
அனாமிகா முழுதாக அலங்கரித்து இப்படி உட்கார வைக்கப்படுவது ஆறாவதோ ஏழாவதோ முறை. முதல் தடவை இருந்த ஆர்வம் இப்பொழுது சுத்தமாக வடிந்து போயிருந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும் அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களே முழுவதும் மனதை ஆக்கிரமித்திருந்தது. மாந்தளிர் நிறப்புடவையில் இருந்தவளை மேலும் கீழும் நன்றாக உற்றுப் பார்த்தாள் சுமதி.
“ஏண்டி அனாமிகா, அந்த சிவப்பு கலர் புடவை எடுத்து கட்டிக்கிட்டு உட்காருன்னா, இந்த பழுப்புக் கலர எடுத்து கட்டியிருக்கிற. ஏற்கனவே ரோஜாப்பூ நிறம். இதுல இந்த நிறத்தை கட்டிகிட்டா அப்படியே பார்த்தவனுங்க கொத்திட்டுப் போயிருவானுங்க, எங்க இருந்துதான் என் வயித்துல இப்படி கன்னங்கரேன்னு வந்து பொறந்து தொலைஞ்சியோ? அது கிடந்துட்டுப் போகுது. அலங்காரமாவது நல்லா பண்ணிக்கலாம்ல்ல? இப்படி அழுது வடிஞ்சிகிட்டு நின்னா எவனுக்குதான் பிடிக்கும்? இதோட ஏழாவது தடவை பொண்ணு பார்க்க வராங்க, பொழுதன்னைக்கும் பஜ்ஜி சொஜ்ஜி பண்றதே வேலையா இருக்கு“ – என கோபமாகத் திட்டிவிட்டுச் செல்பவளை செய்வதறியாது கலங்கிய கண்களோடு பார்த்தாள் அனாமிகா. அவளுக்கு ஏனோ ஆழ்ந்து பளீரிடும் நிறங்களைப் பிடிப்பதே இல்லை. கண்களை பெரிதாக உறுத்தாத வண்ணங்களே ஈர்ப்புடையதாகத் தோன்றியது.
அப்பொழுதுதான் கல்லூரியிலிருந்து வந்த சினேகா சாப்பாட்டைத் தட்டில் போட்டு எடுத்துவந்து அனாமிகாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவளை மேலிருந்து கீழாக அலட்சியமாகப் பார்த்தாள். அவள் ஏளனமாகப் பார்ப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் மடிக்கணினியில் அலுவலகக் கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் அனாமிகா
“என்ன அக்கா இன்னைக்கும் பொண்ணு பார்க்க வராங்களா? அம்மா இப்பதான் சொன்னாங்க, சீக்கிரம் சாப்பிட்டுட்டு வைதேகி அத்தை வீட்ல போயி இருக்கச் சொன்னாங்க. நான் உன்னைவிட கலரா இருக்கேன்ல? அப்பறம் மாப்பிள்ளை வீட்ல பார்த்துட்டு இந்தப் பொண்ணுதான் வேணும்ன்னு சொல்லுவாங்களாம். எப்பப் பார்த்தாலும் இதே வேலையாப் போச்சி. இப்ப நான் லொங்கு லொங்குன்னு அங்க ஓடணும்“ எனச் சொல்லிட்டு இதழோரத்தில் நெளிந்த சிரிப்போடு ஓரக்கண்ணால் அனாமிகாவைப் பார்த்தாள். அவளது வார்த்தைகளில் உடைந்த கண்ணாடித்துகள்கள் போல குரூரம் தெறித்து விழுந்தது.
“அக்கா, சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காத. நீ கல்யாணம் பண்ணிப் போனத்துக்கப்பறம்தான் எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு காத்திருக்கோம். போன வருசமே எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க, ஞாபகம் இருக்குல்ல? அத்தான் என்னையதான் கட்டிப்பேன்னு ஒத்தை கால்ல நிக்கிறாரு. இந்த மாப்பிள்ளையாவது உனக்கு முடிவாகணும்னு காத்தாயி அம்மன்கிட்ட வேண்டிக்க, இதுவும் சரியா வரலேன்னா எங்களுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு நானும் அத்தானும் வீட்ல பேசலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம். எவ்வளவு நாள்தான் உன் கல்யாணத்துக்காக காத்திருக்கிறது? அத்தான் என்னைய கல்யாணம் பண்ணி உடனே பாரீன் கூட்டிட்டு போயிடுவாரு. உன்னாலதான் எல்லாரும் காத்திருக்கோம். அக்கா, என்னக்கா நீ, இப்படி டல்லா மேக்கப் பண்ணிருக்க? அந்தப் பவுண்டேஷன இன்னும் இரண்டு கோட்டிங் போட்டு பனானா பவுடரப் போடு. அப்பதான் கொஞ்சமாவது வெள்ளையாத் தெரிவ” என வேண்டா வெறுப்பாகக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் .
