் கொண்டிருந்தாள். எப்போதாவதுதான் இப்படி ஆழ்ந்த யோசனையில் அமருவான். அவனை அவன் போக்கிற்குதான் விட்டுதான் பிறகு என்ன ஏதென விசாரிப்பது அவளுடைய வழக்கமாகவுமிருந்தது.

அவனுடைய சிறிய தங்கை செல்லாச்சி எனும் ஃபர்ஹானாவிற்கு கல்யாணம் நெருக்கத்தில் வந்துவிட்டது… அண்ணனாக அவனுக்கு கவலைகள் ஓடாதா? என்ன கவலை..? அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட மாப்பிள்ளை… அவள் இஷ்டப்படி எல்லாம் நடக்கிறது..! நடக்கவிருக்கிறது!

மூத்த தங்கைக்கு திருமணம் செய்து வைக்கும்போதிருந்த படபடப்பு அவனுக்கில்லை. நிறையவே ஆசுவாசமாக இருந்தாலும் அதைவிட கூடுதலாக சிறு ஒடுக்கமும், ஆற்றாமையும் அவனுள் அவ்வப்போது இப்படி எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன. செல்லத் தங்கச்சியான செல்லாச்சியை அவள் ஆசைப்பட்டபடியே இளங்கலை பொறியியலில் தகவல் தொழில் நுட்பம் படிக்க வைத்தான்.

செல்லாச்சியும் திறமைமிக்கவள்தான். பட்டம் கையில் வாங்கும் முன்னமே கோயம்புத்தூர் ஐ.டி. கம்பெனி ஒன்று நடத்திய வளாக நேர்முகத் தேர்வில் அபாரமாக பதில்களளித்து வெற்றிகரமாய் பணிக்கான ஆணையையையும் அங்கேயே கைப்பற்றினாள். அதன் அடுத்தடுத்த படிக்கட்டுகளாய் தற்சமயம் சென்னையில் அதே துறையை சார்ந்த ஒரு பெரிய நிறுவனமொன்றில் குறுகிய காலக்கட்டத்திலேயே நல்ல பொறுப்பில் அமர்ந்து நிறைவான சம்பளமும் வாங்குகிறாள். அங்கேதான் எழில் முகம்மதை அவள் முதல்முறையாக சந்தித்தாள்.

அவனுடனான சினேகம்தான் இப்போது இந்த திருமண நிச்சயம் வரை வளர்த்து விட்டிருக்கிறது! முதன்முதலில் அவர்களின் பழக்கத்தைப் பற்றி செல்லாச்சியே விடுமுறை நாளொன்றில் பக்குவமாக எடுத்துச் சொன்னபோது, அண்ணன்காரனுக்கு நெஞ்சின் பாறாங்கல்லை வைத்தது போலதானிருந்தது. பெற்றவள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மகளைத் திட்டித் தீர்த்தாள். மகனை ‘ஏன் இவளை படிக்க வைத்தாய்?’ என ஏற்கனவே தடுமாறி நின்றவனை கேள்விகள் கேட்டு மேலும் நிலைகுலைய செய்தாள்.

அடுத்த கணமே செல்லாச்சியின் திறமையும், சாதுரிய குணமும் நினைவிற்கு வந்து சரியானவனைத்தான் மகள் தேர்ந்தெடுத்திருப்பாள் என மகனின் சம்மதத்திற்காக அவளும் அமைதிப் பேச்சு வார்த்தையில் இறங்கினாள்.

இந்த காதல் கீதலைப் பற்றியெல்லாம் யூசுஃபிற்கு அவ்வளவு நம்பிக்கையில்லை என்றாலும் தங்கை தேர்வு செய்தவனை ஓர்மையுடன் வேண்டாமென மறுத்துவிடவும் மனம் வரவில்லை. அதே நேரம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இதுவரை முழு ஒத்துழைப்பை மனம் ஏற்படுத்தவில்லை!

