இணைய இதழ் 118கட்டுரைகள்

பாப்பா புகா (Papa Buka) திரைப்பட விமர்சனம் – ராணி கணேஷ்

கட்டுரை | வாசகசாலை

பாப்பா புகா (Papa Buka) ஆங்கிலத்தில் வாசிக்கையில் அர்த்தம் சுளுவாகப் புரியும். தேசத்தந்தை என்பது போல “பாப்பா புகா” என உள்ளூர்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்ட எண்பது வயது மனிதனும், அவர் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் பற்றிய நினைவுத் தகவல்களும் பரவிக்கிடக்கும் பப்புவா நியு கினியா (பி என் ஜி) படம்தான் இந்த ‘பாப்பா புகா’ . இந்தப் படத்தில் உலகப்போரில் பங்கேற்ற வீர்களைப் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவில் இருந்து வரலாற்று ஆய்வாளர்கள் ஆனந்த் மற்றும் ரோமிலா இருவரும் பப்புவா நியு கினியாவிற்கு வருகின்றார்கள். தன் வேலையோடு, இரண்டாம் உலகப்போரில் பி என் ஜி வந்து பின் மாயமாகிப் போன தன் தாய் வழித் தாத்தாவைப் பற்றிய தேடல்களையும் தன்னோடு சுமந்து வருகிறாள் ரோமிலா. இந்தப் படம் ஆஸ்கர் விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் டாக்டர் பிஜூ ராமச்சந்திரன் இயக்கிய படங்களின் வெற்றிகளும், அடைந்த விருதுகளும் யாவரும் அறிந்ததே.

நான் சுமார் பதினாறு வருடங்கள் வாழ்ந்த ஊர் என்பதற்காகச் சொல்லாமல், பார்க்கும் எவருக்குமே பிடித்துப் போகும் பூலோக சொர்க்கம் பப்புவா நியு கினியா என உறுதியாகச் சொல்லுவேன். இது ‘பாரடைஸ்’ என்றே அழைக்கப்படுகிறது. பப்புவா நியு கினியாவில் எண்ணூறுக்கும் மேலான மொழிகள் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது, அறுனூறுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனத்திற்கும், குழுமத்திற்கு பிரத்யோக மொழி உள்ளது. உலகிலேயே அதிக மொழிகளைக் கொண்ட நாடு என்னும் சிறப்பு பப்புவா நியு கினியாவிற்கு இருக்கிறது. அம்மக்களின் மொழி, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், பண்டைய உடைமுறைகள், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை இன்றளவிலும் உயிர்ப்போடு இருக்கிறது. அவர்கள் எங்கு சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும் தங்கள் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனர். பிறருக்காக தங்களை மாற்றிக் கொள்வதில்லை. எ.கா: ஆஸ்திரேலியாவிலும் அவர்கள் தங்கள் உடமை போலக் கருதும் பிலூம் (Bilum -கையால் பின்னப்பட்ட தோள்பை)-மை மாட்டிக் கொண்டு நடமாடுவதைக் காணலாம்.

எனக்குத் திருமணமாகி பி என் ஜி யில் ‘லே’ என்னும் ஊரில் மோரோபெ மாகாணத்தில் வாழ்ந்திருக்கையில் வார் சிமெட்ரி (War Cemetry) போகலாம் எனச் சென்றிருந்தோம். எண்ணற்ற சமாதிகளின் வரிசையில் சில சமாதிகளின் தலைக்கற்களில் பெயரே இல்லை. போரில் மாண்ட வீரர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி சமாதி எழுப்பியிருந்தனர். இந்துவா, கிறிஸ்டியனா, முஸ்லிமா, சீக்கியரா யார் எவர் என்று எவருக்கும் தெரியாது. அங்கிருந்த பெரிய பதிவேட்டில் இந்தியப் பெயர்களும் இருந்தது, அதிலும் தமிழ் பெயர்கள் நிறைய. மண்ணைப் போட்டாலும் பொன்னாய் விளையும் ஊரை யாருக்குத்தான் பிடிக்காது? நாட்டின் வளம்தானே எதிரிகளைக் கவர்கிறது. இரண்டாம் உலகப்போரில் 1942-இல் இந்திய வீரர்கள் பிரிட்டிஷரால் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர், அவர்கள் ஜப்பானியர்களுக்கு எதிராக போரிட்டும் உள்ளார்கள். தலைநகரமான போர்ட் மோர்ஸ்பியில் உள்ள போமானாவில் கூட வீரர்களின் சமாதிகள் இருக்கின்றன. மூவாயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட சமாதிகள். அதில் அறுநூற்றி தொண்ணூற்றி ஒன்பது பெயரற்றிருக்கிறது. யாரோ நம் மூதாதையர் நம் பாட்டனார் அந்த மண்ணுக்குள் புதைந்திருக்கிறார் என்று அறிந்தால் எப்படி இருக்கக் கூடும் அந்த உணர்வுகள்? எங்கோ பிறந்து, வளர்ந்து, எங்கோ மரித்து மண்ணுக்குள் மக்கிப் போகும் அதிசயம் சிலருக்கு பி என் ஜியில் போரின் பொருட்டு நடந்திருக்கிறது. அவர்களின் குடும்பத்தார் அறிந்தார்களா, தேடி வந்தார்களா என்று தெரியவில்லை. அப்படித் தேடி வந்தால் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் ரோமாலி கதாபாத்திரம் மூலம் காண்கிறோம். போரில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர்களைக் கொக்கோடா நடைபாதை வழியாக தூக்கிக் கொண்டு நடந்திருக்கிறார்கள் பி என் ஜி மக்கள். போர் வீரர்களுக்கு உணவு, உடை, மருந்து என அத்தியாவசியத் தேவைகளுக்கான போக்குவரத்தாய் செயல்பட்டிருக்கின்றார்கள். அதில் மரித்தோரும், காயமடைந்தோரும், ஊணமுற்றோரும், குண்டடிப் பட்டோரும் பலர். போரில் உதவிய பி என் ஜி மக்களை ஆஸ்திரேலியர்கள் ‘ஃபஸ்ஸி வஸ்ஸி ஏஞ்சல்ஸ்’ என செல்லமாய் அழைத்து மகிழ்ந்திருக்கின்றார்கள்.

