இணைய இதழ் 117சிறுகதைகள்

குமால்! டணால்! – மஞ்சுளா சுவாமிநாதன்

சிறுகதை | வாசகசாலை

பத்மினிக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்தே தூக்கம் இல்லை. இரவெல்லாம் கூட ஏதேதோ விஷயங்கள் கனவும் நினைவுமாக வந்து தொல்லை செய்தது. ஒரு காரை ஓட்டுநர் ஒருவர் ஓட்டிக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் பத்மினியும் அவளது மனதைக் கவர்ந்த எழுத்தாளர் விசுவாமித்திரரும் இடுக்கிக் கொண்டு ஒரே சீட்டில் அமர்ந்திருக்க, பத்மினி அவர் தோளில் சாய்த்து தூங்க, அவளது எச்சில் வாய் வழியாக வழிந்து விசுவாமித்திரரின் தோளில் பட்டு அவர் கடுங்கோபம் கொண்டது போல அவளுக்கு அதிகாலை கனவு ஒன்று தாக்கியது. இதற்கு மேல் தூங்கினால் வேலைக்கு ஆகாது என்று விழித்துக் கொண்டாள் .

பத்மினியின் அப்பா பழம்பெரும் எழுத்தாளர் சந்திரா. சந்திரசேகரின் குறுகிய வடிவம்  அவரது புனை பெயர் சந்திரா. எழுத்தாளர் விசுவாமித்திரர் இரண்டு நாட்களுக்கு முன்னாடி அவளை அழைத்து, ‘அப்பாவைப் பற்றி எழுதப் போகிறேன். ஒரு நண்பர் மூலம் உங்கள் எண் கிடைத்தது. சனிக்கிழமை என் வீட்டிற்கு வந்து அவரது புத்தகங்களைத் தர முடியுமா?’ என்று கேட்டபோது , விசுவாமித்திரர் அவளுக்கு மித்திரன் ஆனார். சனிக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு சந்திப்பது என்று முடிவாயிற்று. ‘மித்திரன் தமிழ் பெயரில்லையே?’ என்று அதற்குள் அவள் மனம் அலைபாய்ந்தது. ‘அட சே, நம்ம என்ன கதைக்காகவா பெயர் வைக்கறோம்? நம்ம மனசுல அவர் பெயரை சுருக்கிக்கறோம். நம்ம மனசுக்குள்ள வந்து இது தமிழ் பெயர் இல்ல, சமஸ்க்ருத கலப்பு இருக்குன்னு யாராலையும் சொல்ல முடியாது’ என்று அவளது மனமே அவளை சமாதானம் செய்தது.

வாரப் பத்திரிகை ஒன்றில் மாதம் ஒரு பெரிய எழுத்தாளர் என்று நான்கு வாரங்கள் அவர்களது புத்தகங்கள், எழுதும் பாணி, சிந்தனை என்று மிக அருமையாக அலசுகிறார் மித்திரன் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அவள் மித்திரனின் தீவிர ரசிகை. அவரது புத்தகங்கள், பத்திரிகைக் கதைகள், கட்டுரைகள், முகநூல் பக்கம், இணையதளம், x பக்கம், இன்ஸ்டாகிராம் என்று எதையும் விட்டுவைக்கமாட்டாள். சந்திரா வீட்டில் வளர்ந்ததால் பத்மினிக்கு என்றுமே புத்தகங்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை. வாசிப்பு அவள் இரத்தத்தில் ஊறி இருந்தது. ஒவ்வொரு சமயம் அப்பாவின் சமகால எழுத்தாளர்கள் சிலரின் கையெழுத்துப் பிரதிகளைக் கூட படித்திருக்கிறாள். சந்திராவின் சமகால எழுத்தாளர்கள் பற்றிதான் இப்போது மித்திரன் கட்டுரை எழுதி வருகிறார்.

