
பெரிய்ய்ய்ய சாண்டில்யர்
ஒவ்வொரு கண்ணாடி சிம்னியுள்ளும் காலையிலேயே ஏற்றி வைத்த தீபஒளி ஆரஞ்சு குச்சி ஐஸை செருகி வைத்த மாதிரி ஜில்லென்று பளிங்கு தரையிலும், சுற்றுச்சுவரிலும் சிவப்பு ரிப்பனை கொத்தாக பறக்கவிட்ட மாதிரி பாவியிருந்தது. கண்ணாடி வளையல்கள் கும்பலாய் குலுங்குகிறதைப்போல சிலீர் சிலீரென்று காற்றில் சப்தித்தன அதன் ஜாலர்கள்.
மொத்தத்தில் இந்த விளக்கைப் பார்கிறபோதெல்லாம் திருவிழாவில் கடைத்தெருவிற்குள் நுழைந்த சிறுமியாக மாறி “ஆ….” – என்று வாயைப் பிளந்துகொண்டு நின்றுவிடுகிறாள் மாலினி.
விருதாம்பாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. பெரிய வீட்டு மருமகள். மெத்தப் படித்திருந்தும் என்ன பிரயோசனம்? நாயக்கர் ஐயா கூப்பிட்டக் குரலுக்கு பதறி விடுகிறாள். அவளைச் சுற்றி ஒரு மாய எல்லைக்கோடு இருப்பதாகப் பட்டது மாலினிக்கு. அதை ஐயா போட்டாரா அல்லது அவளே போட்டுக் கொண்டாளா தெரியவில்லை.
பள்ளி ஆண்டு இறுதி விடுமுறை வருகிற மார்ச் மாதத்தில்தான் மாலினியின் பிறந்தநாளும் சேர்ந்தே வருமென்று விருதாம்பாவுக்குத் தெரியும். விடுமுறையில் அவ்வப்போது வீட்டுக்கு வரச் சொல்லி சின்னசின்ன வேலைகளை வாங்கிக்கொண்டு, கூலிப்பணம், புதுத் துணிமணி, இனிப்பு, என்று கட்டு செட்டாக கவனித்து அனுப்புவாள். மாலினியின் மீது விருதாவுக்கு தனி பிரியம் இருந்தது. மாலினியின் வம்சம் மூன்று தலைமுறைகளாக அந்த வீட்டில் வேலை செய்கிறது.
மாலினியின் அப்பா அம்மாவை விட்டு வேறொருத்தியுடன் சென்றுவிட்டார். அம்மா மாலினிக்காக விட்டுச்சென்றவை சொல்பேச்சு கேக்காத ஒரு தையல் எந்திரம், பழைய பாடல்கள் குறிப்பாக”நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா”…என்னும் அம்மாவுக்குப் பிடித்த வாணிஸ்ரீ பாடல் ஒலிக்கிறபோது மட்டும் கரகரப்பை குறைத்துக்கொள்கிற ஒரு வானொலிப் பெட்டி, அம்மா சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்ற முடியாத நிலை வந்த போது செகண்ட் ஹாண்டில் வாங்கிய ஒரு ஸ்கூட்டர், அப்புறம் எப்போதும் திட்டிக்கொண்டிருக்கிற இந்தப் பாட்டி. அவ்வளவுதான். இருக்கிற வீடு கோட்டை மலைக்கோயிலுக்கு பாத்தியதை. குத்தகையென்று ஆண்டுக்கொரு முறை சொற்பமாய் ஒரு தொகை கட்டிவிட்டால் போதும்.
“மாலி, இன்னைக்கு உனக்கு என்ன வேலைன்னா …..கூடத்து அலமாரியில்
இருக்கிற கலைப்பொருட்களை சுத்தமா துடைச்சி அதனதன் இடத்திலே அடுக்கிடனும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு நாட்டிலிருந்து தருவிச்ச பழங்கால பொருட்கள்னு உனக்குத் தெரியும்ல.. விலைமதிப்பில்லாதது ஜாக்கிரதை. அப்புறம் பித்தளை சாமான்களில் சிலதை புளி பீதாம்பரி போட்டு விலக்கணும். இதோ இந்த உருப்படிகளை விபூதி போட்டு துடைச்சா போதும் .. முடிச்சதும் சொல்லு… கடைசியா ஒரு வேலை பாக்கி இருக்கு அத அப்புறம் சொல்றேன்”… என்று கூறிவிட்டு அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
மாலினி வேலைகளை முடித்துவிட்டு “அப்புறம்?” என்று கேட்டுக்கொண்டே எதிரில் போய் நின்றாள்.
விருதா அவளை ஐயாவுடைய பர்சனல் அறைக்குள் முதன்முறையாக அழைத்துச் சென்றாள். யாரையும் அந்த அறைக்குள் இதுவரை அனுமதித்ததில்லை. விருதாவுக்கு மாலி மீது அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அங்கே பெரிய மேஜை மீதிருந்த கண்ணாடிப் பேழையை திறந்து காட்டினாள். உள்ளே ஆறு விரற்கடை உயரத்தில் நின்ற கோலத்தில் ஒரு பெண்தெய்வ விக்ரஹம் களிம்பேறியிருந்தது.
“இதை சும்மா விபூதிப் போட்டு துடைச்சா போதும். எனக்கு சைனஸ் அலர்ஜி அதிகமாயிட்டு. விபூதிய தொட்டாலே வீசிங் வந்துடுது அதனால ஐயா வரதுகுள்ள இதையும் நீயே துடைச்சுடு,”…என்று கையில் வெல்வெட் துணியைக் கொடுத்த போது அதை வாங்கவும் மறந்து வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.
