
வளனுக்குள் பழிவாங்கும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. தகிக்கும் நெருப்பைக் கொண்டு எதிரே நிற்பவனை முழுவதுமாக அழித்துவிடும் ஆவேசத்தோடு இந்த முடிவை நெருங்கியிருந்தாலும் வாழும் ஆசையின் உள்கிடப்புகளினால் அவனுடைய கால்கள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன. கால்களின் நடுக்கத்தோடு முக்காலியும் கைக்கோர்த்திருந்தது.
மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்த அம்மாவின் பூ போட்டச் சேலையை இறுக்கமாக முடிச்சு போட்டுவிட்டு தன் கால்நடுக்கத்தை குனிந்து பார்த்தான். இதயத்துடிப்பின் வேகம் காதுகளுக்குள் கேட்டது. நிமிர்ந்து கண்ணெதிரே தொங்கிக்கொண்டிருந்த முடிச்சை பார்த்தபோது அகண்ட அடிபாகத்தோடிருந்த அம்முடிச்சு அம்மாவின் கோவிப்பொட்டை நினைவுப்படுத்தியது. மூச்சை சீராக்கி நிதானித்துக்கொண்டு முடிச்சுக்குள் தலையை நுழைக்க முயன்றபோது நிதானம் கூடி வரவில்லை.
****
பள்ளிப்பருவத்தின் ஆண்டுவிழா மேடைகளில் பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக அவனது பெயர் எல்லா ஆண்டுகளிலும் உச்சரிக்கப்பட்டுவிடும். அப்பாவின் பிரம்படி அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த நடுக்கம் எத்தனைப் புத்தகங்களை முன் வைத்தாலும் ஓர் எழுத்து அச்சு பிசகாமல் அவனை உருபோடவைத்துவிடும்.அதன் விளைவாக வகுப்பின் முதல் மாணவன் இடத்தை அவன் விடாமல் பிடித்திருந்தான்.
அவனது வீட்டின் வடக்காக இருக்கும் மைதானத்தில் அவனின் வயதொத்த பிள்ளைகள் மாலையில் பள்ளி முடிந்து வந்தபிறகும் மற்ற விடுமுறை நாட்களிலும் .விளையாடுவார்கள். அப்பா அதற்கெல்லாம் அவனை அனுமதித்ததேயில்லை.
“பள்ளிக்கூடம் விடுகதுக்கு பத்து நிமிஷம் முன்னகூட்டியே போய் நின்னு பள்ளிக்கூடம் விட்ட கையோட கூட்டிட்டு வந்திரு. காத்து.. நிக்க விட்டுட்டா அப்புறம் கூடபடிக்க பிள்ளைககிட்ட பேசுறேன் வைக்கிறேன்னு படிப்புல இருக்க கவனம் சிதறிரும்”
அம்மாவிடம் அப்பா இப்படிச் சொல்வதைக் கேட்கும்போதெல்லாம், வளன் மனத்தளவில் அவரைவிட்டு கூடுதலாக ஓரடி பின்நகர்ந்தான்.
ஆண்டுவிழா நாடகங்களில் நடிக்க வேண்டுமென்று வளனுக்குக் கொள்ளை ஆசை. ஒருதடவை எல்லா பயத்தையும் உதிர்த்துவிட்டு நேரடியாக அப்பாவிடமே கேட்டுவிட்டான்.
“அதுலாம் நமக்கு தேவையில்ல.. ஒழுங்கா படிச்சா மட்டும் போதும்”
கண்டிப்பாக முடித்துவிட்டார்.
வளனின் அப்பா எந்த ஆண்டு விழாவிற்கும் அவனோடு இருந்ததில்லை. பரிசோடு வளன் அம்மாவின் அருகில் வந்து உட்காரும்போது அவள் அவனை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தம் வைப்பாள். ஆனந்தமா, வருத்தங்களின் கொப்பளிப்பா என்று புரிந்துக்கொள்ள முடியாத கண்ணீரின் துளிகள் அவளின் இமைகளில் ஒட்டியிருக்கும்.
“எல்லா புள்ளைகளையும் மாதிரி அவனும் கொஞ்சம் விளையாடி எடுத்து இருக்கட்டுமே.. எப்பவுமே இப்படி புஸ்கத்துக்குள்ள புகுத்தி புழுவாக்கி போடணுமா?”
