
“அவ்வளவு தானா…? ஒரு பொய் போதுமா சேகர் என்னைத் தூக்கி எறிய?”அவளது கண்ணிமைச் சிறகுகளில் ஏக்கம் படபடத்தது.
அறை முழுவதும் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. உடைந்த பாறை ஒன்று அலைகளால் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு மென்மையாய் கடற்கரையில் கிடப்பது போல், குப்புறப் படுத்து, அரை நிர்வாணமாய் இருந்தவள் அவனையே வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மேஜையில் முழங்கையை வைத்து தலையை அதன்மீது வைத்திருந்தான் சேகர். வானத்தைக் கிழித்த மின்னல் கீற்றுகள், மூடியிருந்த கண்ணாடி ஜன்னலிலிருந்து அவன் மீது விழுந்து கொண்டிருந்தன.
“செண்பா…அனுதாபம் தேடிக்குறியா? நீ எவ்வளவு முயற்சி செஞ்சாலும், அது உனக்கு கிடைக்காது…”
“உனக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணத் தயாராக இருக்கேன்…என்னை மன்னிக்க மாட்டியா? ஒரு தடவை திரும்பி என்னைப் பாரு…இல்லன்னா என்னை நீயே கொன்னுப் போட்டிடு…மண்ணுக்குள்ள புதைச்சு புதைச்சு இந்த சதையெல்லாம் வெட்டி வெட்டி சுக்கு நூறாக பிடுங்கி வீசிடு சேகர். என்னை வாழ விடாத…”
அந்த மையிருட்டிலிருந்து அவன் திரும்பி அவள் அருகே வந்து கழுத்தை நெரித்து அவளை உயர்த்திப் பிடித்தான். இறந்தவனின் குளிர்ந்த கைகள் நம்பமுடியாத அளவுக்கு பலம் கொண்டிருந்தது. அவள் கண்கள் சொருகிய போது பெருமொலியெழுப்பி சிரித்தான். அவள் நெஞ்சத்தை உலுக்கி தடுமாறச் செய்ய அது போதுமானதாக இருந்தது. அந்த சிரிப்பின் முடிவில்… “அவ்வளவு எளிதாக எல்லாம் செத்திட முடியாது…” என்று காரி உமிழ்ந்தான்.
“அதெல்லாம் வரம்! நீ சொன்ன பொய் உனக்குள்ளயே கசந்து கசந்து அடியாழம் வரை துருப்பிடிச்சு துருப்பிடிச்சு பெரும் வலியோடு உன்னை உருக்கி எடுக்கனும்….”
அவனிடமிருந்து ஒரு அசுரச் சிரிப்பொன்று பொங்கித் திமிறியது.
அவளது நெஞ்சுக்கூட்டை பிளந்து, எங்கோ ஒரு தொலைதூரத்து இருளில் புதைந்திருக்கும் அவளது எதிர்காலத்திலும் கூட, பத்து வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டஅந்தக் கடந்த காலத்து ஒற்றைப் பொய்யை அது முனகச் செய்தது.
பரத், கைவிரல்களை மடக்கி, கதவினை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். “செண்பா… நீ தொலைஞ்சு போகலடி.. உனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. சிக்கித் தவிக்கத்தான் உனக்கு பிடிச்சிருக்கு.”
மெல்லிய அதிர்வுகளோடு கதவுகளுக்கடியில் விழுந்து அசைந்து கொண்டிருந்த அவன் கால் நிழல்களை, செண்பா உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
“மூனு மாசமாச்சு நான் உன்னைப் பாத்து. உனக்குள்ள நீயே அடைபட்டு அங்கேயே இரு. விதெளட் ஹேவிங் டூ மேக் ஏ சாய்ஸ். கிறுக்கு பிடிச்சிருக்குடி உனக்கு. கிறுக்கு பிடிச்சிருக்கு” கதவுகளில் நெற்றியைச் செலுத்திச் சாய்ந்தான்.
ரெட் லேபிளை ஒரு கிளாசில் ஊற்றி ஒரு மாத்திரையை எடுத்து அதில் போட்டுக் கொண்டாள்.
“நான்தான் தப்பா நெனச்சுட்டேன்டி. உனக்கு நான்தான் தேவையில்லைனு நெனச்சேன். இப்பதான் புரியுது. உனக்கு நீயே தேவையில்லை. உனக்கு எதுவும்…எதுவும்….” இன்னொரு முறை ஓங்கிக் கதவில் அடித்தான். காதுகளை அடைத்துக் கொண்டு “இது சரி வராது… இது சரி வராது…” என்று முணுமுணுத்துக்கொண்டே மூடிய கண்களுடன் சிறிது நேரம் மெய்மறந்து நின்றவள், திடீரென எழுந்து உள்ளத் துடிப்பில் ஒரே பாய்ச்சலாய் அறைக்கதவினருகே சென்றாள்.
“ஒவ்வொரு முறை நெருங்கி வரும் போதெல்லாம் விலகிப் போய் கதவுகளைப் பூட்டி வெச்சுக்குற…என்ன பயம் உனக்கு?” என்றான்.
“எனக்கு எந்த பயமும் இல்ல. கொஞ்சம் கவனமாக இருக்கேன். அவ்வளவுதான்.”
“சேகர் மறுபடியும் வந்தானா?” என்றான்.
பதட்டமாய், “உனக்கு என்ன தெரியும் பரத்? என்னைப் பத்தி எல்லாம் தெரியுமா? யாருக்கும் இது புரியாது….”
“பயித்தியம் நீ. இல்லாதவனை மறக்க முடியாம இப்ப இருக்குற எல்லாரையும் இழந்திட்டு இருக்க…முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு செண்பா… இப்ப, இங்க, அவன் உன் கூட இருக்கானா?”
அதிர்ந்தபடி கீழே குனிந்து “எனக்கு இது வேணாம். யாரும் என்மேல அன்பு செலுத்த வேண்டாம்.”
“எல்லாரும் வாழ்க்கையில தப்பு பன்னுவாங்க. அதைக் கடந்து போறதுதான் வாழ்க்கை. தூக்கி எறிஞ்சிடு அவனை…”
“முடியாதுடா. என் கிட்ட இருந்து அவன் பிரிஞ்சுட்டா என்னால வேற எதையும் நேசிக்க முடியாது.”
“திஸ் இஸ் ஓவர் செண்பா…கேன் யூ ஹியர் மீ? திஸ் இஸ் ஃபக்கிங் ஓவர் பிட்வீன் அஸ்.” என்று கதவை ஓங்கி மிதித்தான்.
புகையிலையின் கடைசி வெடிப்பை ஆழமாக இழுத்து வெளியேவிட்டு, “ஐயம் ஆல்சோ ஃபக்கிங் டன். கெட் லாஸ்ட்.” என்று சிகரெட்டை அறைக்கதவின் மேல் அழுத்தி அணைத்து வீசி எறிந்தாள்.
சற்று நேரத்தில் அவன் கால் நிழல்கள் விலகியதைக் கண்டு, கண்களை மூடிக் கொண்டு, செண்பா மீண்டும் கட்டிலுக்கு வந்து குப்புறப் படுத்தாள்.
ஒரு பெரும் வலியொன்று அவளை வாட்டி எடுப்பது போல் நெடுநேரமாக அலறினாள். செண்பா நெளிந்தும், புரண்டும் தேடி தனது பையிலிருந்த மதுக்குடுவையை எடுத்துத் திறந்து மெதுவாக சிறிது நேரம் குடித்து மீண்டும் மெத்தையில் விழுந்தாள். சிந்தனையில் தொலைந்தவளின் உள்ளத்தில் காலம் அதன் வழியில் வழிந்தோடியது.
