
1
அன்று அதிகாலை நான் யோகாசனம் செய்து கொண்டிருந்த போது இரண்டு முறை தொடர்ச்சியாக டெலிபோன் அலறியது. மூன்றாவது முறையாக அது ஒலிக்கத் தொடங்கியபோது, அறைக்குள் நுழைந்து ரமேஷ்தான் பேசினான். வெறும் சில நொடிகள்தான் பேசியிருப்பான். கண்ணை மூடிக்கொண்டு மூச்சுப் பயிற்சி செய்துக்கொண்டிந்த எனக்கு அவனது குரல் சட்டென பதட்டமாவது நன்றாகப் புலப்பட்டது. டெலிபோனை வைத்துவிட்டு, என்னிடம் பேசுவதற்காக அவன் அங்கேயே நிற்பதும் எனக்கு தெரிந்தது. கண்ணை திறக்காமல், அவனிடம், “என்னடா, என்ன விசயம்” எனக் கேட்டேன்.
“பெரியப்பா நேத்து ராத்திரி பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாராம்ப்பா. காலையிலதான் கவனிச்சு ஆஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க.”
“ஐயோ! நல்ல அடியாடா? அண்ணனுக்கு முழிப்பிருக்கா இப்போ? எந்த ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க? கூட யாறாவது இருக்காங்களா?”
என நிற்காது கேள்விகளை ரமேஷிடம் கேட்டுக்கொண்டே யோகா மேட்டினை மடித்து வைத்தேன். தன்னிச்சையாக அலமாரியைத் திறந்து, நான் வேட்டி சட்டையை எடுப்பதை ரமேஷ் கவனித்தான்.
“நீங்க ரெடி ஆவுங்கப்பா. நானும் விஜயாக்கிட்ட சொல்லிட்டு புறப்படுறேன். திருவல்லிக்கேணியிலதான் ஏதோ நர்ஸிங் ஹோம்ல சேத்திருக்காங்களாம்.”
சென்னையின் போக்குவரத்து நெரிசல் ஏழரை மணிக்கெல்லாம் தொடங்கிவிட்டதைப் பார்த்த எனக்கு சற்று வியப்பாக இருந்தது. திருவல்லிக்கேணிக்கும் போகும் வழியெல்லாம் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்துபடி, தங்களது வாகனங்களுக்காக காத்திருந்தார்கள். ஒன்பது மணிக்கு தொடங்கும் பள்ளிக்கூடத்திற்கு, வெறும் பத்து நிமிடத்திற்கு முன்னதாகதான் நாங்கள் கிளம்புவோம். பராக்கு பார்த்துக் கொண்டும், ஊர் கதைகளை நண்பர்களுடன் பேசிக்கொண்டும் நடந்து சென்றாலும் வகுப்பறையை அடைவதற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் தேவைப்படாது. பரிட்சை சமயங்களில் மட்டும், ரத்தினம் அண்ணன் என்னை மிதிவண்டியில் உட்கார வைத்து கூட்டிக்கொண்டு போவார். ரோட்டில் புத்தக மூட்டையை முதுகில் சுமந்தபடி காத்திருக்கும் சிறார்களைப் பார்த்ததும், அண்ணனின் தோள்களைப் பற்றிக் கொண்டு நான் மிதிவண்டியில் ஒய்யாரமாக பயணிக்கும் காட்சிதான் நினைவில் தோன்றியபடி இருந்தது. ரத்தினம் அண்ணனுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது என வேண்டிக் கொண்டேன்.
சாரதா நர்ஸிங் ஹோமில் அண்ணனைச் சேர்த்திருந்தார்கள். ஐஸ் ஹவுஸுக்கு பக்கத்தில் இருக்கும் வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு முனையில் அந்த நர்ஸிங் ஹோம் இருந்தது. வண்டியில் இருந்து இறங்கிய ரமேஷ், ரிசப்சனில் விசாரித்துக் கொண்டிருந்த போது, நான் வாசலிலேயே நின்றுருந்தேன். ரோட்டோரத்தில் செத்துக் கிடக்கும் பெருச்சாளியில் வயிற்றை கிழித்து அதன் குடலை காகமொன்று புசிப்பதைக் கண்டேன். மனம் இன்னும் கூடுதலாக படபடத்தது. நெற்றியில் இருந்து வியர்வைத் துளிகள் அதிகமாக உதிர்ந்தன.
“பெரியப்பா இரண்டாவது மாடியில இருக்காராம். கரண்ட் இல்லாததால லிப்ட் இப்போ வேல செய்யலயாம். நீங்க கீழயே இருங்கப்பா. நான் போய் பாக்குறேன்.”
ரமேஷின் பரிந்துரையை நான் நிராகரித்துவிட்டேன். கைத்தடியை ஊன்றியபடி நானும் அவனுடன் மெல்ல மாடியேறினேன். முதல் மாடியை கடக்கும் வரை அமைதியாக இருந்த ரமேஷ், கோபத்தை கட்டுப்படுத்த முடியாது, பல்லைக் கடித்தப்படி என்னிடம் பேசினான்.
“நீங்களும் பெரியப்பா மாதிரியே தான் அடம் பிடிக்கிறீங்க. இரண்டு மாசம்தான் ஆச்சு உங்களுக்கு மூட்டு ஆப்ரேசன் செஞ்சு. அதுக்குள்ள இப்படி மாடிப்படி ஏறி எறங்கனுமா?”
நான் அமைதியாக இருந்தேன். என்னுடைய பதிலுக்காக காத்திருக்காமல் அவன் தொடர்ந்தான்.
“ரத்தினம் பெரியப்பாவுக்கும் பிடிவாதம் உங்கள காட்டிலும் அதிகம்தான். வயசு எம்பது ஆவப்போது. ஏன் தனியா மேன்சன்ல இருக்கனும்? ஒன்னும் மலேசியாவுல இருக்கிற அவுங்க பொண்ணு வீட்டுக்கு போய் இருக்கலாம். நம்ம வீட்டுல, உங்க கூட வந்து தங்கிக்கிடலாம். அதுவும் பிடிக்கலயா.. அருப்புக்கோட்டைக்கு போயி சொந்தக்காரங்க கூடாயாச்சும் இருந்து காலத்த ஓட்டலாம். இது எதுவும் இல்லாமா, இப்படி தனியா மேன்சன் ரூம்ல, இந்த வயசுல தங்குறது என்ன நியாயம்? இப்படி ஏதாவது ஒன்னு நடக்கும்போது, அவர பாத்துகறக்கு யாரு துணைக்கு இருக்கா?”