“இப்ப ஆட்டம் போட்டுட்டு திரிய சுகமாத்தான் இருக்கும். என்கூட நல்லா படிச்சவன்லாம் இப்ப நல்ல உத்தியோகத்தில இருக்கான். அந்த வயசுல ஆடிக்கிட்டு திரிஞ்சதுனாலதான் இப்ப இப்படி மூட்டைத் தூக்கி சாக வேண்டியதா இருக்கு”
அம்மா வளனுக்காக பரிந்து பேசும்போதெல்லாம் அப்பா வந்து நிற்கும் இடம் இதுவாகத்தான் இருக்கும். அதற்குமேல் அவளும் பேச்சை வளர்த்துக்கொள்ள மாட்டாள்.
வளன் சதா புத்தகத்தோடே இருக்க வேண்டுமென அப்பா எதிர்பார்த்தார். அப்படியிருந்தால் மட்டுமே நன்றாகப் படிப்பது எனத் தீர்க்கமாக நம்பினார். விரிந்து இருக்கும் புத்தகத்தையே வெறித்துச் சலித்துப்போகும் நாட்களில் தரையில் தனியாக ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளைப் பிடித்துப் புத்தக இடுக்குகளில் விட்டு அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். நூற்றுக்கு தொண்ணூறு என்பதே அப்பாவிற்கு குறைவான மதிப்பெண்தான்.
“என்னத்த மார்க் வாங்கி கிழிச்சிருக்க?”
வளனின் பின்னந்தலையை அவரது உள்ளங்கை பிடிக்குள் வைத்து முன்நெற்றியை ஆவேசமாக சுவரில் மோதுவார். உடம்பு முழுவதும் அடி உதைகளின் பாய்ச்சலை இறக்குவார்.
வகுப்பில் ஆசிரியர்களுக்கு வளன் செல்லப்பிள்ளையாக இருந்தான். அதில் அவனுக்கு எந்த சந்தோஷமும் இல்லை. சக மாணவர்கள் தன்னோடு நட்பு பாராட்டாமல் ஒதுங்கியே இருப்பதை நினைத்து வருத்தப்பட்டான். அப்பாவின் அடிக்குப் பயந்து ஆசிரியர்கள் வராத வகுப்பு நேரங்களில் கூட படிப்பே கதி என்று கிடப்பதும் மதிப்பெண் குறைந்துவிட்டால் வகுப்பில் வைத்தே அழ ஆரம்பித்துவிடுவதுமென இருந்த அவனை உடன் படித்த யாருக்கும் அதிகம் பிடித்திருக்கவில்லை. “படிப்ஸ்” என்ற பட்டம் கொடுத்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள்.
வளனின் அம்மா பெரும்பாலும் அவனை செல்லமாகவே நடத்தினாள். தன் பக்கத்திலிருந்து அவனுக்கு எந்த மன உளைச்சலும் இல்லாமல் பார்த்துக்கொண்டாள். நன்கு விவரம் நிமிர்ந்த பருவத்தில் அம்மாவிற்கு இருப்பது பாசமா பரிதாபமா என்கிற குழப்பமும் அவனுக்குள் லேசாகத் தோன்றி மறைந்தது. அவனுடைய அப்பாவின் கண்டிப்பை தளர்த்திட அம்மா உபயோகிக்கும் இன்னொரு யுக்தி, முகத்தை தூக்கணாங்குருவி கூடாக மாற்றியபடி மெளனம் சாதிப்பது. அவர் அதற்கும் அசங்கமாட்டார்.
“இப்ப செல்லம் கொடுத்தா நாளைக்கு அவன் சீரழியும்போது நம்மதான் பாத்து பாத்து நோகணும். கட்டுப்பாடோட வளக்க புள்ளதான்.. நல்லா வருவான்”
இப்படி ஆரம்பித்து பெரும் உரை ஒன்றை நிகழ்த்தி முடிப்பார்.
“ஆமா ஊருல இல்லாத பிள்ள வளக்கேரு. சுத்தி இருக்கிற எந்த வீட்டுல எந்த அப்பன் பிள்ளைய இப்படி தூக்கிப் போட்டு அடிக்கான். அதுகல்லாம் நாளைக்கு ரோட்லியா நிக்க போகுது?”
