
காலத்தின் சாட்சியாக ஓடிக்கொண்டே இருக்கும் மரண அவஸ்தையிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா..! என்னுடன் பிறந்த நீ மட்டும் புனிதம். உன்னுடன் கலந்த நான் மட்டும் சாபமா?
உன் புண்ணிய தேசத்தில் பாவ புண்ணியங்களின் கணக்கை யார் எழுதுகிறார்கள் ..?
பனிமலைக் காட்டில் பர்வதம் பிளந்து ஒடி வரும்போதெல்லாம் வலிக்கவில்லை. உன்னைச் சந்திக்கும் அந்த ஒரு வினாடிக்காக ஓடோடி வந்தவள் நான். என்னை உன் வாழ்வின் எல்லா பருவங்களுக்கும் சாட்சியாக நிறுத்திவிட்டு நீ மட்டும் பாற்கடலில் நித்திரையில் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
சிரவண குமார் என்னிடம் வந்தப்போது எல்லா நாட்களும் போலவே அந்த நாளிலும் அவன் குடம் நிறைத்தேன். காற்று அன்று மட்டும் எனக்கு எதிராக செய்திருக்கும் சதிவலையில் விழுந்துவிட்டேன். குடம் நிறைக்கும் ஒலியும் காட்டு மிருகம் நீர் அருந்தும் ஒலியும் ஒரே மாதிரியான அலைகளில் வாசித்தவன் அரசனா? அவனுக்கு இது கூடத் தெரியாதா! காற்று ஏளனமாகச் சிரிக்கிறது. என் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கும் படகுகளின் துடுப்புகள் சினம் கொண்டு படகிலிருந்து குதித்து வெளியேறுகின்றன. படகுகளின் கயிறுகளைத் துண்டிக்கின்றன. துடுப்பில்லாமல் படகுகள் நதி வெள்ளத்தில் மிதக்கின்றன. அதை ரசிக்கவும் முடியாமல் படகுகளை கரை சேர்க்கவும் முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
என்னைக் கடந்து செல்லும் போது படகில் அமர்ந்திருந்த உன்னிடம் பேச முடியவில்லை. என் மனசில் பட்ட அந்த நியாயத்தின் குரலை ஒலிக்காமல் அமைதியாக இருந்தப் பாவி நான். உன் மனைவி சீதாவுடனும் உன் இளவல் இலக்குமணனுடன் நீ படகில் ஏறி எதுவும் பேசிக்கொள்ளாமல் துடுப்புகளில் அசைவில் பயணித்துக் கொண்டிருந்தாய். உங்கள் மூவரின் வாடிய முகத்தை என் நீரலைகள் பிரதிபலிக்க முடியாமல் அழித்து அழித்து அலைகளுக்கு நடுவில் உங்களை வரைந்து கொண்டிருந்தன. சீதையின் முகத்தில் மட்டும் சின்னதாக ஒரு சந்தோஷத்தின் கீற்று அந்த இறுக்கமான சூழலிலும் வெளிப்படத்தான் செய்தது. உன் அரண்மனைக் கதவுகளுக்கு ஆயிரம் ரகசியங்கள் மட்டுமல்ல அதையும் விட அதிகமான சம்பிரதாயங்கள் உண்டுதானே? உன்னைக் காணவும் கண்ணோடு கண்கலந்து உன்னோடு கரைந்துவிடவும் காடுதான் அவளுக்கு இடம் கொடுக்கும் என்ற கனவுகள் அவள் இமைகளில் தேங்கி நிற்பதை நீ வாசிக்காமல் இருந்திருக்கலாம். நான்.. அதன் ஒவ்வொரு வரிகளையும் அப்படியே வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போதாவது அவளிடம் நான் சொல்லியிருக்க வேண்டும்.. தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் காதல் அற்பத்தனமானது என்று.
அருகில் இருந்தால் மட்டுமே காதல் இருக்கும் என்பது கேவலமானது. பிரிவிலும் காதல் காதலாகவே காத்திருக்கும். காதல் தன்னை மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவரின் சுக துக்கங்களையும் சேர்த்தே காதலிக்கும். காதல் கண நேரத்தில் வெளியேறிவிடும் அது மட்டுமல்ல, அதையும் தாண்டிய இன்னொரு நிலை. அது உன்னைவிட இளையவள் என்றாலும் ஊர்மிளைக்கு இருந்தது. உனக்கு ஏன் இல்லை சீதா? ராமனிருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்றால் ஊர்மிளைக்கு மட்டும் இலஷ்மண் இல்லாத அயோத்தி எப்படி அவள் அயோத்தியாக இருக்க முடியும்? உனக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? மரவுறி தரித்தவுடன் மரித்துப் போனதா உன் நியாயங்கள்? இதை எல்லாம் கேட்டிருக்கலாம் சீதையிடம்.. கேட்டிருக்க வேண்டும் நான்.. ஆனால், அந்த மூவரின் மெளனம் கலைக்காமல் நானும் மெளனமாகவே இருந்துவிட்டேன். அந்த மெளத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம்.
