
1
இன்று பெங்களூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. முன்னர் ஒருமுறை மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒருவனுடன் கோவையிலிருந்து ஜவ்வாது மலைக்குப் போகவேண்டி இருந்தது. பயணங்கள் பற்றியே அவனது கேள்விகள் அமைந்திருந்தது. அவன் கேட்ட கேள்விகளில் ஒன்றுதான், “தோழர், உங்களுக்கு பிடிக்காத ஊர் எது?“. சற்றும் யோசிக்காமல் “பெங்களூரு” என்றவுடன் அவன் தமிழக அளவில் மட்டும் கேட்டிருப்பதாக அவன் கண்கள் விரிந்ததை உணர்த்தியது. அந்த வியப்பிலே அதற்கு மேல் அவன் ஏனென்ற கேள்வியைக் கேட்கவில்லை.
அமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களுக்காகவே அவன் அமைப்பை விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியேற மாட்டான் என்று தோன்றியது.
எனக்கு பெங்களூருவில் பேசும் மொழியில் இருக்கும் கடுமையும், அதன் ட்ராஃபிக் என்பதும்தான் பிடிக்காமல் போக காரணமென்றாலும், அதைப்பற்றி அமைப்புகளில் உரையாடும் போது, ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அதிநவீன நகரமாக மாற்றும் நகரமயமாக்கல் மற்றும் அது அருகிலுள்ள பகுதிகளை அந்நியப்படுத்தும் அரசியலையும்தானே பேசியாக வேண்டும்?
இன்று செல்வதன் காரணம், நண்பர் அதிகமான தலைவலியின் காரணமாக NIMHANS-இல் அட்மிட் ஆகியிருக்கிறார். செலவுகளை குறைக்க வருமான வரிசான்றிதழ் தேவைப்படுகிறது. அவருக்கு உறவினர் என யாருமில்லை. தோழருக்கு ஒரு சுற்று தாண்டிய உறவு என்பதால், “உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்க, மறுக்கவா முடியும்? ஏற்பாடு செய்து மின்நகல் அனுப்பிவிட்டு அப்பாடா என அமர்ந்து ‘ஆயுள்’ நாவலை வாசித்து விடலாம். என்றால், அங்கு நகலை ஏற்க மாட்டார்களாம், “சிரமம் பார்க்காமல் ஏதாவது தோழர்களிடம் கொடுத்தனுப்ப முடியுமா?” என்றவுடன், அமைப்பில் அனைவரும் துப்பரவுத் தொழிலாளர்களின் ஒப்பந்த முறையை நீக்கி அரசாங்கப் பணியாக மாற்றுவதில் நமது பங்கைச் செலுத்தி அமைப்பாக்குவது தொடர்பான விவாதங்களும், களப்பணிகளும் போய்க் கொண்டிருக்கிறது. நானேதான் சென்றாக வேண்டும். பயணத்தில் வாசிக்கும் பழக்கமும் இல்லாதால் புத்தக ஆயுளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, தோழரின் ஆயுளுக்கு முக்கியம் கொடுத்து இரவே கிளம்பி விட்டேன்.
அத்தனை பெரிய, அதேசமயம் ஒரு சீரான ஒழுங்குடன் செயல்படக்கூடிய மருத்துவமனையை பார்த்து வியப்படைந்து முடிப்பதற்குள்ளாகவே, OP-இல் சிகிச்சை பெற வேண்டுமானால் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டுமாம். அதிலும் கன்னடர்களுக்கு ஒருவகையான மறைமுக முன்னுரிமையுள்ளதாம். சொன்னது ஒரு பிஹாரி. இத்தனை கோடி மக்கள் நிறைந்த ஒரு ஒருங்கிணைந்த ஐக்கிய பிரேதசத்தில் (எங்கள் அமைப்பு தேசிய இன விடுதலையை முதன்மைப்படுத்துகிறது) ஒரே மருத்துவமனையை மட்டும் அதிநவீன வசதியுடன் அமைத்து விட்டால் தீர்ந்து விடுமா என்ன?