அப்போது அவளுக்கு வயது பதினாறு. இரவு பதினொன்று முப்பதிருக்கும். வாளியில் காகிதக் கப்பல் ஒன்றைச் செய்து மிதக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல் அன்றும் குடித்துத் தடுமாறி உள்ளே நுழைந்த சத்யனைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் மணிமேகலை. அவர்களையே பார்த்திருந்த செண்பாவை சத்யன் பார்த்ததும் சட்டென்று திரும்பிக் கொண்டாள். இரண்டு நிமிடங்கள் அம்மாவைக் கொஞ்சித் தீர்க்கும் அப்பாவின் உளறல் மொழியைக் கேட்டபடியே அவள் கப்பலை ஏதோ ஆராய்ச்சி செய்வது போல் பாசாங்கு செய்தாள்.
சத்யனின் முதுகு பொதிகள் ஏற்றி வரி வரியாய் தடித்திருந்ததைக் கண்டு, “நீ தப்பு பண்ணலனு அவருக்கு புரியணும்னா விலகி இருந்தாதான் அவரும் யோசிப்பாரு. இப்படி வாரி வாரி உன்னைக் கொடுத்துட்டே இருந்தா உன் மதிப்பு எவனுக்கும் புரியாது…” அன்றும் ஊர்ப் பெரியவர் சந்தானத்தின் மில்லில் நடந்த அதே திருட்டைப் பற்றி அம்மா பேசுவதைத் தொடர்ந்து அப்பா அமைதியானதைக் கண்டும் காணாமல் இருந்தாள்.
மணிமேகலை திடீரென செண்பாவின் பக்கம் திரும்பி, “இத பாரு… ஏன்டி எதுவும் பேசாம இருக்க..? எப்படி உன்னை எல்லாரும் இந்தத் தெருவுல நடத்துறாங்க? எப்டி எல்லாரும் ஒதுக்குறாங்க? இப்பக் கேளு…”
“ஹே..புள்ள மனசுல விஷத்தை விதைக்காத…”என்று அவளைக் கடிந்து கொண்டு செண்பாவை அருகில் அழைத்து, “என்னாச்சு..?” என்றார். மணிமேகலை இடுப்பு மடிப்பிலிருந்து சீலைப்பிடியை அவிழ்த்து விட்டு கீழே அவனருகே அமர்ந்து, “உம் புள்ள…சாமி செய்யணும்னு சொல்றா…” என்றாள். ஒன்றுக்கு இரண்டு முறை ஆமோதித்து, “ஆமாப்பா நமக்கே நமக்குன்னு ஒரு சாமி…” என்று செண்பா ஆவலுடன் தலையசைத்தாள். “அதான் இருக்கே…” என்று அவள் முகத்தில் ஆச்சரியமூட்டினான்.
பட்டென கைகளுக்கு கிடைத்த கரண்டி ஒன்றை எடுத்து முருகனைப் போல் அமர்ந்தான். செண்பா சிணுங்கிப் போகவும் இருவரும் சிரித்தனர்.
“என்ன கூத்து இதெல்லாம்? நீ என்னடான்னா உன்னைத் திருடன்னு சொன்னவன் கிட்டயே மூட்டைத் தூக்கிட்டு வந்து நிக்குற…இவ என்னடான்னா எவனோ ஒரு சல்லிப்பையலோட மலைக்குப் போய்ட்டு வந்திருக்கா… ரெண்டு பேருக்கும் சொல்றேன் கேட்டுக்கோங்க…இந்த உலகத்துல நல்லது பண்றவங்க எல்லாம் ஒன்னும் அடுத்தவன் நல்லாயிருக்கணும்னு பண்றதில்ல. அவன் அவன் அந்தஸ்துக்கு செய்யுறானுங்க..அடிமையாக்க பாக்குறானுங்க நாரப் பையலுக.. சக மனுஷனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத இடத்துல நம்ம ஏன்யா கையை கட்டிட்டு போகனும்?”
“மணி…வாயை மூடுன்னு சொல்றேன்ல…சின்னப் புள்ள முன்னாடி பெரியவரை மரியாதைக் குறவா பேசிகிட்டு…”
“சும்மா இருய்யா… போய் ஊருல மத்தவன் எல்லாரையும் பாரு. சொல்ல வேண்டியதை தைரியமா சொல்லிகிட்டு…எப்படி வாழனும் நெனைக்குறானுகளோ அப்படி வாழ்ந்துட்டு இருக்குகுறானுங்க… காலம் பூரா நீ மட்டும்தான் கை கட்டி நிக்கப் போற.” எழுந்து ஒரு பாத்திரத்தில் மோர் கடைய ஆரம்பித்தாள்.
“பேசாம இருன்னு சொல்றேன்ல…செண்பா, யாரும்மா அது…?”
“கேளு… கேட்டு தெரிஞ்சுக்கோ…தைரியத்தை நீ உம்பொண்ணு கிட்ட இருந்துதான் கத்துக்கணும்… நீ இப்படி இருக்குறதுனால தான்யா ஊருக்குள்ள ஒரு பையலும் என்னையும் மதிக்க மாட்டுறானுக…’கும்புடு சாமி…கும்புடு சாமி’னு…” அவ்வளவு நீளமில்லாத அவள் கூந்தலைப் பின்னால் தள்ளி கண்களின் ஓரத்தைத் தேய்த்தபடி வந்து நின்றாள்.
ஊரே ஏளனம் செய்வதைப் புலம்பிக் கொண்டு, எவரோ செய்த சூழ்ச்சியெனத் தெரிந்தும் பழியேற்றுக் கொண்ட அப்பாவை மீண்டும் மீண்டும் அம்மா சீண்டிக் கொண்டேயிருந்தது அப்போது செண்பாவிற்கும் பிடிக்கவில்லை. அப்போது… “ஹே…வாயைப் பொத்துடி” என எழுந்து லுங்கியை இறுக்கமாக இடுப்பில் கட்டி விட்டு கையை ஓங்கி மணிமேகலையை சத்யன் அறைந்தான். லாந்தர் விளக்கின் மேல் மோதி கீழே சரிந்து விழுந்தாள். அவள் சீலையில் தீ பற்றியதும் ஒரு பெரும் வெடிப்பில் குடிசை முழுவதுமாக திடீரென்று தீ பற்றி எரிந்தது. கண் இமைப்பதற்குள் செண்பகத்தின் விழிகள் இரண்டும் தீப்பந்து போல் காட்சியளித்தது.
சேகர் அவனது நண்பர்களோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த போது, செண்பா மார்பின் குறுக்காகக் கைகளைக் கட்டியபடி உடல் முழுவதும் நடுக்கம் பரவியிருந்த நிலையில் ஒரு மூலையில் குறுகி குத்துக்காலிட்டு அமர்ந்திருந்து மணிமேகலையின் உச்சந்தலை தீயில் எரிவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கன்னங்களை எப்போதும் கொஞ்சுவது போல் மணிமேகலை கருகிய கைகளை நீட்டிய போது அவள் உடலிலிருந்து அது விலகி கீழே தரையில் விழுந்தது.
மூச்சுத் திணறிய செண்பாவை அள்ளி எடுத்துக் கொண்டு சேகர் வெளியே சென்றான். பொசுங்கிய சட்டையெங்கும் நிரம்பியிருந்த நெருப்பின் வாசமும், ஒன்றும் புரியாமல் அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டதும்தான் அவளுக்கு நினைவிருந்தது.