ரமேஷ் கூறியது முற்றிலும் சரிதான். குடும்பத்துடன் கடைசி காலத்தை கழிப்பதை விட்டுவிட்டு, தனியே அவர் இருப்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், அண்ணனால் மற்றவர் வீட்டில் சௌரியமாக இருக்க முடியாதே? தினம் அவரைப் பார்த்துப் பேசுவதற்கு நான்கைந்து நபர்களாவது வந்துவிடுவார்கள். வருபவர்கள் உடனே கிளம்ப மாட்டார்கள். மணிக்கணக்கில் ஏதேதோ பேசுவார்கள், விவாதிப்பார்கள். பிறகு வாரத்தில் இரண்டு நாட்களாவது ஏதேனும் கூட்டத்தில் பேசுவதற்கு அவருக்கு அழைப்பு வந்துவிடும். உடலில் தெம்பு இருந்த வரை அவரே பஸ் பிடித்து போவார். இப்போது அவரை கூட்டிச் செல்வதற்கு யாராவது வண்டி எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். பிறகு ராத்திரியில், அவருக்குத் தூக்கம் வரும் வரைக்கும் லைட்டு போட்டுக்கொண்டு எதையாவது வாசிப்பார். இல்லையென்றால் பத்திரிக்கைக்கு எழுதுவார். பத்தாண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு வந்த புதிதில், மூன்று மாதங்கள் ரமேஷ் வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார். ஆனால், அவரின் அன்றாட நடவடிக்கைகள் ரமேஷுக்கும், விஜயாவிற்கும் பிடித்தமானதாக இல்லை என்பதை அவர் உணர்ந்ததும், மேன்சனுக்கு கிளம்பிவிட்டார்.
அண்ணா ஆஸ்பத்திரி படுக்கையில் ஒரு குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தார். நல்லபடியாக அவருக்கு எந்த பலத்த அடியும் இல்லை. பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர், பயத்தில் மயங்கியிருக்கிறார். இரவெல்லாம் தண்ணீரிலேயே கிடந்ததால் ஜுரம் மட்டும் நன்றாக அடித்தது அவருக்கு. ஓரிரு நாட்களில் கிளம்பிவிடலாம் என டாக்டர் கூறினார். அவரின் அறையைக் காலி செய்துவிட்டு, வீட்டிற்கே அழைத்துச் சென்றுவிடலாம் என ரமேஷ் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். விசயத்தை மலேசியாவில் இருக்கும் இரத்தினம் அண்ணனின் மகள் அறிவுக்கொடியிடம் சொல்வதற்காக பக்கத்தில் உள்ள டெலிபோன் பூத்திற்கு ரமேஷ் புறப்பட, நான் அண்ணன் படுத்திறந்த அறை வாசலில் காத்திருந்தேன். சற்று நேரத்தில், கருப்பு சட்டை அணிந்தவர்கள் சிலர் அங்கு வரத் தொடங்கினார். என்னையும் அடையாளம் கண்டு கொண்டவர்கள், வணக்கம் சொல்லி நலம் விசாரித்தார்கள்.
2
வீட்டில் இரண்டாவது மகனான இரத்தினம் அண்ணனுக்கும், கடைசி பிள்ளையான எனக்கும் பன்னிரென்டு வயது வித்தியாசம். எனவே, எனக்கு நினைவு தெரிந்த போது அவர் மதுரை அமெரிக்கன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். வார இறுதியிலும், ஏனைய விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டிற்கு வந்து கொண்டிருந்த இரத்தினம் அண்ணனுக்கு, என் மீது ரொம்பவே பாசம் அதிகம். விடுமுறைக்கு வரும் போதெல்லாம், என்னை மிதி வண்டியில் உட்கார வைத்துக்கொண்டு, பூக்கடை பஜாரில் இருக்கும் முனியாண்டி மிட்டாய் கடைக்கு கூட்டிச் சென்று சீரணியும், பால்பன்னும் வாங்கிக் கொடுப்பார். எனவே, அவரின் வருகைக்காக நான் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பேன். ஆனால், அப்பாவும், மூத்த அண்ணன் ராமசந்திரனும் மட்டுமல்ல, அம்மாவும் கூட அண்ணன் ஊருக்கு வரும் நாட்களில் சற்று பதட்டதோடு காணப்பட்டார்கள். எப்போதும் இரத்தினம் அண்ணாவிடம் கோபத்தோடு அவர்கள் அந்நாட்களில் பேசியதாக எனக்கு நியாபகம்.
சிறுவனான எனக்கு அண்ணனை மிகவும் பிடித்ததற்கு மிதிவண்டி பயணமும், அவர் வாங்கித் தரும் பலகாரங்களும் காரணமாக இருப்பதைப் போலவே, வீட்டில் உள்ள மற்றவர்கள் அண்ணன் மீது கோபத்துடன் இருப்பதற்கும் காரணம் உண்டு. இரத்தினம் அண்ணன் பெரியார் கட்சியை சேர்ந்த சுயமரியாதைக்காரர். தெருக்களில் அவருடன் பேசுபவர்கள் அண்ணனை ‘சுமக்கார’ இரத்தினம் என்றுதான் கூப்பிடுவார்கள். அண்ணனுக்கு பெரியார் பைத்தியம் பிடித்ததற்கு சுதந்திரம் வாத்தியார்தான் காரணம் என அம்மா அவ்வவப்போது கவலையுடன் புலம்புவார். சுதந்திரம் வாத்தியார் அண்ணனுக்கு பள்ளிக்கூடத்தில் மூன்றாம் ஃபாரத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்தவர். அவர் பெரியார் போலவே நீட்டமாக தாடியெல்லாம் வளர்த்துக் கொண்டுதான் வகுப்புக்கு வருவாராம். வந்ததும் பாடம் தொடங்கிவிட மாட்டார். அவர் கையில் கொண்டு வந்திருக்கும் குடிஅரசு பத்திரிக்கையை ஒரு பையனிடம் கொடுத்து, அவர் சுட்டிக்காட்டும் செய்தியையோ, கட்டுரையையோ வாசிக்க சொல்லுவார். பிறகுதான் இலக்கண இலக்கியப் பாடமெல்லாம். ஆயிரத்தி முன்னூத்தி முப்பத்தி மூணு திருக்குறளையும் அப்படியே ஒப்பிக்கும் திறமைசாலி. அவரிடம் படித்த மாணவர்கள் எல்லாம் எந்தக் குறளை வாசித்தாலும், உரையில்லாமல் அர்த்தம் சொல்வார்கள். பாடப் புத்தகத்தில் கம்பராமாயணம் பகுதி வந்தால், வகுப்பு பிள்ளைகள் எல்லோரும் குஷியாகி விடுவார்கள். ஒவ்வொரு செய்யுளையும் அழகாக விளக்குவதோடு, இராமனை நிமிசத்திற்கு ஒரு முறை கிண்டலடித்தபடி வகுப்பெடுப்பார். அதை கேட்டு ரசிக்கும் மாணவர்களின் சிரிப்புச் சத்தம், அடுத்து வகுப்புவரை கேட்குமாம்.
பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எப்போதும் சுதந்திரம் வாத்தியாரை சுற்றி ஒரு குட்டி படை இருக்கும். அதில் இரத்தினம் அண்ணனும் இருந்தார். வாத்தியாரின் வீட்டுத் திண்ணையில் ஒரு சிறிய படிப்பகத்தை அமைத்திருந்தார். அண்ணனும், பிற சுதந்திர வாத்தியாரின் சிஷ்யர்களும் பள்ளி முடிந்ததும் அங்குதான் கூடுவார்கள். வெள்ளைக்காரன் ஆட்சி, காங்கிரஸ் கட்சி, நீதி கட்சி, கடவுள் பக்தி என பல விசயங்கள் பற்றி ராத்திரி வரை அங்கு காரசாரமான விவாதம் நடக்கும். பிறகுதான் இரத்தினம் அண்ணன் வீட்டுக்கு வருவார் என்றும், வந்ததும் அப்பா அவரைக் கோபத்துடன் திட்டுவது அன்றாடம் நடக்குமெனவும் அம்மா கூறுவார். அப்பா ஒரு தீவிர காந்தி பக்தர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் வேறு. அப்பா நடத்திக் கொண்டிருந்த சேலைக் கடையின் சுவற்றை காந்தியாரோடு அப்பா மெட்ராஸில் எடுத்துக் கொண்ட படம் அலங்கரித்திருந்தது. பெரியண்ணன் ராமசந்திரன் கடையின் பொறுப்பினை ஏற்ற பிறகும் கூட அந்த புகைப்படம் அங்கிருந்த அகற்றப்படவில்லை. அது அப்பாவின் கண்டிப்பான உத்திரவு. எனவே, இரத்தினம் அண்ணன் சுதந்திரம் வாத்தியாரோடு சுற்றிக் கொண்டிருந்தது அப்பாவிற்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஒரு நாள் ராத்திரி, வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த இரத்தினம் அண்ணனை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரை தள்ளி கிடந்த அண்ணனை, வாழவந்தம்மன் கோவில் பூசாரிதான் விபூதி அடித்து காப்பாற்றினார் என அம்மா அடிக்கடி சொல்லுவார். ஒழுக்கமில்லாமல் கடவுளை கிண்டல் செய்யும் கோஷ்டியுடன் அவர் சேர்ந்ததற்கு கிடைத்த தண்டனையது என அம்மா உறுதியாக நம்பினார். அடுத்த மாதம் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக போயி அண்ணனுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்டாள். அண்ணன் முடியாது என முரண்டுபிடித்தபோது, அப்பா அவரின் கண்ணத்தின் ஓங்கி அறைந்துவிட்டார். அண்ணனின் கன்னத்தோடு, காதும் அப்பாவின் அடியினால் நன்கு சிவந்துவிட்டது. பதில் ஏதும் பேசாது, கண் கலங்கியபடியே அண்ணன் அன்றிரவு படுத்துக் கொண்டார். ஆனால், மறுநாள் காலை, எல்லாரும் எழுந்திருக்கும் முன்பாக வெளியே கிளம்பிய இரத்தினம் அண்ணன் தலைமுடியை முழுவதுமாக சிரைத்துவிட்டு, மொட்டையோடு வீடு திரும்பினார்.
அதன் பிறகு அவர் எந்த கோவிலுக்கும் போவதே கிடையாது. அப்பாவுடன் பேசுவதையும் குறைத்துக் கொண்டார். சாப்பாடு நேரத்திலும், தூங்கும் போதும் மட்டும்தான் அவர் வீட்டிற்கு ஆஜரானார். சுதந்திரம் வாத்தியாரின் படிப்பகத்திற்கு போவது, சுயமரியாதைக்காரர்கள் ஊரில் செய்யும் பிரச்சாரங்களில் பங்கேற்பது, காரியாப்பட்டி, திருச்சுழி போன்ற பக்கத்து ஊர்களில் பெரியார் பேச வந்தால், அக்கூட்டங்களில் கலந்துக்கொள்வது என எஞ்சிய பள்ளி நாட்களை செலவிட்டார் இரத்தினம் அண்ணன். அவரின் நடவடிக்கைகள் சரியில்லை என ஓயாமல், அப்பவுக்கும் பெரிய அண்ணன் ராமசந்திரனுக்கும் உறவினர்களிடம் இருந்து புகார்கள் வந்தபடியிருந்தன. எனவேதான், இரத்தினம் அண்ணன் மதுரைக்கு படிக்கச் சென்றது அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.