சிறுவயதில் மாலினி கதை சொல்லச் சொல்லி பாட்டியை நச்சரிப்பது வழக்கம். பாட்டியும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி வைப்பாள். அன்று பாட்டியின் போறாத வேளை, தூக்க கலக்கத்தில் கதை சொல்கிறேன் என்று உண்மையை உளறினாள்.
பாட்டியுடைய அம்மா சிறு பெண்ணாக இருக்கையில பெரிய வீட்டு கூடத்தை மெழுகிக் கொண்டிருந்த போது ஒரு காட்சியைக் கண்டதாக பின்னாளில் தன் மகளிடம் (மாலினி பாட்டி) சொல்லியிருக்கிறாள். நாயக்கர் ஐயாவுடைய முப்பாட்டனும் பாட்டனும் ரகஸியமாக ஒரு அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே பழைய மரப்பெட்டியிலிருந்து ஒரு விக்ரஹத்தை எடுத்து புதிதான ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியில் வைத்து பூட்டியதாகவும், அதை எதேச்சையாக சன்னல் கதவிடுக்கு வழியே பார்த்ததாகவும் சொன்னதைப் பாட்டி மாலியிடம் உளறி வைத்தாள்.
” இதை யாரிட்டயும் சொல்லக்கூடாது”… என்று மிரட்டியுமிருந்தாள்.
“இந்த விக்ரஹம் தானா அது”…
அப்போ பாட்டி சொன்னது உண்மைதானா ” வியந்து பார்த்தாள்.
“தங்கமாயிருக்குமோ”… நினைத்துக்கொண்டாள்.
“இது தங்கமில்லை. பஞ்சலோகத்தில செஞ்சது. இது போட்டிருக்கிற நகைகள்தான் தங்கம்”…
“பாத்தியா…. இந்த வைரக்கல் மூக்குத்தியை…நெத்திச்சுட்டி, ஜடை பில்லை, குஞ்சரமெல்லாம் தங்க கம்பியில முத்து வெச்சுக் கட்டினது அழகா இருக்குல்ல… இதோ கைல இருக்கிற கடா வளை ஆர்டர் குடுத்து செஞ்சது”….
விருதா முகத்தில் சன்னமான பெருமிதம்.
“பாப்பா மட்டும் நல்லபடியா பிறந்ருந்திருந்தா அவளுக்கும் பாத்து பாத்து செஞ்சிருப்பேன்.”.
முகத்தில் பெருமிதம் மறைந்து வேதனை சூழ்ந்தது. பாப்பாவுக்கு கிட்டதட்ட மாலினி வயதுதான்.
“பாப்பா எப்படி இருக்காங்கம்மா?” கேட்டாள் மாலி. (இனி மாவினியை மாலி என்றும் விருதாம்பாவை விருதா என்றும் கூப்பிடலாம்).
“நல்லா இருக்கான்னு சொல்லதான் ஆசை. முன்ன மருந்து குடுத்தா கொஞ்ச நேரமாவது தூங்குவா.. இப்ப ரெண்டு நாளானாலும் சுத்தமா கண்ண மூடறது கூட இல்ல. தலை குளிக்கிற நாள் வரும் போது மூர்க்கம் கூடிடுது. ஆள் போட்டு சமாளிச்சுட்டு இருக்கோம். எப்ப யாருக்கு செஞ்ச பாவமோ இப்படி அனுபவிக்கனும்னு எழுதியிருக்கு’..
விருதாவை பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது மாலிக்கு.
வேலை முடிந்ததும் மாலியை ஹாலுக்கு அனுப்பிவிட்டு கண்ணாடிப் பெட்டியைப் பூட்டினாள்.
வேறொரு அறைக்குள் நுழைந்தாள்.
பீரோ திறந்து மூடும் சத்தம் கேட்டது. கையில் ஒரு தட்டில் புதுத்துணி பூ, பழம், கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.
‘பாப்பாவுக்காக எடுத்த பட்டுப் பாவாடை தாவணி. இனி இது அவளுக்கு பிரயோசனப்படாது”. மிளகாய்ப் பழ நிறத்தில் பட்டு மிளிர்ந்தது.
“உனக்குதான் டெய்லரிங் தெரியுமே. நல்ல டிசைனா பிளவுஸ் தெச்சி பிறந்தநாளன்னைக்கு போட்டுட்டு வந்து காட்டணும் சரியா”… என்று கன்னத்தில் தட்டினாள்.
தலையாட்டினாள் மாலி.
நடுராத்திரியிருக்கும். மாலி ஆழமாய் தூங்கிக் கொண்டிருந்தாள் திடீரென்று அறை ஏகத்துக்கு குளிர்ந்தது. எழுந்து சன்னலை சாற்ற
முற்பட்டபோது தூரத்தில் வெள்ளி மலையும் சுற்றியிருக்கிற காடும் கறுப்பாய் தெரிகிறபோதே அந்தக் காட்டின் எல்லையில் நின்றிருந்தாள்.
திக்கென்றிருந்தது. ஒன்றுமே புரியவில்லை. காட்டின் எல்லை ஆரம்பத்தில் இருக்கிற மகிழ மரத்திலிருந்து வருகிற வாசனை லயிப்பில் ஆழ்த்தியது அவளை.
