
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன?
–கவியரசர் கண்ணதாசன்
“கார்த்திக் எதுக்கு வேலைக்கு அமெரிக்கா போகணும்? சென்னையிலே நல்ல வேலை. கை நிறைய சம்பளம். சௌம்யாவுக்கும் நல்ல வேலை. சொந்த வீடு, வசதிக்கு குறைச்சல் இல்லை. இதை எல்லாத்தையும் விட்டுட்டு, இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்ற மாதிரி அமெரிக்கா போகத்தான் வேணுமா? திடீர்ன்னு எதுக்கு இந்த அமெரிக்கா மோகம்?” என்று பொரிந்து தள்ளினாள் கார்த்திக் அம்மா மைதிலி.
கணவர் சிவராமன் மௌனமாக அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் பேசவில்லை.
“நீங்க எல்லாத்துக்கும் வாய் மூடி மௌனமா இருந்தா எப்படி? அப்பா, அம்மாவிற்கு வயசாயிடுச்சு. பெற்றவங்களை, அவங்க வயசான காலத்திலே பார்த்துக்க வேண்டியது பிள்ளைகளோட கடமை அப்படின்னு அவனுக்குத் தெரியணும். இல்லை பிள்ளைக்கு அப்பா, நீங்களாவது எடுத்துச் சொல்ல வேண்டாமா? அதுக்கு உங்களுக்கு உரிமை இல்லையா? இருக்கிற ஒரே பிள்ளையையும், அன்னிய நாட்டுக்கு அனுப்பிச்சுட்டு, நாம இங்கே அனாதையா இருக்கணுமா?” என்று தொடர்ந்தாள் மைதிலி.
மௌனம் கலைத்த சிவராமன் “என்ன சொல்ற நீ? நம்மளை நடுத்தெருவிலே விட்டுப் போகிற மாதிரி பேசற. பெங்களூரில ‘ஹெரிடேஜ்’ அப்படின்னு ஒரு மூத்த குடிமக்கள் இல்லத்திலே இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கான். ஏசி ஹோம். உனக்கு சமைக்கிறது, வீட்டைப் பாத்துக்கிறது அப்படின்னு ஒரு வேலை கிடையாது. உதவிக்கு ஆட்கள், மருத்துவ வசதி, நடக்கிறதுக்கு இடம் அப்படின்னு சகல வசதிகளும் இருக்குன்னு உன்னுடைய தம்பி சொல்றான். கார்த்திக் அங்கே போனதற்கு அப்புறம் விசாவுக்கு முயற்சி செய்யப் போறான். அமெரிக்கா விசா கிடைச்சப்புறம் வருடத்திலே ஆறு மாதம் இருந்துட்டு வரலாம்” என்று சமாதானம் செய்தார் சிவராமன்.
சிவராமன், மைதிலி தம்பதியர்க்கு ஒரே மகன் கார்த்திக். சென்னையில், அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் நல்ல நிறுவனத்தில் பணி புரிகிறார்கள். அமெரிக்காவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருவருக்கும் உயர் பதவி கிடைத்துள்ளது. அப்பா, அம்மாவிற்கு பெங்களூரில் ஒரு மூத்த குடிமக்கள் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்து அவர்கள் இருவரும் அமெரிக்கா செல்கிறார்கள். அந்த நிறுவனத்தின் பெங்களூர் கிளையில், பயிற்சி எடுத்துக் கொள்ள, கார்த்திக், சௌம்யா பெங்களூர் சென்றுள்ளார்கள். மைதிலியின் தம்பி திவாகர், அக்கா, மாமா ஆகியோரைக் காரில் பெங்களூர் கூட்டிச் செல்வதாக ஏற்பாடு. திவாகர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
“இத்தனை வயதுக்கப்புறம், 18, 20 மணி நேரம் விமானப் பயணம் கஷ்டமாக இருக்காதா? நாம அமெரிக்கா போய் சுத்திப் பாத்திருக்கோம். எனக்கு அதில இப்ப ஆசையில்லை. நம்ம ஊரில இருந்துண்டு கோயில், குளம் அப்படின்னு நிம்மதியா இருக்கலாம். நீங்க அமெரிக்கா போக வேண்டாம் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா கார்த்திக் நிச்சயமாக கேட்டிருப்பான். அவன் எதைக் கேட்டாலும், சரின்னு சொல்லுவேளே தவிர, மறுத்துப் பேச மாட்டேள். நீங்க அவங்கிட்ட வேண்டாம்ன்னு சொல்லாம, நான் சொல்றது தப்புன்னு நானும் சொல்லலை” என்று பெருமூச்சு விட்டாள் மைதிலி.