தங்கைகள் என்றால் யூசுஃபிற்கு உயிர். எத்தனை கஷ்டப்பட்டாலும் அவர்களின் விருப்பங்களையும், கோரிக்கைகளையும் சிறு சம்பாத்தியம் கொண்ட இந்த உள்ளூர் மாளிகைக்கடைக்காரன் அதுவரை நிறைவேற்றியே வைத்திருக்கிறான். ஆனால், இந்த விஷயத்தில் சரி என மனதை திடப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த வேலைகள் பார்ப்பதுதான் அவனுக்கு சற்று சிரமமாக இருந்தது.

பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பெரியவளான பொடுசு எனும் ரிஸ்வானாவிற்கு படித்தவனைதான் கரம் பிடிக்க வேண்டுமென்ற மனத்தூண்டுதலிருந்தது. மேலும் அவள் நகரத்தில் புழங்கவும் பிரியப்பட்டாள். யூசுஃப் அதற்காகவே வரன் தேடி திருச்சி வரை போக வேண்டியிருந்தது. அந்த பிரயாசைக்கு எம்பிஏ படித்த துபாய் மாப்பிள்ளை கண்ணுக்கு நிறைவாகக் கிடைத்தான். என்ன கல்யாண செலவுகள்தான் லட்சக்கணக்கில் ஆகிவிட்டது!

நாற்பது பவுன் போட்டாலேப் போடணும் என்ற சொல்லுக்கு இயலாது என்று சொல்லாமலே தனது இயலாமைகளை மறைத்து நண்பர்களிடமும் பழகியவர்களிடமும் காசு பணம் புரட்டி, அவர்கள் கேட்ட பிரம்மாண்ட அரங்கத்தில் விருந்து உபசரிப்புடன் எல்லாமே தடபுடலாகவே நடந்து முடிந்தது.

முதல் குமர் காரியம் நல்லபடியாக கண்ணுக்கு நிறைவாக நிறைவேறிவிட்டது, அல்ஹம்துலில்லாஹ்! என கொஞ்சம் அமர்ந்து மூச்சுவிட்டுக் கொண்டபோது, செல்லாச்சி அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கலயாணம், காட்சி என யோசிக்க அதான் இன்னும் குறைந்தது ஐந்து ஆறு வருடம் இருக்கே என்று அவளுடைய பொறியியல் படிப்பு முதல் அத்தனை சுகச்சுமைகளையும் சுமந்து, இடையில் தனக்கும் ஒரு திருமணத்தை அதுவும் தன் செலவிலேயே எளிமையான முறையில் செய்து கொண்டு ஊர் மெச்ச வாழ்க்கையை நன்றாகத்தான் ஓட்டி வந்தான்.

யூசுஃபின் நல்லுள்ளத்தை நாள் செல்ல செல்ல விளங்கிக் கொண்ட திருச்சி குடும்பமும் செல்லாச்சி படிப்பிற்கு உதவி செய்ய தாமாகவே முன்வந்தது. அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க செல்லாச்சி, பொடுசு வீட்டிலேயே தங்கி, படித்தாள். ஆனால் படிப்பு செலவை மட்டும் யூசுப் விட்டுக் கொடுக்கவில்லை. சாப்பாடு மற்றும் மற்ற செலவுகளுக்கு கூட செல்லும் நேரங்களில் மறைமுகமான சிறிய தொகையாகவோ, மளிகை பொருட்களாகவோ சுமந்துச் சென்று நேர் செய்யப் பார்த்தான். அதையும் அந்தக் குடும்பம் பாசத்துடன் ரசிக்கவே செய்தது.

அண்ணனின் கஷ்டங்களையும், தன்மானத்தையும் உணர்ந்து அவளும் பொறுப்புணர்வுடன் படித்து, சிறந்த மாணவிகளில் ஒருத்தியாய் விளங்கி வந்தாள். திறமையும், அதற்கேற்ற வாய்ப்புகளும் அடுத்தடுத்து கைக்கூடி வர செல்லாச்சியின் முயற்சியும் வெற்றிகளும் இதோ இந்த காதல் திருமணம் வரை வந்து விட்டிருக்கிறது!