ஊர்காரர்கள் ஒன்றிரண்டு பேர் இந்தப் பூக்களைப் பொறுக்க இங்கே பகலில் வருவதுண்டு. மகிழம்பூவை பாலிலிட்டு காய்ச்சி குடித்தால் ஆண்மை பெருகும் என்றும், தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தடவி வர முடி அடர்த்தியாய் வளரும் என்றும் கிராமத்தில் நம்பிக்கையிருக்கிறது.
அவளும் சிறுவயதில் பாட்டியுடன் வந்து பூக்களைப் பொறுக்கியிருக்கிறாள். நிறத்தாலும் நடுவில் இருக்கிற ஓட்டையாலும் பழங்கால காலனாவைப் போல இருப்பதாக பாட்டி சொல்வாள். அந்த பூக்களை கட்ட முடியாது. நூலில் கோர்த்து சரமாக்கி தலையில் வைத்துக் கொள்வாள் பொழுதுக்கும் அது வாசனையாக இருக்கும்.
வெகுகாலத்திற்குப் பிறகு இப்போது இந்த மரத்துக்கு கீழே வந்து நிற்கிறாள். பெளர்ணமி ஏகாந்தம்.. மின்மினி பூச்சிகள் இலைகளில் அமர்ந்தும் பறந்தும் ஒளிர்ந்தன. மின்மினிகளை பார்த்ததும் பயம் கொஞ்சம் விலகியது. கையை வீசி ஐந்தாறு மின்மினிகளைப் பிடித்தாள்.
அவற்றை துப்பட்டா நுனியில் வைத்து முடிந்து கொண்டாள்.
அப்போதுதான் அதை கவனித்தாள். சலங்கை சப்தம். அரண்டு விட்டாள் மாலி.
எங்கிருந்து வருகிறது என்று திகிலோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். இருபதடி தூரத்தில் காட்டுக்குள் யாரோ ஒருத்தி நின்று கொண்டிருக்கிறாள். அவளுடைய முதுகுப்புறம் தெரிகிறது. புகை மூட்டத்தில் அந்த உருவம் பாடிக்கொண்டே முன்னேறுகிறது.
“நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வாநிலா…இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா”…
இது கனவா நிஜமா ஒன்றுமே புரியவில்லை மாலிக்கு..
இப்போது அவள் திரும்பி மாலியைப் பார்த்து சிரித்தாள். ‘இங்க வா’ என்று சைகை செய்தாள்.
பயத்தின் உச்சத்திலிருந்தாள் மாலி.
ஆனால் ஈர்க்க்கிறாள் அவள்.
மெல்ல நடந்து அவளருகில் நின்றாள்.
வாணிஸ்ரீயையும், சந்ரமுகியையும் கலந்த முகம்.மிக அழகாக வசீகரமாக சிரித்தாள்.
“இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேனே… எங்கே பார்த்தேன்”… குழம்பினாள் மாலி.
அவள் கொஞ்சமும் தயங்காமல் மாலியின் கையை பிடித்து இழுத்தாள் “என் கூடவா… நான் உனக்கு ஒன்று காட்டவேண்டும்.”
அழகான சங்கத் தமிழில் பேசினாள். நடை, உடை, அலங்காரங்கள் அந்த காலக்கட்டத்தை நினைவுறுத்துகிறது. அவள் அரசிளங்குமரி போல தோன்றினாள்.
“அக்கா, நீங்கயாரு?”.. கேட்டாள் மாலி.
“என் பெயர் ‘நேர் ஒருவரில்லா வல்லி’. என் அகமுடையானின் நாமம் ‘சந்த்ரத்துண்ட பெருமான்’ என்றாள்.
நாங்கள் வெகுகாலம் முன்பு மேலே தெரிகிறதே அந்த வெள்ளிமலைக் கோயிலில்தான் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தோம்”… என்றாள்.
அவள் அழைத்துச் சென்றது காட்டிலிருந்து மேடாக மலைப்பாதை ஆரம்பிக்கிற இடத்தில் சிதிலமான கல் மண்டபமும் மலை மேலே சென்றால் உச்சியில் கோயிலும் இருக்கிற இடத்திற்கு…..
முன்பு கோயிலுக்கு போகிற ஜனங்கள் கட்டுசோறு கட்டிக்கொண்டு இந்த பாதை வழியாக போய் வர இருந்தார்கள். மலைக்கோயிலுக்குப் போக ஊரிலிருந்தே நேரிடையாக ஒரு பேருந்து வழித்தடம் அமைந்துவிட்டதால்
இப்போதெல்லாம் இந்த வழியாக யாரும் வருவதில்லை. ஜனநடமாட்டம் இல்லாததால் பாதையில் காடு மண்டிவிட்டது.
அவள் “நிற்க அவகாசமில்லை வா”.. என்றாள்.
விறுவிறுவென்று செயல்பட்டாள். தன் விரல் மோதிரத்தில் பதித்திருந்த கோமேதக் கல்லை நிலவுக்கு நேராய் வைத்து மண்டபச் சுவற்றில் காட்டினாள். மெல்லிய டார்ச்லைட் வெளிச்சம்போல ஒளி படர்ந்தது.
கல் மண்டப சுவற்றின் மீது படர்ந்திருந்த காட்டுக் கொடிகளை விலக்கினாள். அங்கே கல்லில் செதுக்கப்பட்ட திருகாணி போன்ற நீட்சியிருந்தது. அதை பிடித்து சிரமப்பட்டு திருகினாள். சுவரிலிருந்து ஒரு குறுகலான குகைப் பாதை தென்பட்டது. இப்போது மோதிரத்தை குகை வாயிலில் காட்டினாள். மஞ்சளாய் குகையின் உட்புறம் தெரிந்தது.