ஒரு நாற்காலி தரையில் இழுக்கப்பட்டதன் கீறல் ஒலி கேட்ட போதுதான் ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் அவளிருப்பது தெரிந்து கண் விழித்தாள். ஒட்டிக்கொண்டிருந்த இமைகளை அழுத்தியதில் வெள்ளையாடையில் ஒரு நர்சம்மா தன் நெற்றிக்கு நேராக இருந்த பாட்டிலில் ஏதோ ஒரு மருந்தை செலுத்திவிட்டு போவதைக் கண்டாள்.
“ஐயா…நீங்க ஏன்யா இங்க வந்துகிட்டு…?” என்று மடமடவென சத்யன் அந்த நாற்காலியை கைகளாலேயே துடைத்தான்.
“இருக்கட்டும் சத்யா…தூக்கமே வரலடே…கண்ணை மூடினாலே தூக்குக்கயித்துல தொங்கி கிடந்த எம்பொண்ணு கழுத்து தான்வே வருது…உம் பொண்ணு மட்டும் இன்னிக்கு வாக்குமூலம் கொடுக்கட்டும்…அவனை வெச்சு செஞ்சுட்டுதான்டே என் பொண்ணோட அஸ்தியை ஆத்துல கரைப்பேன்.”
“கொஞ்சம் பொருத்து அன்னிக்கு வண்டி எடுத்திருந்தால்…அவன் வீசின பெட்ரோல் குண்டு உன் குடிசைல விழுந்திருக்காது. இந்நேரம் நானும் நிம்மதியா போய் சேர்ந்திருப்பேன்…”
“என்ன குருமூர்த்தி?” என்று அவன் தோள்களில் தட்டிக் கொடுத்தபடியே, “எல்லாம் சார் சொல்லி அனுப்பினாரா?” என்று அந்த ரைட்டரிடம் கேட்டார்.
“ஐயா…அதெல்லாம்.”
“ஆமா…என்னய்யா இது…? யூனிஃபார்ம்ல வர வேண்டாமா? அப்பதான் பாக்குறவங்களுக்கெல்லாம் ஒரு பயம் வரும்…”
“இல்ல… அது வந்து…இவர் காலையில நேரத்துலயே கூப்டுட்டாரு…இங்க வந்து பார்த்தா, பாப்பா இன்னும் முழிக்கவேயில்ல…”
செண்பகத்தின் கால்கள் அசைவதைக் கவனித்ததும் சத்யன் அவளருகில் வந்து நின்று கொண்டான். அவனை எதுவும் சொல்லாமல் தடுத்து நிறுத்தி குருமூர்த்தி ‘பெயரென்ன…? ஊரென்ன…?’ போன்ற வழக்கமான கேள்விகளை அடுக்கினார். செண்பகத்திற்கு ஏதோவொன்று அடியாழத்தில் அவள் குரலை வரவிடாமல் தடுப்பது போலிருந்தது. அவள் எதற்கும் பதிலளிக்காமல் ஏதோ ஒரு சிந்தனையில் நிலைபெற்று சத்யனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரைட்டர் அவனது உள்ளங்கைகளால் தாடையைத் தேய்த்துக் கொண்டு “ஒன்னுமில்ல…அம்மா அந்த ரூம்லதான் இருக்காங்க…சரியாகிடுவாங்க. எனக்கு ஒரு அஞ்சு பத்து கேள்விதான் இருக்கு. அதை பதிவு செஞ்சுகிட்டு நான் போயிடுவேன்…”என்று சொல்லும்போது கூட அவள் மனம் சுற்றி சுற்றி எதையோ தேடிக் கொண்டுதான் இருந்தது.
ஏதேதோ சப்தங்கள் உட்குழிந்து எதிரொலிக்க ஆரம்பித்தன. அந்த மருத்துவமனை ஜன்னலுக்கு வெளியில் ஓயாமல் ஒரு புறா சிறகடித்துக் கொண்டிருந்தது. அவள் தேடியது கிடைத்ததும் முகத்தை நிமிர்த்தி கண்களை குறுக்கி தெளிவுபடுத்திக் கொண்டு குருமூர்த்தியைப் பார்த்தாள்.
“உனக்கு ஒன்னு தெரியுமா? அவனுக்கு இது புதுசில்ல…இதுக்கு முன்னாடி எத்தனையோ பேரை இந்த மாதிரி நம்ப வெச்சு…அதுக்கப்பறம் அவங்களை வெச்சு கொலை கொள்ளை கற்பழிப்புனு அவன்மேல ஏகப்பட்ட புகார் இருக்கு…சாட்சிக்கு யாருமில்ல…எல்லாமே உன்னை விட சின்னப் பொண்ணுங்க…பயப்படுறாங்க…ஆனா, நீ எவ்வளவு தைரியமான பொண்ணுனு நான் ஊருல கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்…”
“அந்த ஆத்துப் படுகைக்கு உன்னை அவன் கூட்டிட்டு போய் என்ன சொன்னான்? ஏதாவது ரகசியம் சொன்னானா? செல்வியைப் பத்தி ஏதாவது சொன்னானா? ”
அம்மா ஒரு தீக்கொழுந்தாக உருமாறி உலகையே தீமூட்டி எரிப்பது போல் தோன்றியது. ஒவ்வொரு கேள்வியாக அவன் அடுக்கிக் கொண்டே இருக்க அவள் மேலும் மேலும் கருகிய உடலோடு தன்னிடம் நெருக்கமாக அவள் வருவது போலிருந்தது.
“எங்க கூட்டிட்டு போனான்? ஆத்துல குளிக்கச் சொல்லி…உன்னைத் தொட்டானா? தப்பாத் தொட்டானா? என் கண்ணைப் பாத்து சொல்லு…”
அவள் கண்களை மூடிக் கொண்டதும் “செண்பா…செண்பா…” என்று சத்யன் அவள் கைகளைப் பிடித்து குலுக்கினான்.
“இப்ப நீ எதுவும் சொல்லலனா, உங்க அப்பாவும் இதுக்கெல்லாம் உடந்தைனு அவரையும் தூக்கி உள்ள போட வேண்டியிருக்கும்.”
செண்பகம் தலையை மறுப்பாய் அசைத்தாள்.
தீயானது ஆழ்மனதை பிரதியெடுத்து தோற்றமளிக்கக்கூடியது என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அடுக்கடுக்காய் பயம் மேலேறியதில் உடல் நடுங்கியது. ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.“ஆமா, என்னைத் தொட்டாங்க… தூக்கி அவர் மார்போட சேர்த்து அணைச்சுகிட்டாங்க…முத்தம் கொடுத்தாங்க…”
நினைத்தது கிடைத்தது போல் சலசலவென்று பேசியபடியே அறையிலிருந்து அனைவரும் வெளியே சென்றனர். சத்யனும் சந்தானத்தைத் தொடர்ந்து செல்ல, ஒரு பெண் மருத்துவர் அவளருகில் வந்து அமர்ந்து கையைப் பற்றி முன்னும் பின்னுமாக ஆராய்ந்தாள். கால்கள் மேல் கிடந்த போர்வையை விலக்கிய போதுதான் அவளது தொடையிலிருந்த தீக்காயங்களைக் கண்டாள். மெல்ல தலை நிமிர்ந்து பார்த்த போது உச்சந்தலை கருகிய அவள் அம்மாவின் முகம் அவள் முன் தோன்றியதில் திடுக்கிட்டு எழுந்தாள்.
