இணைய இதழ் 118கவிதைகள்

ப.மதியழகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அல்லேலூயா

திரும்பவும் உனது
அன்னியோன்யம் எனக்குத்
தேவைப்படும்போது
நான் இரண்டாவது முறையாக
மரித்துப் போகிறேன்

உனது அற்புதங்களுக்கு
நான் சாட்சியாய் இருந்து
உனது நிழலாய் நான்
பயணித்த பொழுதுகளை
திரும்பவும் நினைத்துப்
பார்க்கிறேன்

பன்னிரு சீடர்களை விடவும்
யூதாஸ்தான்
அனுதினமும் உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறான்

பைபிளின் வார்த்தைகளே
என் ஜீவனை எனக்குத்
திரும்பத் தந்தன

கடவுளும்
மகனும்
பரிசுத்த ஆவியும்
என்னைக் கைவிட்டுவிட்டு
எங்கோ சென்றீர்கள்

எனது துக்கங்களை
இந்தக் கடலில் வீசியெறிகிறேன்
அதோ அப்பால் தெரிவது
கல்வாரி மலைதானே?

நினைவுகள் ஒடுங்கியபோது
எனது தேவாலயத்தில்
கர்த்தரும் இல்லை
சிலுவையும் இல்லை
சாத்தானும் இல்லை

நான் உங்களுக்குச் சொல்கிறேன்
இயேசுவோடு சிலுவைப்பாடு
கண்டவர்களில்
வலது பக்கமுள்ளவன் நான்
இடது பக்கமுள்ளவனும்
மரிக்காது ஜீவித்திருப்பானாக
அல்லேலூயா!


உனது பிரிவால்
என்னுள் பாதியை
நான் இழந்துவிட்டேன்

தீர்க்கதரிசிகள் எல்லோரும்
தாங்கள் செய்த
அற்புதங்களாலேயே அறியப்பட்டனர்

எனது ஒளியிழந்த
கண்கள்
உனது ஒளியுடலைத்
தேடுகின்றன

உனது வெள்ளாடையில்
நிரந்தரமின்மையின் அவலம்
தெரிகிறது

மீட்க வந்த இரட்சகனை
அறிந்து கொள்ளாத இனம்
எங்களுடையது

இந்தப் பாவக்கறை படிந்த
கரங்களால் அவனுடைய
திருவடியைத் தொட வேண்டும்

காலை வெளிச்சமும்
இரவின் இருளும்
என்னிடம் கண்ணாமூச்சி
காட்டுகின்றன

எனது வேர்கள்
ஆசிர்வதிக்கப்படட்டும்
மேய்ப்பன் எந்த
ஆட்டுக்குட்டியையும்
வழிதவற விடுவதில்லை

ஆன்மா பல மைல் தூரம்
பயணப்பட்டு
திரும்பியது
தேவகுமாரன் உயிர்த்தெழுந்தான்
என்ற உத்தரவாதத்தோடு!

*

ஒவ்வொரு பருவமும்
கடந்து செல்லும்போது
ஏதாவதொரு தடயத்தை
விட்டுச் செல்கிறது

தாழப் பறக்கும் தும்பிகள்
மழையின் எச்சங்களாய்
காற்றில் மிதப்பவை

தகித்த மனதோடு
மண்ணில் கால் வைக்கிறேன்
என் கபாலத்தை
துளைத்துக் கொண்டு
கீழே இறங்குகிறது மழை

சூழ்நிலைக்கு
எதிர்வினையாற்றுவதுதான்
வாழ்க்கையெனப் புரிந்துகொண்டேன்
தாமதமாக

இழந்த பின்புதான் உணர்கிறேன்
அற்புதத் தருணங்களின்
மகத்துவத்தை

வெறுப்பவன் மீது
அன்பு செலுத்துபவர்களுக்கு
எனது ஸ்தோத்திரங்கள்

மரத்தின் இரு இலைகள்
கீழே விழுவது கூட
தேவனின் தீர்மானத்தின்படியே

பாவிகளின் கூக்குரலுக்கு
செவிமடுத்தபடியால்
பூமியில் பிரவேசம் பண்ணினான்

எங்கு அன்பு போதிக்கப்படுகிறதோ
அங்கு சிறைச்சாலைகள்
இடிந்து போகும்

கிறிஸ்து கடவுளல்ல
அடித்தட்டு மக்களுக்கு
சுதந்திரத்தைப் பற்றி
எடுத்துரைத்த புரட்சியாளர்.

mathi2134@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button