திருமணத்தை உள்ளூரிலேயே, அதாவது செல்லாச்சியின் வைத்த கோரிக்கையின்படி அவள் பிறந்த ஊரிலேயே வைத்துக் கொள்ள அந்த சென்னை குடும்பம் சம்மதித்தது. அதற்கும் காரணமுண்டு. பெரியவளுக்கு பார்த்துப் பார்த்து செய்த அண்ணனின் திருமணம் அஸர் (சாயந்தர) கல்யாணமாக அமைந்து போனதில் வீட்டிலிருந்த பெண்கள் மூவருக்கும் ஏக வருத்தம்!

முன்பு நடந்த கல்யாணத்திற்கு வாங்கிய கடன்களிலிருந்து மீண்டுவரவே மூன்று, நான்கு வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. தனது திருமண செலவுகளை பெண் வீட்டுப் பக்கம் திருப்புவதில் யூசுஃபிற்கு துளியும் சம்மதமில்லை. மணப்பெண்ணின் விருப்பத்திற்கிணங்க ‘மஹர்’ கொடுத்து உரிமைக்குரியவளாய் ஆக்கிக் கொள்வதுதானே உண்மையான இஸ்லாமிய வழிமுறை? இன்னொன்று பொடுசு கல்யாணத்தில் தான் உழன்றது போல் அங்கே யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்திலும் அந்த முடிவை எடுத்திருந்தான் இந்த தங்க மனசுக்காரன்.

அவனுடைய மனைவியான அரபுன்னிஸா பிறந்ததும் இவர்களைக் காட்டிலும் பொருளாதாரத்தில் கீழ் நிலையிலிருக்கும் ஒரு குடும்பத்தில்தான். இங்கேயாவது அண்ணன் என்று வீட்டிற்கு ஒருத்தன் இருக்கிறான். அங்கே பட்டுக்கோட்டை டவுன் ஓட்டலில் சமையல்காரராக பிழைப்பு நடத்தி வந்த வாப்பாக்காரர் மட்டும்தான். மூன்று பெண் மக்கள். அரபுன்னிஸா மூன்றாமானவள்.

பெண்களோடு பிறந்தவனும், பெண் மக்களை பெற்றெடுத்து, பாதுகாத்து ஆளாக்குபவன்தான் வாழ்க்கையின் பல சவால்களை அறிவான். இத்தோடு பெண்ணைக் கொடுப்பவர் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டால் போதுமென்றிருந்தது இவனுக்கு. இவனுக்கும்தான் தகப்பன் இல்லை என்பதெல்லாம் அந்த நேரத்தில் தோன்றவில்லை. அப்படித் தோன்றியிருந்தாலும் அதையெல்லாம் நினைத்துக் குமையும் ஆளுமில்லை அப்போது!

அரபுன்னிசாவை நல்லபடியாகத் திருமணம் செய்து, சந்தோசமாக குடும்பம் நடத்தியதில் ஒரு வயது மயிலாள் மரியம் மடியினில் தவழ்கிறாள்!

பொடுசு கல்யாணம் திருச்சியில் நடந்ததால் ஊர் மக்கள் எல்லோரையும் இழுத்துச் செல்ல முடியவில்லை. தனக்கும் ‘அஸர்’ கல்யாணம் என ஆகிப்போனதால் வெறும் தேநீர், வாழைப்பழம், பிஸ்கெட் பாக்கெட்டோடு அந்த ஒரு நாள் கூத்து முடிந்து போனதில் ஒரு தாளாமை அவனுள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆகையால் செல்லாச்சிக்காவது ஊரைக் கூப்பிட்டு சோறுப்போட்டு கண் குளிரப் பார்க்க வேண்டுமென்ற யூசுஃபின் கல்பை (மனதை) செல்லாச்சியும் நன்றாக உணர்ந்தே வைத்திருந்தாள். மேலும், உள்ளூரில் அண்ணனின் ஆசைப்படி செய்தால், எழில் முகமது குடும்பத்திற்கும் அவனுக்கும் மரியாதைக்காகவாது ஒரு இணக்கம் அவர்களுக்குள் ஏற்படும் என நம்பினாள். அதற்கு பொடுசு திருமணத்திற்கு பின் உறவளவில் நிகழ்ந்த மாற்றங்கள் கண்முன் தோன்றி அவளுக்கு நம்பிக்கையூட்டின.