அனாமிகாவுக்கு அசதியாக இருந்தது. நல்ல படிப்பு நல்ல வேலை இருந்தும் தன் உடல் குறையைப் பெரிதாக்கி மட்டம் தட்டிக்கொண்டே இருப்பவர்களால் தினம் தினம் நரக வேதனை அனுபவித்தாள். ஒவ்வொரு சொல்லும் அவளின் சுயத்தை நோக்கி கற்களை வீசிக் காயப்படுத்தி பலவீனமாக்கியது. நிறம் குறைச்சலாக இருப்பதற்கு எப்படி அவள் பொறுப்பாவாள்? அப்படியே இருந்தாலும் அழகை முதன்மைப்படுத்தி திறமைகளை பின்னுக்கு தள்ளும் இவர்கள் அவளது வாழ்க்கையில் என்ன வசந்தத்தை தந்துவிடப் போகிறார்கள்? எப்பொழுதும் குத்தல் பேச்சும் கொடுஞ்சொற்களும்தான். தனக்கு படிப்பிலோ திறமைகளிலோ தகுதியே இல்லாத ஒருவனை மாப்பிள்ளையாக வரச் சொல்வது, அவனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆணாகப் பிறந்ததாலேயே தெனாவெட்டாக வந்தமர்ந்து கொண்டு இவளின் நிறத்தை குறை கூறி அதிக வரதட்சணை கேட்பது, அதனால் அந்த வரன் தட்டிப்போவது என கடந்த வருடங்களாக இந்த வீட்டில் இதே பழக்கமாகி விட்டது. இந்த முறை வருபவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பவன் என்றும், திருமணம் முடிந்த கையோடு மனைவியை அங்கே அழைத்துச் சென்று விடுவான் என்றும் கூறியிருந்தார்கள்.
இவளுக்கு வெளிநாட்டிற்கு போகவெல்லாம் விருப்பம் இல்லை. எனினும் வீட்டின் நெருக்கடிகளால் என்ன செய்வது, என்ன முடிவெடுப்பது என்றே புரியவில்லை. அவர்கள் சொல்லுவதெற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள். இந்தச் சூழலில் மிகவும் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று இந்த வேலையை மிகத்திறமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல சம்பளத்தை மாதந்தோறும் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தாலும் இவளை எதற்குமே பிரயோஜனமில்லாதவள் போல பேசுவதும் நடத்துவதும் அவளுக்கு பழகி மரத்துப் போயிருந்தது.
அவள் பணிபுரிந்த அலுவலகத்தில் அவளுக்கென ஒரு நண்பர்கள் கூட்டமும் மதிப்பும் இருந்தது. அதை அவள் கடினமாக உழைத்துப் பெற்றிருந்தாள். இதையெல்லாம் இழந்துவிட்டு வெளிநாடு சென்றுதான் ஆக வேண்டுமா என குழப்பமாக இருந்தது. சரியான முடிவெடுக்க அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். முதலில் வரும் மாப்பிள்ளைக்கு தன்னை பிடிந்திருக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தாள்.