பத்மினியும் கூட எழுத்தாளர்தான். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்குச் சான்றாக சந்திரா வீட்டில் பிறந்தபடியாலேயே எழுத ஆரம்பித்தாள். தனது பதினைந்தாவது வயதில் அப்பாவிற்குத் தெரியாமல் திரைப்பட விமர்சனம் ஒன்று எழுதி, பிரசுரிமாகி, அந்த இதழின் ஆசிரியர் பாராட்டு கடிதமும், ஐம்பது ரூபாய் சன்மானமும் அனுப்பியபோது சந்திரா அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. என்னதான் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தாலும், சந்திராவால் முழுநேர எழுத்தாளராக ஆக முடியவில்லை. பெரிய குடும்பம், சிறிய வீடு, பிழைப்பிற்கு பகல் நேர வேலை என்று அல்லாடிக் கொண்டிருந்தார். இருந்தும் எழுதுவதை நிறுத்தவில்லை. நாடகங்களும் எழுதி வந்தார். ஒவ்வொரு சமயம் நண்பர்கள் போடும் நாடகத்தில் நடிக்கவும் செய்த்தார். அவரின் காலம் இப்படியே முடிந்துவிட, பத்மினியாலும் முழுநேர எழுத்தாளர் ஆக முடியவில்லை. சினிமாவிற்கும், தொலைகாட்சி நாடகங்களுக்கும் வசனம் எழுதித் தர ஆசைதான், ஆனால், வீட்டில் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது சாத்தியப் படவில்லை. மூன்று என்று சொன்னது அவளது கணவரையும் சேர்த்துத்தான்.

இப்போது குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். மூத்தவன் வெளியூரில் இருக்கிறான். இளையவன் படித்துக் கொண்டிருக்கிறான். பத்மினி திரை விமர்சனம் எழுதியதிலிருந்து நாற்பத்தி ஐந்து வருடங்களில் பத்து புத்தகங்கள் பிரசுரம் செய்துவிட்டாள். ஐந்து சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்பு, இரண்டு குறுநாவல்கள் மற்றும் ஒரு நாவல். சில புத்தகங்கள் தமிழ்நாடு நூலக ஆர்டர் பெற்று நூலகங்களில் இருக்கிறது. சில புத்தகங்கள் பிரதிகள் இல்லாமல் அல்லாடிய பொது இளையமகன் முகுந்தன் தயவால் அனைத்தையும் இணையத்தில் ஆவணம் செய்து எலக்ட்ரானிக் புத்தகங்களாக வைத்துவிட்டாள்.

என்னதான் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து , உயர் பதவிகள் வகித்து, ஓய்வு பெற்றிருந்தாலும் பத்மினிக்கு ‘தான் பேசப்படும் அளவிற்கு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆகவில்லையே!’ என்ற வருத்தம் இருந்தது. என்றுமே தன்னை ஒரு எழுத்தாளராக அடையாளம் காட்டிக்கொள்ளத்தான் ஆசைப்பட்டாள். பத்மினியின் மகன் முகுந்தன் அவ்வப்போது அசிமோ, எச்.ஜி.வெல்ஸ் போன்ற பன்னாட்டு எழுத்தாளர்களின் அறிவியல் புத்தகங்களை பத்மினிக்கு படிக்கக் கொடுப்பான். அவளிடம், ‘நீயும் தமிழ்ல இதெல்லாம் எழுது. அப்போதான் பிரபலம் அடைய முடியும்’ என்று கூறுவான். முகுந்தன் கூட சிறு வயதில் சில கதைகள் எழுத்தினான். இப்போது, ‘ஏ.ஐ எல்லா கதைகளையும் நம்மை விட அற்புதமாக எழுதுகிறது. பிற்காலத்தில் எழுத்துத் துறைக்கு வேலை இல்லை. நான் ஏ.ஐ படிக்கப் போகிறேன்’ என்று அதற்கு மாறிவிட்டான்.

சில ஆண்டுகளாக பத்மினி அதிகம் எழுதுவதில்லை. அவளுக்கு ஒரு தேக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்த சமயத்தில் படிப்பதில் அதிகம் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தாள். புதுப்புது எழுத்தாளர்களை தேடித் தேடி படித்தாள். ஆனால், ஒவ்வொரு சமயம் இன்பாக்ஸ் என்கிற பொது பயன்பாட்டு ஆங்கில வார்த்தையை கூட உள்பெட்டி என்று தமிழாக்கம் செய்து நவீன கதைகள் படித்தபோது அவளுக்கு குழப்பமாக இருந்தது. மல்டி வர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி, பிளாக் ஹோல் என்று என்றோ படித்த புனைவுக் கதைகளின் தாக்கத்தில் அதற்கு இணையான தமிழ் எழுத்துகளைக் கொண்டு அறிவியல், அமானுஷ்ய கதைகள் எழுதுவது வருங்கால தலைமுறைகளுக்கு புரியுமா என்று அவள் மனதில் கேள்வி எழுந்தது.

