
கலைஞர்கள் குறித்த கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. படைப்பு செயல்பாட்டில் ஏற்படும் இடர்களின் மீது கவனம் செலுத்தும் படைப்புகள் ஒருவகை எனில், படைப்பிற்கும் லௌகீக வாழ்க்கைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளின் மீது படரும் வெளிச்சம் மற்றொரு வகை. இரண்டாம் வகையில் புதிதாக கலைஞர்கள் எதையும் கண்டுபிடிப்பதில்லை. காலம்தொட்டு செய்யும் செயலை அன்றாட வாழ்க்கைக்காக மீட்டுருவாக்கம் செய்கிறர்கள். பண்பாட்டு வளர்ச்சியில் சில கலைகள் கிராமியக் கலைகளாக சுருக்கம் கொள்கின்றன. நகரம் அக்கலைகளுடனான உறவை முற்றாக துண்டித்துக் கொள்கின்றது. யாரோ ஒருவரால் கைவிட முடியாமல் இருப்பதாலேயே கிராமங்களிலும் புராதனக் கலைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அப்படியான ஒரு கலை குரவையாட்டம். பெண்களை முன்னிலைப்படுத்தி ஆடப்படும் கலை வடிவம். அதன் மனிதர்களின் வாழ்வை பல குரல்களின் வழியே செழிப்பாக எழுதப்பட்டிருக்கும் படைப்பு சிவகுமார் முத்தய்யாவின் “குரவை”.
தப்படிச்சான் மூலை எனும் இடத்தில் குடியேறிகளாக பலர் வருகின்றனர். அவர்கள் குரவையாட்டாத்தின் பல்வேறு பாத்திரங்களை ஏற்பவர்களாக அமைகின்றனர். அவர்களுக்குள்ளாக குழுமங்கள் உருவாவதும், எற்கனவே குழுமங்களாக இருப்பதும் சொல்லப்படுகிறது. தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதியில் நிகழும் கோயில் விழாக்களுக்கும், மரண வீடுகளுக்கும், சிறப்பு விழாக்களுக்கும் இவர்களுள் ஏதேனும் ஒரு குழுமத்தை முன்பதிவு செய்து ஆட அழைக்கின்றனர். தப்பு, நாயனம், நாதஸ்வரம், தவில் என்று பலதரப்பட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களும், ஆட்டம் ஆடும் பெண்கள், அவர்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தும் பபூன், அவர்களின் பாடல் வரிகள், ஆட்டத்தின் நுணுக்கங்கள் என்று குரவையாட்டம் குறித்த தகவல்கள் நாவல் முழுக்க விரிவாக விவரிக்கப்படுகின்றன.
குவிமையத்துடன் நாவலின் கதை அமையவில்லை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சில முன்கதைகளும், அவற்றிற்கான விளைவுகளுமாக கதாபாத்திர வார்ப்பு நிறைவுறுகிறது. அவர்கள் ஒன்றிணையும் இடமாக தப்படிச்சான் மூலையும், ஒருங்கிணையும் கருத்தாக குரவையாட்டம் மையப்படுத்திய வாழ்க்கையுமே நாவலின் களமாகிறது.
மது, கைகூடாத காதல், ஆட்டங்கள் கிடைக்காத நாட்களில் ஏற்படும் ஏழ்மை நிலை, நவீன வாழ்க்கைக்கு தகவமைத்துக் கொள்ள முடியாத அன்றாடம் என்று அவர்களின் சிக்கல்கள் கதையை மெருகேற்றுகின்றன. இசைக்கலைஞர்களுக்கு இடையே நிகழும் அகந்தைப் போரும், அதன் வழி கிளைவிடும் வன்மமும் அவர்களின் வாழ்வை மேலும் சிக்கலாக்குகிறது. கலையை தக்கவைக்க இயலாமல் அல்லலுறுவதை அனைத்து ஆண்களும் புலம்புகிறார்கள். அதற்கு மது முக்கியக் காரணியாகிறது. சில கதாபாத்திரங்களை மது அழிக்கவும் செய்கிறது. அனைத்துக் கதைகளும் அவர்களிடையே புழங்கினாலும் மதுவை யாரும் கைவிடுவதில்லை.
