
மெய்யழகிக்கு கனலியின் இந்த இறுக்கம் பழகிப் போனதுதான். ஆனாலும் வெகு சமீபமாய் கனத்த வலி ஒன்றை கனலியின் செயல்பாடுகளில் மெய்யழகியால் காண முடிந்தது. கனலி அப்படியானவளல்ல. மத்தாப்பு பொறியும் புன்னகைக்குச் சொந்தக்காரி. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாய் இருக்கும். சிரித்த முகத்தோடு இருக்கும் அவளைப் பார்த்தாலே கவலைகள் கூட அந்த நொடிக்குள் மறைந்து விடும். கருணை தளும்பும் நெஞ்சம், அவளைக் கண்டதும் அவள் காலைச் சுற்றிச் சுற்றி வரும் நாய்களும் பூனைகளும் அதற்கு சாட்சியங்கள். நடமாடும் ஒரு தேவதை அவள்.
அப்படிப்பட்டவளின் இந்த இறுக்கம் நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்து, இப்போதது அவளது இயல்பாகவே மாறிவிட்டது.
மெய்யழகிக்கு இது கனலியின் தனிப்பட்ட விருப்பமாகத் தெரிந்தாலும்,
கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. தன் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிற பெரும் ரகசியங்களின் பாரத்தில் அவளுக்கு எதாவது சங்கடங்கள் நேர்ந்துவிடுமோ என்ற கவலையும் இருந்தது.
அமைதியான ஒரு வார இறுதியின் மாலை வேளையில், “நடந்ததெல்லாம் கெட்ட கனவுனு நெனச்சு மறந்துட்டு, நார்மலா இருக்க ட்ரை பண்ணுமா் நார்மலா இருக்க மாதிரி நீ நடிக்கிறது நல்லாத் தெரியுது. இன்னும் எவ்ளோ நாளைக்குதான் இப்படி இடிஞ்சு போயே இருப்ப? தலையெழுத்துனு ஒன்னு இருக்குல. அவ்ளோதான்.. இருக்கறத அப்படியே அக்ஸெப்ட் பண்ணிட்டு மிச்சம் இருக்கற நாளை வாழ்ந்துட்டு போயிடுவோம்மா” என்ற மெய்யழகிக்கு வழக்கம் போலவே கனலியிடமிருந்து அமைதியான புன்னகை ஒன்று பதிலாக கிடைத்தது.
ஒரு அன்பின், ஒரு வாழ்க்கைப் பயணத்தின் துவக்கம் பெரும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் திட்டமிடப்படுகிறது. அந்த நேரத்தில் இன்னார் போதும் வாழ்வின் கடைசி நொடி வரை என்ற உள்ளார்ந்த உணர்வுகள் எழுவது இயல்பு. ஆனால், அது எல்லாருக்கும் சாத்தியமாகி விடுவதில்லை என்பதே உண்மை. வாழத் துவங்கிய பின்னெழும் கசப்புகள் சில நேரங்களில் துடைக்கப்படுகின்றன, சில நேரங்களில் தழும்பாகி விடுகின்றன. சில நேரங்களில் இனி இந்த வாழ்வு வேண்டவே வேண்டாமென விலகிச் செல்ல வைக்கின்றன.
இன்னொன்று தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை இந்தச் சமூகம் தீர்மானிப்பது. என்ன கொடுமையானாலும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும், பிள்ளைகளுக்காக வாழ வேண்டும், கௌரவத்துக்காக வாழ வேண்டும், யாருக்காகவோ வாழ்வதைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது. இவற்றையெல்லாம் மீறி இன்னொரு வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் இந்த சமூகத்தின் பார்வையில் அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாகி விடுகிறார்கள்.
