இணைய இதழ் 116

அகிலாக்கா – பிறைநுதல்

சிறுகதை | வாசகசாலை

புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அவனுக்கு. மணி மதியம் மூன்றரை இருக்குமா? ஏனோ அவனுக்கு பசியே இல்லாததுபோல் ஆயாசமாக இருந்தது. மண்டபத்தின் செலவுக் கணக்குகளைப்பார்த்து மீதிப்பணத்தையும் கொடுத்து கணக்கை முடித்துவிட்டு வெளியில் வந்தான். கொஞ்சம் முன்புதான் மீதமிருந்த உணவுப் பதார்த்தங்களையும் மளிகை சாமான்களையும் ஏற்றிக்கொண்டு கடைசிவண்டி கிளம்பியிருந்தது. சொந்த அண்ணனின் திருமணமாதலால் இனிமேலும் கொஞ்சம் வேலை இருக்கும்தான். ஆனால், மணநாளில் கஷ்டப்பட்டதுபோல் படவேண்டியதில்லை.

   அவனுக்கு கொஞ்சம் காலாற நடக்க வேண்டும் போலிருந்தது. அவனுக்கு அந்த இடம் ஒன்றும் புதியதில்லைதான். பள்ளிக்காலத்தில் அலைந்து திரிந்த இடம்தான். ஆதலால் அனிச்சை செயலாக மண்டபத்திலிருந்து எதிர்புறம் இருந்த தீர்த்தக்குளம் நோக்கி நடந்தான். தீர்த்தக்குளத்தின் சிறிய கைப்பிடிச் சுவரை ஒற்றைக் கையூன்றி தாண்டிக் குதித்தவன் கைப்பிடிச்சுவரை ஒட்டியவாறே நடந்து வடக்குப்புறவாயில் வழியாக வெளியேவந்து இலுப்பைத் தோப்பின் வழியாக ஏரிக்கரை நோக்கி நடந்தான். எரிக்கரையின் மேலேறி கிழக்குப்புறம் பார்த்தான். அவன் எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை. அங்கே அந்த இரண்டு சமாதிகளும் அப்படியே இருந்தன. மெதுவாக நடந்து ஒரு சமாதியில் அமர்ந்தவன் அப்படியே மல்லாந்து படுத்தான்.

  இந்த இடத்தில்தான் அவனது பள்ளிப்பருவத்தின் ஐந்து ஆண்டுகள் கழிந்தன. கிழமேற்காக அதிகம் உயரமில்லா ஏரிக்கரை ஒரு பர்லாங் தூரம் வரை நீண்டிருக்க, கரையோரங்களில் வேம்பு, இலுப்பை, புங்கை, அரசு என நன்கு வளர்ந்த மரங்கள் நிழல் பரப்பி நின்றன. கிழக்கில் கூப்பிடு தொலைவிலேயே மலைக்கோயிலின் ஏறும்படி மற்றும் அதையொட்டிய பிள்ளையார் கோயில். தெற்கே இலுப்பைத் தோப்பும் தீர்த்தக்குளமும். தீர்த்தக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் மலைக்கோயிலிற்கு பூசை செய்யும் குருக்களின் வீடும் அதையொட்டிய நந்தவனமும். வடக்கே வருடத்தில் ஐந்தாறு மாதங்கள் மட்டுமே தண்ணீர் தங்கும் ஏரி. ஏரியை அடுத்து வயல்வெளிகள். கொஞ்ச தூரத்தில் சிறுகுன்றுகள் மற்றும் கல்குவாரிகள். சனி ஞாயிறுகளில் மதிய உணவை முடித்துக் கொண்டு பொடிநடையாக விடுதியிலிருந்து ஏறத்தாழ ஒரு கிமீ தள்ளி உள்ள இந்த சமாதிகளில்தான் வந்து படுப்பார்கள் அவனும் அவனது விடுதித் தோழர்களும். கிளைகளின் ஊடாக வரும் ஒரு சில வெளிச்சக்கீற்றுகளோடு குளிர்ந்திருக்கும் சமாதியில் படுக்க, ஏரிக்காற்று மெதுவாக தாலாட்டித் தூங்க வைக்கும். பின்பு நான்கு நான்கரைக்கு எழுந்து ஏதேனும் விளையாடுவார்கள் அல்லது படிப்பார்கள். ஆறுமணிக்கு விடுதிக்குத் திரும்புவார்கள்.  