ஆனால், விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வருபவர், என்னை முனியாண்டி மிட்டாய் கடைக்கு கூட்டி செல்வதை மட்டும் வாடிக்கையாகக் கொண்டிருக்கவில்லை. கல்லூரியில் நன்றாக மேடையேறிப் பேசவும் கற்றுக் கொண்டவர், ஊரில் சுயமரியாதைக்காரர்களும், நீதி கட்சியினரும் நடத்தும் கூட்டங்களில் பேச்சாளரானார். சாமி, சாதி, பிராமணர், காந்தி, காங்கிரஸ் – இவை ஐந்தும் ஒழிய வேண்டும் என மணிக்கணக்கில் பேசுவார். நான் காராச்சேவு சாப்பிட்டப்படி அவரின் பேச்சை முன் வரிசையில் அமர்ந்து கேட்பேன். எதுவும் புரியாவிட்டாலும், அண்ணன் அப்படி மேடையேறி, தூய தமிழில் பேசும் தோரணை எனக்குப் பிடித்திருந்தது. அண்ணனின் பேச்சை கூட்டத்தில் நின்று கேட்ட உறவினர்களில் சிலர், வீட்டிற்கு வந்து அவரது பேச்சாற்றலை பாராட்டுவார்கள். சிலர் அப்பாவின் கடைக்கு போய் பிள்ளையை கண்டிப்போடு வளர்க்க உபதேசிப்பார்கள். ஒரு முறை அண்ணன், கூட்டத்தில், “இரத்தினம் செட்டியாரான நான், இனிமேல் எனது சாதி பட்டத்தை துறந்துவிட்டு இரத்தினம் என்று மட்டும் அழைக்கப்படுவேன்” என பேசினார். அன்று நல்ல கரகோஷம் கிடைத்தது. ஆனால், வழக்கம் போல இதையும் யாரோ அப்பாவுக்கு தெரிவிக்க, அண்ணனின் கூட்டங்களுக்கு நானும், வீட்டிலுள்ள மற்றவர்களும் போவதற்கு தடை விதிக்கப்பட்டது.
கல்லூரி படிப்பு முடிந்ததும், சில மாதங்கள் ஊரிலேயேதான் இரத்தினம் அண்ணன் இருந்தார். கட்சி வேலையாக ஈரோட்டுக்கும் சென்னைக்கும் அவ்வப்போது கிளம்பிப் போவார். இப்படி ஒழுங்கில்லாதவனால் தொழில் கற்றுக்கொள்ள முடியாது என தீர்மானமாக நம்பிய அப்பா, இரத்தினம் அண்ணனை கடையில் சேர்த்துக்கொள்வது கிடையாது. வியாபாரத்தை அவரும் ராமசந்திரன் அண்ணனும்தான் கவனித்துக் கொண்டார்கள். எனினும், நள்ளிரவில் மகனின் எதிர்காலம் பற்றிய தனது கவலைகளை அவர் அம்மாவிடம் பகிர்ந்துக் கொள்வதையும் நான் கவனித்திருக்கிறேன்.
திடீரென ஒரு நாள், ஊரில் நாடகம் போடப்போடுவதாக அண்ணன் என்னிடம் கூறினார்.
”டேய் நடராஜா, சுதந்திரம் வாத்தியாரும் நானும் சேந்து ஒரு நாடகம் எழுதியிருக்கோம்.”
“அப்படியா! என்ன நாடகம்ண்ணே?”
“நாடகத்தோடு பேரு ‘நரகாசுரன் படுகொலை’. இந்த நாடகத்தில் நரகாசுரன்தான் கதாநாயகன்.”
“அப்போ வில்லன் யாரு?”
“வேற யாரு, பகவான் கிருஷ்ணன்தான்”
“….”
“நம்ம முத்துதான் நரகாசுரனா நடிக்கிறான். கிருஷ்ணனுக்கு ஒரு சின்ன பையன்தான் தேவை. நீ வந்து நடி.”
அண்ணன் இப்படி கேட்டதும், நானும் உற்சாகமாக ஒப்புக்கொண்டேன். சுதந்திரம் வாத்தியாரின் வீட்டு திண்ணையில்தான் பயிற்சி, ஒத்திகையெல்லாம் நடந்தது. ஆனால், ஊர்க்காரர்களுக்கு, இந்த நாடக விசயம் எப்படியோ கசிந்துவிட்டது, சுதந்திரம் வாத்தியாரிடம் போய் சண்டை பிடித்தார்கள். நரகாசுரன் நாடகம் போட்டால், நாடகக் கொட்டாயை கொளுத்துவோம் என்றுகூட சிலர் மிரட்டினார்கள். இனி இங்கு நாடகம் நடத்தினால், வீண் பிரச்சனை என்றும், ஈரோட்டிற்கு போய் இந்நாடகத்தை அரங்கேற்றலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பெரியாரையே நாடகத்திற்கு தலைமைத் தாங்க அழைக்கலாம் என்றுகூட யோசித்தார்கள்.
இத்தகவலை அறிந்ததும் பதறிப்போனார் அப்பா. ஈரோட்டில் யாராவது நாடக கொட்டாயை கொளுத்தினால் என்ன செய்வது எனும் கவலை அவருக்கு, உடனே, மலேயாவில் இருக்கும் தனது தம்பி ராஜவேலுக்கு கடுதாசி எழுதிவிட்டார். இரத்தினம் அண்ணனை இனியும் ஊரில் வைத்திருக்க முடியாதென்றும், அங்கு ஏதாவது அவருக்கு வேலை ஏற்பாடு செய்துதரும்படியும் அதில் எழுதியிருந்தார்.
ஒரு மாதத்தில் பதில் வந்தது. பினாங்கில் உள்ள தமிழ் பள்ளிக்கூடத்தில், இரத்தினம் அண்ணனுக்கு வாத்தியார் வேலை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சித்தப்பா எழுதியிருந்தார். மறு வாரமே நாகப்பட்டிணத்தில் இருந்து அண்ணா கப்பல் ஏறினார்.