வீட்டில் பகுதி நேர தமிழ் டியூஷன் எடுக்கும் பத்மினிக்கு, சாதாரணமாக பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ் வார்த்தைகளை இந்த காலத்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது சிரமமாக இருக்கிறதே, யாருக்காக எழுத வேண்டும் என்ற ஆயாசம் ஏற்பட்டது. இதற்கு நடுவில் நவீனம் என்ற பெயரில் இதிகாசங்களை புரட்டிப்போட்டு இராவணனையும், இரணியனையும், கர்ணனையும் புகழ்ந்து, கிருஷ்ணரையும், ராமரையும் இகழ்ந்து எழுதும் பாணியை படித்தால் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. அதுவும் நாத்திகம் பேசும் அரசியல் ஆர்வலர்கள் இந்த அறிஞர்களின் எழுத்துகளை தேவைக்கேற்ப திரித்து மேற்கோள் காட்டுவது வேதனையை அளித்தது.

ஆனால், மித்திரனின் கதைகள் அவ்வாறு இல்லை. எல்லாவற்றிலும் ஒரு நடுநிலை அவரது கதைகளில் இருந்தது. அவர் ராவணனை புகழ்ந்து எழுதினால் கூட ராமரை இகழாமல் எழுதும் கலை அவருக்கு தெரிந்திருந்தது. சாதி ஒடுக்குமுறை பற்றி அவர் எழுதிய போது அதில் மனிதநேயம் மட்டுமே மிளிர்ந்தது. பிற சாதிகளை அவர் இகழ்ந்ததில்லை. நல்லவர்களாக இருப்பதும், தீயவர்களாக இருப்பதும் அவர்கள் மனதைப் பொறுத்து, சாதியைப் பொறுத்து இல்லை என்று தெளிவாக எழுதியிருந்தார். ஒருமுறை குடுகுடுப்பைக்காரர்களின் வரலாற்றை மித்திரன் நாவலாக எழுதியபோது, குடுகுடுப்பைக்காரர்களுடன் மூன்று மாதம் தங்கி, வாழ்ந்து அவர் எழுதியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தன்னால போக முடியாத இடங்களுக்குச் சென்று மித்திரன் அந்த நாவலை எழுதியதை நினைத்து புளகாங்கிதம் அடைந்தாள் பத்மினி. அவளுக்கு எழுத்து ரீதியில் மித்திரன் மீது எந்தப் பொறாமையும் இருக்கவில்லை. அளவு கடந்த மரியாதை தான் இருந்தது.

காலைச் சிற்றுண்டி முடித்து, மதிய உணவு சமைத்து, அப்பாவின் புத்தகங்களை எடுத்துவைத்த போது மணி பத்து. “இதை டன்சோ பண்ணினா போறாதா, அத்தனை தூரம் போகணுமா!” என்று கணவர் கேட்டதற்கு, ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ என்று பதில் கூற மனம் துடித்தது, அதனை அடக்கிக்கொண்டு கிளம்பினாள் பத்மினி. ஆட்டோவிலே போயிருக்கலாம் என்றாலும் இடுப்பு வலி காரணமாக டாக்சி ஒன்றை புக் செய்து மித்ரனின் வீட்டிற்கு புறப்பட்டாள்.