“இதோ பார்த்தாயா இதுதான் மலைக்கோயிலுக்கு செல்ல சுரங்கப் பாதை. இதில் சென்றால் ஒற்றர்கள் பற்றிய பயமில்லாமல் சுலபமாய் மேலே போய்விடலாம். இதன் வழியாக நான் போக நீதான் உதவ வேண்டும் . வெளிப்புறமாக சென்றால் எனக்கு ஆபத்துக் காத்திருக்கிறது.. குகைக்குள் தனியாகப் போய்விடுவேன். ஆனால், வழியில் பாறைகள் உருண்டு வழியை அடைத்திருக்கின்றன. நீயும் கூட வந்தால் சுலபமாக பாறைகளை அப்புறப்படுத்தி விடலாம். மேலே சென்றதும் அந்தப் பக்கம் இருக்கிற சாலை வழியாக இறங்கி நீ வீட்டிற்கு போய் விடலாம்” என்றாள் அவள்.
“அக்கா.. எ..எ…என்ன சொல்றீங்க. எனக்கு பயமா ருக்கு. “நீங்க ஊருக்குள்ள வந்து பஸ் ரூட் வழியாவே மேலே போயிடலாமே. எதுக்கு குகைவழி…? அதுவுமில்லாம எனக்கு மூச்சுப்பிரச்சினை இருக்கு. ஒரு நெருக்கமான இடத்துக்குள்ள போற மாதிரி கனவு கண்டாக் கூட எனக்கு மூச்சுதிணறல் வந்திடும். என்னையப் போய்….” என்று தயங்கி கூறினாள் மாலி.
“பெண்ணே, ஊருக்குள் என்னை ஒற்றர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் எனக்கென்று எல்லைக்கோடு இருக்கிறது. அதை என்னால் தாண்ட முடியாது. இதோ இந்தக் கல் மண்டபம் வரைதான் என் நடமாட்டம்”. என்றாள்.
விருதாம்பா முதல் இதோ இந்த அரசகுமாரி வரை எல்லாப் பெண்களுக்குமே ஒரு மாய எல்லைக்கோடு இருக்கிறது போலும்.
திடீரென குளம்படி சப்தம் கேட்கவும் பதறி மாலினியை இழுத்து அணைத்துக் கொண்டு ஒரு தூணின் பின்னால் ஒளிந்துகொண்டாள் வல்லி. ஒரு தூணில் இருவர் மறைய முடியாததால் இறுக்கி அணைத்திருந்தாள். அவள் உயரமாயிருந்ததால் மாலினியின் முகம் சரியாக அவள் மார்பில் அழுந்தியிருந்தது.
சில்லிட்டது கன்னம்..பெரிய குவிந்த நாய்குடையின் சருமத்தை விரலில் தடவும்போது சில்லென்று வழுவழுப்பு இருக்குமே அப்படியான ஸ்பரிசமது.
துளசியையும் பச்சைக்கற்பூரத்தையும் இடித்து நீரில் கலந்து தீர்த்தமென்று கோயில்களில் தருவார்களே அப்படியொரு வாசம் கமழ்ந்தது அவளுடைய அக்குள்களில்.
குளம்படி சப்தம் தேய்ந்து மறைந்தது.
“இவர்கள்தாம் என்னை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றாள் வேதனையோடு.
“என் ஐயனை பிரிந்து வெகுகாலம் ஓடிவிட்டது. எப்படியாவது நான் அவரை சேர்ந்துவிட வேண்டும்.. குறைந்தபட்சம் அவர் முகத்தைப் பார்த்தால்கூட போதும்…அமைதியும் சத்தும் கூடும் மனதிற்கு” என்றாள்.
“அக்கா, என்னால் அது முடியுமா? வேண்டுமானால் ஊருக்குள் சென்று
ஆட்களை அழைத்துவரட்டுமா? நாயக்கர் ஐயாவிடம் சொன்னால் போதும்” என்றாள் மாலினி.
“ஐயோ! என்னுடை இந்த நிலைக்கு அவர் குடும்பமும் ஒரு காரணம்” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும்போதே மறுபடி குளம்படி சத்தம் கேட்கவும் மாலினி விருட்டென்று ஒரு தூணுக்கு பின்னால் ஓடி ஒளிந்தாள். நேர் ஒருவரில்லா வல்லி அப்படியே காற்றில் கரைந்தாள்.
மாலினியால் கூச்சலிட்டு கத்த முடியாதபடி தொண்டை அடைத்துக் கொண்டது. எவ்வளவு முயன்றும் நாக்கை அசைக்க கூட முடியாதபடி கனமாகிவிட்டது. கால்களோ மரத்துப் போய் நிலத்தோடு ஒட்டிக்கொண்டது. ஓட முயன்றாள் முடியவில்லை. குனிந்து பார்த்தபோது அட்டைபூச்சிகள் கால்களில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சு கொண்டிருந்தன.
மாலினி “வீல்”-என்று அலறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பொழுது நன்றாக விடிந்துவிட்டிருந்தது.
‘இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் வெறும் கனவா…?’ கொஞ்சம் நிம்மதியாயிருந்தது.
எதிரில் பாட்டி விளக்குமாறோடு நின்றிருந்தாள்.