“சரியான நேரத்தில் வந்துவீட்டிர்கள், ஒரு டீ சாப்பிட்டு பேசி பெரியப்பாவை பார்த்துவிடலாம்” என்று டீயில் ஆரம்பித்த உரையாடல் சமீபத்திய நேபாளத்தில் வெடித்த கிளர்ச்சி வரை சென்றது. அங்கு ஆட்சியில் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சியா? என கேட்ட போது என்னிடமும் பதிலில்லை. அதன்பிறகு உரையாடலும் நகரவில்லை.
தோழரின் பெரியப்பா அனுமதிக்கப்பட்டிருக்கும் POGW வார்டுக்குள் செல்ல நுழைந்த போது, சரியாக ஒரு பெண் மயங்கிய நிலையில் ஸ்டெரச்சரில் ECT வார்டிலிருந்து, கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள்.
பெரியப்பாவை பரஸ்பரம் நலம் விசாரிக்கும் போதுகூட என் நினைவு ECT அறையிலேயே நிலைகொண்டிருந்தது. தோழரிடம் ‘உடனே திரும்ப வேண்டும்’ என்ற போது, ‘நானே RedBusல் புக் செய்கிறேன் இரவு வரை இங்கிருக்கலாமே?’ என்றார். “நம் நேரம் அமைப்பிடமல்லவா இருக்கிறது?” என்று அழகான மார்க்சிய பொய்யை சொல்லிக் கொண்டு அவரிடம் விடைபெற்றேன்.
“ஒன்னும் பிரச்சனையில்லை தோழர், சேலம் பேருந்து பாஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு வரும், சேலத்திலிருந்து எல்லா ஊருக்கும்.. ஆ, நீங்க கோவைக்குதானே போறீங்க?” என்றார்.
பாலக்காடு செல்ல வேண்டும் என்ற உடனடி திட்டமிட்டதை சொல்லவில்லை, “ஆமாங் தோழர்” என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன். அவ்வளவு சீக்கிரம் ஒரு தோழரை அதுவும் மருத்துவ உதவிக்காக மொழித்தெரியா ஊரில் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டு செல்பவனில்லை நான். என்னுடைய பயணத்திட்டமும் இரவு கிளம்புவதுதான். ஆனால், ECT அறை “ரெபேக்கா” தோழரை நினைவு படுத்தியது.
2
ஒளரா.
ரெபேக்காவை நான் முதலில் சந்தித்த வாசகர் வட்ட நிகழ்வின் போது அவளின் பெயர் காம்னேவ். அப்படித்தான் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். ஆயுதப்போரட்டத்தை ஆதரிக்கும் அமைப்பு என்பதால் கூட தன் பெயரை அப்படி மாற்றியிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். ஆனால், காம்னேவ் யாராக இருக்கும்?
கல்குதிரை வெளியிட்ட ஒளரா சிறுகதை ஒன்றை அனைத்து தோழர்களும், அனைத்து என்றால் சிற்றிலக்கியத்திய கூட்டத்திற்கு கூடும் அறுபது எழுபது பேரா இருப்பார்கள்? மொத்தமே 33பேர், வாசிப்பு என்றாலே அதில் பாதிப்பேர் ஒதுங்கி(ளிந்து) கொள்வார்கள்.
ஆனால், காம்னேவ் அந்த தனிச்சுற்றிதழை தன் சொந்த செலவில் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்து வாசித்து உரையாடலாம் என்று ஒருங்கிணைத்திருந்தாள். நான் அமைப்பிற்கு புதிது. என்னிடம் நகல் ஏதும் கிடைக்கவில்லை. சரி, உரையாடலை கவனிக்கலாம் என்று சென்றிருந்தேன். வாசகர் வட்டம் புதிதல்ல எனக்கு. ஆனால், கம்யூனிஸ்ட்கள் அமைப்பு ஒருங்கிணைக்கும் அதிலும் தனி அகராதி தேவைப்படும் கல்குதிரை இதழுக்கு கூட்டம் என்பதால் எங்கு அமர்வது என்று தயங்கியபடி நிற்க இழுத்து தன்னருகே அமர வைத்தாள் காம்னேவ். அப்போது தான் கவனித்தேன், மேலுதட்டில் சற்றே பெரிய மரு.