நல்ல உயரம் நல்ல நிறமாக பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தான் ஆகாஷ். ஆச்சரியமாக அவனுக்கும் அனாமிகாவைப் பிடித்திருந்தது. உடனே எப்படியாவது இந்த சம்பந்தத்தை பேசி முடித்து ஆவணியில் திருமணம் செய்துவிட வேண்டுமென அவளின் அப்பாவும் அம்மாவும் முடிவு செய்தனர். விசாரித்துப் பார்க்கையில் சுமதிக்கு தூரத்து சொந்தமாக இருப்பதால் அப்போதைக்கு திருமணத்தை நிச்சயிக்க வெற்றிலைப்பாக்கு தாம்பலத்தை மாற்றிக் கொண்டு திருமண வேலைகளை விறுவிறுப்பாக அன்றே ஆரம்பித்துவிட்டார்கள்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்பு அன்றுதான் அலுவலகம் வந்திருந்தாள் அனாமிகா. அங்கு அவளுக்கு தலைக்கு மேலே வேலைகள் காத்துக் கொண்டிருந்தன. பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருந்த பொழுதுதான் பியூன் மாரிமுத்து அவளைச் சந்திப்பதற்காக ஆகாஷ் வந்திருப்பதாக சொல்லிவிட்டுச் சென்றான்
அனாமிகாவுக்கு இறக்கைகள் முளைப்பதைப் போல உணர்ந்தாள். உடம்பெல்லாம் சிலிர்த்து அடங்கியது. இத்தனை மாப்பிள்ளைகள் வந்து பார்த்து தன்னை பிடிக்காமலிருக்க, இவன் தன்னை மட்டுமே விரும்பி பார்க்க வந்திருக்கிறான் என்பது கிளர்ச்சியாக இருந்தது. அங்கிருந்த கண்ணாடியில் சிகையினைத் திருத்தி முகத்தினை சரிப்பார்த்துக் கொண்டு அவனை ஆர்வமாக சந்திக்கச் சென்றாள்.
பெண் பார்க்க வந்தபொழுதுகூட அவனை சரியாகவே பார்க்கவில்லை. தூரத்திலிருந்து ஒரு முறை பார்த்ததோடு நிறுத்திக்கொண்டாள். எதற்கு நன்றாகப் பார்த்துக் கொண்டு? அப்புறம் பிடிக்கவில்லையெனில் மனசு சங்கடப்பட்டுக் கொண்டு என இருந்துவிட்டாள். அவளது விருப்பங்கள் எதுவுமே முக்கியம் இல்லையே! எப்படியாவது அவளை கல்யாணச் சந்தையில் விற்றுவிட வேண்டும் என்பதுதானே வீட்டில் உள்ளவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
அங்கே கடந்து செல்பவர்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஆகாஷ். இவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டுக்கொண்டு கைகளை அசைத்தான். இப்பொழுதுதான் அவனை நன்றாகப் பார்த்தாள். அரக்கு நிறத்தில் அணிந்திருந்த சட்டை அவனை இன்னும் அழகனாகக் காட்டியது. முகத்தில் சின்ன யோசனையோடு அனாமிகா அவனருகே சென்றதும் அவனாகவே உரையாடலை ஆரம்பித்தான்
‘நீ எத்தனை வருஷமா இங்க வேலை செய்யுற? என்ன ஒரு மூணு வருஷமா வேலை பார்ப்பீயா? பார்த்தாலே தெரியுது நல்ல கம்பெனி, உனக்கு வேலை பார்க்குறது ரொம்ப பிடிக்கும் போல’ என கேள்விகளைக் கேட்டு பதிலையும் அவனே சொல்லிக் கொண்டான். பேசிப் பழக்கமில்லாத மனிதனின் ஒருமை உறுத்தியது.
“எங்க வீட்ல நிறைய அழகான பொண்ணுங்களெல்லாம் பார்த்தாங்க.. ஆனா, எனக்கென்னவோ உன்னைதான் பிடிச்சிது.” – என்பதில் அழுத்திய ஆனா-வில் அவளது அழகின்மை நைச்சிதமாகக் சுட்டிக்காட்டப்பட்டது.
‘உனக்கு எவ்வளவு சம்பளம் தர்றாங்க? என்ன ஒரு அறுபது ரூபாய் இருக்குமா? பெரிய ஆபிஸா இருக்கே!’ என மறுபடியும் கேள்விகளைக் கேட்டு, பதிலையும் அவனே சொல்லிக்கொண்டு ஒரு சாதாரண பதிலைக் கூட அவளிடமிருந்து பெற பொறுமை இல்லாமல் நியாயமான அவளுக்கான இடத்தை தொடர்ந்து நிராகரித்துக் கொண்டே இருந்தான்.