படத்தில் பிரதானப் பாத்திரத்தில் நடித்த நடிகருடன் கட்டுரையாளர்

கதையின் நாயகி ரோமிலாவும் கூட தன் தாத்தாவைப் பற்றி ஒரு செய்தியாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடு தனது சரித்திர ஆய்வுக்காக போர்ட் மோர்ஸ்பி வருகிறாள். போர் வீரர்கள் யாரேனும் உயிரோடு இருப்பார்கள், அவர்களிடம் தனது தாத்தாவைப் பற்றி கேட்க வேண்டும் என்ற ஏக்கத்தோடும் கேட்பதற்கு பல கேள்விகளோடும் வருபவளுக்கு பதிலாகத்தான் அங்கே பாப்பா புகா நிற்கிறார். நிஜமாய் இவர் போரில் பங்கேற்றிருப்பாரா என்ற கேள்விகள் மறைந்து அவள் முழுவதுமாய் அவரை நம்பத் தொடங்குகையில் கதையின் மாற்றம் ரோமிலாவுக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சியளிக்கிறது.

டாக்டர் பிஜூவின் ‘அதிர்ஸ்ய ஜலஹங்கள்’ படத்திலும் போர் சார்ந்த செய்திகளைக் காணலாம். நிஜமா, கனவா என்ற குழப்பக் காட்சிகள் இதிலும் உண்டு. போர் என்ன செய்யும், சாதரணனை எப்படி வதைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. வீட்டை விட்டு வெகுதூரம் வந்த மக்களை அணைத்துக் கொண்ட பி என் ஜி என்னும் நாடு, என் போன்ற எத்தனையோ பேருக்கு இன்னொரு வீடாகத்தான் பரிணமித்தது. ஆஸ்திரேலியா வந்த பின்னும் பி என் ஜியில் இருந்து வருகிறேன் என்றே, சொற்கள் என்னில் இருந்து உதிர்கிறது. அப்படி மனதுக்கு நெருக்கமான ஊரை திரையில் காண்கையில் சொல்லவொண்ணா மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கிடந்தது மனம். காண்பதற்கு கண்கள் ஓராயிரம் இருந்தாலும் போதாது. அப்படி இயற்கை அன்னை கொஞ்சி மகிழ்ந்திருக்கும் புண்ணிய பூமி பி என் ஜி.  இன்னும் யாருமே கண்டிடாத ரகசிய இடங்களும், காடுகளும், அருவிகளும், குகைகளும், நீர் நிலைகளும், கடல் அதிசயங்களும், மலைகளும், பெயர் தெரியாத செடிகளும், மரங்களும், பறவைகளும், உயிர்களும் எத்தனையோ இருக்கின்றன. பரவலாய் அனைத்தையும் போகிற போக்கில் தொட்டு, மறைந்து கிடக்கும் அழகில் ஒரு சிறு பகுதியை அதன் இயல்பு மாறாமல் காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள்.