“என்ன காம்ரேட்களே, வழக்கம்போல வாசிச்சவங்க கமியா இருப்பதால் விவாதத்திற்கு முன்னாடி வாசித்துவிட்டே நிகழ்வ முடிச்சுருலாமா” என கிண்டலாகத் தொடங்கினாள், அதில் சற்று வருத்தமும் தொனித்த நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர் போனஸ் பலக்கட்ட போரட்டத்தின் பின்னர் 1% உயர்த்திய மகிழ்வை காணமுடிந்தது.
அனைவரும் நகலை எடுத்தெடுத்து சரசரப்பிலே இது குறு நாவல் எனத் தோன்றியது. காம்னேவ் தனது நகலை என்னிடம் கொடுக்க, “சிறுகதை என்றீர்களே?”
“ஆமாம், சிறுகதைதானே”
“குறுநாவல் போல தோன்றுகிறதே” என எச்சில் விழுங்கியபடி சொன்னேன்.
“தோழர் குறுநாவல், சிறுகதை என்றெல்லாம் தனிவடிமேதுமில்லை வாடிவாசல், கடலும் கிழவனும், தண்ணீர் போன்றவற்றையெல்லாம் நீங்கள் நாவல்னுதானே சொல்வீங்க? அதிலையும் நீங்க அசோகமித்ரனை ஆளுமையாக கொண்டாடுபவராயிற்றே..? தண்ணீர் நாவலை சிறுகதையென்றால் என்னை விலக்கி விடமாட்டீர்கள்?”
பொதுவாக சிரித்துக்கொண்டேன்.
“நான் புனைவு, அபுனைவு என இருவகமை மட்டுமே என நினைக்கிறேன். இதை பின் நவீனதத்துவ வாதிகள் மட்டுமே ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். சரி, காலம் போகுது. கதையை ஆரம்பிங்க தோழர்” என்றார். நான் தொடங்க, அப்படியே ஆளுக்கொரு பத்தி வட்டம் முடியும் போது எனது நகலை காம்னேவிடம் நீட்ட, அவர் முன்பு நிறுத்திய பத்தியிலிருந்து அடுத்த பத்தியை மனப்பாடமாகவே வாசிக்க / சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
கதை முடிய நேரமும் முடிந்தது என மூத்த தோழர் சொல்ல காம்னேவ் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
“ஏன், இதுபோன்ற மொழிவிளையாட்டு கதைகள் நம் மக்களிடையே திருகல்வாதத்தைத்தானே உண்டாக்கும்?” என ஒருவர் தொடர, அடுத்தவர், “புயந்தஸ் ஒரு மார்க்சியரா?”
காம்னேவ் பொறுமையாக பதிலளிக்கத் தொடங்கினார். மொழி விளையாட்டை ஏன் எழுத்தாளர்கள் ஆரம்பித்தார்கள் என அவரது உரை அவளிடம் ஒரு ஈர்ப்பைத் தூண்டி என்னை அவரைத் தவிர, வேறொன்றை கவனிக்க விடாமல் செய்தது. இத்தனைக்கும் என்னால் ஒரே புள்ளியை தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு மேல் கண்ணொட்டி பார்க்க முடியாது. ஆனாலும் அவள் பேசும் பொழுது, அதிக உணர்ச்சியில் அவரது மூக்கும் புருவமும் உயர்ந்த விதம் வரை நினைவில் வைத்துக் கொண்டிருந்தேன், அது எங்கே உயரும், எங்கே தாழும் எனும் கணிக்கும் தொணியில் என் பக்கம் திரும்ப. நகலை எடுத்து பக்கத்தை திருப்ப என்னிடம், “நாம் இன்னும் கதைக்குள்ளயே செல்லவில்லை தோழர், அதை கீழே போடுங்கள், உங்கள் படபடப்பு அதற்கும் தொற்றிக்கொள்ளும்” என்றாள்.
காம்னேவை கொஞ்சம், கதையை கொஞ்சம் என உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.
எப்படி அவளால் என்னையும் கவனித்திருக்க முடியும்? என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. அதைப் புரிந்துக்கொண்டார் காம்னேவ். தோளில் தட்டி, ‘நாம் பேசுவோம். என் நேரம் முடியவில்லை. உங்களுக்கும் இல்லை என்றால் பேசுவோம்’ என்றார்.
