இணைய இதழ் 116சிறுகதைகள்

தெவ்வானை – இராஜலட்சுமி

சிறுகதை | வாசகசாலை

“அண்ணே, அந்தப் புள்ள இழுத்துகிட்டு கிடக்குறாண்ணே. ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்கண்ணே?” அலைபேசியில் கேட்ட ஊர்க்காரன் ‘காமாட்சி’ என்ற காமாட்சி நாதனின் குரல் ஆயாசத்தைக் கொடுத்தது  அர்ஜுனருக்கு.  ஊரில் இலை சருகாகி விழுந்தாலும் உடனே அவருக்குப் ஃபோன் செய்து விடுவான் இந்த காமாட்சி நாதன்.

‘முனைவர் அர்ஜுனன் எம்.ஏ., எம் ஃபில், பி ஹெச் டி, தமிழ் துறைத் தலைவர்’ என்ற பெயர்ப் பலகை இருந்த வீட்டின் கேட்டுக்குள் நுழைந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்து கொண்டார். சமீபத்தில்தான் இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றிருந்தார். நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு, அப்போதுதான் களைத்துப்போய் வந்திருந்தார். அந்த சிடுசிடுப்போடு. “டேய், தெளிவா சொல்லுடா. நீ பாட்டுக்கு புள்ள கிள்ளன்னு மொட்டையா பேசித் தொலைக்காத. நல்லவேளை உம்மதனி வீட்ல இல்ல; அவ காதுல கீதுல விழுந்துருச்சுன்னு வச்சுக்க​ பெரிய ஏழரையைக் கூட்டிப்புடுவா” என்றார்.

மறுபக்கம் தழுதழுத்த குரலில் “அந்த சேரிப் புள்ளண்ணே. நினைவில்லையா உங்களுக்கு?” என்ற காமாட்சியின் வார்த்தை அவருக்குத் தூக்கிவாரிப் போட்டாலும் அவளாக இருக்கக் கூடாதே என்ற நப்பாசையோடு, “எந்தப் புள்ளைடா?” என்று தணிந்த, நடுங்கிய குரலில் கேட்டார். “அதாண்ணே. நம்ம கரிமேட்டுச் சேரி இல்ல? அங்கிட்டு மரமேறி சன்னாசிப்பய இருந்தான்ல, அவன் மகண்ணே. நம்ம தெவ்வானை, நல்ல ஜாரியா இருக்குமே அந்தப் புள்ள” படபடப்போடு சொன்னான் காமாட்சி. சட்டென்று அர்ஜுனருக்கு தேகம் ஒருமுறை சிலிர்த்தடங்கியது. காலக்கருவியில் முப்பத்தி மூன்று வருடம் பின்னால் போய் விழுந்தது அவர் மனம்.

ஆண்டார் கொட்டாரம் கிராமத்தில் அர்ஜுனன் வீடிருந்த பகுதியிலிருந்து சற்றுத் தள்ளி ஊருக்கு வெளியே கரிமேட்டுச்சேரி இருந்தது. அதில்தான் மரமேறி சன்னாசி தன் ஒரே மகள் ‘தெவ்வானை’ என்ற தெய்வானையோடு குடியிருந்தான். எப்போதோ ஒரு முறை ஏற்பட்டத் தீவிபத்தில் கருகிய குடிசைகளின் மிச்சம் ஏற்படுத்திய கரிமேடும்; அதனைச் சுற்றியிருந்த அச்சேரியும்; அங்கே சேறும் சகதியும் சாக்கடையுமான பகுதியில் இருந்த அந்த சிறு குடிசையும் நினைவில் நிழலாடின. அப்போது தெவ்வானைக்கு பதினாலு பதினைந்து வயதுதானிருக்கும். அந்த அழுக்குப் பகுதிக்குச் சற்றும் பொருந்தாத முகப்பொலிவோடு, பழந்துணியில் கூட பளிச்சென்றிருப்பாள்.

அந்த நாட்களில் அர்ஜுனன் மதுரை தியாகராஜர் அரசுக் கலைக் கல்லூரியில் முதுகலை தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். ஆண்டார் கொட்டாரத்திலிருந்து பூலாங்குளம் வரை சைக்கிளில் சென்று; அங்கிருந்த பெரியப்பா வீட்டில் மிதிவண்டியை விட்டுவிட்டு; பேருந்தில் எட்டு கிலோமீட்டர் பயணம் செய்து மாரியம்மன் தெப்பக்குளத்தில் இறங்கி, அங்கிருந்து நடந்துதான் கல்லூரிக்குப் போய் வருவார்.