“கல்யாணம் செய்துகிட்டு உன்னையும் கூட்டிட்டு போறதாதான் இருந்தேன். ஆனால், இவ்வளவு சம்பாதிக்கிறப்ப அதை நான் ஏன் கெடுக்கணும்? கல்யாணத்துக்கப்பறமா நீ இங்கையே வேலை பார்க்கலாம். நல்ல சம்பளம் வருது, நாம ஏன் அதை விடணும்? ஊர்ல இடம் இருக்கு, லோன் போட்டீன்னா பெரிய வீடா நமக்கு கட்டிடலாம். நான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வந்துட்டு ஊருக்கு போறேன்” என்றவன் தன்னுடைய விருப்பத்தை கேட்கவே கேட்காதது அவளுக்கு சோர்வாக வித்யாசமாகப் பட்டது. தன்னுடைய சம்பளப்பணத்தை உபயோகித்துக் கொள்வது பற்றி கூச்சமே இல்லாமல் அவன் பேசியது சுத்தமாக அவளுக்குப் பிடிக்கவில்லை. ”சரி, நான் கிளம்புறேன். கல்யாணத் தேதியை குறிச்சிடலாம். அப்பறம் ஏன் நீ இப்படி டல் கலராவே புடவை கட்டுற? பொண்ணு பார்க்க வந்தப்பவும் சரி, இன்னைக்கும் சரி நல்லாவே இல்லை. நல்லா பிரைட் கலரா கட்டு. எனக்கு அதுதான் பிடிக்கும், சரியா?” எனச்சொல்லிவிட்டு நகர்ந்தான் ஆகாஷ்
வந்ததிலிருந்து விடைபெற்றுச்செல்லும் வரை அவளை அமரச்சொல்லாமல் நிற்க வைத்துக் கொண்டே அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு பதில்கூட பேசவிடாமல் அதை எதிர்ப்பார்க்காமல் எழுந்து செல்பவனை எந்தவித உணர்ச்சியின்றி முடி உதிர்த்த மலைமுகட்டு பருந்து போல செய்வதறியாது வெறுமென வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“என்ன மேடம் வெயில் இப்படி மூஞ்சில சுள்ளுனு அடிக்கிது. அப்படியே நிக்கிறீங்க? அப்படி என்ன யோசனை எந்த நாட்டைப் பிடிக்க போறீங்க? என சத்தமாகக் கேட்டுவிட்டுச் சிரித்தான் குகன்
குகன் அவளின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வான். கணினியின் அனைத்து பாகங்களும் அதன் பிரச்சினைகளும் அவனுக்கு அத்துப்படி. அதனால் அலுவல்களில் எந்த இடையூறு இருந்தாலும் அவனைத்தான் முதலில் அணுக வேண்டி வரும், நல்ல அறிவாளி.
“எங்க சொந்தக்காரங்க பார்க்க வந்தாங்க, அதான் பேசிட்டு இருந்தேன்” என்றவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ”அப்படியா, எனக்கு அப்படித் தெரியலையே, அவரு பேசிட்டே இருந்தாரு, நீங்க கேட்டுக்கிட்டே இருந்தீங்க” எனச் சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான்.