தட்டும் போது அவளின் கையில்லா சட்டையினுள் தெரியும் அக்குள் முடி மற்றும் எடுப்பான நிறம் என்னைத் தகிக்கச் செய்தது.
மதிய உணவோடு உரையாடல் தொடங்கியது.
“ஏன் தோழர் புரியாத மாதிரி எழுதனும்? இல்லாட்டி தொன்மம்ன்னு ஒன்ன வேற எழுதுறாங்க. நான் இலக்கியாவதிதான்.. என்னாலையே இத ஒத்துக்க முடில. வாசிக்க இன்பம்தான். ஆனா, மக்களுக்கு என்ன பயன்?”
“சமூக மாற்றம் மட்டும் நடக்கனும். ஆனா, இலக்கியம் மட்டும்.. ‘தோழர் வந்தார். அவர் கண்களில் பண்ணையார்களை எரிக்கும் தீ தெரிந்ததுன்னு’ மட்டுமே எழுதிட்டு இருக்கனுமா? அப்புறும் Broken April-ன்னு நினைக்கிறேன். நாவல் பேரு சரியா தெர்ல. ஆனா, முக்கியமான புக்கு, நம்ம அல்பேனியா ஆட்சில..”
“என்னது?”
“அதான் கம்யுனிஸ்ட் ஆட்சில.. அந்த எழுத்தளார் படைப்புக்கு தடை போட்டுட்டாங்க. அவர் தான் நினைச்சத கன்வே பண்ணனும்னு பழைய புராணத்த வச்சு எழுதி டிமிக்கி கொடுத்தார்”
“உங்க கலெக்சன இரவல் கொடுங்க”
“பிரதியெடுத்தே கொடுப்பேன் நீங்க வாசிப்பீங்க என்றால்”
நன்றியா தேங்க்ஸா எது சொல்ல என்ற அரை நொடி குழப்பத்தில் தடுமாறுவதற்குள் எந்த தயக்கமும் இல்லாமல், “தோழர், எந்த பெண்ணோட அக்குளையும் பாத்ததில்ல போல”
“….”
“நான் வேக்ஸிங் பண்ணிக்கிறதில்ல.. என்னோட பார்ட்னரோட இருந்த மோசமான அனுபவத்தில, அவளும் கம்யூனிஸ்ட்னு அறிமுகமானா.. இப்ப NGO தற்சார்பு வேற வழில இருக்கா, கொஞ்சம் செக்ஸூவலா அப்யூஸூம் கூட”
தோழர் பேசிக்கொண்டே போக, என்னை ஒரு அமைப்பு பொறுப்பாளர் அழைக்க, “உங்களத்தான் கூப்பிடுறார் அந்த அடிப்படைவாதி, பொறுப்ப ஏத்துக்க முன்ன விவாதிக்காம ஏத்தாக்காதீங்க, சந்திப்போம்” என ஒரு இறுக்கமான முகத்தோடு விடைபெற்றாள்.
அமைப்பாளர் விதிகள், பிரச்சாரம் எனச் சொல்லிக்கொண்டே போக விடைபெறும் தருணம் எப்போது வரும் காம்னேவ் பற்றி விசாரிக்க என காத்துக் கொண்டிருந்தேன்.
“காம்னேவ் தோழர் லெஸ்பியனா?”
“யார் சொன்னா?”
“அவங்களேதான்”
“தோழர், அவங்க லெஸ்பியன் எல்லாம் இல்ல, மார்க்சியான்னு மகள் கூட இருக்காங்க, தோழருக்கு சின்னதா மன அழுத்தம், சில விஷயங்கள அவங்களே கற்பனை பண்ணிப்பாங்க. ஆனா, இண்டெல்க்சுவல்”
3
ரெபேக்கா
அறைக்குள் நுழையும் முன்னரே ஒரு 10 புத்தககங்களுக்கு மேலான பார்சல் காத்திருந்தது, அனுப்பியவர் பெயர் ரெபேக்கா எனவும் பாலக்காடு என்ற முகவரியும் இருந்தது. ‘யார் அந்த ரெபேக்கா?’ என யோசித்துக் கொண்டே பார்சலைத் திறந்தால் மொத்தமே 6 புத்தககங்கள்தான். அதன் தடிமனால் எண்ணிக்கையில் பத்தாகதஜ் தெரிந்தது நினைத்து சிரித்துக்கொண்டேன்.
அதிலிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டேன்.
“ஹாய் தோழர் புக்ஸ் வந்துருச்சு போல”
கேட்ட குரல்தான். ஆனால், யாரென்று பிடிபடவில்லை.
“தோழர், கேக்குதா? இங்க சிக்னல் வீக்கா இருக்கும்”
“தப்பா நினச்சுக்காதீங்க, எனக்கு பிடிபடல. நீங்க..?”
“நான் ரெபேக்கா, ஒளரா வாசிப்பு வட்டம்ல பாத்தம்மே”
காம்னேவின் குரலேதான், ஆனால் ரெபேக்கா என்கிறாளே?
“இல்ல.. நீங்க ரெபேக்கான்னு சொன்னாங்காட்டி சின்னக்குழப்பம்”
“அதிலென்ன குழப்பம்? என் பேர மறந்துட்டீங்களா இல்ல அக்குள் சொன்னாத்தான் நினைப்பு வர்ற அளவுக்குத்தான் ஞாபகம் வச்சுருக்கீங்களா?”
“இல்ல இல்ல தோழர்” என சமாளித்தபடி சிக்னல் கிடைக்காது போல், “ஹலோ, ஹலோ” என சொல்லிக் கொண்டே, “உங்க பேரோட மீனிங் என்ன தோழர்?”
“ரெபேக்கா தெரியாதா? ஒன் ஹண்டரட் ஹியர் ஆஃப் சோலிட்யூட்ல வர கேரக்டர். அவளுக்கு பசியே எடுக்காது. காரணம் தேடின பிறகுதான் தெரியும் அவ சுவரை சுரண்டித் தின்னே வாழ்ந்திட்டு வரான்னு. எங்கப்பா நானும் அந்த மாதிரியே இருக்கங்காட்டி அந்தப்பேர வச்சிட்டார் போல. நீங்க படிக்கலன்னு தெரிஞ்சா அந்த புக்கும் அனுப்பிருப்பன்”
“இன்டரஸ்ட்டிங் தோழர்”
“அடுத்த வாசகர் வட்டம் என் வாழ்க்கை – டாரட்ஸ்கியோடது. zoom meeting-ல மறக்காம லாகின் பண்ணிடுங்க”
“நீங்க ட்ராட்ஸ்கியிஸ்ட்டா தோழர்?”
“நான் 100% ஸ்டாலினிஸ்ட். ஆனா, ட்ராட்ஸ்கிய வாசிக்கனும்ல? ஹெகல்க்கூட உடன் படலனாலும் அவர் சிந்தனைகளை வாசிச்சங் காட்டித்தான மார்க்ஸியமே கிடச்சது. புக்ஸ்ல தீண்டாமை பாக்கக் கூடாது”
“கரெக்ட் தோழர்”
“சரி தோழர். என் அம்மாவுக்கு ECT. child abuse போல. இப்ப அவங்களுக்கு schiz. அதான், இங்க கம்பளி சுங்கம் வந்திருக்கோம். Bye”
இணைப்பு துண்டித்ததும் உடனே ரவி தோழருக்கு கால் செய்தேன்.
“என்ன தோழர், காம்னேவ் அவங்க பேர் ரெபேக்கான்னு சொல்றாங்க. எனக்கு ஒன்னுமே புரில. ஏதோ ECT வேற சொன்னாங்க. அப்படீன்னா என்ன?”
“தோழர், அவங்களோட ஹலோசினேசன் அதிகமாயிடுச்சுன்னு அவங்களுக்கு தான் ECT. அது ஒருவகையான ஷாக் ட்ரீட்மெண்ட்”
“என்ன தோழர், அவங்க அம்மாக்குன்னு சொன்னாங்க?”