“பெரிய நிறுவனம், பொறுப்பான வேலை அப்படின்னு வரும் போது, வேண்டாம் அப்படின்னு சொல்லி நம்ம குழந்தைகள் முன்னேற்றத்தை நாமே தடுக்கலாமா? உன்னோட தம்பி திவாகர் நம்ம இரண்டு பேரையும் பெங்களூர் கூட்டிக்கிட்டு போறதுக்கு வரான். அவன் கிட்ட உன்னோட குறையைச் சொல்லு. அவன் சொன்னாத்தான் உனக்குப் புரியும். நான் எதைச் சொன்னாலும் நீ ஒத்துக்கப் போறதில்லை” என்றார் சிவராமன்.
“திவாகர் கிட்ட சொல்றதில ஒரு பிரயோஜனமும் இல்லை. அவன் என்னிக்கு நமக்கு சாதகமா பேசி இருக்கான். அவன் எப்போதுமே கார்த்திக் சொல்றது சரின்னு சொல்வான்.” என்றாள் மைதிலி.
“என்ன அக்கா, மாமா இரண்டு பேரும் பெங்களூர் போகத் தயாராக இருக்கேள் போலிருக்கே. கொடுத்து வைச்சவங்க. நிம்மதியா, முதியோர் இல்லத்திலே வசதியான வாழ்க்கை. கரண்ட் பில் கட்டணும். வேலைக்காரி சரியில்லை. கேஸ் தீந்து போச்சு அப்படின்னு எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம். மாமாவுக்கு கூடுதலா அக்கா சமையலிலிருந்து விடுதலை. நல்ல சாப்பாடு கிடைக்கும்” என்று சொல்லியபடி வந்தான் திவாகர்.
“என்னோட வாயைக் கிளராதே, திவாகர். இராமர் வனவாசம் போனா மாதிரி, நாங்களும் வீட்டைத் துறந்து போறோம். எனக்கு இதிலே கொஞ்சம் கூட இஷ்டமில்லை. அப்பா சரி சொல்லிட்டார். மாமா திவாகர் ஆதரவு இருக்கு. அப்புறம் நான் என்ன நினைச்சா யாருக்கு என்ன?” என்றாள் மைதிலி.
“அக்கா, ஒரு விஷயத்திலே உன்னைப் பாராட்டணும். சின்ன வயசிலேயிருந்து எல்லாத்துக்கும் புலம்புவே. அதை நீ இன்னும் விடலை. என்னமோ உன்னோட பையன் உன்னை அத்வான காட்டிலே விட்டுட்டுப் போற மாதிரி பேசறியே. எத்தனை இடத்திலே தேடியலைஞ்சு இந்த முதியோர் இல்லத்தைக் கண்டு பிடிச்சிருக்கான், கார்த்திக். அட்வான்ஸ், வாடகை அதிகமா இருக்கே அப்படின்னு சொன்னேன். பரவாயில்லை மாமா, மருத்துவ வசதி, பரிவா பார்த்துப்பாங்க அப்படின்னு எல்லோரும் சொல்றாங்க. நான் பக்கத்திலே இல்லையே அப்படிங்கிற குறை இல்லாம, அப்பா, அம்மா இருக்கணும். அதுதான் முக்கியம்ன்னு சொன்னான் கார்த்திக்” என்று முடித்தான் திவாகர்.
“கார்த்திக் பார்த்திருக்கிற இடத்தைப் பத்திக் குறை சொல்லலை. அறுபது வயதைத் தாண்டினாலே, நம்முடைய குழந்தைகள், வயதான காலத்திலே நம்மை கண்ணும் கருத்துமா பார்த்துக்கும் அப்படின்னு பெற்றோர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது சகஜம் தானே. அப்படி எதிர்பார்க்கிறது எங்களோட உரிமை இல்லையா? அப்பா, அம்மாவை வயதான காலத்திலே பார்த்துக்கிறது பிள்ளைகளோட கடமை இல்லையா. எத்தனை தான் பணத்தைக் கொட்டி ஆட்களை வைச்சாலும், அதுலே பிள்ளைகள் காட்டற பாசமும், பரிவும் இருக்குமா?” என்று பொரிந்து தள்ளினாள் மைதிலி.
திவாகர் சிரித்தான். “நல்லா இருக்கு அக்கா. இப்போ உரிமை, கடமை அப்படின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே. இதைப் போலவே, சின்ன வயசிலே, பள்ளிக்கூடம் போற பருவத்திலே உன்னோட மகனுக்குள்ள உரிமையை நினைத்துப் பார்த்து, உன்னோட கடமையை நீ செய்தியா. கொஞ்சம் யோசித்துப் பார்” என்றான் திவாகர்.