“ஆமாம்லே.. கனாதான். தலைச்சன்பிள்ளை.. வண்டில பெட்ரோல் மிச்சம் பண்றேன்னு குறுக்குவழியில போனா… அது மயானபூமி…பயந்திருப்பே… அதான் கனாவில வந்து மிரட்டுது தீயது….. விளக்குமாறால உச்சந்தலைல
சப் சப்னு அடிச்சா எல்லாம் சரியாயிடும்..”. என்று பிணாத்திக்கொண்டே வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
மாலினிக்கு உடம்பெல்லாம் அசதியாயிருந்தது. இங்கிருந்து மலைக்காட்டிற்கு நடந்துபோய் நடந்துவந்தால் எப்படி கால்கள் வலிக்குமோ அப்படி வலி தெறித்தது. குளிக்காமலும், சாப்பிடாமலும் அப்படியே படுத்திருந்தாள்.
கனவுதான்… ஆனால் இப்படியொரு தொடர்ச்சியான பெருங்கனவு இதுவரை கண்டதில்லை.. அவள் யாராயிருக்கும்… விருதா குடும்பமும் ஒரு காரணம் என்றாளே?
ஆங்…. கண்டுபிடித்துவிட்டேன்… நேற்று பெரிய வீட்டில் பார்த்தேனே சிலையாக.. அவளேதான் கனவில் வந்தவள்
மலைக்கோயிலிலிருந்து சிலையைக் கடத்தியிருப்பார்கள் போலும். அது சில கைமாறி நாயக்கர் ஐயாவுடைய தாத்தா காலத்தில் அவர்கள் வீட்டில்
மறைத்து வைத்திருந்து. இப்போது ஐயா காலத்தில் ஷோ கேஸில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
நேற்று அவள் என்னைக் கவனித்திருக்கிறாள். என் மீது எப்படியோ வந்த சிறு நம்பிக்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கனவில் வந்து உதவி கேட்கிறாள்.
ஆனால், பதினாறு வயது சின்னப்பெண் என்னால் எப்படி அவளுக்கு உதவ முடியும் என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தாள். பிரமை பிடித்தது போலிருந்தது.
இரண்டாம் நாள் நடு இரவில் வல்லியை எதிர்ப்பார்த்து கல்மண்டபம் சென்றாள் மாலி.
அங்கே சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். மாலிக்கு இப்போது சுத்தமாய் பயமில்லை. சிறுமிக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். “நேத்து கனவில குமரியா வந்தே..நான் அக்கான்னு கூப்பிட்டேன்.. இன்னைக்கு எட்டு வயசு பொண்ணா வந்து என்னை அக்கான்னு கூப்பிடனும் அதானே….?” என்றாள் மாலி.
சிரித்தாள் வல்லி.
“நேற்று நடந்தது கனவல்ல உண்மை”…என்றாள் வல்லி..
மாலி நம்பவில்லை என்பது முகத்தில் தெரிந்தது..
வல்லி மாலியுடைய துப்பட்டாவை பிடித்து அதன் நுனியை காண்பித்தாள்.
“பார்த்தாயா நேற்று நீ பிடித்து முடிந்து வைத்த மின்மினி பூச்சிகள்…”!” என்றபடி முடிச்சை அவிழ்த்தாள்… பூச்சிகள் ஒளிராமல் மயங்கிய நிலையில் கவிழ்ந்திருந்தன…
வல்லி விரலால் தொட்டதும் புத்துணர்வுடன் நிமிர்ந்து பச்சையாக மின்னிக்கொண்டு பறந்தன…
“இப்போது நம்புகிறாயா…? எனக்கு உதவ முடியுமா தயை கூர்ந்து.?” பார்வையில் கெஞ்சினாள்.
குளம்படி சப்தம் கேட்கவும் அப்படியே மறைந்தாள்.
மாலி திடுக்கிட்டு எழுந்து பார்த்தாள். வீட்டில்தான் இருக்கிறோம் என்று நிம்மதியானாள். விடிந்து விட்டிருந்தது.
பாட்டி புழக்கடை அடுப்பில் ஒருபக்கம் வெந்நீரும், ஒருபக்கம் தேநீரும் வைத்திருந்தாள்.
மாலி குளித்துவிட்டு வந்தாள். வெகுநேரம் தேநீரை கையில் வைத்துக் கொண்டு யோசித்தாள். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
மாலி தனக்கு விருதா கொடுத்த புது பட்டுப் பாவாடை தாவணியையும், ஏற்கனவே வீட்டிலிருந்த பொருத்தமான ரவிக்கையையும் உடுத்திக் கொண்டாள்.
வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
மெய்ன் ரோடிற்கு வந்து நேராய் மலைக்கோயிலுக்கு போகிற சாலையைப் பிடித்தாள்.
கோயிலுக்குள் போகும்போது அர்ச்சகர் காலை நேர பூசையை முடித்துவிட்டு தூணில் சாய்ந்தபடி அலைபேசிக் காணொலியில் லயித்திருந்தார்.
கருவறை முன்னால் சென்றதும் உள்ளே மூர்த்தத்தைப் பார்த்தாள். சந்த்ரத்துண்ட பெருமான். பக்கத்தில் யாரது… அச்சு அசல் வல்லி போலவே இருக்கிற சிலை… கடைசியில் முட்டி மோதி வந்து சேர்ந்துவிட்டாளா? அல்லது அவளைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலியா?… போலி தான்.