யூசுஃபால் அதிக நேரம் யார் மீதும் வருத்தமாக இருப்பது போல காட்டிக்கொள்ள முடியாது என்பதையும் அவள் அறிந்தே வைத்திருந்தாள். செல்லாச்சி நல்ல பாசக்காரி, நன்றியுணர்ச்சி மிக்கவள் மட்டுமல்ல; சமயோஜிதமாய் செயல்படும் அதீத புத்திசாலியும் கூட. அவையெல்லாம் இல்லையென்றால் சென்னையிலிருந்து ஒரு குடும்பம் தனது சொந்த பந்தங்களோடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கடற்கரை கிராமம் வரை வந்து கல்யாணம் செய்து செல்ல சம்மத்திருக்குமா?

ஆனால், மாப்பிள்ளை குடும்பம் மட்டுமென்றால் வீட்டில் கூடுதலாக இருக்கும் ஒரு அறையே போதும். உற்றார், உறவினர்கள் என வரும் மற்றவர்களுக்கு என்ன செய்வதென யோசித்தாள். அவர்களுக்கு அறந்தாங்கியில் விடுதியொன்றில் அறைகள் எடுத்துக் கொடுப்பதென அதுவும் அவளாலேயேத் தீர்மானிக்கப்பட்டது. அவளை அரபுன்னிசாவும் யூசுபும் ஒவ்வொரு விஷயத்திலும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதைவிட முக்கியமான ஒன்று, கல்யாண செலவு முழுதையும் அவளும் எழிலும் சரிபாதியென ஏற்றுக் கொண்டது!

ஆனால், யூசுஃபிற்குத்தான் அப்படி விட்டுக்கொடுத்துவிட மனசு கேட்கவில்லை; அவன் இயல்பிலேயே பிறர் நலன்களில் தாராளப் பிரபு என்பதால் தனது கைகளைக் கட்டிப் போட்டது போல் தவித்துக் கொண்டிருந்தான். பெரியவளுக்கு எல்லாம் செய்து, சின்னவளுக்கும் அதே போல் நிறைவேற்ற முடியவில்லையே என்ற மனக்குறைகள், இயலாமைகள் போல அவனை அழுத்திக் கொண்டிருந்தன.

நாட்கணக்கில் மனக்கண்ணில் கோட்டைக்கட்டி வைத்திருந்தது போல் எதுவும் செய்ய முடியவில்லையே என்று உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்தான். அதையும் மீறி அவன் எதுவும் செய்யப் போவதாக பேச்சை ஆரம்பித்தால் அரபுன்னிசா அவன் கோபம் கொள்ளாத வண்ணம், பக்குவமாக, அதுவரை அவன் அந்த குடும்பத்திற்காக செய்து வந்த, வரும் பங்களிப்புகளை அவன் மனம் சமாதானம் கொள்வது போல் எடுத்துரைத்து ‘கொஞ்சம் பொறுமையா இருங்க’ என அவனை நிதானப்படுத்துவாள். அவன் மனைவி பேச்சையும் மீறுபவன் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

இருந்தாலும் ஒரு சின்னப்பெண், தான் தூக்கி வளர்த்த தங்கை, தன்னுடைய கல்யாணத்திற்காக காசு கொடுத்து, செலவுகளை கவனித்துக் கொள்ள சொன்னதையும் அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தனது சின்ன தங்கைக்காக ஏதாவது குறிப்பிடும்படி செய்தால்தான் அன்றைய நிலைமைக்கு அவன் மனம் அடங்கும் போலிருந்தது.

அவனுடைய இந்த தவிப்பை விளங்கிக் கொண்ட செல்லாச்சி ‘சரிண்ணே, நீ விருப்பட்டதை எனக்கு செய். ஆனா, உன்னை ஒரு கடனாளியா திரும்பவும் என்னால பாக்க முடியாது. என்னை படிக்க வச்சது போதாதா? அத வச்சுதான சம்பாரிக்கிறேன்? அப்படிப்பாத்தா எங்கையில இருக்குற எல்லா காசும் உனக்கும் சொந்தமானதுதானே? அப்படி ஏன் யோசிக்க மாட்டுக்குற? சரி, உன் திருப்திக்காக என்ன செய்ய தோணுதோ அத செய்! ஆனா, கடன் கிடன்னு மட்டும் எங்கேயும் எதையும் வாங்கிறாத! நீ பட்டு செஞ்சதெல்லாம் போதும்!” என்று கடுமையாக எச்சரித்து அவனை அப்போதைக்கு கொஞ்சம் மட்டுப்பட வைத்தாள். ஆனாலும் இதற்கெல்லாமா அவன் அடங்குவான்?