      இப்பொழுதும் எதுவும் மாறிவிடவில்லை. எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. காலம்தான் பதினாறு வருடங்கள்(1994-2010) கடந்துவிட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக அடுக்குகளிலிருந்து எல்லாம் ஞாபகம் வர ஆரம்பித்தன. எவ்வளவு இன்பமான நாட்கள் அவை?!. மலைக்கோயிலுக்கு கிழக்குப்புறம் அவனது கிராமம். மலைக்கு மேற்குப்புறம் அவன் படித்துக் கொண்டிருந்த ஊர். காலாற நடந்தாலும் அரைமணி நேரம்தான். ஆனால், குடும்பத்தின் வறுமை காரணமாக அவனது குடும்பத்தில் அனைவரும் விடுதியில் தங்கித்தான் படித்தார்கள். இதில் அவன் மட்டும் விதிவிலக்கா என்ன? வெறும் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அவன் அதிகமாக ஊருக்குப் போவதென்னவோ விடுதியடைக்கப்படும் விடுமுறை நாட்களிலும் மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே. அவனுக்கு பழைய நாட்களும் பழைய நண்பர்களும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீண்டு வர மனம் உற்சாகம் கொள்ளத் துவங்க, சட்டென்று அகிலா அக்கா மனத்திரையில் தோன்றி அப்படியே உறைந்து நின்றாள்.

    அகிலா(அகிலாண்டேஸ்வரி) அக்கா மலைக்கோயில் குருக்களின் மகள். அவனது அக்கா கவிதாவும் அவளும் ஒன்றாகப் படித்தவர்கள். அக்கா அவனது சித்தியின் மகள் .அப்பொழுது அவனது வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவோ அப்பாவோ அவனிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால் அக்காவிடம் சொல்லி அனுப்புவார்கள். அண்ணன்கள் தினமும் அவன் படித்துக் கொண்டிருக்கும் ஊருக்கு வந்து கொண்டிருந்தாலும் அவனிடம் பேச, சொல்ல எதுவும் இருப்பதில்லை அவர்களுக்கு. அக்காவின் ஊருக்கும் அவனது ஊருக்கும் நடுவில் ஒரு மலைதான். ஆனால், கரடுமுரடான பாதையில் காட்டு வழியாக சில மலையடிவார கிராமங்களைக் கடந்து போக வேண்டும். எப்படியும் எட்டுமைல் தொலைவு இருக்கும். பேருந்து வசதி கிடையாது. பேருந்தில் போகவேண்டுமென்றால் அவன் படித்துக் கொண்டிருக்கும் ஊரிலிருந்து ஒரு பேருந்து பிடித்து 15 கி மீ தள்ளியுள்ள ஒரு ஊரிலிறங்கி வேறு பேருந்து மாறவேண்டும். ஒவ்வொரு வாரமும் வீட்டிலும் அவனிடமும் சொல்லிவிட்டு வெள்ளிக்கிழமை மாலையில் அவளின் ஊருக்குச் சென்றுவிடுவாள். மீண்டும் திங்கள் காலை பள்ளிக்கு வந்து அன்று மாலை முதல் அவர்களின் வீட்டில் தங்குவாள்.