செண்பா சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். ஒன்றை மட்டும் பூரண நிச்சயத்துடன் அவள் அறிந்திருந்தாள். அது.. வள் சொன்ன அந்தப் பொய் அவளது எதிர்காலத்தை முழுவதுமாக அவளிடமிருந்து கொள்ளையடித்து சென்றுவிட்டது என்பதுதான். அந்த உணர்வுகள் அவள் மீது படையெடுத்ததும் ஒரு பக்கமாகச் சரிந்து உடலெல்லாம் குலுங்க குமுறி குமுறி மூச்சுமுட்ட தேம்பியழுதாள். தனக்கென ஓர் அங்கமில்லாதது போலுணர்ந்தாள்.
‘அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு வீட்டுக்கு வந்தவுடன்தான் அவன் சிறையிலிருந்து தப்ப முயன்றதாகச் சொல்லி போலீசாரால் சுட்டுக் கொள்ளப்பட்ட விஷயம் தெரிய வந்தது. ஓரிரு மாதங்கள் இடைவெளியிலேயே நிகழ்ந்த மூன்று மரணங்கள் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கி அவளை நிலைகுலையச் செய்தது.
எதையும் மறக்க முடியாமல் தவித்தாள். அவள் முதற்கொண்டு அனைத்தையும் அவளிடமிருந்து தொலைவாகவும் வேறுபட்டதாகவும் உணர்ந்தாள். ஒரு நாள் குடி போதையில் தூங்கிக் கொண்டிருந்த சத்யனை அப்படியே விட்டுவிட்டு அவள் வீட்டை விட்டு வெளியேறினாள். அன்று மழை கொட்டி முழங்கியது.
வினோதமாக திடீரென நெருப்பின் வாசம் மூக்கில் ஏறியதும் நினைவிலிருந்து விடுபட்டு விழித்துக் கொண்டாள். ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள். மூன்று வீடுகள் தள்ளி குப்பைகளை நெருப்பில் எரித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து வானத்தில் மறைந்து போன கரும்புகையையே வெறித்துப் பார்த்தாள். அது வானத்திலிருந்த முழு இருளையும் திரட்டி ஒரு கோயில் மணியை உருவாக்கிக் கொண்டு அங்கிருந்து ஒரு நீண்ட கயிறொன்றை ஜன்னலில் கட்டியது போலிருந்தது. உடல் நடுங்கி கொக்கியை இழுத்து ஜன்னலை மூடிக் கொண்டு திரும்பினாள். அறையினுள் இருள் முன்பை விட சில பாகை அடர்த்தியாக மாறியிருந்தது. ஒவ்வொரு இடுக்குகளிலும் காற்றின் சப்தம் கேட்டது. அந்தரத்தில் அடித்துச் செல்லப்படுவது போல் உணர்ந்தவளின் காதுகளில் ஏதோ ரகசியமான ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.
“ஹே…கொலகாரி…”
இறுக்கத்துடன் “இல்லை” என்றாள்.
தனது நினைவுகளால் உருவாக்கப்பட்ட பிம்பம்தான் இவன் என அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே “என்ன பாக்குற…? செத்தவன் சாபம் எப்படி பலிக்கும்னு யோசிக்காத…போ…போ…போய் சாவுடி…இந்த முறை உன்னைத் தடுக்க எவனும் இல்ல…”
எவ்வித பரிவும் கருணையும் அவனிடமிருந்து கிடைக்கப் போவதில்லை என்று ஒருவாறாக அவள் உறுதியாகத் தெரிந்து கொண்டாள். “சரி…கடைசியாக ஒரு தடவை… என்னைத் திரும்பிப் பாரு…” என்றாள்.
“செண்பா…உனைக் கடைசியா நான் பார்த்த போது என் கண்கள் முழுக்க காதல் நிரம்பியிருந்ததுதான் என் ஞாபகத்துல இருக்கு.. அதை நான் மறக்கணுமா? அந்த கண்களால் இப்ப உன்னைப் பார்க்கச் சொல்றியா?”
தழைய விட்டிருந்த கூந்தலை ஹேர்சிலைடால் மாட்டிக் கொண்டு “சரி…வேண்டாம்…போ…” என்றாள். மீண்டும் மெல்லிய குரலில் “இங்கிருந்து போ…” என்று சொல்லி கீழே இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து மேஜை மீது வீசினாள்.
புகை போல் காணாமல் போனான். ஆழ் மனதில் குவிந்து கிடந்த சினத்தையெல்லாம் வழித்து வழித்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளிருந்த மஞ்சம், கசக்கிக் கசக்கிக் கிழித்து எறிந்த கவிதைத் தொகுப்புகளால் நிரம்பியிருந்தது. கடல்களைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தைக் காட்டிய தொலைக்காட்சியின் வெளிச்சம் மட்டுமே வண்ண வண்ணமாக அவள் உடலில் விழுந்து கொண்டிருந்தது. அந்தப் படம் முழுவதுமாய், கடலும் அதிலிருந்து எழும்பும் ஓசை மட்டுமே ஒலிப்பதிவாகியிருந்தது.
உச்சபட்ச ஒலியைக் கடந்துவிட்டதாக அவளது ப்ளூடூத் ஹெட்செட் அறிவித்துக் கொண்டேயிருந்தாலும் அதை மேலும் மேலும் கூட்டிக் கொண்டேயிருந்தாள்.
திடீரென அதில் காட்சி இரவுக்கு மாறியது. திரையில் லாந்தர் மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன.அடிக்கடி அவள் கண்கள், கதவின் பக்கம் சென்று கொண்டிருந்தன. ஒரு ஓரத்தில் சேகரின் முகம் தெரிந்தது. அவன் சிரித்துக் கொண்டிருந்தான். திரும்பி, இன்னொரு கிழிந்த பக்கத்தை கசக்கி, அவன் மேலே எறிந்து, மெத்தையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள்.
“ஒரு தடவை ஒரு தவறைச் செஞ்சுட்டா அதோட குரல் ஓயாம மனசுல கேட்டுட்டே இருக்குல்ல? எனக்கும் அப்படித் தான். உன்னை என் மடியில செலுத்தி நீ சிரிச்ச சத்தம் என் காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு…”
மூக்குறிஞ்சியபடி கன்னங்களில் தேங்கியிருந்த கண்ணீரெல்லாம் வழித்தெடுத்து தனது உதடுகளுக்கிடையில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே பரத்தின் அறைக்குச் சென்று ஆடைகளை அவிழ்த்துக் கொண்டாள். அலமாரியில் அவள் பத்திரமாக வைத்திருக்கும் சேகரின் கருப்பு சாப்ளின் தொப்பியை எடுத்து தலையில் வைத்துக் கொண்ட போது “ஹே…கொலகாரி” என்று மீண்டும் சேகரின் குரல் கேட்டது. அகோரமான ஒரு சிரிப்புடன் அருகில் கிடந்த ஹெல்மெட்டை எடுத்து அவன் மீது வீசினாள்.
வெறும் தொப்பியோடு எடுத்த ஆடைகளை கைகளில் பிடித்தபடி நடந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பரத் இன்னும் அங்குதான் நின்று கொண்டிருந்தான். பட்டென திரையை மூடி திரும்பிக் கொண்டாள்.
அவளுக்குள் அவள் இன்னும் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆடைகளை மடமடவென அணிந்து கொண்டு கண்ணாடியில் அவள் முகம் பார்த்தாள். பாதி சேகருடையதாகவும் பாதி அவளுடையதாகவும் தெரிய மகிழ்ச்சியில் ஒவ்வொரு அடியாக எடுத்து இன்னும் நெருக்கமாக பார்த்துக்கொள்ள அருகில் சென்றாள்.