நேர் ஒருவரில்லா வல்லி….. நாமமே எவ்வளவு பெரிய கதை சொல்கிறது. தனக்கு ஒருவரும் நிகரில்லாதவள் வீற்றிருக்கவேண்டிய இடத்தில் போலியாக ஒருத்தி இருக்கிறாள். விதியின் விளையாட்டே விளையாட்டு…!
சுற்றும் முற்றும் பார்த்தாள். கோயில் வெறிச்சோடி”ஹோ”-வென்றிருந்தது…
கைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்து கேமிராவை ஆன் செய்தாள்…
பெருமாளையும், வல்லியையும் படமும்,. காணொலியும் எடுத்தாள். அலைபேசியை கைப்பையுள் மறைத்து வைத்துக்கொண்டு கோயிலிலிருந்து வெளியேறினாள்..
நேரே பெரிய வீட்டிற்கு போனாள். பாட்டி முன் தோட்டத்தில் மண்ணைக் கொத்திக்கொண்டிருந்தாள்.
மாலியைக் கண்டதில் விருதாவுக்கு உண்மையிலேயே மிகுந்த சந்தோஷமிருந்தது.
“வா”- என்று உள்ளே அழைத்து போனாள்.
“ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா ” என்றபடி குனிந்து விருதா காலைத் தொட்டாள்.
“ஓ இன்னைக்கு உனக்கு பிறந்தநாளில்ல….?
“நீ நல்லாயிருப்பே,” – என்றாள் விருதா.
“இந்த புது டிரஸ்ல உங்க கூட ஒரு செல்பி எடுத்துக்கனும்மா”….என்றாள்.
“அதுக்கென்ன எடுத்துட்டா போச்சு” – என்றபடி தயாரானாள்.
“இங்க க்ளாரடிக்குது. நாம ஐயாவோட அறைல எடுக்கலாமா அங்க லைட்டிங் சரியா இருக்கும்” என்று அப்பாவியாக கேட்டாள் மாலி.
முதலில் தயங்கியவள் பிறகு, “பிறந்தநாளும் அதுவுமா ஆசப்படற. சரி வா” என்று அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.
” என் போனில் கேமிரா சரியா வேல செய்யமாட்டேங்குது” முகம் தெளிவா தெரியலேம்மா”… என்றாள் சலிப்பாய்.
“சரி இரு என்னோட ஐ போனை கொண்டுவரேன்”…என்று சொல்லிக்கொண்டே ரூமுக்குள் போனாள் விருதா.
தான் நினைத்து வந்ததுபோலவே எல்லாம் நடக்கிறது …இதுதான் சமயம் என்று மாலி தன் அலைபேசியில் எடுத்த சந்த்ரத்துண்ட பெருமான் படங்களும் காணொலியும் வல்லியின் கண்களுக்கு நேராய் தெரிகிற மாதிரி கையில் பிடித்துக் காட்டினாள். சில வினாடிகளில் வீடியோ முடிவதற்கும், விருதா உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது..
பேருக்கு சில செல்பி படங்களை எடுத்துவிட்டு “என் போனுக்கு அனுப்பிடுறிங்களா.. ப்ளீஸ்……!” என்று கூறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
ஹப்பாடா… எவ்வளவு பெரிய பிரச்சினையை முடித்திருக்கிறேன். வல்லிக்கு அவளுடைய ஐயனின் முகத்தைக் காட்டிவிட்டோம். ஏதோ என்னால் முடிந்தது. முகத்தை பார்த்தால்கூட போதுமென்றாளே.. கண்டிப்பாய் சந்தோஷப்பட்டிருப்பாள். இனி கனவில் வந்து இம்சிக்க மாட்டாள் .மனதுக்கு ஆறுதலாயிருந்தது.
இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம்.
அன்றிரவு அழுகை சத்தம் பெரிதாக இருந்தது.
கல்மண்டபத்தை நெருங்கியபோது விதிர்த்து போனாள் மாலி.
“வல்லி அக்கா…. ஏன் அழறிங்க…நீங்க உங்க புருஷனை பாத்த சந்தோஷத்தில இருப்பிங்கன்னு நினைச்சு வந்தேன்.. ஒஹோ, எனக்குப் புரிஞ்சிடுச்சு.. உங்கள போலவே போலியான ஒருத்தி உங்க ஐயன் பக்கத்தில இருக்காளேன்னு அழறிங்க அதானே?.”..என்று கேட்டாள்.
“பெண்ணே மாலி.. நான் அழுவது அதற்காக அல்ல.. அங்கே இருப்பது எம்பெருமானில்ல…அந்த சிலையும் போலி என்பதை அறிந்ததால் வந்த வேதனையது”
“அப்படின்னா அவரையும் கடத்தி புட்டாங்களா பாவிகள்”
“ஆமாம்… அவரையும் கடந்திவிட்டார்கள் போல…”
இதெப்படி எனக்குத் தெரியாமல் போனது…..பாவம். எந்த கண்ணாடி அலமாரியில் காட்சி பொருளாக அடைபட்டிருக்கிறாரோ..?” என்ற போது
அவள் விழிகளில் நீர் மல்கிற்று.
“அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம். உங்களால் உருவம் மாற முடியுது. மறைய முடியுது. .அப்படின்னா உங்களால தப்பிக்கவும் முடியுமில்லையா.. அப்படியிருக்க என்னை வச்சு ஏன் இந்த விளையாட்ட விளையாடறீங்க… எனக்குப் புரியலக்கா.”
“இல்ல மாலி, உன்னாலதான் நானும் என் ஐயனும் கோயிலில் வந்துசேர வேண்டுமென்பது விதி”
“என்ன?”