   அகிலா அக்காவின் வீட்டில் அவள் பதிமுன்றாவது பிள்ளை என்று நினைவு. அவளுக்குப்பின்னால் நான்கைந்து பிள்ளைகள் இருந்தார்கள். அகிலாக்கா நல்ல நிகுநிகுவென உயரம். நடுத்தரமான உடல்வாகு. பால் போன்ற முகத்தில் குங்குமத்திட்டுகளாய் கொஞ்சம்போல் பருக்கள் தோன்ற ரோஜாப்பூ நிற உதடுகளுடன் பளீரென்று வசீகரிக்கும் அழகில் இருப்பாள். பார்க்கும் எவரும் இரண்டு வினாடிகள் நிதானித்துப் பார்க்கும் அழகில் இருப்பாள். இடதுகையில் ஆறுவிரல். அது அவர்கள் பரம்பரைக்கே புதுசு என்று அவளே சொல்லக் கேட்டிருக்கிறான். மாலை வேளைகளிலும் விடுமுறைநாட்களின் பகல் பொழுதுகளிலும் இலுப்பைத் தோப்பில் ஒரு கையில் புத்தகமும் மறுகையில் பசுமாட்டின் கயிறுமாய் படித்துக் கொண்டே மாடு மேய்த்துக் கொண்டிருப்பாள். நாங்கள் சுற்றித்திரியும் ஏரிக்கரைக்கும் சமாதிகளுக்கும் நாங்கள் இருக்கையில் வருவதில்லை.

   அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. அவன் மட்டுமே சமாதியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கல்குவாரியில் வேட்டு வைத்தார்கள். அந்த பெருத்த வெடிச்சத்தத்தில் குன்றுகளும் அதிர்ந்தன. அகிலாக்கா மேய்த்துக் கொண்டிருந்த பசுமாடு மிரண்டு ஓட ஆரம்பித்தது. அகிலாக்காவும் கயிற்றைப் பிடித்தவாறே உடன் ஓடிவந்தவள் சமாதியினருகில் நிலைதடுமாறி விழுந்து ஏரியின் உள்பக்கச் சரிவில் உருண்டாள். கயிறு கையை விட்டு நழுவிப் போயிருந்தது. மாடு வேகமாக மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அவன் மாட்டைத் துரத்த ஆரம்பித்தான். இறுதியில் மாடு அவனிடம் ஏறும்படியினருகே அகப்பட்டது. மாட்டை இழுத்துக் கொண்டு வருகையில் அகிலாக்கா சமாதியிலமர்ந்து பாவாடையை முட்டிக்கால் வரை ஏற்றிவிட்டு சிராய்ப்புகளை சோதித்துக் கொண்டுருந்தாள். பால் நிறத்திலான வாழைத்தண்டில் குங்குமத்தால் கோடுகள் வரைந்ததுபோல் ஆங்காங்கே சிராய்ப்புகள். நான் அருகில் வருவதைக் கண்டவுடன் பாவாடையைக் கீழிறக்கியவள், “சனியனே! ஏன் இந்தப்பாடு படுத்துற?” என்றவாறே அவனிடமிருந்து கயிற்றை வாங்கி, அதனை அப்படியே இரண்டாக மடக்கி, பசுமாட்டை அடிஅடியென்று அடிக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்தில் வேம்பின் அடிமரத்தில் மாட்டைக் கட்டியவள் அவனருகே அமர்ந்து மூச்சு வாங்கினாள். மாடு எந்தச்சலனமும் இன்றி எங்களைப்பார்த்தவாறே நினறிருந்தது. பின்பு கீழே முகர்ந்து பார்த்து புற்களை மேய ஆரம்பித்தது. சிறிது நேர ஆசுவாசத்திற்குப்பிறகு அவனிடம்

“ரொம்ப நன்றி தம்பி. எத்தனாவது படிக்கிற?” என்றாள்

“பரவால்லேக்கா. ஏழாவதுக்கா?”

“எந்தப் பள்ளிகூடத்துல?”

சொன்னான்

“நானும் அங்கேதான் படிச்சுண்டிருக்கேன். தெரியுமோ?”

“ம்.தெரியும்கா. எங்க அக்காக்கூட பாத்துருக்கேன்”

“ஹே.. யாரு உங்க அக்கா?”

சொன்னான்.

“ஓஹ். கவியோட சின்னத்தம்பி நீதானா? அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா. எந்தம்பி எந்தம்பின்னு. சொந்த தம்பிக்கூட இப்படி பாசமா இருக்க மாட்டாங்கன்னு. சரி, எங்க வீட்டுலத் தேடுவாங்க. நான் வர்றேன். நல்லாப் படி” என்றவாறே கிளம்பினாள்.