பப்புவா நியு கினியாவில் ‘பிளஸ் மேன்’ என்று ஒரு படமும் வந்திருக்கிறது. அந்நாட்டினர் நடித்து வெளியான படம் அது. இருப்பினும் ‘பாப்பா புகா’ இந்தியா – பப்புவா நியு கினியா இணைந்து வழங்கும் முதல் அகில உலக அளவிலான திரைப்படம். ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்தை எடுத்து முடிக்கும் முன் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இன்னல்கள் வந்திருக்கக் கூடும், பொதுவெளியில் பயணித்து காட்சிகளை எடுப்பது அத்தனை எளிதல்ல என்று அங்கிருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக இத்திரைப்படத்தினை கொண்டு வந்திருக்கிறார்கள். தயாரிப்புக் குழுவில் நொய்லீன் என்ற பி என் ஜி பெண் இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். இப்படத்தில் இந்தியர்களும், பி என் ஜிக்காரர்களும் சேர்ந்து நடித்திருக்கின்றார்கள். பி என் ஜியில் ஒன்றாக கண்டு பழகிய சக மனிதர்களை திரையில் காண்கையில், வெகு மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவினரின் உழைப்பை கண்கூடாய் காணமுடிந்தது. பதினெட்டு வயதேயான ஆத்யா பிராசாத்தும் படக்குழுவில் உற்பத்தி மேற்பார்வையாளராக பணியாற்றியிருக்கிறார். ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் பணியாற்றியவர்களில் இவரே இளவயது பெண்ணாய் இருப்பார். எனது தோழிகளான பாருல் அகர்வால் மற்றும் ஆஷி அகர்வால் இப்படத்தில் பங்கேற்று இருக்கின்றனர். மேலும் இதில் பங்கேற்ற, பங்காற்றிய 95% சதவிகிதத்தினருக்கு இதுவே முதல் திரைப்பட அனுபவம். 60 விழுக்காட்டிற்கு மேல் பெண்கள் பணியாற்றிய படம் என்பதில் அதன் சிறப்பு மேலும் ஒரு படி உயர்கிறது. அறுபது மாணாக்கர்கள் பல்வேறு பல்கலைக்கழகத்திலிருந்து பங்கேற்றிருக்கின்றார்கள். அப்துல் ஹமீது புகழ், தமிழ் பாடல் பாடிய பி என் ஜி சிறுமி ஜிலா(Zilla) இந்தப்படத்தில் பாடி நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தின் படத்தில் பலதுறை சார்ந்த பெண்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்குரிய இடத்தை அவர்களுக்கென அளித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரட்டுகள்.

படத்தின் ஆரம்பத்தில் தங்கள் பாரம்பரிய உடையோடு தோன்றும் பழங்குடியினரோடு தான் படத்தின் முடிவுக் காட்சியும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தின் வாயிலாக பி என் ஜி மக்களின் பாரம்பரிய உணவு சமைக்கும் முறையான ‘மூமூ’ வை உலகிற்கு அறியத் தந்திருக்கின்றார்கள். குழி தோண்டி அதி சூடான கற்களைப் பரப்பி, பின் அதன் மேல் வாழை இலை இட்டு அதனுள் கிழங்கு வகைகள், கோழி இறைச்சி, பன்றி, தேங்காய் பால், வாழைக்காய் இன்ன பிற காய்கள் எனப் பரப்பி இலையால் மூடி சூடான கற்களை மேலே நிரப்பி மண்ணால் மூடி மூட்டம் போடுவது போல சமைக்கும் முறை ‘மூமூ’ என்றழைக்கப்படுகிறது. கிராம மக்கள் மூமூ செய்வதை இதில் காணலாம்.

தங்களை தற்காத்துக் கொள்ளவும், எதிரியை அழிக்கவும் வில் அம்பு, ஈட்டி, வாள் போன்றவற்றை பி என் ஜியின் பழங்குடிகள் பயன்படுத்துவதும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டிற்குள் சட்டென நுழைவது அத்தனை எளிதல்லவே. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பாரம்பரிய நடனத்தையும் காணலாம். கிழங்கும், வாழையும், தேங்காயுமே இவர்களின் பிரதான உணவு. ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு குடிகளுக்கும் அவரவர்தம் பழக்க வழக்கங்கள் இருக்கும். குழந்தை பிறந்தது முதல் இறப்பு வரை சடங்குகளை அனுசரிக்கும் வழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. அப்படியான வழக்கங்கள் பி என் ஜியிலும் இருக்கின்றது. இறப்பு சார்ந்த வழக்கத்தைக் காட்டும் ஒரு வாய்ப்பு இருந்தும் ஏனோ இயக்குனர் அதனைத் தவிர்த்து விட்டார். சில நதிகள், இடங்களின் பெயர்கள், மக்களின் பெயர்கள் நமக்கும் இந்நாட்டிற்கும் உள்ள தொடர்பை அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. பி என் ஜி குறித்து எழுதுவதற்கும் பகிர்வதற்கும் இன்னும் பல இருக்கின்றன. பாப்பா புகாவின் மூலம் அதை தொடங்கியதாக எண்ணுகிறேன். பி என் ஜி மக்களின் விருந்தோம்பலை யாராலும் தோற்கடிக்க முடியாது. தங்களிடம் என்ன இருக்கிறதோ அதைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் அவர்கள் இரத்தத்திலேயே இருக்கிறது. எந்தக் குழந்தையையும் தன் குழந்தையென அணைத்துக் கொள்ளும் மாண்பு நிறைந்தவர்கள். இல்லாதவன் வீட்டு இழவை தன் வீட்டு இழவாக கருதி பணம் சேகரித்து அடக்கம் செய்யும் மனிதம் நிறைந்தவர்கள்.