“இந்த காதல் முதலில் உன்னோட கண்களைத்தான் பறிக்கும்…தன்னை இழப்பதல்ல காதல், தன்னைக் கண்டடைவதுதான் காதல்… நீயும் செல்வி மாதிரி…” ஓடி வந்து கண்ணாடியில் தெரிந்த சேகரின் வாயைப் பொத்தி அவனை இடைமறித்தாள்.
“கூட இருப்பது மட்டும்தான் காதலா என்ன? காதலிக்க ஆயிரம் வழி இருக்கு சேகர்…” குறும்பான ஒரு புன்னகையுடன் செண்பா சொன்னாள்.
அப்போது தனது கால்சட்டைப் பையிலிருந்து பிருஷ்டத்தை ஓயாமல் உறுத்திக் கொண்டிருந்த அந்த பர்ஸை எடுத்தாள். அதைத் திறந்த நொடியிலேயே கைகள் நடுங்கி அதைக் கீழே விட்டாள். அதிலிருந்தது அவளது பதினாறு வயது புகைப்படம்.
சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் அறை இருளில் மூழ்கியது.
முற்றிலும் நிசப்தமான சூழலில் என்ன செய்வதென்று அறியாமல் மனம் தடுமாறி விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. செய்யக்கூடாத ஏதோவொன்றை செய்ததைப் போன்ற குற்றவுணர்விலும் தேடிக் கண்டுபிடிக்கமுடியாத ஏதோவொன்றை தொலைத்ததன் நடுக்கத்திலும் கூனிக் குறுகி மெத்தையில் வீழ்ந்தாள். உள்ளே கிடக்கும் பஞ்சுக்குவியலைப் போல் அவளது தேகத்தை உள்ளே புதைத்துக் கொள்ள முயல்வது போல் அழுத்திக் கொண்டாள்.
சற்று நேரத்தில் ஒரு ஆர்ப்பரிக்கும் நதியொன்றில் அவள் அடித்துச் செல்லப்படுவது போலிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் தன்னை மறப்பதன் நிறைவுணர்ச்சியுடன் நீண்ட காலமாக அவளுக்கு வாய்த்திராத ஒரு வித ஆழ்ந்த தூக்கத்துக்குள் விழுந்தாள்.
அதன் நினைவுப் பிரவாகத்தில் அமிழ்ந்துகொண்டு தன்னை அதனிடம் பறிகொடுத்தாள்.
ராஜ கோபுரத்தோடு தெருவின் மையமாக அமைந்திருந்த இடிகரை அண்ணாமலை கோயில் மணியை அடிப்பதற்காக தினமும் அதிகாலைக் காற்றின் மெல்லிய பாய்ச்சலில் அசைந்தாடும் செடி கொடிகளைப் போல் கொலுசுமணி குலுங்க குலுங்க, கசங்கிய பாவாடை மடிப்புகளைப் பிடித்துக் கொண்டே அவள் தெருவில் துள்ளி துள்ளி குதித்துச் செல்வது நினைவுக்கு வந்தது.
செண்பகம் கோயில் மணியை அடித்து விடுவாளோ என்ற பதற்றத்தில் ஒவ்வொரு அதிகாலையும் அவசர அவசரமாக சீலை மடிப்புகளைச் சீர் செய்து கொண்டை போட்டுக் கொண்டு பரபரப்பாய்க் கூரையிலிருந்து தொடப்பத்தை எடுத்து கையில் செருகி அவளை விரட்டிக் கொண்டே மணிமேகலையும் பின்னால் ஓடி வருவாள்.
எப்போதும் போல் அவள் தடுக்கப்பட்டபோது “ஏன்?” என்ற அவளது கேள்விக்கு “அது பெரியவர்களின் சமாச்சாரம்” என்ற நிறைவளிக்காத பதில்தான் கிடைத்தது.
“நம்ம இந்த மணி அடிக்கக் கூடாது’னு சாமியா சொல்லிச்சு?”
செண்பகத்தின் இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று யோசித்தபடியே, மணிமேகலை சாணம் பூசி கோயில் வாசலில் வண்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
“இந்த சாமிக்குக் கோயில் அவங்கதான கட்டினாங்க? அதனால அவங்கதான் அடிக்கனும்னு வேண்டி இருக்காங்க. நம்ம ஏன் அதைக் கெடுக்கணும்?”
“அப்படினா அவங்க கட்டின கோயிலை அவங்களே சுத்தம் செய்யலாமுல்ல? அதை மட்டும் வேண்டிக்க மாட்டாங்களா?”
“செண்பா வாயை மூடு. காலங்காத்தால அபசகுணமா ஏதாவது சொல்லாத. இந்த வேலை செய்ய நான் கொடுத்து வெச்சுருக்கணும். போ. தூசி ஏறிட போகுது. அங்க தள்ளி போய் விளையாடு.”
“எது? இந்த கல்லைப் பொறுக்குறதுக்கும் சாணி அள்ளுறதுக்குமா கொடுத்து வெச்சுருக்கணும்?”
“சாமிக்கு பண்றதை… சனியனே…தடுக்க பார்க்காத.”
ஆலய மணி அடிப்பதற்கு முன்பாக எவரும் வாசல் தாண்டக் கூடாது என்பது அந்தத் தெருவில் எழுதப்படாத விதி. ஆதலால், ஏதோ ஒரு வாண வேடிக்கையைப் பார்ப்பது போல் அவள் தோழிகள் எல்லாம் ஜன்னலிலிருந்து கை அசைத்து செண்பகத்தையே வியந்து பார்த்திருந்தனர்.
செண்பா யாரும் அருகில் இல்லாமல் சூரியனைப் பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருப்பாள். “ஒரு வேளை சூரியன் மட்டும் இல்லையென்றால் விடியலை அறியாதிருப்போமோ? கடிகாரம் நின்று விடுமோ? இரவுகளோடு உறைந்து விடுவோமோ? ஒரு வேளை சூரியன் அசந்து தூங்கி விட்டால் அதனை யார் எழுப்புவது?” என்ற அவளது சுட்டித்தனமான கேள்விகளுக்கு எவர் அளித்த பதில்களும் நிறைவளிக்கவில்லை.
இந்தத் தெரு, கோயில் மணி, அம்மா, அப்பா என அனைத்தையும் விட செண்பகத்திற்கு மிகவும் நெருக்கமானது சேகருடனான உரையாடல்தான். எவராலும் தாக்குப்பிடித்திட முடியாமல் தூக்கி வீசப்பட்டவளாய் நடுத் தெருவில் இருப்பவளின் கன்னங்களைக் கிள்ளி விட்டு அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்வான்.
தினமும் அதிகாலையில் ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டு, மண்ணில் ஈரம் சொட்ட சொட்ட சைக்கிளில் அவன் தொலைவில் இருந்து வருவதை அறிந்தவுடன் அவள் உடலில் ஏதோ மின்னல் வெட்டியது போலிருக்கும். அவன் குரலைக் கேட்டவுடன் ஒரு பெரும் மழைப்பொழிவின் நடுவே சில்லிட்டு நடுங்குவது போலிருக்கும்.
அவனிடம் பழகும் வரை செண்பகம் பறவைகளை அவ்வளவு பெரியதாக கவனித்ததே இல்லை. முதல் முறை ஒரு புறாவை கையில் ஏந்திய கனம் முதல் அவை மீது அவள் அலாதி பிரியம் கொண்டாள். அவள் கைகளிலிருந்து அவை பறந்து செல்லும் போது ஏதோ அவளுக்கும் சிறகுகள் முளைத்து பறப்பது போலிருந்தது.