     அதன்பிறகு வாரத்தின் ஓரிரு நாட்களைத்தவிர மற்ற நாட்களிலெல்லாம் அவனையும் உடனழைத்துக் கொள்வாள். அவன் அவனது விடுதிப் பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் ஒற்றைக் கண்ணசைவில் அல்லது ஒற்றைக் கையசைவில் அவனைக் கூப்பிட்டுவிடுவாள். ஆரம்பத்தில் +2 பையன்கள் இவனைக் கேலிப் பேசினாலும் பின்னாளில் ஏனோ இதனைப் பொருட்படுத்தவில்லை.ஒரு சிலர் அவனிடம் காதல் கடிதம் கொடுத்தனுப்பினார்கள். அவன் ஒருமுறைகூட அகிலாக்காவிடம் கொடுத்ததில்லை. கொடுத்தவர்கள் இவனிடம் கேட்டபொழுது அவள் கிழித்தெறிந்துவிட்டதாகச் சொல்லுவான். ஒவ்வொரு முறையும் ஏதாவது தின்பண்டம் கொண்டுவந்து தருவாள். அவை அனைத்தும் நெய் மணத்தோடு இதுவரை அவன் கண்டிராத சுவையில் இருக்கும். நினைக்கும்பொழுதே எச்சிலூறும் அவனுக்கு. தேர்வு காலங்களில் அவனது அக்காவோடு அவனது வகுப்பிற்கும் வந்து அவனது நெற்றியில் மெல்லிய தீற்றலாக திருநீறிட்டு தேர்வை நன்றாக எழுதவேண்டும் என்று சொல்லிச்செல்வாள்.

    அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் அண்ணன் அவனைக் காண விடுதிக்கு வந்திருந்தார். அவர் அக்கா இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றதும் அவனுக்கு பகீரென்றது. அக்கா அவனிடம் ஏதாவது சொல்லியிருப்பாளோ? என்பதைத் தெரிந்து கொள்ளவே வந்திருந்தார். அவனிடமும் எதுவும் சொல்லவில்லை என்றதும் அகிலாக்காவிடம் ஒருமுறை விசாரித்துவிடலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு வந்து, அகிலாக்காவின் வீட்டிற்கு கொஞ்சம் முன்பாகவே நின்று கொண்டு, அவனை மட்டும் விசாரித்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினார்.

          குருக்கள் அவரின் வீட்டிற்குமுன்பாக கட்டிலில் அமர்ந்து விபூதி மடித்துக் கொண்டிருந்தார். அவன் அருகில் சென்று சில வினாடிகள் வெறுமனே நின்றிருந்தான். தொண்டையில் தயக்கம் அணை கட்டி நின்றிருந்தது. அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. ஒருவழியாக அவன் வந்து அவரிடம் ஏதோ கேட்கும் முனைப்பில் நின்றிருப்பதை உணர்ந்ததும், “யார்ரா நீ? இங்கெல்லாம் வந்துக்கிட்டு?” என்று அவர் கேட்கையில் முகம் அருவருப்பை சுமந்தது. கண்கள் நெருப்பைக் கக்கின.

“எங்க அக்கா இன்னும் வீட்டுக்கு வரல.”

“அதுக்கு?”

“அகிலாக்காவும் எங்கக்காவும் ஒண்ணாப் படிக்குறவுங்க. அதான் அவுங்கள கேட்டுட்டு போலாம்னு” என்று முடிக்கும்முன் அவர் வெடித்தார்.

“டேய், ஒங்கொக்காவக் காணோம்னா ஒங்கத் தெருவுல பொறுக்கி எவனாவதும் காணாமப் போயிருப்பான். அங்கப்போய் தேடுறா. இங்க நிக்காத. போடா மொதல்ல இங்க இருந்து.”

அவனுக்கு இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் அழ ஆரம்பித்தான். அப்பொழுது எதோ ஒரு வேலையாக அகிலாக்கா வெளியே வந்தவள் இவனைக்கண்டதும் ஆச்சரியமாக

“தம்பி, இங்க என்னடா பண்ற? ஏண்டா அழுற.?” என்று கேட்டாள்.