இவ்வளவு சொர்க்க பூமியாக இருக்கும் பி என் ஜி எப்படி எல்லோர் கண்களையும் மறைத்து செழிப்பாய் இருக்கிறது? ஏன் இன்னும் ஆட்கள் படமெடுக்க படையெடுக்கவில்லை? பரவலாக பி என் ஜி மக்களைக் குறித்த பயமே சுற்றுலா முன்னேறாமல் இருப்பதற்கான காரணமாக நான் பார்க்கிறேன். பாதுகாப்பு கருதி பெரிதாக யாரும் வரவோ சுற்றிப் பார்க்கவோ விழையவில்லை. படக்குழுவினரும் அதற்கேற்ற பாதுகாப்போடும், அந்த கிராம மக்களின் உதவியோடும் தான் உள்ளே சுற்றியிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஹாலிவுட் நடிகர் வில்ஸ் ஸ்மித் மற்றும் சில முக்கிய முகங்கள் பி என் ஜியை தரிசித்திருக்கின்றன.

பி என் ஜி யில் பல குழு மொழிகள் இருந்தாலும் அவர்களின் பொது மொழியாக பிஜின் என்ற உடைந்த ஆங்கிலமே அறியப்படுகிறது. படத்தில் பிஜின் மொழியில் பேசுவதை அவர்களின் ஓட்டுநர் ஆங்கிலத்தில் மீண்டும் விளக்கிச் சொல்கிறார். இரண்டு முறை இப்படி பேசுவதை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இத்தனை பெரிய முயற்சியில் அது பெரிய குறையில்லை தான். சில காட்சிகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்றும் நினைக்க வைத்தது. உதாரணமாக இந்திய தூதரக ஆணையரைச் சந்திக்கும் இடம். திரு. ராஜிவ் சர்மா ஆணையராக பாந்தமாய் பொருந்தி போகிறார். காவல் அதிகாரியோடு உரையாடும் இடம். அங்கே மொழிபெயர்ப்பை தவிர்த்திருக்கலாம். பூதம், பேய், துர் ஆத்மா, செய்வினை போன்ற நம்பிக்கைகளும் கடவுள் நம்பிக்கையோடு பிண்ணிப் பினைந்திருக்கின்றது இங்கே.

படக்குழுவினர்

மொத்தத்தில் பாப்பா புகா நம்மை சிலிர்க்க வைக்கிறார். பப்புவா நியு கினியா காடுகளின் பச்சையத்தையும், மண்ணின் ஈரத்தையும், கடல் ஓசையையும், நீரோடையின் குளுமையையும், அரிய பறவைகளின் தரிசனத்தையும், ‘என் நிலம் என் உரிமை’ என்னும் பா.ரஞ்சித்தின் வரிகளையும் ஆழமாய் பதித்துச் செல்கிறது பாப்பா புகா. பி என் ஜி மக்கள் எங்கே இறந்தாலும் தன் சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்படுவதையே விரும்புகிறார்கள். சாவுப் பணம் வசூலித்து இறந்தவரின் பூதவுடலை விமானத்தில் சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் பலரை நான் சந்தித்திருக்கின்றேன். ஒரே நாடாக இருந்தாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்த ஊரிலேயே இறுதியாக உறங்கவும் விரும்புகிறார்கள். நிலம்- என் நிலம் – என் உடைமை என்பதே பிரதானமாயிருக்கிறது நம் எல்லோருக்கும். பாப்பா புகா ஆஸ்கர் விருது மட்டுமல்ல பல விருதுகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள்.

Movie Name : Papa Buka – a PNG movie

Cast : Sine Boboro, Ritabhari chakraborty , Prakash Bare, John Sike

Director : Dr. Biju

Producers :   Noelene Taula Wunum – NAFA Productions

                     Akshay Kumar Parija – Akshay Parija Productions

                     Pa. Ranjith – Neelam Productions

                     Prakash Bare – Silicon Media

md@pioneerpac.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button