மைதிலி திடுக்கிட்டாள். “என்ன சொல்றே திவாகர் நீ? சுத்தி வளைச்சு பழியை என் மேலே போடற? நான் திவாகருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யலை அப்படின்னு சொல்றியா? அவனை நல்ல பள்ளிகூடம், காலேஜ் அப்படின்னு பார்த்துப் படிக்க வைச்சோம். எது பிடிக்குமோ, அதை எடுத்துப் படின்னு சுதந்திரம் கொடுத்தோம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் அவன் மீது திணிக்கலை. கல்யாணமும் அவன் ஆசைப்பட்ட பெண்ணோடு பண்ணி வைச்சோம். பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமையிலே எதைச் செய்யலை, என்ன குறை வைச்சோம்ன்னு சொல்றே” என்றாள் மைதிலி.
“அக்கா, நீ தப்பா நினைக்காதே. உன்னை குறை சொல்லணும் அப்படிங்கிற எண்ணத்திலே நான் எதையும் சொல்லலை. வயசான காலத்திலே, உன்னுடைய பையன் உன்னோடவே இருக்கணும்ன்னு ஆசைப்படறது என்னோட உரிமை அப்படின்னு நீ நினைக்கிற மாதிரி, சின்ன வயசிலே அப்பா, அம்மாவோட இருக்கணும்ன்னு கார்த்திக் ஆசைப் பட்டிருப்பான் இல்லையா? அது அவனோட உரிமை இல்லையா? அவன் பக்கத்திலே இருந்து அவனுடைய தேவைகளை நீ கவனிச்சிக்கிட்டியா”? என்றான் திவாகர்.
“நான் என்ன பண்ண முடியும். உங்க மாமாவுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலே பொறுப்பான வேலை. அதனால அடிக்கடி வெவ்வேறு கிளைக்கு மாற்றம் இருந்தது. அவனும் எங்க கூட வந்தா, வேற வேற பள்ளிகளில படிச்சு படிப்பு கெட்டுப் போகக் கூடாது அப்படின்னு தாத்தா, பாட்டி வீட்டில சென்னையில படிக்க வைச்சோம். பெரிய வகுப்புக்கு போர்டிங்க் ஸ்கூல்ல சேர்த்தோம். அப்புறம் காலேஜ் ஹாஸ்டல். இதிலே என்ன தப்பு?”
“மாமாவுக்கு வங்கி வேலை. சரி, அவர் போகத்தான் வேணும். ஆனால், வேலைக்குப் போகாத நீ கூடவே இருந்து கார்த்திக்கை கவனிச்சிக்கிட்டு இருந்திருக்கலாம் இல்லையா? அவனுக்கு விவரம் புரிய வரைக்கும் நீ அவன் கூட, அவனுக்குத் துணையாக இருந்திருக்கலாமே.” என்றான் திவாகர்.
“நீ சொல்றது சரி, திவாகர். இந்த விஷயமா எங்களுக்குள்ளே நிறைய வாக்குவாதம், சண்டை எல்லாம் நடந்திருக்கு. எனக்கு உணவுப் பிரச்சனை வரக்கூடாது அப்படின்னு செய்யறதா அவளுடைய நினைப்பு. எங்கே, குடும்பத்தை விட்டு வேறே பொண்ணு பின்னால போயிடுவேனோ அப்படின்னு அவளுக்குத் தேவையில்லாத கவலை. கடைசிலே, அவனுக்கு கிடைக்க வேண்டிய அப்பா, அம்மா பாசம் பூரணமா கிடைக்கலியோ அப்படிங்கிற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.”
“கார்த்திக் பள்ளியிலே நிறைய கலைநிகழ்ச்சிகளில பரிசு வாங்கியிருக்கான். மற்ற பசங்களோட அப்பா, அம்மா பார்க்க வரும் போது, என்னோட பெற்றோர் வரலியே அப்படிங்கிற ஏக்கம் அவனுக்கு உண்டு. பள்ளிக்கூடத்திலே நடக்கிற “பேரண்ட்ஸ் – டீச்சர்ஸ் மீட்டிங்” இதுக்கெல்லாம். ஒரு முறை கூட பெற்றோர்கள் வரலைன்னு வருத்தப் பட்டிருக்கான்.”
“சின்ன வயசிலே, குழந்தையுடைய பிஞ்சு விரலைப் பிடிச்சுக்கிட்டு அவனை பள்ளிக்கூடத்திற்கும் மற்ற இடங்களுக்கும் கூட்டிக்கிட்டுப் போனால், அந்த உணர்வு அவனோட இருக்கும். வயதான காலத்திலே, அவங்களை நம்ம கூட வைச்சுக்கிட்டு காப்பாத்தறது நம்முடைய கடமை அப்படின்னு புரியும். அது இல்லாம, நல்ல போர்டிங் ஸ்கூல்ல போட்டிருக்கேன், அதுலே என்ன தப்புன்னு பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்தால், நாம நல்ல முதியோர் இல்லத்திலே சேர்த்திருக்கோம், இதிலே தப்பு என்ன அப்படின்னு பிள்ளைகளும் நினைக்கலாம் இல்லையா?” என்றான் திவாகர்.