அனுசரித்து அன்பு செலுத்தி மனம் விட்டுப் பேசி அத்தனை முயற்சிகளும் தோல்வியடையும்போது, அந்த வாழ்வில் இருந்து விலகி விடுவதுதானே உத்தமம்? யாரோடு வாழ வேண்டும் என்பதையும், யாருக்காக வாழ வேண்டுமென்பதையும் யாரோதான் தீர்மானிக்கிறார்கள். எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை எத்தனையையோ மனதுக்குள் வைத்துத் தொடங்கிய ஒரு வாழ்வு.. துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, நிர்க்கதியாய் நிறுத்தப்பட்டபோது, துணிந்து மீண்டும் ஒரு வாழ்வை அமைத்து, வலிகளை மறைத்து, தனிமையில் அழுது, என்னாலும் வாழ முடியுமென்பதை உணர்த்த முற்படுகிற ஒரு தருணத்தில், உயிருள்ள உணர்வுள்ள மனமாக அல்லாமல், உடலாக, பொருளாக, தான் பயன்படுத்தப்படுவதை அறிந்த அந்த நொடியில், அவள் இந்த இறுக்கத்தை நிரந்தரமாக அணியத் துவங்கி இருந்தாள். காதலித்து சகித்துக் கொள்வது நியாயம், சகித்துக் கொண்டு காதலிப்பது எந்த வகையில் நியாயம்?
அதற்குப் பிறகான அவளின் புன்னகைகள் நடிப்பாகவே வெளியாகத் துவங்கின. தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள கடினமாகப் போராடினாள். அதில் வெற்றியும் கண்டாள். கோடையின் உக்கிரத்தில் வாடிப்போன செடிகள், இன்னொரு வசந்தத்தில் செழிப்பதைப் போல வெகு காலத்திற்குப் பின், அவளது வாழ்விலோர் வசந்தமாய் நிகழ்ந்தது, அழகனின் வருகை. இந்தச் சமூகத்தைக் கூர்ந்து கவனிக்கிறபோது பிடிபடுகிற ஒரு விஷயம், உடைந்த உள்ளங்களே பெரும்பாலும் ஒன்றுக்கொன்று பேராறுதலாய் இணைந்து விடுகின்றன என்பது, அது இச்சையாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
இந்தச் சமூகம் எப்படியான பெயர்களையும் வைத்துக் கொள்ளட்டும். உடைந்து போய் தனிமையில் நிற்கிறபோது கிடைக்கிற தாய்மையை நிகர்த்த அரவணைப்பு ஆத்மார்த்தமானது. உடல் தேவைகளைத் தாண்டி, அன்புக்கு ஏங்கி நிற்கிற மனதுக்கு, மீதமுள்ள வாழ்வைக் கடத்துகிற பெரும் நம்பிக்கையாய் அதுஅமைந்து விடுகிறது.
இன்னொரு வாழ்வையே தூற்றும் இந்தச் சமூகம் அவளது மன உணர்வுகளை ஏக்கங்களை புரிந்து கொள்ளப் போகிறதா என்ன? உயிரை மட்டும் கையில் ஏந்தியபடி அவளிடம் வந்து சேர்ந்தான் அழகன். ஒரு பெரும் மீட்சி இருவருக்கும் நிகழ்ந்து முடிந்திருந்தது. அந்த வருகை, அந்தச் சந்திப்பு, அந்தச் சிறிய பெரும் வாழ்வு
இருவருக்குள்ளும் அணையாத ஏக்கத் தீயாய் இப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. பூதாகரமானது பிரச்சனை, இருவரும் விலக்கி வைக்கப்பட்டார்கள். காலங்கள் ஓடி இப்போதது நினைவாக இருக்கிறது. தூய அன்பின் கண்ணி காலத்தினால் அவிழாதென்பது எத்தனை பெரிய உண்மை!
அன்பு இயல்பானது, இன்னார் மேல்தான் வர வேண்டுமென வலிய வர வைப்பது அல்ல. கனலி,
மெய்யழகியிடம் சிந்திய ஒற்றைப் புன்னகைக்குப் பின் இத்தனை பெரிய நினைவின் தடம் இருந்தது. அது மெய்யழகிக்கும் தெரிந்ததே. நூலைப் போல்தானே சேலை இருக்கும். படரும் இந்த இருளுக்கு இப்போதோர் ஒளித்துகள் தேவைப்பட்டது. காலத்தின் வெகுநீண்ட மௌனத்தை உடைத்தாள் மெய்யழகி.
“அம்மா,
அழகனுக்கு கால் பண்ணட்டுமா…?”