
விளையாடி முடித்த பின்
ஜெசிமா
மயில் விளையாடும்
தன் குட்டிப் பாவாடையில்
விளையாட்டு பொருட்களை
வாரி அவசரமாய் சேகரிக்கிறாள்
பெண் உருவம் கொண்ட
களிமண் பொம்மையொன்று
அவள் அவசரத்தால்
தரையில் தவறி விழுந்து
இரண்டு துண்டாய் உடைந்துவிடுகிறது
இம்முறை ஜெசிமா
வீறிட்டழுவதற்கு பதிலாய்
நிதானமாய் அதன் துண்டை
கையிலெடுத்து ஓட்ட வைத்து
தனது சின்னஞ்சிறிய
நெஞ்சிலணைத்து
மழலை மொழியினில்
வலிக்குதா என
பொம்மையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்
வேடிக்கை பார்க்கும் நானோ
பால்யத்திற்குள் நுழைய முடியாமல்
தெரிந்தே செய்த
பழைய குற்றங்களை எண்ணி
புதிய குற்றவுணர்வுக்குள்
பிரவேசித்துக் கொண்டிருக்கிறேன்.
*
வாழ்வு மோசமானதென்ற கூற்றை உடைப்பவன்
ஆனாலும்…
சமயங்களில் சொற்களற்ற
வினோத ராகத்தில்
அவனொருப் பாடலைப் பாடுகிறான்
உலகில் இத்தனை மொழிகளிருந்தும்
பசியைச் சொல்ல அவன் எந்த மொழியையும்
தேர்ந்தெடுப்பதில்லை
பிணியின் வலிகளை
துன்புறுத்தும் பருவங்களை
ஏளனப் பார்வைகளை
வீசப்படும் அலட்சியங்களை
சொற்களின்றிக் கடந்து போகிறான்
அழுக்காகி நைந்து போயிருக்கும்
உடைகளை அணிந்திருக்குமவன்
வாழ்வு கட்டமைத்திருக்கும்
போலியான விழுமியங்களை
மனிதர்கள் வரைந்து வைத்திருக்கும்
உதவாத விதிகளை
குற்றங்களுக்கு வழி சொல்லும்
ஒழுங்குகளை
மீறச் சொல்லும் சட்டங்களை என
எல்லாவற்றையும்
மாறி மாறி உடைக்கிறான்
அச்சுறுத்தித் துரத்தும்
தெருநாய்களைக் கூட
பல நேரங்களில்
தாக்கும் ஆயுதம் எதையும்
தேடாமல்
மிகக் கருணையுடனேயே அணுகுகிறான்
தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட
எதையும் பொருட்படுத்தாமல்
பழுப்பேறிய தனது
பற்களைக் காட்டி அவ்வப்போது சிரிக்கும் அவன்
இந்த உலகம் மிக மோசமானது
என்கிற கூற்றை
மிகச் சாதாரணமாய் உடைக்கிறான்
அந்த நாளுக்கான
எதிர்பார்ப்பென்றோ
பின்பொரு நாளுக்கான எதிர்பார்ப்பென்றோ எதுவுமில்லாதவனை
வாழ்வென்பதை
முழுதாய் கைகழுவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கிற
வாழ்வோடு சமரசம் செய்யாமல்
வாழ்வையே சமரசம் செய்த
அவனைத்தான்
மருத்துவம் பிறழ்வுற்றவன் என்கிறது
இன்னும் ஒரு படி மேலே சென்று
வாய் கூசாமல்
நாம் பைத்தியமென்கிறோம்
*
பெயரென்னும் நூதனச் சிலுவை
அர்த்தம் பிறழ்ந்துவிட்ட
வாழ்வில்
இன்னும் இந்த இயற்ப்பெயரை
அடையாளத்திற்கென
அவ்வப்போது உச்சரிப்பதைக் கேட்கும்
அசௌகரியம்
கடக்கவியலாத புகைமூட்டமொன்றை
மனதில் போடுகிறது.
*
அழைப்பதற்கென்றும்
அடையாளத்திற்கென்றும்
நெடுங்காலத்திற்கு முன்பு
சூட்டப்பட்ட இந்தப் பெயரை
நாள் முழுக்கச் சுமப்பதுதான்
மிகப் பெரிய பாரம்
யானையின் பெருத்த உடலில் பாயும்
பாகனின் கையிலிருக்கும்
அங்குசமென
புகாரளிக்கவியலா வலிகளை
பரிசளித்தபடியே இருக்கிறது.
*
ஒரு பெயரைத் துறந்துவிட்டு
மற்றொரு பெயரில்
புகுந்துகொண்டான்
எல்லாவற்றையும் துறந்த புத்தன்
ஆம்
பெயரைத் துறப்பதென்பது
அத்தனை எளிதானதல்ல.
*