“ஆமாம் மாலி..முழுக்கதையையும் சொல்கிறேன் கேள்”…
முன்பு கி.பி 655 லிருந்து கி.பி 850 வரை தஞ்சையை ஆண்ட குறுநில மன்னன் தஞ்சை நாயக்கன்.. அவன் காலத்தில் இந்த சந்த்ரத்துண்ட பெருமாள் கோயில் மிக பிரசித்திபெற்று விளங்கியது. இதே வெள்ளிமலையில் ஒரு நாள் நல்ல மழை இரவு. வானம் தன் கருத்த உடம்பை உடைத்துக்கொண்டு கண்பறிக்கும் பிரகாச மின்னலுடன் சேர்ந்த வலுவான இடியொன்று பொத்தென்று மலைக் காட்டுவாழையின் மீது விழுந்தது. மறுதினம் அங்கு புதிதாய் விழுந்த பள்ளத்தை அரசன் தன் குழாமோடு சென்று ஆராய்ந்தபோது பொன்னிறத்தில் ஒரு சாண் நீளத்தில் இரண்டு பொருட்கள் கிடைத்தன. அதை பத்திரப்படுத்தினான் அரசன். மற்ற ஊர்களில் பஞ்சமும், நோய்களும் வந்தபோதும் கூட இந்த தஞ்சையும், வெள்ளிமலையும் வளமையாகத் திகழ்ந்தது. நாட்டின் சுபிட்சத்திற்குக் காரணம் அந்த பொருட்கள்தான் என்று ஜோதிடன் கணித்தான். இரகஸியமாக அந்தப் பொருட்களைப் பற்றி மன்னன் ஆராய்ந்தான்.
அவை அபூர்வமான அலர்ட்டின் துகள்களாலும் பொன் துகள்களாலும் ஆன கன்னக்கோல்கள் என்றும், அவை நவரத்ன கற்களுக்கெல்லாம் அரசனாக விளங்குபவை என்றும், அவை இருக்கும் நிலத்தில் பசி, பிணி இருக்காது என்றும் கண்டுபிடித்தான். அந்தக் கோல்களை பஞ்சலோகத்தால் மூடி சந்த்ரத்துண்ட பெருமான் கோவிலில் உற்சவமூர்த்தங்களாக உருமாற்றி
வைத்து வழிபட்டான் தஞ்சை நாயக்கன்.
அதன் பிறகு வந்த ஜமீன் பரம்பரையில் திம்மப்பநாயக்கர் பரம்பரை வழித்தோன்றல்களாய் வந்தவர்கள்தான் விருதாவுடைய மாமனாரின் பாட்டனார் சத்தியரகுநாத நாயக்கரும், அவருடைய தங்கை சத்தியமாலாவும். இருவருக்கும் கலைப்பொருட்கள் மீது தீராத காதல்.. எந்த நாட்டில் அழகான கலைப்பொருட்கள் கிடைத்தாலும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கி கப்பலில் தொண்டி, முசிறி துறைமுகம் வழியாக கொண்டுவந்து அரங்கு வீட்டை அலங்கரிப்பார்கள்.. அந்த சாண்டில்யர் விளக்கை கூட சத்தியமாலா மிகுந்த ஆசையுடன் வரவழைத்து மாட்டியதுதான். சத்தியமாலாவுக்கு என்மீது மிகுந்த பக்தி. நாளடைவில் அந்த பக்தி சகோதர வாஞ்சையாக மாறியது. தினமும் வெள்ளிமலைக்கு வந்து எங்களை தரிசிப்பது வழக்கம்..
சத்தியரகுநாத நாயக்கருக்கு கலைப்பொருட்கள் சேகரிப்பதிலிருந்த ஆர்வம் ஒரு கட்டத்தில் வெறியாக மாறியது. அந்த நேரத்தில் சந்த்ரத்துண்ட பெருமானின் உற்சவமூர்த்திகள் அபூர்வ பொருட்களால் ஆனவை… மர்மங்கள் நிறைந்தவை என்று தெரிந்துகொண்டான். முதலில் வல்லி நாச்சியார் உற்சவரைப் போல போலியாக ஒரு சிலையை செய்து கருவறையில் வைத்துவிட்டு உண்மையான வல்லி மூர்த்தத்தை கோயிலிலிருந்து கடத்தி தன் வீட்டில் பதுக்கினான்.
இதை எப்படியோ தெரிந்துகொண்ட சத்தியமாலா தன் சகோதரனிடம் அது தவறென்று சுட்டிக்காட்டி திரும்ப சிலையை கோயில் சேர்த்து விடும்படி மன்றாடினாள். ஆனால், அந்த மூடன் கேட்கவில்லை..
ஒரு நாள் சத்தியமாலா அரசாங்கத்திற்கு மொத்த உண்மையையும் தெரிவித்து லிகிதம் எழுதினாள். அந்த லிகிதத்தைக் கைப்பற்றிய சத்தியரகுநாதன் தன் சகோதரியை இனி உயிருடன் விட்டு வைப்பதில்லை என தீர்மானித்தான்.