எந்த தானியங்களை என்ன அளவிற்கு கொடுப்பது, எப்படி தண்ணீர் கொடுப்பது, எப்படி கொடி கட்டி அவற்றைப் பறக்கப் பழக்குவது, அதன் கால்கள் கிழிந்திடாமல் இருக்க எப்படி கிழிந்த காகிதங்களால் கூண்டிற்கு தளம் அமைப்பது என்பதெல்லாம் ஒவ்வொன்றாக சேகரிடம் கற்றுக் கொண்டாள் செண்பகம்.
ரொம்ப நாளாக யோசித்து யோசித்து அதனை அவனிடம் அன்று கேட்டாள். “இப்படி அளவுக்கதிகமாக புறாக்கள் மீது அன்புனு சொல்ற நீங்களே அதை பந்தயத்துக்கு விடலாமா? அதுங்க உங்களை விட்டு தூரம் போயிடுச்சுனா? திரும்பி வரலனா?”
“போகட்டும். எவ்வளவு பறந்தாலும் அதுக்கு என் வீடு எப்பவும் இருக்குனு தெரியும்.” அவள் கன்னங்களை அழுத்திப் பிடித்து… “அப்பறம்… எவ்வளவு தூரம் பறக்குதுங்கறதுல இல்ல பந்தயம், எவ்வளவு விரைவாக அதோட இடத்தை கண்டுபிடித்து வருதுங்கறதுதான் பந்தயமே.”
மற்றுமொரு கூண்டினை சேகர் திறந்து விட்டான். செண்பகத்தின் பின்னாலிருந்து அவளைச் சுற்றி இருபது புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. அவள் இதயம் அக்கணம் துடிப்பதை நிறுத்தியது போலிருந்தது. அவற்றின் சிறகடிப்பு மட்டும்தான் எங்கும் நிறைந்திருந்தது. சிலவற்றின் சிறகுகள் அவள் கூந்தலைத் தொட்டு காது மடல்களையும் தொட்டுச் சென்றதன் பூரிப்பில் அவள் உடல் நடுங்கியது.
“இவனுங்களை பத்தி எல்லாமே தெரியும்… இப்ப பறந்து போய் அப்படியே திரும்பி வரமாட்டானுங்க… அந்த மலை இருக்குல..அங்க இருக்குற ஆத்துப் படுகையில தண்ணி குடிச்சுகிட்டு…”
“என்ன… அங்க ஆறு இருக்கா?”
“ஆமா, அங்க தான் ரகசியமா ஒளிஞ்சுட்டிருக்கு…”
“ஆறு ஒளிஞ்சிட்டிருக்கா?”
இப்படி அவனிடமிருந்து பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்களை அசை போட்டுக் கொண்டே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்தாள்.
அப்படி ஒரு நாள் பள்ளிக்கு செல்வதற்கு முன் மதியத்திற்கு அம்மா கொடுத்த கொழுக்கட்டைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்து விடும் சாக்கில் அவனைச் சந்தித்து, “அந்த மலையிலதான் இந்த கிராமத்துல யாருக்கும் தெரியாத ரகசியமான ஒரு இடம் இருக்குனு சொன்னீங்களே…போலாமா…?” என்று ஆசையாக அவள் கேட்ட போது சேகரால் மறுக்க முடியவில்லை.
“சரி…வா” என்று சைக்கிளை எடுத்தான்.
“ஐயோ…நான் சைக்கிளிலே போனதில்லயே… புறாக்களைதான பாக்கப் போறோம்.. நடந்தே போலாமே…?”
“இந்த புறாக்கள் எல்லாம் எம்மாத்திரம்? அதை விட ஆயிரம் மடங்கு அழகான இடத்தை நான் காட்டுறேன்…” என்று அவளை அப்படியே தூக்கி முன்னே அமர வைத்துப் புறப்பட்டான். உயிர்த்துடிப்பு முகத்தில் தெரிவது போல் எப்போதும் படபடவென இருக்கும் அவனின் சிறு சிறு அசைவுகளையும் அதன் உயிர்ப்பையும் அவன் முகத்தில் ஆழ்ந்து கவனித்து மெய் மறந்து போனாள்.
இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழையில் சாலையில் அங்கங்கே சேறும் சகதியுமாய் இருந்தது.
அன்னாசிப் பழத் தோட்டத்தைக் கடந்து வலதுபுறம் போகும் பாதையில் திரும்பினார்கள். அந்த செம்மண் சாலை ஆங்காங்கே கற்களும் புற்களுமாய் நிறைந்திருந்தது. மண் பாதை போகப் போகச் சுருங்கி சுருங்கி காட்டு வழிப் பாதை பிறந்தது. அடர்ந்திருந்த மரங்கள் ஒவ்வொன்றும் அதன் கைகளை நீட்டி எதையோ அவளிடம் கேட்பது போலிருந்தது.
“ஆமா, நீ மரத்தை கட்டிப் பிடிச்சிருக்கியா…?”
“அதை ஏன் கட்டிப்பிடிக்கனும்…?”
“அது உன்னைக் கட்டிப்பிடிக்குற மாதிரி…”
“என்னை ஏன் நானே கட்டிப்பிடிக்கனும்…?” என்று மீண்டும் உரக்கச் சிரித்தான். மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக்கூடுமளவுக்கு எப்படி இவனால் இயல்பாகவே சிரிக்க முடிகிறது என்று பார்த்து பார்த்து வெகுவாக அவனை ரசித்துக் கொண்டே வந்தாள்.
தாழ்வார மலைப்பகுதியில் சைக்கிளை நிறுத்தி விட்டு அவளை மெதுவாக இறக்கி விட்டான்.
திரும்பி வந்த வழியைப் பார்த்தாள். மனித சஞ்சாரங்களின் தொடர்பு அற்றுப் போனதாக அப்போதுதான் பிரம்மை தட்டியது. சில குருவிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்து கொண்டிருந்தன. அப்போதுதான் அவள் நெடுந்தூரம் வந்துவிட்டதை உணர்ந்து கொஞ்சம் அச்சம் கொண்டாள்.
பறவை கூடுகளையும், பாசி படிந்த மரக்கிளைகளின் மேல் பதுங்கி இருக்கும் பச்சைப் பாம்புகளையும், பூத்துக் குலுங்கிய ஊதாப் பூக்களையும் காட்டிக் கொண்டே சென்றான். காட்டு நாவல் ஒன்றைப் பறித்து அவளிடம் கொடுத்து அதன் துவர்ப்பில் மெய் சிலிர்த்து உடல் குறுகி நின்றவளைக் கண்டு ரசித்தான். கீழே கொத்துக் கொத்தாக பூத்துக் கிடந்த நீலக்குறிஞ்சியைக் கண்டவுடன் அவளை மீண்டும் அள்ளி எடுத்து அவளது கன்னங்களை அதனோடு உரசி எடுத்தான். அவள் சிணுங்கிக் கொண்டே அதை ரசித்தாள்.
அடிவாரத்தில் வளர்ந்து கிடந்த கோரை மற்றும் நாணல்களின் உரசல்களில் சிணுங்கிக் கொண்டே சற்று இடது புறமாக வளைந்த போது செண்பா அந்த ஆற்றுப் படுகையைக் கண்டு பேருவகை கொண்டாள். மலையின் சரிவில் இனி தானே இறங்குவதாகக் கூறி முன்னே சென்றாள். சூரியன் பட்டு மின்னிக் கொண்டிருந்த தண்ணீரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே குதித்துக் குதித்து முன்னே சென்றாள்.