அப்போதுதான் பொடுசிடமிருந்து அழைப்பு வந்தது. போனை எடுத்துப் பேசினான். கல்யாண வேலைகளைப் பற்றி விசாரித்தாள். ஒன்றிரெண்டு நாளில் அவள் பிள்ளைகளோடு ஊருக்கு வந்துவிடுவதாக தனது மகிழ்ச்சியை பெருநாள் பிறை போல் போனிலேயே வெளிப்படுத்தினாள். கூடவே கடைசியாக அவள் சொன்னதுதான் அவனை சட்டென வருந்த வைத்தது.

“அண்ணே, செல்லாச்சி ஒங்கிட்ட கொடுத்திருக்க காசு அமானிதமானதுண்ணே..! பார்த்து செலவு பண்ணு! அவ கஷ்டப்பட்டு சம்பாரிச்சச்சது, உன்ன நம்பி குடுத்திருக்கா, கணக்கு வழக்க சரியா பாத்துக்கண்ணே! எங்கேயும் காச விட்றாத! அது ஓங்காசு இல்ல! முன்னபின்ன ஆயிப்போச்சுன்னா நாளைக்கி அல்லாஹ்ட்ட நீதான் பதில் சொல்லணும்!”

பொடுசு குறிப்பிட்ட விஷயத்தை நினைவூட்டியது சரியே என்றாலும், வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மையின் கூர்மை அவன் மனதை ஏதோ செய்தது.

‘இதுவே நான் நல்லா இருந்து அல்லது பொடுசுக்கு மாதிரியே கடனை உடனை வாங்கி நானே எல்லாத்தையும் நிறைவேற்ற பொறுப்பு எடுத்துக்கிட்டிருந்தா இந்த சொல்லலெல்லாம் பொடுசு வாயிலிருந்து இப்புடி சட்டுன்னு வந்திருக்குமா? இல்ல நாந்தான் இப்புடி பொடுசு மேல வருத்தப்பட்ற மாதிரி ஆயிருக்குமா?’ அவன் மனசுக்குள் பொடுசோட வார்த்தைகள் அல்லது அறிவுறுத்தல்கள் கொஞ்ச நேரம் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தன. அவள் கல்யாணத்திற்காகவும், அவனுடைய பதின்ம வயதில் தந்தை மறைந்த பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு, இந்த குடும்பத்திற்காகவும் பட்டபாடுகளை மனதில் ஓட்டிப் பார்த்ததில், நடந்தவை அவனை கொஞ்சம் தளரத்தான் வைத்தன. பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

செல்லாச்சிக்கு செலவளிக்காதது அவனுடைய எதார்த்த நிலைமையைத் தாண்டிய ஒரு வித கவுரவக் குறைச்சலாகவே பாவித்தான். செல்லாச்சியை எல்லா விஷயங்களிலும் அவள் விருப்பத்திற்கு விட்டிருக்க கூடாதோ..? காதல் திருமணத்தை ஏற்றிருக்கக் கூடாதோ..? படிக்கவே வைத்திருக்கக் கூடாதோ..? என தனது இயல்பு எல்லைகளை மீறி சில நொடிகள் சராசரி ஊர்புற ஆணாய், அற்பமாய் யோசித்தான். கடந்த பதினைந்து வருடங்களாக அவன் சம்பாத்தியத்திலும் கஷ்டங்களிலும்தான் வயிற்றுக்கு சோறு முதல் பெண்மக்களின் பட்டப்படிப்பு வரை எல்லாம் மனம்போல் நிறைவேறியது.