3
எந்த ஜோசியரும் கணிக்கவில்லை. இரத்தினம் அண்ணன் கிளம்பிச் சென்ற ஓராண்டிற்குள் மகா யுத்தமொன்று வெடித்து, உலகையே தலைகீழாக்கும் என்று. போரின் தொடக்கத்தில் இந்தியாவைப் போன்றே, மலேயாவும் ஆங்கிலேயார்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுதான் இருந்தது. ஆனால், இடையே ஜப்பானியர்களின் கை அங்கு ஓங்கியதென்றும், வெள்ளைக்காரனையே ஜப்பான்காரனின் படை மலேயாவில் இருந்து விரட்டியடித்ததென்றும் நாங்கள் நாளிதழ்களில் வாசித்தோம். ஜப்பானியர் பிடியில் மலேயா சென்ற பிறகு, நாகப்பட்டிணத்தில் இருந்த அங்கு செல்லும் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. இரத்தினம் அண்ணனுக்கும், ராஜவேல் சித்தப்பாவிற்கும் நாங்கள் எழுதிய கடிதங்கள் எல்லாம் மீண்டும் எங்களது விலாசத்திற்கே திருப்பியனுப்பப்பட்டது. போரின் கோரத்தின் நடுவில், மலேயாவில் இருந்து எப்படியோ ஊருக்கு தப்பி வந்தவர்கள், அங்கு குண்டு மழை பெய்வதாக கூறினார்கள். அங்குள்ள பல தமிழ் இளைஞர்கள் நேதாஜியின் படையில் சேர்ந்து பர்மாவில் சண்டையிடுவதாகவும் பேசிக்கொண்டார்கள். ஏதேனும் உணர்ச்சியில் அண்ணனும் சண்டையில் சேர்ந்துக் கொண்டாரா என நாங்கெல்லாம் பதறினோம். பர்மாவில் நேதாஜி படை சார்பாக போரிட்டவர்களெல்லாம், கொத்துக்கொத்தாக மடிந்ததாக நாங்கள் கேள்விப்பட்டபோது, இரத்தினம் அண்ணன் உயிருடன் இருக்க வேண்டும் என நினைத்து அழுகையோடு திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டோம். .
போர் முடிந்த பிறகு, மலேயாவில் இருந்து இங்கு வந்த முதல் கப்பலிலேயே அண்ணன் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்தது. நாங்கள் பயந்தபடி அவர் எந்த படையிலும் சேரவில்லை. யுத்த காலத்தில் சௌக்கியமாகவே இருந்ததாக எழுதியிருந்தார். சீக்கிரம் ஊருக்கு புறப்பட்டு வருமாறு பதில் கடிதம் எழுதினார் அப்பா. பதில் கடிதத்திற்கு, அண்ணன் அனுப்பியிருந்த பதில் கடிதத்தை பிரித்துப் படித்த போது, நாங்கள் எல்லோரும் ஆயுத பூசைக்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தோம்.
“அன்புள்ள தந்தைக்கு,
எப்படி என்னை பார்ப்பதற்கு நீங்கள் அனைவரும் ஆவலோடு இருக்கிறீர்களோ, அதைவிட நூறு மடங்கு ஆசையுடன் நான் இங்கு காத்திருக்கிறேன். புறப்பட்ட முதல் கப்பலிலேயே நான் கிளம்பி வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால், உங்களுக்கும் அம்மாவிற்கும், பெரியண்ணனுக்கும் நான் மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிர்ச்சியையே அதிகம் கொடுத்திருப்பேன். எனவேதான், கடிதம் வாயிலாக விசயத்தை தற்போது தெரிவிக்கிறேன். இதற்கு நீங்கள் எழுதும் பதிலை பொருத்துதான், ஊருக்கு திரும்புவதா, அல்லது இங்கேயே தங்கிவிடுவதா என முடிவு செய்ய வேண்டும்.
என்னுடன் பணிப்புரியும் பிரேமா என்பவளை நான் திருமணம் செய்துக் கொண்டேன். இந்த நாட்டிலேயே பிறந்த வளர்ந்த தமிழ் பெண் அவள். நன்றாக கவிதை எழுதுவாள். எனக்கு இவளைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கைத் துணையாக வேறு எவரும் இருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஆனால், இவளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா எனத் தெரியவில்லை. ஏனெனில் பிரேமா, நீங்கள் எல்லோரும் ஹரிஜன் என கூறும் குலத்தில் பிறந்தவள். மலேயாவில் இருக்கும் தமிழ்முரசு சாரங்கப்பாணி போன்ற பெரியவர்களின் முன்னிலையில் யுத்த காலத்தில் எனக்கு சுயமரியாதை திருமணம் நடந்துவிட்டது. சித்தப்பாவும் கல்யாணத்திற்கு வந்திருந்தார். உங்களிடம் பொறுமையாக விசயத்தை சொல்லலாம் எனும் யோசனையை வழங்கியவரும் அவர்தான்.
உங்களுக்கு இந்த திருமணத்தில் மகிழ்ச்சி என்றால் நானும் பிரேமாவும் புறப்பட்டு வருகிறோம். இல்லை எனில் இந்த ஊரிலேயே உங்கள் அனைவரின் நினைவுகளை சுமந்தபடி மகிழ்ச்சியுடன் இருப்போம்.”
கடிதத்தை படித்து முடித்ததும், அதனை ராமசந்திரன் அண்ணனின் கைகளில் ஒப்படைத்தார் அப்பா. அதை வாசித்ததும், மிகவும் கோபத்துடன் கத்தினார். மற்றவர்களுக்கும் விசயத்தை தெரிவித்தார். அம்மா ஓவென்று அழத் தொடங்கினார். பெரிய அண்ணியும், எனது அக்காக்களும் நானும் செய்வதிறியாது திகைத்து நின்றோம். ஆனால், அப்பாவின் முகத்தில் அமைதியும், கண்களில் தெளிவும் இருந்தது. சுவற்றில் காந்தியுடன் அவர் நிற்கம் புகைப்படத்தை சில நிமிடங்கள் பார்த்தப்படி செலவிட்டார். பிறகு,
“இந்த கல்யாணத்தில எனக்கு சம்மதம். இரத்தினத்தை ஊருக்கே திரும்ப வர சொல்லிடலாம்னு இருக்கேன்”
என்று அவர் சொன்னதும், அதுவரை கோபத்தில் கத்திக்கொண்டிருந்த அண்ணன் அமைதியானான். அம்மாவின் அழுகை சட்டென நின்றது.