அருகே சென்று அவள் முகத்தைக் கண்டாள். பின்னே சேகர் தனது கால் சட்டையை மடித்து விட்டு அருகில் வந்து ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து மேலே தெளித்ததும் அவள் துள்ளித் துள்ளி ஓடினாள். அவளும் தண்ணீரை எடுத்து அவன் மீது விடாமல் தெளித்திருக்க ஒரு கட்டத்தில் தன் இரு கைகளையும் மேலே தூக்கி விட்டு உள்ளே குதித்து மறைந்தான்.
செண்பா பதறிப் போய் அவனைத் தேடிக் கொண்டிருந்தாள். ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே அவள் மூச்சுக் காற்று மட்டும் இருப்பதை நினைத்து நெஞ்சம் திடுக்கிடும் போதே அவன் மேலே எழுந்து, “உள்ள வா…சுத்தமான தண்ணீரோட வாசம் எப்படி இருக்கு பாரு…” என்று உள்ளே இறங்கி அவளை அழைத்தான்.
“வேணாம்..ட்ரெஸ் ஈரமானா அம்மா திட்டுவாங்க…”
“அடச்சே!..குட்டிகிழவி…வா உள்ள…அதெல்லாம் போறதுக்குள்ள காஞ்சிடும்.”
அடுத்த ஒரு சில நொடிகளிலேயே இருவரும் ஆற்றின் ஆழமற்ற பகுதிக்குச் சென்றார்கள்.
“இதுக்கு முன்னாடியே இங்க நீங்க வந்திருக்கீங்களா…?”
முளைவிட்ட களைகளைப்போல் செறிந்திருக்கும் மீசையைத் தடவியபடி “பல தடவை…” என்றான்.
“தனியாகவா…?”
“இல்ல…செல்வியோட….”
“செல்வி அக்காவை உங்களுக்குத் தெரியுமா…?”
“அவதான் உன்னை இங்க கூட்டிட்டு வர சொன்னவளே…”
“எனக்கு ரொம்ப பிடிக்கும்…என் அம்மா மாதிரி…அந்த கோயிலுக்குள்ள என் கால் படக்கூடாதுனு அவங்க அப்பா சொல்லும் போது கூட அதைப் பொருட்படுத்தாம என்னை அவங்க மடியிலயே தூக்கி வெச்சுகிட்டு கூட்டிட்டு போனாங்க…ஆமா… உங்களுக்கும் அவங்களுக்கும்…?”
சிறு சிறு கற்களாய் பொறுக்கி எடுத்து ஆற்றில் வீசினான். அது மூன்று முறை ஆற்றின் மேலே தொட்டுத் தொட்டு சென்று உள்ளே மூழ்கியதும் “ம்ம்ம்.. அதேதான்… உன்னை அவளுக்கு ரொம்ப பிடிக்குமாமே… ‘நமக்கு ஒரு பொண்ணு பிறந்தா செண்பா மாதிரிதான் இருக்கணும்’னு அடிக்கடி என் கிட்ட சொல்லிட்டே இருப்பா”
“ஆமா… நீங்க என்ன பன்றீங்க?” ‘ஏன் கேட்குற?’ என்பது போல் அவன் கண்களைக் குறுக்கியதும் “இல்ல…எப்பவுமே…புறாக்களோடையும் பறவைகளுடனுமே உங்களைப் பாக்குறேன்…அதான் கேட்டேன்.”
சட்டென அவள் கால்களில் சில குஞ்சு மீன்கள் ஏறியதும் அவன் மார்பில் ஏறிக் கொண்டாள். அவளைத் தூக்கிக் கொண்டு ஆற்றிலிருந்து மேலே வந்து புற்களின் நடுவில் படுத்துக் கொண்டான். அவள் கன்னங்களை இழுத்துப் பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான். அவள் நெஞ்சுக்குள் ஒரு சிறகடிப்பை உணர்ந்ததும் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் அவன் மார்பிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கி “சொல்லுங்க…”என்றாள்.
“நம்ம கிராமத்தோட ஜங்ஷன்ல பெரிய பெரிய குடோன் இருக்குல்ல…? அங்க அவங்களுக்கு தேவைப்படாம மூட்டை மூட்டையா அரிசி கிடக்கு, சீலை கிடக்கு,கொஞ்சம் நகையும் கூட…”
“ஆமா.. எங்க அப்பா அவரோட மில்லுலதான் வேலை பாக்குறாரு… நம்ம செல்வி அக்காவோட அப்பாதான…? அவரு பேரு கூட…”
“ஆமாம்..சந்தானம்…அவர்கிட்டதான் என் வேலையும்…”
“உங்களை நான் அங்க பார்த்ததே இல்லயே…”
“என் வேலை இரவுலதான். இந்த கிராமமே உறங்குனதுக்கப்பறம்…”
“நீங்க திருடனா…?”
உள்ளுக்குள் சிரித்தபடி “இப்ப இந்த ஆறுதான் உலகத்தோட ஒட்டு மொத்த சொத்துனு வெச்சுக்கோ…சுத்தி நம்ம எல்லாரையும் நிறுத்தி வெச்சுகிட்டு அதோட அளவுக்கு தொந்தியோட ஒரு மனுஷன் நடுவுல உட்கார்ந்துட்டு இது அத்தனையும் அவனுக்குதான் சொந்தம்னு சொன்னா…அது திருட்டு இல்லயா?”
ஆற்றளவு தொந்தியுள்ள மனிதனை கற்பனையில் உருவாக்கிய போது அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. கைகளால் பின்னி அவளை அருகில் இழுத்து அவன் மார்போடு சுற்றிக் கொண்ட போது அவள் நெற்றியில் விழுந்த முடிகளின் நிழல் விழுந்திருக்கும் கன்னத்தினூடே ஒரு மெல்லிய அதிர்வு கடந்து சென்றதை ரசித்து, “நமக்கு எது சொந்தமோ அதை எடுத்துக்குறேன். இங்க பல பேர் பட்டினியாக இருக்குறப்ப அங்க மூட்டை மூட்டையா அவங்க அடுக்குறதை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியல.”
“உன் அப்பா ராத்திரி பகல் பாக்காம அவருக்காக உழைக்கிறாரே…சந்தானம் நினைச்சாருனா அவரோட ஒரு கையெழுத்து போதும்…ஒரே இரவுல தெருவுல நம்மள பிச்சையெடுக்க வெச்சிடுவாங்க…அதிகாரம்…யாரு சாப்பிடணும் யார் பிச்சையெடுக்கணும்னு முடிவு பண்ற அதிகாரம்.”
புற்களில் ஊர்ந்தபடி அவன் பக்கம் வந்து, “இது தப்பு இல்ல…?” என்று அவனைப் பார்த்தபடியே கேட்டாள். ஒரு கணம் கூட தாமதமில்லாமல், “அவங்களோட சட்டத்துல நான் திருடனாகவே இருந்துக்குறேன்…” என்றான்.
அவன் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் முழங்காலில் ஒரு தும்பி வந்து அமர்ந்தது. “சேகர்…சேகர்….” என்று துள்ளி எழுந்தாள்.அவன் அவள் தோள்களை அழுத்திப் பிடித்து சாந்தப்படுத்தி, “அது உன் கிட்ட என்ன சொல்லுதுனு கண்ணை மூடி கேளு…கண்டிப்பா ஏதோவொரு ரகசியம் இருக்கும்..”
“ஓ…அப்படியா…?”
“என்ன…என்ன சொல்லுச்சு?”
“உனக்கு செல்வியை விட என்னைதான் பிடிக்குமாமே…”
“அடி…குட்டிக்கழுதை!”