அவரது கதைகளும் கட்டுரைகளும் ஒன்று விடாமல் படித்திருந்தாலும் சமீபத்திய அவரது நேர்காணலை யூடியூபில் தவறவிட்டிருந்தாள் . அதனை ஹெட் ஃபோன் மாட்டி கேட்டுக் கொண்டே பயணித்தாள். “கதை என்பது போனோம், வந்தோம்னு இருக்கக்கூடாது, மனசைப் பிழியற மாதிரி அதுல சோகம் இருக்கணும். அதுலேர்ந்து ஒரு எழுச்சி, ஒரு மாற்றம் இருக்கணும். அதுதான் கதை.” என்று கதைக்கான சாராம்சத்தை அவர் கூறிய போது, ‘நம்ம எழுதற லட்சணத்திற்கு திருவான்மியூர் வாசகர் வட்டம் பரிசுதான் கிடைக்கும். சாகித்திய அகாடமியா கிடைக்கும்?’ என்று அலுத்துக் கொண்டாள். “இந்திய கிராமங்களில் வாழும் ஆதிவாசிகள் அவர்கள் வீட்டுச் சுவர்களில் வரையும் ஓவியங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதப் போறேன். அதற்காக நிறைய பயணம் செய்தேன். அவர்கள் வசிக்கும் இடத்துல எல்லாம் சாலைகளே இல்லை, நடந்தும், மாட்டு வண்டியிலும்தான் பயணிச்சேன். ஒவ்வொரு சமயம் பஸ்சுக்கு மேல சாமான்களோட பயணிச்சேன். அவங்க வாழற நிலைமையை பார்த்தா இந்த காலக்கட்டத்துல கூட அது போன்று மக்கள் வாழ்கிறார்களேன்னு கண்ணுல கண்ணீர் வருது. அவர்களது எளிமையான ஓவியங்களைத்தான் நம்ம எல்லாரும் வீட்டுல வாங்கி மாட்டணும். அது அவங்க வாழ்வாதாரத்துக்கு பெரிதும் உதவும்” என்று அவர் கூறியபோது, அரை மணி நேர பயணத்திற்கு இடுப்பு வலி காரணமாக டாக்சியில் பயணித்தது பத்மினிக்கு வெட்கமாக இருந்தது.

மித்திரனின் குடியிருப்பின் வாசலில் இறங்கியபோது, சாமானியர்களுக்கான எழுத்தாளர் வசிக்கும் குடியிருப்பு போல அது இருக்கவில்லை என்பதைக் கண்டு அதிசயித்தாள். அந்த குடியிருப்பின் பிரமாண்டத்தை உள்வாங்கிக் கொண்டு அவள் உள்ளே சென்ற போது, அவளைத் தாண்டி வேகமாக ஓர் கருப்பு நிற உயர் ரகக் கார் சென்றது. ஓட்டுநர் வண்டியை ஓட்ட, அதிலிருந்து இறங்கி கருப்பு சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்காமல் வேகமாக லிஃப்டை நோக்கி நடந்தார் மித்திரன். காலை கண்ட கனவு நினைவில் வர, சிரித்துக் கொண்டே லிஃப்டின் அருகில் நின்ற காவலரிடம், “ஏன்பா, இவர் நான் முதன் முதலில் சம்பாதிச்சு வாங்கின கார் ஆல்டோ. அதைத்தான் நான் ஓட்டுவேன்னு பத்திரிகைகளில் சொல்லி இருக்காரே, அது எங்கப்பா?” என்று பத்மினி கேட்ட போது, “அதை அவர் ஓட்டி நான் பார்த்ததில்லை மேடம். முதல்ல வாங்கின காரையா அவர் இன்னும் வெச்சுட்டு இருப்பார்?” என்று கேட்டுவிட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

மித்திரனின் வீட்டை விசாரித்து அழைப்பு மணியை அடித்தபோது, பன்னிரண்டு வயதை ஒத்த ஒடிசலான ஒரு சிறுமி கதவைத் திறந்தாள். அவளது தோற்றத்தை வைத்து அங்கே பணிபுரியும் பெண் என்று பத்மினி ஊகித்தாள். குழந்தை தொழிலாளர்கள் பணக்கார வீடுகளில் பணிபுரியும் போது நேரும் அவலங்கள் பற்றி மித்திரன் எழுதிய கதை ஒன்று அவளுக்கு நினைவிற்கு வந்தது. “சார் வருவார். உட்காருங்க!” என்று அவரது காரியதரிசி பத்மினியிடம் கூறினார். வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அந்த அறையை கண்களால் துழாவினாள் பத்மினி. வெங்கடாஜலபதியின் ஆளுயர தஞ்சாவூர் ஓவியம் மர வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு தேக்கு சட்டத்தில் பிரம்மாண்டமாக சுவரில் மாட்டப்பட்டிருந்தது. பாலாஜியின் கண்களை மறைக்கும் வண்ணம் ஜொலித்த அவரது நாமத்தை பார்த்த போது, மத சின்னங்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் தவிர்ப்பது நல்லது என்று மித்திரனின் சமீபத்திய பேச்சு நினைவிற்கு வந்தது.