“இரண்டு நாளா நீங்க ஆபிஸ்க்கு வராம ஆபிஸ் நல்லாவே இல்லை மேடம். சின்னதா ஒரு வீடு கட்டி கிரகபிரேவேசம் பண்ணோம்ல்ல மேடம்? அதுக்குகூட நீங்க வரவே இல்லை. நான் உங்கள ரொம்ப எதிர்பார்த்தேன். ஏன் மேடம் டல்லா இருக்கீங்க? உடம்பு எதாவது சரியில்லையா? எதுனா சொல்லுங்க மேடம், துணைக்கு நான் வர்றேன்” என்று பரபரப்பாக கூறினான் குகன்
“அதெல்லாம் இல்லைங்க குகன். வீட்ல ஒரு விசேஷம், அவ்வளவுதான். நீங்க பதறாதீங்க” என புன்னகைப்பவளை மெய்மறந்து பார்த்தான் அவன்
“ஏன் மேடம், எத்தன நாளா உங்கள எங்க வீட்டுக்கு கூப்பிடுறேன்? நீங்க வரவே மாட்டேங்கிறீங்க. எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவீங்களா? எங்க அம்மாகிட்ட உங்களப்பத்தி சொல்லிட்டே இருப்பேன் மேடம். நீங்க பண்றதெல்லாம் சாதாரண செயல் இல்ல. எத்தன பேருக்கு இப்படி மனசு வரும்? எங்க அம்மாவும் ஒருக்காலத்துல ஆபிஸ்ல்ல கூட்டிட்டு இருந்தவங்கதான். எங்க அப்பா அம்மாவுக்கு இருபத்தெட்டு வயசாகும் போதே குடிச்சி குடிச்சி செத்துப்போயிட்டாரு. கையில இரண்டு புள்ளைங்கள வச்சிட்டு எங்கம்மா படாத பாடு பட்டுச்சி. ஒரு வேளை சாப்பிடுறதுக்கே காசு இல்லாதப்ப எப்படி படிக்க வைக்க முடியும்? ஆனால், எப்படியோ எங்க அம்மா முட்டி மோதி படிக்க வச்சிது. நீங்க நம்ம ஆபிஸ்ல்ல வேலை பார்க்கிற செல்லம்மாவோட மூணு புள்ளைங்களையும் படிக்க வைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க யாருக்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாலும் செல்லம்மா எங்க வீட்டுக்கிட்டதான் இருக்கு. அது எங்க அம்மாகிட்ட சொன்னத நான் கேட்டேன்
நீங்க தேவதை மேடம். உங்க மனசு இருக்கிற அழகு யாருக்குமே இல்லை. அதுமட்டுமில்ல குணத்துல மட்டுமில்ல நீங்களே அழகுதான். இந்தப் புடவை உங்களுக்கு அவ்வளவு அழகா பாந்தமா இருக்கு. நீங்க சொல்லலேன்னாலும் உங்களுக்கு கல்யாணம்ன்னு கேள்விப்பட்டேன். அந்த மனுசன் மாதிரி அதிஷ்டசாலி இந்த உலகத்துலையே இல்லை” எனச் சொல்லிவிட்டு நெகிழ்ந்தபடியே தன்னைப் பார்ப்பவனைக் கண்டு மெலிதாகப் புன்னகைத்தாள் அனாமிகா. அடிபட்ட குழந்தை தாயைத் தேடிக்கொண்டு ஓடுவது போல தேம்பிக் கொண்டிருந்த அவளது அடிபட்ட சுயம் அவனது வார்த்தைகளில் பெரும் ஆறுதலடைந்தது.
இன்னும் நிச்சயத்தார்த்தத்திற்கு இரண்டு நாட்களே எஞ்சி இருந்தது. வீட்டில் விழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டார்கள். யாரையெல்லாம் விழாவிற்கு அழைப்பது எனப் பேசி முடிவு செய்வதற்காக மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றிருந்தார்கள் அனாமிகாவின் அப்பாவும் அம்மாவும்.
ஆகாஷ் பேசிச்சென்றதெல்லாம் அம்மாவிடம் சொல்லலாமா வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது அனாமிகாவிற்கு. இவன் வெளிநாடு கூட்டிச் செல்லவில்லை என்பதைக் கூறினால் அவளின் அப்பா ஒத்துக்கொள்வாரா எனத் தெரியவில்லை. திருமணம் முடிந்தபிறகு கணவனும் மனைவியும் பிரிந்திருப்பதுஅவளின் அப்பாவிற்கு கஷ்டமாக இருக்கும். எப்படி இருந்தாலும் அவளின் அப்பாவிற்காகவது அவளின் மீது அன்பும் பாசமும் அதிகம் என நம்பினாள்
அன்று அலுவலக் கணினியில் குளறுபடி காரணமாக கோப்புகள் தவறாகப் பதிவாக அப்பொழுதுதான் குகனைத் தேடினாள் அனாமிகா. இந்த பிரச்சினைகளின் மிகுதியில் அவனை மூன்று நாட்களாக பார்க்கவே இல்லை என்பதை கவனிக்கத் தவறியிருந்தாள். காலை வரும்பொழுது வணக்கம் சொல்வதிலிருந்து மாலை வரும்வரை அவளோடு எதாவது பேசிக் கொண்டே இருப்பான். அவள் முகம் வாடி இருக்கும் சமயங்களிலெல்லாம் எங்கிருந்தாவது வந்து எதையாவது சொல்லி புன்னகைக்க வைத்து விடுவான். அவன் இல்லாத போதுதான் அவனின் இன்மை பெரிதாகத் தோன்றியது. அவளுக்கு எதையோ இழந்தது போலிருந்தது. அலுவலகத்தில் விசாரித்த பொழுது அவன் வராததற்கு காரணம் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவனது அலைபேசிக்கு இரண்டு முறை அழைத்த போதும் யாரும் எடுக்காதது மனதிற்கு எதோ நடுக்கமாக இருந்தது. உடனே குகனைப் பார்க்கவேண்டும் போல் ஒரு உந்துதல் எழுந்தது. ஓடிச்சென்று அவனது அழகிய சிரிப்பை கண்டால்தான் மனம் குளிர்வடையும் போலிருந்தது. அவன் கிரகப்பிரவேசத்திற்கு கொடுத்திருந்த பத்திரிகை அவளது கைப்பையில்தான் எங்கோ கிடக்கவேண்டும் என நினைத்து தேடிக்கொண்டிருந்த பொழுது அவளது அப்பா அலைபேசியில் அழைத்தார்.