அவன் சிந்தனைகள் தொட்டடுத்து வெவ்வேறு காலக்கட்டத்திற்கும் சென்றன. பொடுசுக்கு கல்யாணம் செய்யும்போது கையிலிருந்தது வெறும் பதினொரு பவுன்கள்தான். அதுவும் பெற்றவளிடம் எஞ்சியிருந்த சிறிய சிறிய நகைகள்தான்! எளிய குடும்பங்களில் எழுதி வைத்த வழக்கப்படி அந்த நகைகளையும் மூத்த மகளுக்கு தாரை வார்த்ததை யூசுஃபால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனுடைய இந்த வேதனையை மேலும் சீண்டும்படி மற்றுமொரு சம்பவமும் நடந்தது.

மெஹர் பெரியம்மா, அதாவது இவனுடைய உம்மாவின் ஒன்றுவிட்ட அக்கா தன்னுடைய பேத்தி கல்யாணப் பேச்சோடு ஒருநாள் வீட்டிற்கு வந்தாள். வசதியான குடும்பம் என்பதால் அச்சமயம் பேத்திக்கு போடப்போகும் பவுனைப் பற்றியும் சீர் வரிசைகளைப் பற்றியும் தொண்டிக்கும் நாகூருக்கும் அள்ளிஅளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஆமாம், எண்பத்தைந்து பவுனு என்றால் சாதாரண விசயமா? அதுவும் பவுனு லட்ச ரூபாயை நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில்? ஏதோ ஒரு நினைப்பில் (மெஹரின் மகளான) ரெஜினாவின் நகையுமா சேர்த்துப் போடுறீங்க என்று யூசுஃபின் உம்மா கேட்க,

“ஆங்..? எல்லா சாமானையும் அவளுக்கு போட்டுப்புட்டு எம்புள்ள வெறுங்கழுத்தோடவா நாலு பேரு முன்னாடி நிப்பா? அவளுக்கு நக வேணா..? அதெல்லாம் எம்புள்ள ராஜமுது ஏற்பாடு செஞ்சிட்டான். அக்கா, தங்கச்சின்னாத்தான் அவனுக்கு உசுராச்சே..! மருமக்கமார்களையும் காமா சோமான்னு போட்டு அனுப்ப விட்டுக் குடுத்துருவானா..?”

யூசுஃபின் உம்மா வாயடைத்துப் போனாள். தன்னிலையிலிருந்து யோசித்து மற்றவர் விவகாரங்களைத் தொட்டுப் பேசியது தப்புதான் என்று அவள் வருந்தியதை அவள் முகச் சுணக்கம் காட்டிக் கொடுத்துவிட்டது.

மெஹர் சென்றபின் தனது உம்மாவை சமாதானம் செய்ய மகன் வர, குறிப்புணர்ந்தவளாய் “அதெல்லாம் ஒண்ணுல்ல வாப்பா… அவ்வோ மக ராஜமுது செஞ்சி போடுறான்னா.., அவ்வோ வாப்பா, அப்பா(பாட்டனார்)ன்னு எல்லாரும் அவ்வளவு சொத்தை சேத்து வச்சிட்டுப் போயிருக்காக; ஓ நெலம அப்படியா? ஒனக்குன்னு ஒண்ணும் சேத்துக்காம… கால் வலிக்க, தோள் வலிக்க கடையிலும், வெயிலேயும் நின்னு, அலைஞ்சு சம்பாரிக்கிறதெல்லாம் தங்கச்சிமாருக்கும், எனக்கும்தானே செலவழிக்கிறா? பணம், பவுசி இருந்து என்ன பயன்? ஒந்தங்கச்சிமாருவோ மாரி அவ்வூட்ல யாரையும் படிக்க வச்சிருக்காங்களா? இல்ல, என்னை மாரி மெஹரு நிம்மதியாவும் இருக்கா? சும்மா வெளில அப்படி மினுக்கிக்கிறது. உங்க பெரிய வாப்பா இப்ப வூட்டுக்கெல்லாம் சரியா வர்றதில்லையாம். சத்தரத்துல மீனு ஏலம் போடுவாளே பெரிய மூக்குத்திப் போட்ட ஒரு தடிச்ச பொம்பள… நீயும் கேள்விப் பட்டிருப்பாதான். பொழுதன்னைக்கும் அவ ஊடே கதின்னு கெடக்குறாராம். உங்க வாப்பா அப்படியா? நமக்கு காசு, பணம் அவ்வோ அளவுக்கு நெறையா சேத்து வைக்கலனாலும் ஒரு நாளும் என்ன மனசளவுல அப்புடியெல்லாம் நோவ விட்டுடலயே..! உங்களுக்கும் ஓச்சோடி பக்கம் ரெண்டு மா நெலத்த காவந்து பண்ணி வச்சிட்டுதானே போயிருக்காக!” என்று தன்னளவில் நிறைவாகவே இருப்பது போல் அச்சமயம் முறுவலித்தாள்.