“ஹே…உன் கன்னத்துல மண் ஒட்டிட்டு இருக்கு…”
“எங்க…? ஒன்னுமில்லயே…”
“அட…உண்மையா…இங்க…இங்க…” என்று அருகில் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“இப்படியே திருடிகிட்டுதான் இருக்க போறீங்களா? செல்வி அக்காவும் கூட சேர்ந்துப்பாங்களா..? அவங்க அப்பா கோச்சுக்க மாட்டாரு…?”
“ஏன் நமக்கு கோவம் வராதா? அதெல்லாம் பாத்துகிடலாம். எனக்கு இருக்குறதெல்லாம் ஒரே ஒரு கனவுதான். ஒரு ராத்திரி இங்க இருக்குற பணக்காரனுங்க கிட்ட இருக்குற எல்லா சொத்தையும் காக்கா வடையை தூக்குற மாதிரி தூக்கிடனும். அதுக்கப்பறம் இங்க எவனும் எவனுக்கும் முதலாளி இல்ல…”
ஒரு பெரும் அலை எழும் சத்தத்தைக் கேட்டு விழித்தாள். அவளது புளூடூத் ஹெட்செட் முடங்கி தொலைக்காட்சி பெட்டியிலிருந்து அந்த சத்தம் எழுந்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளை அந்த ஒரு நொடி முழு குழப்பத்திற்கு இட்டுச் சென்றது. முழுவதுமாக இப்போது சேகரை தன்னுள் உணர்ந்திருந்தாள் செண்பா. அவள் உள்ளங்கையில் இருந்த புகைப்படத்தை பார்த்த போது…“ஆமா, என்னைத் தொட்டாங்க… தூக்கி அவர் மார்போட சேர்த்து அணைச்சுகிட்டாங்க…முத்தம் கொடுத்தாங்க…” என்று மருத்துவமனையில் அவள் சொன்ன பொய் மீண்டும் அவள் நினைவுகளில் ஏறியதும் அவளது மூளை வீங்கி வெடிப்பது போலிருந்தது.
மீண்டும் சேகரின் அசுரச் சிரிப்பு கேட்டது. கொஞ்சம்கொஞ்சமாக அது ஒரு ராட்சஸ சிரிப்பாக மாறி அவளுக்குள் குடிகொண்டது. மார்கழி மாதத்து பனி போல அது அவளை ஈரமாக்கி எலும்பு வரைக்கும் குளிரவைத்தது.
ஒரு ஆணி அறைவது போல் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் பரத். எழுந்து சென்று கண்ணாடியில் அவள் முகம் முழுவதுமாக சேகராக மாறியிருந்ததைக் கண்டு ‘இனி செண்பா என்ற ஒருத்தி இந்த உலகத்தின் ஒரு பகுதியல்ல’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“வெளிய வா செண்பா!” என்று பரத்தின் குரல் ஓங்கியதும் குடுகுடுவென எழுந்து சேகரின் கருப்புத் தொப்பியையும் மேற்கோட்டையும் எடுத்து அணிந்து கொண்டே கதவைத் திறந்தாள். மேற்கோட்டை மாட்டிக் கொள்ள தூக்கிய கைகளோடு செண்பாவை கட்டி அணைத்துக் கொண்டான் பரத்.
பரத் அவளை ஆரத்தழுவி நின்றான். ஒரு சிறு மெளனம் தொடர்ந்தது.
முன் நகர்ந்து கதவைத் தள்ளி உட்புறம் தாளிட்டு பின், துடித்துப் போகாமல் நின்றிருந்தவளை அப்படியே தள்ளிக் கொண்டு கட்டிலில் செலுத்தினான். அவன் பிடியிலிருந்து வெளிவந்த போதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். தலையில் கைவைத்து அவளிடமிருந்து விலகினான்.
“இத்தனை வருஷமா என்னை சாவு சாவுனு சேகர் சொல்லிட்டிருந்ததன் அர்த்தம் இப்பதான் பரத் எனக்கு புரிஞ்சுது.” அவள் சொல்வது எதையும் பொருட்படுத்தாமல் படபடவென்று அறைமுழுவதும் அலைந்து திரிந்து ஏதோ ஒரு மருத்துவ அட்டையை கண்டெடுத்தான்.
“காம்பிரிஹென்சிவ் ஃபேசியல் ரிகன்ஸ்ட்ரக்ஷன்”
அவன் அதைப் படித்ததும் கட்டிலில் முழங்காலில் முகம் வைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென்று சிரிக்கத் துவங்கினாள். சோகத்தின் சாயல் சிறிதுமில்லாத அப்படியொரு ஒளிமிகுந்த சிரிப்பை கண்டு அவனாலும் சிரிக்காமலிருக்க முடியவில்லை.
விரைந்து வந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டவனிடம் கிழிந்த புகைப்படத்தைக் காட்டி, “பரத், இந்தப் பொண்ணுக்குப் பொய் சொல்லுறது ஒரு வியாதி போல… நல்லா கதை கட்டுவா. கதைகளை உருவாக்கும் அதே நேரத்துல அதை நம்பவும் செய்வாள்.” தாங்க முடியாத சோகத்தில் பரத் அவனது தலையை சிலமுறை குலுக்கினான். “தன்னைக் காப்பாத்திக்கிறதுக்காக எப்பேற்பட்ட பொய்யையும் சொல்லிடுவால்ல?” என்ற போது அவன் அவளிடம் நெருங்கி அவனது கைவிரல்களை அவளது புருவங்களில் ஓட விட்டான். குட்டிப் பொம்மை போன்ற அவளது அழகான கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது.
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு “என்னோட இந்த நோய் நீ நினைக்குறத விடவும் ரொம்ப ஆழமானது. இனி என்னோட இந்தப் பாதை சேகரின் கனவுக்கானது. நீ என்னைத் தாண்டிப் போகணும் பரத்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உதடுகளின் மேல் அவனது விரல்களை பலம்கொண்டமட்டும் அழுத்தி எடுத்தான்.
மெலிதாக அவன் உடம்பில் ஒரு நடுக்கம் பரவியது. உள்ளிழுத்துக் கொண்ட கண்ணீர் தலைக்கேறியதும் உச்சந்தலையில் கைவைத்துக் கொண்டான். “என்னை முழுவதுமாக கிழித்துப் போட்டது போலிருக்கு.” பெருமூச்செடுத்து, “செண்பா இல்லைன்னா பரத்தும் இல்லையே…” என்று செண்பாவின் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கிக் கிழியாத பாகத்திலிருந்த செல்வியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
செண்பா தலையை உலுக்கினாள்.
“வலி பிரச்சனை இல்ல…ரொம்ப செலவாகுமோ”? என்று அவனது கழுத்துப் பட்டையை நெருடியவாறு கேட்டான். விரல்களால் அவன் கன்னப்பொட்டில் அழுத்தி, “உனக்கு இது வேண்டாம். என்னை விட்டுப் போ”என்று அவன் நெற்றியோடு ஒட்டிக் கொண்டாள்.
வேற்று கிரகத்திற்கு ஜன்னலாய்த் தோன்றிய செண்பாவின் விழிகளையே உற்றுப் பார்த்து, “என் கண்ணுக்கு முன்னாடி ஒரு தேவதையைப் பார்த்துட்டு இருக்கேன். எப்படி தனியாக விட்டுட்டு போக?” என்று அவன் சொன்னதும் அவள் இன்னும் அழுத்தமாக அவன் மார்பின் மீது சாய்ந்துகொண்டாள்.