“அனாமிகா! இவனுங்க சொந்தக்கார பயலுவோலாச்சே வரதட்சணையெல்லாம் கேக்கமாட்டானுங்க நினைச்சேன்மா. இப்ப திடீர்ன்னு உங்க பொண்ணு நிறம் குறைச்சலா இருக்கு அது இதுன்னு நூறு பவுனு கேக்கிறானுங்க. நான் எப்படி இவ்வளவு போடுவேன்னு கேட்டதுக்கு கல்யாணத்த நிறுத்திருவேன்னு சொல்றாங்கம்மா. கல்யாணத்த இப்ப நிப்பாட்டுனா நம்ம கௌரவம் என்னாகுறது? நான் எப்படியாவது தலையை வித்தாவது இந்தக்கல்யாணத்தை பண்ணியே ஆகணும்.நமக்கு கௌரவம்தான் முக்கியம். நீ ஆபிஸ்ல்ல லோன் போட முடியுமான்னு மேனேஜர்ட்ட கேக்கிறியாம்மா? நூறு பவுனு போட்ருவோம். கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேணா வேலைக்கு போகலாம்ன்னு சொல்றாங்க. வெளிநாடு அப்பறமா போயிக்கலாம். நமக்கு மானம்தான் முக்கியம்” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த பின் சிக்கலாகிக்கொண்டே இருந்த இரு இழைகள் அதுவே பிரிந்து தெளிந்து தனியே வந்தது போல மனசுக்குப் பட்டது. தன்னைப்பற்றி தனது விருப்பங்களைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லாதது தெளிவாகப் புரிந்தது. அலைபேசியில் பேசியபடியே கைப்பைக்குள் துழாவிக் கொண்டிருந்தவளின் கைகளில் குகனின் முகவரி அகப்பட்டது. அவனைப் பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என தோன்றிக் கொண்டே இருந்தது.
எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து வாசலில் நின்று தயங்கியபடியே உள்ளே எட்டிப் பார்த்தாள் அனாமிகா. அங்கு கைலியோடு நின்றுக்கொண்டு கிளுவ வேலிகளை நெருக்கி கயிறுகளை கட்டி இணைத்துக் கொண்டிருந்தான் குகன். அவனைப் பார்த்ததும் உயிரே வந்தது போலிருந்தது. ஒரு பொருளின் உயர்ந்த மதிப்பை அறிய இன்னொரு பொருளின் தாழ்ந்த தரம் தெரியவேண்டி உள்ளது என நினைத்துக் கொண்டாள்.
வேலிப்படலை நறுக்க கத்தியை எடுக்கத் திரும்பியவன் பார்வையில் அனாமிகா பட்டதும் பதறி, ”வாங்க மேடம், நீங்க எப்படி இங்க? “நிச்சயதார்த்தத்துக்கு அழைக்க வந்தீங்களா மேடம்?” எனத் திணறினான்
அவன் தடுமாறுவதைப் பார்த்து நிமிர்ந்து கேள்வியோடு பார்த்த குகனின் அம்மா செல்லாயி உள்ளிருந்து எழுந்து வந்து அனாமிகாவின் கரங்களைப் பிடித்துக்கொண்டாள்.