அம்மா அவளுக்குத் தெரிந்த உவமைகளையெல்லாம் பற்றிக்கொண்டு வளனுக்காக வாதாடிப் பார்ப்பாள்.
“எவன் என்ன பண்ணுனா எனக்கென்ன.. என் பிள்ள கூலிக்கு மாரடிக்காம மரியாதையா வாழணும். அவ்வளவுதான்”
அம்மா விடாமல் பேச்சை வளர்த்துக்கொண்டே போகும் நாட்களில், அப்பா பேச்சை துண்டித்துவிட்டு கிளையில் இருந்து எவ்வி மறைந்துவிடும் பறவையாய் அங்கிருந்து நகர்ந்துவிடுவார். நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் வளனுக்குள் மதிப்பெண்களோடு சேர்ந்து அப்பாவின் மீதான வெறுப்பும் கறையான்புற்றாக நாளுக்கு நாள் வளர்ந்தபடியிருந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பகல் பொழுதொன்றில் வளனின் தெற்கு வீட்டிலிருந்த ஐயப்பன் பியூனின் துணையோடு அவனின் வகுப்பறைக்குள் நுழைந்தார். வகுப்பில் நின்றிருந்த கணக்கு வாத்தியாரிடம் பியூன் ஏதோ முணுமுணுக்க, வளன் குழப்பத்தோடு பியூனின் அசையும் உதடுகளையும் ஐயப்பனையும் பார்த்துக்கொண்டிருந்தான். மொத்த வகுப்பின் கண்களும் ஆவலோடும் குழப்பத்தோடும் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. பேசி முடித்து வளன் பக்கமாகத் திரும்பிய வாத்தியார் அவனை ஐயப்பனோடு கிளம்பிப் போகும்படி சொன்னார்.
ஐயப்பன் வளனை டிவியெஸ்ஸில் பின்னமர்த்தி தர்மாஸ்பத்திரி வாசலில் கொண்டு இறக்கினார். அப்பாவுக்கு உடம்பில் சிறிய பிரச்சினை என்று சொல்லியிருந்தார். அவனால் எதையும் முழுதாக விளங்கிக்கொள்ள முடியவில்லை.
அவர்கள் நுழைந்த வார்டில் வரிசையாக நிறையக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. கட்டில்களின் இடைவெளியில் இருக்கும் இடங்களில், நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவர்கள் அமர்ந்திருந்தார்கள். சிலர் அந்த இடைவெளியிலேயே உடலைச் சுருக்கிக்கொண்டு படுத்திருந்தார்கள். மொத்த வார்டுமே நெருக்கடியாகக் காணப்பட்டது.
ஆறாவதாகக் கிடந்த கட்டிலின் அடுத்திருந்த இடைவெளியிலிருந்து வளனுடைய அம்மா எட்டிப் பார்த்தாள். முகத்தில் அழுகையின் பிசுக்குகள் அப்பியிருந்தன. அப்பா கட்டிலில் நீட்டிப் படுத்திருந்தார்.வலப்பக்க கையும் காலும் அசாதாரணமாக காணப்பட்டன.. காலையில் பள்ளிக்குக் கிளம்புகையில் பார்த்த அப்பா இவர் இல்லை என்று வளனுக்குத் தோன்றியது. கண்டிப்பில் அலையும் கண்கள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தன. அப்பாவிற்கு பக்கவாதம் தாக்கியிருப்பதாக அம்மா வளனிடம் சொல்லி முடிப்பதற்குள் அழுகை அவள் குரலை அடைத்து நின்றது.
“நீதான்டே நல்லா படிச்சு அப்பனையும் அம்மையையும் நல்லபடியா காப்பாத்தணும்”
ஐயப்பன் அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தார்.
வளனுக்கு நிலைமை உரைக்க நேரம் பிடித்தது. நிலைமை முழுமையாக விளங்கியபோது அப்பாவால் தன்னை இனிமேல் அடிக்கமுடியாது, சுவரோடு முட்டச் செய்து தலையைக் காயப்படுத்த முடியாது என்பதை நினைத்து ஆசுவாசமடைந்தான். ஒருவேளை அவரால் இடது கையாலேயே பழைய பலத்தோடு அடித்துவிட முடியுமோ என்கிற சந்தேகமும் கூடவே எழுந்தது.