“அக்கா, இன்னும் எங்கக்கா வீட்டுக்கு வரலக்கா. அதான் அண்ணன் உங்ககிட்ட கேட்டுட்டு வரச் சொன்னார்?” என்றான் அழுதுகொண்டே.

அவள் பதிலளிக்கும் முன்பாக குருக்கள் கோபத்தில் வார்த்தைகளை அள்ளி இறைக்க ஆரம்பித்திருந்தார்.

“சனியனே. பீடை தரித்ரமே. கண்ட கருமாந்திரமெல்லாம் ஆத்தாண்ட வர்றதே. எரும, போடி உள்ள முதல்ல”

அகிலாக்கா அவரைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவனுக்கு இன்னும் அருகில் வந்து, “ஏதோ வேல இருக்குன்னு ஊருக்குப் போயிருக்காடா. திங்கக்கிழமை வந்துடுவா. உங்கிட்ட சொல்லச் சொன்னா. நான்தான் மறந்துட்டேன். அழுகாத. போ, போய் அண்ணன்கிட்டயும் சொல்லு” என்றதும் அவன் அங்கிருந்து உடனடியாக நகர்ந்தான். மனம் கொஞ்சம்போல் நிம்மதியாக உணர்ந்தது. பின்னால் குருக்களும் அவர் மனைவியும் அகிலாக்காவை திட்டுவதையும் அவள் அதற்கு ஏதோ கோபமாக பதிலுரைப்பதையும் கேட்க முடிந்தது.

      அண்ணன் அவனை விடுதியில் விடாமல் கூட்டிக்கொண்டு ஊருக்கு வந்தார். அம்மாவிடமும் அப்பாவிடமும் குருக்கள் வீட்டில் நடந்ததைச் சொன்னதும் அவர்களின் முகம் வாடிப்போனது. பின்பு அண்ணன் அந்த இரவிலும் மலைக்காட்டுவழிச் சாலையில் மிதிவண்டியில் அக்காவின் ஊருக்குச் சென்று பார்த்துவிட்டு ‘அக்கா நலமுடன் அவர்களின் வீட்டில் இருக்கிறாள்’ என்ற செய்தியுடன் மீண்டும் நள்ளிரவு அதே காட்டுவழியில் ஊருக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகுதான் அவனது வீட்டில் அனைவரும் உறங்கினார்கள். அடுத்தநாள் விடுதிக்குச் சென்றவன் அதற்கடுத்த நாள் வழக்கம்போல் புத்தகம் எடுத்துக்கொண்டு சமாதிக்குச் சென்றான். அன்றைக்கு அதிசயமாக அவனுடன் யாரும் வந்திருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால் குருக்கள் வீட்டு வாசலில் நடந்ததை மனம் இன்னமும் அசைபோட்டபடியே இருந்தது. உள்ளுக்குள் பெயரறியாத கோபக்கனல் ஒன்று உருவாகியிருந்தது. மனம் ஏனோ படிப்பில் லயிக்கவில்லை.

கொஞ்சநேரத்தில் அகிலாக்கா வந்தாள்.அவன் மட்டுமே சமாதியில் அமர்ந்திருப்பதைக் கண்டு மாட்டை வேம்பினடியில் கட்டியவள். அவனருகில் வந்தமர்ந்தாள்.

“என்னடா, தனியா இருக்க?!. உங்க ஹாஸ்டல் பையனுங்க யாரும் வரலையா?”

“இல்லக்கா. யாரும் வரல.நான் மட்டும்தான்.”