“வாம்மா நீதானம்மா அனாமிகா? ஆபிஸ் போட்டோவில குகன் காட்டிருக்கான். அந்தப் போட்டோவ பெருசு பண்ணி வாசல்லையே மாட்டி வச்சிட்டு பொழுதானக்கையும் பார்த்துட்டே இருப்பான். டேய் குகனு, வீட்ல பாலு இல்லை. முதன் முறையா பாப்பா வீட்டுக்கு வந்துருக்கு. ஓடிப்போயி பாலு வாங்கிட்டு எதாவது இனிப்பு வாங்கிட்டு வாய்யா” என்றாள் செல்லாயி. உடனே பணத்தையும் பையையும் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி விட்டான் குகன்.
“அச்சச்சோ அதெல்லாம் வேணாங்க அம்மா. சும்மா இவரைக் காணோமேன்னு பார்த்துட்டு போகலாம்ன்னுதான் வந்தேன். நேரமாகிருச்சி வீட்டுக்கு கிளம்பணும்” என்று சொல்லியதை காதில் வாங்கக்கூட அவ்விடத்தில் குகன் இல்லை. அவன் ஏற்கனவே சென்றிருந்தான்.
“என்னாச்சோ ஏதாச்சோ தெரியலப்பா, பத்து நாளா புள்ளை மூஞ்சே சரியில்லை, சரியா சாப்பிடல தூங்கல, பித்து பிடிச்ச மாதிரி இருக்கான். இரண்டு நாளா ஆபிஸ் போகமாட்டேனுட்டான். என்னடா இப்படி பண்றன்னு கேட்டதுக்கு வேலைய விட்டு நிக்கப்போறேன். வேற ஊருக்கு வேலைக்கு போகப்போறேன்னு சொல்றான். எதோ ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு, வந்து பொண்ணு கேளுமான்னு சொல்லிட்டு இருந்தான். என்னாச்சுன்னே புரியல திடீர்ன்னு இப்படி பண்றான். எதாவது வாயைத் திறந்து சொன்னாதான நமக்குப் புரியும்? பயந்து வருதும்மா, ஆசை ஆசையா வீடு கட்டுனான். இப்ப அவசரமா இந்த ஊரை காலி பண்ணிட்டு போகிற அளவுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல. சரிம்மா, குகன்ட்ட சொல்ல மறந்துட்டேன், வீட்ல சுத்தமா காபித்தூள் இல்லை, அவனுக்கு போன் பண்ணி வாங்கிட்டு வரச்சொல்லுமா. இதோ இந்தப்பாத்திரத்தை விளக்கிட்டு வந்துடுறேன்” என உள்ளே சென்றாள் செல்லாயி.
இத்தனை ஆழமாக ஒரு பெண்ணை குகன் காதலிக்கிறான் என்பதே அவளுக்குப் பொறாமையாக இருந்தது. தனக்கெல்லாம் இப்படி ஒரு அன்பு கிடைக்கவே இல்லையே என மனதிற்குள் குமைந்து மருகினாள். எப்படியே மனதிற்குள் பதிந்துவிட்ட குகனின் புன்னகை அவளை அவனின்பால் ஏங்கச்செய்தது
அனாமிகா மொபைலை எடுத்து குகனை அழைத்தாள். அவள் இதுவரை மொபைலில் அவனிடம் பேசியதே இல்லை. அவனின் மொபைல் ‘பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி, சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?’ என கட்டிலில் பாடியபடியே கிடந்தது. அவசரத்தில் மொபைலை கட்டிலிலேயே விட்டு விட்டுச் சென்றிருந்தான் குகன். மொபைல் ஒலித்தபடியே பளீரிட முகப்பு படத்தை எட்டிப் பார்த்தாள் அனாமிகா. அதில் பழுப்பு நிறச்சேலையில் சிரித்துக் கொண்டிருந்தது அவளது புகைப்படம். அனாமிகா என்ற பெயருக்கு பதிலாக ‘பொண்டாட்டி’ என பதிவு செய்யப்பட்டிருந்ததைப் பார்த்தவள் அருகிலிருந்த புன்னைமரத்தை சிரித்துக் கொண்டே சிறுமியைப் போல குலுக்கினாள் பழுப்புநிறப்பூக்கள் அவள் மீது கொட்டி தரையெங்கும் சிதறின.