கலையின் நவீன வடிவங்கள் அவர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்கிறது. கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகும் சமயத்தில் நிகழும் உரையாடல்கள் அதற்குச் சான்றாகின்றன. மயில் ராவணன் எனும் கதாபாத்திரம் நாடகத்தில் ராஜபார்ட்டாக வாழ்ந்தவர். அதற்குண்டான வயதைக் கடந்தவுடன் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகத் தன்னை தகவமைத்துக் கொள்கிறார். அவருக்கென ஒரு ஆகிருதி அங்கிருக்கும் மக்களிடையே நிலவுகிறது. கோயில் விழாக்கால முடிவுகள் அவரைக் கேட்டு எடுக்கப்படுகின்றன. நாடக வாழ்வை அவ்வப்போது அசைபோடுகிறார். கதை நிகழும் காலத்தில் நாடகங்கள் அர்த்தமிழந்து விட்டன. மக்களின் ரசனை மாறிவிட்டது. மக்கள் விரும்பும் குரவை ஆட்டத்தின் மீது அவருக்கு ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது. தன் கலை அழிந்துவிட்டதை ஏற்கவும் முடியாமல், அதேவேளையில் சமகாலத்தோடு தன் ஆகிருதிக்காக இணைந்தும் வாழ வேண்டிய நிர்பந்தம் கதாபாத்திர வார்ப்பில் சிறப்பாக வெளிப்படுகிறது. கலையை அவர் வெறுப்பதில்லை. அதன் வெளிப்பாட்டில் நாடகத்தை ஒத்த நிலைத்த தன்மையை விரும்புவது அவர் மீதான ஆளுமைப்பண்பை அதிகரிக்கிறது.
கலை குறித்த தகவல்கள் அல்லது உரையாடல்கள் நாவலில் நிறைய இடம்பெறுகின்றன. கலை கலைக்காகவா வாழ்க்கைக்காகவா போன்ற அடிப்படைவாதக் கேள்விகளை நாவலின் வழியே அணுகியிருக்கும் முறை தேய்வழக்கான உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வழங்குகிறது. கணேசலிங்க பண்டிதர் எனும் கதாபாத்திரத்தின் வழியே நிகழும் மூன்று நான்கு பக்க உரையாடல் இந்த நாவலின் நிலைத்த தன்மையை உறுதி செய்கிறது. இசைக்கருவிகள் குறித்து குரவையாடுபவர்களிடம் அவர் பேசுகிறார். சமூகத்தில் மேல்சாதியாக இருப்பவர்களிடம் கைவசப்பட்டிருக்கும் இசைக்கருவிகள் ஆர்த்தடாக்ஸ் தன்மையைப் பெற்றிருக்கின்றன. அதன்வழி கிடைக்கும் பொருளாதார மேம்பாடும் குரவை ஆடுபவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்த பொருளாதார சமனிலைக்கு அறியாமையைக் காரணமாக அவர் சுட்டுகிறார். குரவை ஆடுபவர்கள் கைவசமிருக்கும் கருவிகளின் புராணீகக் கதைகளையும், அவற்றிற்கும் பிற இசைக்கருவிகளுக்கும் இடையில் இருக்கும் ஒப்புமையையும் விளக்குகிறார். கேட்டுக்கொண்டிருக்கும் குரவைக் கலைஞர்களைப் போலவே வாசகர்களுக்கும் அப்பகுதி ஆச்சர்யம் கூட்டும். அதே நேரம் அறியாமையின் மீதான வெளிச்சம் முக்கியப் புள்ளியாகிறது. கலைகள் நலிவடைந்து செல்வதற்கு காரணம் மரபு எனும் பெயரில் செயலை மட்டுமே செய்துவருவதால் அதன் முழுமையுணர்வையும் அடைய முடியாமல், சமகால வாழ்க்கைக்கேற்ப தகவமைத்துக்கொள்ளவும் இயலாமல் கலைஞர்கள் திணறுகிறார்கள். மரபின் கருத்தியலை உள்வாங்குவதன் வழியே செயல் மேலும் அர்த்தப்படுகிறது. நாவல் கருத்தியல் ரீதியாக சிறப்பாக சொல்லப்பட்டாலும் அக்கதாபாத்திரங்கள் அவற்றைக் கடந்து செல்பவர்களாக இருப்பது நாவலின் துன்பியல் பகுதி.
நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பரந்துபட்ட உரையாடலை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆட்டம் கவர்ச்சியின் மேல்பூச்சுடன் மக்களால் அணுகப்படுகிறது. அவர்களை காதலின் துணிகொண்டு அணுகுபவர்கள் காமத் துய்ப்பிற்காக மட்டுமே விரும்புகின்றனர். பொருளாதார ரீதியில் கலை நலிவடையத் தொடங்கும்போது அவர்களை அறியாமல் விற்பனைப் பண்டமாக மாற்றப்படுகிறார்கள். கலையைப் பார்க்கவரும் மக்கள் ஒரு பக்கம் எனில் உடன் பணிபுரியும் கலைஞர்களாலேயும் மோகிக்கப்படுகிறார்கள். காதல் அவர்களின் எட்டாக்கனி ஆகிறது. அல்லது ஆசைக்கான ஒப்பனையாகிறது.
வனப்பு மட்டுமே அவர்களுக்கான மூலதனம். அதுவே அவர்களுக்கான எமனும் கூட. நிலைப்பட்ட குடும்பத்தில் வாழ நேரிடின் வனப்பு சந்தேகத்தின் ஊற்றாகிறது. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு நடனக்காரிகளுடன் சல்லாபிக்கும் கணவர்களின் மீது கோபம் எழுகிறது. வனப்பை இழக்கும் பெண்கள் குடும்பத்தால் கைவிடப்படுகிறார்கள். சில காதல்கள் நாவலில் சொல்லப்பட்டாலும் கைக்கூடாத காதல்களாலேயே பெண் கதாபாத்திரங்களின் இருத்தலியல் சிக்கல் தெளிவாகச் சொல்லப்படுகிறது. செவத்தகன்னி எனும் கதாபாத்திரம் மட்டுமே அனைத்து பெண் கதாபத்திரத்திடமிருந்தும் தனித்து தெரியும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வனப்பு அவளிடம் முதன்மைப் பெறுவதில்லை. தந்தையின் இசைக்கருவியைக் கொண்டு வாழ்வை தக்க வைக்க விரும்பும் வைராக்கியமே அவளைத் தனித்துக் காட்டுகிறது.
நாவலின் பலம் அதன் விவரிப்புகள். அனைத்து வகையிலான கதைகளும் நாவலில் சொல்லப்படுகிறது. இடையில் துப்பறியும் பகுதியும் இடம்பெறுகிறது. அவற்றினூடாக அங்கு வாழும் மக்களின் முழுமைச் சித்திரம், அவர்களின் பண்பாட்டு அம்சங்கள் அவ்வாழ்வை முழுமையாக நாம் உணர்ந்த திருப்தியை அளிக்கிறது. அவர்களுக்குள்ளாக சில குழுமப் பெயர்கள் ஒட்டியிருக்கின்றன. அவற்றிற்கான பின்கதை சோழர் காலம் வரை நீள்கிறது. வழிவழியாக சொல்லப்படும் விஷயங்களை பேச்சுவாக்கில் கூறி தக்கவைத்துக் கொள்கிறார்கள். மரபார்ந்த அடையாளாத்தை இழக்கவும் விரும்பாமல், நவீன அடையாளங்களுக்கு தகவமைத்து கொள்ளவும் முடியாமல் ஊசலாட்டத்தில் வாழும் கலைஞர்களின் கதை குரவை. அவர்களின் மீது கரிசனம் எழாத வகையில் எழுதியிருப்பது சிவகுமார் முத்தய்யாவின் சிறப்பான எழுத்திற்குச் சான்றாக உள்ளது.
குரவை | சிவகுமார் முத்தய்யா | நாவல் | யாவரும்