ஐயப்பன் மாமா கேண்டினிலிருந்து டீயும் பிஸ்கெட்டும் வாங்கிவந்து கொடுத்தார். வளனுடைய அம்மா நீட்டிய சில்லறைகளை பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
“எதுவும் வேணும்னா கூப்பிடுமா.. நான் காலையில வாரேன்”
ஐயப்பன் கிளம்பியபோது அம்மா வளனையும் அவரோடு வீட்டிற்கு கிளம்பச் சொன்னாள். அவன் முடியாதென்று அம்மாவோடு ஒட்டிக்கொண்டான். அவள் கண் அசந்த நேரங்களில் அப்பாவின் கை அசைகிறதா என்பதை இன்னும் கூடுதல் கூர்மையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு வளனின் அப்பாவை வீட்டிற்குக் கூட்டி வந்திருந்தார்கள். வீட்டுச் செலவுகளை சமாளிக்க அவனுடைய அம்மா களை பறிக்கும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தாள்.
“ஆம்பிள பிள்ள நிமிந்திட்டான்ல.. நீ வேலைக்குப் போகணுமாக்கும்? அவன படிப்ப நிறுத்திட்டு அனுப்பலாம்ல..”
“அவன் படிச்சு முடிச்சு பெரிய உத்தியோகமா போகட்டும்.. என் கஷ்டம் என்னோட..”
ஐயப்பனின் மனைவி ஜானகினுடைய கேள்விக்கு வளனின் அம்மா உறுதியாக பதில் சொன்னாள்.
அவள் வேலைக்கு கிளம்பும்முன், மீதி நாளை கணவன் எவரின் உதவியும் இல்லாமல் கழித்துக்கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்து வைத்துவிடுவாள்.
தன் தேவைகளுக்கு நா குழறும் மொழியில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதைத் தவிர்த்து வேறு எதைப் பற்றியும் அவர் கேள்விகள் எழுப்ப விரும்பவில்லை. வெறும் வேடிக்கைப் பார்ப்பவராக கட்டிலிலும் சாய்வு நாற்காலியிலும் தன்னை பதுக்கிக் கொண்டார்.
காலாண்டு பரீட்சை மதிப்பெண்களைக் கொண்டுவந்து வளன் நீட்டியபோது அம்மாதான் தமிழ் எழுத்துக்களை சற்று சிரமத்தோடு கூட்டி எழுதி கையொப்பமிட்டாள். சிகப்பு இங்கில் இளித்துக் கொண்டிருந்த மதிப்பெண்களைப் பற்றி கேள்வி எழுப்பினாள். அது எந்தப் பாடத்திற்கு என்பதையும் கூடவே கேட்டுத் தெரிந்துக்கொண்டாள். அடுத்தமுறை இப்படியிருந்தால் கையொப்பம் இடமாட்டேன் என்றாள். வளன் மெளனமாகத் தலையாட்டினான். அடுத்த முறையும் சிகப்பு இங்க் இளித்தபடியே வந்து நீட்டியபோது கையொப்பமிடாமல் இரண்டு நாட்கள் அலைக்கழித்தாள்.
அம்மாவும் தானும் மதிப்பெண்களைப் பற்றி நடத்தும் உரையாடலின்போது அப்பாவின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதையே வளன் ஒவ்வொருமுறையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவரின் கோபம் கண்களில் நிரம்பி நின்றது என்றாலும் அவரிடமிருந்து எந்த எதிர்வினையுமில்லை. அவரைப் பெரிதாகப் பழிதீர்த்துக் கொண்டிருக்கிற மகிழ்ச்சி அவனுக்குள் கூடிக்கொண்டே போனது.
அரையாண்டு பரீட்சையில் எப்படியோ விளிம்பைத் தொட்டிருந்தான். அவன் மதிப்பெண் அட்டவணையை நீட்டியபோது அம்மா மதிப்பெண்களை கவனமாக உற்றுப் பார்த்தாள். முகத்தில் அதிருப்தி படர்ந்தது. முறைத்தபடியே கையொப்பம் இட்டுக் கொடுத்தாள். இரண்டு நாட்கள் விட்டு, வளனை அருகில் அமர்த்தி பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.