ஒரு நாள் சத்தியமாலா யாருக்கும் தெரியாமல் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு இந்த சுரங்கம் வழியாக கோயிலுக்கு போகும் வழியில் சத்தியரகுநாதன் வழிமறித்து சிலையை பறித்துக்கொண்டு இந்த குகைப் பாதையிலேயே பாறைகளை உருட்டி மூடி அவளை சமாதியாக்கினான். சத்தியமாலா சாகும் தருவாயில் எத்தனை முறை சத்தியரகுநாத நாயக்கனால் தான் கொல்லப்பட்டாலும் வல்லி மூர்த்தத்தை தன் கைகளாலேயே ஐயனிடம் சேர்ப்பிக்கும்வரை அடுத்தடுத்தப் பிறப்பெடுத்து வருவேனென்றும், சத்திய ரகுநாதனை பழி வாங்குவேனென்றும் சபதம் பூண்டாள்”.
“அந்த சத்தியமாலா நீதான். இப்பிறவியில் மாலியாக வந்திருக்கிறாய். சத்தியரகுநாதன் தான் இப்பிறவியில் விருதாவின் கணவன். எந்தப் பொருளுக்கு ஆசைப்பட்டு சிலையைக் கடத்தினானோ அதனாலேயே அவன் வம்சத்தில் பிணியோடு பிறந்தது குழந்தை. மனதின் அடியாழத்தில் புதைந்திருந்த என் மீதான உன் அதீத சகோதர வாஞ்சையால் காற்று வெளியில் அணுவின் மூலக்கூறுகளாக தவழ்ந்திருந்த என் சூட்சும உடலை ஈர்த்து நீதான் ஸ்தூலமாக்கினாய். அக்கா அக்கா என்று என்னை வாயாற அழைத்து இப்பிறவியில் உன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாய். நானும் உன்னை சகோதரியாக ஏற்றுக் குளிர்ந்தேன்.”
“ஓஹோ…புரியுதுக்கா.. Confirmation bias.. நாம ஒரு விஷயத்தை நம்பிட்டா
அது மாயையா இருந்தாலும் அதைத் தேடிப் பிடிச்சு மனசால உண்மையாக்கி அதோட வாழ்றது” என்றாள்.
“ஆமாம் மாலி.. அடுத்த ஜென்மத்தில் நீ விருதாவின் மீது அளவற்ற அன்புடனும் நாயக்கன் மீது கட்டுக்கடங்கா வன்மத்துடனும் அவர்களுக்கு
இரண்டாவது மகளாகப் பிறக்கப்போகிறாய். நீ பார்த்து பார்த்து சேகரித்த கலைப்பொருட்களுக்கு மத்தியில் இளவரசியைப் போல வளம் வரப் போகிறாய்,. சமயம் பார்த்து விக்ரஹத்தைக் கைப்பற்றி கோயிலில் சேர்க்கப் போவதும், எம்பெருமானின் மூர்த்தம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் போவது நீ தான். ஆசையும் பாசமும் கொட்டி வளர்த்த தன் மகளாலேயே தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து துடிதுடித்து அழுது பைத்தியமாகி இறக்கப்போகிறான் நாயக்கன்.
“அப்படியானால் கொஞ்சநாளில் நான் இறக்கப்போகிறேனா”? என்று மாலி திகைத்து நின்றாள். உடல் உதறியது.
“ஆம் பெண்ணே! நீ பெரிய வீட்டில் விருதாவின் அலைபேசியில் சுயபடம் எடுத்தாயல்லவா… அதை இன்றிரவு நாயக்கன் பார்த்து விடுவான்..விருதாவை விசாரிப்பான். அவனுடைய தனி அறையில் முதல் முறை நீ ஏதேச்சையாக போனதையே அவனால் பொறுக்க முடியாது. திட்டமிட்டு இரண்டாவது முறையும் அவன் அறையில் நுழைந்திருக்கிறாய். பின்னால் சிலை தெரியும்படி படம் எடுத்திருக்கிறாய். அவனுடைய குறுக்கு புத்தியை வைத்து கணக்குப் போடுவான். உன்னை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி உனக்கும் கடத்தல் உண்மைகள் தெரியும் என்பதை அறிந்துகொள்வான். அன்றிரவே உன்னையும் உன் பாட்டியையும் மலையிலிருந்து உன் வண்டியோடு சேர்த்து உருட்டிவிட்டுக் காணாப் பிணமாக்குவான். நீ இறப்பதற்கு பயப்படுவதைப் போல நடிப்பது லெளகீக மேற்பூச்சு…. உண்மையில் அந்த நாளுக்காக நீ காத்திருக்கிறாய்… இவை அனைத்தும் நீ திட்டமிட்டு நடத்தும் நாடகம். இந்த நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் நீ செதுக்குவது… இது என் விளையாட்டல்ல.. உன் விளையாட்டு மாலி… நீ தான் கதாநாயகி…
நானும் ஐயனும் துணைக் கதாபாத்திரங்கள் மாலி” என்று கூறிவிட்டு காற்றில் கரைந்தாள் வல்லி.
திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து விழித்த மாலினிக்கு உடம்பு நடுங்கியது. பாட்டியை திரும்பி பார்த்தாள். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். ஜன்னல் வழியாக வெள்ளிமலையைப் பார்த்தாள். மகுளி நீர்ப் போல் தெளிய ஆரம்பித்திருந்தது வானம். வத்திப் பெட்டியளவு தெரிந்தது கோயில். சாலையில் போவோர் பார்த்து வணங்கி கன்னத்தில் போட்டுக் கொள்ள மலையில் பெரிய பாறையில் பெரிய நாமம் வரையப்பட்டிருந்தது. அந்த பெரிய்ய்ய நாமத்தை பார்க்கும்போது மாலிக்கு நாயக்கனுடைய அகலமான நெற்றி ஞாபகத்திற்கு வந்து போனது.