“நீ சொன்னது ரொம்பவுமே சரி, திவாகர். நான் எல்லாத்தையும் என்னுடைய கோணத்திலிருந்து பார்த்தேன். கார்த்திக் மனசிலே அப்பா, அம்மாவோட இல்லையே அப்படின்னு ஒரு ஏக்கம் இருக்கும் அப்படின்னு புரிஞ்சிக்கத் தவறிட்டேன். என்னுடைய கடமையிலே செய்த தவறு எனக்குப் புரியறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்” என்றாள் மைதிலி.
திவாகர், மைதிலி, சிவராமன் மூவரும் பெங்களூர் அடைந்தார்கள். ஹெரிடேஜ் என்று பெயர் பொரிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பார்த்ததும், “என்ன திவாகர், முதியோர் இல்லம் சின்னதாக இருக்கும் அப்படின்னு பார்த்தால், பெரிய குடியிருப்பு மாதிரி இருக்கு. செக்யூரிட்டி, கார்பார்க்க்கிங், பெரிய பார்க், குழந்தைகள் விளையாட்டு வசதிகள் அப்படின்னு தடபுடலா இருக்கே” என்றார் சிவராமன், கண் சிமிட்டியபடி.
சிரித்துக் கொண்ட திவாகர், பதில் சொல்லவில்லை.
அவர்கள் இல்லத்தை அடைந்ததும் மைதிலியின் ஆச்சரியம் அதிகமாகியது. “வெல்கம்” பதாகை, நெருங்கிய உறவினர்கள் குழுமியிருந்தனர். “வா அம்மா, வா அப்பா, நம்மோட புது வீட்டுக்கு” என்று அழைத்தார்கள் கார்த்திக், சௌம்யா தம்பதியினர்.
“என்ன கார்த்திக், நான்கு படுக்கையறை அப்படின்னு பெரிய வீடா இருக்கு. முதியோர் இல்லம் மாதிரி இல்லையே.. நீங்க இரண்டு பேரும் அமெரிக்கா போனப்புறம், நாங்க இங்க தனியா இருக்கப் போறோமா?” என்று கேட்டாள் மைதிலி.
“நாங்க எப்போ அமெரிக்க போறோம்? யார் சொன்ன நாங்க அமெரிக்கா போகப் போறதா? நம்ம நான்கு பேரும் இந்த வீட்டில தங்கப் போறோம். எங்க இரண்டு பேருக்கும் அமெரிக்காவிலே வேலை கிடைச்சாலும், உங்களை விட்டு எங்களுக்கு அமெரிக்கா போய் இருக்க விருப்பமில்லை. அதனால, பெங்களூர் ஆபிஸ்லேந்து வேலை செய்யறோம் அப்படின்னு சொன்னோம். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. நடுவிலே, இரண்டு, மூன்று வாரம் மீட்டிங் அப்படின்னு போக வேண்டி இருக்கும். அதுவும், இரண்டு பேரும் ஒன்றாகப் போகாம பாத்துப்போம்.” என்றான் கார்த்திக்.
“ஆமாம், இதை ஏன் முன்னாலே சொல்லலை” என்று கேட்டாள் மைதிலி.
“மாமாவுக்கு எல்லாம் தெரியும். இப்ப சொல்லாதே, சஸ்பென்ஸா இருக்கட்டும்ன்னு சொன்னார்” என்றான் கார்த்திக்.
“மன்னிச்சிக்கோ அக்கா, உனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் பண்ணனும் அப்படின்னு தான் விஷயத்தை முழுவதும் உனக்கு சொல்லலை. மாமாகிட்டே முழு விஷயத்தையும் சொல்லியிருக்கேன். உன் கிட்ட சொல்லும் போது, அமெரிக்க கம்பெனி வேலை அப்படிங்கிறதை, அமெரிக்காவிலே வேலை. அப்படின்னு நான் தான் மாத்தினேன்” என்றான் திவாகர்.
“உன்னையும், அப்பாவையும் தனியா இருக்க விட்டு நாங்க அமெரிக்காவுக்கு வேலைக்குப் போகப் போறோம் அப்படின்னு நினைச்சியா அம்மா? சின்ன வயசிலே, அப்பாவோட வேலையால, உங்க இரண்டு பேரோடும் சேர்ந்து இருக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கலை. இப்ப சந்தோஷமா நம்ம எல்லோரும் ஒன்றாக இருக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்த வாய்ப்பை பயன் படுத்திக்காம, நாங்க எதுக்கு வெளிநாடு போகணும்” என்றான் கார்த்திக்.
உரிமையைப் பற்றிப் பேசுபவர்கள், தங்களுடைய கடமையைப் பற்றியும் சற்றே சிந்திக்க வேண்டும், அல்லவா ?