மறுபடியும் அவன் நிகழ் உலகத்துக்குள் வந்தான். விருந்து ஏற்பாடுக்கென்று மட்டும் செல்லாச்சிக் கொடுத்த ஐந்து லட்சத்தில் சரிபாதி மாப்பிள்ளையோடது என்பதை எதேச்சையாக உணர்ந்ததும் எழில் முகமது மேல் அவனுக்கு ஒரு மதிப்பு பிறந்தது. தனக்கு ஏற்ற மைத்துனன்தான் என்று சிறு புன்னகைப் பூத்தான். அந்தப் புன்னகையில் அத்தனை அடர்த்தி!

பொடுசு சொன்னபடி நேரத்திற்கு தனது இரண்டு மகன்களோடு வந்து சேர்ந்தாள்.

‘தங்க மருமகன்களே..!’ என்று வாரி எடுத்து ஒவ்வொருவரையும் தூக்கி ஏந்தி, உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.

ஆனாலும் பொடுசோடு எப்போதுமான சிரிப்போடு பார்த்த மாத்திரத்தில் பேச முடியவில்லைதான்.

உம்மாவும் செல்லாச்சியும் பொடுசுக்கு பக்கத்திலிருக்கும் சமயமாகப் பார்த்து

“செல்லாச்சி, உனக்கு மூணு பவுனுல ஒரு சின்ன நெக்லஸாவது எடுத்து தர்றேனே அண்ணே..” என்று பேச்சை வழிசலாய் தொடங்கினான்.

“எங்களுக்கு செஞ்சது எல்லாம் போதுண்ணே! எதுக்கு இப்புடி நீ மருகிக்கிட்டே இருக்க? வேணும்னா ஒண்ணு பண்ணு எனக்கு ஆம்புள புள்ள பொறந்துச்சுன்னா உம் மகளை எங்களுக்கு தந்துரு! பொண்ண விட மாப்புள்ள சின்ன வயசுக்காரன்ன்னு குடுக்காம கிடுக்காம இருக்க மாட்டியல்ல?” என்றாள் செல்லாச்சி குறும்பு கொப்பளிக்க.

“ஆங்.. அது எப்புடி நான் ரெண்டு பையலுவல பெத்து வச்சிருக்கேனாக்கும்! நம்ம வூட்டுலயே பொண்ணு இருக்கும்போது, நா மட்டும் வெளிலயா தேடுவேன்!” என்று பொடுசு தன் பங்கிற்கும் அண்ணன்காரனை சம்பந்தியாக்கப் பார்த்தாள். அந்த காட்சியை குளுமைத் தாங்கிய பூரண நிலவாய் பெற்றவள் கண்குளிர இரசித்தாள்.

“நீங்களுவோ அப்பவே நாப்பது பவுனு கேட்ட குடும்பம்ல!” என்று அண்ணன்காரனும் இலகுவாகி தனது வழமையான விளையாட்டோடு பொடுசுப் பக்கம் திரும்ப, ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று அவள் உட்பட எல்லோரும் மல்லிகைக் கொடியாய் பூத்துக் குலுங்கிச் சிரித்தனர்.

டக்கென பொடுசு கண்கலங்கி, “ஃபோன்ல நான் அப்புடி சொன்னத நெனச்சி வருத்தப்பட்டியாண்ணே..? வருத்தப்பட்டிருப்பா! ஒன்னப் பத்தி எனக்கு நல்லா தெரியும்!” என்று கலங்கியவாறு தனது அண்ணனின் கரங்களைப் பற்ற வர, மற்ற அனைவரும் என்ன ஏது என்று புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

“அதெல்லாம் இல்ல பொடுசு…” என்றபடி தரையில் பார்வையை நிலை குத்தினான்.