4
அண்ணனின் திருமணத்தை ஏற்றுக் கொண்டதைப் போல, அவரை ஊருக்கு உடனடியான மனைவியோடு வரும்படி எழுதியது சரியான முடிவல்ல என்பதை தாமதமாகவே அப்பா உணர்ந்தார். இரத்தினம் அண்ணன் செய்த குற்றங்களிலேயே இந்த கலப்புக் கல்யாணம்தான் உச்சமானது என உறவினர்கள் தெருக்களிலும், கோவிலிலும், விசேஷ வீடுகளிலும் எங்களது காதுகளுக்கு கேட்கும்படி பேசினார்கள். சிலர் எப்போதும் போல, அப்பாவின் கடைக்கு வந்து, நேரடியாகவே சண்டை பிடித்தார்கள்.
“சொக்கலிங்கம் செட்டியாரே! இப்போ எதுக்காக உங்க பையன மலேயாவுல இருந்து வர சொன்னீங்க? வீட்டு பக்கமே வராதன்னு அவன தல முழுயிருக்க வேண்டாமா! இதுவரைக்கும் அவன் பண்ணின சின்ன சின்ன தப்பையெல்லாம் கண்டிச்சவரு, இத மட்டும் எப்படி அனுமதிச்சீங்க? இதோ பாருங்க, நீங்க நம்ம சனங்க மத்தியில மரியாதையான ஆளு. நீங்களே இந்த மாதிரி விசயத்தை எல்லாம் ஏத்துக்கிட்டா, மத்தவுங்களுக்கு தப்பான உதாரணமாயிடாதா.”
”என்ன பண்ணுறது. எல்லாம் யுத்த காலத்தில் வேக வேகமா நடந்து முடிஞ்சிடுச்சு. பையன வர கூடாதுன்னு சொன்னா, அவுங்கம்மா செத்துப்போறேன்னு அழுவுறா. அப்புறம், இந்த மாதிரி சாதி விட்டு சாதி கல்யாணம் செய்யனும்னு காந்தியாரும் பல வருஷமா பிரச்சாரம் பண்ணிட்டு வாரார். அவரும் நம்மல மாதிரி குஜாராத் செட்டியாருதான். ஆனா, பாருங்க அவரோட பையன ராஜாஜி பொண்ணுக்குதானே கட்டி வச்சிருக்கிறார்.”
“அட என்ன சொக்கலிங்கம். காந்தி அவரு மகன ஒரு பிராமணன் மகளுக்கு கலியாணம் பண்ணி வச்சிருக்கார். அதில ஒரு பெருமை இருக்கு. உங்க பையன் கல்யாணம் பண்ணது யாருன்னு தெரிஞ்சா ஊர் உலகம் சிரிக்காதா?”
அதற்கு மேலே அவர்களிடம் உரையாடுவதில் பலனில்லை என அப்பாவுக்கு தெரிந்துவிட்டது. ஆனால், ஊர்க்காரர்களால் இரத்தினம் அண்ணனுக்கும், பிரேமா அண்ணிக்கும் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்கிற பயம் அவரை பீடித்திருந்தது. மலேயாவில் இருந்து திரும்பிய அவர்கள் இருவரையும், வீட்டைவிட்டு வெளியேற அப்பா அனுமதிக்கவில்லை. திருமணத்தை ஊர் ஏற்றுக் கொண்டால்தான் எந்த தொந்தரவும் இன்றி அண்ணனும் அண்ணியும் வாழ முடியுமென அவர் தீர்க்கமாக நம்பினார்.
மதுரையில் அப்பாவிற்கு, வைத்தியநாத அய்யர் எனும் நண்பர் இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நாடார்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நுழைவதற்கு போராட்டமெல்லாம் நடத்தியவர். காந்திக்கு அவர் கொஞ்சம் நெருக்கமானவரும் கூட. எனவே, அவரிடம் விசயத்தை சொல்லி, பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என விசாரித்தார்.
“இத பாருங்கோ செட்டியாரே, உங்க ஆளுங்க எல்லாருக்கும் மகாத்மா மேல நல்ல பக்தி உண்டு. பேசாமா, உங்க மகனையும், மருமகளையும் காந்திஜிக்கிட்டயே அழைச்சிட்டு போயி, ஆசிர்வாதம் வாங்கிடலாம். மகாத்மா வாழ்த்தின திருமணத்தை உங்க சனங்க மறுக்கவா போறாங்க?”
அய்யர் சொன்ன யோசனை அப்பாவிற்கு பிடித்திருந்தது. உடனே காந்திக்கு கடிதம் எழுடினார். ஆனால், காந்தியார் வங்காளத்தில் வெடித்திருந்த மதக் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்ததால், உடனடியாக பதில் கிடைக்கவில்லை. சற்று தாமதமாகவே, காந்தியிடம் இருந்து கடிதம் வந்தது:
“சொக்கலிங்கம் செட்டியாருக்கு நமஸ்காரம்,
உங்களது பிள்ளையின் திருமணத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டது எனக்கு பெரும் மன மகிழ்ச்சியை கொடுக்கிறது. தம்பதியினருக்கு எனது வாழ்த்துகளும், ஆசிர்வாதமும் எப்போதும் உண்டு. இப்போது வட இந்தியாவில் சற்று நிலைமை சரியில்லை. அவர்கள் தில்லிக்கு கிளம்பி வந்தாலும், என்னால் அவர்களை நேரில் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. எனவே வேறொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வதிக்கிறேன்”
காந்தியின் கடிதம் கிடைத்ததும், சமூகத்து பெரிய மனிதர்கள் முன்னிலையில் அதனை வாசித்துக் காட்டினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பழுத்த காங்கிரஸ்காரர்கள். காந்தியிடம் இருந்தே, சுமக்காரனான இரத்தினத்தின் கலப்புத் திருமணத்திற்கு ஆசிர்வாதம் கிடைத்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயத்தில் திருமணத்திற்கு மறுப்பும் அவர்களால் சொல்ல முடியவில்லை.