பலநாட்கள் போகிற வழியில், அவர்கள் வீட்டில் தென்னை மரங்களில் ஏறி இளநீர் மற்றும் தேங்காய்கள் பறித்துப் போட மரமேறி சன்னாசியை, வரச்சொல்லி அனுப்புவாள் அர்ஜுனனின் அம்மா. சேரிக்கு வெளியில் நின்றபடி சைக்கிள் பெல்லை விடாமல் அடித்து தன் வருகையை தெரிவிப்பார் அர்ஜுனன். அப்போதெல்லாம் குடிசைக்கு வெளியே நிற்கும் தெவ்வானைதான் கண்ணில் முதலில் தென்படுவாள். உயர்த்திச் செருகிய சீட்டிப் பாவாடையும், கெண்டைக்காலில் சாணம் பட்டு பட்டு உருமாறிப் போயிருந்த கல்வெள்ளி கொலுசும், பாவாடைக்குத் துளியும் நிறச்சேர்க்கை இல்லாத ரவிக்கையும், தாவணியுமாய் தூசு படிந்த ஓவியம் போல் நிற்பாள். அவரைக் கண்டதும் அவள் முகத்தில் குழந்தைத்தனமான ஒரு புன்னகை அலாதியாய் வந்து ஒட்டிக் கொள்ளும்.

அவள் தன்னை ஆவலாக பார்ப்பது கொஞ்சம் போதையாகத்தான் இருக்கும் அர்ஜுனனுக்கு. ஆனால், அது அவளிடம் மட்டும் இருந்த உணர்வென்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், கல்லூரி தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் என்ற கெத்து, கல்லூரிகளுக்கான இலக்கிய விழா மேடைகளில் அனல் பறக்கும் தன்னுடைய பேச்சுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள் என்கிற அடப்பு அர்ஜுனனுக்கு.

அவள் பல் தெரியச் சிரித்தபடி, “எங்கப்பன கூப்பிட வந்தீகளாப்பு? அது நல்லா குடிச்சுபுட்டு, ராப்பூரா அலப்பற பண்ணிபிட்டு விடிகாத்தாலதான் தூங்கிகிச்சு. அங்கிட்டுக் கவுந்து கிடக்கு பாருங்க. நீங்க போங்க. நான் எழுப்பி முகங்கழுவி அனுப்பியுடறேன்” என்பாள்.

அவளின் அந்த வெள்ளந்தி சிரிப்பு அர்ஜுனனை ஏதோ செய்து விடும். படித்த பட்டிணத்துப் பெண்களிடம் இல்லாத ஏதோ ஒரு வசீகரம் அவளிடம் இருப்பது மட்டும் மனதுக்குத் தெரியும். ஆனால், அவளது குலம், சமூக அந்தஸ்து பற்றிய எண்ணம் குறுக்கிட்டு அவளோடு இயல்பாக பேச முடியாது. ‘சரி’ என்று ஒற்றைத் தலையாட்டலோடு நகர்ந்து விடுவார். முதுகில் அவளது பார்வை படிவதை உணர்ந்து ஒரு குறுகுறுப்பு உள்ளூர ஓடும்.

பிரிதோர் சமயம், அர்ஜுனனுக்கு “நான் கண்ட பாரதிதாசன்” என்ற தலைப்பில் பேச வேண்டிய பாடங்களை மனனம் செய்ய வேண்டி இருந்தது. அமைதியான இடம் தேடி ஊர் தாண்டி சேரிக்குப் பக்கத்தில் வயல்வெளியில் இருந்த அகண்ட பாசன கிணற்றுக்கு மேல் உட்கார்ந்து மனனம் செய்து கொண்டிருந்தார். எதிர்பாராமல் ஒரு காகம் தலையில் தட்டியதில் பயந்து போய் நிலை தடுமாறி, கிணற்றுக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே வந்து மூச்சு திணறித் தத்தளிக்கையில், திடீரென்று பாவாடையைக் கச்சமாக இழுத்து கட்டிக்கொண்டு அம்பு போல் கிணற்றில் பாய்ந்தாள் தெவ்வானை.