அந்த இரண்டு பெண்களும் என் கரையோரத்தில் அமர்ந்திருந்த அதிசயத்தை என்னால் நம்ப முடியவில்லை. பனிபடர்ந்த குளிரில் என் கண்களைத் துடைத்துக் கொண்டேன். சந்தேகமே இல்லை. அவர்கள் இருவரும்தான். காலம் எத்துணை வினோதமானது? யாரை வேண்டுமானாலும் யாரோடும் சந்திக்க வைத்து விடுகிறது. அதற்கு சாட்சியாக என்னைக் கொண்டு நிறுத்தி இருக்கிறது. அவர்கள் உரையாடலில் என் நீரலைகள் சிலிர்த்துப் போயின. கொஞ்சம் நேரம் ஒடுவதை நிறுத்திவிட்டு அப்பெண்களின் அருகில் காலத்தின் சாட்சியாக உறைந்து போய்விட மாட்டோமா என்று என் மனம் ஏங்கியது. என் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். நேராகப் பாய்ந்து சென்றால் சில நிமிடங்களில் கடந்துவிடும் தூரத்தை வளைந்து நெளிந்து பாறைகளைப் பிளந்து மரங்களைச் சுற்றி வந்து கிளைகளுக்கு நடுவில் சிக்கி.. மெல்ல மெல்ல நான் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். மீன் குஞ்சுகள் நடப்பது என்னவென்று தெரியாமல் அதைத் தெரிந்து கொள்ள கூட்டமாக வந்து ஒவ்வொன்றாக தங்கள் தலையைத் தூக்கி என்னைப் போலவே அப்பெண்களிருவரையும் கண்டன. தாங்கள் காண்பது என்ன கனவா என்ற மயக்கத்திலிருந்த மீன் குஞ்சுகள் மயக்கம் தெளிவதற்குள் கடற்பறவையின் கண்பார்வைக்குள் விழுந்துவிட்டன. பாறைகளில் ஒற்றைக் கால்களுடன் காத்திருந்த நாரைகள் தங்கள் காலுக்கு அருகில் வந்து கிச்சுமூச்சு காட்டும் மீன்களைக் கவ்வி எடுத்து துடிதுடிக்க மெல்ல மெல்ல தன் கால்களுக்கு நடுவில் வைத்து கொத்த ஆரம்பித்தன. இவை எதுவுமே என்னைப் பாதிக்காத மாதிரி நான் அப்பெண்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதிலேயே கவனமாக இருந்தேன்.
“காயங்கள் ஆறிவிட்டன தேவி, ஆனால், அன்று அனுபவித்த அவமானத்தின் வலி இன்னும் ஆறவில்லை. சரி, நீங்களாவது நிம்மதியாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால், உங்கள் ஆண்கள் உங்களையும் நிம்மதியாக இருக்க விடவில்லை, பாருங்கள்.”
சூர்ப்பனகா சொல்லச் சொல்ல எதுவும் மறுபேச்சு பேசாமல் எந்த ஒரு விளக்கமும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் சீதை. எல்லா மெளனங்களும் சம்மதங்கள் அல்ல. ஒவ்வொரு மெளனமும் அவரவர் மொழியில் அவரவருக்கான அர்த்தங்களுடன் புரிந்துக் கொள்ளப்படுகிறது.
தன்னிடம் எதுவுமே கேட்காமல் தன்னைக் கானகம் அனுப்பியவனும் அண்ணன் சொன்னதை எதுவுமே கேட்காமல் அதைச் செய்தவனும் இருவருமே சீதையின் மெளனத்தில் புதைந்திருந்தார்கள். இவள்களின் ஆண்கள் எப்போதுமே பெண்களைப் புரிந்து கொள்வதில்லையே..ஏன்? என்ற நினைப்பில் சீதையின் மெளனத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் சூர்ப்பனகா.
இருவருக்கும் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கத்தான் செய்தது.