“ஏண்டா உன் முகமே சரியில்ல? அன்னைக்கு எங்கப்பா பேசுனதையே நினைச்சுண்டிருக்கியா?. அவாள்ளாம் அந்த காலத்தவா. அப்படித்தான் பேசுவா? நீ அதெல்லாம் கண்டுக்காத” என்றபடியே அவன் தலையில் மெதுவாக தட்டிக்கொடுத்தாள். உள்ளே கனன்றுகொண்டிருந்த கோபம் கொஞ்சம்போல் கட்டுக் குலைந்தது. ஆற்றாமையால், “அது எப்பிடிக்கா எங்கக்கா யாரோ பொறுக்கியோட ஓடிப்போயிருக்கும்ன்னு சொல்லலாம்?” என்றபொழுது அவனுக்கு குரல் கரகரத்து கண்களில் நீர்வழிய ஆரம்பித்தது. அவ்வளவுதான். அகிலாக்கா அவனை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டாள். தலையைத் தடவி அவன் முதுகில் பலமுறை தட்டிக் கொடுத்தாள். அவன் ஆசுவாசமடைந்தவுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தவளை அவன் இடைமறித்து, “எங்கக்கா ஒன்னும் ஓடிப்போற பொண்ணுல்ல.அப்படிப்பட்ட குடும்பத்துல அவ ஒன்னும் பொறக்கல” என்றபொழுது அவள் முகம் வாடிப்போனது. கொஞ்ச நேரத்திலேயே எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டாள். அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஏனோ அவன் சமாதிக்கு செல்வத்தைத் தவிர்த்து விட்டான்.

         இது நடந்து ஒருமாதம் இருக்கும்.ஏதோ வேலையாக அவன் அன்றைக்கு வீட்டிற்கு வந்திருந்தான். மாலை ஏழுமணியளவில் வீட்டிற்கு முன்பாக அகிலாக்காவின் அண்ணன்மார்கள் இருவர் வந்து நின்றனர். அண்ணன் பழைய கோபத்திலேயே வெளியே சென்று, “என்ன?” என்றார்.

“உங்கத் தங்கையைப் பார்க்கணும்?”

“எதுக்கு?”

“எங்கத் தங்கை இன்னும் ஆத்துக்கு வரலை.”

அவனுக்கு பகீரென்றது. உண்மையில் பள்ளிவிட்ட உடனேயே வேறு எங்கும் நிற்காமல் வீட்டிற்கு வரும் வழக்கம்தான் அக்காவுக்கும் அகிலாக்காவுக்கும். அகிலாக்காவை பள்ளியிலிருந்து சிவன்கோயில், கடைவீதி கடந்து ஊரெல்லையில் உள்ள மாதா கோயில் தாண்டும் வரையிலும் காத்திருந்து கொத்தித்தின்னும் எத்தனையோ கண்களை அவன் கண்டிருக்கிறான். என்னென்னவோ நினைத்து அவனுக்கு பயம் வந்தது. அண்ணன் இன்னமும் கோபம் குறையாமல், “ஆத்துல இல்லனா கொளத்துல போய்த் தேடுங்க” என்று கத்திக் கொண்டிருந்தார். அப்பா ஏதென்று அக்காவை விசாரித்துவிட்டு வரச்சொன்னார். அக்காவிடம் கேட்டதற்கு, “வீட்டுல ஏதோ விசேஷம்னு மதியமே கிளம்பிட்டாளே? இன்னுமா வரல?” என்று எதிர்கேள்வி கேட்டாள். அவனிடமும் அவர்கள் சில கேள்விகள் கேட்டுவிட்டு சென்றார்கள்.

அடுத்த நாள் முதலே அந்தப்பகுதி முழுக்கவும் அகிலாக்கா யாருடனோ ஓடிப்போய்விட்டதாக பேச்சு அடிபட, அவன் அதை நம்பவில்லை. தினமும் இலுப்பைத் தோப்பிலும், சமாதியைச் சுற்றிலும் தீர்த்தக்குளக் கரையிலும் அவளை எதிர்நோக்கிக்கொண்டிருந்தான். ஆனால், அவள் வரவேயில்லை.