“தோழர், அன்னைக்கே சொன்னேன்ல அவங்களுக்கு ஹஸ்பண்ட், மகள் தவிர வேற யாரும் இல்ல. ஹஸ்பண்ட் அவங்களோட செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்குறார். இல்லாட்டி, அதுவும் அவங்கள பாதிக்கும்ன்னு”
“ம்ம்”
“அது பெரிய கதை தோழர், பஜார் ஸ்ட்ரீட் பிரச்சாரம் நாளைக்கு இருக்கு மறந்துடாதீங்க…
4
ஒலேஸ்யா
வாட்சப்பில் புதிய எண்ணில் இருந்து ‘ஹாய் தோழர்’ மெசேஜ் வந்திருந்தது. பெயரை ட்ரூ காலரில் போட்டால் ஒலேஸ்யா என்றிருந்தது.
ஹாய்
என் கதை படிச்சீங்களா, என் ஹெல்த் இஸ்யூவால zoom meeting conduct பண்ண முடில
படிச்சேன் ஒலேஸ்யா
ஒலேஸ்யா ரொம்ப நல்ல பேரில்லையா, என் லவ்வர் குப்ரினோட தீவிர வாசகன். என்னோட ஸ்கின்டோன் பவளம் மாதிரி இருக்குன்னு அதப்பத்தி வந்த கதைல வர்ற கேரக்டர் பெயர் எனக்கு வச்சுட்டான்… நானும் படிச்சதில்ல. ஆனா, படிக்கனும்.
எப்படி இருக்கீங்க?
எனக்கு என்ன.. I am always good! பட், அவன் தான் இப்ப schizo-ல இருக்கான். ரொம்ப சிவியர் ஸ்டேஜ். நாளைக்கு அவனுக்கு ஆறாவது ECT!
ஆறு டைம் ECT கொடுக்குற அளவுக்கு என்னாச்சு?
அவன் ஏதோ அப்யூஸ் பண்ணிருக்கனாம். இப்ப கில்ட்ல இருக்கான். கில்ட் ஆகுறதுக்கே ரொம்ப பெரிய தைரியம் வேணும்ல?
எங்க இருக்கீங்க அதே கம்பளிசுங்கம் தான?
ம்ம்ம்.. நீங்க என்ன வாசிக்கிறீங்க
சாரி. எனக்கு இப்ப ரொம்ப தூக்கம் வருது. மார்னிங் நேரத்துல அவன கூட்டிட்டு போனும்ல? ஹோப் யூ அண்டர்ஸ்டேண்ட்
யா யா good night.
இதற்கு அடுத்து நான் எந்த தோழருக்கும் கால் செய்து ரெபேக்கா சொன்னதில் எது உண்மை என உறுதிபடுத்திக்கொள்ளவில்லை.
இரண்டு மூன்று என மாதங்கள் என இப்போது எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், காம்னேவை பற்றியோ, ரெபேக்காவை பற்றியோ, ஒலேஸ்யாவை பற்றியோ விசாரிக்க தைரியமில்லை, எனது அரசியல் களப்பணிகளும் விரிவடைந்தது
ஆனால், அவளது மரு, அக்குள் மயிர், நாம் நினைப்பதை கண்டுகொண்டு புன்னகைக்கும்போது அவளது புருவமும், மூக்கும் உயர்வது என எதையும் மறக்கவுமில்லை.
5
கோவையில் இறங்கியவுடன் கம்பளிசுங்கம் ஊருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க ஆரம்பித்தேன், நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஒருவர் மட்டும் ‘கொழிஞ்சாம் பாறை வழி செல்லும் சித்தூர் பேருந்துகள் அங்கு போகும்’ என்றார்.
பேருந்தில் பெரிதாக கூட்டமில்லை. அருகிலிருவரிடம் ‘கம்பளிசுங்கமில் ஏதாவது பெரிய மருத்துவமனை உள்ளதா?’ என்று கேட்டேன். அவருக்கு கம்பளிசுங்கம் தவிர நான் கேட்டது எதுவும் புரியவில்லை.
நான் திணறுவதை பார்த்து கண்டக்டர் வந்து என்னவென விசாரிக்க நான் ‘கம்பளிசுங்கம் பகுதியில் பெரிய மனநல மருத்துவமனை உள்ளதா?’ என்று கேட்டேன்.
அவர் ‘அங்கு கிளினிக் இருப்பதே அபூர்வம்ங்க’ என்று சொல்லிச் சிரித்தார்.
எனக்கு கம்பளிசுங்கமே ஹலோசினேசனாக இருக்குமோ என்று அப்போது தோன்றியது.