“இப்பதான் தம்பி நீ இன்னும் பொறுப்பா படிக்கணும். நல்ல உத்தியோகத்துக்கு போகணும். வளந்த புள்ளய கைநீட்ட ஒன்னுமில்ல. நீயா புரிஞ்சு நடந்துகிடணும்”
வளன் அம்மா சொல்வதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சாய்வு நாற்காலியில் கண்மூடி படுத்திருக்கும் அப்பாவையே பார்த்தபடி இருந்தான். அவர் அவனது பின்மண்டையை அழுந்தப் பிடித்து நெற்றியைச் சுவரோடு மோதும் காட்சி திடுமென கண்முன் விரிந்து அவனை துணுக்குறச் செய்தது.
“அப்பாக்கு இது எப்ப சரி ஆகும்?”
அவன் அம்மாவிடம் விசாரித்தான்.
“படைச்சவனுக்கே வெளிச்சம்”
அவள் பெருமூச்செறிந்தாள். அவள் உறுதியாக எதுவும் சொல்லாமல் இப்படியான பதிலைத் தந்ததில் அவனுக்குத் திருப்தியில்லை. உண்டு இல்லையென எதையாவது உறுதியாகச் சொல்லியிருக்கலாம் என்று நினைத்தான். அடுத்து வந்த நாட்களில் எப்போதும் போல் புத்தகத்தின் முன் அமர்ந்திருந்தான். வளன் உண்மையாகவே படிக்கிறானா என்ற சந்தேகம் அம்மாவைத் துரத்திக்கொண்டிருந்தது.
அப்பாவை ஜெயித்துவிட்டதாக அவனுக்குள் பூரிப்பு பெருகிக்கொண்டே போனது. அதற்கு, மேலும் மேலும் தீனிப் போட நினைத்தான். புத்தகத்தை விரித்தபடி அவர் கண்முன்னே படுகின்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தான். அவருக்குள் நம்பிக்கையை விதைத்து பின் அதனை உடைக்கும் யுக்தியை மனதிற்குள் தெளிவாகத் திட்டமிட்டிருந்தான்.
முழு பரீட்சை முடிவுகள் வெளியானபோது அறிவியலிலும் கணக்கிலும் கரை சேராமல் நின்றிருந்தான்.
“ஏன் தம்பி இப்படி பண்ணுன..?”
வளனின் அம்மா உடைந்து போய் அழுதாள்.
அவர் கூடிய மட்டும் இடது கையில் பலம் திரட்டி வளனுடைய முதுகில் அறைந்தார். அவருடைய துடிக்கும் வலக்கை விரல்களைக் கண்கொட்டாமல் பார்த்தபடி அவன் அசராமல் நின்றான். துடிப்பதைத் தவிர அவற்றால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. வளன் விட்டேத்தியாக அம்மா அவனை மீண்டும் பள்ளிக்குபோக சொன்னாள். அவன் முடியாதென்று மறுத்துவிட்டான். துணி கடைக்கு வேலைக்குப் போவதாக சொன்னான். எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவளால் அவனது முடிவை புரட்டிப் போட முடியவில்லை.
“அவனுக்கு வரமாட்டேங்குதுனா விடுக்கா.. எதுக்கு அவனையும் படுத்தி நீயும் ஒத்த மனுஷியா கெடந்து அல்லாடணும்”
ஜானகி மீண்டும் வந்து தலைக் கொடுத்தாள்.
வளனின் அம்மா பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.
அவனுடைய பிடிவாதம் வென்றது. டவுனில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தான். ப்ளவுஸ் வெட்டி கொடுக்கும் செக்க்ஷனில் போட்டிருந்தார்கள். மாதச் சம்பளமும் நாள் பேட்டாவும் உண்டு. நன்றாகப் பெயர் எடுத்து முன்னேறினால் புடவை செக்க்ஷன், பட்டு செக்க்ஷன் என்று மேலேறலாம். விற்கும் உருப்படிக்கு ஏற்றபடி கூடுதல் பேட்டாவும் கிடைக்கும்.