ஒரு வாரத்திற்குப்பிறகு  ஏதோ ஒரு மலையகத்திலிருந்து அகிலாக்காவை கண்டுபிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். ஊர்ப்பஞ்சாயத்து கூடி அகிலாக்காவை இழுத்துக் கொண்டு போயிருந்தவனிடம் ஏதேதோ காகிதங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவனை அனுப்பிவிட்டார்கள். அகிலாக்காவை அவளின் வீட்டுப் பெண்களனைவரும் தூக்கிகொண்டுப்போய் தீர்த்தக் குளத்தில் முக்கினார்கள். அகிலாக்காவிற்கு தலையிலும் கன்னத்திலும் முதுகிலும் நிறைய அடிகள் விழுந்தன. அவனும் அன்றைய கூட்டத்தில் நின்றிருந்தான். அகிலாக்காவிற்கு அடிவிழுவதைப் பார்த்து விக்கித்துப் போயிருந்தான். அகிலாக்காவுடன் ஓடிப்போயிருந்தவனை அவன் ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கிறான். ஏரிக்கரையிலும் இலுப்பைத் தோப்பிலும் அகிலாக்காவுடன் படித்துக் கொண்டோ பேசிக்கொண்டோ இருக்கையில் சைக்கிளில் வேண்டுமென்றே மணியடித்துக் கொண்டு போவான். அப்பொழுதெல்லாம் பால் போன்ற அகிலாக்காவின் முகம் குங்குமமாய் சிவந்து போயிருக்கும்.

   யாரோ வரும் சத்தம் கேட்டுதிரும்பிப்பார்த்தான்.கு ருக்களின் வீட்டிலிருந்து ஒரு பெண்மணி பசு மாடொன்றை ஒட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள். கண்டிப்பாக அகிலாக்காவின் சகோதரிகளில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். முகத்தோற்றமும் அப்படித்தான் சொன்னது. மிக அருகில் வந்ததும் அந்தப் பெண்மணி அவனைக் கூர்ந்து பார்த்தாள். பார்த்தவளின் முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத இறுக்கம் படர்ந்தது. முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு மாட்டினை வேகமாக விரட்டிக் கொண்டு அவனைக் கடந்து போனாள். கடக்கையில்தான் அவன் கவனித்தான் அவளின் இடதுகையில் ஆறுவிரல். அவன் அப்படியே எதுவும் தோன்றாமல் விக்கித்து உட்கார்ந்திருந்தான். வெறும் பதினாறு வருடங்கள் அகிலாக்காவின் உடலில் கருணையின்றி பல மாற்றங்களை உண்டாக்கியிருந்ததை உணர முடிந்தது. பழனிக்கோ திருச்சிக்கோ அர்ச்சகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாக அக்கா சொல்லியிருந்தாள். தற்பொழுது மீண்டும் இங்கேயே வந்துவிட்டாள் போலும். அவனை அடையாளம் கண்டுகொண்டபின்னும் ஏன் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனாள் என்றெண்ணியவாறே அமர்ந்திருந்தவன் நேரமாவதை உணர்ந்து கிளம்பத்த யாரானான். அப்பொழுது குருக்களின் வீட்டிலிருந்து அகிலாக்காவின் முகத்தோற்றத்தில் பதினைந்து வயதுப் பெண் ஓடிவந்து கொண்டிருந்தாள். அவன் அதிசயித்தான். அச்சுஅசலாக அகிலாக்காவைப் போலவே இருந்தாள் அந்தப் பெண். அவனைக் கண்டதும் அவளின் வேகம் சற்றே குறைந்து முகம் கீழே கவிழ்ந்தது. அவள் அவனைக் கடக்கையில் கேட்டான்

” அகிலாக்காவோட பொண்ணாம்மா நீ?”

அவள் கொஞ்சம்போல் நின்றவள் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.

“அது அகிலாக்காதானே?”

அவள் மீண்டும் ஆமாமென்று தலையசைத்தவாறே ஓட ஆரம்பித்தாள். பெரு மூச்சொன்றை உதிர்த்துவிட்டு அங்கிருந்து விரைவாகக் கிளம்பினான்.

அவள் அவனைத் தவிர்ப்பதற்கான காரணம் அவர்களின் கடைசி நாள் உரையாடலில் இருப்பதாகப் பட்டது அவனுக்கு.

-chanbu_sp@yahoo.co.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button