அவரது கிராப்பையும், அணிந்திருந்த முண்டா பனியனையும் பிடித்திழுத்து அசுரப் பிரயத்தனம் செய்து, சற்று உயரத்திலிருந்த கிணற்றுப் படியில் தூக்கிப் போட்டாள். நிறைய தண்ணீர் குடித்து பேச்சு மூச்சற்று கட்டை போல் கிடந்தவரின் வயிற்றை அழுத்தியும், வாயில் வாய் வைத்து மூச்சு தந்தும், முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினாள். உணர்வு வந்த பிறகு, சிறிது நேரம் மேல்படியில் அவளும், கீழ்ப்படியில் உடல்நடுங்க அவருமாக அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். பிறகு, “நேரமாகுது. போவோமா?” என்று இயல்பாகச் சொன்னபடியே அவள் எழுந்து நின்றாள்.

ஒரு பெண் தன்னைக் காப்பாற்றிய வெட்கம் மற்றும் தாழ்வுணர்ச்சி உந்தித் தள்ள, “ஏ புள்ள, நீ பாட்டுக்கு இங்கிட்டு நடந்த விசயத்தை ஊரு பூரா தம்பட்டம் அடிச்சுப்புடாத. அப்புறம் வர்றவேன் போறவேன்லாம் என்னைய லந்து பண்ணிருவாங்க” என்றார். சூரிய ஒளியில் காதிலிருந்த பிளாஸ்டிக் தோடு டாலடிக்க, அதே வெள்ளந்திச் சிரிப்பு சிரித்தவாறு, “அடியாத்தி, இதப்போய் யாராச்சும் வெளிய சொல்லுவாங்களாக்கும். அப்புறம் இங்கனக்குள்ளாற என்னமோ குண்டக்க மண்டக்க ஆயிப்போச்சுனுல்ல சொல்லிப்புடுவாக. அதெல்லாம் சொல்லமாட்டேன் தெகிரியமா வாங்கப்பு” என்றவள் சொன்ன பிறகுதான் அவரிடமிருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது.

இருந்தாலும் நன்றியுணர்ச்சியை விட அப்போதைக்கு கழிவிரக்கமும், வயதுக்கே உரிய வேகம், அகம்பாவம், ஒரு பெண் காப்பாற்றியது தெரிந்தால் தன் ஆண்மைக்கு இழுக்கு என்று எல்லாம் கலந்த உணர்ச்சியே மேலிட்டிருந்தது அவரிடம். பிடிவாதக் குரலில், “இதபாரு புள்ள, நீ இங்கிட்டு வந்தது, என்னையப் பாத்தது, நான் கிணத்துக்குள்ளாற விழுந்தப்ப காப்பாத்துனது எதையும் எப்பவும் யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு எம்மேலடிச்சு சத்தியம் பண்ணு” என்றார்.

“ஆத்தாடி, உங்க மேலல்லாம் சத்தியம் பண்ண மாட்டேன். வேணும்னா என் கொலதெய்வம் கடவு காத்த ஐயனாரு மேல சத்தியம் பண்றேன். எங்கப்புரான சத்தியமா யாருகிட்டயும் சொல்லமாட்டேன்ப்பு. போதுமா?” அவர் நீட்டிய வலக்கையில் தன் வலக்கையை வைத்தாள்.

 “சரி, ஈரத்துணியோட ரெண்டு பேரும் ஒண்ணா போக்கூடாது. நீங்க முன்னால போயிருங்க. நான் பைய வாரேன்” என்று சொல்லி அவர் தன்னைத் தாண்டிப் போவதற்காக கிணற்றுச் சுவற்றில் ஒட்டி சாய்ந்து கொண்டு வழிவிட்டாள். அர்ஜூனன் அந்தப் படியைக் கடந்த போது அவள் நெஞ்சில் உராய்ந்த படியும், பின்புறமாக மறுபடி கிணற்றுக்குள் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில​ அவள் இடுப்பைத் தன் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டும், அடுத்த படிக்குச் சென்ற ஒரிரு நொடிகளில் அவள் முகத்தில் திகைப்பு, வெட்கம், பரவசமென்று பல உணர்ச்சிகள் வந்து சென்றதை கவனித்தார். மேலே சென்று கீழே பார்த்தபோது, அவள் கிறங்கிப் போய் நின்றாள் என்று தோன்றியது. என்ன சொல்வது என்று புரியாமல் அங்கிருந்து போனார்.