“எனக்கு உங்கள் ராமனைப் பிடித்திருந்தது. அதை அவரிடமே கேட்டதில் என்ன தவறு..?” மெல்ல அவள் முணுமுணுத்தது சீதையின் காதில் பெரும் குரலெடுத்து மோதியது.
அறுக்கப்பட்ட தட்டையான மூக்கு, அதில் தொங்கிக் கொண்டிருக்கும் சதை நுனி, ஒரு காதில் மட்டுமே அவள் அணிந்திருக்கும் காதணி அவள் தலையை அசைக்கும் போதெல்லாம் அசைவதும் அப்போதெல்லாம் ஒரு பக்கம் காதே இல்லாமல் மொட்டையாக இருக்கும் காட்சியும் அந்த இடத்தில் வினோதமாக காட்சியளித்த காது துவாரமும் அவள் பேசியதை மேலும் வினோதமாக்கியது. அதே நேரத்தில் அவள் கேட்டது சீதைக்கு ஆச்சரியமளித்தது.
“உங்கள் குலத்தில் ஒரு பெண் தன் விருப்பத்தை அவளே அந்த ஆணிடம் சொல்ல முடியுமா, என்ன?“ சீதை கேட்கவும் சீதையின் கேள்வியில் இருந்த அறியாமையும் ஆச்சரியமும் சூர்ப்பனகைக்குப் புரிய ஆரம்பித்தது.
“ஆம், அதிலென்ன! வயது வந்த ஆணோ பெண்ணொ தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக கேட்பது எங்கள் வழக்கம். அதற்கு இசைவு தெரிவிப்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். அதற்காக ஒரு பெண் கேட்பதே தவறு என்றோ அல்லது அப்படி கேட்டுவிட்டதாலேயே அப்பெண் ஒழுக்கம் குறைந்தவள் என்றோ நாங்கள் நம்புவதில்லை. எங்கள் குலத்தில் எந்த ஓர் ஆணும் பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளைத் தொடுவதில்லை. உங்கள் அரண்மனைகளில் அடைந்து கிடக்கும் பிற நாட்டு பெண்களின் அழுகுரல்கள் எங்கள் தேசத்தில் எப்போதும் இருப்பதில்லை.”
அவள் சொல்வதும் சரிதான் என்று அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தாள் சீதை. தசரத மகாராஜாவின் அந்தப்புரக்கதைகள் அவள் அறியாதது அல்ல. அந்த அரண்மனைக் கதவுகள் கூட பெண்களின் அழுகுரலை விம்மலை எப்போதும் அதிர்வலைகளாக வெளியிட்டுக் கொண்டே இருப்பதாக பணிப்பெண்கள் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், தன்னை சிறை எடுத்து சென்ற இவள் அண்ணன், இராவணனின் நிழல் கூட தன் மீது படாமல் அவள் திரும்பி வந்திருக்கிறாள் என்பதை அயோத்தி நம்பாது தான். ! முதல் முறையாக சீதைக்கு சூர்ப்பனகா மீது ஒரு பாசமும் பரிதாபமும் ஏற்பட்டது.
அந்த இரு பெண்களும் கடலில் சங்கமிக்கும் வரை என்னோடு உரையாடிக் கொண்டேதான் இருந்தார்கள்.
காலம் யாருக்காகவும் காத்திருக்காது. எதுவும் நிரந்தரமில்லை. நீயும் விதிவிலக்கல்ல. காலம் மெல்ல மெல்ல தன் கடைசிப் பக்கத்தை வாசிக்கச் சொன்னது. அப்போது தான் அயோத்தியை விட்டு விலக வேண்டிய காலம் வந்துவிட்டதை ராமன் உணர்ந்தான்.
அவன் முடிவு செய்துவிட்டதை இனி காலமே நினைத்தாலும் மாற்ற முடியாது. என்னில் அவன் தன்னைக் கரைத்துக் கொண்டது எனக்கு அவன் கொடுத்த தண்டனையா?
தன்னை மாய்த்துக் கொள்வதற்கு அவனுக்கு ஜலசமாதி தவிர வேறு வழியே இல்லையா? மலைகளும் காடுகளும் நிறைந்த தேசத்தில் அவன் சடலத்தைச் சுமக்கும் தண்டனையை எனக்கு ஏன் கொடுத்தான்? கடலில் கலந்த பின் மெல்ல மெல்ல அவனின் அந்த உடலை மறக்க நினைக்கிறேன். உப்புக்கரிக்கிறது. அவனிலிருந்து விடுபட முடியாத சாபம் என்னைத் துரத்துகிறது.
-mallikasankaran@gmail.com