5
அப்பாவின் முயற்சியினால் கொஞ்ச காலம், அண்ணனுக்கும், அண்ணிக்கும் எந்த பெரிய சிக்கலும் ஊரில் இருக்கவில்லை. சுதந்திரம் வாத்தியாரின் சிபாரிசினால் இருவருக்கும், அருப்புக்கோட்டை அரசு பள்ளியிலேயே வேலை கிடைத்துவிட்டது., விடுமுறை நாட்களிலும் இரத்தினம் அண்ணன் எப்போதும் போல திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். பிரேமா அண்ணியும் ஆரம்பத்தில் அவரோடு போனார். ஆனால், அப்பாவிற்கு அதில் வருத்தம் என்பது தெரிந்ததும், கூட்டங்களுக்கு போவதை ஏனோ அண்ணி நிறுத்திக் கொண்டார். ஆனால், அண்ணி எழுதும் கதைகளும், கவிதைகளும் பத்திரிக்கைகளில் பிரசுரமானால், வீட்டில் இருப்பவர்களுக்கும் தனது நண்பர்களுக்கும் அப்பாவே வாசித்துக் காண்பித்து பெருமை கொள்வார்.
காந்தி சுடப்பட்டதாக வானொலியில் அறிவிப்பு வெளியானதில் இருந்து, அப்பா சற்று பித்துப் பிடித்தவர் போலவே காணப்பட்டார். தன்னுடைய கடைக்கு செல்வதையும், மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டு, வியாபார பொறுப்பினை பெரிய அண்ணனிடமே முழுமையாக ஒப்படைத்துவிட்டார். எப்போதும் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதையோ, தீவிரமாக யோசித்தபடி இருந்தார். திடீரென வீட்டில் இருந்து புறப்பட்டு, பக்கத்து ஊர்களில் இருக்கும் ஏதாவது கோவிலுக்கு கிளம்பிப் போவார். அப்படியொரு முறை, திருச்சுழிக்கு சென்று திரும்பியவர், பிரேமா அண்ணியிடம் மாலை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். புதுக்கோட்டையில் இருந்து அவரது தாத்தா மலேயாவிற்கு புலம் பெயர்ந்து சென்றது, அங்கு ரப்பர் தோட்டத்தில் பட்ட துயரங்கள், கஷ்டங்களை கடந்து படித்து அவர் ஆசிரியர் ஆன கதை என அவரின் மொத்த வரலாற்றையும் அப்பா பொறுமையாக விசாரித்தார். நானும் வீட்டுத் தூணியில் சாய்ந்து உட்காரந்து கொண்டு, அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். அன்றிரவு, ஏதோவொரு யோசனையிலேயே தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து உறங்கிப்போன அப்பா, மறுநாள் விழிக்கவேயில்லை.
அப்பாவின் மரணத்திற்கு பிறகு, மூத்த அண்ணன் ராமசந்திரன்தான் வீட்டுக்கும் கடைக்கும் எஜமானரானார். அவரது தலைமையில் எல்லாம் அப்படியே மாறிவிட்டது. ஒரு நாள் மாலை, இரத்தினம் அண்ணனை கடைக்கு வரச்சொல்லி தனியே பேசினார்.
“இரத்தினம். எனக்கு சுத்தமா உன்னுடைய கல்யாணத்தில இஷ்டமும் உடன்பாடும் இல்ல. அப்பா சொன்னத மறுக்க முடியாம இத்தனை நாள் நான் சகிச்சிக்கிட்டேன். இனியும், என்னால் நடிச்சிக்கிட்டு உங்கிட்டயும், பிரேமாகிட்டயும் என்னால பேசிட்டு இருக்க முடியாது. அப்புறம், வாத்தியார் வேலைக்கு போனாலும், நீ உன்னுடைய பழைய நடவடிக்கைகள மாத்திக்கிற மாதிரி தெரியல. கருப்புச் சட்டை போடுறதும், சாமி இல்ல, சாதில்லன்னு கூட்டம் போட்டு நீ பேசுறதும் எனக்கு எரிச்சலைத் தவிர வேற எதையும் கொடுத்தது கிடையாது. நீயும், அவளும் தனியா போயிடுங்க. அதுதான் வீட்ல எல்லாருக்கும் நல்லது.”
எந்த விவாதமும் செய்யாமல், இரத்தினம் அண்ணனும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அம்மா நிச்சயம் அழுது ஆர்பாட்டம் செய்யப் போகிறார் என நினைத்தேன். ஆனால், ஒப்புக்குக் கூட அவர் அண்ணனையும் அண்ணியையும் தடுக்கவில்லை. ”அப்பப்போ வீட்டுக்கு வந்து போங்க” என்று மட்டும் கூறினார். அவர்கள் இருவரும் தங்கள் உடமைகளை எடுத்தக் கொண்டு புறப்பட்ட சமயத்தில் வழியனுப்பி வைக்கக் கூட பெரிய அண்ணி வாசலுக்கு வரவில்லை. நான் மட்டும்தான் அன்றைக்கு அழுதேன். அவர்கள் கிளம்பிய பிற்பாடு வீட்டில் உள்ளவர்கள் பேசியதைக் கேட்ட போதுதான் தெரிந்தது, என்னையும் அப்பாவையும் தவிர அண்ணனின் திருமணத்தில் வேறு யாருக்கும் மகிழ்ச்சியே இல்லை. அம்மாவும்கூட பிரேமா அண்ணியை வெறுத்திருந்தார்.
வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்ற அவர்களை, யாருமே அதன் பிறகு கண்டு கொள்ளவில்லை. ஒரே ஊரில் வசித்தாலும், எந்த உறவினரும் அண்ணனையும், அண்ணியையும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பதில்லை. ராமசந்திரன் அண்ணனும், அம்மாவும்கூட அவர்களுடனான தொடர்பை முழுவதுமாக முறித்துக் கொண்டார்கள். நான் மட்டும்தான் மற்றவர்களுக்குத் தெரியாமல் இரத்தினம் அண்ணனின் வீட்டிற்குச் சென்று வருவேன். சொந்தக்காரர்கள் வரவில்லை என்றாலும், அவரது வீட்டில் எப்போதும் கருப்பு சட்டை அணிந்தவர்கள் சிலர் காணப்படுவார்கள். காரசாரமான விவாதங்கள் வீட்டில் நடந்தபடியே இருக்கும். அண்ணனும், அண்ணியும் சேர்ந்தே உள்ளூரிலும், வெளியூரிலும் நடக்கும் கூட்டங்களில் பேசினார்கள். இப்படி பரப்பரப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும், உறவுகள் ஒரேயடியாக தன்னை நிராகரித்தவிட்ட வலியை இரத்தினம் அண்ணன் எப்போதாவது சொல்லி புலம்புவார். குறைந்த பட்சம் அம்மாவாவது தன்னையும் பிரேமாவை ஏற்றுக் கொண்டிருக்கலாம் எனும் ஏக்கம் அவரோடிருந்தது.