“அடச்சீய். உயிரையே காப்பாத்தினவளுக்கு ஒரு வார்த்தை நன்றின்னு கூட சொல்லலியே” என்று படபடப்பு அடங்கிய பிறகு தோன்ற, மண்டையில் ஓங்கித் தட்டிக் கொண்டார். ஆனால், அந்த சந்தர்ப்பம் பல மாதங்கள் கழித்து, அவர் எம்.ஏ தேறி, எம்.ஃபில் படிக்க மெட்ராஸ் கல்லூரிக்குக் கிளம்பிய போதுதான் வாய்த்தது.

அர்ஜுனர் அன்று ஊருக்குப் போவது தெரிந்துதான் வந்தாளோ இல்லையோ, கையில் அவள் வீட்டுப் பசு கன்று ஈன்றதால் கிடைத்த சீம்பாலைக் கொண்டுவந்து, அவரையே பார்த்தபடி வீட்டு வாசலில் நின்றிருந்தாள். அவரது அம்மா அக்கம் பக்கம் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து விட்டுத் தணிந்த குரலில், “டேய் தம்பி, நீ கிளம்புற நேரம் பார்த்து அந்தப்புள்ள சீம்பாலோட வந்து வாசல்ல நிக்குது. நல்ல சகுனம்டா. நீயே உங்கைல வாங்கு” என்றாள்.

அப்போது தைரியமாக அவளைக் கண்ணோடு கண் பார்த்து, “ரொம்ப தாங்க்ஸ்” என்று அவளுக்கு மட்டும் புரியும்படி புன்னகையுடன் சொன்னார். அவள் “நானும் டாங்க்ஸ் ” என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு தலையைக் குனிந்தாள்.

அதன் பின், சென்னையில் முனைவர் பட்டம் பெற்று, புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகி, சொந்தத்திலேயே சரஸா என்ற சரஸ்வதியை மணந்து, இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாகி, என்று காலம் இறக்கை கட்டிக் கொண்டுதான் பறந்தது.

இடையிடையே, சித்திரைத் திருவிழா, குடும்ப விழாக்கள் என்று ஊருக்குப் போனபோது தெவ்வானை அவ்வப்போது கண்ணில் படுவாள். அவளைப் பற்றி யாரிடம் எப்படி விசாரிப்பது தெரியாமல் பேசாமல் இருந்து விடுவார் அர்ஜுனன்.

கடைசியாக ஏழு வருடங்களுக்கு முன் அவரது மூத்த அக்காள் மகள் திருமண வீட்டிற்கு அவள் ஒரு பத்து வயது பையனோடு வாழையிலைக் கட்டுகளைக் கொண்டு வந்து போட்டபோது தெவ்வானையைப் பார்த்தார். பழைய பொலிவு போய் விட்டிருந்த நடுத்தர வயது தோற்றம், ஆனாலும் அவரைப் பார்த்த நொடி அவள் முகத்தில் அதே வெள்ளந்திச் சிரிப்பு. “சுகமா இருக்கீகளாப்பு” என்று கேட்டுவிட்டு, அவர் பதிலுக்கு ‘ஆம்’ என்று தலையாட்டியதும், விழிகளை விரித்து, அவற்றில் அவரது உருவத்தை முழுக்க நிறைத்துக் கொள்வது போல் பார்த்துவிட்டு நகர்ந்து விட்டாள்.

அப்போது எதேச்சையாக, இதோ இன்று கைபேசியில் தொடர்பிலிருக்கும் இதே காமாட்சி பக்கத்தில் வர அவனிடம், “எலேய், யாருடா அந்தப் புள்ளகூட ஒரு சின்னப்பய, அவ மகனா?” என்று கேட்டார். “இல்லண்ணே, அந்தப்புள்ளதான் கல்யாணம் கட்டிகிறவேயில்லியே. அப்புறமேது புள்ளயும் குட்டியும். அவ அப்பங்காரன் குடிச்சே செத்துட்டாண்ணே.. இதுக்கு ஒரு நல்லது கெட்டது பாத்துச் செய்ய யாருமில்லாமத்தான் பாவம் அப்பிடியே இருந்து முத்திப் போச்சு. பாவம்ண்ணே. ரெம்பத் தங்கமான புள்ள” என்றான்.