“நீதான் இந்த குடும்பத்துக்கு எல்லா நல்லது, கெட்டதும் செய்றா, எங்க ரெண்டு பேரையும் தகப்பன் ஸ்தானத்துல இருந்து வளத்து, ஆளாக்கின்னா… படிக்க வச்சா, நான் படிச்ச, டவுனு மாப்ளதான் வேணும்னு சொன்னதுக்காக, தேடியலைஞ்சு தகுதிக்கு மீறி செலவு பண்ணி ஊரே மூக்குல வெரலு வைக்கிற மாதிரி கட்டியும் கொடுத்தா… இப்ப தங்கச்சி கல்யாணமும் நல்லபடியா முடியப்போவுது (மீண்டும் கண் கலங்குகிறாள்… ஏனென்றால் ஃபர்ஹானாவை செல்லாச்சி என்றே அழைத்தேதான் அவளுக்கு வழக்கம்)… ரெண்டு பெண் மக்கமாரை பெத்து, நல்லபடியா பேணி வளத்து, ஆளாக்கி உரியவனிடம் பிடித்துக் கொடுத்தால் அந்த ஆணுக்கு சொர்க்கம் வாஜிபாயிருச்சி (கடமையாயிருச்சி)ன்னு ஹதீசு சொல்லுது. நீ எங்களுக்கு அண்ணனா இருந்தாலும் மறுமையில அந்த நன்மைக்கு ஈடாக உனக்கு அல்லாஹுத்தாலா சொர்கத்தைத்தான் குடுப்பாண்ணே..! ஆனாலும் எங்கண்ணன் நாளைக்கி ஒரு சின்ன கணக்குல கூட தப்புக்காக அல்லாஹ் முன்னாடி தலைக் குனிஞ்சி நின்னுறக் கூடாது! அதுனாலதாண்ணே உங்கையில இருக்கிறது அமானிதமான காசுன்னு சொன்னேன். தப்பா எடுத்துக்காதண்ணே..! தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கண்ணே!”

அண்ணன், தங்கச்சி அவர்கள் இருவரின் கண்களிலும் ஊற்றெடுத்த ஈரப்பெருக்கு வற்றுவதாக தெரியவில்லை. அங்கே ஒரு நெகிழ்ச்சியான மௌனம் படர்ந்திருந்தது.

யூசுப் லேசாக தொண்டையை செருமிக் கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுல்ல பொடுசு உன்ன போயி அப்படியெல்லாம் நெனப்பேனாம்மா…” என்றதையடுத்து அங்கே ஒரு சமரசம் நிலவியது. மீண்டும் மௌனம்.

முன்பு சென்று கொண்டிருந்த பேச்சின் தொடர்ச்சியாய், “அப்ப, உம்மாவுக்கு சங்கிலி ஒண்ணு எடுத்து குடுத்துர்றேன்! ரொம்ப நாளா கழுத்துல ஒண்ணும் இல்லாம இருக்கு!” என்று சபையில் தனது அடுத்தத் திட்டத்தை போட்டு உடைத்தான் யூசுஃப்.

“இப்புடி எங்களுவளுக்கே நீ எல்லா செய்ய கபால் (பித்தம்) கொண்டுக்கிட்டு கெடந்தீன்னா அங்க பாரு.. உம் பொண்டிட்டாட்டியையும் புள்ளையையும்! அவ்வளுவளுக்கு எப்பதான் நீ யோசிக்கப் போறா? அதுவளும் ஒனக்கு அமானிதங்கதான் வாப்பா!” என்று மகனை அதட்டி சரிசெய்யப் பார்த்தாள் உம்மாக்காரி.

பாசக்கடலில் தத்தளிப்பவன் போல் தனது மனைவியை அப்போதுதான் அந்த சபையினில் ஏறெடுத்துப் பார்த்தான். அவளும் மகளும் புன்னகைத்தார்கள். idris.ghani@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button