ஆறு மாதங்கள் ஓடியிருந்தன. அவனுடைய அம்மா உடல் சோர்வோடு மல்லுக்கட்ட முடியாமல் களை பறிக்கப் போகும் நாட்களை குறைத்திருந்தாள். முழுவதுமாக நிறுத்தியிருக்கவில்லை. வளன் அவ்வப்போது ஒன்றிரண்டு நாட்கள் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு வீட்டிற்கே திரும்பி வர ஆரம்பித்தான். அவன் அப்படித் திரும்பி வரும் நாட்களில் அவள் அழுதுகொண்டே இருந்தாள். பேசிப் பயனில்லை என்ற நிலையை வளன் கச்சிதமாகத் தொட்டிருந்தான். அப்பா வளனை கொலைவெறி முற்றிப்போன கண்களோடு வெறிப்பார். ஆத்திரத்தை எச்சிலும் வசையுமாக வெளிப்படுத்துவார்.
அவன் எதையும் சட்டை செய்துக்கொள்ளவில்லை. வேலைக்கு முழுக்கு போடும் நாட்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தது. அப்படியான நாட்களுக்கு அவன் மாற்றுவழி கண்டிருந்தான். வீட்டிற்குத் திரும்பி வராமல் கடைக்குப் பக்கத்தில் இருந்த பூங்காவில் படுத்தபடி நேரத்தைக் கழித்தான். கட்டுச்சோற்றை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்புவான். சம்பளத் தினத்தன்று பணம் குறையும் கணக்கில் அவனுடைய அம்மா குழம்பிப் போனாள். அவனிடம் காரணம் கேட்டபோது சரியான பதில் வரவில்லை.
வளன் பூங்காவில் படுத்திருந்ததை பார்த்துவிட்ட வளவு வீட்டு பாஸ்கரன் ஒருநாள் வீடேறி வந்து வளனின் அம்மாவிடம் தகவல் சொல்லிவிட்டுப் போனார். அவள் மொத்தமாக நொறுங்கிப் போனாள். ஏற்கெனவே தான் வளனுக்கு சொன்ன அறிவுரைகள் எல்லாமும் குப்பைக்குத்தான் போயிருக்கிறது என்பதை அறிந்தவளாய் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள்.
திடீரென்று தொடர்ச்சியாக ஐந்தாறு மாதங்கள் சம்பளப்பணம் குறைவின்றி வீடு வந்து சேரும். மீண்டும் குறையும். சம்பளப்பணம் ஏறுவதும் இறங்குவதுமாய் மாதங்கள் கடந்தன. ஒன்றரை வருடத்தில் வளன் இரண்டாவது கடைக்கு மாறியிருந்தான். முதல் கடையில் இனி வேலையில்லை என்று துரத்திவிட்டிருந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் அவனுக்குத் துளியும் வருத்தமில்லை.
பூங்காவின் நடுமேடையில் பின்னந்தலைக்கு கையண்டை கொடுத்து ஒய்யாரமாக படுத்திருக்கும்போது தன்னுடைய அப்பாவை ஜெயித்துவிட்ட பூரிப்பு மனதிற்குள் தாண்டவமாடும். அன்றைய கட்டுச்சோறு கூடுதல் ஆர்ப்பரிப்போடு உள்ளிறங்கும்.
தான் நினைத்தபடி நடந்துக்கொள்வதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதை நினைத்து பெரிதும் மகிழ்ந்து போனான். எதையோ சாதித்துவிட்டவனின் மிதந்த மனநிலையில் வீடு திரும்பினான். இரண்டாவதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் இடத்திலும் தன்னை உதவாக்கரையாகவே பார்க்கிறார்கள் என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டாகவே உரைக்கவில்லை. அங்கும் ஆறு மாதத்திற்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படியாக நாட்களும் கடைகளும் மாறிக்கொண்டிருந்தன. தன்னை இனி கட்டுக்குள் வைக்க யாராலும் முடியாது என்கிற குளுமை உச்சந்தலையில் ஆழமாக இறங்கி அவனை ஆட்டுவித்தது.
****
இன்று வளன் வழக்கத்திற்கு மாறாக வாடிய முகத்தோடு வீடு திரும்பியபோது அம்மா அவனை வியந்து பார்த்தாள். கேட்டால் சரியான பதில் வராதென்று அவளுக்கு நன்றாகத் தெரியும். இரவு வீடு திரும்புகிறவன் மாலையிலேயே வந்து நிற்கிறான். கட்டுச்சோறு காலியாகாமல் கனத்தது. வந்தவன் எதுவும் சொல்லாமல் உள்ளறைக்குள் பதுங்கிக்கொண்டான்.