“ஐயோ பாவமே. அப்போ சாப்பாட்டுக்கு என்னடா செய்யுது?” என்று அர்ஜுனன் உண்மையான கரிசனத்துடன் கேட்க, “அதெல்லாம் ரோசக்காரிண்ணே, யாரிட்டயும் சும்மா கை நீட்டி காசு வாங்காது. ஊர்க்காரவுகளுக்கு பச்சை குத்தறது, மாடு வச்சு பால் யாவாரம் செய்யறது, வீட்டுப் பின்னால வாழைமரம் வச்சு அதுலந்து எல, காய், பழம், பூவுன்னு எடுத்து அங்கிட்டுட்டு யாவரத்துக்கு கொண்டு போறதுன்னு எல்லாஞ் செய்யுது” என்றான்.

ஏதோ தோன்ற காம்பவுண்டைத் தாண்ட இருந்தவளை, “ஏ புள்ள, வா இங்கிட்டு” என்று சத்தமாக அழைத்து, “இந்தா, செலவுக்கு வச்சுக்கோ” என்று சொல்லித் தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்ட, முகம் மலர அந்தப் பணத்தை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவரை மற்றொரு முறை ஆசைதீர பார்த்து விட்டு, அதே குழந்தைச் சிரிப்போடு போனாள். வாய் பிளந்து பார்த்துக் கொண்டு நின்றான் காமாட்சி. அவள் இப்படித் தனிமரமாய் நின்றது அர்ஜுனன் மனதை உள்ளூர அரித்துக் கொண்டேயிருந்தது என்னமோ உண்மைதான்.

அதனால்தானோ என்னவோ இன்று அவள் சாகக்கிடக்கிறாள் என்று கேட்டவுடன் வேதனையான குரலில், “எலேய், ஆசுபத்திரிக்கு ஏண்டா கொண்டு போகலை?” என்று கேட்டார்.

மறுமுனையில், காமாட்சி நா தழுதழுக்க, “அண்ணே, நேத்து சாயங்காலம் வரை நல்லாதாண்ணே இருந்துச்சு. திடீருன்னு வாயில நுரைதப்பி வலிப்பு வந்துடிச்சு. டாக்டரக் கூட்டியாந்து காட்டினோம். இனி பொழைக்காது கொஞ்சநேரந்தான்னு சொல்லிட்டாரு. அப்பப்போ முழிச்சு வாசலைப் பார்த்துபுட்டு மயங்கிருதுண்ணே. வெளிய சொல்லாத கடைசி ஆசை இருக்குண்ணே பாவி மவளுக்கு. நெஞ்சாங்குழியில உசிரு தொக்கிட்டு நிக்குது. கீழே விழுந்து சேரானதுனால எம்பொஞ்சாதிதான் அதுக்குத் துணியை மாத்திச்சு. அப்பத்தான்.. …. அந்தப் புள்ள மார்ல உங்கப்பேரை பச்சக்குத்தி வச்சுருக்கறதை பார்த்துப்புடுச்சுண்ணே” அவன் சொல்லச் சொல்ல அர்ஜுனருக்கு கைகால்கள் சில்லிட்டு உடல் நடுங்கிற்று.

“அது கல்யாணங்கட்டாம இருந்தது ஏன்னு புரிஞ்சு போச்சுண்ணே. பாவம்ண்ணே, ஒரு தடவ வந்து உங்கக் கையால அது வாயில கங்கைத் தண்ணியை ஊத்தி நிம்மதியா அனுப்பி வச்சுருங்கண்ணே” மறுமுனையில் கமாட்சி கதறினான். எந்த பதிலும் வராமலிருக்க, “நான் பேசுறது கேக்குதாண்ணே” என்று கேட்டுக் கொண்டேயிருந்தான்.

எந்த எதிர்பார்ப்போ சுயநலமோயின்றி தன்னைக் காதலித்து, மனதால் தன்னோடு வாழ்ந்திருக்கிறாள் அவளென்ற உண்மை முகத்தில் அறைய; மாசற்ற அன்பு வாய்த்தும் உணராமல் கடந்து விட்ட வேதனை இதயத்தில் ஈட்டியாய் தைக்க, சத்தமின்றி தரையில் மண்டியிட்டமர்ந்து முதல்முறையாக “தெவ்வான” என்று உதடுகள் மௌனமாக உச்சரிக்க, உடல் குலுங்க அழுதார் அர்ஜுனன்.

-rajitamilartist@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button