மற்றொரு சுவரில் பிரபல ஓவியர் ஒருவர் வரைந்த கேன்வாஸ் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியரின் ஓவியங்கள் இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சத்திற்கு சந்தையில் விற்பனை ஆனது. பத்மினியின் நெருங்கிய தோழி ஒருவர் ஓவியர் என்பதால் பத்மினிக்கு பிற ஓவியர்கள், மற்றும் அவர்களது வரையும் பாணி பற்றி ஓரளவு பரிச்சயம் இருந்தது.

“சாரி, உங்களை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சதுக்கு, ஃபோன்ல டைரக்டர் மாதவன், அவரோட படத்துக்குதான் இப்போ ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்!” என்று கூறி புன்னகைத்தார் மித்திரன்.

“சார், அவர் கமர்சியல் டைரக்டர் ஆச்சே? அவருக்கு நீங்க கதை எழுதறீங்களா?” என்றாள் ஆச்சர்யத்துடன் பத்மினி.

“வேற பெயரில் எழுதுவேன். அது என்னோட ஆல்டர் ஈகோ மாதிரி. நீங்க சினிமாக்கள் ரொம்ப பார்க்க மாட்டீங்களா?” என்று பத்மினியை நம்ப முடியாமல் கேட்டார் மித்திரன்.

“நான் எப்போவாச்சும் பார்ப்பேன். அதுவும் ஓடிடி பிளாட்பாரம்ஸ்-ல தான். கதை, திரைக்கதை, வசனம், எல்லாம் இப்போ ரொம்ப ஃபாலோ பண்ணறதில்லை. ” என்று மெதுவாக பதிலளித்தாள் பத்மினி.

“இப்போ எல்லாம் மக்களோட ஆர்வம் ரொம்ப மாறிப்போச்சு. அதுக்கு தகுந்தா மாதிரி நம்மள மாத்திக்கணும். கலையார்வத்துக்காக எழுதினா படத்துக்கு செட் ஆகாது. அது வேற, இது வேற. அதனால தான் இதெல்லாம் முடியுது!” என்று தனது வீட்டை சுற்றிப் பார்த்தபடி மித்திரன் கூறியபோது பத்மினிக்கு ஏமாற்றப்பட்டது போல இருந்தது. அவர் எதையும் அவளிடமிருந்து மறைக்கவில்லை. அவரது எழுத்து வேறு, வாழ்க்கை வேறு என்பதில் அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். ஏமாற்றியது அவரல்ல என்று அவள் அறிவிற்கு புரிந்தாலும், மனம் ஏற்க மறுத்தது.

“அப்பாவோட புத்தகங்கள் ஒவ்வொண்ணும் எனக்கு பொக்கிஷங்கள். அதுவும் அப்பா எழுதிய “குமால்!டணால்!” நகைச்சுவைக் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்தக் கதையில, என் தம்பி பக்கத்து வீட்டுப் பையனை ஒரு உதை விடுவான். அவனும் கீழ விழுந்து இடுப்பு உடைந்து போயிடும். அதன் விளைவா எங்க அப்பாவுக்கு ஆயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டதை ரொம்ப நகைச்சுவையா எழுதியிருப்பார். அந்த காலத்துல ஆயிரம் ரூபாய் பெரிய விஷயம். கஷ்டங்களை கூட நகைச்சுவை உணர்வோடு எழுதுவது அப்பாவோட சிறப்பு. அப்புறம், அப்பாவோட புத்தகங்கள் அதிக பிரதிகள் என்கிட்ட கிடையாது, நீங்க இதை பயன்படுத்தி எழுதின உடனே எனக்கு டன்சோ பண்ணிடுங்க, இதுதான் என் அட்ரஸ்.” என்று மித்திரனிடம் சொல்லிவிட்டு பத்மினி கிளம்பியபோது மித்திரன் அவளுக்கு மாரீச்சனாக மாறியிருந்தார். அப்பாவின் நகைச்சுவை கதையை பிரஸ்தாபித்த போது அவளுக்கு ஏதோ ஒரு வகையில் மித்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தது போல ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

-juliemanju2002@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button