அம்மா மனதில் ஓடிக்கொண்டிருந்த கற்பனைகளோடு குழப்பிப் போயிருந்தாள்.பூட்டிய அறையின் கதவுகள் திறக்கப்படவேயில்லை.
அறைக்குள் பதுங்கியிருந்தவனின் மனம் அட்டைப்பூச்சியாய் அருவருத்துக் கிடந்தது. எவனோ ஒருவன் தன்னை இப்படி பொசுக்கென்று எல்லோர் முன்னிலையிலும் அடித்துவிட்டானே என்கிற அவமானம் அவனை கொத்தி தின்றுக்கொண்டிருந்தது. புகார் தெரிவித்த பெண் வாடிக்கையாளரின் முகம் மனத்திற்குள் வந்துப் போனது. ஒருமீட்டர் ப்ளவுஸ் துணிக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை செய்துவிட்டாளென்று ஆத்திரம் கூடியது.
மேலாளரின் இந்த அடி ஒருநாள் கோபத்திற்கானதல்ல. வளனின் கவனக்குறைவுகளால் அவ்வப்போது அவர்களுக்குள் மோதல் இருந்துகொண்டிருந்தது. அப்போது் அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவன் மனம் போகிற போக்கில் நகர்ந்தபடியிருந்தான்.
ஆனால் இந்தமுறை எப்படியேனும் அடித்தவனை பழி வாங்க வேண்டுமென்று வளனின் மனம் துடித்தது. நேரடியாக எதுவும் செய்ய முடியாது. கவனக்குறைவு தன் பக்கம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்காக அப்படியெல்லாம் சும்மா விட்டுவிடமுடியாதென்று உள்ளுக்குள்ளே ஆர்ப்பரித்தான்.
தன்னை அடித்தவனுக்கு இது வாழ்நாள் தண்டனையாக அமையுமென்று நம்பினான். மேலாளரை காரணமாகக் கைதூண்டி எழுதப்பட்டிருந்த கடிதம் எதிரே இருந்த மேசையில் படபடத்துக்கொண்டிருந்தது. தன் சடலத்தின்மீது துடிக்கப்போகும் கடிதத்தின் வரிகள் மேலாளரின் வாழ்வை எப்படியெல்லாம் சீர்குலைக்கும் என்பதை மனத்தில் ஓட்டிப் பார்த்தபோது முக்காலியில் நின்றபடி நடுங்கும் கால்கள் தானாக திடமெடுத்தன.
அறைக்கு வெளியே அம்மா யாரிடமோ பேசத் தொடங்கியிருந்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு வரிகள் கதவிடுக்கின் வழியாக உள் நுழைந்தன. எதிர்க்குரல் தாழ்ந்திருந்தது.ஜானகியாகத்தான் இருக்கவேண்டுமென்பதை வளன் யூகித்திருந்தான்.
“………..”
“அப்படியென்ன கேடு வந்திருச்சாம்?”
“………..”
“கொலை செய்ய அளவுக்கா வெறி முத்தி போச்சு?”
வலிந்து தலையை முடிச்சுக்குள் நுழைத்தான்.கையைப் பின்தலைக்கு மேலே கொண்டு போனபோது அவர் தன்னை சுவற்றோடு மோதும் காட்சி கண்களுக்குள் ஓடியது. இந்த நிமிடம் தனக்குள் அப்பாவின்மீது எந்த ஆத்திரமும் எழவில்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. கைகள் நிதானித்து சுருக்கைக் கீழே இறக்கும் விதமாக பற்றிக்கொண்டன.
“இதுகள்லாம் அடுத்தவன பழிவாங்குகேன்னு ஏன்தான் இப்படி அலையுதுகளோ.. இப்ப அவன் குடும்பம் தான தெருவில நிக்கணும்..”
“அதையெல்லாம் யோசிக்கவனுக்கு கொலை செய்ய புத்தி வருமா..?”
“பழிவாங்குறானுகளாம் பழி.. கறையான் புத்த அழிக்க.. வீட்ட கொளுத்துன கதையா இருக்கு”
அம்மாவின் வரி ஆவேசமாக வளனின் காதுகளில் வந்து விழுந்தது.
அவன் முடிச்சிற்குள் நுழைத்திருந்த தலையை வெடுக்கென்று வெளி இழுத்துக்கொண்டான்.