“சொக்கலிங்க மாமா மட்டும் கடுதாசி எழுதி எங்கள வர சொல்லாட்டி நாங்க மலேயாவுலயே இன்னும் நிம்மதியோடு இருந்திருப்போம். இங்க ஊருக்க வந்ததுனால் ரெண்டு நல்ல விசயம்தான் எங்களுக்கு. ஒன்னு, எங்களுக்கு புள்ள மாதிரி நீ இருக்க. ரெண்டாவது, உயிரோடு இருந்த வரைக்கும், என் அப்பா மாதிரி என்னைய வீட்ல கவனிச்சிக்கிடாரு மாமா. ஒரு வேல, இங்க வராட்டி அவரு நல்ல குணத்த நானும், உங்க அண்ணனும் தெரிஞ்சிருக்கவே மாட்டோம். இப்போ, சொந்தம்னு எங்க கிட்ட வந்து பேசுறது நீ மட்டும்தான். அப்பப்போ தோணும், பேசமா மலேயாவுக்கே திரும்ப போயிடலாம்னு.”
என்று ஒரு நாள் அண்ணி என்னிடம் சொன்னார். எனினும், அவர்கள் இருவரும் பல ஆண்டுகள் அருப்புக்கோட்டையை விட்டு நகரவேயில்லை. அவர்களுக்குப் பிறந்த அறிவுக்கொடியை மலேசியாவில் இருக்கும் தனது உறவினர் பையனுக்கு கட்டிக்கொடுத்தார் பிரேமா அண்ணி. பணி ஓய்விற்குப் பிறகு மலேசியா சென்று மகள் வீட்டில் வாழலாம் என்பது அவர்களது எண்ணமாக இருந்தது. ஆனால், ரிட்டையரான எட்டு மாதங்களிலேயே பிரேமா அண்ணியை தெரு நாய் கடித்து, ரேபீஸ் நோய் தாக்கி இறந்து போனார். அவரின் சாவிற்கு கூட, மூத்த அண்ணனோ வேறு உறவினர்களோ வரவில்லை. ஊரிலும் முன்பு போல, திகக்காரர்கள் முனைப்பாகச் செயல்படுவதில்லை. எல்லோரும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் பின்னால்தான் போய் கொண்டிருந்தார்கள். அண்ணனுக்கு அந்த கட்சிகளின் மீதெல்லாம் பெரிய நாட்டமில்லை. அவர்கள் யாருக்கும் கொள்கையே கிடையாது என கூறுவார். ஐந்து மாதத்திற்கு ஒரு கூட்டத்தை அருப்புக்கோட்டையில் திகக்காரர்கள் ஏற்பாடு செய்தால் பெரிய விசயம். இந்த நிலையில், அண்ணியும் உயிருடன் இல்லாமல், ஊரில் பொழுதைக் கழிப்பது அவருக்கு சிரமாமாக இருந்தது. எனவேதான், சென்னைக்குப் புறப்பட்டு வந்து என்னோடு ரமேஷ் வீட்டில் தங்கினார். ஆனால், அவரால் அங்கு சௌரியமாக இருக்க முடியவில்லை. திருவல்லிக்கேணி மேன்சனுக்கு மாறிவிட்டார்.
6
ஆஸ்பத்திரியில் படுத்திருந்த அண்ணனைப் பார்ப்பதற்கு நிறைய பெரியாரிஸ்ட்டுகள் வந்து போனார்கள். நான் மிகவும் ரசித்துக் கேட்கும் பேச்சாளர்களான சுப வீரபாண்டியனும், அருள்மொழியும்கூட வந்திருந்தார்கள். எல்லாருமே, இரத்தினம் அண்ணாவை இனி தனியே இருப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என்றே வலியுறுத்தினார்கள். தனது அப்பாவை மலேசியாவிற்கு கூட்டிச் சென்றுவிடுவதாகவும், இன்னும் இருபது நாட்களில் ஊருக்கு வந்துவிடுவதாகவும் சொன்னாள் அறிவுக்கொடி. அதுவரை தனது வீட்டிலேயெ பெரியப்பா தங்க வேண்டும் என தீர்கமாக ரமேஷ் முடிவெடுத்துவிட்டான்.
அண்ணின் பொருட்களை எல்லாம் எடுப்பதற்காக ஆட்களைக் கூட்டிக்கொண்டு நானும், ரமேஷும் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். அவரின் அறையெங்கும் புத்தகங்களும், படித்துக் கசக்கப்பட்ட நாளிதழ்களுமாய் இருந்தன.
அறையின் சுவற்றில் இரண்டு பெரிய படங்கள் மாட்டப்பட்டிருப்பதையும் கவனித்தேன்.
அவற்றிலொன்று, இரத்தினம் அண்ணனும் பிரேமா அண்ணியும் பெரியாருடன் அவரது திருச்சி வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
மற்றொன்று, எங்களது அப்பா சொக்கலிங்க செட்டியார் காந்தியுடன் எடுத்துக் கொண்ட படம்.
ராமசந்திரன் அண்ணன் தொழில் நஷ்டமடைந்து, கடையை விற்ற போது இந்த படத்தை வீட்டு பரணிலே போட்டு வைத்தார். எப்படி, எப்போது இரத்தினம் அண்ணனின் கைகளுக்கு இப்படம் கிடைத்தது எனத் தெரியவில்லை. அண்ணனுக்கு முழிப்பு வந்ததும் அதை விசாரிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். கூடவே காந்தி படத்தை ஏன் மாட்டியிருக்கிறார் என்றும் கேட்க வேண்டும். அதற்கான பதில் எனக்குத் தெரியும்தான். இருந்தாலும், எங்களின் பழைய வாழ்க்கையை அண்ணனோடு பேசி நினைவூட்டிக் கொள்வதற்கு அக்கேள்வியொரு வாய்ப்பு. அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து, சுவற்றில் இருந்து இரண்டு படங்களையும் மீண்டுமொரு முறை பார்த்துவிட்டு, சற்று கண்ணயர்ந்தேன்.